Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கவிபாடும் கானகமயிலே

வணக்கம்…
அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ❤️

நான் TNWContestWriter039.
கவிபாடும் கானகமயிலே – கதைக்கான டீசரைப் பதிப்பித்து இருக்கிறேன். படிச்சுட்டு மறக்காம உங்களோட கருத்துக்களை சொல்லுங்க.

 



Advertisement

 

கவிபாடும் கானகமயிலே – முன்னோட்டம்.

“ஹாய் ஹலோ வணக்கம்.. உங்க எல்லாரோடவும் இன்றைய நாளைப் பகிர்ந்து கொள்ளப் போவது உங்கள் கவி.

Advertisement

சரி எப்போதும் போல, இப்பவும் ஒரு கவிதையோட நமது நிகழ்ச்சியைத் தொடங்கலாம்.

Advertisement

அகன்ற நீர்நிலை நாடும்
ஆசையில் நீ
சிறுதுளியாய் உனை சேரும் பேராசையில் நான்..
பிணைத்து வைக்கும் முயற்சி முனைப்புடன் விதி
விலக்கி வைத்திடும் ஆவலில்
உற்றார்
உருண்டோடும் காலத்தின் பிடியில் எது நிறைவேறும்
எது நிராகரிக்கப்படும்?’

ரொம்பவே அர்த்தம் பொதிந்த கவிதை. இந்த கவிதைக்கு அர்த்தம் என்ன, இதற்குள் பொதிந்திருக்கும் பொருள் என்ன என்பதை அறிய உங்களோட சேர்ந்து நானும் ஆவலாக காத்திருக்கிறேன். முதல் நேயரை தொடர்பு கொள்வதற்கு முன் உங்களுடன் இன்றைய நாள் பொழுதை பகிர்ந்துகொள்ளும் நான் உங்கள் கவி, இது கவிதையோடு காலம் தரும் பாடம் கற்பிக்கும் நிகழ்ச்சியான கவிதையோடு கலந்திடுவோம்..

முதல் நேயர் இணைப்பில் இருக்காங்க, யாருன்னு பார்ப்போம். ஹலோ யார் பேசுறீங்க?” எப்போதும் போல் தன் காந்தக் குரலாலும், கவிதை வழியாவும் அனைவரையும் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள் கவித்தாரகா.

Advertisement

“ஹலோ நான் கவியழகன் பேசுறேன்..”‌என்ற உரையோடு முதல் நபர் இணைப்பில் வந்ததும் சட்டென்று அவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் வடிந்தது போல் கவிக்கு நெஞ்சம் படபடத்தது.

இமைக்க மறந்தவளது இதழெனும் மலரும், மௌனத்திரையை போட்டுக்கொண்டது. மீண்டும் அந்நபர் தனது பெயரை அழுத்தமாய் குரல்வழி பதிவு செய்ய, மீண்டும் அவ்வார்த்தை உறைந்திருந்தவளுக்கு உயிர்பூட்டியது.

ஒருவாறு அதிர்ந்து அமர்ந்திருந்தவள் லேசாக தொண்டையை செறுமிக் கொண்டு, “சொல்லுங்க மிஸ்டர், க..கவியழகன் எங்க இருந்து பேசுறீங்க?” என்றவளுக்கு நா பிறழ்வு ஏற்பட, சற்றே தடுமாறினாள். அவளைப் போல் உள்ளமும் எங்கோ தடுமாறி தடுக்கி விழுந்தது.

அந்நபரோ மீண்டும், “என்னோட பேர் கவியழகன், ஊட்டியில் இருந்து பேசுறேன்” என்று கூறிட,

“உங்களோட பேசுனதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிங்க. சொல்லுங்க உங்களுக்கு இந்த கவிதையிலிருந்து என்ன விஷயம் புரிஞ்சது, எதை நீங்க இதுல இருந்து தெரிஞ்சுக்கிட்டீங்க? உங்க கருத்தை நீங்க முன் வைக்கலாம்” என்றவளுக்கு எவ்வளவு முயன்றும் குரலில் சற்று பிசிறு தட்டியது.

அந்த அறையில் இருந்த அவளது உடன் பணிபுரியும் தோழனும் சைகை அசைவால் என்னவென்ற கேள்வி எழுப்ப, அவளோ ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்திட,

அவன் விழிகள் அதற்கு முறைப்பை காண்பித்திட்டதும், “அப்புறம் சொல்றேன்” என்று கையசைத்து விட்டு இணைப்பில் இருந்தவனிடம் கவனத்தை செலுத்தினாள்.

“உண்மையாவே இந்த கவிதைக்கான அர்த்தங்கள் நெகழ்ச்சியானவை. ‌ அதேநேரம் ஒருத்தரோட வலியை எந்த அளவுக்கு பிரதிபலிக்குங்கிற விதத்தில இருக்குது”

“அப்படியா அது என்னன்னு சொன்னா எல்லாரும் கேட்போம்” என்று வினவியவளுக்கு பதிலாக,

“நாம ஒரு பொருள் மீது ஆசைப்படுறோம்னு வச்சுப்போம். ஆனா அந்த பொருள் நம்ம மேல ஆசை படாம, நம்மள விட பெருசா ஏதோ ஒரு விதத்துல பெஸ்டா இருக்கிற பொருள் மேல ஆசைப்பட நினைக்குது.

அது ஒரு பொருளா இருக்கலாம், இல்ல மனிதர்களா இருக்கலாம். விதி கூட சேர்த்து வைக்க நினைக்கிது, ஆனா சுற்றி இருக்கவங்க பிரிச்சு வைக்க நினைக்கிறாங்க. கடைசியா ஆசைப்பட்டது கை சேருமா சேராதா? இது தான் இந்த கவிதையோட பொருள்..” என்று கூறி முடித்தார் அந்த நேயர்.

‘வாவ்’ என்று சொல்லத்தான் அவளுக்கு ஆசை ஆனால் அவளால் சொல்ல முடியவில்லை. பின்னர் மெதுவான குரலில், “இப்படியும் கூட அர்த்தம் வச்சுக்கலாம். ஓரளவிற்கு நீங்க சொன்னது சரிதான். முழுக்க முழுக்க காதலுங்கிற பார்வையில நீங்க அர்த்தத்தை கணிச்சுருக்கீங்க.

ஆனா இதே ஒரு நட்பையோ, சகோதர பாசத்தையோ இதோட பொருத்தி பார்த்தா அதுக்கும் அதே அர்த்தம் தான் வரும். இணைப்பில் வந்தமைக்கு மிக்க நன்றி மிஸ்டர். உங்களுக்கு விருப்பமான பாடல் என்னன்னு சொன்னா அதை நாங்க ஒலிபரப்பு செய்வோம்..”

“நிச்சயமா, எனக்கு எங்கே எனது கவிதை பாடல் வேணும்” என்றவன் கேட்டதும், இங்கே இருக்கையில் இருந்த கவி சட்டென்று எழுந்து நின்றே விட, அதே நேரம் அவள் பின்னே நின்று இருந்த மற்றொரு அலுவலக தோழியோ அவள் தோள் பட்டையில் கரம் பதித்து அமர வைத்தாள்.

அதன் பிறகே தான் இருக்குமிடம் உணர்ந்தவள், “நிச்சயமா நீங்க கேட்ட பாடல் சில நிமிடங்களில் உங்கள் செவியை இதமாய் நிறைக்கும்” என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தவள் வேகவேகமாக எழுந்து கழிவறையை நோக்கி ஓடினாள்.

அவள் பின்னே சென்ற அவள் தோழியும் கதவை திறக்க முயல, சட்டென்று கதவை அடைத்து தாழிட்டவள் கரையுடைத்த வெள்ளம் போல், இமை தாண்டிய விழிநீரோடு குலுங்கி குலுங்கி அழத் துவங்கினாள். அவள் வேண்டாம் என்று விலகி வந்த போதும் அவள் செவிகளைத் தேடி வந்து தீண்டியது அந்தப் பாடல்..

@@@@@@@@@@@@@@@@@@@@

“அழகு…அழகு பையா எங்கடா கண்ணா இருக்கிற ஓடி வா, அம்மாவால ஓட முடியல தங்கம். என்னை ஓட வைக்காதீங்க தங்கம். அம்மாக்கிட்ட ஓடி வந்துடுங்க, பாவம் அம்மா ரொம்ப நேரமா உன்னை காணவில்லைன்னு தேடுறேன்டா செல்லம்” என்ற குரல் கேட்டு அங்கிருந்த ஆளுயர சிலையின் பின்னே மறைந்து நின்றிருந்த ஆறு வயது சிறுவன் ஒருவனோ,

“நான் இங்க தான் இருக்கேன் அம்மா” என்ற வார்த்தையோடு தாயின் முன்பு வந்து நிற்க‍, மகனைக் கண்டு விட்ட மகிழ்வில் ஓரடி எடுத்து வைத்த அவன் தாயை அடித்து தள்ளி விட்டு நகர்ந்தது நான்கு சக்கர வாகனம் ஒன்று.

மகனைக் கண்டுவிட்ட மகிழ்வில் பூரிப்போடு நின்றிருந்தவரது முகமும் சரி, தேகமும் சரி நொடியில் ரத்தச் சிவப்பில் குளித்து மூச்சையாகி, நொடி நேரத்தில் அவன் கண்முன்னே சடலமாகவும் மாறி போக,

“அம்மா..” என்ற அறைக்கூவலோடு தாயை நோக்கி ஓட முயன்றவனின் கரத்தை இறுக்கமாய் பற்றியது ஒரு கரம்.

அழுத விழிகளோடு நிமிர்ந்து பார்த்த சிறுவனை, “அம்மா இல்லன்னா என்ன கண்ணா நான் இருக்கேன்பா. உனக்கு அம்மாவா மட்டுமில்ல எல்லாமுமா நான் இருக்கேன் அழகு பையா. அழாத தங்கம்” என்று இதமாய் வெளிவந்தன வார்த்தைகள், அத்தோடு நில்லாமல் அவனைத் தேற்றும் பொருட்டு வாரி அணைத்து நெஞ்சோடு கட்டியும் கொண்டாள் அவ்வார்த்தைகளை உதிர்த்தவள்.

அப்பெண்ணின் தோளில் சாய்ந்தவனும், கரங்களை அவள் கழுத்தில் மாலையாக்கியவாறு, “என் அம்மாவா நீ இருப்பியா?” என்றனது வார்த்தைக்கு முத்தம் ஒன்றை கன்னத்தில் ஒற்றியவள்,

“அம்மாவா மட்டும் இல்ல கண்ணா, இனி எல்லாமுமா நான் இருப்பேன் செல்லம்” என்று உரைத்தவள் அவன் உச்சியில் இதழ் பதித்து, கன்னத்தில் பற்கள் பதிய கடித்து வைத்தாள்.

“ராட்சசி மாதிரி கடிக்கிறா” என்ற கூற்றோடு தானும் அவளது கன்னத்தில் ஈரம் பதிய இதழ் பதித்து விட்டு, கடித்து வைக்க முயல்கையில் சட்டென்று அவனை தூக்கி எறிந்து விட்டு நெடுதுயர்ந்து வளர்ந்து நின்ற மரங்களின் நெருக்கடியின் ஊடே மறைந்தே போகிறாள் அவள்..

அவளின் பாதச்சுவடுகளைப் பற்றி கொண்டு பரிதவித்து நிற்கிறான் சிறுவன். நொடியில் அவனை நோக்கி வீசப்படுகிறது கற்குமியல்கள். கற்களில் இருந்து தப்பிப்பதற்காக ஓடியவனின் கால் எதில் பட்டோ இடறிட, “ஐயோ அம்மா..” என்ற அலறலோடு எழுந்தமர்ந்தவனின் முகம் முத்து முத்தாய் வியர்வைத் துளிகளைத் தாங்கி இருந்தது.

நொடிகள் நிதானித்து தான் கண்டது கனவு என்று அறிந்தவனது முகம் இயல்பை தொலைத்தது. எப்போதும் இருக்கும் சிறு புன்னகையும் எங்கோ ஓடிச் சென்று ஒளிந்து கொள்ள, இறுக்கத்தை சுமந்தவாறு எழுந்து கண்ணாடி முன்பு நின்ற போது அவன் கரமானது அனிச்சையாய் கன்னத்தை தடவியது அவள் நினைவில்..

@@@@@@@@@@@@@@@@@
“சார்…”

“ம். சொல்லுங்க சாகர்”

“உ.. உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்துருக்காங்க?”

“வாட்..‌என்னைப் பார்க்கவா, அதுவும் பொண்ணா? அதிசயமா இருக்கே” பொண்ணென்ற வார்த்தையை அதிசயமாய் கூறி சாகரையே வியக்க வைத்தவனும், தன் தாடி நிறைந்த தாடையை இரு விரல்களால் வருடியவாறு,

“வர சொல்லுங்க பாப்போம்” என்றாலும், விழிகளோ அவசரமாய் சிசிடிவி கேமராவின் மூலம் பதிவுகளை கடத்திக் கொண்டிருந்த லேப்டாப்பில் பதிய, அந்தோ பரிதாபம் வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணின் குனிந்த தலை மட்டுமே அவன் விழிகளுக்கு காட்சியளித்தது.

‘யார் இவள்? புறத்தோற்றத்தை வைத்து அறிய முடியாமல் அவஸ்தியாய் நெளிந்தான். அந்த அவஸ்தைக்குள் ஒருவித நெருடலும், ஒருவித எதிர்பார்ப்பும் ஒளிந்திருந்ததை அவனுமே அறிந்திருக்கவில்லை.

அவனது உதவியாளனான சாகர் வெளியில் சென்று அப்பெண்ணை அனுப்பி வைக்க, கதவை நாசுக்காக தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் அவள்.

தனக்கு முதுகு காண்பித்து இருக்கையில் அமர்ந்திருப்பவனின் முகம் தெரியாவிட்டாலும் வந்ததை கூறி விடும் எண்ணத்தோடு, “சார் என்னோட பேர் கவி..” என்று துவங்கியவள் முழுதாக பெயரை கூறி முடிக்கவில்லை, கையில் இருந்த பேப்பர் வெயிட்டை கதவை நோக்கி தூக்கி எறிந்தவன், “கெட் அவுட்” என்றான் ‌உறுமலாய்.

அவன் முகம் தெரியா விடிலும் குரலில் இருந்த எரிச்சலும், கோபமும் அங்கு நின்ற அப்பெண்ணை விதிர்விதிர்க்க வைத்தது. அடித்து பிடித்து அவ்வறையில் இருந்து வெளியில் ஓடி வந்தவள், அந்த அலுவலகத்தை விட்டு வெளியில் வந்த பிறகே பெருமூச்செறிந்தாள்.

‘ஆத்தி விட்டா கொலை செஞ்சிருவாங்க போலையே. இதுக்கு மேல இந்த கம்பெனிக்கு வேலை கேட்டு வரக்கூடாது’ என்று புலம்பிக் கொண்டே சென்ற பெண்ணுக்கு தெரியவில்லை, கவி என்ற வார்த்தை மட்டுமல்ல, அப்பெயருக்கு சொந்தக்காரியையும் கூட மீண்டும் ஒருமுறை கண்டால் கொன்று விடும் கொலவெறி அவனுள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்று..

@@@@@@@@@@@@@@@@@@@

ஆகாயம் தீண்டும் ஆசையடி கண்ணே..
அதன் வெண்மை உன் நிறத்தை ஒத்திருப்பதால்..” என்ற அவன் கூற்றில் புதிதாய் மலர்ந்தாள் அவள்.

“ஆஹா.. சார் கவிதை வேற சொல்றீங்க?” முதல் முறை அவனது இம்மாதிரியான அணுகலில் எழுந்த அவஸ்தையை மறைக்க பரிகசித்தலை கையிலெடுத்தாள்.

எனை‌ பரிகசித்து மொழியாடல் செய்யும் பெண்ணே
கையாடல் செய்த என் உள்ளத்தை பத்திரப்படுத்திக் கொள்
என்றேனும் என் தொடுகையில் நீ சிலிர்த்து சினம் கொள்கையில் ஓடிச் சென்று உன்னுள் ஒழிந்து கொள்ள உதவிடும்”

மீண்டும் அவனிடம் ஓடிச்சென்று ஒட்டிக் கொண்டது அவள் மனம், இருந்தும் மறைத்தாள்.
“அவ்வளவு தைரியமா? தொட்டு பேசிடுவீங்களோ? கையை வெட்டிடுவேன் பாத்துக்கங்க க்க்கும்..” பொய்யாய் கூறி தாடையை தோளில் இடித்து கொனட்டியவளுக்கு கற்பனையாக அதை எண்ணுகையிலேயே வியர்வை சுரந்து உடல் நடுங்கிற்று.

புதிதாய் தைரியம் எதற்கடி
பெண்ணே!
உன் விரல் தொடுகை
கொடுத்திடாத துணிவா?
உன் விழிபாவைகள்
கொடுத்திடாத சம்மதமா?
உன் வெட்கங்கள் கொடுத்திடாத தைரியமா?” மெல்லிய சிப்பொலியை சிதற விட்டவனாய் கூறி முடிக்கையில், அவனுள்ளும் லேசாக வெட்கச்சாரல்.

அவன் கவி கேட்டு இவள் சிவந்து நின்றாள். அவள் சிவப்பு கண்டு இவன் மயங்கி நின்றான். இருவரது நிலை கண்டு மகிழ்ந்து நின்றனர் அவர்களது நட்பு குழாம்..

கானக மயில் கூவிடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!