Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 32.2

“அவளுக்கு யாரையோ பிடிச்சிருக்குனு சொல்றா, நீங்க இலகுவா அவளிடம் பேசிட்டு இருக்கீங்க?”

“யாரையோ இல்லை கீதா, அஜய்யை தான் விரும்புறா. அந்த தம்பிதான் தன்னோட விருப்பதை சொல்லியிருக்கும்.”

“என்ன இது புதுசா என்னவோ சொல்றீங்க?”

“ஆமா, கொஞ்ச நாள் முன்னால் எதர்ச்சியாக அந்த பையனை கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பார்த்தேன். அவ்வளவு பணிவு, நன்னடத்தை. தனியாக பேச வேண்டும் என்று சொன்னவன், முதலில் கொஞ்சம் தயங்கி பின் மெல்ல, ‘இனியாவை எனக்கு பிடிச்சிருக்கு அங்கிள். இதை முதலில் உங்களிடம் தான் சொல்றேன். வீட்டிற்கே பெண் கேட்டு அப்பா, அம்மாவோடு வந்திருப்பேன் ஆனால் என்னைப்போல இனியாவின் விருப்பமும் ரொம்ப முக்கியம் அங்கிள். இனியாவின் சம்மதம் இல்லாமல் இந்த உறவில் ஒருஅடி கூட எடுத்துவைக்க எனக்கு விருப்பமில்லை. வாழப்போகும் இருவருமே ஒத்துப்போனால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதற்குமுன் இனியா வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் உங்களுடைய ஒப்புதலும் அவசியம். பெற்றோர்களை பகைத்துக்கொண்டு என்றுமே நன்றாக வாழ்ந்திட முடியாது. உங்கள் ஆசிர்வாதமும், சந்தோசமும் தான் எங்களை வழிநடத்தும். என்னுடைய இந்த ஆசையில் உங்களுக்கு சம்மதம் என்றால் இனியாவின் நம்பர் கொடுங்க, போதை ஒழிப்பு நாளன்று ஒரு விழா இருக்கு அன்றே இனியாவின் விருப்பத்தை தெரிந்துகொண்டு மேலே பேசலாம் அங்கிள். என்னால் சுலபமா இனியா நம்பர் வாங்கிட முடியும் ஆனால் உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்கள் பெண்ணை தொந்தரவு செய்வது நன்னடத்தை இல்லை. உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருந்து இதெல்லாம் சரிவரும் என்றால் இனியாவின் நம்பர் கொடுங்க இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களின் நன்மதிப்பை பெற கண்டிப்பாக முயற்சிப்பேன்.’ என்றானே பார், இவனை விட நம்ம பொண்ணுக்கு பொருத்தமானவன் கிடைக்க மாட்டான்னு நான் தான் இனியா நம்பர் கொடுத்தேன். அந்த தம்பியும் இனியாகிட்ட பேசிட்டு கொஞ்சம் டைம் கேட்டிருக்கு.”



Advertisement

“அந்த அஜய் தான் இனியா விரும்புற பையனாக இருக்கும்னு எப்படி சொல்றீங்க? வேற யாரையும் கூட இனியா விரும்பலாம். நீங்க இவ்வளவு நாள் அமைதியாக இருந்ததே தப்பு. என்னவாக இருந்தாலும் நீங்களா ஒன்றை யூகித்திருக்க கூடாது. இன்று மாலை அவள் அலுவலகம் விட்டு வரட்டும், அவள் என்ன சொல்றான்னு கேட்போம்.” என்று கீதா சுதாரிப்பாய் இருக்க, கீதாவின் கணிப்பு போலவே அஜயை விடுத்தது இதயனை பிடித்திருக்கிறது என்று சொன்னாள் இனியா.

 

இப்போது நினைத்தால் கணவனின் தேர்வான அஜயை ஏற்றுகொள்வதா இல்லை மகளின் விருப்பத்திற்கு செவி சாய்ப்பதா என்ற குழப்பமே கீதாவிடம் மிஞ்சியது.

Advertisement

“இன்னும் என்ன யோசனை கீதா. இதுதான் சரியா வரும். நான் அஜயிடம் பேசுறேன். நீ இனியாவை அடுத்த வாரம் கிளம்பி வரச்சொல்லு. இப்போவே சொல்லாத, இந்த வார கடைசியில் சொல்லு அப்போ தான் சந்தேகம் வராது. தாமதிக்காம எல்லாத்தையும் சீக்கிரம் முடிக்கணும்.”

Advertisement

“முடிவே செய்துட்டீங்களா?”

“வேற என்ன செய்யலாம்னு நீ நினைக்கிற? அன்று பாப்பா கேரளா கிளம்பும் போது அஜய் சொன்னதை நீயும் தானே கேட்ட, இதயனால் சாதாரண குடும்ப வாழ்க்கை கூட வாழமுடியாது. எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காம கடைசி வரை அவனுக்கு சேவகம் செஞ்சே நம்ம பாப்பா வாழ்க்கை முடியணுமா? பிள்ளைங்க கேட்கிற எல்லாவற்றையுமா நாம வாங்கிக் கொடுக்கிறோம்? நல்லது கெட்டது பார்த்து நாம தான் அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கணும். அப்புறம் இந்த விஷயம் இனியனுக்கு இப்போதைக்கு தெரியவேண்டாம். அவனும் பாப்பாக்கு ஒத்துதூத ஆரம்பிச்சிட்டான். அன்றைக்கே ரயில் நிலையத்திற்கு தேவையில்லாமல் சென்று அஜயையும், பாப்பாவையும் பேசவே விடல.”

இறுதியில் கணவர் சொல்வதே சரியென்றுபட, மனம் ஒப்பவில்லை என்றாலும் இந்த விஷயத்தை இதற்கு மேல் வளரவிடுவது நாளை இனியாவுக்கு தான் நல்லதில்லை என்றுணர்ந்த கீதா, “துர்கை அம்மன் மேல பாரத்தை போட்டு எல்லாம் செய்ய வேண்டியது தான். பாப்பா வாழ்க்கை இப்படி தான் இருக்கணும்னு தலையெழுத்து இருந்தால் நாம என்ன செய்யமுடியும்.” என்று விடேற்றயாய் பேசியவர் கண்களை துடைத்துக்கொண்டு பூஜையறை சென்று கண்மூடி வெகுநேரம் மந்திரங்களை துதித்துக் கொண்டிருந்தார்.

Advertisement

***

 

[the_ad id=”6605″]

 

 

வாரம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட, என்றும் இல்லாமல் அன்று மட்டும் சற்று அதீத மகிழ்ச்சியோடு அவனைக் காண வந்தாள் இனியா.

இனியா அறையினுள் நுழைந்தவுடனேயே இதயனின் முகம் பிரகாசமாகிவிட, அவளுக்கென பிரத்யேகமாக வீசும் அந்த வசீகரப் புன்னகையை வீசி வரவேற்க, அவனின் வெளிர் பற்கள் பளிச்சென்று மின்னலடித்தது.

“என்ன இன்றைக்கு மேடம் ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க? என்ன விஷயம்?”

“நாம இன்னைக்கு நைட்டே ஊருக்கு போறோம்.” என்றாள் இனியா அவனுக்கும் சற்றும் குறையாத பிரகாசத்துடன்.

அவள் சொன்ன செய்தியில் அவனின் பிரகாசம் கூடியது, “என்ன திடீர்னு?”

தன்னுடைய ட்ராவல் பேக்கை உள்ளே இழுத்துவந்து வைத்தவள் அவனை நெருங்கி, அவனின் நெற்றியில் வேகமாக முட்டிவிட்டு, “உங்க தம்பி கல்யாணம் கூட மறந்து போச்சா? இன்னும் ஒருவாரம் தான் இருக்கு அவங்க கல்யாணத்திற்கு. அதோட அம்மாவும் வீட்டுக்கு வந்தே ரொம்ப நாள் ஆச்சு இந்த வாரம் வந்தே ஆகணும்னு கூப்பிட்டாங்க. சரின்னு ஒரு வாரத்திற்கான வேலையை இந்த வாரம் முழுதும் பார்த்து கொடுத்துட்டு லீவ் போட்டு வந்திருக்கேன்.”

விழியுயர்த்தி தன் நெற்றியோடு நெற்றி உரசியிருப்பவள், நாசியோடு நாசி இடித்தவன், “என்னிடம் சொல்லவே இல்லை.” என்று குறை படித்தான்.

அவனை செல்லமாய் முறைத்துவிட்டு நகர்ந்தவள், அவன் துணிகளை ஒரு பையில் அடுக்கிகொண்டே, “நீங்க மட்டும் என்னவாம்?… உங்களுக்கு பேச்சு வந்ததும் அத்தையிடம் சொல்லுவோம், உங்க குரலை கேட்டால் ரொம்ப சந்தோசப்படுவாங்கனு சொன்னதற்கு, தம்பி கல்யாணத்திற்கு நேரா போகும் போது சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு சொன்னீங்க. அதுதான் நானும் இதை சொல்லல.”

அங்குமிங்கும் அறை முழுதும் அவனது உடைமைகளை எடுத்து பைகளில் அடுக்க அவள் செல்லும் திசையெல்லாம் அவன் விழியும் தொடர்ந்தது. “அதுவும் இதுவும் ஒன்றா? போனில் பேசினால் அங்க ரெண்டு பேருமே உணர்ச்சிவசப் பட்டிருவாங்க, அதோட எனக்குமே நேருக்கு நேரா பேசணும்னு தான் ஆசை. ஆறு வருடமா காத்திருந்த காத்திருப்புக்கான முழுபலனை அவங்க நேரில் பார்த்து, கேட்டு தான் அனுபவிக்கணும்.”

“இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஒருத்தி ஒருவாரமா ஒழுங்கா தன்னை வந்து பார்க்கலையே, ஏன் என்னை வந்து பார்கலைன்னு சண்டை போட தெரியுதா உங்களுக்கு?” ஒருவார விடுப்பிற்காக கடந்த ஐந்து நாட்களாகவே அலுவல் வேலை காரணமாக இனியா அவனை வந்து சந்திக்கவில்லை மாறாக தினமும் இரவு அரைமணி நேரம் அலைபேசி உரையாடலில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். அவனை பார்த்துக்கொள்ளவென இருக்கும் உதவியாளர் ஹெட்போனை அவன் காதில் மாட்டிவிட்டு சென்றுவிட்டால் சரியாக அரைமணி நேரம் கழுத்துதான் திரும்ப அறைக்குள் வருவார், அதுவரை அறை வாயிலிலேயே காவலுக்கு இருப்பார்.

“நீதானே அலுவலக வேலை இருக்கு, அதனால் தினமும் வரமுடியாதுன்னு சொல்லிட்டு போன… அதுதான் நானும் உன்னை தொந்தரவு செய்யல. அதோட நாம தான் தினமும் பேசுனோமே…”

“ஆனாலும் இப்போ சொன்னீங்களே சிலது போனைவிட நேரில் அனுபவித்தால் தான் நல்லாயிருக்கும்னு. அந்த உணர்வே தனிதான்.” என்று கண்ணடித்தவள் அவனின் உடை ஒன்றை எடுத்துக்கொண்டு அவனருகில் வந்து அவன் முகம் பார்த்து பேசும்படி அமர்ந்தாள்.

“என்னையும் இங்கே அழைத்து வந்திருக்கும் விஷயத்தை உங்க வீட்டில் சொன்னியா?” அவனும் ஒருவாரமாய் விதவிதமாய் இதே கேள்வியை கேட்டுவிட்டான், ஆனால் பதில் தான் அவளிடம் இருந்து வந்தபாடில்லை. வீட்டிற்கு விஷயம் தெரிந்தவுடன் தன்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டனர் என்று சொன்னால் அதற்கு ஒரு லெக்சர் எடுப்பான் என்று இதுவரை அவனின் கேள்விக்கு வாய் திறக்கவில்லை இனியா. இப்போதோ தான் எடுத்த முயற்சிகள் வீண்போகாமல் பலன் கிடைத்திருக்க, இதயனை அவர்கள் முன் நிறுத்தி அவளின் காதலுக்கு சம்மதம் வாங்குவதே இந்த பயணத்தின் குறிக்கோளாய் இருக்கிறது.

“நான் சொல்லல… உங்க தம்பியும், அம்மாவும் சொல்லிட்டாங்க. ஆனால் வீட்டில் எதுவும் இதுவரை கேட்கல. சென்னை போனதும் நானே வந்து உங்களை என் வீட்டிற்கு அழைச்சிட்டு போறேன், அம்மா அப்பாகிட்ட என்ன பேசுவீங்களோ எனக்கு தெரியாது ஆனால் அவங்க நம்ம கல்யாணத்திற்கு ஒத்துக்கணும்.” தகவல் சொல்வது போல துவங்கியவள் இறுதியில் கட்டளையாக முடித்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

நாளுக்கு நாள் அவளின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்ல, அனைத்தையும் விரும்பியே ஏற்றவன், நகைப்புடன், “இதென்ன புதுவிதமான மிரட்டலா இருக்கு.”

“அந்த அஜய் அப்படிதான் என்னவோ பேசி என் அப்பாவை மயக்கி வச்சிருக்கான். அதை முறியடிச்சி நம்ம கல்யாணத்திற்கு நீங்க தான் அனுமதி வாங்கணும்.” என்று அவள் விரல்நீட்டி எச்சரிக்க, அஜய் பெயரை கேட்டதும் அவனின் முகம் கறுத்தது.

“என்ன செஞ்சான் அவன்?” கடுகடுவென இருந்தது அவனின் முகமும், கேள்வியும்.

பற்களை நரநரவென்று கடித்தவள், “என்னை கல்யாணம் செய்துக்கனுமாம். உங்களை விரும்புறேன்னு தெரிஞ்ச பிறகும் என்கிட்டேயே வந்து தைரியமாக சொல்றான்.”

“அவ்வளவு திண்ணக்கமா அவனுக்கு.”

“ஆமா, அவன் பேச்செல்லாம் தேன் தடவியதா இருக்கு. யாராலும் சந்தேகமே படமுடியாது.” என்றவள், அவனின் மேல்சட்டை பொத்தான்களை கழற்ற, பதறியவன்,

“ஏய் என்ன செய்கிற நீ?”

அவனளவு இல்லாமல் சற்று பெரியதாய் காற்றோட்டமான மழுங்கிய நீலநிற பருத்தி உடையை காட்டியவள், “ஊருக்கு போகணும்ல. இதே உடையோடவா வருவீங்க?” என்றவள் மீதி பொத்தானையும் கழற்றிவிட்டு, எழுந்து நின்று தன்னுடைய பலம் கொண்டு அவனை தூக்கி நிமிர்த்தியவள் சற்று மூச்சி வாங்கிவிட்டு சட்டையை கழற்ற,

“இதெல்லாம் நீ ஏன் செய்யுற? ஹெல்பரை கூப்பிடு அவர் மாற்றிவிடுவாரு.”

“ஏன் நான் செஞ்சால் என்ன?”

“உன்னால என் எடையை தாங்கமுடியாது இனியா. சொன்னால் கேளு.”

“அதெல்லாம் முடியும்,” என்று வீம்புக்கு நின்றவள், அவனை தன்மேல் சாய்த்துக்கொண்டு பழைய மேல்சட்டையை நீக்கி கீழே கழற்றி வைத்தவள், குனிந்து ஏற்கனவே தான் எடுத்துவைத்திருந்த வேறு சட்டையை எடுக்கப்போக, திடுமென தன் கழுத்து வளைவில் வீசிய வெப்ப காற்றில் சிலிர்த்து அவன் கையை இறுகப்பற்றிக் கொண்டாள்.

அவளின் இறுகியபிடிப்பு எல்லாம் அவனுக்கு எங்கே தெரியப்போகிறது… அவனின் மொத்த உடலும் அவள் மேல் சாய்ந்திருக்க, அவள் கழுத்து வளைவில் பதிந்திருந்த அவனின் முகம் மட்டுமே அவளின் நெருக்கத்தை உணர்ந்தது. உணர்ந்த பின்னோ சும்மா இருப்பதா… முகத்தை நிமிர்த்தி நாசியை அவள் தாடையில் வைத்து உரசி விளையாட, அவனுக்கு உடை மாற்றுவதில் தீவிரமாக இருந்தவள் அதை உணரவில்லை என்றதும் வேண்டுமென்றே நீண்டமூச்சிழுத்து அவளின் கழுத்தில் மூச்சை வெளியிட, அவளின் உடல் விறைத்து நாணியது. அவனின் நெருக்கம் அப்போது தான் கருத்தில் பதிந்தது. அதுவரை அவனால் இயலாத காரணத்தால் உதவியாக இருக்கட்டுமே என்று அவனின் நிலையை மட்டுமே கருத்தில் வைத்து செயல்பட, அவன் உணர்த்திய நெருக்கம் அவளுக்கு தயக்கத்தை கொடுத்தது. எச்சி கூட்டி விழுங்கியவள் குனிந்து அவனைக்காண,

“என்ன யோசனை? சீக்கிரம் சட்டையை போட்டுவிடு,”

ஒன்றுமில்லை என்பதுபோல தலையாட்டிவிட்டு அமைதியாய் புது சட்டையை அவனுக்கு போட்டுவிட, தன் நாசி கொண்டு அவள் கன்னத்தில் கோலமிட்டான்.

அவனின் தீண்டலில் நெளிந்தவள், “என்ன சேட்டையெல்லாம் பலமா இருக்கு? சும்மா இருங்க கொஞ்ச நேரம்.” என்றதற்கு அவன் மறுப்பாய் தலையசைத்ததில் கூட, நாசியும், இதழும் ஏடாகுடமாய் அவள் வதனத்தில் உரசியது.

 

[the_ad id=”6605″]

 

 

சட்டென்று தலையை பின் இழுத்துக்கொண்டவள் அவனை முறைத்தபடியே, “கொஞ்ச நேரம் முகத்தை வச்சிகிட்டு சும்மா இருங்க. இப்படி எல்லாம் செஞ்சா நாம எப்படி சீக்கிரம் கிளம்புறது?”

மெலிதாய் சிரித்துக்கொண்டவன், “சரி சரி சீக்கிரம் நடக்கட்டும்.”

அவனை சந்தேகமாய் பார்த்தவள், “நீங்க சொல்கிற தினுசே சரியில்லையே. கல்யாணம் வரைக்கும் ஐம்புலன்களையும் சுருட்டி வச்சிட்டு இருங்க.”

அதற்கும் விஷமமாய் சிரித்தவன், “ஏற்கனவே பாதிபுலன் தான் வேலைசெய்யுது. நானே அதை வைத்து ஓவர்டைம் பார்த்துட்டு இருக்கேன்.” என்று கண்ணடிக்கவும் அவன் கன்னத்தில் ரெண்டடி போட்டவள், “வரவர டாக்டர் பேச்சு, செயல் எல்லாம் சரியே இல்லை… கல்யாணம் வரைக்கும் தாக்குபிடிக்க மாட்டார் போலிருக்கே…” என்று செல்லமாய் அவள் இழுக்க,

“இதோ இப்போ சட்டையை மாத்திவிட்டுட்ட, அப்படியே இந்த பேன்ட்டையும் மாத்திடு முழு கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான்.” என்று நல்லபிள்ளையாய் கண்சிமிட்ட, முதலில் என்ன சொல்கிறான் இவன் என்று தான் பார்த்து வைத்தாள்…

புரிந்தபின்னோ விழி விரிந்து, நாணம் ஏறியது கன்னக்கதுப்புகளில்…

‘என்ன இவன் இப்படி பேசுகிறான்,’ என்று நாணம் முந்திக்கொள்ள, அவனை பார்க்கவே சங்கடமாய் இருந்தது. ‘சரியான வாயாடி, என்னவெல்லாம் பேசுகிறான்,’ என்று செல்லமாய் மனதில் கடிந்துகொண்டவள், அவன் சொல்லியதை காதில் வாங்காதது போல வேகமாக பொத்தான்களை மாட்டிவிட்டு, அவனை மெத்தையில் கிடத்தி,

“நான் ஹெல்பரை அனுப்புறேன். அவர் வந்து உங்களுக்கு ஹெல்ப் செய்வாரு. நான் அதற்குள் அடுத்த ஒருவாரத்திற்கு உங்களுக்கு தேவையான மருந்து மற்றும் சாப்பாடு பற்றி கேட்டுட்டு வந்துறேன்.” என்று ஓடியேவிட்டாள் இனியா.

நாணப்பட்டு அதை மறைத்தபடியே அவள் செல்வதை கண்டு ஓசையுடன் நகைத்தவன் மனம் முழுதும் அவர்கள் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பும், அவளின் பெற்றோரை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையும் இரட்டுற கலந்திருந்தது. வெளியே ஓடிய இனியாவின் மனதிலும் இதயனுடனான தன்னுடைய எதிர்கால வாழ்க்கையை பற்றிய கனவுகள் பல கண்டுகொண்டிருக்க, அங்கு சென்னையில் அவளுக்கு அஜயுடன் திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!