Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 34.2

வீழ்ந்தவன் எழவே மாட்டான், வாழ்க்கையில் தோற்று ஒன்றுமில்லாமல் போய்விடுவான் என்று இதயனை பற்றி அவனின் சொந்தங்கள் நினைத்திருக்க, நேரம் காலம் கூடிவந்து இன்று தெம்பாய் சக்கரநாற்காலியில் நிமிர்ந்தமர்ந்து வருபவர்களை எல்லாம் புன்னகை மாறாது இருகரம் கூப்பி, வாய்நிறைய முறைசொல்லி அழைத்து வரவேற்று தன் மனைவியை அனைவரிடமும் பெருமையாய் அறிமுகப்படுத்தி வைக்க, அவனின் உறவினர்கள் மத்தியில் உயர்ந்து போனாள் இனியா. அவளால் அவனின் மதிப்பும் சபையில் உயர்ந்தது. எளிதாய் எள்ளல் பேசிட இனி இதயன் தனியாள் இல்லையே,  மனைவியின் வருகை அனைவரின் வாயையும் அடைத்தது. அவ்வளவு ஏன், இதயனை மறைமுகமாய் எடுத்தெறிந்து பேசி, அவனை கழற்றிவிடத் துடித்த யுக்தாவின் அன்னைக்கூட இப்போது இனியாவின் இருப்பால் அடங்கிப்போனார். 

இது எல்லாமே இனியாவுக்கு புரிந்தநொடி, அவ்வீட்டில் அக்குடும்பத்தில் அவளுக்கு உரிமை கூடியது போல இருந்தது. அது தந்த உரிமை அவளுக்கு தனிப்பொலிவை தர, யுக்தாவிற்கு சற்றும் குறையாமல் கல்யாண கலையுடன் பளபளப்பாகவே தெரிந்தாள் இனியா. அனைவரையும் விட, யுக்தாவின் அன்னை தான் இனியா, இதயனின் திருமணத்தை கேள்விப்பட்டு முதலில் அதிர்ந்தார். அதை கீதாவிடமும் கேட்கத்தவறவில்லை, அவரை சாடவும் தவறவில்லை. கீதாவோ இனியாவைப் போலவே எந்த பேச்சிற்கும் அசரவில்லை. ஓரிருவர் இனியாவை இதயனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கக் கூடாது என்பது போல பேச, எதை தனக்குள் ஏற்றிக்கொள்ள வேண்டும், வேண்டாம் என்று தெரிந்திருந்தது கீதாவுக்கு.

அனைத்தும் நல்லபடியாய் முடிந்து கேலி கிண்டல்களுக்கு இடையில் யுக்தாவை தள்ளாத குறையாய் இன்பன் அறையில் தள்ளிவிட்டு இதயன் அறைக்கு வர, இனியாவின் இதயத்துடிப்பு எகிறியது. அது சூழ்நிலை ஏற்படுத்திய மாயையா இல்லை புது இடம் தந்த பதட்டமா என்று அவளுக்கே விளங்கவில்லை. திருமணம் முடிந்த இந்த நான்கு நாட்களிலும் அவனுடன் தங்கிடவில்லை அவள். திருமணம் முடிந்த நாளன்று நடந்த களேபரத்திலும், பயணக் களைப்பிலும் இதயன் இரண்டு நாட்கள் தொடர்ந்து அசவுகர்யம் உணர, இன்பனையே அருகில் இருத்திக்கொண்டான். மற்றுமொரு இரவு மண்டபத்திலேயே கழிந்துவிட இன்று தான் அவனுடன் தனித்திருக்கும் நேரம் கிடைத்திருக்கிறது. எதிரில் தென்பட்ட ஒன்றிரண்டு சொந்தங்களிடம் தலையசைத்துவிட்டு அறைக்குள் நுழையவும் இன்பன் வெளியில் வரவும் சரியாய் இருந்தது.

“சீக்கிரம் போங்க, யுக்தா உங்களுக்காக வெய்டிங்,” விஷமப்புன்னகை வீசி அவனை அனுப்ப, அண்ணனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான் இன்பன்.



Advertisement

உள்ளே நுழைந்தவள், “என்ன உடன்பிறப்புக்கள் கொஞ்சல்ஸ் முடிஞ்சிச்சா? பிரியவே மனம் இல்லாத மாதிரி இருக்கே உங்க ரியாக்ஷன்?” தன் பதட்டத்தை மறைக்க பேச்சை துவங்கியபடியே கதவை தாழிட்டாள் இனியா.

“ரொம்ப வருத்தமோ அவன்கூடவே இருக்கேன்னு?” இதயன் அவள்புறம் திரும்பி புருவம் உயர்த்தி அவள் அகத்தை படிப்பது போலக் கேட்க,

 

Advertisement

[the_ad id=”6605″]

Advertisement

 

 

முகத்தை சுருக்கியவள், “வருத்தம்னு சொல்ல முடியாது, ஆனா லைட்டா பொறாமை வருது.” என்றாள் உண்மையை மறைக்காது. தினமும் காலையும், இரவும் இதயனின் கை கால்களில் எண்ணை தடவி நீவிவிட்டு குளியல் போட சொல்லியிருக்க, இன்பன் அந்த பொறுப்பை தனதாக்கிக்கொண்டான். நானே செய்கிறேன் என்று சொல்லிப் பார்த்தாள் தான் ஆனால் அழுத்தம் கொடுத்து உன்னால் நீவிவிட முடியாது என்று இன்பன் அந்த பொறுப்பை அவளிடம் ஒப்படைக்காமல் தானே செய்ய, தாலிவாங்கிக்கொண்டு உரிமை வந்தபின்னோ சுணங்கியது இனியாவின் மனம்.

Advertisement

அவளின் அகம் படித்தவன் கைகளை அவள் புறம் நீட்டி அவளை அழைக்க, நடுக்கம் குறைந்திருந்த அவனின் கரத்தினுள் தன் கரம் பொருத்தி அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

“இப்படி உணர்வுகள் இல்லாது மரத்து போயிருக்கும் போது வெளிப்பார்வைக்கு தெரிவதைவிட பலமடங்கு உபாதை உள்ளுக்குள் இருக்கு இனியா. உன்னிடம் நான் இதெல்லாம் சொல்லியதில்லை ஆனால் இனி நீ இதெல்லாம் தெரிஞ்சிக்கணும்…” என்று நிறுத்தியவன் விழிகளை தாழ்த்தி, குரலை சன்னமாக்கி, “தலைக்கு கீழே எதுவுமே இல்லை என்கிற மாதிரி தான் தோணும். இயற்கை உபாதை வந்தால் கூட எனக்கு தெரியாது, என்னால உணரவும் முடியாது. டாக்டராக நோயாளியை பார்க்கும் போது தெரியாத கூச்சம், எனக்குனு வந்த பிறகு தெரிந்தது. எல்லாமே இன்னொருவர் துணை கொண்டு தான் செய்யனும் ஆனால் இதை இன்னொருவர் வந்து பார்த்தால் தான் தெரியும். டயப்பர் தான் யூஸ் செய்யணும். என்னக்குள்ளே என்ன நடக்கும்னு எனக்கு அறிவியல் பூர்வமாக தெரிந்தாலும் அனுபவப்பூர்வமாய் உணரமுடியாது. என்னுடைய அனைத்து தேவைகளுக்கும் இன்பன் தேவைப்பட்டான்.” 

மேம்போக்காய் பார்ப்பதற்கு பேச, நடக்க என்று எதுவும் செய்யமுடியாது, உணர்வுகளை இழந்து  படுக்கையிலே விழுந்த நிலையற்றவன் என்று அவனைப்பற்றி நினைத்திருக்க அவனுக்குள் சங்கடங்கள் பல இருந்திருக்கும் என்று அவன் மொழிகொடுத்து சொன்னே பின்னே தான் விளங்கியது அவளுக்கு. வெளியில் எதையுமே சொல்ல முடியாமல், தன் கஷ்டங்களை பகிர்ந்துகொண்டு ஆறுதல் தேடக்கூட முடியாமல் எவ்வளவு அலைபுரிந்திருப்பான் என்ற நினைப்பே அவன் மீதுள்ள அன்பை பெருக்கியது. இதையெல்லாம் மறக்கும்படியான வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் என்று துடித்தது மனது.

“இதெல்லாம் எதற்கு இப்போ? பேசாமல் தூங்குங்க. எண்ணை தேய்த்து இப்போ தான் குளியல் போட்டிருக்கீங்க, நல்லா தூக்கம் வரும்.” என்று அவனை தடுத்து அவன் நெற்றியை மென்மையாய் வருட, கண்களை மூட மறுத்தவன்,

 

[the_ad id=”6605″]

 

 

“நீயும் தூங்கு,” என்று அவளை கையை விடுத்து அவளை படுக்கச்சொல்ல, அமர்ந்தபடியே நெளிந்தவள், “நீங்க தூங்குங்க முதலில்.”

அவளின் செயல்கள் விசித்திரமாய் தோன்ற, குழப்பமுற்றவன், “ஏன்? என்ன பிரச்சனை?”

தயக்கம் இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு, “நான் புடவை மாத்திட்டு வந்து தூங்குறேன், நீங்க தூங்குங்க,”

“அது மாற்ற எவ்வளவு நேரம் ஆகும்? சீக்கிரம் மாத்திட்டு வா, நாம சேர்ந்தே தூங்குவோம்.”

பார்வை வீச்சில் தயக்கம் குடிகொள்ள அவனை பார்ப்பதை தவிர்த்தவள், “இல்லை… வெளியில் இன்னும் எல்லோரும் இருக்காங்க. இப்போ எப்படி நைட் டிரெஸ் எடுத்துட்டு போய் மாத்திட்டு வரமுடியும்?” இதயன் அறையினுள் சேர்ந்தபடியே குளியறை இல்லை எனும்போது அவள் உடைமாற்ற வெளியே கொல்லைப்புறம் செல்லும் வழியில் இருக்கும் அறையை தான் பயன்படுத்தியாக வேண்டும். அது இப்போது சங்கடத்தை கொடுத்தது.

“இங்கேயே மாற்று,” என்று பட்டென்று சொன்னவனுக்கு அதே வேகத்தில் அவள் தயங்குவதற்கான காரணமும் புரிந்தது.

எல்லாம் சரியாய் நடப்பது போன்றிருக்க, உண்மையில் எல்லாம் சரியாய் பொருந்திடவில்லை. விரும்பினார்கள் தான், திருமணமும் செய்துகொண்டார்கள் தான் ஆனால் இயல்பான புதுமணத்தம்பதிக்கு உரித்தான எவ்வித உணர்வுகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டதில்லை. இளகிய அணைப்பும், இறுகிய பிணைப்பையும் அனுபவித்ததில்லை. சிலிர்க்கும் செல்ல முத்தங்களுக்கு என்றுமே பஞ்சம் தான். அதற்கெல்லாம் காரணமும் இருந்தது. அது இருவருக்கும் வேறுபட்டிருந்தது. இதயனின் உடல்நிலை கருத்தில் கொண்டு அதையெல்லாம் இனியா தவிர்த்திருக்க, அவனுக்கு வேறு காரணங்கள் இருந்தது. அது இருவருக்கும் இடையிலும் மெல்லிய திரையை விரித்திருந்தது.

சங்கடம் காற்றில் கலந்து அந்த அறையில் நிசப்தத்துடன் அரங்கேறிக் கொண்டிருக்க, தொண்டையை செருமியவன் மீண்டும் இனியாவை ஏறுடுத்துப் பார்த்து, “வெக்கத்தை விடுத்து இன்னொரு உண்மையை சொல்லவா இனியா?” என்று விளித்தவன் கண்களில் வலியும், வெம்பலும், அவமானமும் போட்டிபோட்டுக்கொணடு வெளிப்பட்டது. குழப்பமுற்ற இனியா விழிகளாலேயே அவனை பேச தூண்ட,

“என் மனம் நிறைஞ்சவலும் நீதான், உரிமையானவலும் நீதான். இந்த வாழ்க்கையில் என்னோட சரிபாதி என்பதைவிட நீதான் நான். ஆனால் நீயே என் முன்னாடி வந்தாலும் கணவனாய் எனக்கு தோன்றவேண்டிய எந்த ஒரு உணர்வும் தோன்றாது. அது தான் உண்மை.”

“என்னங்க ஏன் இப்போ இதெல்லாம் பேசுறீங்க?” பதறி அவன் வாயடைக்க, தன் இதழ்களில் பதிந்திருந்த அவளது கரத்திற்கு முத்தம் வைத்து, “தம்பதிக்குள் முரட்டுத்தனமாக அதீத உணர்ச்சிகள் தோன்றினாலும் ஆபத்து தான் தோன்றாமல் இருந்தாலும் ஆபத்து தான்.”

 

[the_ad id=”6605″]

 

 

“இதெல்லாம் யோசிச்சு பார்த்துதான் நான் காதலிச்சிருப்பேன்னு நினைக்கிறீங்களா?”

“இல்லை தான். ஆனால் நீ இதை தெரிஞ்சிக்கணும் இனியா. இப்போது இல்லையென்றாலும் வெளியில் பார்க்கும் விஷயங்களை வைத்து இன்னும் சில நாள் கழித்து உனக்கு சந்தேகமும் ஏக்கமும் வரலாம். அப்போ நீ தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத. கொஞ்ச நாளுக்கு இதெல்லாம் பொறுத்து தான் ஆகணும். இது எல்லாம் தற்காலிகம் தான்.” இன்பனையும், யுக்தாவையும் மனதில் வைத்து அவன் பேச, இறுதியில் நம்பிக்கையுடனேயே முடித்தான்.

“அப்புறம் எனக்கென்ன கவலை.”

இதனைத் தான் அவளது மனம் எதிர்பார்த்திருந்ததோ! இயல்பான பேச்சுக்கள் இருந்தாலும் திரை ஒன்று இருவருக்கும் இடையில் இருப்பது போன்று தோன்றிய உணர்வு அவனது பேச்சில் மங்கிவிட, தெளிவுற்றவள் அவனருகில் ஒருக்களித்து படுத்து அவனை அணைத்து, அவனது கரத்தையும் எடுத்து தன் மீது சுற்றி போட்டுக்கொண்டாள்.

தன் தோளில் முகம் புதைத்திருக்கும் இனியாவை நோக்கி தலையை திருப்பியவன் கிசுகிசுப்பாய், “புடவை மாத்தலையா?”

“அலுப்பா இருக்கு, தூக்கமும் வருது.” என்று பதிலுக்கு கிசுகிசுத்தவள் அவனை ஒண்டிக்கொள்ள,

“அதற்குள்ளா? இப்போ நல்லாதானே இருந்த?”

“ஏதாவது சொன்னால் உடனே லெக்சர் எடுத்து என்னை அலுப்பாக்கிடுறீங்க.” என்று அவள் தூக்கத்தின் பிடியில் சிக்கி மென்மையாய் இதழை மட்டும் அசைக்க,

“அடிங்க… நான் பேசுறது லெக்சர் எடுக்குற மாதிரி இருக்கா?” முறுவல் அவனது வதனத்தை ஆக்கிரமித்திருக்க கை அவளை அடிப்பது போல ஓங்கியது.

ஓங்கியிருந்த அவன் கைகளை பிடித்திழுத்து தன் மேலே போட்டுகொண்டவள், “அதில் சந்தேகம் வேற இருக்கா உங்களுக்கு? பேசாம தூங்குங்க,” என்று மிரட்ட,

அவளை உசுப்பியவன், “ஏய் இனியா இங்கே பாரேன் ஒரு நிமிஷம்.” 

அவன் தோளிலிருந்து தலையை மட்டும் நிமிர்த்தியவள் என்ன என்பது போல பார்க்க,

“இந்த ஆறு வருடத்தில் இன்பன் எனக்காகனு நிறைய விட்டுக்கொடுத்திருக்கிறான். அவனுக்கு பிடிச்ச இந்த வாழ்க்கையிலும் எனக்காக சமரசம் செஞ்சிப்பானோனு தோணுது, நீ உன் பிரெண்டிடம் பேசேன். நானே இன்பனிடம் பேசிடுவேன், ஆனால் நான் பேசினால் அவன் வருத்தப்படுவான்.”

“அவ்வளவு தானே, நான் பேசுறேன் அவகிட்ட. நீங்க தூங்குங்க,” என்று அவன் நெஞ்சத்தை தட்டிக்கொடுக்க, அவள் நெற்றியை முட்டியவன்,

“இன்னைக்கு நமக்கும் முதல் ராத்திரி தான்,” 

“அதுக்கு என்ன டாக்டர் சார்?” சவாகாசமாய் அவன் மேலேயே புரண்டு வாகாய் அவன் முகம் பார்க்க ஏதுவாய் ஒண்டிக்கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“இன்னைக்காவது ஒரு கிஸ் கொடுப்பேன்னு பார்க்கிறேன், ஒண்ணுத்தையும் காணோம்…”

“நீங்க பத்தியத்தில் இருக்கீங்க டாக்டர் சார் மறந்துடாதீங்க…” என்று அவள் கிளுக்கிச் சிரிக்க,

“பத்திய சாப்பாட்டு சைவம் தான், அதையாவது கொடேன். பிடிவாதமா காதலித்து கல்யாணம் கட்டிக்கிட்டவ நீதான் ஆனால் நீ செய்றதும் அங்கே ஹெல்பர் செய்றதும் ஒண்ணா தான் இருக்கு.”

“என்ன அந்த ஹெல்பர் இந்த மாதிரி பக்கத்தில் வந்து கட்டிபிடிச்சிக்கிட்டா தூங்குறாரு? சும்மா அளந்துவிடக் கூடாது…” என்றவள் அவனை இறுக அணைத்துக்கொள்ள அவனால் எங்கே அதை உணரமுடியும்? 

அவன் பாறையென அசையாது இருக்க அவளுக்கு உணர்ச்சிகள் இருக்கிறதே… எதிர்வினையின்றி தானே அவனை நெருங்கி முதலடி எடுத்துவைக்க பெண்மை தடுத்தது. ஆசை இருந்தாலும் அது ஒருநிலைக்கு மேல் முன்னேறவிடவில்லை. ஆசை நிராசையாகும் போது ஏக்கம் பிறகுமென அவன் முன்னெச்சரிக்கையாக விஷயத்தை தெளிவுபடுத்தியதும், சஞ்சலங்களுக்கு அவள் மனதில் இடம்கொடுக்கப் போவதில்லை என்று மீண்டுமொருமுறை திடம் பூண்டாள். 

“நீ கொடுக்க வேண்டாம். கொஞ்சம் மேலே ஏறி படி நானே எடுத்துக்குறேன்,” என்று குறும்புடன் அவள் நெற்றியில் இதழை உரசி பேசிட, கூசி சிலிர்த்தவள் தன் முகத்தை அவன் கழுத்தினுள் புதைத்துக்கொண்டாள். இந்த நேரத்திற்கு இதுவே போதுமானதாக இருக்க, இறுக கண்களை மூடிக்கொண்டவள் அவன் சீண்டியபோது கூட அசையவில்லை. எவ்வித தடங்களுமின்றி இருவரும் காதலை உணர்ந்து பரிமாறிக்கொள்ளும் நிலைக்கு வந்தவுடன் தான் எல்லாம் என்று முன்னரே முடிவு செய்திருக்க இப்போது இதயனும் அதையே வேறுவிதமாய் சொல்ல அவள் மனம் நிம்மதியடைந்து உடல் உறக்கத்தை தழுவியது. 

அவனைத் தூங்கச் சொன்னவள் முதலில் தூங்கிவிட அவனுக்குத்தான் தூக்கம் வரவில்லை. மனதில் ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள். முன்பு எப்படியோ இப்போது வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது? இனியாவை எப்படி பார்த்துக்கொள்ளப் போகிறோம் என்ற கேள்விகள் பூதாகரமாக தெரிய, அதற்கான விடையும் எப்போதும் போல அவளிடமிருந்தே அவள் பேச்சிலிருந்தே கிடைத்தது.

***

“மாம்ஸ் போனமுறை சொன்னது தான். அடுத்தமுறை சென்னை வரும் போது இந்த எக்ஸ்ட்ரா எல்லாம் இல்லாமல் நீங்களே எழுந்து நடந்து வரணும்,” சென்ற முறை போலவே இன்றும் ரயில் கிளம்பும் முன்னே சக்கரநாற்காலியை காட்டி பேசிக் கொண்டிருந்தான் இனியன்.

இனியனின் பேச்சில் அவனருகில் நின்றுகொண்டிருந்த கீதாவின் முகம் சுருங்கி பின் மீண்டது. மகளும் மகனும் இதயன் விஷயத்தில் தங்களுக்குத் தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கிறார்களோ என்று தான் தோன்றியது அவருக்கு.

“உன் அக்காவைவிட உன் ராசி நல்லாயிருக்கு, உன் வாய் முகூர்த்தம் பலிக்குது. பேசாமல் நீயும் எங்ககூட வந்துறேன்,” வழக்கம் போல இனியாவை வம்பிழுத்து இனியனுடன் பேசிக் கொண்டிருந்தான் இதயன்.

“நான் வர ரெடி ஆனால் இங்கு சிலருக்கு வயிறு எரியுமே,” ஓரப்பார்வை இனியா புறம் இருக்க, அவனுக்கு சளைத்தவனா இதயன்?

“ஜெலுசில் கொடுத்திடலாம்.” என்று அவனும் வம்பிழுக்க,

“உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லை,” என்று தம்பியையும் கணவனையும் கிள்ளிவிட்டு தன் தந்தையிடம் செல்ல,

“பத்திரமா போயிட்டு வா,” என்றதோடு நிறுத்திக்கொண்டார் அவர்.

அவரின் விலகலில் இனியாவின் முகம் கூம்பினாலும் அவர் கோபத்தை குறைக்க எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக யுக்தாவிடம் சென்றாள் அவள்.

“பார்த்து பத்திரமா போயிட்டு வா பேபி. அத்தானையும் பார்த்துக்கோ.”

“அதெல்லாம் நான் இருந்துப்பேன் யுக்தா. நீயும் இனி சந்தோசமா இரு. அவரைப் பற்றி கவலைபடாம ரெண்டு பேரும் ஜாலியா ஒரு ஹனிமூன் ட்ரிப் போயிட்டு வாங்க.” யுக்தா அருகில் இன்பனும் இருக்க, அவனையும் பேச்சில் இணைத்துக் கொண்டாள்.

இன்பனோ நாசுக்காய் அதை மறுத்தான், “அண்ணனும் சரியாகட்டும். நாம நாலு பேரும் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்.”

இதை எதிர்பார்த்தேன் என்பது போன்றிருந்தது இனியாவின் பார்வை, “நாலு பேரும் சேர்ந்து போனால் அது ஹனிமூன் இல்லை,” என்று அவனுக்கு கொட்டு வைத்தவள், “கொஞ்ச நாள் உங்க அண்ணனை பற்றிய கவலையெல்லாம் என்கிட்டே கடனாக கொடுத்துட்டு நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க. உங்க அண்ணனும் அதைதான் ஆசைபடுறார். அவருக்காக நீங்க உங்க ஆசையை சுருக்கிக்கொண்டது போதும்னு நினைக்குறார்.” என்று தீவிரமாய் பேச, மொழி மட்டும் தான் இனியாவுடையது வார்த்தைகள் எல்லாம் இதயனுடையது என்பது இன்பனுக்கு தெளிவாய் புரிந்தது.

மெல்ல சிரித்துக் கொண்டவன், “நீ இப்போ என்னோட அண்ணி மாதிரி பேசுற,” இதயன் விஷயத்தை தவிர்த்து இன்பமும், இனியாவும் வேறெதுவும் பேசிக்கொண்டதில்லை, இருப்பினும் நட்பொன்று சத்தமில்லாமல் அவர்களுக்கிடையில் இருந்தது. 

“அப்போ சரியாத்தான் பேசுறேன்.” என்று இல்லாத காலரை தூக்கிக்கொண்டாள் இனியா.

“அதனால அண்ணி இதை வச்சிக்கோங்க,” அண்ணிக்கு வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்தவன் தன்னுடைய கிரெடிட் கார்டை எடுத்து அவளிடம் நீட்டினான். எதற்கு என்று கேள்வியாய் அவனைக் காண,

“அடுத்த மாத ட்ரீட்மென்ட்கு பீஸ் கட்டணுமே.”

கைகளை பின்னே இழுத்துக் கொண்டவள், “இல்லை வேண்டாம். என்னிடம் இருக்கு நான் பார்த்துக்குறேன்.”

“இதை ஒரு சேப்டிக்கு வச்சிக்கோ,” என்று அவள் கையில் திணிக்க, அவளோ அதை யுக்தாவின் கையில் திணித்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“இந்த பணத்தை திரும்ப வங்கியில் கட்டி வீட்டுக் கடனை அடைங்க. இப்போ என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கு, நகையும் இருக்கு அதை வைத்து சமாளிச்சிக்கலாம்.” இதயனின் மனைவியாகிவிட இப்போது இதயனையும் தாண்டி அவ்வீட்டின் மருமகளாய் பொறுப்பு தானாய் வந்திருந்தது. இன்பன் சொல்லாமலேயே சிவகாமியை நச்சரித்து பணத்தேவையை பற்றி தெரிந்துக்கொண்டாள். சென்ற மாதம் முழுதும் இன்பன் வங்கிக்கு அலைந்து வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறான் என்று தெரிந்ததுமே அதை மறுக்கத்தான் நினைத்தாள். ஆனால் நேரம் இப்போது தான் கிடைத்திருக்கிறது.

“நகையெல்லாம் எதுவும் செய்ய வேணாம். இதை வச்சிக்கோ இனியா, நாம சமாளிச்சிடலாம்.” என்று இன்பன் மீண்டும் அந்த கார்டை அவள் கையிலேயே திணித்தான்.

“நகையை மீட்க முடியவில்லை என்றால் புதிது வாங்கிக்கொள்ளலாம். ஆனால் வீட்டை வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாமே. ப்ராப்பர்டி நம்மிடம் இருந்தாலே தனித்தெம்பு இருக்கும்.” என்பது அவள் கருத்தாக இருக்க, இறுதியில் அவள் வாதமே வென்றது. 

யாருமின்றி யாருக்கும் தெரியாமல் சென்றமுறை கொச்சிக்கு இதயனை அழைத்துச் சென்றிருக்க, இம்முறை அனைவரின் ஆசியுடன் விடைபெற்று இம்முறை திருமதியாக கேரளாவுக்கு புறப்பட்டாள் இனியா உரிமையான தன் இணையுடன்… 

“பிடிவாதம் அதிகம் உன் பிரெண்டுக்கு.” என்று வீட்டிற்கு திரும்பிய பின் யுக்தாவிடம் முணுமுணுத்தான் இன்பன்.

“அதென்ன அங்கே ரயில் நிலையத்தில் அண்ணி இப்போ என் பிரெண்டா?” என்று இனியாவை வைத்து செல்லச் சண்டைகள் வேறு அவர்களிடத்தில்… 

“நாம செய்யறது சரியா இன்பன்? எனக்கென்னவோ நாம வாழ்க்கையை துவங்காம இருப்பது அவங்களை காயப்படுத்துற மாதிரி தோணுது. இன்னைக்கு வீட்டிலிருந்து கிளம்பும் முன்னே ‘என் மேல நம்பிக்கை வைத்து உங்க வாழ்க்கையை நிம்மதியாக வாழ துவங்குங்க, அதுதான் எங்கள் திருமணத்திற்கு நீங்கள் கொடுக்கும் பரிசுனு’ இனியா சொல்லிட்டு போயிட்டா… அத்தானால் நமக்கு கஷ்டம்னு நினைக்குறாங்க.” முகத்தில் குழப்பம் மட்டுமே சூழ்ந்திருக்க, இன்பனின் தோளில் தலைசாய்த்து பேசிக்கொண்டிருந்தாள் யுக்தா.

“நீங்க ரெண்டுபேரும் வந்ததும் எங்களுக்குள்ள இடைவெளி விழுந்தமாதிரி இருக்கு. அவன் சொல்ல நினைப்பதை இனியா மூலம் சொல்லவிடுகிறான்.” 

முன்னர் ஒருநாள் இன்பனின் திருமண விஷயம் கேள்விப்பட்டு  தம்பியின் நேரத்தை அவன் மனைவிக்கு விட்டுக்கொடுத்தாக வேண்டும் என்று இதயன் கவலை கொண்டிருக்க, இனியா வந்ததும் அந்த கவலையெல்லாம் பின்னே சென்றுவிட, இப்போது அந்த கவலை தம்பிக்கு வந்திருந்தது. 

“வாழ்க்கையுடைய யதார்த்தம் இதுதான். இதை நீங்க விலகல் என்று நினைத்தால் அது விலகலாகத்தான் தெரியும். நீங்க, அத்தை, அத்தான் மட்டும் தான் இதுவரை குடும்பமாக இருந்தீங்க, இப்போ நாங்க வந்திருக்கோம். இந்த  குடும்பத்தில் எனக்கும் இனியாவுக்கும் நீங்க கொடுக்க வேண்டிய உரிமையையும் மரியாதையையும் கொடுத்துத்தான் ஆகணும். அந்த உரிமையை அத்தான் இனியாவுக்கு கொடுத்திருக்கிறார், அவ்வளவு  தான். மற்றபடி அவர்  உங்களைவிட்டு விலகிப் போகல. வீட்டுக்கு  மூத்தவரா  இந்த குடும்பத்தை எப்படி வழிநடத்தணுமோ அதை செய்கிறார். அவரால நேரடியாக இப்போ எதுவும் செய்ய முடியல சோ அதையெல்லாம் இனியாவை முன்னிறுத்தி அவள் மூலமாக செய்கிறார்.”  

“அப்போ செயல்படுத்திட வேண்டியதுதான்,” என்று திடுமென துள்ளியவன் யுக்தாவை அணைத்துக்கொள்ள,

“என்ன செயல்படுத்தனும்?” புரியாமல் அவன் அணைப்பினில் இருந்துகொண்டே கேட்டாள் யுக்தா.

“அண்ணன் சொன்னதை,” என்று அவன் பதில் சொன்னதுகூட அவள் இதழினுள் தான்… 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!