” அஞ்சலி குட்டி எங்க? விடிஞ்சதுல இருந்து கண்ணுலயே அகப்பட மாட்டேங்குது.. இன்னும் ஏதும் மனசுக்குள்ள போட்டு கொழம்பிகிட்டே இருக்கா??சாப்பிட்டிடுச்சா பிள்ளை” என்று சந்தன பாண்டியன் தன் கணீர் குரலால் காமாட்சியிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார்.
Advertisement
” புள்ளைக்கு என்ன அது நல்லாத்தேன் இருக்கு” என்று காமாட்சி மேம்போக்காக பதிலளிக்க,
Advertisement
“என்ன பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு.. என்ன சங்கதி” என்று சந்தனபாண்டியன் குரலை உயர்த்த,
Advertisement
அதில் கொஞ்சம் மிரண்டு போன காமாட்சி, “அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க … அஞ்சலிக்கு அந்த பையன் மேல லேசா விருப்பம் தோணிருக்கும் போல.. இப்போ இப்படி ஆனதுமே அதுவால சட்டுன்னு அதை ஏத்துக்க முடியலை.. அதான் சாப்பிடாம கொள்ளாம ரூம்லயே அடைஞ்சு கெடக்கா.. அந்த ஆதங்கத்துல தான் ஏதோ பேசிட்டேன்..” என்று அவர் கணவரின் ஒரு அதட்டலுக்கே அனைத்தையும் கூறி விட,
Advertisement
சந்தன பாண்டியன் அதைக்கேட்டு யோசனையாய் நெற்றியைச் சுருக்க, அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியாமல் காமாட்சி குழம்பினார்.
” ஏதோ துறு துறுன்னு இருந்த புள்ளை இப்படி கெடக்குதேன்னு மனசு தாங்காம சொல்லிப்புட்டேன்ங்க.. நீங்க ஏதும் அதை நெனச்சு வெசனப்படாதீக.. யார் யாருக்கு என்ன விதியோ அதான நடக்கும்.. கொஞ்ச நாள்ல சரியாகிடுவா..” என்று காமாட்சி பொதுவாய் கூற,
சந்தன பாண்டியன் இப்போது ஒரு முடிவோடு தன் மனைவியை நோக்கி, ” கூடிய சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு எடுக்குறேன்.. புள்ளையை பார்த்துக்கோ தேனி வரை ஒரு எட்டு போய்ட்டு வந்துடுறேன்” என்று கூறியவர் அங்கிருந்து விரைவாய் கிளம்ப,
” ஏங்க சாப்பிட்டு போங்க” என்ற காமாட்சியின் குரல் காற்றில் தான் கலந்தது.
இங்கு அறையில் அஞ்சலியோ அஸ்வத் போட்டுக் கொடுத்த திட்டத்தை எப்படி செயலாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருக்க, சரியாக அதே நேரம் கீதா அவளை அழைத்திருந்தாள்.
அழைப்பை ஏற்றவுடனே, ” ஏய் எலி !!! என்ன பெரியப்பா எங்கேயோ கோவமா வெளிய கிளம்பி போற மாதிரி இருக்கு… உன் ஆளு போட்டுக்குடுத்த பிளான் என்னாச்சு.. புட்டுக்குச்சா??” என்று வந்து விழுந்த நக்கல் குரலில் கடுப்பான அஞ்சலி,
“கடுப்பேத்தாம போய்டு டி காட்சில்லா. செம்ம டென்ஷனா இருக்கேன்” என்று அடிக்குரலில் சீறினாள் அஞ்சலி.
அவள் குரலை வைத்தே அவளின் மனதை அறிந்து கொண்ட அவளின் தங்கையோ, ” என்னாச்சு எலி.. எதுக்கு ஒரு மாதிரி இருக்க??” என்று பரிவாக வினவ,
அஞ்சலியோ சோகமே உருவாய், “அஸ்வத் நேத்து போன் பண்ணாங்கன்னு சொன்னேன்ல.. அவங்க எங்க அப்பாக்கு முதல்ல சித்தப்பா மேல கொஞ்சமாச்சும் பாசம் இருக்கான்னு டெஸ்ட் பண்ண சித்தப்பாவோட எதிரி மாதிரி கால் பண்ணி ‘அவரை கொல்லப்போறோம்’ அப்படின்னு மிரட்ட சொன்னாங்க.. அதை அவங்களே பண்றேன்னு தான் சொன்னாங்க.. நான் தான் பெரிய இவ மாதிரி சப்போஸ் பின்னாடி உண்மை அப்பாக்கு தெரிஞ்சா அஸ்வத்துக்கும் அப்பாக்கும் சண்டை வந்துருமோன்னு நானே பண்ணிக்குறேன்னு சொல்லிட்டேன்.. ஆனா இப்போ அப்பாகிட்ட அப்படி பேசணும்னு நினைச்சாலே கை கால் எல்லாம் உதறுது டி.. பயமா இருக்கு.. அஸ்வத் வேற நைட் கால் பண்ணி கேட்பாங்க .. என்ன சொல்லனே தெரியலை” என்று அவள் அழுதுவிடும் குரலில் கூற,
மறுபுறம் அவளை நினைத்து சிரிப்பு வந்தாலும், எங்கே தான் சிரித்தால் இன்னும் கோபம் கொள்வாளோ என்றெண்ணி அதை மறைத்த கீதா, ” என்ன எலி.. இதுக்கெல்லாமா பயப்படுவ?? இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்… என்கிட்ட விடு நான் பார்த்துக்கிறேன் .. நான் மிரட்டுறதுல பெரியப்பா அரண்டு அடிச்சிட்டு அவர் தம்பியை பார்க்க போக வைக்கிறேன்.. ஓகேவா?? இப்போவாச்சும் கொஞ்சம் சிரி என் செல்ல எலிக்குட்டி” என்று கீதா தன் தமக்கையை கொஞ்ச,
அஞ்சலியும் தன் தங்கையின் திறமை மீதுள்ள அபார நம்பிக்கையில் நிம்மதியுடன் புன்னகைத்து, ” புது சிம் வாங்கி கொடுத்து விடவா .. அபி காலேஜ் தான் போயிருக்கா.. வரப்போ வாங்கிட்டு வரச்சொல்லவா?” என்று அவள் எச்சரிக்கையாய் அடுக,
“ச்ச ச்ச அதெல்லாம் வேண்டாம்.. நானே பல சிம் கார்டு வச்சிருக்கேன்.. டோண்ட் வொர்ரி.. கீதா இருக்க பயமேன்.. நீ போய் ஜாலியா அந்த டாக்டர் கூட டூயட் பாடு நான் வேலையை முடிச்சுட்டு கால் பண்றேன்” என்று கீதா வாக்களிக்க,
அஞ்சலியோ பொய்க் கோபத்துடன், “அவர் உனக்கு டாக்டர் இல்லை மாமா.. ஒழுங்கா மாமான்னு கூப்பிடு” என்று கீதாவை திருத்தினாள்.
” ஆஹான்.. அவ்ளோ தூரம் போயாச்சா.. நடக்கட்டும் நடக்கட்டும்” என்று கிண்டல் செய்து தன் தமக்கையை ஒரு வழி செய்துவிட்ட கீதா, அஞ்சலியின் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சியை மீட்டெடுத்த பின்பே அழைப்பைத் துண்டித்தாள்.
” அலோ.. அலோ.. யாரது போனை போட்டுபுட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்.. எங்களுக்கு வேற சோலி இல்லையா??” என்று காட்டுக்கத்தலாய் வந்து விழுந்த சந்தனபாண்டியனின் குரலில் காதை குடைந்து விட்டுக் கொண்ட கீதா,
‘ நம்ம குடும்பத்துல எவனுக்குமே சாஃப்டா பேசுற பழக்கமே இல்லை போல ‘ என்று தனக்குள் பேசிக் கொண்டவள், மறுபுறம் கேட்ட சந்தனபாண்டியனின் உறுமலில் நிகழ்வுக்கு வந்து தன் குரலை சரி செய்து கொண்டு, ” ஹலோ” என்று ஆண் குரலும் அல்லாமல் பெண் குரலும் இல்லாமல் இரண்டும் கலந்த குரலில் அவள் பேச,
சந்தனபாண்டியனோ குரலையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை, ” டேய் எவன்ல அது.. போனை போட்டா பேச மாட்டீகளோ.. அவ்ளோ திண்ணக்கமா உனக்கு” என்று கோபத்தில் கத்த,
‘ ஷப்பா பெர்ஃபார்ம் பண்ண விடுப்பா ‘ என்று நொந்து கொண்ட கீதா, தன் குரலை செறுமிக் கொண்டு, ” உஷ்!! வாயை மூடு.. என்ன சும்மா ஏதோ தேய்ஞ்சு போன ரேடியோ மாதிரி நிக்காம கத்திகிட்டே இருக்க … நீ கத்துறதை கேட்க நான் போன் பண்ணலை.. நான் சொல்றதை ஒழுங்கா கேளு” என்று ஆணையிட,
” கொப்பன்மவனே யாருடா நீ? நான் யாருன்னு தெரியுமா ? என்னையவே மிரட்டுறியா நீ? நேர்ல வந்தேன்னு வை வகுந்துபுடுவேன்” என்று சந்தானபாண்டியன் இங்கு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சண்டைக்கு தயாராக,
அவரை அடக்கிய கீதா, ” த்தோ பாரு.. சும்மா இந்த சவுண்டு விடுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. எனக்கு இந்த சத்தமா பேசுறவங்களை பார்த்தாலே சுத்தமா பிடிக்காது அப்பறம் மொத்தமா முடிச்சு விட்டுட்டு போய்ட்டே இருப்பேன்.. நான் சொல்றதை மட்டும் கேளு.. அந்த SP உன் தம்பி தான?? என்ன பெரிய இவனா அவன் ?? பெரிய இடத்து மேலலாம் கைவச்சுட்டு இருக்கான்..பார்த்து இருக்க சொல்லு.. இப்போ அவன் பண்ணிட்டு இருக்காது வேண்டாத வேலை.. மரியாதையா அவனை ஒதுங்கி போய் கோவில்ல செருப்பு திருடுறவனையும் கல்யாணத்துல சொம்பு திருடுறவனையும் மட்டும் கண்டுபிடிக்க சொல்லு.. தேவையில்லாம மறுபடியும் எங்க லைன்ல கிராஸ் ஆனான்னு வை.. அவனோடு சேர்த்து மொத்த குடும்பத்தையும் கொன்னு போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்.. ஜாக்கிரதை” என்று எங்கே சற்று இடைவெளி விட்டால் சந்தனபாண்டியன் திட்டத் தொடங்கிவிடுவாரோ என்றெண்ணி மூச்சே விடாமல் எழுதி வைத்த அனைத்தையும் பேசி முடித்து விட்டாள் கீதா.
பதிலுக்கு அவள் எதிர்பார்த்ததை போல், “டேய் நாரப்பயலே.. எவன் என்ன பண்ணா எனக்கென்னல.. என்ன ***க்கு எனக்கு போனைப் போட்டு உளறிகிட்டு இருக்கவ.. அவன் உனக்கு தொல்லை கொடுத்தா அவனை கொல்லு கொல்லாம போ.. அதை எதுக்கு என்கிட்ட சொல்லிகிட்டு இருக்க.. நீ மட்டும் நேர்ல வந்த அந்த ஏமாத்துக்காரனைப் பத்தி என்கிட்ட சொன்னதுக்கு நானே உனக்கு எமனாகியிருப்பேன்.. போனை வையில செத்தபயலே” என்று அவர் ஒரு ஆட்டம் ஆடிவிட்டு போனை கட் செய்யப் போக,
“அப்போ உன் தம்பி மேல உனக்கு பாசம் இல்லை.. அவனைக் கொன்னா உனக்கு ஒன்னும் இல்லை அப்படித்தான.. அப்போ நீயும் அந்தாளு மேல செம காண்டுல இருக்க.. நானும் அந்தாளு மேல கொலைவெறில இருக்கேன்.. பேசாம ஏன் எதிரிக்கு எதிரி நண்பனாகக் கூடாது.. நீ என்ன பண்ற அந்தாளு நைட்டு டியூட்டி முடிஞ்சு வரப்போ உங்க புளியந்தோப்பு கிட்ட சுத்தமா வெளிச்சம் இருக்காது.. அங்க வச்சு அந்த SPயை போட்டு தள்ளிரு.. உனக்கான பங்கு உன் வீடு தேடி வரும்.. ஓகே தான?” என்று அவள் பேரம் பேச,
அங்கு அவளின் பேச்சைக் கேட்டு ரௌத்திரமூர்த்தியான சந்தன பாண்டியன், ” டேய் எடுபட்ட மூதேவி.. எவன் தம்பியை எவன்லே கொல்றது.. தைரியமா முகத்தை காட்டி பேசாத முட்டி செத்த பயலாம் அவனைக் கொல்ல திட்டம் போட்டா நடந்துருமா?? நீ தைரியம் இருந்தா அவன் மேல கை வச்சு பாருடா” என்று சவால் விட,
” என்ன பெரிசு.. அப்போதான் உன் தம்பியை கிழிச்சு தொங்க விட்ட.. இப்போ என்னடான்னா ரொம்பதான் பாசம் இருக்க மாதிரி நடிக்கிற.. எக்ஸ்ட்ரா வேணும்னா இன்னும் ஒரு அஞ்சோ பத்தோ சேர்த்து போட்டுத்தரேன்.. இன்னைக்கே வேலையை முடிச்சிரு” என்று கீதா அளந்துவிட,
“எடு செருப்பை நாயே.. அவன் என் ரத்தம்ல.. அடிச்சாலும் புடிச்சாலும் அவன் என் தம்பி .. அவனை கொல்லுறதுக்கு கூட என்னைத்தவிர யாருக்கும் உரிமை இல்லை” என்று ‘ தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் ‘ என்னும் பழமொழிக்கேற்ப அவர் ரத்தப்பாசத்தில் பேசிக் கொண்டிருக்க,
” யோவ் நீ என்ன லூசா?? நானும் உன்னைத்தான்யா கொல்ல சொல்றேன்.. ” என்று கீதா அவரை எள்ளி நகையாட,
கொதித்தெழுந்த சந்தனபாண்டியன், ” நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா நேர்ல வாடா.. உன்னை ஒரு வழி பண்ணாம நான் ஓய மாட்டேன்.. என்னையேவா லூசுன்னு சொல்ற.. உன் பல்லை உடைச்சு கையில கொடுக்கிறேன் வா டா நேர்ல” என்று அவர் காட்டுக்கத்தல் போட,
இதற்கு மேலும் அவர் பேசுவதை கேட்டால் தான் செவிகள் இரண்டும் செத்து போவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தபடியால் போனை அப்போதே அழைப்பை துண்டித்து விட்டு அந்த சிம் கார்டை கழட்டி தூர வீசி இருந்தாள் கீதா.
‘ அப்போ நம்ம மீசைக்கும் தம்பி மேல பாசம் இருக்கு போலயே ‘ என்று நினைத்து கள்ளப்புன்னகை சிந்திய கீதா, அஞ்சலியிடம் இந்த விஷயத்தைப் பகிர அவள் சந்தோஷத்தில் வானில் பறந்து கொண்டிருந்தாள்.
கீதாவிடம் இருந்து விஷயத்தை கேட்டதில் இருந்தே மகிழ்ச்சியில் மலர்ந்து கிடந்த அஞ்சலி , ‘ இரவு எப்போதடா வரும் அஸ்வத்திடம் இந்த விஷயத்தை சீக்கிரம் கூற வேண்டும் ‘ என்று காத்திருக்க, அவள் சந்தோஷத்தை குலைப்பதைப் போல் அங்கு வந்து சேர்ந்த சந்தன பாண்டியன் தன் மகளை அழைத்தார்.
‘ இவர் எதுக்கு கூப்பிடுறாரு?? ‘ என்ற சிந்தனையுடன் அவரை நெருங்கிய அஞ்சலி, ” சொல்லுங்கப்பா” என்று கேள்வியாக அவரை நோக்க,
” அன்னைக்கு நடந்ததை இன்னும் மனசுல போட்டு உலப்பிகிட்டே இருக்கியோ குட்டி?? உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கா? ” என்று அவர் அவளை ஆராய்ந்து கொண்டே கேட்க,
முகத்தை முயன்று சாதாரணமாய் வைத்துக் கொண்ட அஞ்சலி, ” அதெல்லாம் இல்லைப்பா” என்று தயங்கிக் கொண்டே பதிலளித்தாள்.
‘ மகள் தன்னிடம் போய் சொல்கிறாள் ‘ என்று உணர்ந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான குரலில், ” அப்படி பிடிச்சிருந்தாலும் அதை இப்போவே அழிச்சிரு அஞ்சலி குட்டி.. அது முடிஞ்சு போச்சு.. என்னை அசிங்கப்படுத்திட்டு போனவங்க அவங்க .. அவங்களைப் பத்தி இனி நீ கனவுல கூட நினைக்கக் கூடாது.. புரிஞ்சுதா” என்று அவர் அதட்டல் போட,
அவரின் குரலில் அதிர்ந்து போய் நின்றிருந்த அஞ்சலியின் தலை அவளை அறியாமலே சம்மாதமாய் ஆடியது.
அதைக்கண்டு திருப்தியாக புன்னகைத்த அவளின் தந்தை, ” கூடிய சீக்கிரமே உனக்கு பிடிச்ச மாதிரி சூப்பர் மாப்பிள்ளையை அப்பா கூட்டிட்டு வரேன்.. வெசனப்படாதத்தா.. எம்புள்ளை எப்பவும் சிரிச்சிட்டே தான் இருக்கோணும்..சரியா??” என்று அவளின் தலையில் இடியை இறக்கிவிட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தார் சந்தன பாண்டியன்.
ஆனால் அவர் சொன்ன விஷயத்தைக் கேட்ட அஞ்சலிதான் தன் சிரிப்பை தொலைத்துவிட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.