மருத்துவ உபகரணங்களுக்கு நடுவில் தலையில் பெரிய கட்டுடன் ஆழ்ந்த மயக்கத்தில் வீற்றிருந்த சுந்தர பாண்டியனை கண்ணாடி கதவுகள் வழியாக பார்த்துக் கொண்டிருந்த சந்தன பாண்டியனுக்கு நெஞ்சை யாரோ அழுத்தி பிசைவது போல் அவ்வளவு வலித்தது.
Advertisement
எவ்வளவு கம்பீரமாய் ஒரு மிடுக்குடன் வலம் வரும் தன் தம்பி இப்போது படுத்த படுக்கையாய் கிடப்பதை எந்த அண்ணனிற்கு தான் பார்க்க சகிக்கும்.
மரம் மீது புல்லட் மோதியதில் ஏற்பட்ட காயத்தால் உதிரப்போக்கு அதிகம் இருக்க அந்த இடத்திலே மயங்கிச் சரிந்திருந்தார் சுந்தரபாண்டி.
Advertisement
Advertisement
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அதை கவனித்து உடனடியாக தேனியில் இருந்த பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட, அவரின் காக்கி யூனிபார்மும் அதில் பொறித்திருந்த பெயருமே அவரை அடையாளம் காண போதுமானதாய் இருக்க அடுத்த நொடியே இந்த விஷயம் காட்டுத்தீயாய் பரவியது.
விஷயம் கேட்டவுடன் பதறி துடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கீதாவும் மீனாட்சியும் ஓடி வந்தனர்.
Advertisement
அவர்கள் வந்த சமயம் தான் சுந்தர பாண்டியனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தனர்.
இத்தனை வருட காவல்துறை வாழ்க்கையில் இதுபோல் பல முறை எதிரிகளால் தாக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல் தன் கணவன் எழுந்து வருவார் என்று உளமாற நம்பிய மீனாட்சி ஒரு சொட்டுக் கண்ணீர் விடாமல் கல்லாய் இறுகிப் போய் தன் கணவன் கண் முழிப்பதற்காகக் காத்திருந்தார்.
சுந்தரபாண்டியனுக்கு விபத்து ஏற்பட்ட விஷயம் சந்தன பாண்டியனின் செவிகளையும் எட்டியது.
இதே சம்பவம் ஒரு வாரம் முன்பு நடந்திருந்தால் அவர் தன் வீராப்பை பிடித்துக்கொண்டு தான் தொங்கியிருப்பாரோ என்னவோ ஆனால் இப்போது நிலமையே வேறாக இருந்தது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது வரும் தைரியமே தனி தான். ஆனால் உடலுக்கு லேசான காய்ச்சல் வந்தால் கூட எவ்வளவு பெரிய மனிதன் என்றாலும் உடன் இருக்க ஒரு துணையை நாடுவது இயற்கை தான்.
வினோத் விளையாட்டாய் சந்தனபாண்டிக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி விட்டுச் சென்றாலும் அவருக்கு இருந்த உயர் இரத்த அழுத்ததிற்கு இன்று இல்லை என்றாலும் கூடிய விரைவில் ஹார்ட் அட்டாக் வருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்தன.
அதை உணர்ந்த அஸ்வத்தும் அது வராமல் தடுப்பதற்கான மருந்துகளை தான் அவரிற்கு வழங்கி இருந்தான்.
இருந்தாலும் இரண்டு நாள் மருத்துவமனை வாசமும், உடலில் இருந்த சோர்வும் சந்தனபாண்டியனின் மனதை மிகவும் தளர வைத்திருந்தது.
இதில் மதுரத்தின் பேச்சு வேற அவர் மூளையில் வண்டாய் குடைந்து கொண்டிருக்க, சுந்தர பாண்டியனை தன் வரட்டு கௌரவத்தால் பெற்றோரிடம் இருந்து பிரித்து மிகப்பெரிய தவறிழைத்து விட்டோம் என்று அவர் குற்றவுணர்ச்சியில் வாடிய சமயம் தான் அவர் செவிக்கு சுந்தர பாண்டியனின் விபத்து செய்தி வந்தடைந்தது.
அடுத்த நொடி அவரைக் காண செல்வதற்கு கால்கள் துடிக்க, பல சுய அலசல்களுக்குப் பின் தன் இத்தனை வருட கோபத்தை தூக்கி எறிய முடிவு செய்தவர் ஒரு முடிவுடன் தன் உடன்பிறப்பைக் காண கிளம்பிச் சென்றார்.
சுந்தர பாண்டியனை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயிலில் தன் பெரியப்பாவைக் கண்ட கீதா அதிர்ச்சியில் கண்கள் விரிய அவரை பார்த்திருக்க,
அவரோ அவளையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.
நேராக ரிசப்ஷனில் சென்று தன் தம்பி இருக்கும் அறை எண்ணைக் கேட்டவர், தன் தம்பியைக் காண விரைந்தார்.
மருந்து வாங்க வெளியில் இருந்த மருந்தகத்திற்கு சென்ற கீதாவும் அவரைப் பின் தொடர்ந்து செல்ல, அவரோ அதுவரை விரைவாக சென்றவர், அறையை நெருங்கும் தருவாயில் கால்கள் இரண்டும் பின்னிக் கொண்டது போல் நடையில் ஒரு தயக்கம்.
அதை கவனித்த கீதா, “உங்க தம்பியை போய் பார்க்குறதுக்கு ஏனிந்த தயக்கம் பெரியப்பா??” என்று கேட்க,
தனக்கு பின்னால் இருந்து கேட்ட குரலில் சட்டென அவர் திரும்பி பார்க்க, அங்கு கண்களில் ஏக்கத்துடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த கீதாவைக் கண்டவர் அவளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியாமல் அப்படியே நிற்க,
கீதாவிற்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை போலும்.
இவ்வளவு தூரம் தன் தந்தையை காண வந்ததில் இருந்தே சந்தன பாண்டியனின் மனதை அறிந்து கொண்டவள் எந்த ஒரு தயக்கமும் இன்றி ஓடிச் சென்று அவர் கைகளை பற்றிக் கொண்டவள், “அப்பாவை வந்து பாருங்க பெரியப்பா.. நீங்க வந்தது தெரிஞ்சா அப்பா இப்போவே மயக்கத்தில் இருந்து சரியாகி எழுந்து விடுவார் தெரியுமா .. அப்பாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. ஆனா நீங்க அம்மாவை திட்டுறதுனால தான் அப்பாவும் உங்க கூட சண்டை போடுவாரு .. ஆனா சண்டை போட்டுட்டு வந்து அம்மா கிட்ட ரொம்ப ஃபீல் பண்ணி பேசுறதை நானே பார்த்திருக்கேன்.. இப்போ நீங்க வந்தது தெரிஞ்சா அம்மாவும் அப்பாவும் எவ்ளோ சந்தோஷப் படுவாங்க தெரியுமா??” என்று அவள் மனதில் இருந்தவற்றை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் தன் வேண்டுதலில் இருந்து கலைந்து இவர்களின் சப்தம் கேட்டு திரும்பி பார்த்த மீனாட்சி, அங்கு நின்றிருந்த சந்தன பாண்டியனைக் கண்டு ஆனந்தமாய் அதிர்ந்தார்.
” மாமா!!!” என்று அவர் உதடுகள் தானாய் உச்சரிக்க, அவரின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கியது.
இருவரையும் நெருங்கிய மீனாட்சி சந்தனபாண்டியன் எதிர்பாரா வகையில் அவர் காலில் சாஷ்டாங்மாக விழுந்திருந்தார்.
அதில் பதறிய சந்தனபாண்டி, ” அச்சோ என்னத்தா இது?? எழுந்திரி” என்று விலகி நிற்க,
” இல்லை மாமா ரொம்ப நாளாகவே உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சுட்டு தான் இருப்பேன்.. ஆனா அவர் அதுக்கு அனுமதிசத்தில்லை.. நான் வரலைன்னா அவரும் நீங்களும் இத்தனை வருஷம் இப்படி பிரிஞ்சிருக்க தேவையில்லை.. என்னால நீங்க இப்படி சண்டை போட்டுட்டீங்களேன்னு நான் வருந்தாத நாள் இல்லை.. என்னை தயவு செய்து மன்னிச்சிருங்க மாமா” என்று அவர் இத்தனை நாளாய் மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை கண்ணீரில் கரைக்க,
சந்தனபாண்டியன் தான் இப்போது மீனாட்சியின் செய்கையில் கூனிக் குறுகினார்.
‘ எத்தனை நாள் மீனாட்சியை எவ்வளவு பேசியிருப்போம் ஆனால் அது எதையும் மனதில் வைத்துக் கொள்ளாவில்லை அந்த பெண்.. ‘ என மீனாட்சி இன்று நடந்து கொண்டதை கண்டு தன்னை நினைத்தே வெட்கினார்.
அவர்களிடம் பேசக்கூட தயக்கத்தில் அவருக்கு வார்த்தைகள் வராமல் போக, அதை உணர்ந்து கொண்ட கீதாவும் அவரை மேலும் சங்கடப்படுத்தாமல் தன் தந்தை இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அங்கு தலையில் கட்டுடன் மயக்கத்தில் சுந்தரபாண்டி படுத்திருக்க, வெளியே கண்ணாடி கதவுகள் வழி அதைக் அவருக்கு காண்பித்த கீதா, ” பைக் மரத்துல மோதியதுல தலைல கொஞ்சம் அடிபட்டு பிளட் லாஸ் கொஞ்சம் அதிகமா ஆய்டுச்சு பெரியப்பா.. மத்தபடி ஒன்னும் இல்லை.. மயக்கத்தில் இருக்காரு இன்னும் இரண்டு மணி நேரத்தில முழிச்சிடுவாருன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க” என்று அவருக்கு தகவல் சொல்ல,
சந்தன பாண்டியன் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
அவர் கண்களோ அங்கு படுக்கையில் கிடந்த தன் உடன்பிறப்பின் மீதே நிலைத்திருந்தது.
தன் இத்தனை வருட தவறை நினைத்து வருந்தியவரின் கண்கள் தன் தம்பிக்கான அன்பை கண்ணீராய் வெளிப்படுத்த, அதைக் கண்ட மீனாட்சியும் கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அவர்களின் மனம் இப்போது நிறைந்திருந்தது.
விஷயம் அறிந்து அஞ்சலி, அபி , காமாட்சி என அனைவரும் அங்கு கூடிவிட, பல வருட பகை அங்கே முறிந்து குடும்பங்கள் இணைந்து இன்பம் நிறைந்தது.
” அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!!” என்று வந்து நின்ற அஜயைக் கண்டு யோசனையில் புருவத்தை சுருக்கிய பரமசிவன் அவனை ஆராய்ந்து கொண்டே,
” சொல்லு” என்று கூறிவிட்டு அவன் பேசுவதற்காக காத்திருந்தார்.
” எனக்கு கீதாவை உடனே கல்யாணம் பண்ணிக்கணும்..” என்று அவன் அதிரடியாய் கூற,
அங்கு குழுமியிருந்த மொத்த குடும்பமுமே அதிர்ச்சி அடைய,
மதுரமோ மனதிற்குள், ‘ நான் தான் சரியான நேரம் வரப்போ பேசுவேன்ல அதுக்குள்ள இவனுக்கு என்ன அவசரம் ‘ என்று அவனை வசை பாடினார்.
பரமசிவனோ ஒரு முறைப்புடன் அவனை பார்த்து, “என்னால இதுக்கு ஒருபோதும் சம்மதிக்க முடியாது” என்று அவர் உறுதியாக மறுத்தார்.
அஜய் ஏதும் இடக்கு மடக்காக பேசி வைக்கும் முன் இருவருக்கும் இடையில் புகுந்த மதுரமோ, ” இப்போ எதுக்கு டா வேண்டாம்னு சொல்ற?? அன்னைக்கு நடந்த பிரச்சனையை மனசுல வச்சு தான.. அன்னைக்கு ஏதோ பதட்டத்தில் அப்படி எல்லாம் நடந்துருச்சு.. அதையே மனசுல வச்சுகிட்டு பிள்ளைங்க வாழ்க்கையை கெடுக்காதிங்க டா.. அவனுக்கு அந்த பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு” என்று அவர் எடுத்துக் கூற,
அதை எதையும் பரமசிவன் ஏற்கும் நிலையில் இல்லை.
அவரோ தன் முடிவில் பிடிவாதமாக நிற்க, கடுப்பான மதுரமோ, ” இப்போ எதுக்கு அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்ற?? ஏதாவது உருப்படியான காரணம் ஒன்னு சொல்லு” என்று கேட்டார்.
” ம்மா நீங்க நியூஸ் பார்க்குறிங்களா இல்லையா?? அந்த MP பையனை அந்த பொண்ணோட அப்பா கைது செஞ்சதுல இருந்து அந்த MP இவர் மேல கொலைவெறியில இருக்காரு.. இப்போக்கூடா அவருக்கு நேத்து நைட் ஆக்சிடென்ட் ஆய்டுச்சு.. அவங்க பொண்ணுக்கும் அதே அளவு ஆபத்து இருக்கப்போ நான் எந்த நம்பிக்கையில் இவன் சொல்றதுக்கு சம்மதிக்க முடியும்.. எனக்கு என் பையன் முக்கியம்.. அந்த பொண்ணை கட்டி வச்சுட்டு எப்போ என்ன நடக்கும்னு என்னால பயந்துட்டு இருக்க முடியாது” என்று அவர் இது தான் தன் முடிவு என்பதைப் போல் கூற,
அதுவரை அமைதியாக இருந்த அஜய், ” ஓகே பைன்.. நான் நூறு வயசு வரைக்கும் எந்த ஒரு வித பிரச்சனையும் இல்லாமல் வாழ்வேண்ணு ஏதாவது கியாரண்டி இருக்கா?? இருந்தா கொடுங்க” என்று கேட்க,
அவரோ புரியாமல் அவனை நோக்கினார்.
” நீங்க தான சொன்னீங்க.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா எனக்கு ஆபத்து வரும்னு.. சோ நான் வேற எந்த பொண்ணை கல்யாணம் பண்ணாலும் எனக்கு எதுவும் ஆகாதுன்னு நான் எப்படி நம்ப.. சோ அதுக்கு எனக்கு கியாரண்டி கொடுங்க” என்று அவனும் தெளிவாய் உரைத்து பரமசிவனின் காதில் புகை வரச் செய்தான்.
” இந்த விதண்டாவாதம் பண்றதை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத அஜய்.. உன் நல்லதுக்காக தான் நான் சொல்றேன்” என்று அவர் கடுப்புடன் கூற,
அஜயோ அவரை நக்கலாக பார்த்துக் கொண்டே , “எது நல்லது ?? பிடிச்ச பொண்ணை விட்டுட்டு பிடிக்காத ஒன்னை என்மேல திணிக்க நினைக்கிறீங்களே அதான் நல்லதா??” என்று எகத்தாளமாய் கேட்டான்.
அப்போது ஏதோ மறுத்து கூற வந்த பரமசிவனை தடுத்த ராமன், ” நீ சொல்றதெல்லாம் சரிதான் அஜய்.. ஆனால் ஒரு அப்பாவா அவனோட மனசையும் நீ புரிஞ்சுக்கோ.. உன்னோட பாதுகாப்பு எங்களுக்கு ரொம்ப முக்கியம்.. ” என்று அவன் மனதை மாற்ற முற்பட,
அதற்கெல்லாம் அவன் அசைவதாய் இல்லை.
அவன் தன் முடிவில் உறுதியாக நின்றான்.
அவனின் பிடிவாதத்தை பற்றி அறிந்த பரமசிவன் வேறு வழியின்றி, ” யோசிச்சு சொல்றேன்” என்று கூறிவிட்டு கோபத்துடன் உள்ளே எழுந்து சென்று விட,
அஜய் ஒரு மர்மச் சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.