Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே 28.2

தன் பிடித்ததை சொல்லவும் வந்ததே ஒரு அதிர்ச்சி அவள் குடும்பத்தினரிடம்…

“இப்போ யார் வந்தது?” அதிர்ச்சியை தாங்கி குழப்பமாய் கேட்டார் ரமேஷ்.

இவரின் கேள்வி கீதாவின் மனதில் பதியவே இல்லை, மகளின் எதிர்பாரா விருப்பத்தில் அவர் விக்கித்து நின்றிருந்தார். அவருக்கு இன்பனை நன்றாகவே நினைவிருந்தது கூடவே அவனின் அண்ணனையும் தான். யுக்தாவையே ஏன் அந்த வீட்டில் கட்டிக்கொடுக்கிறார்கள் என்ற அதிருப்தியில் இருக்க, இப்போது அவரின் மகளே அந்த அதிருப்தியின் உருவாய் இருப்பவனை விரும்புகிறேன் என்று பொட்டில் அடித்தாற்போல் கூறவும் அதிர்ந்து நின்றுவிட்டார். மூளையும் வேலைநிறுத்தம் செய்து பின் மின்சாரம் பாய்ந்தது போல் மீண்டெழுந்தது.

“நீ என்ன பேசுறேன்னு தெரிந்து தான் பேசுறியா?” குரலை தேடிப்பிடித்து கீதா கேட்க, இனியா அப்போது தான் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து அவர் முகத்தை பார்த்து தன் விருப்பை சொல்ல முயல, அவர் விழியில் இருந்த விளங்கமுடியா பார்வையில் அவள் விழிகள் தானாக தாழ்ந்தது.



Advertisement

“எனக்கு பிடிச்சிருக்குமா. அவங்ககூட இருந்தா நல்லாயிருப்பேன்.” என்றாள் இனியா மெல்லிய பதட்டம் சூழ்ந்த குரலில். வாழ்க்கையின் அதிமுக்கிய முடிவை எடுத்தாகிவிட்டது தான் ஆனால் எல்லோருடைய விருப்பத்திற்கும் இணங்க அதை செயல்படுத்த எண்ணும் போதே தானாய் பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது.

“விளையாட இது நேரம் இல்லை இனியா.” மகள் இதை மறுக்கமாட்டாளா என்ற நப்பாசை தாயிடம் நிரம்பவே இருந்தது. 

“கீதா இவள் யாரை சொல்கிறாள்? நீயாவது என்னனு சொல்ளேன்.” என்று ரமேஷ் இடைபுகுந்து பதைபதைப்பாய் கேட்டார். அஜய் தன் மகளுக்கு பொருத்தமாய் இருப்பான் மகளுக்கு கண்டிப்பாக அவனைப் பிடிக்கும் என்று எண்ணியிருக்க, மகள் வேறு ஏதோ சொல்லவும் அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

Advertisement

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

Advertisement

 

“யுக்தா கொழுந்தனை சொல்றா இவள்… என்னனு நீங்களே கேளுங்க.” என்று பதிலாய் கீதா குரலை உயர்த்த, வாயடைத்து போவது இப்போது அவரின் முறை. முதலில் யுக்தாவின் கொழுந்தன் யார் என்று புரியவில்லை, சற்று சிரமப்பட்டு நினைவுகளை திருப்பிப்பார்த்த பின்பு தான் யார் என்றே புரிந்தது. மனைவியைப் போல அவராலும் மகளின் தேர்வை உடனே  நம்பமுடியவில்லை, ஏதோ விளையாடுகிறாள் என்றே நினைத்தார். அதை கேட்கவும் செய்தார்.

“பாப்பா… அம்மா என்ன சொல்றா? இதெல்லாம் சும்மா தானே சொல்ற? உனக்கு அஜயை பிடிக்கும்னு நான் நனைச்சேன்.”

“அஜய்யா? எனக்கு ஏன் அவரை பிடிக்கணும்? அவர் செய்யும் விஷயங்கள் தான் பிடிக்குமே தவிர தனிப்பட்ட முறையில் அவர் மேல் எந்த அபிப்பிராயமும் இல்லை.” என்பதே இனியாவின் பதிலாய் இருந்தது.

“இதெல்லாம் நமக்கு சரியா வராது இனியா, இது எல்லாத்தையும் விட்டுரு.” சட்டென கடுமை கூடியிருந்தது ரமேஷிடம். எந்த பெற்றோரால் தான் இதுபோன்றதொரு காதலை ஏற்றுக்கொள்ள முடியும்? தன் பெண் இப்படி வாழவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று கனவுகள் கோடி பளிங்கு கட்டடமாய் குவிந்து வடிவம் பெற்று கிடக்க, உப்புசப்பற்ற வாழ்க்கையை யார் தான் அங்கீகரிப்பார்? அதுவும் பிணியையே உடலாய் பெற்றிருக்கும் ஒருவனை எப்படி அனுமதிக்க முடியும்?

தந்தையின் இறுகிய முகம் அடங்கிய பதட்டத்தை எழுப்பிவிட, எகிறிய இதயத்துடிப்புடன், “எல்லாம் சரிவரும்.” என்றாள் முனுகலாய்.

“என்ன சரிவரும்? உனக்கே இந்த உறவு நியாயமாப்படுதா இனியா?” கீதா சினத்தில் சிவந்து வரிந்துகட்டிக்கொண்டு வந்தார்.

“நியாயம் அநியாயம் பார்த்து கால்குலேடிவா வருவதை வேண்டுமென்றால் நீங்க சொல்கிற மாதிரி விட்டுறலாம், ஆனால் இதை விடமுடியாது அம்மா.” என்றாள் தன்நிலை விட்டு கீழ் இறங்காமல். அவளுக்கு புரிந்துவிட்டது பெற்றவர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை என… இனியனே அவ்வளவு துள்ளிய போது இவர்கள் சும்மா இருப்பார்களா?

எப்போதும் நிதானம் காக்கும் கீதா மகள் வாழ்க்கை என்று வந்ததும் பொங்கிவிட்டார், “சினிமா வசனம் எல்லாம் நல்லா தான் பேசுற இனியா. ஆனால் இதையெல்லாம் வாழ்க்கையில் புகுத்தக் கூடாது. இந்த காதல் எல்லாம் படத்தில் பார்க்கவும், கதையாய் கேட்கவும் வேண்டுமென்றால் தெய்வீக காதலாக தெரியலாம் ஆனால் இயல்பான வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியம் இல்லை. அப்படிப்பட்ட தெய்வீக காதலும் உனக்கு வேண்டாம். சாதாரண வாழ்க்கையே போதும். இந்த நொடியோட எல்லாத்தையும் அடியோடு மறந்துட்டு போய் உன் வேலையை பார்.” 

“அவ்வளவு சுலபமா மறக்கக்கூடியதா இருந்தா நான் ஏன் உங்கள்ட்ட சொல்றேன். எனக்கு இதுதான் பிடிச்சிருக்குமா.” மறுப்புகள்தான் விதவிதமாய் வந்ததே தவிர அவளின் பதில்கள் எல்லாம் ஒரேமாதிரி தான் இருந்தது.

“என்ன பிடிச்சிருக்கு? அந்த பையனை பார்த்து பரிதாபப்பட்டுட்டு அதை விருப்பம்னு தவறா புரிஞ்சிருப்ப.” ரமேஷ் அமைதியாகிட கீதா மட்டுமே மல்லுகட்டிக் கொண்டிருந்தார்.

“விருப்பத்திற்கும் பரிதாபத்திற்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் சின்ன பொண்ணு இல்லைமா.”

“இனியா அம்மா தான் இவ்வளவு சொல்றாங்கல்ல அவங்க சொல்றதை கேளு. இது வேண்டாம் உனக்கு.” என்று இனியனும் இடைபுகுந்தான். அவனை முறைத்தவள், “இன்னைக்கு இதை பேசித்தான் ஆகணும் இனியன்.”

“என்ன தான்டி பிரச்சனை உனக்கு? மூளையை எங்கேயும் போய் அடகு வச்சிட்டியா? இவ்வளவு பொறுமையாக சொல்கிறேன் நீ என்ன ஏட்டிக்கு போட்டி பேசுற? அறிவோடு தான் பேசுகிறாயா இதெல்லாம்? அந்த பையனால பேசக்கூட முடியாது அப்படி இருக்கும் போது அவனுடன் பேசாமல், பழகாமல் எப்படி விருப்பம் இருக்கு என்பாய்? அவன் நார்மலா கூட இல்லை, கைகால்னு எதுவுமே வேலை செய்யல. எந்த தைரியத்தில் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுற? நாங்க எப்படி சம்மதிப்போம்னு நினைக்கிற?”

 

[the_ad id=”6605″]

 

 

 

அன்னையின் வார்த்தை பிரயோகம் கண்களில் நீரை வரவழைத்தாலும் தளராத இனியா, “எனக்காக நீங்க சம்மதிக்க மாட்டீங்களா? என் விருப்பம் முக்கியம் இல்லையா உங்களுக்கு?”

“உன் விருப்பம் முக்கியம் தான். அதற்காக நீ ஆசை வைக்குற எல்லாத்தையும் நல்லது கெட்டது பார்க்காம ஒத்துக்க முடியாது. உனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைத்து கொடுக்கணும்னு எங்களுக்குத் தெரியும்.”

எதிர்ப்பு பெரிதாகவும் இனியாவின் அழுகை கூடிவிட, வார்த்தைகளும் அழுகையுடன் வந்தது, “ஏன்மா என்னோட உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்க மாட்டேங்குற? அப்பா நீயாவது சொல்லு அப்பா… என்னவோ எனக்கு பிடிச்சி போயிடுச்சு அதை இனிமேல் எப்படி மாற்ற முடியும்?”

மகள் தன் உதவி நாடவுமே ரமேஷின் மனது இளகிவிட, மறுநொடியே இதயனின் நிலை உணர்ந்து இந்த நேரத்தில் கண்டிப்பு காட்டினால் தான் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தோன்ற சிறிதும் இளகாமல் கடினத்தை கூட்டி, “இதில் இனி நான் சொல்வதற்கு ஒன்னும் இல்லை இனியா. நீ எவ்வளவு வாதிட்டாலும் இதற்கு எங்களால கண்டிப்பா ஒத்துக்க முடியாது. உன்னை கட்டாயப்படுத்த எங்களுக்கு மனசு வராது ஆனால் நீ அஜயை கல்யாணம் பண்ணிகிட்டா அப்பா சந்தோசப்படுவேன் இல்லையா வேறு பையனை பார்ப்போம், அவங்கள்ள உனக்கு யாரை பிடிச்சிருக்கோ மேற்கொண்டு பார்ப்போம். இந்த இடம் நமக்கு சரி வராது.”

“என்னப்பா நீயும் இப்படி சொல்ற?” கேவல் வெடித்தது அவளுள். அதைக் கண்ட கீதாவுமே கலங்கிவிட, இனியன் தன் தமக்கையை நெருங்கி அவள் தோளை ஆதரவாய் அழுத்தினான்.

“இனியன் நீயாவது சொல்லேன். என்னால வேறு யாரையும் நினைச்சு பார்க்க முடியும்னு தோணல. அவர் சரியாகிட்டா என்னை நல்லா பார்த்துப்பார்.” என்று தம்பியை துணைக்கு அழைத்தாள் தமக்கை.

அவனோ அவளுக்கு அண்ணனாகி, தந்தையாகி அவளுக்கு புரிய வைக்க முயன்றான், “அவர் சரியாகிடுவாருனு எப்படிக்கா நம்புற? அவர் நல்ல நிலையில் இருந்திருந்தால் அப்பாவும் அம்மாவும் உன் விருப்பத்திற்கு எதிராய் நடந்துப்பாங்கன்னு நினைக்கிறியா நீ… யதார்த்தத்தை புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.”

“நீங்க என்னை புரிஞ்சிக்கங்க. என்னையும் அறியாம என் மனசு அவர் பக்கம் சாஞ்சிடுச்சி…. இனி எப்படி மனசில் அவரை சுமந்துகிட்டு இன்னொருத்தர் தாலியை வாங்கிக்க முடியும்?” என்று அழுகையினூட தன் பக்க உணர்வுகளை தெளியபடுத்த வேண்டி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் இனியனுக்கே அவளின் இறைஞ்சல் சங்கடமாகிவிட, அவளின் விருப்பத்திற்கும் மரியாதை கொடுக்க நினைத்தாலும் நிதர்சனம் முரண்டியது. தந்தையும், அன்னையும் ஓய்ந்து போய் அமர்ந்திருக்க அவனுக்குமே தொண்டையில் ஏதோவொன்று அடைப்பது போல இருந்தது. எந்த தைரியத்தில் அவனாலும் அவளுக்கு ஆதரவாய் பேச முடியும்? பெற்றோர் புறம் நின்று பார்க்கும் போது அவர்களின் எதிர்ப்பும் நியாயமானதாகவும், இனியாவின் நம்பிக்கையும், உறுதியையும் பார்க்கும் போது அவள் உணர்வுகளும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றே தோன்றியது. இதில் யாருகென்று பேசுவான்? இதயன் நன்றாய் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்ற எண்ணமே அவனுக்கு.

அதற்குள் சற்று தெளிந்து தன்னை சுதாரித்துக் கொண்ட கீதா மகளை அடக்குவதற்கு பதில் அவளுக்கு யதார்த்தம் உணர்ந்த முயன்று பார்ப்போமே என்ற எண்ணம் வர குரலில் கடினத்தை குறைத்து, வார்த்தையில் நம்பிக்கை கூட்டி, “அவன் குணமாவதற்கு ஏதாவது சாத்தியக்கூறு இருக்கா? நூறு சதவிகிதம் குணமாகி நடமாட ஆரம்பித்து உன்னை சந்தோசமா வச்சிப்பாருன்னு உன்னால உத்தரவாதம் கொடுக்க முடியுமா இனியா?”

அன்னையின் கேள்வியில் நம்பிக்கை துளிர்விட, புறங்கையால் தன் முகத்தை அழுந்த துடைத்தவள், “கண்டிப்பா சரியாகிடுவாருமா.” என்றாள் சட்டென்று பிறந்த ஊக்கத்தில்.

“அதற்கு என்ன ஆதாரம்? ஏதாவது மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் இருக்கா இல்லை டாக்டர் தான் உறுதியா சொன்னங்களா?” என்று கீதா மேலும் துருவ, இத்தனை நேரம் தெம்பாய் வாதிட்ட இனியாவால் தெளிவான பதில் கூற முடியவில்லை.

“டாக்டர் எதுவும் சொல்லல… ஆனால் அவர் சரியாகிடுவாறு,”

தலைகுனிந்து தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதமாய் வாதிடும் மகளை கண்ட கீதா கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு மகளை அருகில் அமரவைத்து, “உனக்கும் இனியனுக்கும் ஒரேமாதிரி பெயர் வைத்ததற்கு காரணம் நீங்க ரெண்டு பேருமே எந்தவொரு வம்புக்கும் போகாது தன்மையா, இனிமையா இருக்கணும்னு தான். அதற்காக இத்தனை இனிமை தேவையில்லை இனியா.” அவரின் இந்த வார்த்தைகள் அத்துணை அர்த்தம் பொதிந்ததாக இருக்க, இனியா அவரின் நேர்பார்வையை தவிர்த்தாள். 

“அந்த பையனுக்கு உதவி செய்யணும்னு விருப்பப்பட்டா செய். அதை நாங்க தடுக்க மாட்டோம். ஆனால் உன் வாழ்க்கையில் அந்த பையனுக்கு இடம் கொடுக்க நினைக்காத இனியா.” எதிர்ப்பு வலுக்க வலுக்க, அவளின் உறுதி மீகியது.

“நீங்க என்னை சமாதானப் படுத்தி உங்கள் இழுப்புக்கு இழுக்கவே முயற்சி செய்றீங்களே ஒழிய என்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்க மாடேங்குறீங்க.”

“என்னை மதிப்பு கொடுக்கல நாங்க? இப்போவரைக்கும் உன்னை அடிக்காம, அடைக்காம உனக்கான பேச்சுரிமை கொடுத்து உட்கார வச்சி பொறுமையா புரிய வைக்க முயற்சி செஞ்சிட்டு இருக்கோம், இதற்கு மேல நாங்க என்ன செய்யணும்னு எதிர்பார்க்குற நீ? எந்த வீட்டில் இதுபோல பொறுமையா போவாங்க? இல்லை நாங்க பொறுமையா போறதுனால தான் நீ உன் இழுப்புக்கு எங்களை இழுக்கப் பார்க்குறீயா?” கீதாவின் குரல் மீண்டும் எகிறியது. நேசம் கொட்டி வளர்த்த மகளை தண்டிக்க மனம் வரவில்லை, ஆனால் கண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

“சரி நான் ஒத்துக்குறேன், உங்களுக்கு இதை ஏத்துக்க முடியலைன்னு. அதே மாதிரி நீங்களும் புரிஞ்சிக்கங்க, என்னாலும் அவரை விட்டுத்தர முடியாது.”  

“என்னங்க என்ன அமைதியா இருக்கீங்க. பாருங்க என்ன சொன்னாலும் அவள் முடிவே சரி என்கிற மாதிரி அதிலேயே நிக்குறா.” என்று கணவரை அழைத்தார் கீதா.

அவள் எது செய்தாலும் யோசித்து தான் செய்வாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் இந்த விஷயத்தில் அவளின் முடிவை ஏற்கும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. பாசத்திற்கும் அவளின் எதிர்காலத்திற்கும் இடையில் சிக்கித் திணறினாலும் அவளை அடிக்கவோ, கடினவார்த்தை வீசவோ மன வரவில்லை.

“அவளுக்கு அவள் முடிவுனா எனக்கு என் முடிவு தான் முக்கியம். இவளோட ஆசைக்கு என்னிடம் இருந்து என்னைக்குமே அனுமதி கிடைக்காது.” கீதாவைப் போல மகளிடம் இறங்கிவந்து அவள் மனதை மாற்ற முயற்சிக்ககூட இல்லை ரமேஷ். பாசம் வைத்த நெஞ்சம் ஏமாற்றத்திலும் மகளின் உறுதியிலும் ஆட்டம்கண்டுவிட, பாசத்திற்கு சற்றும் குறையாத பிடிவாதம் அவரிடம்… 

“அப்பா எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க. நீங்க விருப்பப்படுகிற மாதிரியே அவர் குணமாகி அவரோட நிலையை உயர்த்திக்கிட்டு உங்க முன்னாடி வந்து நிற்பாரு. அப்போ அவரை மறுக்க உங்களுக்கு ஒரு காரணம் கூட இருக்காது.”

“இப்போவே இந்த நொடியே உன்னை நல்லபடியா வச்சி பார்த்துகுற அளவு சக்தி இருக்கும் நிறைய பேர் இருக்கும் போது நான் ஏன் அந்த பையன் குணமாகும் வரை காத்திருக்கனும் இல்லை அவகாசம் தரணும் இனியா?” ரமேஷ் நேரடியாய் மகளிடம் கேட்க,

“ஏன்னா அவர்கிட்ட தான் உங்க பொண்ணோட மனசு இருக்கு.” இதழ்கள் நடுங்க, பதட்டம் உடல் முழுதும் ஓடினாலும் தைரியமாய் மொழிந்தாள் இனியா.

“அம்மா சொன்னமாதிரி நல்லாவே பேச கத்துக்கிட்ட இனியா. எங்களைவிட உனக்கு நேற்று வந்த அந்த பையன் தான் முக்கியமா போயிட்டான்னு உன் பேச்சிலேயே தெரியுது. நேற்று முளைத்த காதல் உன் கண்ணை மறைச்சிடுச்சு.” என்றவர் முடிவு எதுவும் கூறாமலேயே அவர் அறைக்கு சென்றவிட்டார்.

அவர் செல்வதையே கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தவளை கலைத்தது கீதாவின் குரல், “அப்பா எப்படி பேசிட்டு போறாருன்னு கவனிச்சியா? உனக்கு இதற்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல… ஒன்னு மட்டும் புரிஞ்சிக்க விபத்தில் சிக்கி நலிந்தவனால் என்னைக்குமே உனக்கு சந்தோசம் கொடுக்க முடியாது. நீ மனசுவிட்டு பேசினால் திரும்ப பேசக்கூட அந்த பையனால் முடியாத போது எப்படி நீ ஆசைப்படுறது சாத்தியமாகுன்னு தெரியல.” 

 

[the_ad id=”6605″]

 

 

 

“அவர் ஒன்னும் வேணும்னே விபத்தில் போய் சிக்கலை அம்மா, யாரோ செய்த தப்பு, விட்டுவிட்ட அலட்சியத்தில் இவர் மாட்டிக் கொண்டார்.”

“அதற்கு நாங்க பொறுப்பாக முடியாது இனியா. உன் வாழ்க்கை தான் எங்களுக்கு முக்கியம்…”

“அவர் ஒரு மருத்துவர் அம்மா. வாழ்க்கை மற்றவரின் அலட்சியத்தால் வீணாகிவிட்டது மற்றபடி இதில் அவருடைய தவறு என்ன இருக்கு?”

“அந்த பையனை தப்புனு சொல்ற அளவுக்கு எங்களுக்கு அவனைத் தெரியாது இனியா ஆனால் பையனுடைய நிலை சரியாயில்லை.”

“அதற்கு தான் கொஞ்சம் நேரம் கொடுங்கன்னு கேட்கிறேன்.”

“புரட்சி செய்யப் போறியா?”

“புரட்சி செய்ய எல்லாம் நிறையபேர் இருக்காங்க. நான் என் வாழ்க்கையை காப்பாத்திக்க முயற்சி செய்யுறேன்.”

“நல்லா இருப்பவர்களுக்கே இப்போது ஒற்றுமையாக இல்லை. நீ எப்படி வாழ்வ?”

“எனக்கு நம்பிக்கை இருக்கு, என்னோட உள்ளுணர்வு என்றைக்குமே தப்பாகாது.”

“எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே இப்படி பேசுனா என்ன செய்யறது? நீ செய்றது எதுவுமே சரியில்லை இனியா. உனக்கு அதிகமான செல்லமும் சுதந்திரமும் கொடுத்துட்டோம் போலிருக்கு, அதுதான் நீ இப்படி பேசிட்டு திரியுற. எங்களுக்கு மதிப்பு கொடுப்பதாய் இருந்தால் நீ இனி அங்கு செல்லக்கூடாது, அந்த பையனை பார்க்கக்கூடாது.” அவள் மனதை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை மரத்துப் போயிருக்க, பாசத்தை பிணையாய் வைத்து அவளை தடுக்க முனைந்தார்.

“அம்மா…” என்று விம்மலுடன் இனியா கீதாவின் கையை பிடிக்க,

“போடி…” என்று அவள் கையை தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

கண்ணீர் விழிப்பார்வையை தடுக்க, செய்வதறியாது நடுக்கூடத்தில் நின்றவளை வலியுடன் கண்ட இனியனும் அவன் அறைக்கு சென்றுவிட, அதன் பிறகு வந்த நாட்களில் ஒருவரும் வாய் திறக்கவில்லை. இனியன் கூட மறுதினம் ‘உனக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? பயம் இல்லாமல் உன்னோட காதலை அம்மாவிடமே சொல்லிட்ட?’ என்று கேட்டதற்கு சோகச்சிரிப்பை பதிலாய் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டாள். அன்று திருமணப்பட்டு எடுக்கவென சிவகாமி அழைத்ததற்கும் போகவில்லை, அதன்பின் அந்த வீட்டிற்கும் செல்லவில்லை.

ஒருவாரம் கழித்து அவளுக்கே கொச்சிக்கு மாறுதல் கிடைக்க, மளமளவென வேலைகள் நடந்தது. எந்த அளவுக்கு யுக்தாவை திட்டித் தீர்த்தாலோ அதற்கு நேர்மாறாய் அமைந்தது அந்த மாற்றல். அதை வீட்டில் வந்து சொன்னவுடனேயே மறுத்தது கீதா தான்.

“அங்கெல்லாம் போக வேண்டாம். இங்கேயே வேலைக்கு செல்வதென்றால் போ இல்லையா இந்த வேலையே வேண்டாம், விட்டுவிடு.”

அம்மா மறுக்கவும் தந்தையை சோகமாய் பார்க்க, அந்த வாரம் முழுதுமே பேசாதவர், மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி தந்த விதம் அவளின் மனதை வெகுவாய் பதம்பார்த்தது.

“ஏன் பயப்படுற கீதா? இந்த மாற்றல் முன்னரே வந்திருந்தா அனுப்பி இருப்போம் தானே இப்போ என்ன?”

“இல்லைங்க… இப்போ வேண்டாம். அவளே ஏதேதோ உளறிட்டு இருக்கா, இப்போ போய் அவளை அவ்வளவு தூரம் ஏன் அனுப்பனும்?” என்று கீதா சொல்லவும், அடுத்த நொடி அம்பாய் வந்து கிழித்தது அவரின் வார்த்தைகள்,

“நம்மை விட்டு தூர சென்றுவிட்டால் அந்த பையன் கூட சேர்ந்துடுவாளோனு பயமா இருக்கா? அவனே ஒண்ணுத்துக்கும் உதவாம தண்டமா இருக்கான், அவன் நம்ம பொண்ணை இழுத்துட்டு ஓடிடவா போறான்?”

பாசம் வைத்த தந்தையே இப்படி மனதை கீறுவார் என்று எதிர்ப்பார்த்திடாத இனியா, தொண்டைக்கு உருண்டு வந்த உருண்டையில் கண்கள் கலங்க, நாசி புடைக்க, நடுங்கும் அதரங்களுடன், “என் மேல் நம்பிக்கை இல்லையா அப்பா உனக்கு. உங்களை எல்லாம் ஏமாத்திட்டு அப்படியே ஓடிபோயிடுற மாதிரி பேசுற… இப்படியெல்லாம் பேசாதப்பா, என்னால தாங்க முடியல…  வலிக்குது.” என்று கேவியவள் அவர் மேலேயே சாய்ந்து உடைந்து அழுவ, மூப்பை நெருங்கும் தந்தையின் கண்களுமே நீரை சுரந்தன.

“சாரிப்பா… உன்னை ரொம்ப வேதனைப்படுத்துறேன். ஆனால் இதெல்லாம் என்னை மீறி நடக்குது அப்பா, என்னால முடியல…” என்று அழுக ரமேஷிடமிருந்து ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்று கீதாவால் கூட புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மனம் அஜய்க்கும், மகளின் காதலுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதை தன்வசப்படுத்தவென அவள் கொச்சிக்கு கிளம்பும் இருதினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்தான் அஜய். வந்தவன் வீட்டில் என்ன பேசினானோ இனியாவை அவனுடன் நம்பி அனுப்பும் அளவிற்கு இருந்தது அவனின் வசியம். அன்றே அவன் இனியாவிடம் பேசக் காட்டிய ஆர்வமும், அவனின் பார்வைகளுமே இனியாவை சுதாரித்தன.

அவன் வந்து சென்ற பின்னோ பல இடங்களில் திக்கற்று கலைந்திருந்த நினைவுகளை ஒன்று திரட்டி, அதனின் இடத்தில் நிரப்பியபின் ஏதோ புரிவது போல் இருந்தது அவளுக்கு. போதை ஒழிப்பு தினம் என்று கூப்பிட்டுவிட்டு அவன் பேசிய அதீத பேச்சுகளும், தன் தந்தையிடம் காட்டிய நெருக்கமும் அவள் மீதான அவனின் விருப்பத்தை கோடிட்டு காட்டிவிட, சுதாரித்தாள் இனியா. அவனின் பழைய செயல்கள் சில சந்தேகத்தை கிளப்பிவிட அந்தக்கணம் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை, இதயனையும் தன்னுடனே அழைத்துச் செல்லும் முடிவுக்கு வந்தாள். வெகு சில தினங்களுக்கு முன்னர் நடந்தவையும் மனதில் ஓட, ரயிலின் குலுங்கலில் நினைவுக்கு வந்தவள், தன் அலைபேசியை எடுத்து இந்த கொச்சி பயணத்திற்கு அதிமுக்கிய காரணியான யுக்தாவிற்கு தன் பயண விபரம் மற்றும் நன்றியோடு பல ஹார்ட்டும், கிஸ்ஸும் அனுப்பி வைத்தாள். அகமும் புறமும் நம்பிக்கை தந்த உத்வேகத்தில் ஒளிர, கொச்சி மண்ணில் தடம்பதிக்க ஆவலோடு பயணித்தாள்.

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!