Skip to content
Post Views: 1,050
கவிதை 2
வீட்டிற்கு வந்த எனக்கு தூக்கமே இல்லை.
அழுகை தான் முட்டிக் கொண்டு வந்தது…
என்னையே நீண்ட நேரம் கண்ணாடியில் பார்த்தேன்…
Advertisement
‘எனக்கு என்ன தான் குறைச்சல்?’ என்று அடிக்கடி எனக்குள்ளே கேட்டும் கொண்டேன்…
எனது அம்மா தேவகியோ, “என்ன முகம் வீங்கி இருக்கு? எதுக்கு அழுத?” என்று கேட்டும் பார்த்தார்.
நான் பிடி கொடுக்கவில்லை.
Advertisement
‘ஒருவனுக்கு காதல் கடிதம் கொடுத்தேன், அவன் என்னை நிராகரித்து விட்டான்’ என்று சொல்லவா முடியும்?
Advertisement
தூங்க முயன்றேன்.
தூக்கம் வரவில்லை…
என் அலைபேசி அலறியது…
Advertisement
பிரபஞ்சன் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்…
“ஆர் யூ ஓகே?” என்று கேட்டு இருந்தான்.
‘செய்வது எல்லாம் செய்து விட்டு கேள்வியை பார்’ என்று நினைத்தபடி, “ம்ம்” என்று அனுப்பினேன்.
“கால் பண்ணவா?” என்று அடுத்த மெசேஜ்.
என்ன பேசி விட போகின்றான்?
‘எனக்கு உன் மேல் அப்படியான எண்ணம் இல்லை, மன்னித்து விடு’ என்பான்…
அதனை கேட்க நான் அவனுடன் பேச வேண்டுமா? என்கின்ற எண்ணம் தான்…
ஆனாலும் இந்த பாழாய் போன காதல் கொண்ட மனது அவன் குரலை கேட்க என்னை உந்திக் கொண்டு இருக்கின்றதே.
“ஓகே” என்று சொல்ல, அடுத்த கணமே அலைபேசி அலறியது.
எடுத்து காதில் வைத்தேன்.
“என்னடி பண்ணுற?” என்று கேட்டான்…
குரலில் ஒரு அக்கறையும் அன்பும் சேர்ந்து இருந்ததை என்னால் உணர கூடியதாக இருந்தது…
அது என்னுடைய கற்பனையாக கூட இருக்கலாம்.
இந்த குரங்கு மனம் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக யோசித்தே பழகி விட்ட ஒன்று ஆயிற்றே…
“தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தேன்” என்றேன்.
“இப்படி தான் எல்லார் முன்னாடியும் வச்சு கொடுப்பியா?” என்று கேட்டான்…
எனக்கு அவன் பேசப் பேச கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது…
பேச முயன்றேன். குரல் தழுதழுத்தது.
குரலை செருமிக் கொண்டே, “அது தான் பிடிக்கலை ல” என்று சொல்ல, அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் என்னை மொத்தமாக நிலை குலைய வைத்து இருந்தது…
ஆம், “நான் எப்போ பிடிக்கலன்னு சொன்னேன்?” என்று கேட்டு விட்டான்…
அந்த கேள்வியே என் நிதானத்தை தொலைக்க வைத்து இருக்க, எனக்கு சரியாக தான் கேட்டு இருக்கின்றதா? என்று எனக்குள் ஒரு தடுமாற்றம்…
என்னுடைய குரங்கு மனதை நான் எப்போதும் நம்புவது இல்லை.
இப்படி தான் அவன் என்னை அவன் அடிக்கடி பார்ப்பது போன்ற பிரம்மையை இந்த குரங்கு மனம் எனக்கு கொடுத்து, இன்று காதலை சொல்லும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தது…
என்னிடம் மௌனம்…
அவனுக்கு என்னை பிடித்து இருக்கின்றதா? நம்ப முடியவே இல்லை…
“ஹரிணி” என்றான்…
“ம்ம்” என்றேன்…
“நாளைக்கு தனியா பேசலாமா?” என்று கேட்டான்…
காதலை சொல்ல போகின்றனா? என்று என்னென்னவோ கற்பனைகள்…
என் குரங்கு மனதை இழுத்து பிடித்தேன்…
அதீத கற்பனைகள் தான் நமக்கு ஏமாற்றத்தை உண்டாக்குமே…
என்னால் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளும் மனநிலை இப்போது இல்லை…
“ம்ம்” என்று சொன்னேன்…
“லெக்ஸர்ஸ் முடிய, காலேஜ் பின்னாடி இருக்கிற பார்க்குக்கு வா” என்று சொன்னவன் ஒரு கணம் நிறுத்தி, “தனியா வா” என்றான்…
இப்போது தான் புரிந்தது…
அவனுக்கு தேவை, தனியுரிமை…
நான் அதனை இன்று கொடுக்கவே இல்லையே…
“ஓகே” என்றேன் மென் குரலில்…
“குட் நைட்” என்றான்…
இன்னும் கொஞ்ச நேரம் அவன் குரலை கேட்டால் என்ன? என்று தான் தோன்றியது.
என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு, “குட் நைட்” என்றேன்…
அலைபேசியை வைத்து விட்டான்…
அப்படியே அலைபேசியை அருகே போட்டு விட்டு, கட்டிலில் மல்லாக்க படுத்து இருந்தேன்…
இதுவரை இருந்த ஒரு அழுத்தமும் வலியும் மொத்தமாக நீங்கி இருந்தது…
அவனுக்கு என்னை பிடித்து இருக்கிறது என்று மட்டும் என்னால் உணர கூடியதாக இருந்தது.
அதனை அவன் வாயால் கேட்க வேண்டும்…
என் கற்பனையிலேயே எத்தனை நாட்கள் தான் வாழ்வது?
அவனை தான் தினமும் யோசித்துக் கொண்டே தூங்குவேன்…
கனவில் அவனுடன் நாலைந்து குழந்தைகளும் பெற்று விட்டேன்…
அவனை நினைத்தாலே அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும்…
என்னென்னவோ நினைவுகள் தொன்றும்…
முத்தமிடுவது. கட்டி அணைப்பது என்று இன்னும் சொல்ல முடியாத கற்பனைகளுக்குள் எமது வாழ்க்கையை அடக்கிக் கொண்டேன்…
அந்த கற்பனைகள் எல்லாமே நிஜத்தில் நடந்து விட வேண்டும் என்கின்ற அவா எனக்குள்…
இப்போதும் அவன் நாளை என்ன பேசுவான் என்று கண்ட மேனிக்கு யோசித்துக் கொண்டே தூங்கிப் போனேன்…
அடுத்த நாள் காலையும் விடிந்தது.
அழகான சிவப்பு நிற சுடிதாரை அணிந்து கொண்டே கண்ணாடி முன்னே நின்று இருந்தேன்…
இன்று அவனுடன் பேச வேண்டும் என்று ஒரு பதட்டம்…
சாதாரண நாள் என்றால் அவனுடன் சகஜமாக பேசி விடுவேன்…
இன்று என் காதலை சொல்லி, அடுத்த நாள் ஆயிற்றே…
சின்ன கருப்பு பொட்டை நெற்றியில் வைத்துக் கொண்டே, விதம் விதமாக முடியை சரி செய்தேன்…
கடைசியாக பின்னல் தான் என் முகத்துக்கு பொருத்தமாக இருந்தது…
எனக்கு தான் இடையை தாண்டிய முடி ஆயிற்றே…
எளிமையாக, அதே நேரம் நேர்த்தியாக ஆயத்தமாகி காலேஜுக்கு கிளம்பியும் விட்டேன்…
லெக்சர் ஹாலில் வந்து அமர்ந்து விட்டேன்…
எனக்கு அருகே தான் நர்மதா தான் அமர்ந்து இருந்தாள்.
“என்னடி ஓகே யா?” என்று கேட்டாள்.
அவளிடம் பிரபஞ்சன் பேசியதை பற்றி சொல்ல கூடாது என்று நினைத்துக் கொண்டேன்…
சொன்னால் அவள் வயித்தெரிச்சல் ஏதாவது செய்து விடும் என்று குழந்தை தனமான கற்பனை என்னிடம்…
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்…
ஒரு பெருமூச்சுடன், “எல்லாம் கடந்து தானே ஆகணும்” என்றேன்…
எனது நடிப்பு திறமையை நினைத்து எனக்கே ஆச்சரியம் தான்…
இப்படி பாட்டி மார் போல, தத்துவம் பேசும் என்னை நினைத்து, எனக்கே சிரிப்பு வேறு…
அவளுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே, என் விழிகள் லெக்சர் அறையின் வாசலில் தான் படிந்தது…
என்னவன் தான் வந்து கொண்டு இருந்தான்.
நீல நிற ஷேர்ட் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து இருந்தான்…
தலை முடியை கையினால் கோதிக் கொண்டே, நண்பர்களுடன் பேசியபடி நடந்து வந்தான்…
அவனில் இருந்து என்னால் ஒரு கணம் கூட விழிகளை அகற்ற முடியவில்லை…
அது அவனுக்கும் புரிந்து இருக்க வேண்டும்…
ஒரு கணம் என்னை பார்த்தான்…
அக்கணத்தில் இருவரின் விழிகளும் கலந்து கொள்ள, என்னுடைய இதய துடிப்பே நின்று விட்ட உணர்வு தான்.
ஆனாலும் நான் சலிக்காமல் அவனை தான் ரசனையுடன் பார்த்தேன்…
அவன் தான் தாடி மீசைக்குள் புன்னகையை ஒளித்து வைத்தபடி பார்வையை திருப்பிக் கொண்டான்…
அப்படியே என்னை கடந்து சென்று பின்னால் அமர்ந்து கொண்டான்…
அவன் தான் படிப்பில் விண்ணன் ஆயிற்றே…
எங்கே இருந்தாலும் அவனுக்கு எல்லாம் புரியும்…
என்னை போல ஓரளவு சுமாரான படிப்பாளி அல்ல…
அவன் என்னை ஈர்த்து எடுக்க, இந்த புத்திசாலி தனமும் முக்கிய காரணம்…
அவனை நினைக்க நினைக்க, எனக்குள் ஒரு பரவசம்…
எப்போது வகுப்பு முடிந்து அவனை சந்திப்போம் என்கின்ற ஆவல் எனக்குள் உண்டாகி இருந்தது…
“நேத்து லவ் லெட்டரா டா கொடுத்தா?” என்று அவன் நண்பர்கள் பேசியது என் காதில் விழுந்தது…
என்னை கிண்டல் செய்ய தான் பேசுகின்றார்கள் என்று தெரியும்…
“கொஞ்சம் சும்மா இருங்கடா” என்று அதட்டல் அவனிடம் இருந்தது…
இந்த கிண்டல்கள் தான் அவன் நேற்று நான் கொடுத்த மடலை வாங்காமல் போக முக்கிய காரணம் என்று தெரிந்தது…
நான் தான் பைத்தியக்காரி போல, அத்தனை பேர் முன்னால் வைத்து காதல் கடிதத்தை கொடுத்து இருக்கின்றேன் என்று இக்கணம் தோன்ற, எனது பையை தொட்டு பார்த்துக் கொண்டேன்…
அதற்குள் தான் அவனுக்கு எழுதிய மடல் இப்போதும் இருந்தது…
இன்று கொடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சற்று நேரத்தில் விரிவுரையாளர் வந்து விட, வகுப்பும் ஆரம்பமானது…
எனக்கு தான் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை…
என் உடல் தான் இங்கே இருந்தது…
மனம் என்னவோ அவனை தான் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தது.
ஆனால் அவன் கவனம் முழுவதும் படிப்பில் தான்…
கேட்கும் கேள்விகளுக்கு எல்லாமே பதில் சொன்னானே…
ஒரு வழியாக அடுத்தடுத்து வகுப்புகள் நடந்து நிறைவு பெறும் நேரமும் வந்து சேர்ந்து விட்டது…
நேரத்தைப் பார்த்தேன். மாலை மூன்று மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது…
நான் எதிர்பார்த்திருந்த தருணமும் இது தானே…
வகுப்பு முடிந்த பிறகும் நான் எழுந்து கொள்ளவில்லை…
“வாடி கிளம்பலாம்” என்றாள் நர்மதா…
“இல்ல எனக்கு வேலை இருக்கு” என்றேன்…
“என்ன வேலை?” என்று என்னை ஆராய ஆரம்பித்து விட்டாள்.
எனக்கு கோபமாக வந்தது…
காட்டிக் கொள்ளவும் முடியாத நிலை…
கண்களை மூடி திறந்து கொண்டே, “சொன்னா கேளுடி” என்று சற்று அதட்டலாக சொல்ல, “பிரபஞ்சன் வேணாம்னு சொன்னதால சூசைட் எல்லாம் பண்ணிடாதே” என்றாள்.
என்னை பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கின்றாள் என்று தான் தோன்றியது…
“அட ச்ச, அவன் வேணாம்னா ஊர்ல வேற ஆம்பிளைங்களா இல்லை?” என்று கேட்டேன்…
வாய் வார்த்தைக்கு கேட்டது தான்…
என்னால் அவன் இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியாது… அன்றும் இன்றும்…
என்னை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு நர்மதா கிளம்பி விட்டாள்.
நானும் கொஞ்சம் ஆள் அரவம் அடங்கியதும் மெதுவாக எழுந்து, கல்லூரிக்கு பின்னால் இருக்கும் பூங்காவை நோக்கி சென்றேன்…
அவன் நேரத்துக்கே வந்து விட்டான் போலும்…
அங்கே பெஞ்சில் அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தான்…
தயக்கம், நடுக்கம், மயக்கம் என்று எத்தனையோ உணர்வுகள் போட்டி போட, தட்டு தடுமாறி அவனை நெருங்கினேன்…
விழிகளை உயர்த்தி என்னைப் பார்த்தான்…
முதல் எல்லாம் சாதாரணமாக, “டேய் பிரபஞ்சா” என்று பேசுவேன்…
இன்று வார்த்தைகள் வர மறுத்தன.
இதயத்தின் ஓசை ஓங்கி ஒலித்தது…
கஷ்டப்பட்டு சிரிக்க முயன்றேன்…
அவனோ என்னை பார்த்துக் கொண்டே, அலைபேசியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டே எழுந்து நின்றான்…
ஆறடி உயரம் அவன்…
வளர்ந்து இருந்த தாடி மீசை என்று அவன் குணாதிசயத்துக்கு ஏற்ற போல அவன் தோற்றமும் இருந்தது.
கையை நீட்டினான்… புரியாமல் பார்த்துக் கொண்டே அவன் கையை பற்றிக் கொள்ள போனேன்…
“அட ச்ச, நேத்து கொடுத்ததை இப்போ கொடு” என்றான்…
எனக்கு பெருத்த அவமானம் வேறு…
அவசர குடுக்கையான என்னை நானே திட்டிக் கொண்டு, பையினுள் கையை விட்டு மடலை எடுத்து கொடுத்தேன்…
அவனை பார்க்காமலே கொடுத்தேன்…
“இப்போ எதுக்கு அநியாயத்துக்கு வெட்கபட்டுட்டு இருக்க?” என்று திட்டிக் கொண்டு தான் மடலை வாங்கினான்.
நேற்று வரை அவ்வளவு இயல்பாக இருந்த நான், திடீரென்று புது மண பெண் போல நடந்து கொண்டால் அவனுக்கு எரிச்சலாக தானே இருக்கும்…
எனக்கே நான் செய்வது அதிகப்படி என்று தெரியும்.
ஆனால் இந்த வெட்கமும் கூச்சமும் புது உணர்வும் என்னை படாத பாடு படுத்திக் கொண்டல்லவா இருக்கிறது…
மடலை திறந்து வாசித்தான்…
“ஐ லவ் யூ” என்று ஒரே ஒரு வரி தான் எழுதி இருந்தேன்…
“கவிதை கூடவா உனக்கு எழுத தெரியாது?” என்று கிண்டலாக கேட்டான்…
இப்போது அவனை ஏறிட்டு முறைத்த நான், “வர்றத தானே எழுத முடியும்” என்று சொல்ல, அவனோ அழகாக பற்கள் தெரிய புன்னகைத்தவன், “அது இருக்கட்டும், இதெல்லாம் தனியா கொடுக்கணும்னு தெரியாதா?” என்று அடுத்த கேள்வி என் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்டான்…
“தனியா எங்க மீட் பண்ணுறது?” என்று கேட்டேன்…
“ஃபோன் இருக்கு தானே, மெசேஜ் பண்ணி இருக்கலாமே, அவ்ளோ பேர் முன்னாடி கொடுக்கிற?” என்று திட்டும் விழுந்தது…
எனக்கு அவனிடம் பிடித்தது இது தான்…
எதார்த்தமாக பேசுவான்…
உருகி உருகி எல்லாம் பேச தெரியாது…
போலியாக எல்லாம் நடிக்க தெரியாது…
மனதில் இருப்பதை உடைத்து நேர்த்தியாக பேசும் திறமை அவனுக்கு உண்டு…
அதே சமயம், யாரையும் காயப்படுத்தவும் மாட்டான்.
அவன் சொன்னது நியாயம் தான்…
நான் தான் முட்டாள் தனமாக நடந்து இருந்தேன்…
“சாரி” என்று சொன்னேன்…
தனது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து, ஏதோ மடலில் எழுதினான்…
ஆசையாக இருந்தது…
எட்டி பார்க்க முயன்றேன்…
சட்டென உயர்த்தி பிடித்தவன், “உன் கிட்ட தானே கொடுக்க போறேன், எதுக்கு அவசரப்படுற?” என்று கேட்டுக் கொண்டே பேனாவினால் என் தலையில் ஒரு தட்டு தட்டினான்…
“ஸ்ஸ்” என்றபடி அவனை முறைத்தபடி விலகி நின்றேன்…
இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, என்னிடம் மடலை நீட்டியவன், “இதெல்லாம் ஹாஸ்டல் ல வச்சு இருக்க முடியாது. பசங்க பிரிச்சு மேய்ஞ்சிடுவாங்க, நீயே வச்சுக்கோ” என்றான்…
பிரித்து பார்க்க முயன்றேன்…
“இப்போ இல்லை, வீட்டுக்கு போய் பார்த்துக்கோ” என்று அதட்டினான்…
“ரொம்ப தான்” என்று திட்டி விட்டு, நடந்து செல்ல, அவனோ, “இடைல பிரிச்சு பார்த்தா கொன்னுடுவேன், வீட்டுக்கு போய் தான் பார்க்கணும்” என்றான்…
குரலில் கிண்டல் தேங்கி நின்றது…
மறைமுகமாக என்ன எழுதி இருப்பான் என்று புரிந்தது…
இதழ்களுக்குள் வெட்கம் வேறு குடி கொண்டு இருந்தது…
தலையை திருப்பி அவனை பார்த்துக் கொண்டே, “பை” என்றேன்…
என்னையே ஆழ்ந்து பார்த்தவன், “பை” என்று சொன்னான்…
அவன் குரலில் என்றும் இல்லாத, ஒரு மென்மையை என்னால் உணர கூடியதாக இருந்தது.
அவன் விழிகளில் என்றும் இல்லாத, ஒரு ஆர்வத்தை இன்று கண்டு கொண்டேன்…
ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன்…
அவன் கொடுத்த மடலை பிரித்து பார்க்க வேண்டும் என்று அப்படி ஒரு ஆர்வம்…
விறு விறுவென அறைக்குள் சென்றேன்…
என் அம்மா ஏதோ கேட்டார்…
அதற்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை…
கதவை தாழிட்டுக் கொண்டே, பையை திறந்து மடலை எடுத்தேன்…
அதில் எனது “ஐ லவ் யூ” என்னும் வசனத்துக்கு கீழே, “எனக்கும் கவிதை எல்லாம் எழுத தெரியாது, ஐ டூ லவ் யூ” என்று ஒரு வரி எழுதி இருந்தான்…
அது அவனுக்கு சாதரண வரியாக இருக்கலாம்…
எனக்கு அது பொக்கிஷம் ஆயிற்றே.
எதிர்பார்த்தது தான்…
அழுகை வந்தது…
சிரிப்பு வந்தது…
சிரித்துக் கொண்டே, கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது…
என்னை இவ்வளவு நெகிழ வைக்கின்றதே அவன் வார்த்தைகள்…
அந்தளவு எனக்குள் அவன் ஊடுருவி இருக்கின்றானா? நினைக்க நினைக்க அப்படி ஒரு பரவசம்…
அப்படியே வெட்கம் தாளாமல் தலையணைக்குள் முகத்தை புதைத்துக் கொண்டேன்…
அந்த புது உணர்வு என்னை என்னென்னவோ செய்தது…
“மேம், யோர் ஃபூட்” என்னும் விமான பணிப்பெண்ணின் குரல் கேட்டு தான் நிதானத்துக்கு வந்தேன்…
அந்த நினைவுகள் இப்போது என் இதழ்களில் மென் புன்னகையை தோற்று வித்து இருக்க, “ஐ வாண்ட் சிக்கன் ரைஸ்” என்று சொன்னேன்…
அந்த பெண்ணும் உணவை கொடுத்து விட்டு சென்று இருக்க, உணவை பிரித்த எனக்கு, சட்டென சற்று முன்னர் இருந்த பரவசம் வடிந்து இருந்தது…
நினைவில் இருந்து நிஜத்துக்கு வந்து விட்டேன்…
அவனுக்கு தான் திருமணம் ஆக போகின்றதே.
மீண்டும் மனதில் அழுத்தம் தோன்ற, உணவை மூடி வைத்து விட்டு, மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன்…
error: Content is protected !!