Skip to content
Post Views: 1,734
மாணிக்கமும் சரசும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருக்க, தனது பிரச்சினையையும் வேதனையையும் பற்றி சுருக்கமாகச் சொன்னாள் வசுமதி. சரசுவுக்கு வசுமதியை மிகவும் பிடித்திருந்தது. இவள்தான் சங்கருக்கு மிகவும் பொருத்தமானவள் என்று அவள் உள்மனம் சொல்லியது. அழகும் படிப்பும் கௌரவமான வேலையும் உடைய இந்தப் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது? அவளின் கன்னங்களைக் கையிலேந்தி ஆறுதல் சொல்லவேண்டும்போல் இருந்தது.
“சரி விடுப்பா. இப்ப என்ன? நல்ல முடிவாத்தானே எடுத்திருக்க. வரவேண்டிய இடத்துக்கும் வந்துட்ட. இனிமே கவலைப்படாத. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றாள் சரசு. சரசுவின் இந்த ஆறுதலான வார்த்தைகளில் நெகிழ்ந்து போனாள் வசுமதி.
சரசு அவளுக்கு காபி கலந்து கொடுத்தாள். மாத்திரை சாப்பிட வைத்தாள்.
“ஆண்ட்டி.. உங்க வீட்டு காபி சூப்பரா இருக்கு. எனக்கு இது தினமும் கிடைக்கணும்.” அமைதியாய் இருந்த மாணிக்கத்தைப் பார்த்தவாறு சொண்ணாள் வசுமதி.
Advertisement
ஒரு புன்னகையோடு அவளைப் பார்த்தார் மாணிக்கம். “இத பாரும்மா.. நான் காதலுக்கு எதிரி கிடையாது. இப்படி திடீர்னு ஒரு விஷயம் நடக்கும்னு நாங்க நெனச்சிக்கூடப் பார்க்கலை. எது எப்படியோ, உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்குன்னா அதைத் தடுக்குறதுக்கு எங்களுக்கு எந்தக் காரணமும் இல்ல. நீங்க சின்னப் பசங்க இல்ல. உங்க வாழ்க்கையை தீர்மானிக்கிற வயசும் உரிமையும் உங்களுக்கு இருக்கு. அதே நேரம் உங்க வீட்டுப் பெரியவங்க மனசு நோகாம, அவங்க ஆசீர்வாதத்தோடுதான் உங்க வாழ்க்கை தொடங்கணும்னு நான் நினைக்கிறேன்.”
“அது முடியாது அங்கிள்.. முடிஞ்ச அளவு சீக்கிரம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறதுதான் இதுக்கு ஒரே தீர்வு.”
“சரிம்மா, அப்படியே பண்ணிக்கலாம். ஆனா, அவசரப்படாம கொஞ்சம் பொறுமையா இரு. நம்மள மீறி எதுவும் நடந்துடாது. நீ வீட்டுக்கு போகாம இப்படி பொய் சொல்லி வெளியே இருக்கிறது யாருக்கும் நல்லது இல்லை. அதுவுமில்லாம இனிமே நீ எங்க வீட்டு பொண்ணாயிட்ட. யாரும் குறைச்சுப் பேசுற அளவுக்கு நீ நடந்துக்கக் கூடாது. உங்க அம்மா அப்பாவுக்கும் ஒரு தலை குனிவு வந்துடக்கூடாது. நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு சாப்பிட்டுட்டு இருட்டுறதுக்குள்ள உன் வீட்டுக்கு போகணும். சங்கரே உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுவான்.”
Advertisement
பக்குவமாக சொன்னார் மாணிக்கம். அவர் பேச்சை மறுத்துப் பேசத் தோன்றவில்லை. வசுமதி அமைதியாக தலையாட்டினாள்.
Advertisement
“நீ என்ன சொல்ற சங்கர்?” மகனைப் பார்த்துக் கேட்டார்.
“எனக்கு சந்தோசம்தான் ஆனா.. வசுமதியோட கையைப் பிடிக்கிறதுக்கு நான் இன்னும் என்னை உயர்த்திக்கணும்னு தோணுது.” வசுமதி அவன் முகத்தை சீரியஸாகப் பார்த்தாள்.
“திரும்பத் திரும்ப அப்படியே சொல்லாதீங்க.. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே வாழ்க்கையில் உயரலாம்.”
Advertisement
தன் மகன் மீது அன்பு செலுத்த இப்படி ஒரு பெண் கிடைத்ததை எண்ணி சரசு மனம் குளிர்ந்து போனாள். “சரி சரி, வா முகம் கழுவி பிரஷ்ஷாகிட்டு சாப்பிடலாம்.” என்றபடி வசுமதியின் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்துப் போனாள்.
முதல் நாள் இரவு சரியான தூக்கமில்லாததால், சங்கருக்கு தூக்கம் வந்தது. டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். நன்றாகக் குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக்கொண்டு வெளியே ஹாலுக்கு வந்தபோது, மூவரும் சாப்பிட உட்கார்ந்திருந்தனர். முகம் கழுவி வேறு உடை அணிந்து பளிச்சென்று இருந்தாள் வசுமதி. சந்தன நிற டாப்புக்கு மெரூன் கலரில் லாங் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். அப்போதுதான் வானத்திலிருந்து இறங்கிய தேவதை போலிருந்தாள்.
காலை டிபனுக்கு இட்லியும் மெதுவடையும் வைத்திருந்தாள் சரசு. வசுமதி விரும்பி சாப்பிட்டாள். மாணிக்கமும் சரசுவும் போட்டி போட்டுக் கொண்டு கவனித்தார்கள். அம்மாவும் அப்பாவும் தான் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டதுபோல நடந்துகொள்வது சங்கருக்கு வியப்பாக இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும் வசுமதியின் வேலை, ஆபீஸ் பற்றி விசாரித்தார் மாணிக்கம். வந்த சில மணி நேரத்திலேயே தன் சொந்த வீடு போல் அங்கே சகஜமாக பழக ஆரம்பித்துவிட்டாள் வசுமதி. அதன்பிறகு மாணிக்கம் பேப்பரை எடுத்துக் கொண்டு உட்கார, வீட்டை முழுவதுமாக சுற்றிப்பார்த்தபின், மதிய சமையலுக்கான வேலையில் இறங்கிய சரசுவுக்கு உதவியாக வசுமதியும் சமையல் அறைக்கு வந்துவிட்டாள்.
சங்கருக்குப் போரடித்தது. எழுந்து டிவியைப் போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தபோது, வாசலில் பைக் சத்தம் கேட்டது. மதன் வந்தான்.
“ஹாய் டாடி! என்ன ஆறு மணிக்கு வர்ற பேப்பரை மதியம் வரைக்கும் படிச்சிட்டு இருக்கீங்க..”
“வாப்பா.. உட்காரு.” என்று அவனைப் பார்த்து சிரித்துவிட்டு மறுபடியும் பேப்பரில் மூழ்கினார் மாணிக்கம்.
“ஹாய் டா மச்சான்! மழை போதுமா? ஆமா.. மழை நேரம் உனக்கு வேலை நிறைய வருமே கடை திறக்கலையா?”
“ரொம்ப டயர்டா இருக்குடா. அதனால கடை திறக்கலை. அங்கேயும் ஃபுல்லா தண்ணிதானே நிக்குது.” என்றான் சங்கர்.
“மம்மி மதன் வந்திருக்கேன். ஒரு காபி பிளீஸ்! சோபாவில் சரிந்து உட்கார்ந்தபடி சமையலறை நோக்கி குரல் கொடுத்தான்.
“இரு இரு.. வர்றேன்.”
“அப்புறம் சங்கர்.. போரடிக்குது. எங்காவது வெளில போலாமா?”
“ஊரெல்லாம் மழை பேஞ்சி சேறாக் கிடக்குது. இதுல எங்க வெளிய போக?” அவனை விநோதமாகப் பார்த்தான் சங்கர்.
“அதுக்கில்லைடா.. ஒரு ரெண்டு நாள் லீவைப் போட்டு, எங்காவது ட்ரிப் போகணும்போல இருக்கு. வா.. உன் ரூம்ல போயிப் பேசலாம்.” சங்கரை எழுப்பி, அவனது அறைக்குத் தள்ளிக்கொண்டு போனான்.
அறையிலிருந்த கட்டிலில் அவனை உட்கார வைத்து, அருகில் இருந்த சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.
“ஒரு சின்னப் பிரச்சினை.. உன்கிட்டப் பேசணும்?”
முகத்தில் கேள்விக்குறியோடு அவனைப் பார்த்தான் சங்கர்.
அப்போது சமையலறையிலிருந்து ஒரு ட்ரேயில் காபி கோப்பைகளுடன் வந்தாள் வசுமதி. மதனைப் பார்த்து சிரித்தாள். அப்போது மதனின் முகத்தைப் பார்க்கணுமே..
“அடேய்ய்.. என்னடா நடக்குது இங்க..? மம்மியாரே!.. இங்க நெஜமாவே ஒரு பொண்ணு இருக்குதா, இல்ல என் கண்ணுக்குத்தான் இப்படித் தெரியுதா?”
விடுவிடுவென்று வந்த சரசு. அவன் காதைப் பிடித்துத் திருகினாள்.
“ஏண்டா இப்படிக் கத்தி ஊரைக் கூட்றே? காபிதானே கேட்ட… கொண்டுவந்து கொடுத்தா எடுத்து ஊத்திக்க வேண்டியதுதான?”
“ஓ.. அப்ப இது கெஸ்ட் இல்லையா? புது ஓனரம்மாவா? சங்கருக்கு முன்னாடியே சாவிக்கொத்து கைக்கு வந்துடுச்சி போலிருக்கே!” மதன் இழுவையாய்க் கேட்டதில் கலகலவென சிரித்தாள் வசுமதி.
“அப்ப, ஒனக்கு இவளை முன்னாடியே தெரியுமா?
“தெரியும்.. ஆனா இப்படி ஆகும்னு தெரியாது. போன வாரம் நான்தானே ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தி வச்சேன். இருவரும் காபியை எடுத்துக்கொண்டார்கள். தனது காபியை ருசித்தபடியே சங்கருக்கு அருகில் அமர்ந்துகொண்டாள் வசுமதி.
“என்னவொரு குடும்பம்.. என்னவொரு காதல்.. 5ஜி, 6ஜியை விடவும் ஃபாஸ்ட்டா இருக்கேப்பா. அடுத்த வாரம் வரும்போது ஆளுக்கு ஒரு குழந்தையோட இருப்பீங்களோ?” இப்போது வசுமதி ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள்.
“ஏண்டா.. அதுங்க ரெண்டும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கட்டுமே. நீ எதுக்கு நடுவுல நந்தி மாதிரி. போ. கடைக்குப் போயி ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வா.”
“அன்னையாரே.. இதெல்லாம் ரொம்ப ஓவரு. நான் எவ்ளோ வருஷமா இங்க வந்துட்டு இருக்கேன், இன்னிக்கு வந்த ஒரு பொண்ணுக்காக நான் தனியா போகணுமா?”
சிரித்துக்கொண்டே மறுபடியும் சமயலறைக்குள் நுழைந்தாள் சரசு.
“ஓகே.. நீங்க ஃப்ரெண்ட்ஸுக்குள்ள எதாவது பேசுவீங்க..” என்றபடி வசுமதி எழுந்தாள்.
“ஐயோ பரவால்ல உட்காருங்க.” என்றான் மதன்.
“திடீர்னு ரெண்டு நாள் லீவ் போட்டு எங்காவது சுத்தணுங்கிறான், என்னடா ஆச்சு? சம்பாதிக்கிற ஜோர்ல எதாவது பொண்ணைப் பார்த்துட்டியா என்ன?” நேரடியாக அவனிடம் விஷயத்துக்கு வந்தான் சங்கர்.
மதன் ஒரு கணம் திகைத்தான்.
“பொண்ணுன்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. ஏங்க.. நாம போன வாரம் ஹோட்டலுக்குப் போனதை நீங்கதான் உங்க ஃப்ரெண்டுக்கு சொன்னீங்களா?” மதன் வசுமதியிடம் கேட்டான்.
“என் ஃப்ரெண்டு யாரு?”
“அதாங்க.. எங்க ஆபீஸ் ஹெச்சார் மேடம்.. ஜனனி மேடம்!?”
“ஓ ஜனனியா.. ஆமாமா. உங்களை ரெகமெண்ட் பண்ணதுனால எப்பவாச்சும் என்கிட்ட உங்களைப் பத்திப் பேசுவா.”
“என்னங்க இது? பீதியைக் கிளப்பறீங்க.. நான்பாட்டுக்கு என் வேலை பார்த்துட்டு இருக்கேன். என்ன, ஏதும் கம்ப்ளெய்ண்டா?”
“சீச்சீ.. அதெல்லாமில்ல.”
“ஆஃபீஸ்ல அவங்க டெரர் பேர்வழிங்க. ஆபீஸே அலறும். எல்லாரும் பேசப் பயப்படுவாங்க.”
“அப்படியெல்லாம் இருக்காதே. என்ன, உங்ககிட்ட ஏதும் பிரச்சினை பண்ணாளா?”
“அதெல்லாம் இல்ல.. நாலு நாள் முன்னாடி, கேண்ட்டீன்ல லஞ்ச் சாப்பிடும்போது பக்கதுல வந்து உட்கார்ந்துட்டாங்க.”
“அடச்சீ.. என்னடா சொல்ல வர்றே?” என்றான் சங்கர்.
“சொல்றதைக் கேளு.. பக்கத்துல உட்கார்ந்துட்டு, ‘சண்டே உங்க ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் ட்ரீட்டு வெச்சீங்க போல.. ஏன் எனக்குச் சொல்லலை? நான் உங்க ஃப்ரெண்டு இல்லையா?’ அப்படீன்னு கேட்டுட்டாங்க!
“அப்புறம்?” என்றபடி சிரித்தாள் வசுமதி.
“ஹிஹின்னு அசடு வழிஞ்சேன். நான் இன்னும் அங்க யாருகிட்டேயும் அவ்வளவாப் பழகலீங்க. எந்த பாலிடிக்ஸ்லேயும் மாட்டாம என வேலையை மட்டும்தான் பார்க்கணும்னு நெனைப்பேன்.”
“அவளும் யாருகிட்டேயும் அவ்வளவாப் பழக மாட்டாளே.”
“அதுதான் தெரியுமே. எல்லாரும் அவங்களை சிடுமூஞ்சின்னு சொல்வாங்க.”
“உங்ககிட்டேயும் அப்படித்தான் நடந்துப்பாளா என்ன?”
“சேச்சே.. என்கிட்ட எல்லாம் அப்படி நடந்துக்கிட்டது கிடையாது. ஏதோ உங்க புண்ணியத்துல அவங்க கையாலதானே ஜாயினிங் லெட்டரே வாங்குனேன்.”
“கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க.. அவ உங்களைப்பத்தி என்கிட்ட விசாரிக்கிறதைப் பார்த்தா, கூடி சீக்கிரமே உங்களுக்கு லவ் லெட்டரே தந்தாலும் தந்துடுவா.”
“ஹெஹ்ஹே!!” சிரித்தான் சங்கர்.
“சும்மா எதாச்சும் சொல்லாதீங்க மேடம். உங்களைப் பார்க்குற ஒவ்வொரு முறையும் எனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சியாக் கிடைக்குது,”
“ நான் ஒண்ணும் உங்களைக் கலாய்க்கலை மதன்… எனக்குத் தோணினதைச் சொன்னேன். ஒருவேளை அப்படி இல்லாமக்கூட இருக்கலாம்.”
error: Content is protected !!