Skip to content
Post Views: 256
மித்ராவின் வாட்சப் மெஸேஜைப் பார்த்ததும், சங்கருக்கு குப் என்று வியர்த்தது.
‘இந்த நேரத்துல, உடனே வரச்சொல்றா.. இதை மதன்கிட்ட சொல்லலாமா?’ என்று தோன்றிய யோசனையை உடனே அழித்தான். அவள் வீட்டுக்கு இதுவரை அவன் போனதில்லை.
ஒரே ஒருமுறை வாசலில் ட்ராப் பண்ணியிருக்கிறான். அதற்குமேல் யோசிக்காமல், ஏதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவன் போல பரபரவென்று கிளம்பினான். பைக் சத்தம் கேட்டு வெளியே வந்த சரசுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இந்நேரத்துல இவ்ளோ வேகமா எங்க போறான்?’
அந்தப் பல்சரைவிடவும் வேகமாக ஓடிய சங்கரின் மனதில் பலவித எண்ணங்கள். ‘நான் அவளுக்கு சர்ப்ரைஸ் தரலாம்னு நெனைச்சா, அவ எனக்கு சர்ப்ரைஸ் தர்ற மாதிரி இருக்கே!’ அவளுக்காக ஆசையாய் வாங்கி வைத்த புடவை மெக்கானிக் ஷெட்டில் இருந்தது. அதை எடுக்கக்கூட இப்போது நேரமில்லை.
அடுத்த இருபது நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்தான். காம்பவுண்டினுள் வண்டியை நிறுத்திவிட்டு, வாசலை நெருங்கினான். மேலும் கீழுமாக இரு போர்ஷனைக் கொண்ட அந்தத் தனி வீட்டில் மேல் போர்ஷனில் இருந்தாள் மித்ரா. கீழ் போர்ஷன் ஹவுஸ் ஓனருக்கானது. பெங்களூருவில் இருக்கும் ஹவுஸ் ஓனர் எப்போதாவது இங்கே வரும்போது சில நாட்கள் தங்கிச் செல்வது உண்டு.
மாடிப்படிகளில் ஏறி காலிங் பெல்லை அழுத்தினான். உள்ளே ஏதோ உருளும் சத்தம் கேட்டது. கதவில் கைவைக்க, அது தானாகவே திறந்து கொண்டது. ஹாலில் இருந்த சோபாவில், சோகமே உருவாக உட்கார்ந்திருந்தாள் மித்ரா. கதவைத் திறந்ததும் வாழ்த்து சொல்லத் தயாராக இருந்த சங்கர், அவளின் கோலத்தைக் கண்டு திகைத்தான். அவள் சாய்ந்து உட்கார்ந்திருந்த விதம் விநோதமாக இருந்தது. விலை உயர்ந்த, அடர் பச்சை வண்ண புடவையில் அழகான ஓவியம் போலிருந்த மித்ராவின் கண்கள் சிவந்திருந்தன. நிறைய அழுதிருப்பாள் போலத் தெரிந்தது. சோபாவின் வலது ஓரத்தில் இருந்த டீபாயின் அருகே, கீழே தள்ளிவிடப்பட்ட குழந்தை போல் ஒரு வோட்கா பாட்டில் கிடந்தது.
“மித்ரா..?”
“…..”
“மித்ரா என்னாச்சு?” சோபாவில் அவளருகே அமர்ந்த சங்கர், மெதுவாக அவளின் தோளைத் தொட்டான்.
முகத்தில் சலனமில்லாமல் அவனைப் பார்த்த மித்ரா, திடீரென்று வெடித்து அழுதாள். அவன் தோளில் சாய்ந்து அழுதாள்.
“என்னாச்சு? பிறந்தநாள் அதுவுமா ஏன் இப்படி அழுதுட்டு இருக்கே?”
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் ஒருவித வெறி தெரிந்தது.
“அவன்.. அந்த குரு.. குருமூ..ர்த்தி நாய், ஏமாத்திட்டான். அவன் என்னை ஏ..மாத்திட்டான் சங்கர்..” “அவனைச் சும்மா விடக்குடா..து.” என்றபடி, மீண்டும் சங்கரின் தோளில் சாய்ந்து அழுதாள். சங்கருக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அதே நேரம் கோபமும் வந்தது. வேலையில சேர்ந்து ஒரு மாசம்தான் ஆகியிருக்கும். அதுக்குள்ள லவ்வா?
“அவன் என்னை எத்தனை முறை கிஸ் பண்ணியிருக்கான் தெரியுமா.. அறுபது முறை!”
“இ..இ..இப்ப கூலா சொல்றான். பிரேக்கப்பாம்.”
“சரி..சரி. அழாத. இது உனக்கு சுத்தமா செட்டாகல.” என்றபடி அவள் முதுகை ஆதுரமாய் தட்டிக்கொடுத்தான்.
“நீ குடிச்சிருக்கே..”
“சாப்ட்டியா.. இன்னும் இல்லையா?”
தலையை இடது வலதுமாக ஆட்டியபடி மீண்டும் அவனைக் கட்டிப் பிடித்து அழத் தொடங்கினாள்.
இரவு நேரம். தனி வீடு. ஒரு ஆணின் அருகே கதறி அழும் இளம்பெண். அந்தச் சூழலே சங்கருக்குத் திகிலைக் கொடுத்தது. ஒரு பெண்ணின் அருகாமை தரும் கிளர்ச்சி, கூச்சத்தை விடவும் தயக்கமும் பயமுமே அவனைப் படுத்தி எடுத்தது. அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா.
“எ.. என்னைக் கட்டிக்கிறியா.. சங்கர்..?” என்றாள்.
அவளது கேள்வியில் அதிர்ச்சியடைந்த சங்கர், அவள் முதுகிலிருந்த தன் கையை விலக்கிக்கொண்டான்.
அந்த நேரத்தில், தான் ஒரு 2K கிட் இல்லை என்பதை அசௌகரியமாக உணர்ந்தான் சங்கர். இவளிடம் தன் காதலுக்கு மதிப்பு இருக்குமா என்ற கேள்வியும் அவன் முன்னே விரிந்தது.
உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் போல் இருந்தது.
12 மணிக்குமேல் வந்து படுக்கையில் விழுந்த சங்கருக்கு, அதற்குமேல் தூக்கம் வர வில்லை. மித்ராவுக்கு தோசை வாங்கிக் கொடுத்து, சாப்பிட வைத்து, அவளைப் படுக்கையில் கிடத்திவிட்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
***
அந்த ஞாயிற்றுக்கிழமை துரைப்பாண்டி வந்திருந்தான். மில்லுக்கு ஏதோ உதிரி பாகம் வாங்க வந்ததாக சொன்னான்.
“வா துரைப்பாண்டி, இப்ப உடம்பு பரவாயில்லையா?”
“அதெல்லாம் சரியாயிடுச்சி அத்தை… இந்தாங்க.”
வாங்கி வந்திருந்த பழங்கள் அடங்கிய பையைக் கொடுத்தான்.
“எங்கே மாமாவைக் காணோம்?” என்றபடி சோபாவில் அமர்ந்தான்.
“உங்க மாமா பஜார்ல இருந்து வர்ற நேரம்தான்.
“ஐ அத்தான்.” என்று ஓடி வந்து அருகே உட்கார்ந்தான் பிரபு. சத்தம் கேட்டுத் தன் அறையிலிருந்து எட்டிப் பார்த்த வசுமதியும் “வாங்கத்தான்!” என்றாள்.
“என்ன பாப்பா, இப்பத்தான் தூங்கி எழுந்தமாதிரித் தெரியுது.. அப்படியா?”
என்று சிரித்தான்.
“அவுகளுக்கு என்னப்பா.. ஞாயிற்றுக்கிழமைன்னா அப்படியே இருக்கலாம். ஒரு வேலையும் செய்யத் தேவையில்ல. இந்த வீட்ல லீவு நாள்லகூட வேலை செய்ற ஒரே ஆள் நான்தான்.” என்றபடி காபி கொண்டு வந்து கொடுத்தாள் மலர்.
வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது.
“இந்தா வந்துட்டாங்க உங்க மாமா.” வாசலைப் பார்த்து சொல்லியபடியே மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
“ஏ.. துரைப்பாண்டி, வாவா. எப்ப வந்தே?” என்றாவாறே உள்ளே வந்தார் சரவணன்.
நேரே குளியலறைக்குப் போய் முகம், கை கால் கழுவி விட்டு, மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு வந்தார்.
“எப்படி இருக்கே? எங்க மச்சான் நல்லாருக்காரா?” என்றபடி எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தார்.
“அவருக்கென்ன, சூப்பரா இருக்காரு. பென்சனை வாங்கி சாப்டுக்கிட்டு, அவரு செட்டு பெருசுகளோட கதை வெட்டி நாயம் பேசிக்கிட்டு இருக்காரு.”
“ஏ பிரபு, வெளிய எங்காச்சும் போவலாமா?”
“ஹை சூப்பர்! அத்தான் மாலுக்குப் போவலாமா? செமையா இருக்கும்.”
“லேய்.. சும்மா கெட. அடிக்கிற வெயில்ல வெளில போறாங்களாம். அதெல்லாம் வேண்டாம் துரைப்பாண்டி.” என்றார் சரவணன்.
“ஆமாமா உக்காந்து பேசு. உன்கிட்ட பேச வேண்டியது நெறைய இருக்கு.” என்றபடியே மலரும் வந்து சரவணன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
அவர்கள் பேச விரும்பிய விஷயத்தை ஊகித்து உணர்ந்துகொண்ட துரைப்பாண்டி அமைதியாக இருந்தான்.
“எங்க இருக்கா உன் அத்தக்காரி? மொதல்ல அதைச் சொல்லு! கல்யாணத்துக்கு அப்புறமா ஊர்ப்பக்கமே வரலையாமே? சுரேஷ் சொன்னான். என்ன பிரச்சினை? அவளையும் ஒதுக்கி வச்சிட்டாரா?”
“இவரு என்ன ஒதுக்கி வைக்கிறது? அவுகதான் இவரை ஒதுக்கி வச்சிட்டாங்க!”
“என்னலெ சொல்றே?”
அடுத்து நடக்கப் போவது சீரியஸான குடும்பக்கதை என்பதை உணர்ந்த பிரபு, காதில் புளுடூத்தை மாட்டிக்கொண்டு போனைப் பார்த்துக்கொண்டே மாடிக்குப் போய்விட்டான்.
“ஆமா.. டாக்டருக்குப் படிக்க வச்சாரு. அதே மாதிரி டாக்டர் மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் முடிச்சி வச்சாரு. அப்பவே அவரு ஆஸ்திரேலியாவுல பெரிய டாக்டராம். அப்பப் போனவங்கதான், அப்பப்ப போன்ல பேசுறதோட சரி. அதுக்கப்புறம் அதுவும் நின்னு போச்சு. இவர் போன் போட்டாலும் எடுக்க மாட்டாங்க.”
யார் மீது காட்டுவது என்று தெரியாதவொரு கோபம் சரவணனிடம் வெளிப்பட்டது.
“ஏன்.. அவ அவ்வளவு பெரிய ஆளா ஆகிட்டாளோ?”
“இருக்கும் இருக்கும். ஏன்னா கடைசியா பேசும்போது அத்தையும் அப்படித்தான் சொல்லிச்சு, நீங்க நெனைச்சமாதிரி நல்லாப் படிச்சு பெரிய ஆளா வந்தாச்சு. செட்டிலாயாச்சு. உங்களுக்கு சந்தோசம்தான? இதுக்குமேல போன் போடாதீங்க, எனக்குத் தோணும்போது நாங்களே வருவோம்னிட்டு போனை கட் பண்ணிட்டாங்க. அப்படியே அண்ணனோட ஒறவையும் கட் பண்ணிட்டாங்கபோல.”
“இதென்ன கூறுகெட்டதனமா இருக்கு? தூக்கி வளத்து ஆளாக்குன அண்ணனைப் போயி ஒதுக்கலாமா? இது நல்லதா அவளுக்கு?”
“உன்கூடயாச்சும் பேச்சுவார்த்தை உண்டா இல்லியா?” மலர் கேட்டாள்.
துரைப்பாண்டி சிறிது அமைதி காத்தான்.
“எங்க அம்மாவுக்குப்பிறகு என்னத் தூக்கி வளர்த்தது அவங்கதான. அதெப்படி அத்தை விடுவாங்க? இல்லை என்னாலதான் விட்டுடமுடியுமா? கலங்கிய கண்களை வேட்டி நுனியால் துடைத்துக்கொண்டான். எப்படியும் மாசத்துல ரெண்டு மூனுவாட்டியாவது பேசிடுவாங்க. ஒவ்வொருமுறை பேசும்போதும் அண்ணன் நல்லாருக்காப்லயான்னு கேட்டுப்பாங்க. எனக்கு நெறைய அறிவுரை சொல்வாங்க. அந்த மாமாவும் பேசுவாரு. அவரு ரொம்ப அமைதியான டைப்.”
அரக்கப் பறக்க குளித்து முடித்து வெளியே வந்த வசுமதி, மலரின் அருகே அமர்ந்து கொண்டாள்.
“அப்ப இனிமே ஊருக்கு வரவே மாட்டாளாமா?” சரவணன் அமைதியாகக் கேட்டார்.
“எனக்குக் கல்யாணம்னா வருவாங்களாம்.”
*****
error: Content is protected !!