Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேடல் இதமானது

தேடல் இதமானது – 2

தேடல் – 2

“டம், டம்” என்று ஓயாது கேட்ட வெடிகுண்டு சத்தத்திற்கு பயந்து போய் அரண்டு ஏழாமல் நிதானமாகவே துயில் களைந்தாள் செந்தாழினி.



Advertisement

அந்த மண்ணில் அவள் ஜனனம் செய்ததிலிருந்து கேட்கும், கேட்டுக் கொண்டிருக்கும் சத்தம் என்பதாலோ என்னவோ இவையனைத்தும் பழகிப் போயிருக்க, பதட்டைத்தை கொடுப்பதற்கு பதில் சலிப்பையே கொடுத்தது பெண்ணவளுக்கு.

“இன்னும் எழும்பாம நித்திரை கொண்டா இருக்க செந்தா?” என்ற தாயின் குரலில்,

Advertisement

Advertisement

“எழும்பிட்டேன் மா”என பதில் கொடுத்த படி வீட்டின் வெளியில் கட்டப்பட்டிருந்த ஓய்வறை சென்று காலைக் கடன்களை முடித்து குளித்து விட்டு நேரே கூடம் வந்தவள், புகைப்படமாய் தொங்கிக் கொண்டிருந்த தந்தை படம் முன் நின்றாள்.

கண்ணை மூடி அவரை வணங்கிக் கொண்டவளின் செவிகளை வெடி குண்டு சத்தங்கள் மீண்டுமாய் நிறைத்தன.

Advertisement

கலங்கத் தொடங்கிய கண்களை பெருமூச்சுடன் விரட்டி அடித்தவள், சற்று நேரம் தந்தையே பார்த்து நிற்க,

“செழி?”என தாயின் அழைப்பு.

“வாரன் அம்மா!”என்றபடி முகத்தை சரி படுத்திக் கொண்டு அடுப்படி நுழைந்தாள்.

மகளைக் கண்ட விமலா,

“தேத்தண்ணி ஊத்தி வெச்சிருக்கன்.ஆற முந்தி குடிச்சிரு”என்றவர்,

“காலைக்கு புட்டு அவிக்கேன். பருப்புக் கறிக்கு தாளிப்பை மட்டும் செஞ்சுடு செழி” என்று ஆவி வந்த படியிருந்த பிட்டுக் குழலை துணியால் தூக்கி பிட்டை தட்டில் கொட்டினார்.

“ம்ம் சரிம்மா”என தலையசைப்பைக் கொடுத்தவள் ஒரு கையால் தேநீர் அருந்திக் கொண்டே தாளிப்புக்கான வேலையைச் செய்தாள்.

இறுதியாய் கருவேப்பிலையை உருவி தாளித்த எண்ணையில் போட,குடித்த தேநீர் கோப்பை தன்னால் கழுவி வைக்கப்பட்டது.

விமலா குழலை எடுத்ததும் பிட்டு முட்டிக்குள் அவிந்திருந்த முட்டையை எடுத்து பச்சை தண்ணீரில் காட்டி விட்டு அதன் தோலை உரித்து எடுத்தவள், பாதியாக வெட்டிப் பருப்புக் கறிக்குள் போட்டு விட்டு,தாளிப்பை அதனுள் இட்டு கிளறி விட்டாள்.

அவள் செய்வதை எல்லாம் பார்த்திருந்தார் விமலா.

மகள் செய்கை யாவும் கணவனை நினைவுபடுத்த,

“உங்கப்பா மாதிரித் தான் நீயும் செழி.எல்லா வேலையையும் ஒரே நேரத்துல செய்றாய்”என மெலிதாக கலங்கிய கண்களும்,கரகரத்த குரலுமாய் சொன்னார்.

தாயைப் பார்த்து புன்னகைத்தாள் செந்தாழினி.

விமலாவிற்கு புன்னகை விரிய மறுத்தது.கணவன் மேல் என்றும் இருக்கும் ஆற்றாமையில்,

“அந்த மனுஷன் என்னையும், உன்னையும் நினைச்சி பாக்கலயே செழி.!மனுஷி இருக்கு!புள்ளை இருக்கு எண்டு நினைச்சிருந்தா எங்கள இப்படி விட்டுட்டு போயிருக்க மாட்டார்”என்றார் ஆதங்கமாய்.

தாயின் பேச்சு இவளுக்கு மெல்லிய கோபத்தை கொடுக்க, 

“ம்மா!என்ர அப்பா பத்தி கதைக்கேக்கல அழாத எண்டு சொன்னனான். அவர் வீரன்! எங்கட இனத்துக்காக, நம்மளுக்காக உயிரைக் கொடுத்தவர். அவர் பத்தி கதைக்கேக்க இப்படி அழ ஒண்டும் தேவல்ல நீங்க”என தாயை அதட்டினாள் பெண்.

சேலை முந்தானையால் கண்களை ஒற்றிக் கொண்டவர்,

“அவர் அப்படி இருந்து, நம்மட்ட இப்போ என்ன இருக்கு சொல்லு? இல்ல நம்மளுக்கு என்ன கிடைச்சது?ஒண்டும் இல்ல! அவரின்ர சொந்தம் கூட எங்கள விட்டுட்டாங்க எல்லா?”என்றார்.

“அப்பாட சொந்தம் எங்களுக்கு என்னத்துக்கு?காலம்பரறயோட கரச்சல் குடுக்குறீங்கம்மா நீங்க”என சலித்துக் கொண்ட செந்தாழினி கோபத்தில் காலை உணவைக் கூட உண்ணாமல் வெளி நடப்பு செய்து விட்டாள்.

விமலாவின் கணவனும், செந்தாழினியின் தகப்பனுமான திலீபன் ஒரு மிதவாதப் போராளி. போர் நடந்த ஆரம்ப காலத்தில் தங்கள் மக்களுக்காக, அரசாங்கத்தை எதிர்த்து மிதவாதப் போராட்டங்கள் தான் மேற்கொண்டனர், தமிழினத்தை சேர்ந்தவர்கள்.

மிதவாதம் என்பது ஆயுமேந்தாப் போராட்டம். சொல்லப்போனால் இந்தியாவிற்காக காந்தியடிகள் செய்த அகிம்சை போராட்டம் போலானது.

அப்படியொரு போராளியாக இருந்த திலீபன்,தங்கள் மக்களுக்கு நீதி வேண்டி உண்ணா விரதப் போராட்டம் செய்து அதிலே வீர மரணம் அடைந்தார்.

இதில் கைக்குழந்தையான செந்தாழினியுடன் தனித்து விடப்பட்டார் விமலா. ஒற்றைப் பெண்ணான விமலாவிற்கு உடன் பிறந்தவர்கள் இல்லை. தாய்,தந்தை இருவரும் இறைவனடி சேர்ந்திருக்க தன் ஊரான யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவிற்கு குடி பெயர்ந்தார்.

அங்கு தான் திலீபனின் சொந்தங்கள் இருந்தனர். அவர்களுக்கு திலீபனின் இந்தப் போராட்ட முடிவில் உடன்பாடில்லை என்பதால் விமலாவை சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.

போக்கிடம் இல்லாது தடுமாறிய விமலா,பின் முடிவெடுத்தவராய் தன் கணவனுக்கு சேர வேண்டிய சொத்தைக் கேட்டு சண்டையிட்டார்.

முதலில் தர மறுத்த அவர் உறவுகள்,விமலாவின் பிடிவாதத்தில் கொடுத்து விட்டனர்.

அவர்களிடமிருந்து தள்ளியே வைக்க வேண்டுமென்பதற்காக அவ்வூரின் கரை கோடியில் ஒரு காணியைக் கொடுக்க, அங்கே தான் இருந்தனர் தாய்,பிள்ளை இருவரும்.

“கோபமும் அவர் மாதிரியே வருது இவளுக்கு!”என முனகியவர்,

“செந்தா சாப்புட்டு போடி”என மகளை அழைத்தார்.

தாயின் அழைப்பை புறக்கணித்தவளாய், கடற்கரைக்குச் சென்றாள் செந்தாழினி.

அவள் வீட்டிலிருந்த நடக்கும் தூரம் தான் கடற்கரை.

ஆங்காங்கே மீனுக்கு கரைவலை இழுத்துக் கொண்டும், கடல் பரப்பில் வள்ளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மனிதர்களை பார்த்தபடி கடற்கரை ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.

யோசனையிலிருந்தவளுக்கு கடலிலிருந்து வீசிய காற்றும், கரை தொட்டுச் சென்ற அலைகளும் என்னவோ இன்று வித்தியாசமாய் இருப்பது போல் தோற்றம்.

பக்கத்து வீட்டு பொடியன்கள் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடி வர, அச்சத்தத்தில் களைந்த செந்தாழினி,

“டேய் வினோ,எதுக்கடா இப்படி ஓடியறாய்?” தன்னைத் தாண்டி ஓட முயன்றவனை பிடித்து இழுத்தாள்.

“விடுங்கக்கா என்னைப் புடிச்சா இந்த மாங்காவ பறிச்சிருவானுகள்” என மூச்சு வாங்கிய படி கையிலிருந்த மாங்காயை காட்டியவன், ஓடுவதிலே குறியாய் இருந்தான்.

“எங்க ஆஞ்ச மாங்கா இது? இன்டைக்கு மாலா அக்காட டியூசன் வகுப்பில்லையா உங்களுக்கு?” அவள் பேச்சுக் கொடுக்கவும்,இவன் திருதிரு முழிப்புடன் நிற்க, வினோவைப் பிடித்து விட்டனர் அவன் நண்பர்கள்.

“டேய் எங்களுக்கும் மாங்கா தாரன் எண்டு சொல்லிட்டு நீ தனியா ஓடி வந்துட்டாய் என?”ஒருவன் ஏசினான்.

“மாலா அக்காக்கு கள்ள மாங்கா ஆஞ்ச எண்டு தெரிஞ்சா எங்களை டியூஷனுக்குள்ள சேர்க்க மாட்டா வினோ”என அடுத்தவன் சொன்னான்.

செந்தாழினிக்கு விஷயம் புரிந்தது. ஆக,திருட்டுத் தனமாய் மாலாவின் வீட்டிருலிருந்து விளாட் மாங்காயை பறித்திருக்கிறார்கள். வினோதன் அதை எடுத்துக் கொண்டு ஓடி வந்திருக்கிறான்.

“கள்ளக் படவா! கள்ள மாங்காய் ஆஞ்சிட்டு வந்தனீங்களா?” என முறைப்புடன் கேட்டாள் செந்தாழினி.

“ப்ளீஸ் அக்கா! மாலா அக்காட்ட சொல்லிறாதீங்க. பிறகு எங்கள டியூசன்லருந்து துரத்தி போட்டுருவா!”என்று கூட்டமாக கெஞ்சினார்கள்.

“செஞ்ச கள்ளத்தனம். நான் சொல்லுவன்” என மிரட்டினாள்.

“அக்கா, அக்கா! ப்ளீஸ் அக்கா. களவெடுத்த மாங்கா டேஸ்ட் ஆ இருக்கும். உங்களுக்கு வேணும் என்டா ஒண்டு தாரம்” வினோ பேரம் பேச,

சிரிப்பை அடக்கிக் கொண்டவள்,

“ஆஞ்சது கள்ள மாங்கா! அதுல எனக்கு பங்கு வேற தாரன் எண்டு சொல்லி என்னையும் உங்கட கள்ளக் கூட்டத்துல சேர்க்க பாக்கறீங்க என!”என முறைத்தாள்.

திருதிருத்தார்கள் சின்னவர்கள்.

பக்கென சிரித்து விட்டவள், “செரி. நான் இந்த முறை உங்கள மாட்டி விடல்ல. இன்னொருக்கா செஞ்சீங்கண்டா சொல்லி குடுத்துருவன்” என்றாள்.

“தேங்க்ஸ் அக்காச்சி!” என்றவர்கள், அவளுக்கு ஒன்றை நீட்ட,

“வேண்டாம் வினோ! நீங்க சாப்புடுங்க.நான் வீட்ட போறன்” என எழுந்து கொண்டாள்.

இவள் வராமல் அங்கு விமலாவும் காலை உணவு உண்டிருக்க மாட்டார் எனத் தெரியும். ஏதோ கோபத்தில் வந்து விட்டவள், தாயின் பசியும் நேரமாவதையும் உணர்ந்து வீட்டிற்கு வெளிக்கிட்டாள்.

செந்தாழினி சற்று தூரம் நடந்திருக்க,

“அக்கா அங்க பாருங்க. கடல் உள்ளுக்குப் போகுது” என்று வினோதன் கூப்பிட்டான்.

திரும்பி கடலைப் பார்த்த செந்தாழினி திகைத்து இருக்க, சின்னவர்கள் கடலை நோக்கி நடந்தனர். அவர்களோடு கரைவலை இழுத்துக் கொண்டிருந்தவர்களும் சலசத்தபடி முன்னேறினர்.

என்னவோ ஆபத்து என உள் மனம் சொல்ல,

“டேய் அங்க போவாதீங்க. இங்கால வாங்கடா”என இவள் பதட்டமாய் அழைத்ததை கண்டு கொள்ளாது கடலில் தென்படும் வித்தியாசத்தை பார்க்கும் ஆவலில் நடையில் வேகத்தைக் கூட்டினர் சின்னவர்கள்.

இவளுக்கு கடலுக்கு செல்வதா, வீட்டிற்குச் செல்வதா எனப் புரியாத நிலை.

திடீரென கடல் பார்க்கச் சென்றவர்கள்,

“கடல் வருது, கடல் வருது!” என்று கத்திக் கொண்டு ஓடி வந்தவனர்.

செந்தாழினி கடலைப் பார்க்க, உள்ளே இழுத்துக் கொண்ட தண்ணீர் படு வேகத்தில் பேராழியாய் உருவாகி கரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

உயிர் காத்துக் கொள்ளவென அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓட்டமெடுக்க, சின்னவர்களும் ஓடி வந்தனர்.

“அக்கா ஓடுங்க. கடல் வருது!”

கடலைப் பார்த்து சிலையாய் சமைந்திருந்த செந்தாழினி, தன்னிலை பெற்று ஓட முயற்சித்த நொடிகளில் அவளை வாரிச் சுருட்டிக் கொண்டது பேரலை.

“ஹக்,ஏஹ்ஹ்ஹ்ஹ!”கடல் தண்ணீருக்குள் மூழ்கி மூச்செடுக்க முடியாமல் வெளியில் வந்தவளாய் மூச்சு வாங்கினாள் செந்தாழினி.

கனவில் இருந்து முழித்துக் கொண்டாள்.நாசிக்குள் தண்ணீர் அடைத்துக் கொண்டது போலான தோற்றம்;மூச்சு வாங்கியது!நிதர்சனம் புரிய சற்று நேரம் எடுத்தது பெண்ணவளுக்கு.

அவள் செவியினுள் ரீங்காரமாய் ‘செந்தா சாப்புட்டு போடி’ என அதட்டலாய் அழைத்த அன்னையின் குரல் இப்போதும் கேட்டது.

அன்று தண்ணீருக்குள் மூழ்கும் போதும் தாயின் குரலும், அவரின் எண்ணமும் தான்.

‘கடல் வருது’ என்றதற்கு அதன் பிறகான வருடங்களில் அப் பேராழியின் பெயர் ‘சுனாமி’ என்று தெரிய வந்தது.

சுனாமியில் செந்தாழினி பிழைக்க, அச் சின்னவர்கள் இறந்திருந்தனர். விமலாவும் இறந்திருந்தார்.

அன்று தான் தாயை இறுதியாய்ப் பார்த்தது; பேசியது.

நேற்று கடற்கரைக்குச் சென்றிருந்தாள். அதே எண்ணத்தோடு தூங்கியவளுக்கு பழைய நினைவுகள் கனவாய் வந்திருந்தது. அடிக்கடி வரும்.

“செந்தா எழும்பிட்டியா?”என்று அவள் அறைக்குள் நுழைந்தார் மல்லிகா.

கனவிலிருந்து பதறி முழிக்கும் போது, பக்கத்திலிருந்த சில்வர் குவளையை தள்ளி விட்டிருக்க, அச் சத்தத்திற்கு தான் வந்திருந்தார்.

“கனவு மாமி!”என்று எழுந்து கொண்டாள்.

“ஒண்டும் இல்ல. அதான் மாமி இருக்கன் தானே!”என்று அவளைத் தட்டிக் கொடுத்தார்.

சிறு புன்னகையுடன் தலையசைத்தாள் செந்தாழினி.

குளித்து ஆயத்தமாகி வந்தவளுக்கு காலை உணவு கொடுத்த மல்லிகா,

“மாமா, உன்னை செண்டர் போறதுக்கு ஏத்த வாரன் எண்டு சொன்னவர்” என்றார்.

“கவியோட போறன் மாமி. மாமாக்கு தேவல்லாத அலைச்சல் எல்லா!” என்றாள் இவள்.

“அதெல்லாம் இல்ல. நீ அவர் கூட பொயிட்டு வா.”

“ம்ம்ம்”

இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம்,திவாகர் வீடு வந்தார்.

“எல்லாம் படிச்சிட்டியா செந்தா? இண்டைக்கு தான் கடைசி எக்ஸாம் என?”என்று கேட்டார்.

“ஓம் மாமா. நல்லா படிச்சிருக்கன். இதையும் நல்லா செய்திடுவன்” என்றாள் செந்தாழினி.

“கடைசி சோதினை நாள் தானே. பொடியன்கள் எல்லாம் உஜாலாவும் கையுமா திரிவான்கள். நீயும், கவியும் கொஞ்சம் பாத்து இருங்க” என்றார் மல்லிகா.

“சரி மாமி!”

“போக்குள்ள பெத்தவங்கட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு போமா செந்தா” என்றவருக்கு தலையாட்டி விட்டு தன் அறைக்குச் சென்றவள் புகைப்படமாய் இருந்த பெற்றவர்களை வணங்கி விட்டு,வெளியில் வந்தாள்.

செந்தாழினி இந்த வருடம் உயர் தரப் பரீட்சை (A/L) எழுதுகிறாள். விமலாவின் நீண்ட நாள் கனவு மகளை மருத்துவராக்க வேண்டுமென்பது. அதைத் தன் கனவாக்கிக் கொண்டாள் பெண்.

அதற்காக உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்து,இவ்வசாதாரண சூழலிலும் நன்றாகவே படித்திருந்தாள்.இன்று தான் கடைசி பரீட்சை.

செந்தாழினியை பரீட்சை நடக்கும் செண்டரில் இறக்கி விட்டார் திவாகர்.

“கவனம் பிள்ளை. எக்ஸாம் முடிய ஏத்த வாரன்.” என்று கிளம்பி விட்டார்.

சுனாமியிலிருந்து உயிர் பிழைத்தவளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார்கள் திவாகர்-மல்லிகா தம்பதியினர்.

தங்களுக்கு பிள்ளை இல்லை என்ற ஏக்கம் விமலாவையும் கைக் குழந்தையான செந்தாழினியையும் சந்திக்கும் வரையில் தான் இருந்தது, இத் தம்பதிக்கு.

திவாகர்,திலீபனின் நெருங்கிய கூட்டாளி. நண்பன் இன்றி தனித்து விடப்பட்ட அவர் குடும்பத்திற்கு உறவாய்,உதவியாய் நின்றிருக்கிறார் திவாகர்.

அப்போதே விமலாவிற்கு, அவர் கணவனின் காணி வாங்கிக் கொடுக்க உதவியதில் இவருக்கும் பெரும் பங்குண்டு.

விமலா இறந்த பிறகு செந்தாவை தங்கள் மகளாகப் பார்த்து வருகிறார்.

நண்பன் இறந்த பின் திவாகரும் தன் பாதையை மாற்றிக் கொண்டார். விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தார்.

இலங்கையை பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலார்களாக மலையகத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தமிழ் மக்கள்.

அதே வேளை இங்கு இரண்டாம் பெரும் பான்மையினராக இருந்த தமிழ் மக்கள் தான் கல்வியிலும், அரசாங்க உத்தியோகத்திலும் முதன்மையாக விளங்கினர்.

சிங்களத் தேசிய வாதம். அதைத் தொடர்ந்த அரசாங்கத்தின் அடக்கு முறைகளால் இவர்கள் நெருக்கடிக்குள்ளாகினர்.

வீடில்லாத சிங்களவர்களுக்கு பூர்வீக தமிழர்களின் இடங்கள் கொடுக்கப்பட்டது. அவர்களது கல்வியில், உத்தியோகத்தில் குழப்படிகள்; இடைஞ்சல்கள்.

1983 ஆம் ஆண்டில் இலங்கையின் இந்த உள் நாட்டுப் போர் ஆரம்பமாகியது.இதன் தொடக்கத்திற்கு பல காரணங்கள் வழி வகுத்தாலும் இப்போர் உக்கிரம் அடைவதற்கான முழு முக்கிய காரணமாக இருந்தது, தமிழின மக்களின் உரிமை பறிக்கப்பட்டது தான்.

அதைத் தொடர்ந்து இவ்வாண்டிலே கருப்பு ஜுலை சம்பவம் இடம் பெற்று போர் வலுத்தது.

அதுவரையிலும் மிதவாதம் செய்து கொண்டிருந்தவர்களில் சிலர் ஆயுதமேந்திய போராளிகளாகப் பிரிந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர்.

இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் தனியொரு நாடாக தமிழ் மக்களுக்கு தருமாறும்,அரச கருமங்கள், நீதி விசாரணைகள் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்றும்,அரசின் குடியமர்வு திட்டங்களில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள நிலமில்லாதவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் எனவும்,

இப்படியான கோரிக்கைகளை வைத்த மக்களின் அமைதிப் போராட்டத்தை அராஜகத்தால் எதிர் கொண்டது அரசு.

அரசுக்கும், போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் வலுவாகியது. எண்ணற்ற உயிர் சேதங்கள்;உடமை சேதங்கள்; உரிமை இழப்புக்கள்!எதுவுமே ஈடு செய்ய முடியாதவை.!

ஒன்று, இரண்டு என்று தொடங்கி இப்போது நான்காம் ஈழப் போர் நடந்து கொண்டிருந்தது.

2002 ஆம் போடப்பட்ட தற்காலிக சமாதான உடன்படிக்கை முறிவடைந்து இப்போது மீண்டும் போர் ஆரம்பித்திருந்தது.

“என்னடா படிச்சு முடிச்சிட்டியா?” புக்கைக் கொடு. ரஞ்சனியும் படிக்க கேட்டிருக்கா”என்று பிரணவன் கையிலிருந்து வாங்கிக் கொண்டான் கௌதம்.

“The Broken Palmyra” என்ற தலைப்பில் இரு புத்தங்கங்கள். அதிலொன்று “Revisited” என்று மீண்டும் சில விடயங்கள் பதிவு செய்யப்பட்டு போன வருடம் வெளிடப்பட்டிருந்தது.

இன்னும் சில புத்தங்கள் கௌதம் கை வசம் இருந்தன.

“War and Peace in Sri Lanka: With a Post-Accord Report From Jaffna”

“Sri Lanka: The Untold Story” 

மெனக்கெடலோடு தான் இப் புத்தகங்கள் எல்லாம் சேகரித்திருந்தான்.

பிரணவனுக்கு இலங்கை வருவதில் சிறு சுணக்கம்.

இந்நாடு,மக்கள் பற்றிய தவறான எண்ணம் அவனுக்கு. கௌதம் சொல்லிப் புரிய வைக்க முயற்சித்து பின் தான் புத்தகத்தை படிக்க கொடுத்திருந்தான்.

புத்தகம் ரஞ்சனியின் கைகளுக்கு இடம் மாறியிருக்க,

“நீ என்ன சொன்னாலும் இவங்க செய்ற தீவிரவாதத்துக்கு நான் சப்போர்ட் செய்ய முடியாது” என்றான் பிரணவன்.

“நீ செய், செய்யாத!உன் தனிப்பட்ட கருத்துல நான் மட்டுமில்ல யாராலையும் தலையிட முடியாது ப்ரணவ்!ஒவ்வருத்தருக்கும் ஒவ்வரு ஒப்பீனியன் இருக்கும். ஆனா,அதே எண்ணத்துல இங்க இருக்கிறவங்களையும் பார்க்காதன்னு தான் சொல்றேன்” என்றான் கௌதம்.

“இத்தனை உயிர் போனதுக்கு என்ன காரணம்னு நீயே சொல்லு கௌதம்?”

“தங்களது ஆயுத பலத்தை நிரூபிக்க நினைக்கற பெரிய பெரிய நாடுகள் இப்படி பட்ட சின்ன நாடுகள்ல போரையும் வன்முறையையும் தூண்டி விட்டு தான் இருக்கும்.”

“நீ நியாயப்படுத்த நினைக்கிறியோ?”என்று கேட்ட பிரணவனை முறைத்தவன்,

“அவரவர்க்கு அவரவர் நியாயம்! நான் நியாயப் படுத்தறேன்னு நீ நெனச்சாலும், இங்க நான் வந்த நோக்கம் என் வேலையப் பார்க்க!மருத்துவம் இந்த ஜாதி,மதம், நல்லவன், கெட்டவன் எதையும் பார்க்காது. அது நான் சொல்லித் தான் உனக்கு தெரியணும்னு இல்ல” என்றான்.

பிரணவன் அடங்காது இன்னும் பேச,

“ப்ரணவ்! நாம இங்க வர்றது மக்களுக்கு சேவை செய்றதுக்கு. உனக்கு விருப்பம் இல்லனா நீ அடுத்த பிளைட்ல இந்தியா திரும்பிடு.”என்று கோபப்பட்ட கௌதம்,

“இவன் ஏன்டா வந்தான்? டாக்டர் தயா இப்படி விருப்பமில்லாதவங்கள ஏன் அனுப்புனார்?” அஜயிடம் ஆயாசமாய் கேட்டான்.

“தயா ஸார் ரெகமெண்டேஷன் நானு!”

“பிச்சி மாதிரி பேசறான்!இவனை சும்மா இருக்க சொல்லு அஜய்”

“விட்ரா கௌதம். அவன் புரிஞ்சிப்பான்”அஜய் தான் இருவரையும் சமாதானப்படுத்த வேண்டி இருந்தது.

கௌதம் காளிதாசனோடு சேர்த்து பிரணவன், அஜய், ரஞ்சனி, தீபா என ஐவர் கொண்ட மருத்துவக் குழு இலங்கை வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த விமானம் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க, இலங்கையில் கால் பதித்தான் கௌதம் காளிதாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!