Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 27

 

காதலும் கடத்தப்படும் – 27

 



Advertisement

அடுத்த இரண்டு நாட்கள், அர்ஜுன் வேதநாயகத்தோடு கட்சி பணிக்காக சென்றுவிட, அஞ்சலி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்தாள். அர்ஜுனிடம் பேசாமல், அவனை பார்க்காமல், அவனது மனநிலை புரியாமல் அவள் தவித்திருந்தாள். ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது. விரைவில் தனது மனதின் அபிலாஷைகளை அவனோடு கூறிட வேண்டும் என்று முடிவு செய்தாள். விலகவும் முடியாமல், உரிமையாக பேசிடவும் முடியாமல், அவளுக்கு பெரும்பாடாக இருந்தது. 

 

முன்னமே தீர்மானம் செய்தது போல் தங்களது இருபத்தி ஐந்தாவது பாடலை பதிவேற்றம் செய்யும் நாள் வந்தது. அவர்கள் பேசிவைத்திருந்த ரெக்கார்டிங் எஞ்சினியர் வருகை தந்தார். குழுவினர் அனைவரும் வந்திருக்க, அர்ஜுனுக்காக அவள் காத்திருந்தாள். கீழே வாயிற்கதவைத் திறந்துகொண்டு அர்ஜுனும், மதனும் உள்ளே வருவதைக் கண்டவள், தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து, முடியை சரி செய்து, ஆடையை சரி செய்துகொண்டு, இன்முகத்ததோடு அவர்களின் எதிரே சென்று நின்றாள்.

Advertisement

“வா அஜூ, வா மதன்”

Advertisement

“எல்லாரும் வந்துட்டாங்களா?” என்றான் அர்ஜுன்.

“ம்ம்…”

“சார் கூட போயிருந்தேன், வர நேரமாயிடுச்சு…” என்றான் கவலையாக.

Advertisement

“ஒன்னும் பிரச்சனை இல்லை, இப்பதான் எல்லாரும் வந்தாங்க…” என்று அவள் கூற, உள்ளே நுழைந்தவன், ரெக்கார்டிங் எஞ்சினியரிடம் தன்னை ஆறுமுகம் செய்துகொண்டு, மற்றவர்களோடு பணியில் கவனம் செலுத்த தொடங்கினான்.

 

அவர்கள் ஒத்திகை பார்த்தபடி, தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்க, அதில் எதிலும் மனம் லயிக்காமல், அர்ஜுனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள், அஞ்சலி.

“அஞ்சலி…” என்று அர்ஜுன் விளிக்க, கனவிலிருந்து நிலைக்குத் திரும்பியவள், நொடி தாமதிக்காது எழுந்து அவன் அருகே சென்றாள்.

“நாம வேற பாட்டு பாடலாமா?”

“ஏன் அஜூ, நீ சொன்ன பாட்டு ரொம்ப நல்லா இருக்கே…”

“இல்ல, இது இருபத்தஞ்சாவது வீடியோ, அந்த பாட்டு ஒன்னும் அவ்வளவு பிரபலம் கிடையாதுன்னு எல்லாரும் நினைக்கறாங்க…”

“நான்… நான் கேட்டிருக்கேன்… ரொம்ப நல்ல பாட்டு…”

“நல்ல பாட்டு தான் அஞ்சலி, இருந்தாலும் எனக்கும் எல்லாரும் சொல்றது தான் சரி தோணுது… வேற ஏதாவது யோசிப்போமா?” 

“உன் இஷ்டம் அஜூ, நான் வேடிக்கை தான் பார்க்கறேன்… இதை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது… நீ என்ன முடிவெடுத்தாலும் ஓகே தான்…”

அவர்கள் அனைவரும் கூடி பேசி இறுதியில் பிரபலமான பாடல் ஒன்றை தேர்வு செய்து, ஒலி/ஒளிப்பதிவு செய்தனர். 

 

காணொளி தயாராகி பதிவேற்றம் செய்யப்பட, அங்கே ஒரு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சியில், அவர்களின் சேனலை பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. அனைவரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

“இன்னும் பத்து பேர் தான்… நம்ம சேனலுக்கு சில்வர் பட்டன் கிடைச்சுடும்” என்று குழுவில் ஒரு பெண் கூற, அனைவரும் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். 

 

ஒன்பது பேர் புதிதாக பின் தொடர, பத்து நிமிடங்களாக அந்த பத்தாவது நபருக்காக காத்திருந்தனர். அர்ஜுன் பதட்டமாவதைக் கண்டு அஞ்சலி ரகசியமாய் ரசித்திருந்தாள். அஞ்சலி சற்றே நிதானமாக இருப்பதைக் கண்டு, அர்ஜுன் ரகசியமாய் வியந்து கொண்டிருந்தான். 

“இது வேலைக்கு ஆகுற மாதிரி தெரியல” என்ற மதன், தனது கைபேசியை எடுத்து, ஏதோ செய்ய, ஒரு லட்சமாக பின் தொடர்வோரின் எண்ணிக்கை மாற, அங்கிருந்தோர் கத்தி கூச்சலிட்டு கொண்டாடினர். சாம் கையுயர்த்த, அஞ்சலியம் கையுயர்த்தி அவனது கைகளில் தட்டினாள். அனைவரும் மாறிமாறி தட்டிக்கொள்ள, அர்ஜுனருகே வந்தவள் தயங்கி அவனைக் கண்டு சிரித்தபடி நின்றாள். 

“வாழ்த்துக்கள் அஞ்சலி, சாதிச்சுட்ட” என்றான்.

“நான் இல்லை, நாம சாதிச்சுட்டோம் அஜூ!”

“ம்ம்… இது பத்தாது இன்னும் இன்னும் நிறைய சாதிக்கணும்…”

“கண்டிப்பா சாதிப்போம்!!”

கடந்த சில நாட்களாக அவள் மனதினை அழுத்திக்கொண்டிருந்த வலி விலகியது. அர்ஜுனின் மந்தகாசப் புன்னகையே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

 

ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்தபின்,

“ஹே மதன் நீ தான் அந்த ஒரு லட்சமாவது ஆளா?” என்றாள், குழுவில் ஒருத்தி.

“நான் இல்ல என்னோட லவ்வர்” என்றான் மதன்.

“உனக்கு லவ்வர் இருக்காங்களா?”, “யார் அது?”, “உன் லவ் ஸ்டோரி சொல்லு?” என்று அங்கிருந்தோர் அவனை கேள்வி மேல் கேள்விகள் கேட்க, வேறு வழியின்றி தான் கரீனா சோப்ராவாக இன்ஸ்பெக்டர் கஜேந்திரனுடன் முகப்புத்தகத்தில் உரையாடுவதைக் குறித்துக் கூறினான். 

“‘இந்த சேனல் எனக்கு ரொம்பப்பிடிக்கும் நீங்க சப்ஸ்க்ரைப் பண்ணுங்க டார்லிங்’னு நம்ம சேனல் லிங்க அனுப்பிவிட்டேன்… உடனே நமக்கு சில்வர் பட்டன் பார்சல்” என்று அவன் கூறியதும், அங்கிருந்தோர் சிரித்து ஓய்ந்தனர்.

“ஹே நீ பொய் சொன்ன’னு தெரிஞ்சா, ஏதாவது பிரச்சனையாகிடப்போகுது” என்றான் இன்னொருவன்.

“கவலைப்படாத ப்ரோ, பிரேக் அப் பண்றதை பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் அந்த நல்ல காரியமும் நடந்துடும்”

சேனலின் வெற்றியை மறந்து அனைவரும் மதனை கேலி செய்துகொண்டிருந்தனர்.

 

அடுத்து வந்த நாட்களில் அர்ஜுன் எப்பொழுதும் போல் அஞ்சலியோடு இயல்பாக இருக்க, தற்காலிகமாக தொலைந்து போன அவளது மகிழ்ச்சிகள் மீண்டும் அவளிடம் வந்து சேர்ந்தன. இரவுகளில் தோட்டத்தில் நடக்கும் கச்சேரிகள் தொடர, இவள் சாளரத்தின் அருகே மறைவாய் நின்று, தனது கைகளை இதயவடிவில் சேர்த்து அதன் வழியே அர்ஜுனை ரசித்திருந்தாள்.

 

******************************************************************************

கண்முன்னே உலவிடும் காதலா 

உன்தன் கைகோர்க்கும் நாளும் எந்நாளோ?

சிரிப்பாலே சிறை வைக்கும் மாயவா

எந்தன் மனதோர சந்தங்கள் புரியாதோ?!

கடல் சேர நதியோட 

இருள் சேர பகல் முனைய 

உன் கை சேர என் இதயம் 

கடிவாளத்தையும் கடந்து வரும்…

சரியென்று ஒரு வார்த்தை 

சிறிதாய் ஒரு புன்னகை 

மனதோர வெப்பங்கள் 

மங்கைக்கு அது போதும்!!

******************************************************************************

 

ஓர் நாள், அர்ஜுன் காரினை துடைத்துக்கொண்டிருக்க, உடன் மதன் உதவி செய்ய, அவசரமாக தயாராகி வந்த அஞ்சலி,

“அஜூ வா ஸ்டூடியோ போகணும், மதனா நீயும் தான். நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றுவிட்டு அவள் சிரிக்க, அர்ஜுனின் மனம் குழைந்தது. அவள் பொருட்களை எடுத்து வைக்க,

“சீக்கிரம் அஜூ, எல்லாரும் ஸ்டாடியோவுக்கு வந்திருப்பாங்க…” என்றாள்.

“என்ன விஷயம் அஞ்சலி?” 

“சர்ப்ரைஸ் அஜூ, நீ கிளம்பு”

சிறுபிள்ளை போல் அவள் அடம் பிடிப்பதைக் கண்டு இவன் சிரித்துக்கொண்டான்.

 

ஸ்டூடியோவிற்கு சென்று சேர, அங்கு குழுவினர் அனைவரும் காத்திருந்தனர்.

அஞ்சலி உள்ளே நுழைய, “ஹாப்பி பர்த்டே டூ யூ” என்று பிறந்தநாள் வாழ்த்தினை பாடத் தொடங்கினர்.

அவள் முகம் மலர்ந்து நிற்க, 

“அஞ்சலி முதல்ல கேக் கேட் பண்ணு” என்றான், சாம்.

“எதுக்கு சாம் இதெல்லாம்…”

“ப்ச், உன்னோட பிறந்தநாளை கொண்டாடாம விட்டுடுவோமா? எங்களுக்கு ஒரு அடையாளம் கிடைச்சிருக்கு உன்னால. நீ ரொம்ப ஸ்பெஷல் அஞ்சலி!!” 

சாம் கூறியதைக் கேட்டு அழகாய் சிரித்தவள், அனைவரும் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து பாட, கேக்கினை வெட்டினாள். வந்திருந்த ஒவ்வொருவரும் அவளுக்கு பிறந்த நாள் பரிசு கொடுத்து, அவளோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள, அதனை சற்றும் எதிர்பார்த்திராத அர்ஜுனும், மதனும் அமைதியாய் நின்றிருந்தனர். 

 

அர்ஜுன் அருகே வந்த சாம், 

“என்ன ப்ரோ, எதுவும் வாங்கிட்டு வரலையா? உங்களுக்கு அஞ்சலி எவ்வளவு பெரிய ப்ரேக் கொடுத்திருக்கா, நீங்க என்னடான்னா அமைதியா நிக்கறீங்க?” என்றான், நக்கலாக.

“இன்னைக்கு அஞ்சலியோட பிறந்தநாள்னு எனக்கு தெரியாது…” என்றான் அர்ஜுன், தயக்கமாக.

“ப்ச்… கூடவே சுத்தறீங்க, ஆனா பிறந்த நாள்னு தெரியாது… வெரி குட்… தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன வாங்கி தந்திருக்க போறீங்க? அதான் அஞ்சலி சொல்லலையோ என்னவோ?” என்றுவிட்டு அவன் செல்ல, கூனிக் குறுகிப் போனான் அர்ஜுன்.

 

“ப்ரெண்ட்ஸ்…” – அஞ்சலி பேசத் தொடங்கினாள்.

“இன்னைக்கு உங்க எல்லாருக்கும் நான் சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சா, நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ். இந்த சந்தோஷமான நேரத்துல நம்ம சேனலோட முதல் பேமெண்ட் வந்திருக்கு. அதை நாம எல்லாரும் பகிர்ந்துக்க போறோம்”

அனைவரும் ஆரவாரத்தோடு கைதட்ட, அஞ்சலி அனைவருக்குமான தொகையை அஞ்சல் உரையில் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். அர்ஜுன் மதனிடம் கொடுக்க, சிறிய நெருடலோடு அர்ஜுன் பெற்றுக்கொண்டான். 

 

“நாம இதை கொண்டாடிய ஆகணும், எங்கயாவது போலாமா?” என்றான் குழுவில் ஒருவன்.

“சாரி பா, எனக்கு வேற ஒரு வேலை இருக்கு” என்று அஞ்சலி நாசூக்காக மறுக்க, சிறிது நேரம் கதை பேசிவிட்டு மற்றொரு நாள் உணவகத்திற்கு செல்லலாம் என்று முடிவு செய்துவிட்டு அனைவரும் கிளம்பினர். அனைவரும் சென்றபின் அர்ஜுனும், மதனும் மட்டும் அங்கு காத்திருக்க,

அர்ஜுனின் எதிரே சென்று நின்றாள். 

“இந்த சர்ப்ரைஸ் எல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்று அவள் கூற, அர்ஜுன் எதுவும் பேசாமல், அவளுடைய பரிசுகள் சிலவற்றை எடுத்துக்கொள்ள, மதனும் மீதியை எடுத்துக்கொண்டு அவனை பின் தொடர, அனைத்தையும் காரில் வைத்துவிட்டு அவளுக்காக அர்ஜுன் கீழே காத்திருந்தான்.

 

மேலிருந்து அவன் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, மனம் வெதும்பியது. மாடிக்கு வந்த மதன், 

“அஞ்சலி நீ போ, நான் பூட்டிட்டு வரேன்” என்றான்.

“என்னாச்சு மதன்? அஜூ ஏன் கோவமா இருக்கான்?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… கிளம்பலாம்” என்றுவிட்டு மதன், ஜன்னல்களை சாத்திவிட்டு கதவினை பூட்ட, அஞ்சலி கீழே சென்று அர்ஜுனின் எதிரே நின்றாள். அவன் பின் இருக்கையின் கதவினை திறந்துவிட,

“என்ன அஜூ புதுசா கதவெல்லாம் திறந்து விடற?” என்றாள், குரல் தழுதழுக்க.

“நான் ட்ரைவர். என்னோட வேலையை செய்யறேன்”

“அஜூ நீ என்னோட… என்னோட…” என்றவள், ‘என்னோட உயிர் நீ’ என்று முழுதாக கூறமுடியாமல் தடுமாறி நின்றாள்.

“உட்காரு அஞ்சலி”

உள்ளே ஏறி அமர்ந்தாள். மதன் முன் இருக்கையில் வந்தமர்ந்தான். வண்டி புறப்பட்டது.

 

“அஜூ, உன் கோவத்துக்கான காரணத்தை மட்டுமாவது சொல்லு…”

“கோவமெல்லாம் இல்லை அஞ்சலி… சில விஷயங்கள் இப்போ தெளிவா புரியுது…”

“அஜூ” என்று மதன் இடைமறிக்க,

“என்னடா?” என்று அர்ஜுன் குரல் உயர்த்தி கத்தியதில், அமைதியாகிப் போனான்.

அர்ஜுனிடம் இத்தகைய கோபத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!