Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே 28.1

கள்வன் – 28

ஆயிற்று. எல்லாம் தலைகீழாகிற்று. அவள் எதிர்பார்க்காதது, எதிர்பார்த்திருந்த திருப்பத்திற்கு விடையாகிவிட்டது. முன்தினம் வரை வெறுத்த விஷயம்தான் இன்று அவள் வாழ்க்கையின் முக்கிய புள்ளிகளை இணைக்க வழிகொடுத்திருக்கிறது. உள்ளம் உணர்ச்சிகளால் நிரம்பியிருந்தாலும் உறுதி அவளை விட்டு குறையவே இல்லை. மறுப்பு மிஞ்சிவிட, இவளும் முடிவில் மிஞ்சிவிட்டாள்.

ரயில் பெட்டிகள் தடதடக்க ஒன்றன் பின் ஒன்றாய் செவி கிழியும் ஓசையுடன் வந்து அந்த சந்திப்பில் நிற்பதுமாய், பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதுமாய் அந்த இடமே மக்கள் கூட்டத்திலும், புகைவண்டி வரிசைகளாலும் திணறிக் கொண்டிருக்க, அவளும் பயணியோடு பயணியாய் தன்னுடைய ட்ராலியை இழுத்துக்கொண்டு மூச்சுவாங்க நடைமேடையை நோக்கி நடந்தாள்.

அவளுக்கு சற்றும் சளைக்காமல் அதே மூச்சிறைப்புடன் ஓடிவந்து அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி, “ஏய் இனியா, என்ன நீ பாட்டிற்கு போயிட்டு இருக்க? உனக்காக தானே வந்தேன், ஆனால் நீ என்னவோ நான் உன்னை இறக்கிவிட வந்த டிரைவர் மாதிரி கண்டுக்காம போற?”



Advertisement

கையை அவன் பிடியிலிருந்து உருவிக்கொண்டவள், “இந்த தொடுகிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் மிஸ்டர். அஜய்.” என்று மொழிந்துவிட்டு வேகமாய் முன்னேற, அவளை தொடர்ந்தவன் மீண்டும் பேச்சை துவக்குவதற்கு முன்னே, அவனுக்கும் இனியாவுக்கும் நடுவில் புகுந்தான் இனியன்.

“அக்கா இதை மறந்துட்டு வந்துட்ட பாரேன்.” என்று ஒரு பாலிதீன் பையை அவள் கையில் திணித்தவன் அவளின் மறு கரத்தில் இருந்த ட்ராலியை தன்வசம் ஆக்கிக்கொண்டான். இனியனின் திடீர் குறுக்கிடலில் முதலில் திகைத்த அஜய் தன்னை சமன்செய்து கொண்டு, “என்ன இனியன் திடீர்னு வந்திருக்க? எங்க பின்னாடியே வந்திருக்க, சொல்லியிருந்தா நானே திரும்ப வந்து மறந்துவிட்டுப் போயிருந்ததை வந்து வாங்கியிருப்பேன். உனக்கு ஏன் வீண் அலைச்சல்?” என்று இன்முகமாகவே கேட்டாலும் மனதிற்குள் இனியனை வசைபாடிக் கொண்டிருந்தான். பின்னே, அவளிடம் மனவிட்டு பேச தனிமை சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்து, கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சி, இதெல்லாம் வேண்டாம், முடியவே முடியாது என்று மறுத்த ரமேஷை மூளைச்சலவை செய்து, கீதாவின் அதிருப்தியை சமாளித்துவிட்டு இனியாவை ரயிலில் ஏற்றிவிடவென இவன்  வந்தால் இந்த இனியன் ஏன் குறுக்கே வருகிறான்? என்று கருவிக்கொண்டிருந்தான் அஜய்.

 

Advertisement

 

Advertisement

 

“என் அக்கா சார் இவ, இதிலென்ன எனக்கு அலைச்சல் இருக்கப்போவுது? சொல்லப்போனால் உங்களுக்குத் தான் வீண் சிரமம். இப்போ தான் நான் வந்துட்டேனே நீங்க கிளம்புங்க உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் இதில் என் அக்காவுக்காக ஏன் நிக்கணும்? நான் இருக்கேன் அவளுக்கு… அவளை பார்த்து பத்திரமா ஏற்றிவிட,” என்று இனியனும் சளைக்காமல் இன்முகமாகவே பதிலடி கொடுத்தான். அஜய்க்கு தான் அவனின் நேரடி பதிலும் அதில் பொதிந்திருந்த அர்த்தமும் சாட்டையடியாய் இருந்தது. இனியாவின் மறுப்பிற்கு இனியனும் துணைபோவதிலேயே இனியனையும் சமாளிக்க வேண்டும் என்று புரிந்தது.

“நான் அப்படி சொல்லல இனியன். இனியாகிட்ட பேசணும்னு நான் தான் உங்க அப்பா, அம்மாகிட்ட அனுமதி வாங்கி கூட்டிட்டு வந்தேன் அதுதான் அப்படி கேட்டேன்.” என்று நேரடியாய் களத்தில் இறங்கினான் அஜய். முறைத்துகொண்டே நேராய் மோதுவது ஒருவழி என்றால், சிரித்து பேசி நேர்மையாய் இருந்து வஞ்சம் வைத்து ஆளை கவுப்பது ஒரு வழி. அஜய் இதில் இரண்டாவதை தேர்ந்தெடுக்க, இனியன் அதற்கும் மசியவில்லை.

Advertisement

“புரியது சார். ஆனால் பாருங்க நீங்க பேசுவதை கேட்க என் அக்கா தயாராக இல்லை, இப்போது போய் நீங்கள் பேசினால் அதை அவள் காதில் கூட வாங்கமாட்டாள். உங்கள் மீது கோபம் தான் வரும். அதற்கு தான் விருப்பப்படுறீங்களா நீங்க?” என்று வார்த்தையால் திருப்பி அடித்தான் இனியன். ஆளை மயக்கும் பேச்சுக்களை பேசி வசியம் செய்பவன், தமக்கையின் பாசத்தில் எதிராளியை வீசி விளாசும் தம்பியின் விவாதத்தில் சற்று பின்னடைந்தான். இனியனை அருகில் வைத்துக்கொண்டு இனியாவை தொந்தரவு செய்ய முடியாது, அவளை தன்புறம் இழுக்கவும் முடியாது என்று உணர்ந்த அஜய் சுதாரித்து,

“ஓகே கேரி ஆன். அக்காவுக்கும் தம்பிக்கும் என்கூட பேச விருப்பமில்லைனு நல்லாவே தெரியுது. ஆனாலும் என் மனசு கேட்கல… நான் பேச வந்ததை சொல்லிடுறேன்… எனக்கு இனியாவை பிடிச்சிருக்கு. அவளை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படுறேன். எனக்கு புரியுது இனியா மனசு இப்போ அவளிடம் இல்லை. வேறொருவன் மேல விருப்பம் வச்சிட்டா. இன்னொருவனை விரும்பும் பெண்ணை கட்டாயப்படுத்தி மணந்துகொள்ளும் அளவிற்கு நானும் சுயநலக்காரன் இல்லை. ஆனால்… என்றாவது ஒருநாள் அவள் விரும்பிய இடம் அவளுடைய வாழ்க்கையை முழுமையாக்காதுன்னு புரியும். அதுவரைக்கும் அவளுக்காக நான் காத்திட்டு இருப்பேன்.”

“அந்த நாள் என்னைக்குமே வராது அஜய்.” என்று அனலாய் குறுக்கிட்டு பதில் கொடுத்தாள் இனியா.

அவளின் வேகத்தை கண்டு லேசாக சிரித்தவன், “நான் டாக்டர் இனியா. ஒருவருடைய பிணி எந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கையை பாதிக்கும்னு எனக்குத் தெரியும். இதயன் நல்லவன் தான் அதில் சந்தேகமே இல்லை. இருந்தும் இப்போது அவனை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பிணி சாதாரணமானது இல்லை. ஆயுள் முழுதும் அவனை கட்டிப்போடும் அளவுக்கு அபிரிதமான எதிர்மறை ஆற்றல் அந்த பிணிக்கு இருக்கு. அவன் மீண்டெழுவது என்பது மருத்துவத்தால் எவ்வளவு சீக்கிரம் சாத்தியம் என்று தெரியவில்லை ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக என்னால் சொல்லமுடியும்,” என்றவன் சிறு இடைவெளி விட்டு இனியனை ஒருபார்வை பார்த்துவிட்டு இனியாவிடம் விழிகளை நிறுத்தியவன், “இதயனால் முறையான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வாழமுடியாது. இதை சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன் ஆனால் இது தான் அறிவியல் உண்மை. வெளியில் இருந்து பார்க்க அவன் பேசமுடியாமல், உணரமுடியாமல், எழமுடியாமல் இருப்பது மட்டும் தான் தெரியும் ஆனால் உடலளவில் நிறைய பிரச்சனைகளை அவன் சந்தித்துக் கொண்டிருக்கிறான். பேச முடியாத காரணத்தால் அவனுடைய இடைஞ்சல்களை உங்களிடம் அவனால் பகிர்ந்திருக்க முடியாது. மற்றபடி… ஹீ இஸ் நாட் பிட் (fit).” என்று நிறுத்த இனியாவின் முகத்தில் படர்ந்திருந்த உணர்வுகளை அவனால் படிக்க முடியவில்லை.

“அவருடைய இன்னல்களை விளக்கிக் கூறியதற்கு நன்றி டாக்டர் அஜய். அவரை இன்னும் நல்லா புரிஞ்சிக்க உங்களுடைய விளக்கம் ரொம்பவே உபயோகமா இருக்கும்.” என்றவள் இதழ்களை இறுக மூடிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். இனியனும் வால் பிடித்துக் கொண்டு அவள் பின்னேயே செல்ல, பற்களை கடித்துக்கொண்டு காற்றில் ஒன்றிரண்டு குத்துக்களை மட்டுமே அவனால் விடமுடிந்தது. இதயனிடம் தோற்றத்தை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சற்று தூரம் சென்ற பின்பு தன் அலைபேசியை எடுத்து அதில் பதிந்திருந்த ஒரு எண்ணை வேகமாக அழுத்தி எதிர்புறம் அழைப்பை எடுக்கும்வரை பரபரப்பாய் இருந்த இனியா மறுபக்கம் இருப்பவருக்கு பேசகூட வாய்ப்பு தராது, “அஜய் இங்கே தான் இருக்கார். நீங்க ப்ளீஸ் அவர் கண்ணில் படாமல் கோச்சுக்கு வாங்க.”

“ஏன்? என்னாச்சு?”

“இல்லை தெரியல… ஆனால் எதுவோ சரியில்லை. நீங்க கேள்வி கேட்காம பத்திரம்மா வாங்களேன். நான் காத்திருக்கேன்.” என்று இவள் அழைப்பை துண்டிக்க அவளை சந்தேகத்துடன் நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் இனியன்.

அதை உணர்ந்தவள் அவனிடமிருந்து ட்ராலியை வாங்கிக்கொண்டு, “என்னடா அப்படி பார்க்குற? இன்னைக்கு ஏதோ இவ்வளவு வித்தியாசமா பேசுற? இவ்வளவு நாள் அவரை விட்டுரு அப்படி இப்படின்னு அட்வைஸ் மழை பொழிஞ்ச?”

“எனக்கு வேற வழி இருக்கா என்ன? நீ இவ்வளவு உறுதியா தனியா போராடும் போது உன்கூட பொறந்ததற்கு உனக்கு ஆதரவா நான் இருந்து தான் ஆகணும்.” என்றான் அழுத்தமாய்.

நேரடியாய் கூறாது ஏதோ கட்டாயத்திற்காக அவளுடன் இருப்பவன் போல பேசியது அவளின் புருவங்களை உயரச் செய்தது, “அப்படி கஷ்டப்பட்டு நீ எனக்கு துணையா இருக்கணும்னு ஒரு அவசியமும் இல்லை.” என்று முறுக்கிக் கொண்டாள் தமக்கை. மெய்யாகவே இனியா மட்டுமே தனித்து பெற்றவர்களிடம் மல்லுக்கு நிற்கும் போது அவனால் அவள்படும் வேதனையை சகிக்க முடியவில்லை. இவ்வளவு உறுதியாக அவள் கூறும் போது நாமாவது அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனை மாற்றியிருந்தது.

அவள் தலையை தட்டியவன் மென்முறுவளோடு, “இப்போ என்ன நான் அவரை மாமாவா ஏத்துக்கிட்டேனு சொல்லணும். அதை தானே லூசு நீ எதிர்பார்க்குற?”

 

 

 

“இல்லையா பின்னே? அம்மா அப்பா கோவிச்சிட்டு இருப்பதைவிட நீ எனக்கு எதிரா இருந்தது அவ்வளவு வருத்தமா இருந்தது. அவங்களுக்கு பிறகு கடைசி வரை எனக்குனு என்னோட ரத்தபந்தமா என்னுடைய பிறந்த இடத்திலிருந்து இருக்கப்போறது நீ தான். அப்படி இருக்கும் போது உனக்கும், இதயனுக்கும் எந்தவித மனகசப்பும் இருப்பதை நான் விரும்பல. நீங்க எல்லோரும் எனக்கு ரொம்ப முக்கியம்.” என்று உணர்ச்சிகள் சற்று ஓங்கிவிட, அவளின் விழிகளுமே நீரை உதிர்க்க தயாராய் இருந்தது.

அவளைத் தோளோடு அணைத்தவன், “சரி விடு… பாத்துக்கலாம். இப்போ யாரை நீ கூப்பிட்டு பேசிட்டு இருந்த? நீ மட்டும் தனியாகவே கொச்சி போயிடுவேன்னு தைரியமா வீட்டுல சொல்லிட்டு இப்போ யாரை கூப்பிட்டுட்டு இருக்க?”

அவனை கள்ளப்பார்வை பார்த்தவள் அவனின் முழங்கையினுள் தன் கரங்களை கோர்த்து, “வா என்கூட காண்பிக்குறேன்.” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றாள். பெற்றோரை காயப்படுத்துகிறோம் என்ற வேதனை ஒருபுறம் என்றாலும் இப்போது இனியன் அவளுக்காய் தன் முடிவை மாற்றிக்கொண்டு ஆதரவு கொடுத்தது அவ்வளவு மகிழ்ச்சியை தந்தது.

“ஆமா அந்த பாலிதீன் பையில் என்ன இருக்கு? நான் எல்லாத்தையும் எடுத்துட்டு தானே வந்தேன், எதையும் மறக்கவில்லையே?” என்று அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து கேட்க,

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட… நாலு சிப்ஸ் பாக்கெட், ஒரு டைரி மில்க். இங்கதான் முதல் நடைமேடையில் இருக்கும் கடையில் வாங்குனேன்.” என்று அவன் சொல்லவுமே வேண்டுமென்றே தான் அஜய்யை குறுக்கிடவென வந்திருக்கிறான் என்று புரிந்தது.

“எப்போதிலிருந்துடா இவ்வளவு நல்ல தம்பியா மாறுன?” என்று விழிவிரிய கேட்க, சற்று சத்தமாகவே சிரித்தவன், “ஒரு தொல்லை என்னைவிட்டு ஊருக்கு போகுது, அந்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டாமா? அதற்கு தான் ஸ்வீட் எடு, கொண்டாடு டைரி மில்க்.” என்று கலகலக்க, அவளின் மனநிலை முழுதும் இலகுவாகியது.

அதற்குள் அவளின் கோச்சிற்கு வந்திருக்க, இனியன் அந்த கோச்சில் ஒட்டியிருக்கும் தாளில் அவளின் இருக்கை எண்ணை ஒருமுறை சரிபார்க்க, சந்தேகத்துடன், “என்ன லூசு இந்த கோச்சில் ஆளே இல்லையா என்ன?” என்று கேட்கவுமே அவனின் பார்வை அந்த தாளின் இறுதியில் இருந்தவற்றை கவனித்துவிட்டது.

“இந்த கோச் ட்ரைன் ஆம்புலன்சா?” என்று அவன் கேட்கவும், ரயில் சேவையின் பிரத்யேக சிறப்பு வாகனத்தில் அந்த இடத்திற்கு வந்திருந்தான் இதயன். அதிலிருந்து இன்பன் உடமைகள் அடங்கிய பைகளை எடுத்துக்கொண்டு இறங்க, இனியன் அந்த கோச்சை மீண்டும் நன்கு கவனித்தான். அந்த கோச்சில் மட்டும் ப்ளஸ் சிம்பல் போட்டு ஆம்புலன்ஸ் என்றே எழுதியிருந்தது.

“தரை மற்றும் காற்றுவழி ஆம்புலன்ஸ் மாதிரி தான் இதுவும். தரைவழியா போறதைவிட இது இன்னும் சிரமம் இல்லாமல் இருக்கும். கொச்சி வரை போகணும்ல.” என்று இனியா பதில் கூற, இனியனின் விழி முழுதும் இதயன் வசம்தான். இன்பனை பார்த்ததுமே தெரிந்துவிட்டது வீல்சேரில் இருப்பவன் யாரென்று..

இதயனை முதல்முறை சந்திக்கவும் இனியனின் கவனம் முழுதும் அவனை கூர்ந்து கவனித்து எடைபோட்டது. பார்க்க நன்றாகவே இருந்தான், இனியாவுக்கு பொருத்தமாகவே இருப்பான், உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருக்கலாம் என்பது தான் இனியனின் முதல்நிலை ரிபோர்ட்.

இதயனும் அவனை கேள்வியோடு நோக்க, அதற்குள் அவனை கோச்சில் ஏற்றும் வேலையில் இறங்கினர் ஊழியர்கள்.

“என்ன இனியா இதெல்லாம்?”

“ப்ளீஸ் இனியன் இதை வீட்டில் இப்போதைக்கு சொல்லிடாதடா… நான் அங்க ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் இவருக்கு ட்ரீட்மென்ட் ஏற்பாடு செய்திருக்கேன். எனக்கு நம்பிக்கையிருக்கு அங்க போனதும் இவருக்கு சரியாகிடும், அப்புறம் வீட்டில இவரை நிராகரிக்க காரணமே இருக்காது.” என்று வேண்ட, இனியனால் என்ன சொல்ல முடியும்.

அவன் அமைதியாய் இனியாவின் உடமைகளையும் உள்ளே கொண்டுபோய் வைத்துவிட்டு, இதயனை பாதுகாப்பாய் படுக்க வைத்துவிட்டு செல்லும் வரை காத்திருந்து, உதவி செய்த ஊழியர்கள் நகர்ந்ததும், தயக்கத்துடன் இதயனிடம் வந்தவன்,

“என் அக்காவை ரொம்ப காக்க வைக்காதீங்க மாமா. சீக்கிரம் சரியாகி இங்கே வந்துடுங்க.” என்றுவிட்டு சரசரவென வெளியேறிவிட்டான். (techfundingnews.com) இனியா சொல்லத் தயங்கி வெளிப்படுத்தாத ஒன்றை இனியன் ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டான்.

இன்பனும் இதயனும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்துவைக்க, அவர்களின் எண்ணமும் ஒன்றுபோலவே இருந்தது, ‘என்னடா இனியா தான் திடீர் திடீர்னு ஷாக் கொடுப்பதை தன்னுடைய ட்ரேட்மார்க்கா வச்சி இருக்கானா அவள் தம்பியும் அப்படியே இருக்கான்.’

“இப்போ சந்தோசமா எருமை?” தன்னை கண்ணீர் மல்க, இதழில் சிரிப்புடன் எதிர்நோக்கிய இனியாவின் தலையை செல்லமாய் தட்டினான் அந்த செல்லத் தம்பி.

“போடா லூசு நீ வளர்ந்துட்ட,” என்று அவளும் அவன் புஜத்தில் குத்தினாள்.

“சரி சரி நீ போய் உட்காரு ஒரு இடத்தில. நான் வெளிய இருக்கேன்.” என்று இறங்கிவிட, இன்பன் அவன் பின்னாலே வந்தான்.

“உங்க பேர் என்ன?” என்று இன்பனிடம் இருந்து தான் ஆரம்பமானது அவர்களின் உரையாடல்.

வெளியே பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவன் தன் பின் ஒலித்த குரலில் திரும்பி சங்கடமாய் சிரித்துவைத்து, “இனியன்.” என்றான்.

 

 

 

 

இன்பனும் தன் பங்கிற்கு தன்னை அறிமுகம் செய்துகொள்ள,

“எனக்கு உங்களை தெரியும். யுக்தா அக்கா நிச்சயப் போட்டோ காண்பிச்சாங்க.” என்று சொல்லி தன் சார்பாய் வாழ்த்துக்களையும் தெரிவித்தான் இனியன்.

“இப்போ உள்ளே அண்ணனிடம் என்னமோ சொன்ன மாதிரி இருந்ததே,” கேள்வியை எப்படி துவக்கி கேட்பது என்பது புரியாமல் இன்பன் ஏதோ கேட்டு வைக்க,

“ஏன் அப்படி கேட்குறீங்க? உங்களுக்கு தெரியாதா என்ன?” என்று சாதுரியமாக எதிர் கேள்வி எழுப்பினான் இனியன்.

“அப்போ உங்களுக்கும் தெரியுமா?”

“அது எப்படி தெரியாம போகும்? என்னைக்கு இருந்தாலும் தெரிந்து தானே ஆகணும்.”

இருவருமே விஷயம் இதுதான் என்று சொல்லாமல் பேசிக் கொள்ள, ஏதோ நினைவு வந்தவ இனியன், “நீங்களும் அங்கே தான் இருக்கப்போறீங்களா?”

“இல்லை இனியன். எனக்கு அவ்வளவு நாள் ஆபிசில் விடுப்பு எடுக்க முடியாது. இனியாவுக்கு அங்கேயே மாறுதல் இருப்பதால் அவங்க பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாங்க.” என்று சொல்லவும் இனியனின் முகம் மாறிவிட்டது.

அதை தள்ளிநின்று கவனித்த இனியா முன்னே வந்து, “உங்க அண்ணன் அங்க தனியா இருக்காங்க. நான் இவனை அனுப்பிட்டு வந்துறேன்.” என்று குறுக்கிட்டாள்.

இன்பன் இருவரிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட, பற்களை கடித்த இனியன்,

“நீ அவர்கூடவே தங்கப் போறீயா?”

“நீ எனக்கு அண்ணனா தம்பியான்னு சந்தேகமா இருக்குடா. நான் ஒன்னும் அவர் கூடவே இருக்கப்போவது இல்லை. அங்க அந்த ஹாஸ்பிடலில் குடில் மாதிரி தனித்தனி அறைகள் இருக்கு. அங்கே அவர் தங்கிப்பாரு, நான் வீட்டில் சொன்ன மாதிரி வொர்கிங் ஹாஸ்டலில் தங்கப் போறேன். அப்பப்போ அவரைப் போய் பார்த்துட்டு வந்துருவேன். எனக்கு ஆபீஸ் இருக்குங்குற விஷயத்தை மறந்துடாத.”

“இருந்தாலும் இவ்வளவு தன்னிச்சையும், தான்தோன்றித்தனமும் நிஜமாவே சரியில்லை அக்கா. நீ கொஞ்சம் அதிகமாவே எல்லாம் செய்யுற. நாளைக்கே இதெல்லாம் ஒத்துவரலைனா உன்னால இதிலிருந்து மீள முடியாது.” என்று தன் அதிருப்தியை தெரிவிக்கவும் தவறவில்லை அவன்.

“சரி சரி என் பாசக்கார தம்பி… நான் பத்திரமா இருந்துக்குறேன். தினமும் உங்க எல்லோருக்கும் போன் பண்றேன். நல்லா சாப்பிடுறேன். அப்புறம் உங்க மாமாவையும் நல்லா பார்த்துக்குறேன்… அதற்கு பதில் நீ ஒன்னு செய்யனும், அஜய்க்கு இவரை நான் கொச்சிக்கு கூட்டிட்டு போறது தெரியக்கூடாது.” என்று எல்லாவற்றையும் கூறி, அவளின் வேகத்திற்கு அணைபோட அவனால் முடியவில்லை. 

“எங்க பேச்சை கேட்கக்கூடாதுன்னு முடிவு செய்துட்ட… உன் மனசுபடி எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.” என்று அவளை வழியனுப்ப, அவனிடமிருந்து கையசைத்து விடைபெற்றவள், ட்ரைன் கிளம்பவும் தான் உள்ளே நுழைந்தாள்.

அவளை எதிர்பார்த்து காத்திருந்த இன்பன், “இனியா ஏன் அஜயிடம் சொல்ல வேண்டாம்னு சொல்ற?”

“எனக்கு என்னவோ அவரிடம் ஏதோ தப்பு இருக்குற மாதிரி இருக்கு. ஆண்டியும், நீங்களும் அஜய்கிட்ட இவரை கொச்சி கூட்டிட்டு போறதை சொல்லாதீங்க ப்ளீஸ்.” என்று சொல்லிவிட்டு நகர, ரயிலின் முன்னேறும் பாதைக்கு மாறாய் இனியாவின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது. ஒருவாரம் தான் ஆகியிருக்கும். அதற்குள் மாற்றங்கள் பல… ஆனாலும் அன்று இரவும் அதற்கு பின் நிகழ்ந்த நிகழ்வுகளும் நன்றாகவே நினைவிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!