Skip to content
Post Views: 2,680
கீதம் – 5 
நீண்ட நெடிய நாட்களுக்கு பின் அன்று தான், தன் வீட்டின் டைனிங் ஹாலில் குடும்பமாக அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருந்தனர். ஆரவ் மாலை மங்கும் வேளையில் தான் ஊரில் இருந்து வந்திருந்தான். எங்கே சுற்றி திரிந்தாலும் சொந்த வீட்டில் இருக்கும் போது மனதில் ஏற்படும் நிறைவை வர்ணிக்க வார்த்தைகளே இல்லையே. உள்ளே நுழைத்ததில் இருந்து பேசி, சிரித்து பிள்ளைகள் இருவரும் ஒன்றாய் இருந்ததை கண்டு மகிழ்ந்தபடி, இரவு சமையலும் முடித்து, புன்னகையுடன் வலம் வந்தார் சாவித்ரி. ரவியும் பணி முடிந்து அப்போது தான் வந்து, சாப்பிட அமர்ந்தார்.
Advertisement
” போன வாரம் ஆட்டுன மாவுல இட்லி.., ரெண்டு நாள் முன்னாடி வச்ச கோழி குழம்பு.., நேத்து காலையில் பிசைஞ்சு வச்ச சப்பாத்தி மாவுல போட்ட பூரி.., அதுக்கு நேத்து நைட் வச்ச குருமா.., நேத்து வச்ச சாம்பார்.., இன்னைக்கு வச்ச பொங்கல்..,” இப்படி ரம்யா அடுக்கி கொண்டே போக,,
” என்ன மேடம், திருப்பி சொல்லுங்க..,” என்றப்படி கையில் சூடாக பொரித்து எடுத்த வடையோடு வந்தார் சாவித்ரி.
Advertisement
Advertisement
” அதுவாம்மா.., இந்த மாதிரி மிஞ்சி போன சாப்பாடு எல்லாம் இங்கே இருக்காது. சுட சுட வெண் பொங்கல், சாம்பார், தேங்காய் சட்னி, வடைனு அண்ணண்ட சொல்லி முடிக்கிறதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க என் தெய்வமே..,” என பச்ச பிள்ளை முகம் காட்டும் பெண்ணின் தலையில் செல்லமாக கொட்டி.,
” வர வர வாய் நைல் நதி மாறி நீண்டுட்டு போகுது. கொஞ்சம் அடங்குடா குட்டிமா..,” என அவரும் அவளை வாரினார்.
Advertisement
” இந்த வாய் மட்டும் இல்லைனா உன்னை….என ஆரவ் பேச்சை முடிக்கும் முன்
” காக்காய் தூக்கிட்டு போயிருமா? ” ரம்யா விளிக்க
” சே.. சே.., அப்படியெல்லாம் காக்காய் தூக்கிட்டு போகாது…. ஏன்னா…, ” என பேச்சை நிறுத்தி நமட்டு சிரிப்புடன் ” அது வடையை நீ எடுத்து தின்னுருவேன்னு அதுக்கே தெரியும். அதுவும் இங்கேயே விட்டுட்டு போயிரும்..,” என்ற மகனின் பதிலில் சிணுங்கிய மகளை பார்த்து சிரித்தனர் பெற்றோர்.
” அண்ணா, நீ இல்லாமல் இந்த அம்மா என்னை எங்கேயும் கூட்டி போகாம எவ்ளோ டார்ச்சர் பண்ணாங்க தெரியுமா? ” அன்னையை பார்த்து கொண்டே அவள் பேச.
” அப்போ நந்து கூட சேர்ந்து சுத்துனது எல்லாம் என்ன கணக்குமா..? ” என புருவம் உயர்த்தி ரவி கேட்க,
” அப்பா, அவங்க என் பிரண்ட். அது எல்லாம் கணக்குல வராது. நீங்க வந்திங்களா? இல்லையே அதான் கோபம். எனக்கு தெரியாது. இந்த வாரம் நம்ம எல்லாரும் சேர்ந்து எங்கேயாவது போகணும்.., ” ரம்யா பிடிவாதம் செய்ய
” ஓகேடா. இந்த வாரம் புல்லா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து உனக்கு எங்கே போகணுமோ போவோம். அப்பா பிசி. அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமென..,” தமயன் கூற சிறிது யோசித்து, சந்தோசமாக தலை ஆட்டினாள்.
” நான் கிளினிக் நெஸ்ட் வீக் வரேம்பா. எனக்கும் பழைய பிரண்ட்ஸ் எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாகுது. அப்புறம் டைம் கிடைக்காது..,” என தந்தையிடம் பணியில் அமர்வதை இன்போர்ம் செய்தான்
” இந்த மாதிரி நாம பேசி சிரிச்சி, ஒண்ணா சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு கண்ணா.,” தன்னை விட்டு பிரிந்து இருந்த மகனின் தலை கோதி ஆசையாய் நோக்கினார்.
” கொஞ்ச நாள் இனிமேல் இங்கே தான் இருக்க போறேன். அப்புறம் என்னம்மா? “
” ஏன்டா சொல்ல மாட்ட. ரெண்டு வருஷம் எட்டி கூட பார்க்கல. தனியா தவிச்சது எனக்கு தானே தெரியும். திருப்பி பாரின் வேற போக போறேன்னு சொல்ற ..,” மகனை பிரிய வேண்டுமே என்ற வருத்தம் அவர் குரலில்
” படிப்பு விஷயமா தானே போறான். அதுக்கென்ன பண்ண முடியும்., விடும்மா., அடுத்து உன்கூட தானே இருக்க போறான்.., கொஞ்சிட்டே இரு,
யாரு வேணாம்னு சொன்னா.” ரவி மனைவியை சமாதானம் செய்திட முனைந்தார்.
அப்போ காலையில் ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா ஊரை சுத்துறோம். ஜாலி , அடுத்து ஸ்கூல் போய்ட்டு வந்து எங்காவது கூட்டிட்டு போ. ஓகேயாண்ணா..”
” டபுள் டன். என் செல்ல குட்டி கூட தான் நாளைக்கு இருக்கப்போறேன். ” அவளோடு நேரம் செலவிட போகும் சந்தோசம் அவன் கண்ணிலும் தெரிந்தது.
*********
ஒரு வாரம் சென்ற நிலையில் தன் மேல்படிப்பு விஷயமாக சில வெளி வேலைகளை முடித்து விட்டு வந்தவன், மாடி ஏற போகும் வேளையில் கேட்ட வார்த்தையில் சட்டென திகைத்து நின்றான். ” ஐ லவ் யூடா.., செல்ல குட்டி..,” என இனிமையாய் ஒரு குரல் கேட்டது. முதுகு காட்டி ரிஸ்ப்ஷனில் நின்று இருந்த பெண்ணின் முகத்தை காண முடியவில்லை. யூனிபார்ம் கோட் அணிந்து இருந்ததால் அவள் தங்களிடம் வேலை செய்யும் பெண் என கண்டு கொண்டான். வேலை நேரத்தில் யாரிடம் இப்படி பேசுகிறாள் என அவளை நோக்கி கோபமாக செல்ல தொடங்கும் போதே, அடுத்த வார்த்தையில் பட்டென சிரிப்பு வந்து விட்டது.
“அக்காட்ட வாங்க பட்டு குட்டி., அம்மாட்ட இருந்தா ஊசி போட்டு விடுவாங்க. நம்ம ரெண்டு பேரும் அந்த பக்கம் ஓடி போயிரலாம்..,” என அழும் குழந்தையை சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள்.
அந்த வாண்டோ, “போக்கா.., இப்படி சொல்லி தான் அன்னைக்கும் கூட்டிட்டு போய் ஊசி போட்ட. நான் உன் கூட வரவே மாட்டேன். யூ ஆர் சீட்டிங் மீ. போ லூசு…” ஏமாற்றிய கோபம் மழலையின் முகத்தில்.
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அக்காட்ட.. சாரி கேளு.,” என அவன் தாய் சொல்ல,
“விடுங்கக்கா நம்ம செல்லம் தானே, நீ சமத்து குட்டி தானே, அழுகாம போய் ஊசி போடுங்க பார்ப்போம் . அக்கா சாக்லேட் தரேன்..” என அடுத்து பேசி கொண்டே இருந்ததை பார்த்தவன் , “ஒரு நிமிஷம் நம்மளையே ஷாக் ஆக்கிட்டா. நல்ல வேலை ஒன்னும் திட்டல. விளையாட்டு பொண்ணா இருக்காளே..,” என புன்னகையோடு மேலே சென்றான்.
“என்ன அண்ணா, தனியா சிரிச்சிட்டே வர்ற. முத்தி போச்சா..,”
“ஏய் வாலு, கீழே ஒரு பொண்ணு பேசுவதை நினைச்சு சிரிச்சுட்டு வந்தா, என்னையே கலாய்ப்பியா ..,”என தலையில் தட்டினான்.
“ஐ, நந்தும்மா லீவு முடிஞ்சி அதுக்குள்ள வந்தாச்சா, என்கிட்டே சொல்லவே இல்லை. இன்னைக்கு இருக்கு அவங்களுக்கு..”
“நான் யாருன்னே சொல்லல, அதுக்குள்ள எப்படி பெயரை சொல்ற..?”.
“அதான் சிரிச்சுட்டு வர்றியே, எதாவது ஜாலியா அவங்க தான் கலாட்டா பண்ணுவாங்க. அதுலேயே தெரிஞ்சுருச்சு..” நந்துவை தெரிந்த பாவனையில் அவள் பேச .
“அவங்க ஆண்ட்டி தானே, இது சின்ன பொண்ணு மாறி இருந்தாங்க. நான் முகத்தை பார்க்கல..,” குழப்பத்தில் அவன் கேட்க
“ஐயோ அண்ணா, நந்துமா காலேஜ் படிக்கிற அழகான தேவதை. அவங்கள போய் ஆன்ட்டின்னு சொல்லுற, ஹா., ஹா.., என்கிட்டே சொன்ன மாதிரி யாருகிட்டயும் சொல்லிறாதே, நிஜமாவே லூசு மாதிரி பார்ப்பாங்க..” கண்ணை சிமிட்ட
“நீங்க சொல்றது எல்லாம் வச்சி அவங்கல சின்ன பொண்ணுன்னு நினைக்க தோணல, பெரியவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். இதான் சாக்குன்னு என்னை லூசு சொல்ற, உன்னை …, ” என தலையில் கொட்டினான்.
“அவங்க என்னோட செல்ல குட்டி தெரியுமா, எவ்ளோ அழகா இருப்பாங்க. அவங்களைப்போய் ஆண்ட்டின்னா கோபம் வராதா, நிஜமா நந்துமாவை பத்தி யாருகிட்ட நீ தப்பா சொன்னாலும் நம்ப மாட்டாங்க. திட்ட தான் செய்வாங்க. அம்மா மட்டும் இருந்தா அடி கொடுத்துருப்பாங்க , தப்பிச்சுட்ட..”
“விட்டா பேசிக்கிட்டே இருப்பியே, “, என்றபடி தன் அறைக்கு சென்றவன் அவளை பற்றி தான் யோசித்தான். ஏனென்றால் இது வரை அவன் நினைத்து இருந்த பிம்பம் வேறு. அவளை பற்றி கேட்ட விஷயத்தை பற்றிய மீண்டும் நினைத்து பார்த்தான்.
ஊரில் இருந்து வந்த நாளில் இருந்து அவன் கேட்டு கொண்டு இருக்கும் பெயர் நந்தும்மா தானே. அவனது வீட்டையே தலைகீழாக மாற்றி இருந்தாள். முன் பக்கம் முழுவதும் அழகான மலர் தோட்டம். அறைகளின் உள்ளே பெயின்டிங் , லைட்டிங் , சின்ன சின்ன கலை பொருட்கள் என வித்தியாசமா இருந்தது. பணி முடிந்து சோர்வாக வீட்டுக்கு வருபவர்கள் மனதை புத்துணர்ச்சியாக்கும் அனைத்தும் அங்கே குடி கொண்டு இருந்தது.
சாப்பாடு விஷயத்திலும் நிறைய மாற்றம். அதிக காரம், வெரைட்டி என வெளியே வாங்கி சாப்பிடுவது குறைந்தே விட்டது. எந்த பழைய உணவு பொருளும் டேபிள் மேல் வைக்கப்படவில்லை.. சுட சுட அப்போதே தயாரிக்கப்பட்ட ஹெல்த்தி உணவு வகைகளே இருந்தது. மொத்தத்தில் வாங்கி வந்த பிரிட்ஜ் இப்போ தான் பொருட்கள் மட்டுமே பாதுகாக்கும் இடமாக உள்ளது. ஏனென்றால் இருவர் தானே என சாவித்ரி சோம்பல் பட்டு அடிக்கடி சமையல் செய்ய மாட்டார். தந்தை வேலை முடிந்து வரும் போது இரவு நடுநிசி ஆகிவிடும். அந்த நேரம் யார் சமைக்க முடியும் என மொத்தமாய் சமைத்து வைத்து விடுவார். தேவைக்கேற்ப சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். இவர்கள் ஹாஸ்டல் தானே படித்தார்கள். லீவு நாளில் மட்டுமே வருவது. அதுவும் ஊர் சுற்றி பார்ப்பதிலேயே போய் விடும். பின் எங்கே சமையல். ஓய்வெடுக்க வரும் இல்லமாக மட்டுமே இருந்த குடில் மனதை வருடும் உணர்வினை கொடுத்தது. அத்தனை நேர்த்தி. முன்பும் சாவித்திரி நீட்டாக தான் வைத்து இருப்பார். ஆனால் ரசிக்க தோன்றாது. இப்போதோ அத்தனையும் ரசிக்க வைத்தது. எப்படி இந்த மாற்றம் என கேட்டதற்கு ” நந்துமா தாண்டா எல்லாத்தையும் அழகா மாத்தி வைச்சா. இதெல்லாமே அவள் தான் ஆர்டர் போட்டு பார்த்து பார்த்து வாங்கி வச்சா.., எனக்கும் சொல்லியும் கொடுத்தாள்.., ” வந்த முதல் நாளே தாய் அவளை பற்றி கூறி விட்டார்.
ரம்யாவை பற்றி கேட்கவே வேண்டாம். அவனோடு வெளியே சுற்றிய பொழுதில் அவள் பேசிய வார்த்தையில் பாதி அவளின் நந்துமாவை பற்றியதே. தன் அன்பை தேடாமல் தவித்த தங்கைக்கு நல்ல உறவாய் அவள் இருந்து உள்ளாள். படிப்பு விஷயம் தொட்டு, உடை, விளையாட என அனைத்திலும் அவளின் உதவிக்கு துணை நின்றது நந்துவே. தங்கள் வீட்டின் அங்கமாகவே அவள் உள்ளதை அறிந்து கொண்ட பொழுதில், தன்னை அறியாமலேயே அவன் மனதில் உயர்ந்து நின்றாள்.
**
பின் மறுநாள் காலையில் வீட்டின் மொட்டை மாடியில் நடை பயின்று, யோகா செய்ய மேலே போனவன் திகைத்து நின்றான். ஐந்தாவது தளத்தில் இருந்து பார்த்தால் ஊரின் மொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம் என்பதாலேயே அவனுக்கு இந்த இடம் மிகவும் பிடித்தது. இன்றோ அங்கே அழகான மாடி தோட்டம். வித விதமான பூக்கள், காய்கறிகள், பழங்களை தரும் சிறு மரங்கள் என பூந்தோட்டமாய் காட்சியளித்தது. எப்படியும் நூற்றுக்கும் மேற்பட்ட செடிகள் இருக்கும். நோயாளிகளும் மெதுவே நடை பயின்றப்படி இருந்தனர். ஆளின்றி வெறிசோடி இருக்கும் மாடியா இது என்றே அவன் திகைத்து நின்றது. அவனை அறிந்த சிலர் புன்னகைத்து பேச ஆரம்பித்தனர்.
” வணக்கம் தம்பி, நல்லா இருக்கீங்களா, எங்கே உங்களை பார்க்கவே முடியல? இங்கேயே வர்ரதில்லையோ ? என்ன படிக்கிறிங்க ? “என மூச்சு விடாமல் கேள்வி கணைகளை தொடுத்தார்.
” நான் நல்லா இருக்கேன் அங்கிள். மெடிக்கல் காலேஜில் அவ்வளவா லீவு எடுத்துட்டு வர முடியாது. அதான் ரெண்டு வருசமா சரியா இங்கே வர முடியல..,” என பேசி கொண்டே நடை பயின்றனர்.
” நீங்களும் டாக்டருக்கு படிக்கிறது ரொம்ப சந்தோசம் தம்பி. இப்போ நம்ம ஹாஸ்பிடல்க்கு நிறைய மவுசு. நல்லா மெயின்டயின் பண்றாங்கனு சுத்துல இருந்து நிறைய பேர் வர ஆரம்பச்சிட்டாங்க. உங்க காலத்திலும் இது தொடர்ந்து நடக்கணும்பு ..,” என பேச்சு வாக்கில் அனைத்தையும் கூறினார்.
அவரின் பேச்சில் அவன் புரிந்து கொண்டது நந்துமா என்ற பெண்ணின் உழைப்பு தான் இந்த தோட்டமும், கிளினிக் பெயரும் தொடர்ந்து உயர காரணம் என்பது. அவரின் மீது இன்னுமே மதிப்பு உண்டானது. அவரை சந்திக்க வேண்டிய ஆவலை தூண்டியது.
ஆனால் இன்றோ அவர் ஒரு காலேஜ் படிக்கும் சிறு பெண் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. ” இன்டெரெஸ்ட்டிங். அவங்களை பார்த்து பஸ்ட் தேங்க்ஸ் சொல்லணும். நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. எப்படி இருப்பாங்களோ என அவளை சந்திக்க ஆவலாய் காத்து இருந்தான்.
அவன் அவளை பற்றி யோசித்து கொண்டு இருந்த வேளையில், கிளினிக்கில் நந்துவோ அடுத்த நடை பெற வேண்டிய கேம்ப் பற்றி பேசி கொண்டு இருந்தாள்.
” சார், பக்கத்துல காரியாபட்டியில நிறைய பேருக்கு மருத்துவ உதவி தேவைபடுதுன்னு போன் வந்தது. உங்களுக்கு பிரீ டைம் கிடைக்கும் தேதியில் கேம்ப் பண்ண சொன்னாங்க. எப்போ பண்ணலாம் சார்., ” காலேஜ் சென்று விட்டு வந்தவள், நேரே இங்கே தான் வந்து இருந்தாள். முகம் சோர்வாக காணப்பட்டாலும், லீவில் இருந்தும் பணி என்றால் நேரம் காலம் பார்க்காமலே உடனே வந்து விடுவாள்.
” எந்த டேட் வேணும்னாலும் பிக்ஸ் பண்ணலாம். ஆரவ் இருக்கான். உங்களோட அவன் ஜாயின் பண்ணிக்குவான். கார்மெண்ட்ஸ் ஹெட்கிட்ட பேசி மெடிசின் அரெஞ்ச் பண்ண சொல்லிரு. அப்புறம் Dr.. முருகேசன், Dr. இந்துமதிக்கு கால் பண்ணி இன்போர்ம் பண்ணிரு. இந்த வாரமே பண்ணுற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு சொல்லு. நெஸ்ட் வீக் சர்ஜரி நிறைய பிக்ஸ் பண்ணி இருக்கேன். நர்சிங் வேற யாராவது வந்தாலும் நல்லா இருக்கும். உனக்கு ஹெல்ப்க்கு ஆரவ்வை கூப்புட்டுக்கோ. நாளைக்கு இருந்து டூட்டி ஸ்டார்ட் பண்ரான். ஓகேயா. எல்லாம் செட் பண்ணிட்டு எனக்கு இன்போர்ம் பண்ணுடா. “
” ஓகே சார். நாளைக்கு வீட்டுல தானே இருப்பேன். எல்லாம் முடிச்சிட்டு சொல்றேன். ” மடமடவென வேலைகள் அடுக்கி கொண்டே போனாலும், கை தன் பாட்டிற்கு குறிப்பேட்டில் எழுதி கொண்டே, அவளின் கண்கள் அவரை கவனித்து கொண்டு இருந்தது.
*******
error: Content is protected !!