பட்டத்து இளவரசன் போல் யானை மீது வந்திறங்கிய மணமகன் அவன் தான். பார்த்திபன்…. இருபத்தி ஏழு வயது காளை அவன்… இந்தக் குடும்பத்தின் ஒற்றை வாரிசு. அதில் நம் மாணிக்கத்திற்கு சிறு வருத்தம் உண்டு தான். ஆனாலும் அந்தக் குடும்பத்தில் அவன் மட்டுமே ஆண் பிள்ளை. என்ன செய்வது என நொந்து கொண்டு தான் இத்தனை ஆடம்பரமாக திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்.
Advertisement
மேள தாளங்கள் முழங்க, நாதஸ்வர இசை கலைஞர்களின் அணிவகுப்புக்குப் பின், தன் நண்பர்கள் உறவினர்கள் புடைசூழ கையில் மலர்ச் செண்டுடன் நடந்து வந்தவனை, முன்னாள் மணமகள் விஷாலினி தான் ஆலம் சுற்றி வரவேற்றாள்.
இன்னும் சற்று நேரத்தில் தனக்கு மணாளனாக வரவிருக்கும் தன் மாமனை…
Advertisement
Advertisement
என்ன மாமனா!!!???
அப்படின்னு நீங்க கேக்குறது நல்லாவே கேக்குது.. ஆமாம் விஷாலினியோட மாமா தான் பார்த்திபன். சொல்ல மறந்திட்டேன்.. விஷாலினி நம்ம சிடு மூஞ்சி மாணிக்கத்தோட ஒரே ஒரு தங்கச்சி வரலட்சுமியோட ஒரே ஒரு பொண்ணு. சொந்த அத்தை மகளத்தான் கல்யாணம் பண்ணிக்க இருந்திருக்கான். ஆனா முடியாம போய்டுச்சி. யாரு செஞ்ச சதின்னு பாத்து தெரிஞ்சிக்கலாம்.
Advertisement
கன்னச் சிவப்புடனும், வெட்கம் சிரிப்புடனும் நாணப் பார்வை பார்த்து விஷாலினி ஆலம் சுற்ற… பார்த்திபன் கத்தையாக ரூபாய் தாளைப் பரிசாக அளித்தான்.
‘முதல்ல அந்த காசு ஒரிஜினல் பணமா இல்ல டூப்ளிகேட் பணமான்னு பாக்கணும்.. ஏன்னா நான் கேள்விப்பட்ட வரைக்கும் பார்த்திபனுக்கு வேலையே கிடையாது. சும்மா வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்குறவன். பின் எப்படி வருமானம்? சந்தேகமா இருக்கு.’
வருங்கால மனைவிக்கு மட்டுமல்ல, அவளுக்குப் பின்னால் வந்து ஆலம் சுற்றிய அத்தனை பேருக்கும் ஓர வஞ்சனைப் பார்க்காது, அப்பா சம்பாதித்த காசைத் தூக்கி தூக்கி கு
கொடுத்துக் கொண்டு வந்தவனைக் கரம்பற்றி அழைத்து மண்டபத்திற்குள் சந்ரு வந்தான். வழியில் குபேர பொம்மைக்கு பக்கத்தில் ஒரு ஜோடி நின்று, டிரம்செட் இசைக்கு ஆடிக் கொண்டிருந்தது.
அது பொம்மைகள்… சுட்டி டீவியில் சிங்கா கேரெக்டர் வரும் அல்லவா… அதுபோல் ஆண் பெண் வேடம் தரித்திருந்த அந்த பொம்மைக்குள் இரு மனிதர்கள் இருந்து இயக்கிக் கொண்டிருந்தனர். அது ஆணா பெண்ணா எனத் தெரியாது நம் பார்த்திபன் அதில் பெண் வேடமிட்ட பொம்மையுடன் இணைந்து ஆடித் தொடங்கி விட்டான்.
பேண்டு வாத்தியங்கள் டம்… டம்… என இசைக்க, பார்த்திபன் அந்தப் பொம்மையை நிஜ பெண்ணாக நினைத்து சுற்று சுற்றி… வளைத்து வளைத்து ஆடிக் கொண்டு வந்தான்.
“மாப்ள போதும்.. பொண்ணு வெய்ட் பண்ணுது.. ” என விஷாலினியின் தந்தையும், வரலட்சுமியின் கணவனுமான சண்முகம் வந்து சொன்ன பின்னாலும் ஆட்டத்தை நிறுத்தாது ஆட, அவனின் தந்தை மாணிக்கம் முறைக்கத் தொடங்கிவிட்டார்.
“அதுக்காகல்லாம் ஆட்டத்த நிப்பாட்ட முடியாது மாம்ஸ். வாழ்க்கைல ஒரே ஒருக்கத்தான் கல்யாணம் பண்ணிக்க போறோம். அந்த கல்யாணத்த நமக்கு பிடிச்ச மாதிரி தான் பண்ணணும். அவருக்கு ஏத்த மாதிரில்லாம் இருக்க முடியாது. ” என்றபடி தன் தந்தையைப் பார்க்க, அவரின் முறைப்பு கோபமாக மாறியதை முகம் காட்டிக் கொடுத்தது.
” டேய், மாணிக்கம் பாதி பாட்ஷாவா மாறிட்டாருடா… முழுசா மாறுறதுக்குள்ள போய் மேடைல உங்காந்திரு.. வா… ” எனச் சந்ரு தான் இழுத்து சென்றான்.
கம்பீரம் என்பது வார்த்தை அல்ல. அது பார்க்கும் அனைவரிடத்திலும் தோன்றும் உணர்வும் அல்ல. சில தனித்துவமான மனிதர்களுக்கும், அச்சமற்ற பார்வையால் உலகை எதிர் கொள்பவர்களுக்கும், பிறரை எந்த வகையில் காயப்படுத்தாத செயல்களை செய்பவர்களுக்கும், என்ன நடந்தாலும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று கெத்தாக சுற்றுவர்களுக்கும் சொந்தமானது.
நேர் கொண்ட பார்வையிலும், திடமான பேச்சிலும், வீரம் மிக்க ஆண்மையிலும், மின்னும் வசீகரப் புன்னகையிலும் இருக்கிறது கம்பீரம்.
அந்த கம்பீரம் நம் பார்த்திபனிடத்தே உண்டு. ‘ அப்படி தான் பில்டப் பண்ண சொல்லிருக்கான். சோ.. அக்சப்ட் பண்ணிக்கங்க..’
ஆறடி என்று சொல்லி விட முடியாது. ஒரு ஐந்தே முக்கால். சரி அதுக்கும் ஆறடிக்கும் இடையே உள்ள ஹைட். எந்த எக்ஸர்சைஸ்ஸும் செய்யவில்லை என்றாலும் உடம்பில் ஒரு பொட்டு கூட அதிகமான சதை கிடையாது. இயற்கையாகவே அது மெய்ண்டென் ஆகிறது போலும்..
பட்டு வேட்டி சட்டையில், கையில் மலர்ச் செண்டுடன் வாயெல்லாம் பல்லாக அவனை பார்க்கும் அனைவரும் ‘யாரு டா அது ஸ்கூல் குழந்தைக்கி வேட்டி சட்டை போட்டு விட்டது மண மேடைக்கி ஏத்துறது.. ‘ என்று கேட்பர்.. ஏனெனில் நம் பார்த்திபனின் சிரிப்பு அப்படி. குழந்தை தனமாகவும் அதே நேரம் கம்பீரமாக, அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கும். அதிலும் பெண்கள் என்றால் அந்தச் சிரிப்பு காது வரை நீண்டு இருக்கும்.
அதற்காக வழிஞ்சல் கேஸ் என்று தவறாக நினைக்க வேண்டாம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவன் அப்படி தான். உதவி என்று கேட்டால், அது பெண் குரலாக இருந்தால், உடனே உருகி விடுவான்.
பனிக்கட்டி கூட நீராக மாற நேரம் எடுக்கும். ஆனால் இவன் அதை விட வேகமாக உருகி விடுவான், பெண்கள் என்றால்.
காலியம் என்ற உலோகம் ஒன்று உண்டாம். அதை நம் உள்ளங்கையில் வைத்துக் கொண்டால் போதும். நம் உடல் சூட்டிலேயே உருகி விடுமாம். நம் பார்த்திபனை காலியம் என்றும் சொல்லலாம்.
இதோ அழகு பதுமையாய் கரும்பச்சை நிற காஞ்சிப் பட்டில், வெட்கம் பூக்க தன் மாமனை நாணப் பார்வை பார்த்து நடந்து வர, சினிமா படங்களில் வருவது போல் ஒரு பெண் கத்தினாள்.
“நிறுத்துங்க இந்த கல்யாணத்த..” என்ற குரல் மங்கள நாதஸ்வரம் இசையும் மீறி மைக் செட் போட்டு கத்தியது போல் அரங்கத்தில் கேட்டது.
அனைவரின் பார்வையும் வாயிலை நோக்கியது.
அங்கு அரக்கு நிற சுடிதார் அணிந்து வந்த பெண் ஒருத்தி தன் பெற்றோருடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“எத்தன கல்யாணம் தான் பண்ணுவிங்க பார்த்திபன். முதல் மனைவி உயிரோட இருக்கும் போது ரெண்டாவது கல்யாணம் பண்றது சட்டப்படி தப்பு. இந்த கல்யாணம் நடக்கவே கூடாது.” என ஆவேசமாக கத்தினாள் அவள்.
பூஜா.. அது தான் அவளின் பெயர்.
‘ரெண்டாவதா… இப்ப தான் மொத கல்யாணமே பண்ணப் போறேன். அதையும் ஒழுங்கா பண்ண விடாம வந்து நிறுத்துனா எப்படி?’ என நினைத்து பார்த்திபன் பார்க்க, பீபி பேசன்ட் மாணிக்கத்தின் பீபி எகிர ஆரம்பித்தது வந்திருந்த பெண்ணின் பேச்சால்.
‘அண்ணே அவசரப்படாதிங்க.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. நாங்க பேசிக்கிறோம்.. ‘ என்றார் அவரின் தம்பி சுகுமாரன்.. மற்றவர்கள் முன் தங்களின் குடும்ப மானத்தை காக்க பூஜாவிடமும் அவளின் குடும்பத்திடமும் பேச தொடங்கினார் அவர்.
“ஏம்மா பூஜா, எதுக்காக கல்யாணத்தப்ப வந்து பிரச்சின பண்ற. ஜெயசீலா என்ன இது? எதுவா இருந்தாலும் முதல்ல கல்யாணம் முடியட்டும் பேசலாம்.” சுகுமாரன்.
“நாங்க கல்யாணத்துல கலந்துக்கிட்டு ஆசிர்வாதம் பண்ணி அட்சத தூவ வரல. ஒரு பொண்ணுக்கு நியாயம் கேட்டு வந்திருக்கோம்.” ரேணுகா. ஜெயசீலனின் மனைவி. பூஜாவின் தாய்.
மகளின் திருமணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று உறுதியை அவரின் முகத்தில் பார்க்க முடிந்தது.
பூஜா, பார்த்திபனுக்கா பார்த்த பெண். சுகுமாரனின் மனைவி மாலுவின் சொந்தக்கார பெண். பல ஆண்டுகள் விலகி இருந்த மாலுவின் தூரத்து அண்ணன் மகள் தான் பூஜா. அதனால் முறிந்த உறவு மீண்டும் ஒட்டும் என்பதால் சம்மந்தம் பேச, வீட்டில் உள்ள அனைவருக்கும் திருமணத்தில் சம்மதம், சண்முகத்தை தவிர.
பூஜா, இருபத்தி மூன்று வயது பாவை.. அரசு வங்கியில் மேனேஜராக வேலை செய்யும் தந்தை ஜெயசீலன், இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவார். இல்லத்தரசியான ரேணுகாவும் பிரபல சோப்பு கம்பெனியின் உரிமையாளரின் மகள். சொந்த வீடுகள். சில லட்சம் மதிப்புள்ள நிலங்கள். ஸ்டாங்கான பேங்க் பேலன்ஸ் என இருக்கும், ஜெயசீலனின் அனைத்திற்கும் ஒரே வாரிசு. செல்வ சீமாட்டி தான் பூஜாவும்.
படிப்பு, வசதி, அந்தஸ்து, அறிவு, அழகு என எதற்கும் குறைவில்லாத பூஜாவை வீட்டாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இருவரும் எங்களுக்குள் செட்டாகாது என, ஒரு காப்பி ஷாப்பில் பார்த்து பேசி முடிவெடுத்து திருமண பேச்சிற்கு புல்ஸ்டாப் வைத்துவிட்டனர். அது ரேணுகாவிற்கும் மாலினிக்கும் இடையே வாய் தகராறாக மாறி, குடும்பச் சண்டையாக மாறும் முன்,
கல்யாணம் பண்ணா மட்டுமில்ல நண்பர்களாக இருந்தாலும் உறவு ஒட்டும் என்று விட்டனர். அதன் பின்னும் சில உரசல்கள் வர, அதை ரேணுகா அவமதிப்பாக எடுத்துக் கொண்டார். அது பெரியவர்கள் சண்டை என்பதால் பூஜா பார்த்திபனுடனான நட்பைப் பாதிக்கவில்லை. அவனின் தோழி தான் அவள்.
‘பின் ஏன் நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்துகிறாள். காஸ்லி பத்திரிகையெல்லாம் அடிச்சி ஊருக்கே குடுத்தாச்சி இப்போது வந்து என்னென்னமோ சொல்லுது இந்த பொண்ணு!
பார்த்திபனின் அன்னைக்கும் அத்தைக்கும் பாட்டிக்கும் சிறு கலக்கம். திருமணம் நடக்குமா நடக்காதா என்ற கவலை அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
காரணம் ஜாதகம்… பார்த்திபனின் இருபத்தி ஏழு வயதிற்குள் திருமணம் நடக்க வேண்டும். அது நடப்பதற்குள் ஏகப்பட்ட சிக்கல்கள் வரும், தடைகள் வரும், சமாளித்து முடிக்கவில்லை என்றால் அது நடக்காமலேயே போய்விடும் என்றார் அவர்களின் குடும்ப ஜோசியர்.
சொந்தம் அல்லாது அன்னியமாத்தான் முதலில் பெண் தேடினர். ஆனால் பார்த்திபனின் குணத்தையும் கர்ணனைழ் போன்று அல்லாது, பெண்களுக்கு மட்டும் அவன் காட்டும் கருணையையும் விசாரித்து விட்டு பல பெண் வீட்டார் விருப்பமில்லை எனத் தெறித்து ஓடினர். ஓடாதவர்களைச் சண்முகம் துரத்தி விடுவார்.
பார்த்திபனுக்கு இந்த ஆண்டு முடிவதற்குள் திருமணம் செய்ய வேண்டும் இல்லையேல் திருமணமே நடக்காது என்பது போன்ற வார்த்தையைத் திரும்ப திரும்ப சொல்லி, தன் மகளுடன் பார்த்திபனுக்குத் திருமணத்தைப் பேசி முடிப்பதற்குள் சண்முகம் பட்ட பாடு இருக்கே… ஷப்பா… சொல்லி முடிக்கிறது கஷ்டம் தான்.
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைந்து விட்டது. ஸாரி உடைச்சிட்டா… பூஜா…
சும்மா விடுவாரா.. அதான் லபோதிபோன்னு குதிக்கிறார்.
“ஆமா எங்களுக்குள்ள கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணது உண்ம தான். ஆனா இப்ப நான் நியாயம் கேட்டு வந்தது எனக்காக இல்ல. என்னோட ஃப்ரெண்டுக்காக. ” என்ற பூஜா, முன் வரிசையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, திருமணத்தில் கலந்து கொள்ள வந்த மற்றொரு பெண்ணின் கரத்தை இழுத்து வந்து நடு மண்டபத்தில் நிறுத்தி,
“இவள தான் உங்க வீட்டு பையன் பார்த்திபன் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிருக்காரு. இப்ப நடக்கபோறது அவருக்கு ரெண்டாவது கல்யாணம்… என்னோட ஃப்ரெண்ட ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு இப்போ அடுத்த கல்யாணத்துக்கு ரெடியா தாலியோட உக்காந்திருக்காரு உங்க வீட்டு பையன். ” எனக் கத்த, அதை கேட்டு பார்த்திபன் சட்டென எழுந்து நின்றான்.
‘என்னடா புது உருட்டா இருக்கு.’ என்பது போல் பார்த்தபடி இறங்கி வர,
” பூஜா என்ன சொல்ற நீ?” என கோபமாக தான் கேட்க நினைத்தான். ஆனால் குரல் எழவில்லை. குழைவாக அவன் கேட்ட விதத்தை வைத்து பீபி மாணிக்கம் மகனின் மீது தான் தவறு அதான் பம்முகிறான் என்று முடிவே செய்து விட்டார்.
“உண்மைய சொல்றேன் பார்த்திபன். நீங்க என்னோட ஃப்ரெண்ட காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டு… இப்ப உறவு விட்டுட கூடாதுன்னு அத்த மகள கல்யாணம் பண்ணிக்க உக்காந்திருக்கிங்க. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா! அப்பா இல்லாத பொண்ணு, தட்டிக்கேக்க யாரும் இல்லன்னு நினைச்சி கலட்டி விட்டீங்களா.” என கேட்க, அதிர்ந்தது பார்த்திபன் மட்டுமல்ல பார்த்திபனின் முதல் மனைவி என்று பூஜாவால் இழுத்துவரப்பட்ட பெண்ணும் தான்.
‘கல்யாணமா.. அது எப்ப நடந்தது எங்களுக்குள்ள.’ என்பது போல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
“இது என்னடி புது கூத்தா இருக்கு? ஏமாத்துனான்னா அந்த பொண்ணுல நியாயம் கேக்கணும்.. நீ ஏண்டி துள்ளுற.. ” என்றார் மாலதி.
“அதான… இத்தன நாளா இல்லாம இப்ப மட்டும் எங்க இருந்து வந்ததாம் புது பொண்டாட்டி. அதுவும் முகூர்த்த நேரத்துல மொளைக்கிதுன்னா என்ன அர்த்தம்! எல்லாம் பொய்யி.. நாடகம்.. பணக்கார வீட்டு பையன வளர்ச்சி போட இப்படியா மானங்கெட்டு அழையுவீங்க. ச்சீ… என்ன பொண்ணோ இது. பணத்துக்கு அழையிற பேய். இதுக்கு வேற எதாவது செஞ்சி சம்பாதிக்கலாம்…” எனச் சொன்னது சாட்சாத் சண்முகம் தான். பார்த்திபன் அவரை எச்சரித்தான். அது அவருக்குக் கோபத்தை தர,
“உன்ன மாதிரி தரங்கெட்ட ஆளுங்க கூட நட்பா பழகுனதே எங்க மாப்பிள்ளையோட பெரிய மனசும் இரக்க குணமும் தான். அத தப்பா பயன்படுத்தி எங்க வீட்டு மருமகளா ஆக பாக்குறியா. மரியாதையா நீயா வெளில போய்டு. இல்ல பொம்பளப்பிள்ளன்னு பாக்காம கழுத்து பிடிச்சி வெளிய தள்ள வேண்டி வரும். அப்றம் அவமானப்பட்டு நிப்ப.” எனப் பூஜா கரம் பற்றியிருந்த பெண்ணை பார்த்து சண்முகம் ஏளனமாக ஏச, அவரை தன் பார்வையால் எரித்தாள் புதியவள்..
அவள் தான் பார்த்திபனின் புதிய மனைவி. அவள் கழுத்தில் தான் நாம் உள்ளே வரும் போது தாலியை கட்டியிருந்தான் அவன்.
மணிபாரதி… பெயருக்கு ஏற்றார் போல் பாரதி, பாரதியின் புதுமை பெண் தான்.
“யாரு அசிங்கப்பட போறான்னு இப்ப தெரியும். நான் போலீசுக்கு கூப்பிடுறேன். அவங்க கிட்ட காட்ட வேண்டியத காட்டி பேசிக்கிறோம். ” என ஜெயசீலன் அலைபேசியை எடுக்க,
“அப்படி என்னத்த காட்டப் போறிங்க.. ” என மாலு கேட்க, பூஜா தன் பையில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து காட்டினாள்.
அதில் மாலையும் கழுத்துமாக பார்த்திபனும் மணிபாரதியும் நின்றிருந்தனர். அவர்களுக்கு பின்னால் பெரிய எழுத்துக்களில் சார்பதிவாளர் அலுவலகம் என்று எழுதப்பட்ட பலகையும், சில மனிதர்களும் இருந்தனர். அது ஒரிஜினல் பதிவாளர் அலுவலகம் தான் என்று சொல்லியது.
சில ஆயிரம் ரூபா போட்டு அடிச்ச பத்திரிகையில் கூட பார்த்திபன் இந்தச் சிரிப்பு சிரிக்கவில்லை. பாரதியின் பக்கத்தின் வெட்கம் கலந்த அந்தச் சிரிப்பு இருக்கே.. ப்பா.. செமையா இருக்கான் என்று சொல்லத் தோன்றும்.
‘பொருத்தம்னா பொருத்தம் அப்படி ஒரு பொருத்தம்.. ‘ என நினைத்த சந்ரு வெளியே,
“என்ன ஒரே ஃபோட்டோல பக்கத்துல பொண்ண மட்டும் மாத்தி கலர் ஜெராக்ஸ் எடுத்திட்டு வந்திருக்குறிங்களா. யார ஏமாத்த பாக்குறீங்க..” என்றான்.
“நம்ப மாட்டிங்கன்னு தெரியும். அதா அந்த ஆஃபீஸ்லயே கேட்டு மேரேஜ் சர்டிஃபிகேட்ட்டோட காப்பிய வாங்கிட்டு வந்திருக்கேன். நல்லா பாருங்க.. ” எனத் திருமணத்தின் பதிவு சான்றிதழைக் காட்ட, அனைவரும் பார்த்திபனை பார்த்தனர்.
‘இதெல்லாம் பொய் நாங்க நம்ப மாட்டோம்.. ‘ எனச் சண்முகம் பூஜாவின் குடும்பத்துடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். கூச்சலும் குழப்பமும் மேலோங்க,
“எல்லாரும் அமைதியா இருங்க.. ” எனக் கத்தினார் மாணிக்கம்.
மகனின் குணம் தெரியும். அத்தோடு மகன் பாரதியிடம் பழகும் முறையும் தெரியும் அவருக்கு. சோ ஒன் ப்ளஸ் ஒன் ஸ்ஈக்வெட்டு த்ரீ… மாணிக்கம் பாட்சாவாக மாறி தீர்ப்பு எழுதிட்டாரு.
“இந்த கல்யாணத்துல அவனோட வாழ்க்க மட்டுமில்ல நம்ம குடும்ப கௌரவமும் இருக்கு. அதுனால இன்னைக்கி பார்த்திபனோட கல்யாணம் நடந்தே தீரணும்.” என்றவர் யாருடன் என்று சொல்லும் போதும் அனைவரும் அதிர்ந்து தான் போயினர்.
“லெட்சுமி அந்த பொண்ண கூட்டீட்டு போய் அலங்காரம் பண்ணி முகூர்த்தம் முடியிறதுக்குள்ள வந்து மேடைல உக்கார வை. ” எனத் தங்கைக்கு உத்தரவு இட்டார் பாரதியைப் பார்த்தபடி.