Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

முதலும் முடிவும் நீயென

முதலும் முடிவும் நீயென! 2

அத்தியாயம் 2

விவேக்கின் மனைவி அனன்யா அர்ஜுனின் உடன்பிறந்த அக்கா.



Advertisement

அனன்யா விவேக் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்திருக்க, நீண்ட வருட காத்திருப்பின் பலனாய் இதோ அனன்யாவிற்கு இது ஐந்தாம் மாதம்.

விவேக் தாய் தந்தை கலையரசியும் சந்தானமும் அனன்யாவை தங்கள் வீட்டுப் பிள்ளையாய் கவனித்துக் கொண்டனர். இந்த நேரத்தில் விஜயலக்ஷ்மியின் வரவை தான் அதிகமாய் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அனன்யா.

Advertisement

Advertisement

‘இந்த சமயமும் அவள் வரவில்லை எனில்!’ என்ற கேள்வியே அனன்யாவின் பயத்திற்கு பெரிய காரணம்.

தனது கர்ப்ப காலம் உறுதியான உடனேயே அனன்யா விஜயலக்ஷ்மிக்கு அழைத்து கூறிவிட்டாள் ‘எனக்கு அஞ்சாவது மாசம் வளையல் உன் கையால தான் நான் போட்டுக்கணும். அப்படி முடியாதுன்னா எனக்கு வளைகாப்பே வேண்டாம்னு முடிவா சொல்லிடுவேன்!” என்று மிரட்டி தான் வைத்திருந்தாள் அனன்யா.

Advertisement

விஜயலக்ஷ்மி விவேக் தங்கை. கலையரசி சந்தானத்தின் மகன் மகள்.

இதோ தன் தோள்களில் முகம் சாய்த்திருந்த விஜயலக்ஷ்மியை எண்ணி வருந்திய அனன்யா,

“ஏய்! முன்னாடி வா டி!” என்று ஒரு அதட்டல் வைக்க, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள்முன் சென்று புன்னகைத்து நின்றாள் விஜயலக்ஷ்மி.

“எதுக்கு சிரிக்குற? நான் கோவமா இருக்கேன்” அனன்யா சொல்ல,

“அவளை ஏன் இம்சை பண்ற வந்ததும்?” என்று அனன்யாவின் தலையில் ஒரு கொட்டு வைத்து விவேக் வந்து நிற்க,

“கை வலிக்க போகுது மாமா!” என்று பதறினாள் அனன்யா கணவனை முறைத்து.

“அது லெப்ட் ஹாண்ட் அனு. நான் கொட்டினது ரைட் ஹாண்ட்!” என்று மீண்டுமாய் ஒரு கொட்டு.

“டேய்! உன் அப்பா இன்னைக்கு கோட்டாக்கு இப்பவே ரெண்டு அடி வச்சுட்டார். நியாபகம் வச்சுக்க!” என வயிற்றில் கைவைத்து அனன்யா தீவிரமாய் பிள்ளையிடம் சொல்ல,

“பார்த்தியா சேட்டைய? ஜஸ்ட் கை தான் வச்சேன். எவ்வளோ பேசுறா பாரு!” என்றான் சிரித்தபடி விவேக் தங்கையிடம்.

“குழந்தைங்க தோத்து போய்டும் ண்ணா!” என்று சிரித்து விஜயலக்ஷ்மி கூற,

“அனு! காபி!” என்று கலையரசி அழைத்துவிட்டார்.

“உங்களுக்கு அண்ணி?” 

“எனக்கு வேணும்னா நான் வாங்கிப்பேன். என்ன நீயா தினமும் கூட இருந்து ஊட்டிவிட்ட?” என மீண்டும் கோபமாய் கேட்க, அதற்கெல்லாம் கவலைபடாமல்,

“விடுங்க அண்ணி! இனிமேல் கூட இருப்பேனே! கூடவே இருந்து பார்த்துப்பேனே!” என கொஞ்சினாள் விஜயலக்ஷ்மி.

“அத்தை! நல்ல நாள் பாருங்க. கையோட அஞ்சாவது மாச வளையலை போட சொல்லுங்க. எனக்கென்னவோ இவ லீவ்ல தான் வந்திருப்பானு தோணுது!” 

“அனு! அதெல்லாம் ஒண்ணுமில்ல. நிஜமா அவ வந்துட்டா. நம்ம கூட தான் இருக்க போறா! நீ டென்ஷன் ஆகிட்டு இருக்காத!” என்று அதட்டலும் கனிவுமாய் விவேக் கூற,

“தங்கச்சியை ஒண்ணு சொல்லிட கூடாதே!” என்று கணவனை முறைத்தாள் அனன்யா.

“அண்ணி ரிப்போர்ட்ஸ் எடுத்துட்டு வா ண்ணா! பார்க்கலாம்!” விஜயலக்ஷ்மி கூற,

“ம்ம் பாக்கலாம் டா. நேரமாகட்டும். சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்புறமா பாக்கலாம்!”

“ஆபீஸ் போறிங்களா இன்னைக்கு?” என்ற அனன்யா கணவனையும் அவன் கையையும் மாறி மாறி பார்க்க,

“டிரைவர் வச்சுக்கறேன் அனு!” என்று அவள் தலையில் கைவைத்து அசைத்துவிட்டு கிளம்பி வருவதாக சொல்லி மேலே சென்றான்.

அன்னை தந்தை அண்ணி என அமர்ந்து இத்தனை வருடங்களில் நடந்த கதைகளை எல்லாம் விஜயலக்ஷ்மி பேச, துளியும் இந்தியாவில் தங்கள் குடும்பத்தில் நடந்த கதை என வாயை திறக்கவில்லை மூவரும் அவளிடம்.

அவளை வருத்த விருப்பமில்லை. நடக்க வேண்டும் என்ற விதியின்படி அனைத்தும் நடந்து முடிந்திருக்க, அதை இப்பொழுது சொல்லி அவள் அழுது என யாரும் வாயை திறக்கவில்லை.

ஆனால் வெளிவர வேண்டிய உண்மைகள் அப்பட்டமாய் அனைவரின் பார்வைக்கும் வந்து தானே தீர வேண்டும்?

“என்ன மேன்! காதலியை தரையிறக்கிட்டு வந்தாச்சு போல?” என்று கொட்டாவியை கைகளில் மறைத்து கேட்ட தீபக் கேள்விக்கு, தன் வேலையில் இருந்த அர்ஜுன் திரும்பி அவனை முறைக்க,

“காதலி இல்லையோ! அப்போ எக்ஸ்?” என்றான் யோசித்தபடி தீபக்.

“மாமா உன்னை தான் தேடிட்டு இருக்கார். வர சொல்லவா?” என்று அர்ஜுன் நக்கலாய் கேட்க, அவன் அலைபேசி இசைக்கவும் அதை சைலன்ட்டிற்கு மாற்றினான்.

“சும்மா இரு டா! பதறுது! மனுசனா அவரு? தெரியாம அவர் இருக்கறதை மறந்து குட்டச்சின்னு அவர் தங்கச்சியை சொல்லிட்டு நான் படுற பாடு!” என்று இப்பொழுதும் குலைநடுங்க கூறினான் தீபக்.

“அந்த வாயை கொஞ்சம் அடக்கு. இல்ல என்கிட்டயும் வாங்குவ!”

“அதெல்லாம் சாதாரணம் எனக்கு. எல்லார் அடியும் விவேக் சார் அடி ஆயிடுமா?” என்ற தீபக்,

“உன் மாமா உன்கிட்ட ஹெல்ப் கேட்டாரா என்ன? எதுக்கு அர்த்த ராத்திரில எந்திச்சு ஏர்போர்ட் போன?” என்றான் நிஜக் கோபமாய் தீபக்.

“பைத்தியம் மாதிரி கற்பனை பண்ணாத! மாமாக்கு கையில நேத்து தான் அடிபட்டிருக்கு. தெரியும்ல? அவர் கூப்பிட மாட்டார் டிரைவர் வச்சுப்பார்னு தெரியும். எனக்காக எப்பவும் என்கூட இருக்குறவர்க்கு இது கூட நான் செய்யலைனா எப்படி டா?” என்றவன் லேப்டாப்பை மூடி வைக்க மீண்டும் அழைப்பு அதிர்வு காண்பித்தது அலைபேசியில்.

“அவருக்காக தான் செய்யுறியா?” மீண்டும் அழுத்தமாய் தீபக் கேட்க அதன் அர்த்தம் தெரிந்தவன் பதில் கூறவில்லை.

“சொல்லு டா!”

“என்ன சொல்ல? அவருக்காக என்னவேனா செய்யலாம்!” என்றவன் லேப்டாப்பை பேகில் வைத்து கார் சாவியை எடுத்துக் கொண்டான் கைகளில்.

மூன்றாவது முறையும் அழைப்பு வர, “யார்ரா அது? திரும்ப திரும்ப கூப்பிடுறது?” தீபக் கேட்கவும்,

“ப்ச்! பிரணி தான்! ஈவ்னிங் ஏதோ ஃபன்க்ஷன் இருக்காம். ட்ராப் பண்ண முடியுமானு நேத்தே கேட்டா!” என்றவனுக்கு சுத்தமாய் விருப்பமில்லை. 

“இவ வேற நசநசன்னு!” என்றவனை அர்ஜுன் முறைக்க,

“அப்ப போக வேண்டியது தான மேன்? முறைக்குற?”

“நைட் டைம் ரிட்டர்ன் கஷ்டம்ல அவளுக்கு? அதுக்காக கூப்பிடுறா. எனக்கு அந்த டைம் செட் ஆகாது. அதான் யோசிக்குறேன். உனக்கென்ன? நான் பார்த்துக்குறேன்!” என்றவன் கிளம்ப,

“ஆபீஸ்க்கா போற?” என்றான் தீபக்.

“மாமாவை பிக்கப் பண்ணிட்டு ஆபீஸ் போறேன்! நீயும் உன் ஆபீஸ்க்கு கிளம்பு! மணி என்ன ஆகுது? இப்ப தான் எழுந்துருக்க!” என்றவன் பில்லோவ்வை தூக்கி அவன் மேல் எரிந்துவிட்டு வெளியேறிவிட்டான் அர்ஜுன்.

அர்ஜுன் வீட்டில் கடந்த இரண்டரை வருடங்களாக அர்ஜுனோடு தான் தங்கி இருக்கிறான் தீபக்.

இவர்களின் நட்பு கல்லூரி பருவத்தில் துவங்கி பத்து வருடங்களுக்கு மேலாகி இப்பொழுது மட்டுமல்லாமல் இறுதி வரை தொடரும் அழகான பந்தம்.

கலையரசியுடன் பேசியபடி சமையலறையி நின்றாள் அனன்யா.

“தாளிக்குற வாசனை உனக்கு ஆகாது! சொன்னா கேளு!” என்று கலையரசி கூற,

“இன்னும் தாளிக்க ஸ்டார்ட் பண்ணலை தான அத்தை?” என்றவள், கணவனுக்கான மல்லி சட்னிக்கு தேவையானதை தயார் செய்து கொண்டிருந்தாள்.

ஏதேதோ யோசனையோடு தனதறையில் படுத்திருந்த விஜயலக்ஷ்மி அலுப்பில் உறங்கி இருக்க, இரண்டு மணி நேரங்கள் கழித்து எழுந்து குளித்து உடை மாற்றி வெளியே வரும் பொழுது ஹாலில் விவேக் அலைபேசி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.

“அனு! யாருன்னு பாரு! ஃபைவ் மினிட்ஸ்ல கூப்பிடுறேன்னு சொல்லு!” என்ற அண்ணனின் குரல் மாடியில் இருந்து கேட்கவும் அனன்யா,

“தோ வர்றேங்க!” என்றாள் அவன் பேசுவது கேட்காமலேயே!.

அனன்யா குரல் சமையலறையில் கேட்கவும், தானே மொபைலை கைகளில் எடுத்தாள் விஜயலக்ஷ்மி.

‘அர்ஜுன்’ என்ற பெயர் முகப்பில் வர, தான் வந்த சில மணி நேரங்களில் பெரும் நேரம் அவன் நினைப்பு மட்டுமே மனதை ஆக்கிரமிப்பதை உணர்ந்து விழித்தவள் அழைப்பை ஏற்கவா வேண்டாமா என யோசிக்கும் நேரம் மீண்டுமாய் அவனிடம் இருந்து அழைப்பு.

அதை ஏற்று காதில் வைக்க, “மாமா! நான் பக்கத்துல வந்துட்டேன்… வெளில நிக்குறேன். வந்துடுங்க!” என்றவன் சத்தத்தில் விஜயலக்ஷ்மி அமைதியாய் இருக்க,

“ஹெலோ! மாமா கேட்குதா?” என்றான் மீண்டுமாய்.

“அண்ணா ரெடியாகிட்டு இருக்கிறாங்க போல!” என மெதுவாய் அவள் குரல் கேட்க, சட்டென்ற அமைதி அர்ஜுனிடம்.

சில நொடிகளில் அழைப்பு நின்ற சத்தம் கேட்ட நேரத்தில் இப்பொழுது இன்னும் தெளிவாய் தெரிந்தது விஜயலக்ஷ்மிக்கு அவன் தன்னை தவிர்ப்பது.

“அத்தை! விஜி வந்துட்டா!” என்று விஜயலக்ஷ்மியின் அருகே அனன்யா வந்தவள்,

“உன் அண்ணா கூப்பிட்ட மாதிரி இருந்துச்சே!” என்று கேட்க, 

“போன்…!” என்று அவள் நீட்டவும்,

“போன் கேட்டாங்களா? அப்ப அவங்களே வந்து எடுத்துக்கட்டும். நீ வா சாப்பிடலாம்!” என்று அவளை இழுத்து சென்றாள்.

“இங்க பார்! உனக்காக நைட் நானே செஞ்சு ஊற வச்சுட்டேன்!” என்று குலாப்ஜாமுனை ஒரு கிண்ணத்தில் போட்டு கொண்டு வந்து விஜயலக்ஷ்மி முன் வைத்தாள் அனன்யா.

“ஆமா! பக்கத்துல உக்காந்து ஊட்டிவிட்டு யானை கட்டி தாலாட்டு பாடு தூங்கட்டும்! நாலு போடு போட்டு இப்படி ஊரை விட்டு போக மாட்டியானு அவளை யாராவது கேட்டாதான அவளுக்கு புத்தி வரும்” என்று கலையரசி கேட்டவர் இட்லியை கொண்டு வந்து தட்டில் நிறைத்தார்.

“ஏன் நீங்க கேட்க வேண்டியது தானே? இவ்ளோ இட்லி யாருக்காம்?” என்று பதிலுக்கு கேட்ட அனன்யா, அமைதியாய் இருந்த விஜயலக்ஷ்மி கைகளில் இடித்து சாப்பிடு என கண்ணை உருட்ட, சிறு புன்னகையுடன் ஸ்வீட்டை தன்னருகே எடுக்கும் நேரம் காரின் ஹார்ன் சத்தம்.

“அர்ஜுன் கார் சவுண்ட் மாதிரி இருக்கே!” என்று கூறியபடி அனன்யா வெளியே செல்ல, அலுவலகம் கிளம்பி விவேக்கும் அதே நேரம் மாடியில் இருந்து வந்தவன் வாசலுக்கு சென்றான்.

“அர்ஜுன்! நீ என்ன இந்நேரம் இங்க?” விவேக் கேட்க,

“ஏன்? என் தம்பி வர கூடாதா?” என்று கணவனை முறைத்து,

“ஆமா காலைல வந்துட்டு என்னை பார்க்காம போயாச்சு என்ன!” என்று தம்பியையும் முறைத்தாள்.

“ஏன் டி எல்லார்கிட்டயும் மூஞ்சை காமிச்சுட்டு இருக்க நீ?” என மனைவியை கூறியவன்,

“டிரைவர் சொல்லிப்பேன்னு சொன்னேன்ல? சரி வா சாப்பிட்டு போகலாம்!” என்றான் அர்ஜுனிடம் விவேக்.

“நான் சாப்பிட்டேன் மாமா. நீங்க சாப்பிட்டு வாங்க. பக்கத்துல ஒரு வேலை இருக்கு. முடிச்சுட்டு நானே வந்து உங்களை பிக்கப் பண்ணிக்குறேன்!”

“அது என்ன வேலைனு எனக்கு தெரியும். நீ வா முதல்ல. பரவால்ல! ரெண்டு இட்லி சாப்பிட இடமில்லாம போகாது. வா வா!” என இழுத்துக் கொண்டு அனன்யா வர,

“அனு! அனு!” என கூப்பிட கூப்பிட, வெகுவாய் சிரமப்பட்டு இழுக்க நினைத்தவளுக்கு அந்த கஷ்டத்தைக் கொடுக்க விரும்பாது தானே அவள் இழுப்புக்கு துணை வந்த அர்ஜுனை நினைத்து சிரித்தபடி உடன் வந்தான் விவேக்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!