Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 32.1

கள்வன் – 32

 

சம்மந்தம் இல்லாமல் பத்திரிக்கையை கொண்டுவந்து தங்கள் முன் நீட்டுவதே சந்தேகத்தை தான் எழுப்பியது. முன்பின் பேசியதில்லை, மகள் மணப்பெண்ணின் தோழி, அவ்வளவே இந்த திருமணத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு. மகள் அந்த தொடர்பை நீட்டிக்க விரும்பினாலும் அவர்களின் எல்லை எதுவென்று வரையறுத்தே இருந்தனர் ரமேஷும், கீதாவும். ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காக படியேறிவந்து முறையாய் பத்திரிக்கை வைப்பவர்களை கடிந்துகொள்ளவும் முடியவில்லை, அவர்களின் செயலை ஏற்கவும் முடியவில்லை.  

அமைதியாய் இன்பன் நீட்டிய பத்திரிக்கையை வாங்கிக்கொண்ட ரமேஷ் சம்பிரதாயத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை அமரச் சொல்ல, தயக்கத்துடன் அவர் எதிரே அமர்ந்தான் இன்பன். 



Advertisement

“நீங்களும் உட்காருங்க.” பிடிக்கவில்லை என்றாலும் வீடு வந்தவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுக்கும் விதமாய் கீதா சிவகாமியையும் அமரச் சொல்லி தண்ணீர் கொடுக்க, தயக்கத்துடனே அவர்களின் உபசரணையை ஏற்றுக் கொண்டனர்.

யார் எப்படி பேச்சை துவக்குவது என்று தெரியாமல் கையை பிசைந்து அமர்ந்திருக்க, இதயனின் பெயரை பத்திரிகையில் பார்த்துவிட்டு ரமேஷே பேச்சை துவக்கினார்.

“இப்போ எப்படி இருக்கார் உங்க அண்ணன்?” இன்பன் அவர் முகத்தையே சங்கடத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, அவனிடமே பேச்சை துவங்கினார் அவர்.

Advertisement

“நல்லா இருக்காங்க.” சட்டென்று பொதுவாய் சொல்லும் பதிலே அவனிடத்திலிருந்து வந்தது.

Advertisement

“நல்லா இருந்தால் சரிதான்.” அதோடு அதை முடித்துக்கொண்டவர் அவர்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாய், “என் பொண்ணு இனியாவை உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குமே… அவளுக்கும் ஒரு நல்ல வரன் அமைந்திருக்கு, கூடிய விரைவில் திருமணப் பத்திரிக்கை வரும். கண்டிப்பா நீங்க எல்லோரும் கல்யாணத்திற்கு வரணும்.” என்று பேச்சிலே கொட்டு வைக்க, திகைத்துத்தான் போயினர் வந்திருந்த இருவரும். 

 

[the_ad id=”6605″]

Advertisement

 

 

உள்ளம் அச்சத்தில் அடித்துக்கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் இன்பன் சுதாரித்து, “அங்கிள் என்ன சொல்ல வரீங்க?”

“நீங்க ஒரு சுபகாரியமா இங்கே வந்திருக்கும் போது முரணா பேச்சை வளர்க்க வேண்டாம்னு தான் நினைச்சேன் ஆனால் என் பொண்ணு வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். உங்க குடும்ப பாரத்தை என் பொண்ணு தலையில் கட்டிட்டு அவள் தோளில் சுமந்து கட்டியிழுப்பதை எட்ட நின்று கைகட்டி வேடிக்கை பார்க்குறதை இதோட நிறுத்திக்கோங்க. நாளைக்கே கசப்பான சம்பவம் நடந்தால் அதற்கு நாங்க பொறுப்பில்லை.” என்று அவர் முடித்துக்கொள்ள, யுக்தா சொன்ன வார்த்தைகளின் அழுத்தமும், நிதர்சனமும் ஆணிஅடித்தாற் போல இன்பனின் மனதில் இறங்கியது.

“இல்லை அங்கிள். நீங்க ஏதோ தவறா புரிஞ்சிட்டு இருக்கீங்க.” என்று இன்பன் பதில் பேச, அவனுக்கே தெரிந்திருந்தது இந்த விஷயம் கைமீறி சென்றுவிட்டதென… 

“நாங்க எல்லாம் சரியா தான் புரிஞ்சிருக்கோம். உங்கள் அண்ணனுக்கு முடியலைன்னா அது உங்களோட பிரச்சனை அதை உங்க குடும்பத்தோடவே வச்சிருக்கணும். எப்படி என் பெண்ணை நீங்க இதில் உள்ளிழுத்துவிடலாம்?”

அதுவரை மெளனம் காத்த சிவகாமி சங்கடத்தை தீர்க்கிறேன் என்ற பெயரில் புதிதாக ஒன்றை இழுத்துவிட்டார்.

“நீங்களே இப்படி பேசலாமா? இனியா ரொம்ப தெளிவான பொண்ணு, நல்லா குணமா வளர்த்திருக்கீங்க. அப்படியிருக்கும் போது உங்க பொண்ணு தவறான காரியத்தில் இறங்கி முடிவு எடுப்பானு நினைக்கிறீங்களா?”

“அவள் பதமா குணமா நடந்துப்பதால் தானே அவளை உங்கள் விருப்பத்திற்கு வளைக்கிறீங்க? சின்ன பொண்ணு அவள், அவள் ஏதோ சொல்லிக்கிட்டு உங்கள் வீட்டுக்கு வந்தால் அப்படியே விட்டிருவீங்களா? புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டியது தானே? அதுசரி நாளையே பிரச்சனை என்று வந்தால் அது உங்களையா பாதிக்கப்போகுது… நீங்க பையனை பெத்தவங்க… எதுவாக இருந்தாலும் எல்லாமும் நாளை என் பொண்ணு மேலதான் விழும், அவளுக்கு தான் கெட்டப்பெயர்.” சிவகாமி வாய் திறக்கவும் கீதாவும் அமைதியாய் இருக்கவில்லை. பெண்ணின் வாழ்க்கை பற்றிய பேச்சு வந்தபிறகு மரியாதை நிமித்தமாய் அமைதியாய் போவதில் அர்த்தமொன்றும் இல்லையே.

“என்ன இப்படி சொல்லிட்டீங்க? இனியா எங்க வீட்டு பொண்ணு மாதிரி. அவளுக்கு கெட்ட பெயர் வரவிட்டு விடுவோமா.” என்று சிவகாமியும் நேராய் கீதாவிடமே பேசினார்.

“நீங்களே சொல்றீங்களே பொண்ணு மாதிரின்னு அதுதான் உங்களுக்கு எங்க தவிப்பு புரியல. உங்க பையன் அப்படி இருக்குறது உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும் அதற்காக எங்க பொண்ணை உங்களுடைய லாபத்திற்கு எப்படி பயன்படுத்தீப்பீங்க? இதுவே உங்க சொந்த பெண்ணா இருந்தால் அவளை இப்படி விடுவீங்களா? அடுத்தவங்க பொண்ணு தானே என்று அலட்சியமாய் அவளை உங்க பையனோட பழக விட்டிருக்கீங்க.”

கீதாவின் கேள்வியில் சிவகாமிக்கு அவரின் தாய்பாசம் எந்தளவு கண்ணை மறைத்திருக்கின்றது என்று கொஞ்ச கொஞ்சமாய் புரியத்துவங்கியது. ஆனாலும் தாய்பாசமே வென்றுவிட, அவரால் அவர் நிலையிலிருந்து கீழே இறங்கமுடியவில்லை.

“மழுங்கி போயிருந்த எங்கள் வாழ்க்கையில் நான் உதவுறேன்னு உங்க பொண்ணு தேவதை மாதிரி எங்க குடும்பத்துக்கு வந்தாள். அவளோட நல்ல எண்ணத்தால் தான் இன்று என் பையனை சரி செய்திடலாம்னு அங்கே கேரளால டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க. அப்படிப்பட்ட தேவதையை வராதேனு எப்படிங்க சொல்ல முடியும்?”

“இப்போதும் உங்க பையனோட தாயாக தான் நீங்க யோசிகிறீங்க. உங்கள் வேதனைக்கு என் மகள் மருந்தாயிருப்பதற்கு விலை அவளுடைய வாழ்க்கையென்றால் அப்படி தேவதையாக என் பொண்ணு இருக்கனும் என்கிற அவசியமில்லை. உங்களை போல சுயநலமான இன்னொரு தாயாக சொல்றேன், என் பொண்ணை இனி தொந்தரவு செய்யாதீங்க. இதற்கு மேல எப்படி நாகரீகமா சொல்றதுன்னு எங்களுக்கு தெரியல. கல்யாணம் வைத்திருக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய வேதனையை பரிசா வாங்கிக்காதீங்க,” கீதா சற்று அழுத்தமாகவே பேச, ரமேஷ் முகத்தில் குழப்பம் மெல்ல எட்டிப்பார்த்தது.

 

[the_ad id=”6605″]

 

 

“உங்க பையனுக்கு குணமாக வாய்ப்புகள் குறைவுன்னு கேள்விப்பட்டேன். இப்போது என்ன புதிதாக கதை அளக்கிறீர்கள்?” மனதில் சில சந்தேகங்கள் எழ போட்டுவாங்கும் விதமாய் ரமேஷ் கேள்வி எழுப்ப, இன்பன் சுதாரிப்பதற்கு முன் சிவகாமி உளறியிருந்தார்.

“உங்களுக்கே எல்லாம் தெரியவந்து இனியா மேல கோவமா இருப்பீங்கனு தெரியும். ஆசை வச்சிட்ட பொண்ணு, தான் நினைச்சதை நிறைவேற்றிடனும்னு குறிக்கோளுடன் அவனை கேரளாவுக்கு கூட்டிட்டு போயிருக்கா. அங்கிருந்து நல்ல செய்தியும் வந்திருக்கு. நீங்க கொஞ்சம் அவகாசம் கொடுத்த எல்லாமே சரியாகிடும்.” என்றுவிட, இனியாவின் பெற்றோரை கேட்கவும் வேண்டுமா.

கீதாவின் கண்களில் மழுக்கென்று கண்ணீர் எட்டிபார்த்தது. தங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு இதிலிருந்து ஒதுங்கிவிடுவாள் என்று எதிர்பார்த்திருக்க, அதை பொய்யாக்கியிருந்தாள் மகள். இவ்வளவு தூரம் சென்றபிறகு பெண்ணை இதிலிருந்து மீட்டு எப்படி நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப்போகிறோம் என்ற ஐயம் பல்கிவிட, ரமேஷ் மனதளவில் இறுகிப்போனார். இதயனை விரும்புகிறேன் என்று சொன்ன போதுகூட வராத கோபம் இப்போது வந்திருந்தது.

“அது உங்களுக்கு வேண்டுமென்றால் நல்ல செய்தியாக இருக்கலாம். எங்களுக்கு கண்டிப்பாக இல்லை. நீங்க கிளம்பலாம்.” என்று முகத்தில் அடித்தாற் போல கடுமையாய் கூற, தப்பாய் தன் இளையமகன் முகம் பார்த்தார் சிவகாமி.

தாங்களாகவே வந்து, அமைதியாக இருந்ததை ஊதி கெடுத்துவிட்டோம் என்பது இன்பனுக்கு தாமதமாகப் புரிய, “கிளம்பலாம் அம்மா, வா.” என்று அன்னையை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

வெளியே வந்தவன் வண்டியை வேகமாக வீட்டிற்கு விட,

“என்னடா இப்படி பேசுறாங்க? இனியாவை திட்டுவாங்களோ?” கவலையுடன் வெள்ளந்தியாய் கேட்டார் சிவகாமி.

“பின்னே கொஞ்சுவாங்களாமா… நாம இதயனுக்காக பொண்ணு கேட்கிற நிலைமையில் எல்லாம் இல்லை என்பது நமக்கே புரியும் போது அவங்க எப்படி இனியா அவனை விரும்புவதை ஒத்துப்பாங்க? இதுவே இதயன் நல்லாயிருந்து அவன் இதுமாதிரி எழுந்து நடமாட முடியாத ஒரு பெண்ணை காதலித்தா நீ அந்த பெண்ணை ஏத்துப்பியா? அதே தான் அவங்களுக்கும்.” என்று இன்பனும் வெளிப்படையாய் பேச, சிவகாமி ஊமையாகிப் போனார். அப்படி ஒருபெண்ணை மகன் காதலித்தால் அதை அவரால் ஏற்றுகொள்ள முடியாது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

“இதில் எதுவுமே செய்ய முடியாதாடா? இனியா நம்ம வீட்டுக்கு வரமாட்டாளா? இனியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன் என்று வேற சொன்னாங்களே.” நல்ல பெண்ணை தன் குடும்பம் இழந்துவிடுமோ என்ற அச்சம் அவருள் படர, மனது படபடத்தது.

“செய்யுற நிலைமையில் நாம இல்லைமா.” என்றவன் வண்டியை நிறுத்த, அதிலிருந்து இறங்கிய சிவகாமி வீட்டுக்கதவை திறக்காமல் சிவகாமி வாயிலேயே ஏதோ யோசனையுடன் அமர்ந்துவிட்டார்.

அவர் முகத்தில் கவலையும் கலவரமும் போட்டிபோட்டு வெளிப்பட, “என்ன இங்கேயே உட்கார்ந்துட்ட… வந்து கதவை திறம்மா.” என்று இன்பன் அவரை நெருங்கி உலுக்கினான்.

“இதயனை இங்கேயே கூட்டிட்டு வந்துரு இன்பா… முன்ன மாதிரி நாமளே பார்த்துப்போம். நம்மால இனியாவுக்கு எந்த நல்லதும் நடக்கபோறதில்லை. மனசுல ஆசையை வளர்த்துட்டு நாளைக்கே அது இல்லைன்னு தெரிஞ்சா அவ மனசு உடைஞ்சிடும்.” என்றவர் முதன்முறையாய் தெரிந்தே தன் மூத்தமகனின் மனதை உடைக்க தயாரானார். வேறு வழியும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

‘அப்போ இதயன் மனசு?’ என்று மனதில் சட்டென்று எழுந்த கேள்வியை தனக்குள்ளேயே முழுங்கியவன், “நான் இனியாகிட்ட பேசுறன்ம்மா… இதுவரைக்கும் அவள் வீட்டுக்கு தெரியாம செய்ததெல்லாம் போதும். இப்போ நாம பேசிட்டு வந்ததை சொல்லுவோம், அப்புறம் அவள் முடிவு எடுக்கட்டும்.”

“வேண்டாம்டா… நாம இப்போ சொன்னதை வைத்து அவங்க வீட்டில் சண்டை வந்துட்டா?”

“என்றைக்கு இருந்தாலும் தெரியத்தானே போகுது. அதோட நம்மைவிட அவள் குடும்பத்தை எப்படி சமாளிக்கனும்னு அவளுக்குத்தான் நல்லாத் தெரியும். இனி எதையும் ஒளிச்சி மறைத்து செய்ய வேண்டாம்.” என்றவன் உடனேயே அவளை அழைக்க, அவள் எடுத்தால் தானே… இதயனுடன் செல்லச் சண்டையில் ஈடுபடிருக்க, அவனுக்கு பேச்சு வந்ததை அவன் வீட்டினரிடம் சொல்லிட வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு எழவில்லை.

***

“இப்போ என்ன செய்யறது?” கண்களை கசக்கியபடியே தரையில் ஓய்ந்துபோய் அமர்ந்திருந்த கீதா கணவரை பார்த்து கேள்வி எழுப்ப,

கண்ணாடியை கழற்றி கண்களை தேய்த்தவர், “வேற வழியே கிடையாது. அவர்களிடம் சொன்னத்தை உண்மையாக்கணும்.”

“எதை?” குழப்பம் மேலிட கணவர் நல்ல யோசனை சொல்லிடமாட்டாறா என்ற ஏக்கம் கீதாவிடம்.

“இனியாவுக்கு சீக்கிரமே ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி கொடுக்கணும் கீதா. என்றைக்கோ பிரியபோற உறவை இப்போவே பிரிச்சி அவளை புது உறவுடன் சேர்த்துட்டா கொஞ்ச நாளில் அவளே சரியாகிடுவா.” குரலும் இறுகிபோயிருக்க, மனம் கனத்திருந்தது.

“எப்படிங்க செய்யறது? இவ்வளவு தூரம் போவாள்னு நான் நினைக்கவே இல்லை.”

“நம்ம பொண்ணாவே அவள் இப்போ இல்லை கீதா. இனியும் அவளுக்காக பார்த்து அமைதியாக இருந்தால் நிலைமை கைமீறிவிடும். நாம முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.”

“அதற்காக அவளை கட்டாயபடுத்தி கல்யாணம் செய்துவைக்க சொல்றீங்களா? நம்ம பொண்ணு கல்யாணம் அவளோட விருப்பம் இல்லாமலா நடக்கணும்? எப்படி எல்லாம் அவளுக்கு கல்யாணம் செய்யணும்னு நாம ஆசைப்பட்டோம், ஏங்க இவள் இப்படி செய்யுறா?” ஆதங்கத்தை வெளிப்படுத்தும்போதே கீதாவின் கண்களில் நீர் முட்டிகொண்டு வந்தது. மகளின் மனம்நிறைந்தவனையே மாப்பிள்ளையாக்கி, பிறந்த வீட்டிலிருந்து பாராட்டி சீராட்டி அனைத்துவித சம்பிரதாயங்களுடன் புகுந்த வீட்டிற்கு செல்லும்படியான ஒருநல்ல வாழ்க்கையை அமைத்துத்தரவே விருப்பம் அந்த தாயிற்கு. ஆனால் அதற்கான கொடுப்பனை தான் அவர்களுக்கு இல்லை.

“இன்றைக்கு உள்ள சிரமத்தை பார்த்தால் பாப்பா வாழ்க்கை வீணாகிடும் கீதா.”

“அந்த பையன் சரியாக வாய்ப்பிருக்குன்னு இப்போ சொன்னாங்களே. நாம வேணும்னா கொஞ்சம் அவள் விருப்பத்திற்கு விட்டுத்தான் பார்ப்போமா? அந்த பையன் சரியாகி இனியாவை நல்லா பார்த்துக்கிட்டா நமக்கு சந்தோசம் தானேங்க?” மகளை திருமண விஷயத்தில் கட்டாயப்படுத்த மனமே இல்லை கீதாவுக்கு. இதுவரை எதற்குமே தேவையின்றி கடிந்திராத மகளை பிடிக்காத வாழ்க்கைக்குள் தள்ளுவதா? மனதில் ஒருவனை சுமந்துகொண்டு வேறு ஒருவனிடம் தாலி வாங்கி அனைத்தையும் சகித்துக்கொண்டு அவனுடம் குடும்பம் நடத்துவதா? அந்த கொடுமை என் மகளுக்கு நடந்தேறக் கூடாது என்று அடித்துகொண்டது அவரது உள்ளம்.

மனைவியின் மாற்றத்தில் கடுப்பு தான் வந்தது மனிதருக்கு, “ஏன் அவள் ஆசைபடுறான்னு இப்போவே கல்யாணம் செய்து வையேன் அந்த பையனோட… அவனால இனியா கழுத்தில் தாலி கூட கட்டமுடியாது. புரியாம உளறாதே.” தந்தையின் பார்வை அன்னையின் பார்வைக்கு நேரெதிராய் மேம்போக்காய் இருந்தது. மகளை இதயனிடமிருந்து பிரித்து வேறு ஒருவனுடன் திருமணம் நடத்திவிட்டால் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்பது அவரது திண்ணம்.

“அப்போ என்னதான் செய்யணும்னு சொல்றீங்க? அந்த அஜய் கூட கல்யாணம் செய்து வைக்கணும்னு துடிக்கிறீங்களா?”

“ஏன் அந்த பையனுக்கு என்ன குறைச்சல்? இனியாவை பிடிச்சிருக்குனு இந்த காலபிள்ளைகள் மாதிரி நேராக அவளிடம் போகாமல் முறையாய் முதலில் என்னிடம் வந்து அனுமதி வாங்கி அவளின் அலைபேசி எண்ணை கூட அவ்வளவு கண்ணியமாக வாங்கினான் அந்த பையன். அவனை விட வேறு நல்ல மாப்பிள்ளை நமக்கு கிடைத்துவிடுவாரா என்ன? அதோடு அவருக்கு இந்த இதயனை பற்றியும் நன்றாக தெரிஞ்சிருக்கு, அவன் குணமாக வாய்ப்பே இல்லைன்னு அஜய் சொல்லிட்டாரு. இனியா அந்த பையனை விரும்புவது தெரிஞ்சும் கூட நான் காத்திருக்கிறேன்னு சொன்ன அஜய்யைவிட பொருத்தமான மாப்பிள்ளை வேறு யார் கிடைப்பா?” என்று சொன்னதும் கீதாவின் மனம் பின்னோக்கி சென்றது. மகள் ஒருவனை பிடித்திருக்கிறது என்று காலையில் சொல்லிவிட்டு அலுவலகம் சென்றுவிட, கணவரிடம் மல்லுக்கு நின்றதும், அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் கூட இன்னும் அகக்கண்ணில் அச்சுபிசகாமல் இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!