Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கவிதையாய் ஒரு காதல்

கவிதையாய் ஒரு காதல்- கவிதை 5

கவிதை 5

இப்போது மீண்டும் உணவு பரிமாறப்பட்டது…

எனக்கு பசி சற்று அதிகமாகவே இருக்க, இம்முறை உணவை சாப்பிட்டு  விட்டு கண்களை மூடிக் கொண்டேன்…

சற்று நேரத்தில் சென்னை விமான நிலையத்தையும் வந்து அடைந்து விட்டேன்…



Advertisement

கிட்டத்தட்ட எட்டு வருஷங்களாக இங்கே வரவில்லை…

எல்லாமே புதிதாக இருந்தது.

எனது லக்கேஜுகளையும் எடுத்துக் கொண்டே, ஜேம்ஸை தேடியபடி நடந்து வந்தேன்…

Advertisement

அவன் என்னை நோக்கி கையை காட்டினான்.

Advertisement

முதிர்ச்சியான தோற்றம்…

தாடி மீசை வளர்த்து இருந்தான்…

வீடியோ காலில் பார்த்து இருக்கின்றேன் தான்…

Advertisement

நேரில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தான்…

அவனும் ஐ டி கம்பெனி ஒன்றில் தான் வேலை செய்து கொண்டு இருக்கின்றான்…

அமெரிக்காவுக்கு அழைத்தேன்…

அவனுக்கு அதில் ஆர்வம் இல்லை…

அவனும் பிரபஞ்சன் போல என்று நினைத்துக் கொண்டேன்…

தொந்தரவு செய்யவில்லை…

மென் சிரிப்புடன் அவனை நோக்கி செல்ல, என்னை அணைத்து விடுவித்தவன், “அப்படியே இருக்க, உனக்கு வயசே ஆகாதா?” என்று கேட்டான்…

“டேய் எனக்கு முப்பத்து நாலு வயசு தான் டா” என்று சிரித்தபடி  சொல்லிக் கொண்டே நடந்தேன்…

“அம்மா எப்படி இருக்காங்க?” என்று கேட்டேன்…

“உன்னை பத்தி தான் கவலைபட்டுட்டே இருக்காங்க, நீயும் சரியா பேசுறது இல்லையே” என்றான்…

“பேசுனா என் லைஃபை பத்தியே பேசிட்டு இருக்காங்க, என்ன பதில் சொல்ல சொல்ற?” என்று கேட்டேன்…

அவனிடம் பதில் இல்லை…

மௌனம் மட்டுமே…

எனது உடைமைகளை காரில் ஏற்றிக் கொண்டே, அவன் ஏறி அமர, அவன் அருகே ஏறிக் கொண்டேன்…

அவன் தான் காரை ஓட்டினான்.

” ரொம்ப நல்லா ட்ரைவ் பண்ணுற ஜேம்ஸ்” என்றேன்…

மெலிதாக சிரித்துக் கொண்டே, “அத விடு, உன் லைஃப் இப்படி தானா?” என்று கேட்டான்.

“என் லைஃபை விடு, நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?” என்று கேட்ட நான், ஒரு கணம் நிறுத்தி, “எனக்கு அப்புறம்ன்னு சொல்லாதே, என் வாழ்க்கையை நான் இப்படி தான் வாழ ஆசைப்படுறேன்” என்றேன்…

ஏதோ சொல்ல வந்தவன் பெருமூச்சுடன், “ஒரு மாசம் நிற்ப தானே” என்று கேட்டான்…

“ம்ம், உன் கல்யாணத்தை அதுக்குள்ள முடிச்சா சந்தோசம்… பொண்ணு பார்க்கணும்” என்று சொல்ல, சிரித்துக் கொண்டே, “பொண்ணு எல்லாம் ரெடியா தான் இருக்கு, உன் லைஃப் சரி ஆகணும்னு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்றான்.

எனக்கோ ஆச்சரியம்…

காதலிக்கின்றானா? சொல்லவே இல்லையே…

“நிஜமாவா? யாருடா பொண்ணு?” என்று கேட்க, அலைபேசியை எடுத்து நீட்டினான்…

முகத்திலேயே அந்த பெண்ணின் படம் தான்…

“கூட வேலை பாக்கிறா… பேர் ஸ்டெல்லா… ரொம்ப நல்ல பொண்ணு” என்றான்…

மெலிதாக சிரித்துக் கொண்டே, “அடுத்த வாரமே, அவங்க வீட்டுக்கு போய் பேசலாம்” என்று சொன்னேன்…

“ஹெலோ, உன் லைஃபை முதல் செட்டில் பண்ணனும்” என்றான்…

“இங்க பாரு ஜேம்ஸ்… நான் விரும்பி தான் இந்த வாழ்க்கையை வாழுறேன்… திரும்ப என்னை பிடிக்காத வாழ்க்கை வாழ சொல்லாதே” என்றேன்…

அப்பட்டமான பொய் தான்…

பிரபஞ்சனுடன் வாழுவது பிடிக்காமல் இருக்குமா என்ன?

ஜேம்ஸோ, “பிடிக்காதா? அப்புறம் எதுக்கு இப்போ ஓடி வந்த?” என்று கேட்டான்…

திணறி விட்டேன்…

சரியான இடத்தை பற்றி கேள்வி கேட்டால் நானும் என்ன தான் சொல்வது?

“எல்லாரையும் பார்க்க தான்” என்றேன் வெளியே பார்த்துக் கொண்டு…

அவன் முகத்தை பார்த்து பதில் சொல்ல தான் தைரியம் இல்லையே…

முகத்தை பார்த்து பொய் சொல்லவும் வராதே…

“கல்யாணத்தை நிறுத்த போறியா?” என்று அவனே கேட்டான்…

“இல்லடா அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்… அவர் லைஃபை நான் ஸ்பாயில் பண்ணிட்டேன்… இனியாவது சந்தோஷமா வாழட்டும்” என்று சொன்னேன்.

சிறிய மௌனத்தின்  பின்னர், “என் அக்கா அப்படி பண்ண மாட்டான்னு எனக்கு தெரியும்” என்றான்…

என் மீது எவ்வளவு நம்பிக்கை?

“பொண்ணு யாரு?” என்று தயங்கி தயங்கி கேட்டேன்…

என் இடத்தை  நிரப்ப இருக்கும் பெண் யார் என்று அறிந்து கொள்வதில் எனக்கு அப்படி ஒரு ஆர்வம்…

வலியுடன் சேர்ந்த ஆர்வம்…

“அவரோட முறைப்பொண்ணு தான்… அவங்க ஊர்ல இருக்கிற பொண்ணு… இத்தனை வருஷம் அவங்க அம்மா கேட்டும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு தான் சொல்லிட்டு இருந்தார்… போன வருஷம் அவங்க அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து, பைபாஸ் நடந்திச்சு… அப்புறம் அவங்களுக்காக ஓகே சொல்லி இருக்கார்… பெருசா பொண்ணு படிக்கலன்னு மட்டும் தெரியும்” என்றான்…

என்னிடம் மௌனம்…

என்னால் இத்தனை வருஷங்கள் திருமணம் செய்யாமல் இருந்து இருக்கானே…

நெஞ்சு அழுத்த ஆரம்பித்து விட்டது…

ஆனால் இப்போதும் என்னால் அவனுடன் சந்தோஷமாக வாழ முடியாது…

என்னுடைய லட்சியம் என்னை சந்தோஷமாக வாழ விடாது…

ஆனால் ஒரு தடவை மட்டும் பார்த்து விட வேண்டும் என்கின்ற ஏக்கம் எனக்கு…

எப்படி என்று தான் தெரியவில்லை…

ஜேம்ஸின் திருமண விஷயத்தை முடித்து விட்டு, அதனை பார்க்க வேண்டும்…

பிரபஞ்சன் திருமணம் செய்ய முதல் பார்த்தாக வேண்டும்…

அவன் திருமணத்துக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டும் தானே இருக்கின்றன…

அதனையே யோசித்துக் கொண்டு அமர்ந்து இருந்தேன்.

அவன் மீது இப்படி காதலை கொட்டி தீர்த்து இருக்கின்றேன்…

எங்கே எங்கள் வாழ்க்கை பொய்த்துப்  போனது?

மீண்டும் பழைய நினைவுகள் எனக்குள் ஓடின…

காலேஜில் இரு வருடங்கள்…

வேலை செய்யும் போது இரு வருடங்கள் என காதலித்துக் கொண்டு இருந்தோம்…

அம்மாவுக்கு விஷயம் தெரிய வந்தது…

“அந்த பையன வர சொல்லு, கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்” என்றார்.

நானும் அன்று மாலை பிரபஞ்சனுக்கு அழைத்தேன்…

அவனும் அழைப்பை எடுக்க, “அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு” என்றேன்…

“என்ன சொன்னாங்க?” என்று கேட்க, “கல்யாணத்துக்கு ஓகே  சொல்லிட்டாங்க, உங்கள வரட்டுமாம்” என்றேன்…

அவனோ பெருமூச்சுடன், “அம்மா கிட்ட சொன்னேன்… கொஞ்சம் அவங்க முரண்டு பிடிக்கிறாங்க” என்று இழுக்க, “இல்லன்னு சொல்லிடுவாங்களா?” என்று நான்  பதற, “அப்படி இல்லடி, நான் ஓகே பண்ண வச்சிடுவேன்… அவங்க ரிலிஜன் எல்லாம் பார்க்கிறவங்க, அதனால தான் இந்த தயக்கம்…” என்றான்.

“நான் ஹிந்து தானே” என்றேன்…

“நீ கிறிஸ்டியனா இருந்தா கூட நீ தான் என் பொண்டாட்டி போதுமா?” என்று கேட்டான்…

இதழ்களுக்குள் மெல்லிய சிரிப்பு…

சாதித்து விடுவான் என்று நம்பிக்கை இருந்தது…

“ம்ம், வீட்டுக்கு எப்போ வர்றீங்க?” என்று கேட்க, அவனோ, “ஃபிளாட் எடுத்து இருக்கேன்னு சொன்னேன் ல, அம்மாவை அடுத்த வாரம்  இங்க அழைச்சு வர்றேன்… அப்புறம் வந்து கண்டிப்பா பேசுறேன்” என்றான்…

எல்லாமே திட்டமிட்டு நேர்த்தியாக செய்யும் அவன் திறமையை பார்த்து வியந்து போனேன்…

அவனுக்கான நேரத்தைக் கொடுத்து விலகியும் நின்றேன்…

அதுவரை கல்யாணம்  குழந்தை என்று எனது கற்பனைகளை ஒரு வட்டத்துக்குள் உள்ளடக்கிய என்னை சற்று வெளியே வந்து  யோசிக்க செய்தது அடுத்த நாள் எங்கள் கம்பெனியில் நடந்த அந்த சிம்போஸியம்…

எங்கள் கம்பெனியில் இருந்து அமெரிக்காவில் வேலை செய்ய சென்ற ஊழியர்கள் வந்திருந்தார்கள்…

தங்களது அனுபவம் தொடக்கம் எல்லாமே பேசினார்கள்…

அதிலும் எங்கள் நிறுவனத்தின் பார்ட்னரின் ஒருவரான நிகிதா வேல்முருகன் எனது கவனத்தை அதிகம் கவர்ந்தார்…

அவருக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும்…

நேர்த்தியாக புடவை அணிந்து அழகாக இருந்தார்…

என்ன ஒரு ஆளுமை?

என்னை சட்டென ஈர்த்தும் கொண்டார்…

அவர் பேசுவதை இமைக்காமல் கேட்டுக் கொண்டே இருந்தேன்…

இந்த வயதில் அவர் அடைந்த உயரம் ஏராளம்…

நிறைய கம்பெனிகளை எடுத்து நடத்தும் திறமை உள்ளவர்… நிறைய பிஸினஸ்களை செய்து கொண்டு இருந்தார்.

அவரை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது…

அதே போல வரவேண்டும் என்று எனக்குள் ஒரு ஆர்வம்…

வெறி என்று கூட சொல்லலாம்…

வீட்டுக்கு வந்ததுமே, அவரை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்…

அவரை பற்றி கூகிளில் தேடி தேடி பார்த்து, அவர் கடின உழைப்பையும் திறமையையும் எண்ணி பிரமித்துப் போனேன்…

அவர் போல உயரத்தை அடைய வேண்டும் என்று அன்று தோன்றிய ஆசை சிறுக சிறுக என்னுள் வேரூன்றி அசைக்க முடியாத விருட்சமாக வளர்ந்து நின்றது…

எனக்குள் தோன்றிய இந்த ஆசையையும் லட்சியங்களையும் நான் யாருக்கும் சொல்லவில்லை…

திருமணமான பிறகு பிரபஞ்சனிடம் சொல்லி அவனையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விடலாம் என்கின்ற எண்ணம் எனக்குள்…

பிரபஞ்சனும் அவன் தாயை அவனது ஃபிளாட்டுக்கு அழைத்து வந்து இருந்தான்…

அவருக்கு எங்கள் காதல் விஷயம் பெரிதாக இஷ்டம் இல்லை தான்…

ஆனால் மகன் மீது இருந்த அன்பில் சம்மதித்து இருப்பார் போலும்…

தாயிடம் சம்மதத்தை வாங்கிய பிறகு தான் அவன் எனது வீட்டுக்கே வந்தான்…

கொஞ்சம் பதட்டமாக இருந்தது…

வீட்டில் தான் அம்மாவும் ஜேம்ஸும் நின்று இருந்தார்கள்…

அவன் வண்டி வாசலில் நின்றதும், எட்டி பார்த்தேன்…

அவன் சமாளித்து விடுவான் என்று நம்பிக்கை இருந்தாலும் கொஞ்சம் பதட்டம்  உண்டாவதை என்னால் தவிர்க்க முடியவில்லை…

அவனும் ஹெல்மெட்டை கழட்டி வைத்து விட்டு, தலையை கோதிக் கொண்டே நடந்து வந்தான்…

வாசலில் நின்ற என்னை புருவத்தை ஏற்றி இறக்கி பார்த்தான்…

நானோ, “உள்ளே வாங்க” என்றேன்…

அவனுக்கு எனது தவிப்பை பார்த்து சிரிப்பு வந்து இருக்க வேண்டும்…

சிரிப்பை அடக்கிக் கொண்டே உள்ளே வந்தான்…

அங்கே நின்ற அம்மாவும், “வாங்க தம்பி” என்றார்.

அவரிடமும் இயல்பான பேச்சு…

“எப்படி இருக்கீங்க ஆன்டி” என்று கேட்டவன் ஒரு கணம் நிறுத்தி, “எப்படி இருக்கீங்க அத்தை?” என்று மாற்றினான்…

அவனை ஆச்சரியமாக பார்த்தேன்…

அம்மா என்ன சொல்வார் என்று படபடப்பு…

அவருக்கோ அவன் இயல்பான தோரணை பிடித்து இருக்க வேண்டும்…

“நல்லா இருக்கேன் ப்பா” என்றார் மென் புன்னகையுடன்…

ஜேம்ஸை நோக்கி கையை குலுக்கியவன், “காலேஜ் எல்லாம் எப்படி போகுது” என்று எதார்த்தமாக கேட்டான்…

அவனும், ஒட்டிக் கொண்டான்…

அவர்கள் இயல்பாக பேச ஆரம்பித்து விட்டார்கள்…

எனக்கு தான் கால்களில் நடுக்கம்… 

ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டேன்…

அம்மாவும் பிரபஞ்சனும் எல்லாமே பேசினார்கள்…

அவன் வெளிப்படையாகவே தனது தாயின் தயக்கத்தை பற்றி சொன்னவன், “சீக்கிரம் சரி ஆயிடுவாங்க” என்று நம்பிக்கையும் கொடுத்தான்…

அவனை என் அம்மாவுக்கு பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து போனது…

என்னுடைய பிரபஞ்சனை பிடிக்கவில்லை என்றால் தானே அதிசயம்…

அவனை யாருக்கு தான் பிடிக்காது?

அவன் பேசப் பேச, அவனையே ரசனையாக பார்த்துக் கொண்டு இருந்தேன்…

“அம்மா கிட்ட பேசி, கல்யாணத்தை சீக்கிரமே வச்சுடலாம்… அவ வயசு சரி தானே” என்று சொன்னார் என் அம்மா… அவனும், “கண்டிப்பா அத்தை… அம்மா கிட்ட பேசுறேன்… அதுக்கு முதல் ஒரு நாள் ஹரிணியை வீட்டுக்கு அழைச்சு போறேன்… அம்மா பார்க்கணும்னு சொன்னாங்க” என்று சொல்ல, எனக்கு நெஞ்சே அடைத்து விட்டது…

“சரிப்பா” என்றார் அவர்…

அதனை தொடர்ந்து, “காஃபி போடுறேன், குடிச்சிட்டு போங்க” என்று சொல்லிக் கொண்டே அவர் சமையலறைக்குள் செல்ல, “என்னடி அப்படியே இருக்க?” என்று அவன் என்னை பார்த்து கேட்டான்…

நான் தான் பேயறைந்த போல இருக்கின்றேனே…

“உங்க அம்மா கிட்ட என்ன பேசுறது?” என்று பதறினேன்…

“நான் பார்த்துக்கிறேன்… மனசுல பட்டது எல்லாம் பேசுவாங்க, அர்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றான்…

“ம்ம்” என்று சொன்ன எனக்கு நிஜமாகவே அப்படி ஒரு பயம்…

“எப்போ பார்க்க போறோம்?” என்று கேட்க, “ம்ம், நாளைக்கு நீ ஃப்ரீ யா?” என்று கேட்டான்…

“ஆமா” என்றேன்…

“சரி அப்போ நாளைக்கு வீட்டுக்கு வா” என்றான்…

பெருமூச்சுடன் சம்மதம் சொன்னாலும் எனக்கு பயம் விட்டு போகவே இல்லை.

அம்மாவும் காஃபியை கொண்டு அவனுக்கு கொடுத்து இருக்க, அவனும் குடித்து விட்டு, எல்லோரிடமும் விடை பெற்று புறப்பட்டு இருந்தான்…

அவன் சென்றதுமே எனது அம்மா அவனை புகழ ஆரம்பித்து விட்டார்…

“ரொம்ப நல்ல பையனா இருக்கானே… நல்ல புத்திசாலியும்” என்றார்.

“அதனால தானே லவ் பண்ணி இருக்கேன்” என்றேன் சிரித்துக் கொண்டே…

“சொல்லாம மறைச்சிட்ட பார்த்தியா” என்று அவர் எனக்கு கிண்டலாக திட்ட, “நீங்க பார்த்து இருந்தா கூட இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்க மாட்டீங்க” என்றேன்…

“அதென்னவோ உண்மை தான் டி, மனசு நிறைவா இருக்கு” என்று அவரும் சொல்ல, எனக்கோ அப்படி ஒரு சந்தோசம்…

அவன் எல்லாரையும் கவர்ந்து விட்டானே…

இதற்கு மேல் என்ன வேண்டும்?

ஜேம்ஸ் கூட, “செம்ம ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கார் அக்கா” என்று சொல்லி, என் நெஞ்சில் பாலை வார்த்து இருந்தான்…

அவன் வெற்றி பெற்று விட்டான்…

அடுத்து எனது முறை…

அதனை நினைக்க நினைக்க நெஞ்சே அடைத்து போனது…

என் அம்மாவை போல அல்ல, அவன் அம்மா…

கொஞ்சம் கறாராக பேசுவார்…

எப்படி எதிர்கொள்ள போகின்றோமோ என்று பயம் இப்போதே என்னை சூழ்ந்து கொண்டது…

பயத்துடனேயே அன்று இரவு தூங்கியும் போனேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!