எல்.ஆர். ஈஸ்வரியுடன் சேர்ந்து நம் அஜயும் அங்கு கோவிலில் தந்த புளியோதரையை புல் மீல்ஸ் போல் நினைத்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்த கீதாவை நோக்கி பாடிக் கொண்டிருந்தான்.
” கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா”
Advertisement
என்று அந்த வரியையே அவன் மீண்டும் அவளை பார்த்து பாட,
” கண்ணை நோண்டி காக்காக்கு போட்டிடு .. அது இல்லாம இருக்கது தான் புண்ணியமே” என்று சாப்பாட்டை வாயில் அதப்பிக் கொண்டே அவள் கூற,
Advertisement
Advertisement
” ப்ச்.. கொஞ்சமாச்சும் ரொமாண்டிக்கா பேச விடுறியா அவதார் குட்டி?? நீ தான் இப்படி பொறுப்பில்லாமல் புளியோதரை மட்டுமே முக்கியம்னு இருக்க.. அட்லீஸ்ட் என்னையாச்சும் எதுனா பெர்ஃபார்ம் பண்ண விடுறியா?? குடும்பத்துல யாராச்சும் ஒருத்தர் ரொமாண்டிக்கா இருக்கணும் அவதார்.. இல்லை நமக்கு அடுத்து நம்ம பெருமையை உலகுக்கு எடுத்து சொல்ல சங்கதிகள் இருக்காது” என்று அவன் தீவிரமான குரலில் மொழிய,
அதையெல்லாம் அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.. அவள் கண்களுக்கு அல்ல அல்ல அவள் வயிற்றிற்கு அப்போது தெரிந்த ஒரே விஷயம் சாப்பாடு மட்டுமே.. அதுவே அவளுக்கு பிரதானமாக பட்டது.
Advertisement
அஜய் வேறு வழியில்லாமல் தன் விதியை நொந்து கொண்டு அங்கு கோவிலின் பின்னால் உள்ள மரத்தின் நிழலில் அமர்ந்து கடலை வறுத்துக் கொண்டிருந்த தன் அண்ணனையும் அஞ்சலியையும் கண்டு ஏக்க பெருமூச்சு விட்டான்.
அஜய் சொன்னபடியே தன் அக்காவிற்காக அவளை ஏதேதோ தகிடுதத்தம் செய்து யாருக்கும் தெரியாமல் அஞ்சலியை தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தாள் கீதா.
அவள் வருவாளா மாட்டாளா என்று அல்லோகலபட்டுக் கொண்டிருந்த அஸ்வத், அஞ்சலியை கண்ட பின் வார்த்தைகளின்றி ஊமையாகினான்.
இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி கீதாவை அன்னதானம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டான் அஜய்.
அவர்கள் சென்ற பின் இருவருக்கும் என்ன பேச என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் பின் சிரிப்பதுமாக இருக்க,
முதலில் மௌனத்தைக் களைத்த அஸ்வத், ” உங்க வீட்டுக்கு தெரியாம எப்படி வந்தீங்க?? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று வினவ,
அஞ்சலியும் ஒரு குறு நகையுடன், “அப்பா ஏலக்காய் தோட்டத்தை பார்க்க மலைக்கு போய்டுக்காங்க.. வீட்டுல அம்மா மட்டும் தான.. சோ பரீட்சைக்கு ஒரு புக் வாங்கணும் அப்படியே கோவிலுக்கு போய்ட்டு வந்துடுறேன் அப்படின்னு சொன்னேன்.. கீதா கூட வரான்னு சொன்னதுனால அம்மாவும் தைரியமா அப்பாகிட்ட கேட்காம போக விட்டுட்டாங்க.. என்னை விட கீதா மேல அம்மாக்கு ரொம்ப நம்பிக்கை” என்று அஞ்சலி காற்றிலாடும் தன் கருங்குழலை காதோரம் ஒதுக்கி விட்டுக்கொண்டே அவனிற்கு பதிலளிக்க,
அஞ்சலியை விட்டு அஸ்வத்தால் கண்களை அகற்றவே முடியவில்லை.
கோவிலுக்கு வருவதால் தலைக்கு குளித்து முடியை பின்னாமல் இரண்டு பக்கமும் கொஞ்சம் முடியை எடுத்து நடுவில் கிளிப் போட்டு விரித்து விட்டு, பிரம்மனால் நுணுக்கமாக பார்த்து செய்யப்பட்ட நுதலை மேலும் அழகாய் காட்ட இரு புருவங்களுக்கும் மத்தியில் சின்னதாய் ஒரு பொட்டை வைத்து, சிகப்பு வண்ண புடவையும் அதற்கு பொருத்தமாய் பச்சை வண்ண ரவிக்கையும் அணிந்து தலை நிறைய மல்லிகையும் வாய் நிறைய புன்னகையுமாய் நின்றிருந்த அஞ்சலியின் அழகைக் கண்டு அசையாமல் நின்றிருந்தான் அஸ்வத்.
அவள் பதில் சொல்லிவிட்டது கூட அறியாமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க, அவன் முன் தன் கைகளை ஆட்டி அவனை நினைவிற்கு கொண்டு வந்தாள் அஞ்சலி.
“ஹாங்” என்று தூக்கத்தில் இருந்து விழிப்பவனைப் போல் முழித்த அஸ்வத் அங்கு தன்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியைக் கண்டு அசடு வழிந்தான்.
” என்ன பாஸ் நின்னுகிட்டே தூக்கமா?? இந்த வியாதி வேற இருக்கா உங்களுக்கு?” என்று அவனை வம்பிழுக்க,
அவனோ அதை சிரிப்புடன் சமாளித்து விட்டு, “யூ லுக் டிவைன் அஞ்சலி” என்று ஆத்மார்த்தமான குரலில் கூறினான்.
அதைக் கேட்ட பெண்ணவளுக்கோ நாணம் வந்து தாக்க, அதை மறைக்க பேச்சை மாற்ற எண்ணி, ” நம்ம கூடிய சீக்கிரமே அப்பா மனசை மாத்தனும்ங்க.. அப்பா அன்னைக்கே வேற மாப்பிள்ளை பார்க்குறேன்னு சொன்னாங்க.. எனக்கு அதை நினைச்சு பயமா இருக்கு” என்று அவள் உண்மையான கலவரத்துடன் கூற,
அவள் கண்களில் தன் கண்ணை கலக்க விட்ட அஸ்வத், “அஞ்சலி நீங்க என்னை நம்புறீங்க தான?? இதுவரைக்கும் யாரையும் எதிர்த்து நான் பேசியது கூட கிடையாது.. ஆனால் உங்க விஷயத்துல அப்படி இல்லை.. அட் எனி காஸ்ட் ஐ நீட் யுவர் லவ்.. நாம ரெண்டு பேரும் சேருறதுக்கு என்ன தடை வந்தாலும் அது எல்லாத்தையும் உடைத்தெறிந்து விட்டு உங்க கையை நான் பிடிப்பேன்.. இது நம்ம காதல் மேல சத்தியம்” என்று உயிரை ஊடுருவும் குரலில் அவன் கூற,
அதுவரை காதல் என்ற வார்த்தையை உரைக்காமலே அதை உணர்ந்து கொண்டு இருந்தவளுக்கு இப்போது தன்னவனின் வாய் வார்த்தையாக அதை கேட்கும் போது வயிற்றிற்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தது.
முகம் முழுக்க புன்னகையோடு அவனை எதிர்நோக்கிய அஞ்சலி, “இது போதும் … ரொம்ப சந்தோஷமா இருக்கு அஷு” என்று முதன் முதலாக அவன் பெயரை சுருக்கி அழைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் அஞ்சலி.
அப்போது தான் ஞாபகம் வந்தவளாக தன் கைப்பையில் இருந்து ஒரு டிபன் பாக்ஸை வெளியே எடுத்து அஸ்வத்திடம் நீட்டிய அஞ்சலி, ” உங்களுக்கு குழிப்பனியாரம் பிடிக்கும்னு நானே என் கையால செஞ்சு கொண்டு வந்தேன்.. சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க” என்று அவள் கூற,
அதை ஆசையாய் தன் கைகளில் வாங்கிக் கொண்ட அஸ்வத் அதிலிருந்து ஒன்றை எடுத்து தன் வயிற்றுக்கு அனுப்பியவன், “வாவ்!!! மார்வலஸ்!! இப்படி ஒரு பனியாரத்தை நான் சாப்பிட்டதே இல்லை.. ஆனா என்ன ரொம்ப இனிப்பா இருக்கு” என்று அவன் ரசித்து உண்டுகொண்டே கூற,
“அச்சோ.. இனிப்பு கரெக்டா தானே போட்டேன்” என்று அஞ்சலி பதற,
” மே பீ உங்க கையால செஞ்சேன்னு சொன்னீங்க தான.. அதான் உங்களை மாதிரியே உங்க கை பட்ட பனியாரமும் இவளோ இனிப்பு போல” என்று அவன் காதல் பயிரை வளர்க்க,
அப்போது, ” ச்சை இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை டா சாமி.. ” என்று நக்கல் செய்து கொண்டே அங்கு வந்து சேர்ந்தனர் அஜயும் கீதாவும்.
இருவரையும் பொய்யாக முறைத்த அஸ்வத், ” போடா பொறாமை பிடிச்சவனே..உனக்கும் ரெண்டு கொண்டு வந்திருந்தா கம்முன்னு இருந்திருப்ப..” என்று தன் தம்பியை வாரினான்.
அதைக்கேட்டு கீதாவின் பக்கம் திரும்பிய அஜய், ” எல்லாம் உன்னால தான்.. உங்க அக்காவை பாரு அவங்க லவ்வருக்காக குழிப்பனியாரம்லாம் செஞ்சு கொண்டு வராங்க.. நீயும் தான் இருக்கியே” என்று அவளை வசைபாட,
அவனை ஒரு மார்க்கமாய் பார்த்த கீதா, ” உன் மூஞ்சிக்கு குழிப்பனியாரம் வேற கேட்குதா?? வேணும்னா எங்க வீட்டுக்கு பின்னாடி ஆறடிக்கு குழி தோண்டி வைக்கிறேன் வந்து படுத்து செத்து போய்டு நானாச்சும் நிம்மதியா இருப்பேன்” என்று கடுப்புடன் மொழிய,
அதைக்கேட்டு, “கீதா என்ன பேச்சு இது.. சாரி கேளு அவர்கிட்ட” என்று தன் தங்கையை கண்டித்தாள் அஞ்சலி.
” அட விடுங்க.. என்னோட அவதார் குட்டிக்கு என் மேல எவ்வளவு பாசம் இருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க அப்பா வீட்டு நிலத்துல எனக்கு ஆறடிக்கு குழி தோண்டி தருவேண்ணு சொல்லுவா.. ஆறடி வேண்டாம் செல்லம் சின்னதா போதும் நம்ம ரெட் ரோஸ் செடி வளர்த்து நம்ம காதலின் அடையாளமா கொண்டாடலாம்” என்று அவன் அஞ்சலியிடம் ஆரம்பித்து கீதாவிடம் முடிக்க,
” உன்னைலாம் எந்த நேரத்தில பெத்தாங்களோ.. இம்சை” என்று கத்திய கீதா அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,
அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு முரடன் கீதாவை கத்தியால் தாக்க முயல, சடுதியில் அவளை தன்னை நோக்கி இழுத்து காப்பாற்றி இருந்தான் அஜய்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்க இருந்த அசம்பாவிதத்த எண்ணி அனைவரும் உறைந்து போய் நின்றனர்.