புவிச் சுழற்சியின் பிடியில் தமிழும் பார்த்தியும் தம் வேதனைகளை ஒருபுறம் ஒதுக்கி நிதர்சனத்தை ஏற்றுத் தங்கள் வாழ்க்கையை விதி வரைந்த போக்கில் நகர்த்த ஆரம்பித்தனர்.
Advertisement
தமிழ் அன்று சொன்னது போல் அவனது வரவு செலவு கணக்குகள் எல்லாவற்றையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டவள், பகுதி பகுதியாக கடனையும் அடைத்து வந்தாள்.
அவன் வரும்வரை வேலைக்கு செல்வது என்று மீண்டும் வேலைக்கு செல்லவும் ஆரம்பித்திருந்தாள்.
Advertisement
Advertisement
தன் செலவுக்குப் போக அதிலும் ஒரு பகுதியை அவனுக்கென்றே ஒதுக்கி வைத்தாள்.
பார்த்தி கேட்டுக் கொண்டது போல, வீட்டுப் பத்திர விவகாரம் எதுவும் தனக்குத் தெரியாதது போலவே நடமாடினாள்.
Advertisement
பர்வதமும் பட்ட அடியில் சித்ராவிடமிருந்து ஒதுங்கியதோடு தன்னால் தனித்து நிற்கும் தமிழுக்கு ஆதரவாக இருந்து கொண்டார்.
அத்தோடு குழந்தை பிறப்பின் பின் நிர்மலாவிடம் சித்ராவின் துரோகத்தை சொன்னவர், தான் புரிந்து கொண்ட தமிழின் பெருந்தன்மையையும் விளக்கியிருந்தார்.
‘அவளும் பார்த்தியும் அனுபவிக்கும் அத்தனைக்கும் காரணம் தாங்கள்தான். அதனால் முன்பு போல் அவளை வேறுபடுத்திப் பார்க்காமல் அனுசரித்துப் போ. முடியாவிட்டால் உன் பாட்டில் இருந்து கொள்.
அதைவிடுத்து இன்னும் அவளை வருத்திப் பாவத்தை சேர்த்துக் கொள்ளாதே. ஏற்கனவே அவர்களை நசுக்கி நாம் நன்மையடைந்தது போலத்தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் பாவத்தை எங்கு சென்று கழிப்பதென்றே தெரியவில்லை. உனக்கும் குழந்தை என்று வந்தாகிவிட்டது. பார்த்து நடந்து கொள்!’ என்று சொல்லி விடவே, நிர்மலா மனம் திருந்தி பாதியும் தன் குழந்தைக்காய் மீதியும் என்று தன்னை மாற்றிக் கொண்டிருந்தாள்.
இருவரின் மாற்றத்தையும் நன்கு உணர்ந்து கொண்ட தமிழுக்கும் தவறை உணர்ந்தவர்களை எதுவும் சொல்லி காயப்படுத்த விருப்பமில்லை.
ஆனால் எதுவுமே நடவாதது போல் திரியும் சித்ராவை மாத்திரம் எளிதாக கடக்க முடியவில்லை அவளால்.
அதனால் அவள் இதுவரை அனுபவித்து வந்த சில சலுகைகளை வரைமுறைப்படுத்தினாள்.
பார்த்தியின் உழைப்பின் கீழ் குடும்பம் என்றான பின் தங்கள் உணவுக்கென்றோ பிள்ளைகளின் செலவுக்கென்றோ சித்ரா தங்கள் பணத்தை செலவு செய்த வரலாறு கிடையாது.
பர்வதம், உணவுக்கெல்லாமா கணக்குப் பார்ப்பது என்று தன் பெரிய மகன் குடும்பத்தை சின்ன மகனின் வியர்வையில் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தார் இதுவரை.
அது போதாது என்று சித்ரா மகன்களின் பெரும்பாலான தேவைகளையும் நைச்சியமாக அவரிடமிருந்து சுரண்டி விடுவாள்.
அது எல்லாவற்றுக்கும் தமிழ் முற்றுப்புள்ளி வைத்தாள்.
குழந்தைகள் இருவரையும் தவிர்த்து பெரியவர்கள் இருவருக்கும் மளிகைக்கு உண்டாகும் பணத்தை கணக்கிட்டு மாதம் மாதம் கொடுக்கும்படி சொல்ல சித்ரா துள்ளத்தான் செய்தாள்.
ஆனால் தமிழ் பின் வாங்கவில்லை.
“இங்க பாருங்க என் புருஷனுக்கு என்ன பிரச்சனைனு தெரியல. இனி வெளிநாட்டுக்கு போறதில்லனு என்கிட்ட சொன்னவர் திடீர்னு கிளம்பி போயிட்டாரு. கேட்டதுக்கு ஏதோ பெரிய கடன்ல மாட்டிக்கிட்டதா மட்டும்தான் சொன்னாரு. என்ன ஏதுன்னு விவரம் கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாரு. அவருக்கு சொல்ல இஷ்டமில்லனா எனக்கும் அது தேவையில்லனு விட்டுட்டேன்.
ஆனா அவர அதிலிருந்து சீக்கிரமா மீட்டுக் கொண்டு வரணும்றதுல மட்டும் உறுதியா இருக்கேன். இனி அவர் சம்பாதிக்கிற ஒரு ரூபா கூட அனாவசியமா செலவாகக் கூடாது. அதுக்காகத்தான் இதெல்லாம்! இவ்வளவு நாளும் கணக்குப் பார்க்காம எல்லாருக்கும் அவர் நிறையப் பண்ணாருதான? அதை யோசிச்சாவது இனி அவங்கவங்க அவங்க குடும்பத்தைப் பார்த்துக்கிட்டா, நாங்களும் எங்க வாழ்க்கையை கொஞ்சம் வாழ்ந்திட்டுப் போவோமே!
உங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணும் போது தெரியாதா, குடும்பம்னு ஆனா செலவு வரும், அதைப் பார்த்துக்கிற அளவுக்கு நம்மதான் சம்பாதிக்கணும்னு?” என்று வரதனும் இருக்கும் போதே முனைப்பாய் கேட்டுவிட்டிருந்தாள்.
சித்ரா அப்போதும் எப்படியாவது அவள் முடிவை மாற்றி ஒட்டுண்ணியாக இருந்து விடவேண்டும் என்ற முடிவிலேயே அவளோடு வாதாட முற்பட, வரதன் அவளைத் தடுத்திருந்தான்.
தமிழின் பேச்சில் இருந்த நியாயமும் உண்மையும் சுட்டதோ? இல்லை, ஆண் என்ற ஈகோ தாக்கப்பட்டதோ தெரியவில்லை. முதல் முறை மனைவியை மீறி முடிவெடுத்திருந்தான். தான் பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தான்.
அதில் சித்ரா தமிழை விடுத்து கணவனிடம் சண்டைக்கு செல்ல, அவன் தன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.
தமிழ் அவர்கள் சண்டையை எல்லாம் விலக்கி விடப் போகாமல் தன் வேலையைப் பார்த்து சென்று விட்டிருந்தாள்.
பர்வதத்துக்கு முதலில் தமிழ் சாப்பாட்டுக்கு கணக்குப் பார்த்துக் கேட்டது ஒருமாதிரியாக இருந்தது என்றாலும் இறுதியாக, “எங்களையும் வாழ விடுங்களேன்!” என்றவள் கூற்று அவரை சுட்டு விட அவரும் மகன் மருமகளிடையே எந்த சமரசத்திற்கும் போகவில்லை.
சித்ரா, மாமியாரின் மாற்றத்தை முன்னரே சிறுக சிறுக உணர்ந்திருந்தாலும் தமிழின் பேச்சுக்கு எதிர்த்து ஒரு சொல் சொல்லாமல் சென்ற அன்றே முழுமையாக உணர்ந்து கொண்டவள், தானும் தன் நல்ல மருமகள் கவசத்தை முழுமையாகக் கழற்றி எறிந்துவிட்டு ஒரிஜினல் அவதாரத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டாள்.
‘அதுதான் நாங்கள் காசு கொடுத்துதானே சாப்பிடுகிறோம். இனி இங்கே நாங்கள் பேயிங் கெஸ்ட்!’ என்பது போல் நடக்க ஆரம்பித்தாள்.
தங்கள் உடைகளைக் கழுவிப் போடுவதைத் தவிர ஒரு வேலையும் செய்யமாட்டேன் என்று வீணே குதர்க்கமும் குத்தலும் பேசிக் கொண்டு வீட்டுக்குள் அலைய பர்வதத்துக்கு ச்சீ என்றானது அவளில்.
அதன் பின் ‘நீ எதுவும் பினாத்திக் கொண்டு இருந்து விட்டுப் போ!’ என்று காதை அவளுக்குக் கொடுக்காமல் தன் வேலையில் கவனமாக இருக்கும் தமிழின் வழியையே அவரும் பின்பற்றிக் கொள்ள, சித்ரா மாரித் தவக்களையாய் மாறிப் போனாள்.
இங்கே நடக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூடப் பார்த்தியிடம் சொல்லத் தவறுவதில்லை தமிழ். அவனும் இரண்டு நிமிட இடைவேளை கிடைத்தாலும் இவளுக்கு அழைத்து விடுவான்.
அந்த நேரம் இவள் வேலையில் இருப்பாள், அழைப்பு ஏற்கப்படாது என்று தெரிந்தாலும் அழைக்காமல் இருக்கமாட்டான். அவள் எண்ணுக்குத் தன்னிடமிருந்து அழைப்பு செல்வது கூட அவனுக்குத் தனி சுகம்தான்.
இப்படி அவன் சென்ற ஒரு ஒரு வருடம் வரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
அந்த ஒரு வருடத்துக்குள் இங்கே நடந்த மாற்றங்கள் என்றால் நிர்மலாவின் குழந்தை பிறப்பும் ஆனந்தனின் திருமணமும்தான்.
பார்த்தி வந்த பின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்ன ஆனந்தனை பார்த்தியே சமாளித்து திருமணத்தை நடத்த வைத்திருந்தான்.
செல்வம் இன்னமும் சிறந்த குடிமகனாகத்தான் திரிகிறார்.
இப்படியாக எல்லாம் ஒரு சீராகப் போய்க் கொண்டிருக்கையில் அன்று பார்த்தி வேலைக்கு செல்லும் முன் தமிழிடம் ஃபோனில் பேசி விட்டு சென்றவன், அடுத்தநாள் வரை அவளை அழைக்கவில்லை.
அப்படி நீண்ட நேரம் அழைக்காமல் இருக்க மாட்டானே, ரொம்பவும் முடியாத பட்சத்தில் ஒரு குறுந்தகலாவது அனுப்பி விடுவானே என்று உள்ளம் பதைத்தது அவளுக்கு.
அவளாக அனுப்பிய குறுஞ்செய்திகள் எல்லாம் அவனை சென்று சேராமல் போனது. நேரமாக நேரமாக அவளின் அச்சம் கூடிக் கொண்டே போனது.
அன்று மாலை வரை பொறுத்தவள், அதற்கு மேலும் முடியாமல் எல்லோருக்கும் விஷயத்தை சொல்லி விட, அவர்களும் அவளைத்தான் சமாதானம் செய்தார்கள், ஏதாவது வேலையாக இருப்பான் கொஞ்சம் பொறு என்று!
ஆனால் அவளால் அப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அப்படித் தொடர்பு கொள்ள முடியாத வேலை என்றால் முன்னரே அவளுக்கு அறியத் தந்திருப்பானே என்று நெஞ்சம் படபடத்தது.
உள்ளுணர்வு வேறு நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உணர்த்திக் கொண்டே இருந்தது.
அது கொடுத்த எச்சரிக்கையைப் புறந்தள்ள முடியவில்லை அவளால்.
என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு சட்டென சேகரின் மனைவியின் நினைவு வர, தாமதிக்காமல் அவருக்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்றவரிடம் இவள் விஷயத்தை சொல்லி, “அண்ணாவிடம் பேசினீர்களா? அவர் ஏதாவது சொன்னாரா? இப்போது அவரிடம் பேச முடியுமானால் பார்த்தியைப் பற்றிக் கேட்டு சொல்ல முடியுமா?” என்று கேட்கவே,
அவர் நேற்று இரவு சேகர் தன்னிடம் பேசியதாகவும் எங்கோ தொலைவாக வேலைக்கு செல்வதால் தானாக அழைக்கும் வரை அழைக்காதே என்றும் சொல்லியிருந்தாராம் என்ற, இனி யாரிடம் கேட்பேன் என்று சோர்ந்து போனவள், சேகர் தொடர்பு கொண்டால் தன்னை அழைக்கும்படி சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
நொடி கூட ஓய்வின்றி அவன் பற்றிய சிந்தனைகளிலே உழன்றவள் ஊரில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் அழைத்து வேண்டுதல் வைத்தாள்.
சேகரின் மனைவி தானாக அழைப்பார் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் இடையிடையில் இவளே அவருக்கு அழைத்து சேகர் பேசினாரா என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
மேலும் இரண்டு நாட்கள் அவனின் குரல் அவள் செவி தீண்டாது கடக்க, அவளின் திடம் மொத்தமும் தீர்ந்து போனது.
நீர், ஆகாரத்தைப் புறக்கணித்து அவன் பேரைச் சொல்லி அழவும்தான் மற்றவர்களுக்கு விஷயத்தின் தீவிரம் புரிந்தது.
விஷயம் ஆனந்தனின் காதுக்கும் வர, அதன் தமிழிடம் சேகரின் மனைவியின் எண்ணை வாங்கிப் பேசினான்.
இவன் கேள்விகளுக்கு அவர் தயங்கித் தயங்கிப் பதில் சொல்லவே அவனுக்குள் ஏதோ துணுக்குற்றது.
ஆனாலும் அந்நியப் பெண்ணிடம் துருவித் துருவி விசாரிக்க முடியாது, சேகரின் எண்ணைத் தருமாறு கேட்க, அவளும் கொடுத்து விட்டாள்.
சேகரிடம் அழைத்துப் பேசியபோது சேகரும் எதையோ மறைத்துப் பேசுவது போலிருக்க, இவன் விடாமல் துருவி துருவி கேட்கவே, அழுது கொண்டே உண்மையை சொன்னான் அவன்.
அதைக் கேட்ட ஆனந்தன் தன் தலையில் இடியும் மின்னலும் ஒரு சேர இறங்கியது போல் செயலிழந்து நின்றான்.
அவன் கண்கள், “என்ன அண்ணா சொல்றாங்க? அவரு எங்கேயாம்?” கண்ணீரோடு தன்னை உலுக்கிய தங்கையின் மேல் நிலைகுத்தி நின்று விட்டன.