கள்வனே கள்வனே – 34.1
கள்வன் – 34
“அங்கேயே நில்லு,”
வீட்டின் உள்ளே அடிஎடுத்து வைத்து நுழையும் முன்னே அன்னையின் கட்டளையில் திடுக்கிட்டு நின்றவள், பீதியுடம் நிமிர்ந்து கீதாவைக் காண,
“எதுவாக இருந்தாலும் உள்ளே போய் பேசலாமே,” என்று இனியாவுடன் வந்திருந்த சிவகாமி சங்கடத்துடன் வேண்டினார்.
Advertisement
அதை கண்டுகொண்டது போல காட்டிக்கொள்ளாமல், இனியனை அழைத்தவர்,
“கார் எடுத்துட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போய் மாப்பிள்ளையை கூட்டிட்டு வாடா.” என்று அவனை அனுப்பிவைத்துவிட்டு திகைப்புடன் தன்னை நோக்கிய இருவரிடமும் மலர்ந்தும் மலராத முகத்துடன், “கல்யாணம் ஆகி முதல் முறை வீட்டுக்கு வரும்போது தனியாக வரக்கூடாது. நீ இங்கேயே இரு இனியா நான் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வந்துறேன்.” என்று அவர்பாட்டிற்கு உள்ளே சென்றுவிட, முகத்தை சுழித்த இனியா தன் மாமியாரிடம் திரும்பி, “இப்போ கோவமா இருக்காங்களா இல்லையா? என்ன சொல்ல வராங்க?” என்று கிசுகிசுப்பாய் கேள்வி எழுப்ப, அவளையே பாவமாய் பார்த்தார் சிவகாமி.
“எனக்கு எப்படிடா தெரியும். உன் அம்மா எப்படினு உனக்கு தான் தெரியும்.”
Advertisement
இனியாவோ இருப்பு கொள்ளாமால் வீட்டின் உள்ளே எட்டி எட்டிப் பார்த்தபடியே இருந்தாள்.
Advertisement
“என் பேச்சை கேட்கவே கூடாதுன்னு எல்லாம் செய்றீயா? என்னை விட்டிருந்தால் அப்போதே இந்த கல்யாணம் நடக்காம தடுத்திருப்பேன், ஆனால் என்னிடம் மண்டையை மண்டையை ஆட்டி ஊமைக்குசும்பாக இருந்து இப்படி என் பொண்ணு வாழ்க்கையை நாசமாக்கிட்ட.” தந்தையின் குரல் ஈனசுரத்தில் விழ, மீண்டும் பதட்டமானாள் இனியா.
“நான் பேசிட்டே இருக்கேன் எனக்கென்னனு உன் வேலையை பார்த்துட்டு இருக்க? அப்படித்தான் கோவிலில் இருந்து வந்ததும் இனியனை கூட்டிகிட்டு எங்கேயோ போய் ஊர் சுத்திட்டு இப்போ தான் வர, என்னதான் நடக்குது இங்கே? பாப்பா தான் ஏதோ புரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவனிடம் கேட்டான்னா நீ அவனிடம் தலையசைத்து அனுமதி கொடுத்திருக்க. போதாததற்கு இனியனை விட்டு மாலை தாலி எல்லாம் வாங்கி இந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ததே நீதான். எல்லாமே உன்னால தான்.” மீண்டும் உள்ளே ரமேஷ் பொரிந்து கொண்டிருப்பது தெளிவாய் கேட்க, அவர் கடத்திய செய்தி பூக்குவியலென விழுந்தது இனியாவிற்கு. அன்னையின் யோசனையில் தான் திருமணமே நடந்திருக்கிறது என்று புரிய முகம் மலர்ந்து, மனம் தெம்பாய் உணர்ந்தது.
“அம்மாவுக்கு என்மேல கோவம் இல்லை, அம்மா சம்மதத்துடன் தான் எங்க கல்யாணம் நடந்திருக்கு.” மகிழ்ச்சியுடனே சிவகாமியிடம் பகிர்ந்துகொண்டாள் இனியா.
Advertisement
“இப்போ தான் உன் முகத்தில் கலையே வருது.”
“அப்பா தான் கோபமா இருக்காங்க. ஆனால் அம்மா சரிபண்ணிடுவாங்க,” நம்பிக்கை அவளிடத்தில்…
ஆலம் கரைத்து வந்த கீதா தன் செயலுக்கு மாறாய் அமைதியாகவே காத்திருந்தார். வாய் திறக்கவில்லை.
“அம்மா,” இனியாவின் அழைப்பு காற்றோடு காற்றாகிவிட, சிணுங்கினாள் மகள்.
“அம்மா… எனக்குகூட இப்படி அவசரமா கல்யாணம் செய்துக்கணும்னு தோணல. நீ தான் இந்த ஐடியாவின் மாஸ்டர் மைன்ட். இப்போ சும்மா பந்தா பண்ணாத,” என்று சிணுங்கிக்கொண்டே அவர் கைகளை பிடித்துக்கொண்டு தொங்க, அவள் கையை தட்டிவிட்டவர்,
“மாப்பிள்ளை கூட சம்மதம் வாங்கற மாதிரி எங்களை பார்த்தார், நீ மரியாதைக்கு கூட எங்களை திரும்பி பார்க்கல அப்புறம் எங்க சம்மதம் வாங்கணும்னு எல்லாம் நியாபகம் வரும். பெரிய மனுஷி ஆகிட்டியே இனி எங்களை எல்லாம் எங்கே கண்டுக்கபோற,” என்று அவர் அங்கலாய்க்க, கூம்பிப்போனது இனியாவின் முகம்.
“என்னிடம் உண்மையை மறைத்து தானே கோவிலுக்கு கூட்டிட்டு போனீங்க? இனியன் மட்டும் அவங்களுக்கு தகவல் சொல்லவில்லை என்றால் அஜயுடன் எனக்கு நிச்சயம் செய்து வச்சிருப்பீங்க. என்னை இந்த நிலைமைக்கு தள்ளுனதே உங்க அவசரம் தான். நான் டைம் கேட்டேன் தானே, அதற்குள் இப்படி ஏற்பாடு பண்ணீட்டீங்க?”
[the_ad id=”6605″]
“பழையதை எல்லாம் இப்போ தேவையில்லாம பேசாத. இனி நடக்கப்போவதை பாரு,” அவளின் கேள்விகளை அப்படியே கத்தரித்துவிட்டார் கீதா. என்னதான் மகள் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டாலும் மனநிறைவு என்பது இன்னுமே வரவில்லை. இதயன் நிலை சரியாகி இருவரும் மகிழ்ச்சியாக வாழத் துவங்கினால் நிறைவு வருமோ என்னவோ…
அதற்குள் இதயனுடன் வந்திறங்கினான் இனியன். இன்பனின் உதவியோடு அவனை உள்ளே அழைத்துவர, மென்முறுவளுடன் இருவருக்கும் ஆலம் சுத்தினார் கீதா. தன்னருகில் சக்கரநாற்காலியை நிறுத்தியதுமே, அதிலிருந்த இதயனின் கையை இறுக பற்றிக்கொண்டு, முகம் கொள்ளா நகையுடன், “இது தான் என் வீடு,” என்று அறிமுகப்படுத்தினாள். வீடு வந்துவிட்ட திருப்தி அவளிடத்தில் தனிப்பொலிவை தந்திருந்தது. அதை ரசித்தவன் மெல்ல பார்வையை வீட்டினுள் நின்றுகொண்டு தங்களையே முறைத்துக் கொண்டிருக்கும் ரமேஷிடம் திருப்பினான். தங்களை ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியம் எதுவும் தெரிகிறதா என்று அவரை ஆராய முற்பட, அவரோ அங்கு நடக்கும் எதுவுமே பிடிக்காமல் உள்ளே சென்றுவிட்டார்.
“எல்லோரும் உள்ளே வாங்க. இனியன் கூட்டிட்டு வா.” ரமேஷ் எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்க, இனியனையே அனைத்திற்கும் முன்னிறுத்த வேண்டியதாகியது.
“மாம்ஸ் என் உடன்பிறப்பிடம் இருந்து விடுதலை வாங்கி கொடுத்திருக்கீங்க, இன்னைக்கு உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க. சும்மா தடல்புடலா செஞ்சிடலாம்.” இனியன் வம்பிழுத்துகொண்டே இதயனை உள்ளே அழைத்துச் செல்ல, இனியா தம்பியை கையை நறுக்கென்று கிள்ளினாள்.
“அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்கிறான், அவனை ஏன் கிள்ளுற?” மச்சினன் சார்பாய் புது மாமன் பேச,
“அதை அவன்கிட்ட சொல்றது. என்னை அவன் வம்பிழுக்கும் போது சும்மா வேடிக்கை பார்த்துட்டு தானே இருந்தீங்க,” என்று இதயனை முறைத்தாள் அவள். இதயன் சமாளிப்பாய் கூட வாய் திறவாமல் இருக்க இன்னும் எகிறினாள் இனியா.
“இந்த தடியனுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்குறீங்களே, இவன் உருப்படியா காலையில் நீங்க தாலி கட்டும்போது போட்டோ எடுத்தானானு கேளுங்க…”
“உன்னைவிட சாமர்த்தியசாலி நான்தான்னு மாம்ஸ் எப்போதோ சர்டிபிகேட்டே கொடுத்தாச்சு.” என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டவன் தன் அலைபேசியை எடுத்து புகைப்படங்களை காண்பித்துக் கொண்டிருந்தான்.
இதயன் முறுவலுடன் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு அந்த சூழ்நிலையை ரசித்துக்கொண்டிருக்க, இன்பனுக்குத்தான் இவர்களின் கேலிப் பரிமாற்றங்களைக் கண்டு ஏக்கம் பிறந்தது. ஆறு வருடமாக தன் அண்ணனிற்கு எல்லாமுமாய் இருந்திருக்க, இப்போது புதிய உறவுகள் இதயனை சூழ்ந்துகொள்ளவும் ஏதோ தான் தனித்துவிடப்பட்ட உணர்வு. முன்னர் போல அவனை நெருங்க முடியாது என்ற எண்ணம் வேறு அவனை சோர்வடையச் செய்தது. தன்னுடைய திருமணத்திற்கு பிறகு இதயனை பிரிந்து, இதயன் தனியாகவே இருக்க வேண்டிய சூழல் வரும் என்று தன்னை ஒருவாராய் தேற்றிவைத்திருக்க, இப்போது அவனுக்கு துணையாய் இனியா வந்துவிட்டாள் என்றவகையில் மனம் சாந்தமடைந்தும் இருந்தது. நேர்மறையாய் இப்படியும் யோசித்தது, சோர்வாய் எதிர்மறையையும் யோசித்தது அவனது உள்ளம்.
இவர்களை விட்டு சற்று தள்ளி பூஜையறைக்கு சிவகாமியை அழைத்துச்சென்ற கீதா அங்கிருந்தவற்றை காட்டி, “கோவிலில் மஞ்சள் முடிந்திருந்த மஞ்சள்கயிறு தான் இருந்தது. இப்போ வந்ததும் போய் தங்கத்தில் தாலிச்சரடும் வாங்கிட்டு வந்து பூஜையறையில் வச்சிருக்கேன். உங்கள் முறைப்படி வேற வாங்கணும்னா சொல்லுங்க அதையும் வாங்கிட்டு செய்ய வேண்டியதை செய்து இன்னைக்கே தாலி பிரிச்சி கோர்த்துடலாமா? இன்றைக்கு நாளும் நல்லாயிருக்கு. இன்னும் மூன்று நாளில் உங்க வீட்டிலும் கல்யாணம் இருக்கு, அதற்குள் இனியாவுக்கு எல்லாம் செய்திடலாம்னு பார்க்குறேன்.” என்று கேட்க, சிவகாமிக்குத்தான் அனைத்தும் துரிதமாய் நடப்பது போலத் தெரிந்தது.
அவர் காட்டியவற்றில் வேகமாக தன் பார்வையை சுழற்றிய சிவகாமி, “நீங்க சொல்கிற மாதிரியே செய்திடலாம். இவங்க திருமணம் நடந்து இன்னும் எங்க குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. இன்பன் திருமணத்திற்கு வரும்போது சொல்லிக்கலாம்னு இருக்கோம். அதற்குள் இவங்களுக்கு செய்ய வேண்டியதை செய்துவிட்டால் அவங்களும் எல்லாம் முடிந்து ஊருக்கு போக சரியாக இருக்கும்.” என்று சிவகாமி சம்மதம் சொல்லிவிட,
“எங்க பக்க சொந்தங்களுக்கும் இன்னும் விஷயம் தெரியாது, மாப்பிள்ளை சரியானதும் கிராண்டா வரவேற்பு வச்சிடலாம்.” என்று கீதா பேசிமுடித்த பின்பு அனைத்தும் துரிதமாய் தான் நடந்தது.
காலை கோவிலில் இருந்து கிளம்பிய உடனேயே கடைக்குச் சென்று புது தம்பதியருக்கு புதுத்துணி, தாலிச்சரடு, மெட்டி என்று அனைத்தையுமே வாங்கி அடுக்கி இருந்தார் கீதா. மாலை இவர்கள் வராது இருந்திருந்தாலும் கீதாவே அவர்கள் வீட்டிற்கு சென்று அழைக்கும் முடிவில் தான் இருந்தார். இப்போது அவர்களே வந்துவிட அனைத்தும் சுமூகமாய் நடந்தது.
ரமேஷையும் வலுக்கட்டாயமாக அழைத்துவந்து தன் அருகில் நிறுத்திக்கொண்ட கீதா செய்ய வேண்டிய முறைகள் செய்து தாலிச்சரடை தானே மாட்டிவிட முயல,
சிவகாமி குறுக்கிட்டு, “இதயனே போட்டுவிடட்டுமே.” மகனின் திருமணத்தை கண்குளிர காணாத வருத்தம் அப்பட்டமாய் தெரிந்தது அவரிடம்.
அவரின் வருத்தம் உணர்ந்து தங்கச்சங்கிலியை இதயனிடம் கொடுத்துவிட, முன்பை போலல்லாது அதை கெட்டியாக தன் விரல்களால் பிடித்துக்கொண்டான் இதயன். அது நழுவப்பார்த்தாலும் சிரமப்பட்டு அதை பிடித்துக்கொண்டவன் கண்களில் காதலை தேக்கி இனியாவை நோக்க,
பயம், குழப்பம், கண்ணீர் என ஏதுமின்றி அகமும் புறமும் நிறைவாய் மகிழ்ச்சியின் பிடியில் திளைத்திருக்க, ஆனந்தமாய் இதயன் எதிரில் வந்து நின்றாள் இனியா. அவளுக்கு சற்றும் குறையாத நெகிழ்வுடன், தன் எதிரில் குனிந்து தன்னிடமிருந்து தாலி வாங்கிக்கொள்ள காத்திருந்தவளை காத்திருக்க வைக்காமல் அவள் கழுத்தில் சங்கிலியிட்டு அவளை தன்னுள் பாதியாக்கிக் கொண்டான். கீதா குங்குமச் சிமிழை நீட்ட, மோதிரவிரலில் துளிகுங்குமம் எடுத்து அதை அழகாய் அவள் நெற்றியிலும், வகுட்டிலும் வைத்து விட்டான். அவனின் கரத்திற்கு அதிக அழுத்தம் தர விரும்பாது, குனிந்திருப்பதால் முதுகு வலித்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுக்கு வாகாய் நின்றுகொண்டாள் இனியா. காலையில் துரிதத்தில் எதையும் உள்வாங்காமல் செய்திருக்க, இப்போது அனைத்து சடங்குகளையும் ரசித்து செய்தான் இதயன், ஆத்மார்த்தமாய் அந்த நிகழ்வை உணர்ந்தாள் இனியா.
[the_ad id=”6605″]
“இந்த மெட்டி போட்டுக்கோ இனியா,” என்று கீதா இனியாவிடம் நீட்ட,
“அதையும் நானே போட்டுவிடுறேன் அத்தை.” என்று அதை இதயன் வாங்கிக்கொள்ள, அனைவர் முகத்திலும் குழப்பம்.
அவள் காலில் போட்டுவிட, இவன் குனிந்தாக வேண்டும். அது அவனால் முடியாது என்றுதான் கீதா அதை இனியாவிடமே கொடுத்தார்.
இதயனோ தன்னுடைய குறையால் தங்களின் திருமணத்தில் எவ்வித குறையும் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தவன் இனியனை கூப்பிட்டு நாற்காலி ஒன்றை எடுத்துவரச் சொல்லி அதை தன்னுடைய சக்கரநாற்காலியுடன் ஒட்டிப்போட்டு அதில் இனியாவை அமரச்சொன்னான். இவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் அனைவரும் பார்க்க,
தன் இடக்கையை முடிந்தவரையில் தாழ்த்தி அவளிடத்தில் நீட்டி, “காலை தூக்கி என் கையில் வை இனியா,” என்க, விழி விரித்து, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நானே போட்டுக்குறேன்,” என்று அவன் கையிலிருந்து மெட்டியை வாங்க முற்பட, அதை தர மறுத்தவன் அவனே மெட்டியை போட்டுவிட்டு தான் அமைதியானான்.
“செம்ம சான்சை மிஸ் பண்ணிட்டீங்க மாம்ஸ். அவள் காலில் விழாம தப்பிச்சீங்கனு பார்த்தால் வான்டடா வந்து மாட்றீங்க,” என்று இனியன் நகைக்க,
மெல்ல சிரித்தவன், “இந்த இதயனோட இதயமே அவள் காலடியில் தான் இருக்கு.” என்க, ரமேஷின் மனம் இலகியதோ!
“இப்படியெல்லாம் அவளை ஏத்திவிடாதீங்க மாம்ஸ், அப்புறம் அவள் கால் தரையிலேயே நிற்காது,” என்று இனியன் வம்பு பேச, மீண்டும் ஒரு பஞ்சாயத்தை கூட்டினர் இந்த அக்காவும் தம்பியும் இதயனிடம்…
வீடெங்கும் சிரிப்பு சத்தம் நிறைந்திருந்தது.
“எல்லோரும் இன்னைக்கு இங்கே சாப்பிட்டுட்டு தான் போகணும்,” கீதாவை தவிர வேறு யாராக இருக்கமுடியும்? சொந்த வீட்டிலேயே டெபாசிட் இழந்து ரமேஷ் முடங்கிபோய் பார்வையாளர் ஆகிவிட்டார்.
“அம்மா அவருக்கு பத்திய சாப்பாடு கொடுக்கணும்மா, அங்கேயே சாப்பிட்டுக்குறோம்.”
“ஏன் நான் செய்து கொடுக்க மாட்டேனா?” என்று கீதா முறைக்க, சிவகாமியுடன் இணைந்து சமைக்க சென்றுவிட, இனியாவுக்கு அழைப்பு வந்தது. ஹாலில் பேசிக்கொண்டிருந்த மற்ற மூன்று ஆடவர்களிடம் சொல்லிக்கொண்டு தன்னறைக்கு வந்து அலைபேசி அழைப்பை ஏற்க,
“ஒவ்வொரு முறையும் எனக்கு அதிர்ச்சி கொடுக்குற பேபி நீ.” என்றுதான் துவங்கியது உரையாடல்.
“வாழ்த்து சொல்லுவோம்னு இல்லை, எடுத்ததும் இப்படியே ஏதாவது பேசிட்டு இரு.” யுக்தாவின் மேலிருந்த கோபம் எங்கு சென்றது என்றே தெரியவில்லை இனியாவுக்கு. வாழ்க்கையில் அனைத்துமே நேராகிவிட்ட உணர்வு வந்திருந்தது.
[the_ad id=”6605″]
“ரொம்ப தைரியம் பேபி உனக்கு. இப்படி திடுமென கல்யாணமே கட்டிக்கிட்ட?” அதிர்ச்சியோ ஆச்சர்யமோ எதுவோ ஒன்று யுக்தாவை விட்டு அகல மறுத்தது. இப்போது தான் இன்பன் அவளிடம் குறுஞ்செய்தியில் விவரம் சொல்லியிருந்தான், இனியனும் வாட்சாப்பில் புகைப்படம் அனுப்பியிருந்தான். உடனே பதறி அழைத்துவிட்டாள் யுக்தா.
“சீனியரிடம் பேசுகிறோம் என்கிற பயமே இல்லை மேடம் உங்களுக்கு.” யுக்தாவிற்கு மாறாக குரலில் இலகுத்தன்மை கூடியிருக்க இனியாவின் பேச்சிலும் அது இழையோடியது.
“ஏய் நானும் நீயும் ஒன்றாக படிச்சோம் பேபி, எப்படி நீ சீனியர் ஆகமுடியும்?”
“ம்க்கும்… நான் அண்ணனை கட்டிக்கிட்டு சீனியர் ஆகிட்டேன். நீ ஜூனியரை இனி தான் கட்டிக்கப்போற…”
“அதெல்லாம் ஒத்துக்க முடியாது. ஜூனியரா இருந்தாலும் முதல் அப்ளிகேஷன் போட்டது நானு,” என்று மறுபக்கம் யுக்தாவுமே இலகுவாகியிருந்தாள். தோழியே குடும்பமாகிவிட களிப்பாய் தான் இருந்தது.
“யார் முதலில் போடுறானு முக்கியமில்லை யார் முதலில் உள்ளே நுழையுறாங்கனு தான் முக்கியம். சோ ஜூனியர், இனி நான் சொல்கிற பேச்சை தான் நீங்க கேக்கணும்…”
“போ பேபி. உனக்காக சந்தோசப்படுறதா இல்லை உன்மேல கோபப்படுவதானே தெரியல…”
“இதிலென்ன சந்தேகம். ஹாப்பியா இரு பேபி. இது எல்லாமே உன்னால தான். நீ மட்டும் என்னை கொச்சிக்கு பேக் செய்யலேன்னா இது எதுவுமே நடந்திருக்காது. அவரும் பேச ஆரம்பிச்சிட்டாரு. இப்போ கைகூட அசைக்க முடியுது. இன்னும் ஒரு மாசமா இல்லை ரெண்டு மாசமா அவர் சரியாகிடுவாறு.”
இனியாவின் குரலில் தெரிந்த மகிழ்ச்சி யுக்தாவை அசைத்துப் பார்த்தது. எவ்வளவு பெரிய காரியத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறாள் இனியா. நடவாது, மனம் ஒப்பாது, அனுமதி கிடைக்காது என்று என்னென்னவோ இவள் செய்திருக்க அனைத்தையும் முறியடித்து தன் மனம் கவர்ந்தவனையே கைப்பிடித்து தான் நினைத்ததை செய்திருக்கிறாள். இதுதான் உண்மையான அன்புக்கு கிடைத்த வெற்றியோ… எண்ணங்கள் சிதற சில நாட்களாகவே தோன்றும் எண்ணக் குவியல் இன்று வார்த்தையாய் வெளியேறியது யுக்தாவிடமிருந்து.
“நீ சாதிச்சிட்ட பேபி. ஏதோ ஈர்ப்பில் எல்லாம் செய்றேன்னு பெரிய இவள் மாதிரி உன்னுடைய எல்லா முயற்சிக்கும் தடையாய் இருந்திருக்கிறேன். ஆனால் நான் ஏற்படுத்திய தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாய் மாற்றி உன்னுடைய அன்பால் வெற்றியடைஞ்சிட்ட…”
“நான் ஏதோ பெரிதா சாதித்தது போல பேசாத. நான் முயற்சி செய்தேன் என்பதைவிட எல்லாம் தானாய் அமைந்தது எனக்கு. அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டேன்.” என்று இனியா மறுக்க,
“நீ என்ன சொன்னாலும் எனக்கு இது பெரிய விஷயம் தான் பேபி. அப்பாவை தவிர உங்க வீட்டில் உன்னோட விருப்பத்திற்கு தடை சொல்லல, அதுவே உன்னோட திடத்திற்கு கிடைத்த பலன் தான். நான் தான் இதையெல்லாம் யோசிக்காமல், இவள் நல்லதிற்கு சொன்னால் இவள் எப்படி என் பேச்சை கேட்காமல் போகலாம்னு உன்மேல எனக்கு கோபம் தான் வந்தது. அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஒட்டிப்பிறந்தவர்கள் என்றாலும் மனம் வேறு எனும்போது நட்பில் இருமனமும் ஒருபோலவே சிந்திக்கும்னு நினைச்சிட்டேன்.” இனியாவின் காதல் கைகூடிவிட்டதன் விளைவு யுக்தாவின் சிந்தையை மாற்றியிருந்தது.
“ஏன் இப்போ இவ்வளவு வியலின் வாசிக்குற? கூல் பேபி. நீ செய்தது எல்லாமே என்னை தெளிவுபடுத்தி, திடப்படுத்தியது. வெளியிலிருந்து மூன்றாம் நபராய் என்னோட விருப்பதை பார்த்தால் அறிவின்மையாகத் தான் தெரியும் ஆனால் எனக்கு என்னோட உணர்வுகள் நெருக்கமானது. அதை விமர்சிக்கும் உரிமையை நான் யாருக்கும் கொடுக்கல. அதனால் தான் நீ விமர்சித்தபோது கோபம் வந்துடுச்சு.”
“இதுதான் உன்னிடம் எனக்கு பிடிச்சது பேபி. உன்னோட உணர்வுகளில் குழம்பினாலும் இறுதியில் நீ எவ்வளவு தெளிவா இருக்க. பிரச்சனையை கண்டு பயந்து பின்வாங்காமல் தைரியமாக அதை எதிர்கொண்டிருக்க… என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று எதிர்த்து நின்று இப்போ அத்தானை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்திருக்க.”
“ரொம்ப புகழாதடி, ஏற்கனவே மனசெல்லாம் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கு. இப்படி நீயும் ஏத்திவிட்டு ஜன்னி வரவச்சிடாதே, அப்புறம் நாளைய மறுநாள் உன் ரிசப்ஷனில் மூத்த மருமகள் கெத்தை எப்படி காட்டுவதாம்?” மெத்தையில் நன்றாக சாய்ந்துகொண்டு எவ்வித அயர்சியுமின்றி உல்லாசமாய் கால்களை ஆட்டிக்கொண்டு வம்பு பேச ஆயுத்தமானாள் இனியா.
“எகத்தாளம் கூடிப்போச்சு பேபி உனக்கு.”
“கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட். ஆமா நீ எனக்கு என்ன முறை பேபி? தங்கச்சியா, ஓரகத்தியா என்னமோ சொல்லுவாங்களே?”
“இந்த யுக்தா எப்போவும் உனக்கு பிரென்ட் தான் இனியா. பிரண்டா தான் இருக்க ஆசைப்படுறேன். உறவுமுறையில் சங்கடம் வந்துட்டா இப்போ மாதிரி உடனே எல்லாம் கொஞ்சி குலாவிட்டு இருக்க முடியாது பேபி, நம்ம பிரெண்ட்ஸாகவே இருப்பது தான் நம்ம குடும்பத்துக்கு நல்லது.”
“என்னவோ சொல்ற, இந்த ஒருமுறையாவது உன் பேச்சையும் கேட்டுத்தான் பார்ப்போமே.” என்று அலட்டலாய் மொழிந்த இனியா இத்தனை நாள் கோபத்தில் பேசாது விட்டிருந்ததை எல்லாம் பேசினாள். பேச்சு தொடர்ந்துகொண்டே செல்ல அவளை அதட்டி தான் உண்ணவே அமர்த்தினார் கீதா.
உணவின்போதோ அனைவரும் இருக்கின்றனர் என்ற தயக்கம் ஏதுமின்றி இனியாவே முன்வந்து இதயனுக்கு ஊட்டிவிட, அவனுக்குத்தான் அவளின் குடும்பத்தினர் முன் சங்கடமாய் இருந்தது.
“நாளை காலையே நம்ம வீட்டுக்கு வந்துருங்க. அங்கிருந்தே மண்டபத்திற்கு கிளம்பிடலாம். நீங்க எல்லாம் முன்ன நின்று இன்பன் கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்.” கிளம்புவதற்கு முன்பு சிவகாமி இன்பனின் திருமணத்திற்கு மீண்டுமொருமுறை முறையாய் அழைக்க, இப்போது இன்பனின் திருமணத்திற்கு இவர்கள் முன்னமே செல்வது அவசியமாய்பட்டது. இனியாவிற்காக முன்னிற்க வேண்டும் என்ற நிதர்சனம் ரமேஷை தவிர யாருக்கும் உறுத்தவில்லை. அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை.
[the_ad id=”6605″]
திருமணத்தன்று முன்வரிசையில் அமர்ந்துகொண்டு முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு மகள் திருமண மண்டபம் முழுதும் வளைய வருவதை கண்குளிர பார்த்துகொண்டிருந்தார் ரமேஷ். திடுமென பெரியவளாகி பொறுப்புகளை லாவகமாக கையாளும் தன் பெண்ணை எண்ணி ஆச்சரியம் தான் அவருக்கு. வீட்டில் ஒருவேலையும் செய்தது இல்லை, அதுவும் புடவையை கட்டினால் அது அவிழ்ந்துவிடும் என்ற பயத்தில் புடவை கட்டும்போதெல்லாம் அடிமேல் அடிவைத்து பொறுமையாகவே நடப்பாள். இன்றோ அவள் கால் தரையில் பதியவில்லை, இறக்கையின்றி பறந்து கொண்டிருந்தாள். தன்வீட்டில் ராணியாக வளர்ந்தாலும் புகுந்து வீட்டில் ராணியாய் வலம் வருவது அனைவருக்கும் கிட்டாதே… அது தன் பெண்ணிற்கு கிடைத்திருகிறது என்ற நிதர்சனம் பெருமிதத்தை கொடுக்க, விரிந்தும் விரியாத நகைப்புடன் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது சிவகாமி தங்களின் நெருங்கிய சொந்தங்களை அழைத்து வந்து உறவுகளை அறிமுகம் செய்துவைக்கும் போதெல்லாம் சிறு முறுவலுடன் கடந்தார்.
அதனுடன் இதயன் குடும்பத்து சொந்தங்கள் இனியாவுக்கு கொடுக்கும் மரியாதையும், அவளையே மெச்சுதலாய் மொய்க்கும் அவர்களின் விழிகளும் ரமேஷை கர்வம் கொள்ளச் செய்தன. பிடிக்காத மாப்பிள்ளை தான் ஆனால் அந்த வீட்டில் அவளுக்கு இருக்கும் செல்வாக்கும், பாசமும் அவரை கரைக்கத் துவங்கியது. விழிகள் அவ்வப்போது பேச்சை கேட்காமல் மேடையில் சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த இதயனையும் நோட்டமிட, அவன் நன்றாய் எழுந்து நின்று இனியா அருகில் நின்றால் அவர்களின் பொருத்தம் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏக்கம் கூட லேசாய் எட்டிப்பார்த்தது. என்ன செய்ய… அனைத்திற்கும் காலம் என்ற ஒன்று இருக்கிறதே…
