Skip to content
Post Views: 4,418
தினையோடு தேனாய்
Advertisement
Advertisement
Advertisement
அறிமுகம்
Advertisement
சட்.. சட்.. என்ற தொடர்ந்த ஒலியில்.. வெள்ளிக் கடைக்குச் சென்று கொண்டிருந்த கீதா, அவ்விடம் நோக்கி நகர்ந்தாள்.
“அண்ணே.. வலிக்கிதுண்ணே.. விடுண்ணே..” எனக் குமார் தெருவில் உருண்டு கெஞ்சிக் கொண்டிருக்க, அந்த நெடியவனின் கையில் இருந்த கம்போ இடைவெளி இன்றி அவனது தேகத்தைப் பதம் பார்த்தது.
கீதா, “டேய்.. டேய்.. என்னத்துக்குடா இந்த அடி அடிக்கிற? கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குடா அவனுக்கு, இப்பப் போயி அடிச்சிக்கிட்டு இருக்க.? ஊர்க்காரவங்களோ, அந்தப் பிள்ள வீட்டுலயோ யாரும் பார்த்தா.. என்ன நினைப்பாங்க? நாளப்பிள்ள பொண்டாட்டிக்காரி மதிப்பாளா.?”
“பொண்டாட்டி மதிக்கணும்னா, அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும் அக்கா.”
“அதுசரி! இப்ப என்னத்துக்கு இந்த அடி?”
“கல்யாண மிதப்புல திரியிறான் போல? சொன்ன, ஒத்த வேலையைக் கூடச் செய்யல. அதை என்கிட்டயும் சொல்லல.”
கீதா, குமாரைக் கேள்வியாய் நோக்கினாள்.
அவன், “ஏன்டா நாயே.. நேத்து என்னடா சொன்னேன் உன்கிட்ட? சாயங்காலம் பண்ணைய ஒருஎட்டுப் பார்த்து, கோழிகளுக்குத் தீவனம் போட்டுட்டு போடானா.. புது மாப்பிள்ள ஜோரா புல்லட்டுல கிளம்பிப் போறீங்களோ.? தண்ணி வைக்கலாம்னு ராத்திரி போறேன்கா, எல்லாக் குஞ்சும் சோர்ந்து போயிக் கிடக்குது!”
கீதா, “ஏன்டா?” என்றபடிக் குமாரைப் பார்க்க, “சரி போகல. அதை எனக்குச் சொல்லணுமா, இல்லையா? விசாரிக்கிறதுக்காக ஃபோனைப் போட்டா, எடுக்கவே மாட்டிறான். துரை இன்னைக்குக் காலையிலயும் கடைக்கு வரல. இப்பவும் கூட.. நான்தான் வீட்டுக்குப் போயிப் பார்த்து இழுத்துட்டு வந்திருக்கேன். நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டுப் படுத்துக் கிடக்கான்.” எனும் பொழுதே,
கூலி வேலைக்குச் சென்றிருந்த குமாரின் அன்னை.. மகனிற்குச் சமைத்து வைப்பதற்காக இல்லத்திற்கு வந்த போது, அக்கம் பக்கம் வீட்டார் உரைத்ததைக் கேட்டு, பதறியபடி வந்தார்.
“ஐயோ என்பிள்ள! உன் கையி கட்டையா போக! விளங்குவியா நீயி?” என்றபடி மகனைத் தூக்க, “நானு விளங்குறது இருக்கட்டும். நீயி, என்ன சொல்லி என்கிட்டக்க இவனை வேலைக்கு அனுப்புன?”
கருவிழிகளை அங்கும் இங்குமாய் உருட்டியவர் அமைதிக் காக்க, “ஆத்தாளும் மகனும் கூட்டுக் களவாணிங்க. இனிமேலு, இவன் கடைப் பக்கம் வந்தியான் துணிய கழட்டிட்டு ஓட விட்டுடுவேன். ஒழுங்கா, வாங்குன காசு பத்தாயிரத்தை இன்னும் ஒரு வாரத்துல கொண்டு வந்து தந்துடணும். இல்ல, மறுநாளு வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்.”
“அண்ணே.. வேலை இல்லேனா, கல்யாணம் நின்னுப் போவும்..” என அவன் பாவமாய் உரைக்க, “நிக்கட்டும். உருப்படியா வேலை செஞ்சு சம்பாதிக்கத் துப்பு இல்லாதவனுக்கு, கல்யாணம் ஒண்ணுதான் குறை! நானே அந்தப் பொண்ணோட அப்பனை பார்த்து, ஆகாத பயலுக்கு என்னத்துக்குப் பொண்ணைக் கொடுக்குறீங்க? வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்கனு சொல்லீட்டு வந்திடுறேன்!” என்று விட்டு நகர,
குமார், “அக்கா.. அக்கா.. அசிங்கமா போவும். நீயாவது அண்ணங்கிட்டச் சொல்லுக்கா.” எனக் கீதாவிடம் கெஞ்ச,
“அவனுக்குத்தான் வேலையில சுத்தம் இல்லேனா பழியா கோவம் வரும்னு தெரியும்ல? தெரிஞ்சிருந்தும்.. வருசத்துக்கு நாலு தடவை இதுமாதிரி ஏதாவது குரங்குச் சேட்டை செஞ்சு, மிதி வாங்கணுமா உனக்கு? ஏன்டா? முன்னாடி சரி, இப்ப உனைய நம்பி ஒரு பொண்ணு வேற வரப் போறா. கொஞ்சமாது திருந்துறியா? சரி, ரெண்டு நாளு கழிச்சு வா. நான் அவன்கிட்ட பேசி வைக்கிறேன்!” என்றவள், “சேரா, நில்லுடா..” என அழைத்த படியே பின் தொடர்ந்தாள்.
தமக்கையின் குரலிற்குச் செவி சாய்க்காது நடந்தவன், “காலு நோகுது, நில்லேண்டா!” என்ற ஒற்றைச் சொல்லில் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
“நீயி என்னத்துக்கு இப்படி ஓடிவார?”
“இம்புட்டுக் கோவம் ஆகாது, வேணாம்டா!”
“இதுக்கே அடங்க மாட்டிறான். எவ்வளவு வாங்குனாலும், அவன் செய்யிறதைத்தான் செய்யிறான்.”
அவள் சிரிக்க, இளஞ்சேரலின் இதழ்களும் அனிச்சையாய் மலர்ந்தன.
“கொலுசு அந்துப் போச்சுடா, பத்த வச்சுக் கொண்டு வர்றியா?”
“கொடு!” என வாங்கிச் சட்டைப் பையில் போட்டவன், “புதுசா வாங்குறது தான?”
“என் புருசனோட வருமானம், அதுக்குக் கட்டுபடி ஆகாது!”
“உனைய யாரு, மாமாக்கிட்ட கேட்க சொன்னா? நான் வாங்கித் தர்றேன்.”
“எனக்கு அவரு வாங்கித் தர்றதே போதும். நீயி, உன்னோட பொண்டாட்டிக்குச் சேர்த்து வையி!”
அவன் சிரித்து விட்டு நகர, “ராத்திரிக்குச் சாப்பிட வந்திடுடா.”
“சரிக்கா..” என்றவன் நில்லாது செல்ல, இல்லம் நோக்கி நடந்தாள் கீதாராணி.
error: Content is protected !!