Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 8

புது மஞ்சள் புது தாலி

அத்தியாயம் 8.1

          பவித்ரா நன்றாக பூர்ணாவோடு ஒட்டிக்கொண்டாள். எதற்கும் பூர்ணா தான். இப்பொழுது கொஞ்சம் தெளிவாக இருந்தாள் பெண். முகத்தில் வாட்டமும், சோர்வும் காணாமல் போயிருக்க தந்தையோடும் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.

         வேலுக்கு தான் மகள் தன்னை விட்டு தள்ளி நிற்பது போல் ஒரு தோற்றம். ஏது ஒன்று என்றாலும் தன்னையே எதிர்பார்க்கும் மகள் இப்பொழுது எல்லாம் தனியே செய்து கொள்கிறாள். உறங்குவதற்கு, உடை அணிவதற்கு, சாப்பிட, தலைக்கு எண்ணெய் வைக்க, இரவில் கழிவறை செல்ல என்று எதற்கும் பூர்ணாவோடு அல்லது தனியாகவோ செய்கிறாள் தந்தையை பார்க்கவில்லை.



Advertisement

         வேலுக்கு தான் கை பொருள் இழந்த தவிப்பு. அவன் வாழ்வே பெண் தானே. பூர்ணா விட்ட அரட்டலில் தான் அமைதி ஆனான்,

    “ ஏலே! வேலு, உம்ம மவள கட்டி குடுக்காம வீட்டோட வச்சுக்க போறியா? கிறுக்கு பயலே ஒவ்வொண்ணுக்கும் சுணங்குவிய, பொட்ட பிள்ளைக்கு ரெண்டு வீடு தாம்லே! இன்னொரு வீட்டுக்கு போறவ உம்ம கையிலே இருக்க முடியுமா?” என்று சொல்லியும் வேலு முகம் தெளியாததை கண்டு,

            பெருமூச்சு விட்டாள் பூர்ணா. அவன் மனம் புரிந்தது, இருந்தும் என்ன செய்ய? பெண் பிள்ளை வயது பெண் சங்கோஜம், சங்கடம், எச்சரிக்கை உணர்வு, தள்ளி பழகும் எண்ணம் எல்லாம் தன்னாலே தோன்றும். ஒன்றும் சொல்வதற்கில்லை என்றாலும் புரியவைத்தாள் பூர்ணா.

Advertisement

         பெரியாத்தா ஏதோ யோசனையோட சுற்றி கொண்டிருந்தார். பழைய நினைவு மனதை வாட்டியது. மகனை நினைத்து உள்ளம் வேதனை கொண்டது. பிள்ளை பெரிய பெண் ஆகிவிட்டால் தாயின் அவசியம் நிதர்சனமாக தெரிந்தது. எது ஒன்றிற்கும் தானோ, மகனோ நெருங்க முடியாமல் தயங்க தாயாக தாங்கியது பூர்ணா தான். இருந்தும் எவ்வளவு நாளைக்கு…

Advertisement

             பவித்ரா கறை படிந்த உடையை கூட பூர்ணா தான் துவைத்தாள். சிறு முக சுணக்கம், அருவருப்பு எதுவுமில்லை. பெற்ற பிள்ளை என்ற போதிலும் வேலுக்கே தயக்கம் தான். ஆனால் பூர்ணா இத்தனை நாள்களில் ஒரு முறை கூட சுணங்காமல் செய்வது, பெருந்தன்மை மிக்க நல்ல மனிதர்களாகவே தோன்றினர் பெரியத்தாவிற்க்கு.

             வேலு தடுத்தும் பூர்ணா கேட்கவில்லை,

  “ இங்கரு வேலு, அம்மானு கைய காத்து நிக்க எனக்கு ஒன்னும் இல்லாம போச்சு. உம்ம மவள என் புள்ளையா தான் பாக்குறேன். அடுத்தவங்க தீட்டு பார்த்து ஒதுக்கலாம். பெத்தவ பிள்ளைய ஒதுக்கி வைப்பாளா? நான் அப்படித்தான்” என்று ஒரே பேச்சில் முடிப்பவளிடம் என்ன சொல்ல. பின் வேலு தாய், மகள் இடையே வருவதே இல்லை.

Advertisement

             பூர்ணா, பவித்ரா நெருக்கம் பெரியாத்தவை யோசிக்க வைத்தது என்றால் வேலுவின் நடத்தையும் அதற்கு தூபம் போட்டது.

              தன் தாய் கொடியரசியை தவிர வேற யாரிடமும் சோறு வேண்டும் என்று உரிமையாக கேட்க மாட்டான். அவன் மனைவி தாமரை இது எல்லாம் கவனித்து செய்ய மாட்டாள். வேலும் எதுவும் சொல்ல மாட்டான். அவ்வளவு செல்லம் அவள்.

                ஆனால், தற்போது பூர்ணாவிடம் “ ஏட்டி! சோறு எடுத்து வை. சாமிக்கு பூ காஞ்சு போச்சு பாரு மாத்தி வை. நிலக்கடலை கிடக்க புட்டு செய்யேன், ரொம்ப வருசம் ஆச்சு. மண்டை கறி எடுத்து வரவ” போன்ற உரிமையான பேச்சுக்கள் பெரியாத்தவிற்கு கலவையான உணர்வை தோற்றுவிக்க, திடமான யோசனை இல்லாமல் தடுமாறினார்.

               மாலை நேர காபி கடை முடிய, சற்று நேரம் வெளியே உட்கார்ந்து பழங்கதை பேசி கொண்டிருந்தனர் வள்ளியும், பெரியத்தாவும். பூர்ணா பின்கட்டில் கூட்டி பெருக்க பவித்ரா டிவியில் மூழ்கி போனாள்.

              இரவு உணவு வேலையை பூர்ணா தொடங்க, வீட்டினுள் வந்த இருவர் முகமும் உயிர்ப்பு இல்லாமல் இருந்தது. யோசனையாக பார்த்த பூர்ணா ஏதும் சொல்லாமல் சமையல் முடித்து பவியுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.

                 தன் வேலை முடித்து வேலு வர, இரவு உணவு ஆரம்பம் ஆனது. எப்போதும் சலசலவென பேசும் பெரியாத்தா அமைதியாக உண்ண, வள்ளியும் வாய் திறக்க வில்லை. வேலும் தலை நிமிராமல் இருக்க, ஒவ்வொரு முகங்களை பார்த்த பூர்ணா அமைதியாக தன் உணவை முடித்து, அடுப்படி சென்று ஒதுங்க வைக்க ஆரம்பித்தாள்.

                 பவித்ரா உறங்க தன் அறைக்குள் செல்லும் வரை இந்த அமைதி தொடர்ந்தது. அவள் உறக்கத்தை அறிந்த பின்னே பெரியாத்தா வாய் திறந்தார்,

   “எய்யா தங்கம், அந்த சிறுக்கி மவ சீல்பட்டு வந்துருக்காளாம். ஊரே சிரிக்குது. கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட ஆத்தா, அப்பன் கூட சேர்ந்து.. இப்ப அந்த தேனிக்காரி வாயே திறக்கலையாம். மூலையில முடங்கிட்டா” என்று வேலுவிடம் விளக்கம் சொன்னவர் பேச்சில் அதிர்ச்சியாகிய பூர்ணா, வேலுவை பார்க்க..

                அவன் முகம் நிர்மலமாக இருக்க. அதுவே சொன்னது விசயம் முன்பே அவனிற்கு தெரியும் என்று, தன்னை நிலை படுத்திய பூர்ணா,

  “ என்ன அயித்த சொல்றீக , தாமரைக்கு என்ன ஆச்சு?, நல்லா இருக்குறத தான் சொன்னாக…” என்று மனம் பதறி கேட்டவளிடம்.

           “ நீயி எதுக்குடி பதறி அடிச்சு வாரவ, அவ பவுசு அம்புட்டு தான். கூறு இருந்தா ஒழுங்கா பொழைப்பா, அவளுக்கு சீவி சிங்காரிச்சு ஊர சுத்தவே நேரம் போதும்.. பின்ன எங்குட்டு புருசன பார்ப்பா, இந்தா பெட்டிய கட்டி வந்தச்சுல” என்று எகத்தாளம் பேசியவரிடம் ஒரு விவரமும் வாங்க முடியவில்லை.

            பூர்ணா வள்ளியை பார்க்க பெருமூச்சுடன் விவரம் பகிர்ந்தார் வள்ளி, “அந்த பையனுக்கு நிறைய கடனாம் மயிலு, தாமரைக்கு ஒரு விவரமும் தெரியல. தாமரைக்கு போட்ட நகை ஒன்னும் மிஞ்சலயாம். கடன் குடுத்தவக வீடு வர வரை தாமரைக்கு ஒன்னும் தெரியல. பெரிய பஞ்சயத்தாகி பிள்ளைய கூட்டி வந்துடாக…” என்று தனக்கு தெரிந்த தகவலை பகிர்ந்தார் வள்ளி.

              பூர்ணாக்கு அதிகமான கோபம் இருக்கு தான் தாமரை மேல் பவித்ராவை மனதில் கொண்டு, முத்து போல பிள்ளை, தங்கமான புருசன் நல்ல வாழ்க்கையை கேட்பார் பேச்சை கேட்டு கெடுத்து எல்லார் நிம்மதியும் அழித்து வேலுவை விட்டு பிரிந்து சென்றாள்.

              வேலுவை கொண்டு தாமரை மேல் பூர்ணாக்கு சுணக்கம் இல்லை. கணவன் மனைவி பிரிவிற்கு ஆயிரம் காரணம் இருக்கும். வெளியில் நின்று நாம் கருத்து சொல்ல முடியாது. ஆனால், பவித்ரா பெற்ற மகளை ஒதுக்க மனம் எப்படி வந்தது. எவ்வளவோ பெண்கள், பிள்ளைகளுக்காக சரியில்லாத கணவனை கூட அனுசரித்து செல்ல, தாமரை பவித்ராவை விட்டது தான் பூர்ணாக்கு பெறும் கோபம். பிள்ளை இல்லாத அவளுக்கு அல்லவா பிள்ளையின் அருமை தெரியும்.

               பெரியாத்தாவின் வசவு மொழிகள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது, “ எம்மட தங்க மகன் ஊருக்கே வஸ்தாவியா இருந்தவன, வாழ லாயக்கு இல்லனு பஞ்சாயத்து கூட்டி அத்து விட்டாளே.. இன்னிக்கு நீரு வாழ லாயக்கு இல்லனு ஒருத்தன் வெட்டிடான்னே… அந்த அய்யன் கூலி குடுத்துடான் வள்ளி. இது எல்லாம் அவளுக்கு பத்தாது ஆண்டவன் இன்னும் நிறை குடுப்பான். மடி கூட்டி அல்லட்டும்”… என்று வசை பாடி கொண்டிருந்தவரிடம்.

                   வேலு தான் அவரின் சாப சொற்கள் பொறுக்க முடியாமல் அரட்டல் போட்டான்,

    “ ஏத்தா, எதுக்கு இந்த வாயி? நம்ம வீட்டு சங்கதி மட்டும் பாரும். அவங்களுக்கு என்ன நியாயமோ?… ஆவத பேச்சு நமக்கு எதுக்கு படுக்கைய போடும்” என்று சத்தமிட்டு தூங்கும் மகளை ஒரு பார்வை பார்த்து, தன் கயிற்று கட்டிலை தூக்கி கொண்டு வெளி வாசல் வந்து விட்டான்.

              வேலுக்கு தூக்கம் தொலை தூரமானது மனம் வேதனையில் விம்ம கைகள் ரெண்டையும் தலைக்கு குடுத்து மல்லாந்து வானத்தை பார்த்தான். பழைய நினைவு முட்டி மோதி கண்களில் நீர் நின்றது.

               பூர்ணாவும் பெருமூச்சோடு வேலுவை பார்வையிட்டு உள்ளே சென்று விட்டாள். பெரியாத்தாவும் நடந்ததை சொல்லி சொல்லியே தாமரையை வசை பாட, உறங்கும் பவித்ராவின் வலது கன்னத்தில் முத்தமிட்டு அனைத்து கொண்டாள் பூர்ணா. உனக்கு நான் துணை என்பது போல.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!