Skip to content
Post Views: 1,795
ரதி தன் மாமியார் கனகவதியின் முன்னால் தலை குனிந்து நின்றிருந்தாள். அந்த பெரிய ஹாலில் படிகளை ஒட்டியபடி ரதியின் கணவன் நின்று இருந்தான்.
“ப்ளீஸ் அத்தை.. கொஞ்ச நாள் மட்டும். அப்பா இப்பதான் பிசினஸ்ல லாஸ் ஆகி மீண்டு வர ஆரம்பிச்சிருக்காரு. கொஞ்ச நாள் போனா நகையையும் பணத்தையும் தந்துடுவாரு..” என்றாள் கெஞ்சலாக.
Advertisement
ரதி வயது இருபத்தியொன்பது. பிசினஸ் மேக்னட் தர்மேந்திரன் வீட்டு மூத்த மருமகள்.
திருமணமாகும் போது இரண்டு குடும்பமும் சமமான அந்தஸ்தில்தான் இருந்தது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ரதியின் குடும்பம் இன்னும் கொஞ்சம் அந்தஸ்த்தில் உயர்ந்தவர்கள் என்றே சொல்லலாம்.
Advertisement
Advertisement
ஆனால் திடீரென்று பிரச்சனைகள். பிசினஸில் அடி. அரசாங்கத்திடம் இருந்து நோட்டிஸ். வங்கிகளிடம் இருந்து நெருக்கடி.
ரதியின் தந்தை சசிதரனால் சமாளிக்க முடியவில்லை. கடன்களை கட்டும்போது மகளுக்கு அவர் வரதட்சணையாக போட்டு அனுப்பிய நகைகளையும் வாங்கி விற்று விட்டார். போதாக்குறைக்கு மருமகன் தருணிடம் ரொக்கமாக சில கோடிகளை கடன் வாங்கி விட்டார்.
Advertisement
அந்த கோடிகளையும் விடவும் அதிகமாகவே திருமண நேரத்தில் வரதட்சணையாக அவர் தந்திருந்தார். ஆனால் இப்போது திருப்பி வாங்கும்போது அது அத்தனையும் கடன் என்றுதான் எழுதப்பட்டது. அதுவும் வட்டி கடன்.
இந்த குடும்பம் சிரித்தபடிதான் கடன்களையும் நகைகளையும் சசிதரனுக்கு தந்தது.
ஆனால் இப்போது “உங்கப்பா வாங்கிய நகையும் பணமும் எங்களுக்கு உடனே வேணும்..” என்று ரதியிடம் நெருக்கடி தந்தார்கள். என்
காரணம் ரதியின் தங்கை மாயா செய்த ஒரு வேலை.
அப்பாவின் பண கஷ்டத்தை தீர்க்கலாமே என்று ஒரு இடத்திற்கு வேலைக்கு சென்றாள். அவள் சென்ற இடம் தர்மேந்திரன் குடும்பத்திற்கு தொழில் போட்டியாளரின் அலுவலகம்.
“உன் தங்கை அங்கே வேலை செய்ய கூடாது. வெளியே வர சொல்..” என்றார்கள் ஆரம்பத்தில்.
ரதியும் தன் தங்கையிடம் சொல்லி பார்த்தாள். ஆனால் மாயா பிடிவாதக்காரி. கொஞ்சமும் அடங்காதவள்.
“இது என்னோட லைஃப். என்னோட டிசிசன். இதுக்காக உன் மாமியார் உன்கிட்ட பிரச்சனை பண்ணா நீ அவங்களைதான் கேள்வி கேட்கணும்..” என்று சொல்லி விட்டாள்.
அவள் பேச்சை கேட்காமல் போய் விடவும் இப்போது ரதிக்கு இந்த விதமான நெருக்கடி.
“ஒன்னு உன் தங்கச்சி எங்க எதிரி கம்பெனியில் வேலை செய்யாம வெளியே வரணும். இல்லன்னா உன் அப்பா வாங்கிய கடனை திருப்பித் தரணும்..” என்றார்கள்.
இப்போதும் ரதி அதற்காகதான் தன் மாமியாரிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.
“நாங்க ஏன் கொஞ்ச நாள் டைம் தர வேண்டும்? உன் தங்கச்சி எல்லாம் தெரிஞ்சும் அந்த கைலாஷ் கம்பெனிக்கு வேலைக்கு போவா. நாங்க அமைதியா இருக்கணுமா?” என்று கேட்ட மாமியார் “ரெண்டுமே முடியாதுன்னா நீ இந்த வீட்டை விட்டு போயிடு. நீ போய் உன் பிறந்த வீட்ல வாழாவெட்டியா உட்கார்ந்தா உன் தங்கச்சி தன்னால வேலையை விடுவா..” என்றாள்.
ரதிக்கு இது இன்னும் அதிக மன அழுத்தத்தை தந்தது. அப்பாவும் அம்மாவும் ஏற்கனவே கடன் பிரச்சினைகளில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் கஷ்டத்தை தர இவள் விரும்பவில்லை.
“இன்னும் ஒரு நாள் டைம். அதுக்குள்ள நீ ஒரு முடிவுக்கு வா..” என்று சொல்லிவிட்டு மாமியார் ஷாப்பிங் கிளம்பி விட்டாள்.
ரதி தன் கணவனை பார்த்தாள். படியின் கைப்பிடியை பிடித்து கொண்டிருந்தவன் மனைவியின் பார்வைக்கு அர்த்தம் புரிந்து “நான் ஈவினிங் மம்மிக்கிட்ட பேசுறேன்..” என்றான்.
ஆனால் அவன் பேச மாட்டான். அப்படிப் பேச முயற்சித்தாலும் கனகவதி இரண்டே வார்த்தைகளில் அவனை ஊமையாக்கி விடுவாள்.
அவன் பயந்த சுபாவம் உள்ளவன். மனைவியையாவது கொஞ்சம் வாயாடியாக பார்த்து கட்டி வைத்திருக்கலாம். ஆனால் வந்து சேர்ந்த ரதியும் அவனைவிட மோசம். ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேச தெரியாது. இதனால் உண்டான ஒரே பலன் என்னவென்றால் இதுவரையிலும் கணவனும் மனைவியும் ஒரு முறை கூட சண்டை போட்டுக் கொண்டதே இல்லை.
மாமனார் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் மாமியார்தான் மாயாவை விட அதிகமான பிடிவாதக்காரி.
கணவன் பேசினாலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்று தெரிந்த ரதி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு லைப்ரரி அறைக்கு கிளம்பினாள்.
அவள் எந்த வேலைக்கும் செல்லவில்லை. தருண் தன் தந்தையோடும் தம்பியோடும் சேர்ந்து பிசினஸை கவனித்துக் கொள்கிறான். அலுவலகத்துக்குள்ளேயே எழுத்து விஷயமான வேலைகளை மட்டும்தான் பார்ப்பான்.
வெளியே செல்வதோ, ஒப்பந்ததாரர்களை சந்தித்து உரையாடுவதோ, விலை பேசுவதோ, ஆட்களை வேலைக்கு எடுப்பதோ, அரசாங்கம் அழைக்கும் போது அங்கே சென்று தங்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை பற்றி எடுத்துரைப்பதும் இவனுக்கு சுத்தமாக வராது.
திறமை உள்ள ஆள்தான். ஆனால் தயக்கத்தாலும் கூச்ச சுபாவத்தாலும் அலுவலகத்தின் ஒற்றை அறைக்குள் முடங்கியே வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவனே அப்படி இருக்கையில் அவனின் மனைவியை அலுவலகத்தில் உதவிக்கு அழைத்தால் பணி எப்படி சிறக்கும் என்ற சந்தேகத்தால் அவளை இந்த வீட்டில் இருந்த யாரும் வேலைக்கு வரச் சொல்லி அழைக்கவில்லை.
வருண் ஒருபுறம் வாடி நிற்பதையும், ரதி மறுபுறம் அழுது கொண்டு செல்வதையும் மாடியின் மீதிருந்து கவனித்தான் வருணின் தம்பி விக்னேஷ்.
அண்ணனைப் போல் இல்லாமல் இவன் சரியான துடுக்கு. கொஞ்சம் அடங்காப்பிடாரி என்று கூட சொல்லலாம். அம்மாவின் பேச்சையும் கொஞ்சம் கூட மதிக்க மாட்டான். அப்பா என்றால் கொஞ்சம் பிடிக்கும். ஏனென்றால் அவர் கொஞ்சம் நியாயவான்.
அவனுக்கு அப்பாவையும் அண்ணனையும் எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவுக்கு அண்ணி ரதியையும் பிடிக்கும்.
இத்தனைக்கும் அண்ணியும் இவனும் அரை நிமிடங்கள் சேர்ந்தால் போல கூட நின்று பேசி இருக்க மாட்டார்கள்.
அண்ணியின் சாந்தமும் அண்ணனிடம் அதிகம் பேசாமலேயே கூட அவனை புரிந்து கொள்ளும் அண்ணியின் காதலும் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
இவனுக்கு தூக்கம் வராத இரவுகளில் அண்ணனும் அண்ணியும் எப்படி பேசி தங்களின் உறவை வளர்ப்பார்கள் என்ற கற்பனையில் நேரம் கழியும்.
அவனின் பெரிய உலகில் அவனை மிகவும் ரசிக்க வைத்த காதல் ஜோடி அண்ணனும் அண்ணியும்தான்.
வருண் வாடிய முகத்துடனே வெளியே புறப்பட்டு செல்ல, இவன் அண்ணி இருந்த லைப்ரரிக்கு சென்றான்.
வீடு பெரியது. அத்தனை வசதிகளும் உண்டு. பல ஆயிரம் புத்தகங்களோடு லைப்ரரியும் அங்கு உண்டு. அண்ணி அண்ணனோடு இருக்கும் நேரத்தை விடவும் இந்த புத்தகங்களோடுதான் அதிக நேரம் இருக்கிறாள்.
லைப்ரரிக்குள் நுழைந்தவன் அண்ணியை தேடினான்.
லைப்ரரி இருட்டாக இருந்தது. அந்தப் பெரிய லைப்ரரியில் ஒரே ஒரு ஜன்னல் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அந்த ஜன்னலுக்கு கீழே உட்கார்ந்து தன் கையில் விஷ பாட்டிலை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி.
அதை கண்டவன் பாய்ந்து போய் அண்ணியின் கையில் இருந்த விஷ பாட்டிலை பிடுங்கினான்.
இவனை திடீரென்று வரவும் ரதி பயந்து விட்டாள்.
“என்ன முட்டாள்தனம் பண்றீங்க?” என்று இவன் சீற்றமாக கேட்கவும், அவள் பயந்து அழவே ஆரம்பித்து விட்டாள்.
இடது கையால் நெற்றியை பிடித்தபடி அவளுக்கு முன்னால் உட்கார்ந்தான்.
“ஏன் இப்படி ஒரு முடிவு?” என்று கேட்டான்.
“வருணை விட்டு நான் எப்படி போவேன்?” என்று கேட்டு அழுதாள்.
இவனுக்கு பாவமாக இருந்தது. அதேசமயம் அவள் அழுவதை பார்க்கும் போது குழந்தை ஒன்று மிட்டாய் கேட்டு அழுவது போலவும் இருந்தது. அதற்காக இவனுக்கு சிரிப்பும் வந்தது.
சிரிப்பை மறைத்துக்கொண்டு “உங்களை யார் போக சொன்னா? என் அம்மாகிட்ட சண்டை போடுங்க.. உங்க அப்பாவுக்கு கொடுத்த பணம் அத்தனையும் வரதட்சணையா வாங்கிய பணம்தானே? அந்த பணத்தை கொடுக்க முடியாதுன்னு என் அம்மாகிட்ட சொல்லுங்க..” என்றான்.
துப்பட்டாவால் வாயை பொத்தியவள் “என்னால எப்படி முடியும்? நான் எதிர்த்து பேசினா அத்தை என்னை வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க. அப்புறம் நான் வருணோடு இருக்க முடியாது..” என்று அழுகையின் இடையே சொன்னாள்.
அளவுக்கு அதிகமான அப்பாவித்தனம் இருந்தால் தலையில் மிளகாய்தான் அரைப்பார்கள். ஆனால் இதை சொன்னால் மட்டும் அவளுக்கு புரியவா போகிறது?
அவளிடம் இருந்து பிடுங்கிய விஷத்தைப் பார்த்தவன் “செத்துப் போவதால பிரச்சனை தீராது..” என்றான்.
“அது எனக்கும் தெரியும். ஆனா வருணை விட்டுட்டு விலகி இருப்பதற்கு பதிலா நான் செத்துப் போகலாம்..”
அவளின் கியூட் குரலுக்கு ஒரு புறம் ரசிகன் ஆனாலும் அவளின் வேதனை இவனை மறுபுறம் கஷ்டப்படுத்தியது.
“இப்படி முட்டாள்தனமா யோசிக்காதீங்க. உங்களை யாரும் அந்த ஊமையன்கிட்ட இருந்து பிரிக்கப் போவதில்லை..”
அவளுக்கு உடனே ரோஷம் வந்தது. “என் புருஷன் ஒன்னும் ஊமை கிடையாது..” என்றாள்.
“சரி என் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரை வர சொல்லுறேன். உங்க புருஷனை வந்து பேச சொல்லுங்களேன் பார்க்கலாம்..” என்றான்.
இவள் அப்பாவியாக விழித்தாள். அதுதான் அவளின் கணவனுக்கு வராதே!
“என் அம்மா சொல்வதை நினைச்சி கவலைப்படாதீங்க. நல்ல புக்கா எடுத்து படிங்க. நான் ஏதாவது பண்றேன்..” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
எழுந்தவனின் கால் சட்டையை பிடித்தாள் ரதி.
“நான் விஷப்பாட்டிலை கையில வச்சு பார்த்துட்டு இருந்தேன்னு தருண்கிட்ட சொல்லிடாதீங்க..” என்று சிறு குரலில் கேட்டுக்கொண்டாள்.
இவன் சரி என தலையாட்டிவிட்டு வெளியே நடந்தான்.
மாலை நேரம்.
மாயா கைலாஷ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள். ஆட்டோவுக்காக அவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க, கார் ஒன்று அவளின் பக்கத்தில் வந்து நின்றது.
திரும்பி பார்த்தாள். காருக்குள் இருந்த விக்னேஷ் ஜன்னலை இறக்கினான்.
அண்ணியின் கொழுந்தன் இங்கே எதற்காக வந்தான்?
அவனோடு இவளுக்கு அவ்வளவு பழக்கம் கிடையாது. அக்காவின் திருமண நாட்களிலும் அதன் பிறகு வந்த விசேஷ நாட்களிலும் பார்த்துக் கொண்டதோடு சரி. இதுவரை பேசியதும் கிடையாது.
“உங்களோடு கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. வாங்களேன் நானே உங்களை டிரா பண்றேன்..” என்று அவளை அழைத்தான் விக்னேஷ்.
மறுப்பு சொல்லாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.
“என்ன பேசணும்?” அவளின் குரலில் இவனின் இதயம் ஒரு நொடி துடிப்பை மறந்து போனது.
ரதியின் குரல் வயலினை போல இருக்கும். ஆனால் இவளின் குரலோ கோவில் மணியை போல கணீரென்று இருந்தது.
கைலாஷ் நிறுவனத்தின் முன்னால் தன் காரை நிறுத்தி வைக்க விருப்பம் இல்லாமல் கொஞ்ச தூரம் ஓட்டியவன் அதன்பிறகு வாகனத்தை நிறுத்தினான்.
“உங்களுக்கு வேலை வேணும்ன்னா எங்களோட ஆபீஸ்க்கு கூட வரலாம். நான் உங்களுக்கு நல்ல வேலை போட்டு தரேன். இங்கே ஏன் வேலை பார்க்கணும்?” என்று கேட்டான்.
கைகளை கட்டிக்கொண்டு அவனின் முகத்தை ஆராய்ந்தவள் “என் அக்கா உங்களை தூது அனுப்பினாளா?” என்று கேட்டாள்.
“இல்ல..” என்றவனிடம் “என்னோட அப்பா எவ்வளவு பெரிய பில்லியனர் தெரியுமா? ஆனா ஒரு நாய் சம்பந்தமே இல்லாம எங்க அப்பாவை பழிவாங்கிடுச்சு. எதுக்காக தெரியுமா? தர்மேந்திரா ஃபேமிலியோடு நாங்க சம்பந்தம் வச்சிக்கிட்டோம்ன்னு ஒரே ஒரு காரணத்துக்காக. மிஸ்டர் தர்மேந்திரா கூட நேரடியா மோத வக்கில்லாத அந்த நாய் எங்களை அடிச்சு கீழே தள்ளி எங்க குடும்பத்தையே நடுரோட்டுக்கு கொண்டு வந்துடுச்சு. அந்த நாயை திருப்பிப் போட்டு மிதிக்காம எனக்கு நிம்மதியான தூக்கம் வராது. அதுக்காக நான் கஷ்டப்பட்டு அவனோட கம்பெனியில ஒரு வேலையில் சேர்ந்தா நீங்க குடும்பமா சேர்ந்து என்னை வேலை விட்டு நிற்க சொல்லி டார்ச்சர் பண்ணுவீங்க. என்ன நியாயம் இது?” என கேட்டாள்.
இவன் அதிர்ச்சியில் கண்களை அகல விரித்தான்.
“உங்களோட நிறுவனம் முடங்க காரணம் கைலாஷா?” எனக் கேட்டான்.
“கைலாஷ் எங்களை பழி வாங்க காரணம் உங்க குடும்பம்..” என்று திருத்தினாள் இவள்.
தொடரும்… வெள்ளி நிலா
error: Content is protected !!