Skip to content
Post Views: 1,693
அன்று மாலை மதனின் பாட்டியைப் பார்க்க வருவதாக சொல்லியிருந்தாள் ப்ரியா. அதனால் சீக்கிரமே ஆஃபீஸிலிருந்து கிளம்பிய மதன், சங்கரையும் வரச் சொல்லியிருந்தான். தன் நண்பனை அவளுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்பது அவனுடைய எண்ணம். சரியாக ஏழு மணிக்கு ஒரு வாடகைக் காரில் வந்து இறங்கினாள் ப்ரியா.
“வாங்க.. மேடம்! நீங்க சொல்லியிருந்தா நானே பாட்டியை ஹோட்டலுக்கு அழைச்சிட்டு வந்திருப்பேனே.”
“சேச்சே.. வயசுல பெரியவங்களைக் கஷ்டப் படுத்தக்கூடாது. நான் வந்து பார்க்குறதுதான் முறை.” என்ற ப்ரியா, தான் வெளிநாட்டிலிருந்து வந்தவள் என்ற எந்த படாடோபமும் இல்லாமல் இயல்பாக பேசினாள்.
“எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களாம்மா?” என்றபடி பாட்டியின் அருகே அமர்ந்து, கையைப் பிடித்து நலம் விசாரித்தாள்.
“எனக்கு என்னம்மா குறை.. எப்படியோ உங்க மூலமா என் பேரனுக்கு ஒரு நல்ல வழி கிடைச்சா சந்தோஷம்.”
“நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம இருங்க.. எல்லாம் நல்லதே நடக்கும்.” என்ற ப்ரியா, தான் வாங்கி வந்த பழங்கள் அடங்கிய ஒரு சிறு கூடையை பாட்டியிடம் தந்தாள்.
“அப்புறம் மேடம், இது சங்கர். என்னுடைய நண்பன்.” என்று சங்கரைக் கைகாட்டி அறிமுகப்படுத்தினான்.
சங்கர் அவளைப் பார்த்து கை கூப்ப, “ஹை சங்கர்!” என்று சிரித்தாள்.
“பள்ளிக்கூடம் போற வயசுல இருந்தே ஒண்ணாப் படிச்சி ஒண்ணா வளர்ந்தவனுகதான். இதே தெருவுலதான் இருந்தாங்க. இப்ப ஒரு அஞ்சு வருஷம் முன்னாலதான் மாதவரத்துல சொந்தவீடு வாங்கிட்டுப் போயிட்டாங்க.” பாட்டி விவரமாக சொன்னாள்.
“ஓ.. சங்கர் என்ன பண்ற?”
“இங்க.. ஜிஎன்டி ரோட்ல ஒரு டூ வீலர் மெக்கானிக் ஷெட் வச்சிருக்கேன்.”
“வெரிகுட்! ஆனா ஃப்யூச்சருக்கு அது போதுமா?”
“நிச்சயம் போதாது. எல்லா வித டூ வீலருக்கும் டீலர்ஷிப் எடுத்து, ஷோரூம் வெக்கணும்கிறதுதான் என்னோட ஆசை, லட்சியம் எல்லாம். முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.”
“சூப்பர்! லட்சியமும் அதுக்கான முயற்சியும் இருந்தா, கண்டிப்பா ஜெயிப்ப. வாழ்த்துக்கள்!”
“தேங்க்ஸ்ங்க.”
அதன்பின் மதனின் வேலையைப்பற்றி விசாரித்தாள் ப்ரியா.
“இவ்ளோ நாளா வேலையில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தான். இப்ப நல்ல வேலையும் கிடைச்சிடுச்சி. இனிமேலாச்சும் அவனுக்கேத்த ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் முடிச்சிட்டான்னா எனக்குக் கொஞ்சம் பாரம் குறையும்.” என்றாள் பாட்டி.
“ஆமா மதன், இந்த வயசான காலத்துல பாட்டிக்கு ஓய்வு கொடுத்து, அவங்களை நல்லா கவனிச்சிக்கணும் இல்லையா? நீ முதல்ல கல்யாணம் முடிக்கிற வழியப்பாரு.”
மய்யமாகத் தலையாட்டினான் மதன்.
பாட்டி தேநீர் கொண்டு வந்தாள். சங்கரும் மதனும் ஆளுக்கொரு கிளாஸை எடுத்துக்கொள்ள, ப்ரியாவும் ஒரு கிளாஸை எடுத்துக்கொண்டாள்.
“இந்த வீக் எண்டுல ராமேஸ்வரம் போயிட்டு வரலாம்னு இருக்கேன். முதல்ல அம்மாவோட அஸ்தியை நல்லபடியா கரைக்கணும்.”
“நல்லது.” தன் போனை எடுத்து காதில் வைத்தவாறு பால்கனிக்குச் சென்றாள்.
“அந்த அம்மாவை சாப்டுட்டு போகச் சொல்றா.” என்றாள் பாட்டி.
****
மொட்டைமாடியில் நின்று இரவு நேரக் காற்றை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் வசுமதி. இன்னும் இரண்டு நாட்களைத் தள்ளவேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை சங்கர் இந்த வீட்டுக்கு குடும்பத்தோடு வரப்போகிறான். பெண் பார்க்கவா.. பெண் கேட்கவா ஏதோ ஒன்று. அப்பாவே சங்கருக்கு போன் போட்டு, சங்கரின் அப்பாவிடம் பேசியது திருப்தியாக இருந்தது. காரியங்கள் வேகமாக நடப்பது மனதுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. இதை ரமணியம்மாவிடம் உடனே சொல்லவேண்டும்போல் இருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அவளுக்கு போன் போகவே இல்லை. மறுபடியும் அந்தத் துரைப்பாண்டி கோஷ்டி தொல்லை கொடுக்காம இருக்கணும். கடவுளை வேண்டிக்கொண்டாள். மதனின் நீண்ட நாள் வேதனையும் எப்படியோ ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது.
திங்கட்கிழமை நடந்ததை நினைத்துப் பார்த்தாள். அந்த இயற்கையே.. அல்லது, மதனின் அம்மாவே அவனது வாழ்க்கையில் ஜனனியைக் கொண்டு வந்து சேர்த்ததுபோல் இருந்தது. அவள் மதனை ஒரு குழந்தை போலப் பார்த்துக் கொள்கிறாள். அன்று ஹோட்டலில் சாப்பிடும்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொண்டதைப் பார்த்தால் வருஷக்கணக்கில் காதலிப்பவர்களே தோற்றுவிடுவார்கள் போலிருந்தது. மதனின் அந்த மாறுதல் வியப்பாக இருந்தது. அவனுக்கும் இந்தமாதிரி சூழ்நிலையில் முக்கியமான தேவை இப்படி ஒரு அன்பும் அரவணைப்பும்தான். எது எப்படியோ.. காதலை அறிந்திராத, காதலை உணர்ந்திராத வசுமதி, தன்னிலும் தன்னைச் சுற்றிலும் பொங்கிப் பரவும் காதல் நதியின் பிரவாகத்தைக் கண்கூடாகப் பார்த்தாள்.
“அக்கா உனக்கு போன்!” என்றபடி கையில் போனுடன் மேலே வந்தான் பிரபு. அவனிடமிருந்து வாங்குவதற்குள் போன் கட்டாகிவிட்டது. ஏதோ புது நம்பர்போல தெரிந்தது. அவள் திருப்பி அழைக்கவில்லை. காண்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத புது நம்பராக இருந்தால் வசுமதிக்கு கொஞ்சம் அலர்ஜி. அதுவும் தேவையில்லாமல் நேரத்தை வீணாக்கும் மார்க்கெட்டிங் காலாக இருந்தால் கடுப்பாக இருக்கும்.
“யாரும்மா போன்ல சங்கரா?” சிரித்தபடியே சரவணன் வர, பின்னாடியே மலரும் வந்தாள்.
“சும்மா இருங்கப்பா.. பழகறோம்கிறதுக்காக எப்பப் பார்த்தாலும் போன்ல கடலை போட நாங்க என்ன சின்னப் பிள்ளைகளா? அது ஏதோ ராங் நம்பரா இருக்கும்போல.. கட்டாயிடுச்சி.”
“தப்புதான்.. என் மக சின்னப்புள்ள இல்லை.” என்று மலரைப் பார்த்துச் சொன்னார்.
“ரொம்பப் பெருமைதான்.” என்றபடி கொண்டுவந்த பாயை விரித்து உட்கார்ந்தாள் மலர்.
அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் வசுமதி. “அம்மாவுக்குத்தான் பாவம்.. நினைச்ச மருமகன் கிடைக்கலை.. என்னம்மா?”
அவளை முறைத்துப் பார்த்தாள் மலர். “நான் நினைக்கிறதுல என்ன இருக்கு.. உனக்கு நினைச்ச புருசன் கிடைச்சா சரிதான். இனிமே உன் பாடு, உங்க அப்பா பாடு.. உனக்கு வரப் போறவன் பாடு. ஆளை விடு.”
“சங்கரை அவன் இவன்னு சொல்லாதீங்கம்மா. என்ன இருந்தாலும் மருமகனுக்கு ஒரு மரியாதை இல்லியா?”
மலருக்கு சிரிப்பு வந்தது.
“ஆமாடீ.. நீ, சங்கரு சங்கருன்னு பேரைச் சொல்றதுதான் மரியாதையோ?”
“பேரு.. கூப்பிடுறதுக்குத்தானம்மா வைக்கிறாங்க?” மலரைச் சீண்டுவதென்றால் மகளுக்கு அப்படியொரு இன்பம்.
“அதானே.. நீங்களும் அப்பாவை ‘சரவணா சரவணா’ன்னு கூப்பிடுங்கம்மா. இப்ப அதான் ஃபேஷன்.” அம்மாவை சீண்டுவதில் பிரபுவும் சேர்ந்து கொண்டான்.
“நீ உன் போனைப் பார்த்து நோண்டு. பெரியவங்க பேசும்போது நீ எதுக்கு ஊடால வர்ற?”
அப்போது மறுபடியும் வசுமதியின் போன் அலறியது. போனை எரிச்சலோடு பார்த்தாள் வசுமதி.
“போனை எடுத்து ஸ்பீக்கர்ல போடுக்கா. ராங் நம்பரா இருந்தா கலாய்ப்போம்.” என்றபடி பிரபுவும் அருகில் வந்து உட்கார்ந்தான்.
“ஹலோ.. யாரு?”
“ஹை வசுக்குட்டி! எப்படியிருக்கே?”
“ரமணீம்மா?” துள்ளியெழுந்து உட்கார்ந்தாள் வசுமதி. சரவணனும் மலரும் அதிர்ச்சியோடு அவள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ம்மா, நீங்க ஊருக்கு வந்திருக்கீங்களா?”
“ம்ம்ம்.. உனக்காகத்தான்.”
“ம்ம்?”
“அந்தப் பைத்தியம் எப்படி உன்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றான்னு பார்த்துடலாம்னு வந்துருக்கேன்.”
“எங்க இருக்கீங்க?”
“இங்க, சென்னையிலதான்.”
“ஊ..ஊ…!” மகிழ்ச்சியில் ஊளையிட்டாள் வசுமதி.
அப்பாவும் அம்மாவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட வசுமதி, தன் நினைவுக்கு வந்தவளாக போனை கையில் எடுக்கப் போனவளை, அங்கிருந்தே பேசுமாறு சைகை செய்தார் சரவணன்.
மலர், மகளின் கையைப் பிடித்து, “அவங்களை நம்ம வீட்டுக்குக் கூப்பிடு.” என்று ரகசியக் குரலில் சொன்னாள்.
“என்ன ரமணீம்மா.. இங்க வந்துட்டு, ஹோட்டல்ல தங்குவீங்களா? வீட்டுக்கு வாங்க.”
“இல்லடா.. அவர் ஒரு வேலையா டெல்லி போயிருக்கார். நான் இப்ப ஒரு ஃப்ரெண்டு வீட்ல இருக்கேன். அவர் வந்ததும் வர்றோம்.”
“அதெல்லாம் கிடையாது நீங்க லொக்கேஷன் அனுப்புங்க, நான் இப்பவே கூப்பிட வர்றேன்.” அப்பாவைப் பார்த்துக்கொண்டே பேசினாள் வசுமதி.
“நீ மட்டும் சொன்னா போதுமாடா..குட்டி?” இதைக் கேட்கும்போது ரமணியின் குரல் மாறியிருந்தது.
சட்டென்று போனைக் கையில் எடுத்தார் சரவணன்.
“ஏன், வாத்தியாரு சொன்னாத்தான் வருவீகளோ.. நீ முதல்ல அட்ரஸை அனுப்பு, நான் கூப்பிட வாரேன்.”
திடீரென்று சரவணன் இப்படிச் சொல்வார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தப்பக்கம் ரமணியும்கூட.
ஒரு கணம் அமைதி. மறுகணம் போன் கட்டானது. வசுமதி சரவணனைப் பார்த்தாள்.
“என்னப்பா.. இப்படிப் பண்ணிட்டீங்க?”
“என்ன பண்ணேன்.. வரச்சொல்லித்தானே அட்ரஸை அனுப்பச் சொன்னேன்.”
“இதுதான் ஒருத்தங்களை முதல் முறையா வீட்டுக்கு அழைக்கிற முறையாக்கும்? இப்ப எதுக்கு நீங்க வாத்தியாரை இழுக்கணும்?” மலர் ஏளனமாய்க் கேட்டாள்.
“போங்கப்பா.. அவங்க கோவிச்சிக்கிட்டாங்க போல.”
அப்போது வசுமதியின் போன் ஒளிர்ந்தது. வாட்ஸப் செய்தி. தான் இருக்கும் வீட்டின் லொக்கேஷனை அனுப்பியிருந்தாள் ரமணி.
“அப்பாவா, மகளா? இப்ப யாரு கூப்பிடப் போறீங்கன்னு பார்க்கணும்.” என்றாள் மலர்.
“அப்பா, பெரிய காரா புக் பண்ணுங்க. எல்லாருமே போலாம்.” என்ற பிரபுவை விநோதமாகப் பார்த்தார் சரவணன்.
“ஏண்டா என்ன பிக்னிக்கா போறோம்? அவளே தெரிஞ்சவங்க வீட்ல இருக்காளாம். அங்க குடும்பத்தோட போவாங்களா? போ. உன் பாடத்தை எடுத்துப் படி.”
எல்லோரும் கீழே வந்தார்கள். ரெண்டு நிமிடத்தில் கிளம்பி ரெடியாக வந்தாள் வசுமதி. அவளையே குறுகுறுவென்று பார்த்தாள் மலர்.
“இன்னும் எத்தனை சர்ப்ரஸை இப்படி ஒளிச்சி வச்சிருக்கே?”
“ஏன்மா.. அவங்க இங்க வரலாம்ல?”
“ஏன்டி.. திடீர்ன்னு நீ ஒரு பையனைக் கூட்டிட்டு வந்து கட்டிக்கப் போறவன்னு சொன்ன.. அதையே ஏத்துக்கிட்டோம். அவங்க வர்றதுக்கென்ன?”
***
ப்ரியா வாஷ்பேசினில் முகம் கழுவி, கலைந்திருந்த முடியைத் திருத்திக்கொண்டு தன் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
“சாப்பிட்டுப் போகலாம்மா. நேரம் ஆயிடுச்சே.”
“அய்யையோ.. என்னால இப்ப சாப்பிட முடியாது. இப்பத்தானே டீ குடிச்சேன்.” என்றாள் ப்ரியா.
“இப்ப கார் வந்துடும், நான் ஹோட்டலுக்குப் போறதுக்கு முன்னால இன்னொரு ஃப்ரெண்டையும் பார்க்கணும். வரட்டுமா?” என்றபடி எழுந்தாள். உடம்பைப் பார்த்துக்கங்கம்மா.. நான் வர்றேன் மதன்.. பை சங்கர்!”
அவள் ஹாலுக்கு வர வீட்டின் முன்னால் டாக்சி வந்து நின்றது. சங்கரும் மதனும் வழியனுப்புவதற்காக வாசல் வரை வந்தார்கள்.
ப்ரியா காரை நெருங்குவதற்குள், கதவைத் திறந்து வெளியே வந்த.. அந்தப்பெண், ஓடி வந்து ப்ரியாவைக் கட்டிக் கொண்டாள். “ரமணிம்மா..!”
“வசுக்குட்டீ..!” வசுமதியின் அன்பில் நனைந்தபடியே வாசலைப் பார்க்க, அங்கே சங்கரும் மதனும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார்கள்.
****
error: Content is protected !!