Skip to content
Post Views: 1,471
இப்போதெல்லாம் வீட்டில் கோபமோ, சோகமோ இல்லாமல் வசுமதி உற்சாகமாக இருந்தாள்.
அடிக்கடி அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு தனிமையில் இருக்கிறாள். அவளது இந்த மாற்றம் மலருக்கு வித்தியாசமாகப் பட்டது. வசுமதி இந்த சம்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறாளா, இல்லை சந்தோஷமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, பத்திரிகை தலைப்புச் செய்திகளில் வருவதுபோல பெரிதாக ஏதும் செய்து விடுவாளா என்று பலவாறு குழம்பியது பெற்ற மனசு. அப்படி எதிர்மறையாக ஏதேனும் நடந்தால்.. அதை நினைக்கும்போதே அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது. இந்தக் கவலை எதுவும் இல்லாமல், சரவணன் ஒரு சாமியார் போல நடமாடுவது அவளுக்கு எரிச்சலைத் தந்தது. இது விஷயமாக அடுத்த முறை துரைப்பாண்டி போன் போட்டால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தேவையில்லாத சுமையைத் தலையில் ஏற்றிக்கொண்டது போல் இருந்தது.
ஞாயிற்றுகிழமையானால் வீட்டோடு இருப்பவள், இன்று எதுவும் சொல்லாமல் வெளியில் போய்விட்டு வந்திருக்கிறாள். அவளிடம் பேசவில்லை என்றால் தலையே வெடித்துவிடும்போல் இருந்தது. ஆனால் பேச பயமாகவும் இருந்தது. சரவனனைப் பார்த்தாள். நாள் முழுக்கத் திருப்பித் திருப்பிப் படித்த அதே பேப்பரையே இந்த மாலை வேளையிலும் பார்த்துக் கொண்டிருந்தார்.
“உங்களுக்கு ஒரு கவலையும் இல்லையா?”
“ஏன் எதுக்குக் கவலை? என்னாச்சு?”
மலர் கணவனை முறைத்தாள். “அவகிட்டப் பேசி, அவ மனசுல என்ன இருக்குன்னு கேக்கலாமில்ல?”
“அவ மனசுல இருக்குறதைத்தான் அன்னைக்கே சொல்லிட்டாளே.. அப்புறமென்ன?”
“அவன் வந்து கேட்டா நான் என்ன சொல்றது? அவ நல்லாயிருக்கணும்னு நினைக்கிறது தப்பா?”
“இதப் பாரு, அவனுக்கோ அவருக்கோ நான் வாக்கு கொடுக்கலை. அவ வாழ்க்கை.. அவ முடிவுதான்னு நான் விட்டுட்டேன். நீ நடத்திக் காட்டணும்னா… நீதான் பேசி, அவளைச் சம்மதிக்க வைக்கணும். நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வாங்க. நல்லபடியாச் செய்துடுவோம்.”
சரவணன் அமைதியாகச் சொன்னது அவளுக்கு மேலும் எரிச்சலைத்தான் தந்தது.
அவளது பார்வையின் உக்கிரம் தாளாமல் எழுந்தார் சரவணன்.
“அக்கா எங்கேடா இருக்கா?”
“மொட்டை மாடியில.” ரீல்ஸ் உலகத்தில் மூழ்கியிருந்த பிரபு, போனிலிருந்து கண்களை எடுக்காமல் சொன்னான்.
“எப்பப் பாரு போனையே பார்த்துக்கிட்டு இரு. சீக்கிரமே நல்ல பெரிய சோடாபுட்டிக் கண்ணாடியா போட்ருவே.” என்று சொல்லிக்கொண்டே படிகளில் ஏறினார். ‘புள்ளையக் கண்டிக்கிற லட்சனத்தைப் பாரு’ என்று பொருமிக் கொண்டே மலரும் பின் தொடர்ந்தாள்.
****
“என்னடா நடந்துச்சி அங்க..? உண்மையச் சொல்லு. இல்லன்னா ஒன்னையக் கொண்ணே புடுவேன்!” சங்கரின் தலையைப் பிடித்து ஆட்டினான் மதன்.
“நான் சாதாரணமாத்தாண்டா சொன்னேன்.”
“சரிப்பா சாமி, நம்பிட்டேன். நீ சொன்னது சாதாரணமா இருந்தாலும் அவங்க சொன்னது சாதாரணமாத் தெரியலையே? அதுவும் சாதாரணம்தான்னு என்னை நம்பச் சொல்றியா? பொண்ணு கேக்கப் போறியா நீ?..ஒங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா மடையனாத் தெரியுதா?”
“அதை.. அந்தப் பொண்ணுகிட்டப் போயி கேளு.” மதனின் கோபத்தைப் பார்த்துச் சிரித்தான் சங்கர்.
“என்னடா.. இது, அவனே என்னைக்கோ ஒருநாளைக்கு இப்படி வீட்டுக்கு வர்றான். அவன்கிட்டப் போயி சண்டை போட்டுட்டு இருக்கே!”
“வீட்டுக்குப் புதுசா ஒருத்தன் வந்துட்டா கிழவிக்கு நாட்டாமை ரோலா? டீ இன்னும் வரலை!”
சமையலறையிலிருந்து பேசிய பாட்டியைப் பார்த்து சத்தம் போட்டான் மதன்.
ரெண்டு நிமிடத்தில் ஆளுக்கொரு கப்பில் டீ கொண்டு வந்தார் பாட்டி.
“சவுண்டைப் பார்த்தியா சங்கரு.. தொரை வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாராம்.” என்ற பாட்டி, மதனைப் பார்த்து அபிநயம் பிடித்தார்.
“போன புதன் கிழமை ஒரு சம்பவம் நடந்துருச்சிடா..” பாட்டி அங்கிருந்து போனபின் சொல்ல ஆரம்பித்தான் சங்கர்.
“நான் உன்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீ ட்ரீட்டு வச்சிட்ட. உன் ஃப்ரெண்டுன்னு சொல்லி அவ வந்து இறங்குனதும் எனக்கு எப்படி இருந்துச்சி தெரியுமா?”
“ஒனக்கு எப்படியும் இருந்துட்டுப் போகட்டும்.. முதல்ல சம்பவத்தைச் சொல்லு.” என்றான் மதன் பொறுக்க முடியாமல்.
சங்கர் ஆரம்பத்தில் இருந்து சொன்னான். தன்னுடைய ஜாதகம் வசுமதி கையில் கிடைத்தது, அதிலிருந்த போன் நம்பரை வைத்து இவனைத் தொடர்பு கொண்டதிலிருந்து முழுக்கதையையும் சொன்னான். அவளைச் சுற்றி இருக்கும் பிரச்சினைகளையும் சொன்னான். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் மதன்.
“அவங்க ரொம்பப் பாவம் இல்ல.. சரி நீ என்ன சொன்ன?”
“நான் என்ன சொல்ல.. நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னேன், அப்பவும் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுதுடா அந்தப் பொண்ணு!”
“நீ பண்றதுக்குப் பேரு லவ்வா? அப்படி லவ் பண்றவன் எதுக்கு மித்ராவை ஹோட்டல் வாசல்ல அப்படியே விட்டுட்டுப் போயிட்ட? ”
“அவ செய்தது மட்டும் சரியா? முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணை சட்டுன்னு அப்படி சொல்லலாமா?”
“சரி விடு. வசுமதி மேடத்தை அப்படிப் பேசினதுக்கு எனக்கே அவளை அறையணும்போலத்தான் இருந்துச்சி. எனக்கு என்னவோ மித்ரா உன்ன வச்சு காமெடி பண்ற மாதிரிதான் தெரியுது.”
மதன் மெலிதாக சிரித்துக் கொண்டான்.
“என்ன இளிப்பு?”
“இல்ல.. வசுமதி சரியாத்தான் சொல்லி இருக்காங்க.”
“என்ன சொன்னாங்க?”
“செகண்ட் ஹாண்ட் வண்டி வாங்கணும்னு கேட்டிருக்காங்க பாரேன்.”
“அதுக்கு என்ன?”
“இல்ல.. அவங்க உன்ன விரும்புறாங்க. நீ மித்ராவை லவ் பண்றேன்னு சொல்றே. மித்ரா, குருமூர்த்தி கூட இருக்கா. அப்படிப் பார்த்தா நீயும் செகண்ட் ஹாண்டு, உன் மித்ராவும் செகண்ட் ஹாண்டு!”
“நீ என்ன வேணா சொல்லு.. ஆனா இது இப்படி பேசிச் சிரிக்கிற விஷயம் இல்ல மதன்.”
மதன் சங்கரைக் கூர்மையாக பார்த்தான்.
“எது உண்மையான காதல்னு நான் இப்பதான் புரிஞ்சிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். மித்ரா மேல எனக்கு இருக்கிற ஆர்வம் வெறும் க்ரெஷ்தானோன்னு இப்பத் தோணுது. வசுமதியோட சூழ்நிலையையும் வலியையும் நினைச்சிப் பார்க்கும்போது அந்தப் பொண்ணைக், கைவிட எனக்கு மனசு வரல. இருந்தாலும் இந்த விஷயத்துல சட்டுனு ஒத்துக்கவும் எனக்கு ரொம்பத் தயக்கமா இருக்கு. அவங்க எப்படி, அவங்க குடும்பம் எப்படின்னு எனக்குத் தெரியாது. நான் இன்னும் செட்டில் ஆகணும். இந்த மெக்கானிக் செட்ட வச்சு ஓட்டிட்டு இருக்க முடியாது. பிசினஸ்மேன் ஆகணும் டூவீலர் ஷோரூம் வைக்கணும் நாலு பேருக்கு வேலை கொடுக்கணும்னு எனக்கும் கனவுகள் இருக்கு. இதெல்லாம் இல்லாம இப்படியே ஒரு மெக்கானிக் செட் வருமானத்தை வச்சி, என்னால ஒரு நல்ல வாழ்க்கையை எப்படி வசுமதிக்குக் கொடுக்க முடியும்?”
சங்கரை வாஞ்சையாகப் பார்த்தான் மதன். “என்னமோப்பா.. எனக்கு ஏதோ கனவு மாதிரி தெரியுது. பெருசு பெருசா பேசுற.. ஏதோ உன்னால அவங்களுக்கும் அவங்களால உனக்கும் ஒரு நல்லது நடந்தா சரிதான். இனி மித்ராவை அதிகம் என்கரேஜ் பண்ணாத.”
“எனக்கென்ன பைத்தியமா? இன்னைக்கு அவ பேசின ஒரு வார்த்தையிலேயே அவளைப் பத்திப் புரிஞ்சிக்கிட்டேன்.”
“சரி ரொம்ப நேரம் ஆச்சுடா நான் கிளம்புறேன்.” என்றபடி எழுந்தான் சங்கர்.
“ஏய் சங்கர், இருப்பா ரெண்டு தோசை சாப்பிட்டுட்டுப் போ.” என்றாள் பாட்டி சமைலறையில் இருந்தபடியே.
“இல்ல பாட்டி, எனக்கு வயிறு ஃபுல்லா இருக்கு. இன்னொரு நாள் சாப்பிடுறேன்.” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
****
மாடியில் நின்றபடி ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வசுமதி. காலடிச் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது சரவணன் வந்து கொண்டிருந்தார்.
“என்னம்மா தனியா வந்து நின்னுட்டு இருக்க.. ஏதும் பிரச்சினையா?”
“ஒரு பிரச்சினையும் இல்லப்பா. என்றபடி சிரித்தாள்.
“நீ சிரிக்கிறதப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கே. உங்க அம்மா வேற என்ன சொல்றா, என்ன சொல்றான்னு நச்சரிச்சிக்கிட்டே இருக்கா.”
சரவணனைன் ஆழமாகப் பார்த்தால் வசுமதி. “நான் எடுக்கிற முடிவுதானேப்பா?”
“ஆமாமா. எதுவா இருந்தாலும் நிச்சயமா நீ எடுக்கிற முடிவுதான்.”
இப்போது மலரும் சரவணன் அருகே வந்து நின்று கொண்டாள்.
“இல்லப்பா. எனக்கு இப்போதைக்கு கல்யாண வேண்டாம். நான் பிசினஸ் மேனேஜ்மெண்ட்ல மாஸ்டர் பண்ணலாம்னு இருக்கேன். எனக்கு ஒரு ரெண்டு வருஷம் டைம் கொடுங்க படிச்சு முடிச்சுக்கிறேன். இப்போதைக்கு இதுதான் என் முடிவு.”
“அவ்வளவுதானே.. படிக்கட்டும் விடு.” என்றபடி மலரை பார்த்துச் சொன்னார் சரவணன். மலருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
“இப்படிச் சொன்னா எப்படி? நான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு என்ன சொல்றது?” என்று கத்தினாள்.
“இதப் பாரு மலர்.. இந்த விஷயத்துல கட்டாயப்படுத்தக் கூடாதுப்பா. இரண்டு வருஷம்தான.. விடு.”
“கட்டாயப்படுத்தக் கூடாதுன்னா என்ன அர்த்தம்? அப்ப இவ வீட்டுக்கு அடங்க மாட்டாளா?” என்றாள் மலர்.
அவளைத் தீர்க்கமாகப் பார்த்தாள் வசுமதி.
“என்னைப் பாருங்கம்மா, எனக்கு வயசு 22. எனக்குப் பிடிக்காத ஒருத்தருக்கு கட்டாயக் கல்யாணம் பண்ணப் போறாங்கன்னு ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தாப் போதும். உங்க எல்லாரையும் தூக்கி உள்ள வச்சிருவாங்க. அந்தப் பெரியவரையும்தான். துரைப்பாண்டி அத்தானையும்தான்!” அவள் இப்படி பேசியது சரவணனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. மலர் அமைதியாகக் கீழே போய்விட்டாள்.
****
error: Content is protected !!