ரொம்ப நேரமாக மஞ்சுவின் நகைகளைக் கையில் வைத்துக் கொண்டு மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சிதாவின் கண்களில் இப்போது கண்ணீர்!
‘என்னை மன்னிச்சுடு மஞ்சு. இத்தனை வருஷம் ஒண்ணு மண்ணா பழகிட்டு, நான் உனக்கு செஞ்சது பச்சை துரோகம்!
எல்லாமே ஒரு வேகத்துல நடந்துடுச்சு. கண்மூடி திறக்கிறதுக்குள்ள!
நீ நம்புவியா மஞ்சு? நான் உன்கிட்ட காசு பணம் எடுத்துக்கணும்னு நினைச்சிருக்கேனே தவிர, நீயே அழிஞ்சு போகணும்னு ஒரு நாளும் நினைச்சதே இல்ல!
Advertisement
அன்னிக்கு அப்படி ஒரு சூழ்நிலை!
தப்பு நடந்துடுச்சு!
ஆனா அதுக்கப்புறமும் நான் செஞ்ச தப்பை மறைக்க மேலே மேலே தப்பு பண்ணிட்டே தான் இருந்திருக்கேன்.
Advertisement
ஆனா நான் யாருக்காக இவ்வளவு செஞ்சேனோ, கடைசியில அவனுக்கு நான் ஒண்ணுமே இல்லைன்னு இன்னிக்கு ஆகிப் போச்சு. எப்பவுமே நாங்க ஒண்ணும் ஆதர்ஸ தம்பதிகள் இல்லை தான்!
Advertisement
நான் தான் அவன் மேல அன்பா இருந்திருக்கேன்! ஆனா அவனுக்கு நான் வெறும் அடிமை. என் தம்பி கிட்ட இருந்து காசுப் பிடுங்கி வாங்கிக்க மட்டும் உபயோகப்படுற மெஷின்!
அதனால தான் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. அவன் மட்டும் மாட்டிக்காம இருக்கணும்னு தான் நினைக்கிறான்.
இப்ப எனக்கு வாழவே பிடிக்கல மஞ்சு!
Advertisement
வாழ்க்கையில நான் பண்ணின ஒரே தப்பு. இந்த ஆளைக் கலயாணம் பண்ணினது தான்!
என்ன பண்ண? நான் அந்த ஆளை ரொம்ப விரும்பி தொலைச்சுட்டேன்.
நான் தான் உங்கம்மா பார்த்து வச்சுட்டுப் போன மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு அவன் என் பின்னே சுத்தும் போது நல்லா தான் இருந்துச்சு!
நானும் அதை எல்லாம் உண்மைன்னு நினைச்சு அவன் மேல ஆசை பிரியம் வச்சுட்டேன். கண் மூடித்தனமா தான்!
அதனால தான் அவன் எனக்கு துரோகம் பண்ணி இன்னொருத்தி கூட வாழறது தெரிஞ்சும் கூட தெரியாத மாதிரி இருந்தேன்.
எனக்கு குழந்தை இல்ல அதனால தான் வேற ஒருத்திக் கூட போய்ட்டான் அப்படின்னு எனக்கு நானே சமாதானம் கூட செஞ்சுகிட்டு மவுனமா இருந்துட்டேன்.
ஆனா இந்த விசயம் உனக்கு தெரிய வந்தவுடனே, நீ எனக்காக அவன் கிட்ட சண்டைப் போட்ட!
ஆனா நான் உன்னை.. இந்த கையால..’ ரஞ்சிதாவுக்கு அழுகை வெடித்துக் கிளம்பியது!
‘நான் தப்பு பண்ணிட்டேன் மஞ்சு.
நானே எல்லாத்தையும் செஞ்சுப்பிட்டு, பயத்துல அந்த ஆள் சொன்னபடி நடந்துக்கிட்டு , செத்துப் போன உன் பேருக்கும் களங்கம் ஏற்படுத்தி உன் பொண்ணை வேற கொடுமைப்படுத்தி, என் தம்பி வாழ்க்கை சீரழிஞ்சு போக நானே காரணம் ஆகிட்டேன்.
உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணிட்டேன்.
உன் கிட்ட மன்னிப்பு கேக்க கூட எனக்கு அருகதை இல்லை!
நான் உன்கிட்டயே வந்துடறேன் மஞ்சு! ’என்று மஞ்சுவின் நகைகளை பார்த்தவாறே அழுதுக் கொண்டிருந்த ரஞ்சிதாவின் நினைவுகள் அன்று நடந்தவற்றை மீண்டும் அசைப் போட்டது!
————–
அன்று.
மஞ்சு மிகவும் சந்தோசமாக இருந்தாள்.
ஒரு பெரிய சாதனை செய்து விட்ட நிம்மதி!
‘வடிவேலுவையும் அஸ்வினி யையும் நல்லபடியாக ட்ரெயின் ஏத்தி விட்டு வந்தாச்சு. தன்யா சேச்சிக்கும் போனில் சொல்லியாச்சு. இனி அவங்களும் அவங்க ஹஸ்பன்ட்டும் வடிவேலு அஸ்வினியை பார்த்துப்பாங்க.
நல்ல மழை வேற!
மாடியில் எல்லோ ரெயின் லில்லி பூத்துக் குலுங்கி ஒரே மஞ்சள் மையமா இருக்கு. அங்க. இப்பவே இத வீடியோ எடுத்துப் போட்டுடலாம்!
சும்மா வியூஸ் அள்ளனும்!
நான் வேற ஏற்கனவே போன வீடியோவுல இந்த மஞ்சள் லில்லி பூக்குறப்போ வீடியோ போடுறேன்னு சொல்லியிருக்கேன்.
ரெண்டு மூணு பேர் வேற, மழை பெய்யுறப்போ எல்லாம் உங்க மஞ்சள் லில்லி பூக்கலயான்னு கேட்டுகிட்டே இருந்தாங்க.
ரெடி ஸ்டார்ட்.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே , போனை எடுத்தவள், ‘அய்யோ, இது நந்தினியோட போன் இல்ல? நம்மோட போன் வடிவேல் கிட்ட இருக்கு. அவன் அத திருப்பி அனுப்பினா தான் அப்லோட் பண்ண முடியும்.
ஆனா இப்படி திரும்ப பூ பூக்காதே! இன்னிக்கு பவுணர்மி வேற! நிலா அப்படி சூப்பரா இருக்கு! அந்த நிலா வெளிச்சத்துல இந்த மஞ்சள் பூக்கள்! செமையா இருக்கும்!
நந்தினி போன்ல ஒரு மெமரி கார்டை போட்டு அதுல வீடியோ ஸ்டோர் ஆகுற மாதிரி செட் பண்ணிட்டு வீடியோ எடுத்து வச்சுப்போம்’ என்று நினைத்துக் கொண்டு அதை செயல்படுத்திக் கொண்டு இருந்தாள் மஞ்சு.
“என்ன மஞ்சு ரொம்ப சந்தோசமா இருக்க இன்னிக்கு?” ரஞ்சிதா கூட அவள் முகம் முழுக்க சந்தோசமாய் போனில் ஏதோ கழட்டி மாட்டிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு கேட்டாள்.
“ஆமா இது உன்னோட போன் இல்லையே? யாருது?” ரஞ்சிதா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.
“நந்தினியோடது. கொஞ்சம் ஒர்க் ஆகாம அடிக்கடி ஹேங் ஆகிட்டு இருந்தது! ரிப்பேர் பண்ணி வாங்கிட்டு வர சொல்லியிருந்தா. இன்னிக்கு தான் வாங்கிட்டு வந்திருக்கேன். அவ கிட்ட நாளைக்கு தான் கொடுக்கணும்.
நான் மாடிக்குப் போறேன். வீடியோ எடுக்க. பாப்பா தூங்கிட்டா. இருந்தாலும் ஒரு கண் அவ கிட்ட வச்சுக்கோங்க”. என்று சொல்லி விட்டே சென்றாள்.
மாடிக்குப் போய், வழக்கம் போல் தான் போனை வைக்கும் இடத்தில் வைத்து விட்டு, வீடியோ எடுக்க தயாரானாள்.
அந்த மொட்டை மாடியில் மூன்றடி உயரத்தில் நான்கு கான்க்ரீட் பில்லர்கள் இருந்தன!
அவற்றில் மீதமாக வெளியில் தெரிந்து கொண்டிருந்த இரும்பு கம்பிகளின் மீது அங்கிருந்த கொடியில் இருந்து எடுத்த இரண்டு டவலைகளை எடுத்துப் போட்டு மறைத்தாள். மொத்தம் நான்கு பில்லர்கள் அப்படி இருந்தன.
சீக்கிரம் இத மேல சிமென்ட் பூச சொல்லணும் இந்த வாட்டி மாமா வீட்டில் இருக்கும் போது. இல்லைனா இது வழியா மழைத் தண்ணீர் உள்ளே போய்டும்னு நந்தினி சொல்லிட்டே இருக்கா!
ரெண்டு டவல் தான் இருக்கு! சரி போதும். அந்த ரெண்டு பில்லரும் கேமிராவில் கவர் ஆகாது!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், வீடியோவுக்காக ரெயின் லில்லி பூக்களைப் பத்தி பேசிக் கொண்டிருக்க, அவளைக் காண அங்கு வந்தான் ரத்தினம்.
கொஞ்சம் போதையில் தான்!
அவனைப் பார்த்து முறைத்தபடி,
“ம்ச்ச்..” என்று கோபத்தில் உச்சுக் கொட்டி, “இங்க எதுக்கு வந்தீங்க?
வீடியோ எடுத்துகிட்டு இருக்கிறது தெரியல?” கோபமாய் கேட்டாள்.
“நீ வீடியோ எடு யாரு வேணாம்னு சொன்னா?
ஆனா நீ வீடியோ எடுக்கிறது எல்லாம் இப்படி பூச்செடி காய்கறி மரம் மட்டையோட நிறுத்திக்கோ. தேவையில்லாம குருமூர்த்தி அண்ணன் போறது வர்றது பேசியதை எல்லாம் எதுக்கு வீடியோ எடுத்துகிட்டு இருக்க?
தேவையா உனக்கு? ஒழுங்கா வீட்டுல இருந்து சோத்தை பொங்கினமா, புருஷனுக்குப் போட்டோமா, பிள்ளைய பார்த்துக்கிட்டமான்னு இல்லாம, உனக்கு எதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு எல்லாம்?
அவங்க யாரு இடத்தை எப்படி வாங்கினா உனக்கு என்ன? எந்த இடத்தை எடுத்துக்கிட்டா உனக்கென்ன? கோவில் சொத்தோ பிள்ளை இல்லாத சொத்தோ உனக்கு என்ன வந்துச்சுன்னேன்?
விட்டுடு. இத்தோட விட்டுடு. ஏதோ நான் சொன்னேன்னு உன்னை விட்டு வச்சுருக்காங்க. இல்ல.. உன் கதி என்ன ஆகியிருக்கும் தெரியும்ல?” ரத்தினம் பேசிக் கொண்டே போக,
“ஏய். ச்சீ. நிறுத்து! என்னைக் கண்டிக்கிற அளவு நீ ஒண்ணும் பெரிய ஆளு இல்லை. அது உனக்கே நல்லா தெரியும்!
சும்மா போதையில உளராம கீழேப் போய் உன் பொண்டாட்டி நல்லா சமைச்சு வச்சுருப்பா. நல்லா கொட்டிக்கிட்டு தூங்குற வழியைப் பாரு. பே..” என்று அலட்சிமாய் சொன்னாள் மஞ்சு.
“ஏய்.. என்னடி.. நான் ஒரு ஆம்பிளை. இந்த வீட்டுக்கு மூத்தவன். நான் பேசுறேன் என் பேச்சுக்கு மரியாதை இல்லியா?” அவிழ்ந்த லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு மீண்டும் அவள் அருகே வந்தான் ரத்தினம்.
“இதப் பாரு ஒழுங்கா போய்டு. இல்ல. மாமாவுக்கு போனைப் போட்டு உன் வண்டவாளத்தை எல்லாம் சொல்லிப்புடுவேன்.
நீ என்னென்ன கள்ளக் கணக்கு எழுதிட்டு வந்து கொடுக்கிற பொக்லைன் வண்டி வருமானத்துல. அப்புறம் ரஞ்சு அக்காவுக்கு நீ பண்ணிட்டு இருக்கிற துரோகம்!
ரஞ்சு அக்காவுக்காக தான் அவர் பொறுமையா இருக்கார். அவங்க வாழ்க்கையை நினைச்சு தான் இது வரை நீ திருடி தான் தின்னுட்டு இருக்கிறன்னு தெரிஞ்சும் அமைதியா விட்டுட்டு இருக்கார்.
ஆனா நீ அக்காவுக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கிறது மட்டும் அவருக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்!
உன்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளிடுவாரு!
பார்த்து சூதானமா நடந்துக்கோ!” மஞ்சு எச்சரிக்கும் குரலில் சொல்ல கேட்ட ரத்தினம் கடுப்பானான்.
“என்னடி.? .நானும் பார்த்துட்டே இருக்கேன். நீ ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க? மிரட்டுற? ரொம்ப தான் துள்ளுற?” என்று அவளை நெருங்கி அடிப்பது போல போனான் ரத்தினம்!
“அய்யோ நிறுத்துங்க. என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றபடி மாடிக்கு வந்தாள் ரஞ்சிதா!
“ஏன் இப்படி சண்டைப் போட்டுக்கிறீங்க? உங்க சத்தம் கீழே வரைக்கும் கேக்குது!
நல்ல வேளை எதிர்வீட்டு அன்னம் இன்னிக்கு வீட்டில் இல்லை! இல்லன்னா ஊரே டமாரம் அடிச்சு சொல்லிப்புடுவா!”
ஆமாம் தெருவில் எல்லோருமாக சேர்ந்து திருவண்ணாமலை பவுணர்மி கிரி
வலம் சென்றிருக்கிறார்கள் ஒரு பஸ் ஏற்பாடு செய்து கொண்டு!
“அக்கா உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லி வைங்க. சேராத இடத்தில் சேர்ந்திருக்கார்! தப்பான சகவாசம் எல்லாம் வச்சுக்கிட்டு இருக்காரு. நீங்க கண்டுச்சு வைங்க. இல்லைனா கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வர வேண்டியிருக்கும்!
நானே பிடிச்சுக் கொடுத்துடுவேன் பார்த்துக்கங்க!”
“அதுக்கு நீ உயிரோட இருந்தா தானே முடியும்!
இப்பவே உன் கதையை முடிச்சுட்டு, குரு மூர்த்தி ஐயாவைப் போய் பார்த்தா நான் கோடிஸ்வரன் தான்!” என்று சொன்ன ரத்தினம் மஞ்சு எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கழுத்தைப் பிடித்து நெரிக்க போனான்.
“அய்யோ. பாவி. கொலைக்கார பாவி! கையை எடுடா. ஏய் கிரகம் பிடிச்சவனே கையை எடுடா” என்று ரத்தினத்தின் கைகளை எடுத்து விட்டாள் ரஞ்சிதா.
“இவ்வளவு தூரம் ஆகிடுச்சா. இருடா உன்னைப் பார்த்துக்கிறேன். என்னையே கழுத்தை நெரிச்சு கொல்லப் போறியா? எங்க கொல்லு பார்க்கலாம்? எல்லாம் ரெக்கார்ட் ஆகிட்டு தான் இருக்கு!
கொல்லுடா பார்க்கலாம். ஒரு ஆம்பிளையா இருந்தா கொல்லுடா! திருடி கமிசன் அடிச்சு, அதுவும் வீட்டுக்குள்ள சொந்த மச்சினன் கிட்டேயே கமிசன் அடிச்சுப் பிழைக்கிற நாய் நீ!
உனக்கே இவ்வளவு திமிரு இருந்தா, உண்மையா உழைச்சுப் பிழைக்கிற எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?
கொல்லுடா பார்க்கலாம்” என்று திமிறிக் கொண்டு ரத்தினம் முன்னே போய் நிற்க முயன்ற மஞ்சுவை இழுத்துப் பிடித்துக் கொள்ள பெரு முயற்சி செய்து கொண்டிருந்தாள் ரஞ்சிதா!
“அய்யோ.. நீ என்ன மஞ்சு. இந்த ஆள் போதையில இருக்கான்! அவன் கிட்ட போய் மல்லுக் கட்டிக்கிட்டு நிக்கிற?”
“இல்லக்கா. எவ்வளவு திமிர் பாருங்கக்கா. உங்களுக்காக தான் இந்த ஆளை வீட்டுக்குள்ள இன்னும் விட்டு வச்சுருக்கோம்!
ஆனா உங்களுக்கே துரோகம் பண்ணிட்டு தான் இருக்காரு இந்த ஆளு.
இப்ப என்னடான்னா என்னை வந்து மிரட்டுறாரு! அவ்வளவு தான் மரியாதை உனக்கு! தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு” மஞ்சு கத்த,
“ஏய். ஒரு ஆம்பிளை என்னையே தொலச்சுப்புடுவேன்னு மிரட்டுறியா நீ? ஆமாண்டி நான் கமிசன் வாங்குவேன் தான்! இங்க மட்டுமில்ல.
குரு மூர்த்தி அய்யாவுக்கு கூட மாட இருந்து நிலம் கிரயம் பண்ணிக் கொடுக்கிறதும் நான் தான்!
இப்போ கூட நீ அவங்க தொழிலுக்கு இடைஞ்சலா இருக்கன்னு உன்னைப் போட்டுத் தள்ளக் கூட அவங்க யோச்சிட்டு தான் இருக்காங்க தெரியுமா?
என்னோட சொந்தக்காரின்றதால விட்டு வச்சுருக்காங்க.
பெரிய இவ மாறி பேசிட்டு இருந்தே, நானே உன்னைப் போட்டுத் தள்ளிட்டு குரு மூர்த்தி ஐயா கிட்ட காசு வாங்கிக்குவேன் பார்த்துக்க!”
“ஏய்.. போடா. எந்த வெண்ணையும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது! மஞ்சு அலட்சிமாக சொல்ல,
“இந்த திமிருக்கு தாண்டி இப்ப உயிரை விடப் போற!” என்று சொன்ன ரத்தினம் மீண்டும் மஞ்சுவின் கழுத்தை நெரிக்கப் போக, அவனிடமிருந்து மஞ்சுவைப் பிரிக்க எடுத்த முயற்சியாக ரஞ்சிதா தன் முழு பலத்தையும் உபயோகித்து அவளைப் பிடித்து இழுத்து அதே வேகத்தில் வேறு புறமாக தள்ளினாள்!
அப்போது தான் அது நிகழ்ந்து விட்டது!
மஞ்சு ரஞ்சிதா இழுத்த வேகத்தில் அங்கே இருந்த கான்கிரீட் பில்லரின் நீட்டிக் கொண்டிருந்த இரும்பு கம்பியின் மேல் மல்லாக்க விழுந்தாள்.
அவளின் பின் மண்டையில் நன்கு வலுவாக கம்பி வலுவாக குத்தி பின் மண்டை ரத்தத்தால் வழிந்து முன் பக்க முகம் கழுத்து வரை வந்தது!
“அய்யோ மஞ்சு” என்று அருகில் போனாள் ரஞ்சிதா.
மஞ்சுவிடம் கொஞ்சமும் அசைவில்லை!
ரஞ்சிதா பயந்து போய் ரத்தினத்தைப் பார்க்க, “என்ன ரஞ்சிதா, இப்படி பண்ணிட்ட? நான் கூட கோபத்தில் தான் சும்மா லேசா அவள் கழுத்தை நெரிக்க போனேன். நீ என்ன இப்படி அவளைக் கொன்னே போட்டுட்ட?”
“நான் எங்கங்க அவளைக் கொன்னேன்? உங்க கிட்ட இருந்து காப்பாத்த அவளைப் பிடிச்சு இழுத்து வேற பக்கம் தள்ளினேன். அவ்வளவு தான்!” பயத்தில் ரஞ்சிதாவின் குரல் தந்தியடித்தது!