Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கவிபாடும் கானகமயிலே

கானகமயில் -12

கானகமயில் -12



Advertisement

கவி அந்த பண்பலையில் சேர்ந்து ஒரு வாரம் கடந்திருந்தது. ஒரு வாரமாகியும் அவளுக்கு ஏற்றார் போல், அவளது குரல் வளத்திற்கு ஏற்றார் போல் எந்த நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் அனைவரும் குழம்பி இருந்த வேளையில், டேபிளில் இருந்த பேப்பரில் எதையோ எழுதிக் கொண்டு அமர்ந்திருந்தாள் கவி.

அவள் அருகே அமர்ந்து சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்த மந்த்ரா இவள் ஜாலியாக எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “உனக்கு ஜாலியா பொழுது போகுதோ. உனக்கு என்ன ப்ரோக்ராம் கொடுக்கலாம்னு சார் யோசிக்க சொல்லிட்டாருன்னு நாங்க மண்டையை பிச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா நீ ஜாலியா உட்காந்து என்னமோ கிறுக்கிக்கிட்டு இருக்கிற.”

“என்னன்னு தெரியல என்னமோ தோணுச்சு எழுதிட்டு இருந்தேன்”  என்று சொன்னதும் அதை வாசித்துப் பார்த்த மந்த்ராவிற்கு சட்டென்று அந்த யோசனை தோன்றியது.

Advertisement

அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு மார்த்தாண்டம் இருந்த அறைக்கு சென்ற மந்த்ரா கதவை தட்டு விட்டு காத்திருக்க,

Advertisement

அவர், “உள்ளே வாங்க” என்று சொன்னதும் உள்ளே நுழைந்தவள்,

“சார் எனக்கு ஒரு யோசனை தோணுது” என்றாள்.

“என்ன யோசனை?”

Advertisement

“இல்லை சார் கவிக்கு என்ன மாதிரி ப்ரோக்ராம் அலாட் பண்ணலாம்னு நீங்க யோசிக்க சொன்னீங்கல்ல. கூடவே எதுவா இருந்தாலும் புதுசா பண்ணனும்னு வேற சொல்லிட்டு இருந்தீங்க இல்லையா, அதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு சொல்லலாம்னு வந்தேன்”

“அதான்மா என்ன யோசனை?”

“இந்த பேப்பரை கொஞ்சம் படிச்சு பாருங்களேன். நான் என்ன சொல்ல வர்றேங்கிறது உங்களுக்கே புரியும்” என்றதும் அவளது கையில் இருந்த காகிதத்தை வாங்கி படித்துப் பார்த்தார் அவர்.

உருவமில்லா உருளை
ஒன்று தொண்டைக்குள்
சிக்கி தவிக்கிறது
ஓரவிழி பார்வையால் நீ
தீண்டி நகர்கையில்..

என்று எழுதி வைத்திருந்தாள் கவி. அதை படித்து பார்த்த மார்த்தாண்டம், “என்ன, இதுல ஒரு கவிதை எழுதி இருக்கு அவ்வளவு தானே. இதுக்கும் நீ சொல்ல வர்றதுக்கு என்ன சம்ந்தம்?”

“சார் இது கூட உங்களுக்கு புரியலையா? இதுவரைக்கும் நம்ம கவிதைகள் சொல்லி புரோக்ராம் ஹோஸ்ட் பண்ற மாதிரி எதுவும் செய்யலை இல்லையா. அது மாதிரி கொஞ்சம் ட்ரை பண்ணலாமே”

“நீ சொல்றது சரிதான்மா. ஆனா அந்த அளவுக்கு அந்த பொண்ணால கவிதை எழுத முடியுமா?”

“ஒரு செகண்ட்ல இந்த கவிதையை அந்த பொண்ணு எழுதிட்டா சார் அப்படி இருக்கும் போது ப்ரோக்ராம்ல ஒரு நாலு கவிதையோ, அஞ்சு கவிதையோ சொல்லுற மாதிரி தானே இருக்கும். இது மாதிரி ஏன் முயற்சி பண்ணக்கூடாது. கவிதை சொல்லி அது மூலமா ஏதாவது கருத்து சொல்ற மாதிரி இருந்தாலும் நல்லா தான் இருக்கும். அது ஒரு காதல் கவிதையாவோ இல்லை சோக கவிதையோ இல்லன்னா ஏதோ ஒண்ணா இருந்துட்டு போகட்டும். அதை வச்சு அன்னைக்கான அந்த ப்ரோக்ராமை ரன் பண்ற மாதிரி ஏதாவது ட்ரை பண்ணலாமே, புதுசா இருக்கும், எல்லாருக்கும் ரீச் ஆகும் இல்லையா. யோசிச்சு பாருங்க சார்”  என்று சொல்ல,

“சரி இதைப் பத்தி நான் யோசிக்கிறேன்” என்றார் மார்த்தாண்டம்..

“சரிங்க சார்” என்று சொல்லி விட்டு அவள் வெளியில் வந்த பிறகும் கூட, இன்னும் டேபிளில் தலை சாய்த்துப் படுத்தவாறு மற்றொரு பேப்பரில் கிறுக்கி கொண்டிருந்த கவியை கண்டு தலைதலையாக அடித்துக் கொண்டவள், “ஏன் உனக்கு கவிதைன்னா அவ்வளவு பிடிக்குமா. இப்ப தான் ஒரு பேப்பரை வாங்கிட்டு போனேன், மறுபடியும் இன்னொரு பேப்பர்ல எழுத ஆரம்பிச்சுட்ட” என்று கேட்க…

“தெரியல மந்த்ரா எனக்கு சின்ன வயசுல இருந்தே ஏதாவது ஒரு விஷயத்தை கத்துக்கணும், கத்துக்கிட்டே இருக்கணும்னு தோணும், இதுவும் அது மாதிரி தான். அது மட்டும் இல்ல எனக்கு கவிதை எழுத பத்தாவது படிக்கும் போதே இன்ட்ரஸ்ட். ஏன்னா கூட படிக்கிற பசங்க அவங்க சைட் அடிக்கிற பொண்ணுங்களுக்கு கவிதை எழுதிக் கொண்டு போய் தருவாங்க. அது ரொம்ப தப்பு தப்பா இருக்கும், அதுக்கப்புறம் நான் எழுதுன கவிதையைக் கொண்டு போய் கொடுப்பாங்க, இல்லன்னா அவங்க எழுதின கவிதையை கரெக்ஷன் பண்ணி வாங்கிட்டு போவாங்க. அப்படி ஆரம்பித்த பழக்கம் தான் இது, இப்ப வரை விட முடியல”

“ஓஓ. அதனால தான் உன் பெயர்லையே கவி இருக்கோ” என்று கிண்டல் செய்தவாறு அவர்கள் அருகில் அமர்ந்தாள் அபிநயா.

“ச்சேசே அப்படியெல்லாம் கிடையாது. சின்ன வயசுல அப்பா அம்மா அந்த பேர் வச்சுட்டாங்க. ஆனா எனக்கு கவிதை வாசிக்கவும் பிடிக்கும், இப்படி எழுதவும் பிடிக்கும் அவ்வளவு தான். இப்பவும் கூட என்னோட பீலிங்க்ஸை யார்கிட்டையும் அதிகமா ஷேர் பண்ணிக்க மாட்டேன். எனக்குள்ள இருக்கிற எண்ணங்களைக் கவிதையா எழுதி வச்சுடுவேன். தினமும் என்ன நடந்துச்சுன்னு எல்லோரும் அவங்களோட டைரியில எழுதி வைப்பாங்க. பட் அதைக்கூட சின்ன ஒரு கவிதையில எழுதி வைக்கணும்னு எனக்கு ஆசை. அப்படித்தான் எழுதியும் வைப்பேன், நான் இப்பவுமே அப்படித்தான்” என்றள்.

“சரி குடு இப்ப எழுதுனதைப் பார்க்கலாம்” என்றவாறு அவளிடம் இருந்து பேப்பரை வாங்கி சத்தமாக படித்தாள் தீபா.

உறையாத ஓவியமோ
அவள்
கரம் நீட்டி அணைக்கையில்
கலைந்து போகிறாள்..

வெண்ணிற வெண்மதியோள்
நொடிக்கு நொடி
இடம்பெயர்கிறாள்
எந்தன் உணர்வுளின்
வடிவத்தை அவளுள் தேடுவதால்..

ஒய்யாரமாய் நிற்பவளைக் கடக்கையில் விழி தாழ்த்திக் கொள்கிறேன்
அவள் விழிப்பாவைக்குள்
சிறையிட்டிடுவாளோவென..

காற்றாய் மாறிடவும் விருப்பமே விழிக்கு புலப்படாவிடினும்
உன் மேனி தழுவிடும் வரம் கிட்டுமெனில்.

தீபா படித்து முடித்ததும் சடசடவென்று கொட்டு தீர்க்கும் மழையை போல் அங்கிருந்தவர்களின் கைத்தட்டல்களின் பாராட்டு மழையில் நனைத்து விட்டிருந்தாள் கவி.

அனைவரையும் பார்த்தவளது பார்வையில் எதுவும் இல்லை, ஆனால் அழகனை தழுவி விட்டு நகர்ந்த பார்வையில் மட்டும் ஒரு இனம் புரியா உணர்வு விரவி கிடந்ததை அவளை அன்றி வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நிச்சயமாக அழகனும் கூட இப்படி அழகாக அவள் கவிதை எழுதுவாள் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை.

அனைவரும்,
“ சூப்பரா எழுதி இருக்கிற”

“ரொம்ப நல்லா இருக்கு”

“ எதிர்பார்க்கவே இல்லை இப்படி எழுதுவன்னு”..

“அதுவும் வேற லெவலா இருக்கு தெரியுமா அந்த கவிதைகள் எல்லாம்”

“ஒரு பையன் இடத்துல இருந்தும் கவிதை எழுதி இருக்க, ஒரு பொண்ணோட இடத்துல இருந்தும் கவிதை எழுதி இருக்க.. உண்மையாலுமே கவிதை ரொம்ப சூப்பரா இருக்குது” என்று ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரும் வாழ்த்தினாலும் கூட அழகனோ இதழ் பிரித்து வார்த்தைகளை உதிர்க்காவிடிலும் இதழ் பிரியா புன்னகை ஒன்றை போகிற போக்கில் விசிற விட்டுச் செல்ல, அந்த ஒற்றைப் புன்னகையில் நொடியில் விழுந்து எழுந்தது அவளது பெண் மனம்..

அன்றைய நாள் ஏனோ கவிக்கு மிகவும் உற்சாகமாகவே சென்றது. அதற்கு காரணம் தன்னைக் கடந்து செல்கையில் அழகன் உதிர்த்து விட்டு சென்ற இதழ் பிரியா புன்னகை என்பதை அவள் மட்டுமே அறிவாள். அதேபோல் அவளது கவிதைகள் ஏனோ அழகனுள் ஒருவித குறுகுறுப்பை உண்டாக்கி இருந்தது. அதனால் தான் எப்போதும் அல்லாமல் இன்று அதிசயமாய் அவ்வபோது தன்னையும் அறியாமல் அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்..

இன்று அவர்கள் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்கையில் எப்போதும் போல் பேருந்துக்காக அழகன் காத்திருக்க, அவன் வந்து நின்ற சில நிமிடங்கள் கழித்து கவியும் அவன் நின்ற நிழற்குடையின் கீழ் வந்து நின்றாள்.

அதே நேரம் திடீரென்று மழை பிடித்துக் கொள்ள, இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“மழை வந்துருச்சு இப்ப எப்படி வீட்டுக்கு போறது?” என்ற அவளது குரலில் அவள் புறம் திரும்பியவன்,

“அதெல்லாம் போயிடலாம் நீங்க பீல் பண்ணாதீங்க. பஸ்ல தானே போறோம் நனையாம போயிடலாம்.‌ வீட்டுக்கு கூப்பிட்டு குடை கொண்டு வர சொன்னீங்கன்னா, பஸ் ஸாடாப்ல இருந்தும் நனையாம வீட்டுக்கு போயிடலாம்” என்றான்.

“அப்பா உங்களுக்கு பேசக்கூட தெரியுமா. அதுலையும் இவ்வளவு லென்த்தா பேசுவீங்களா என்ன? நாங்க எல்லாம் ஏதாவது கேள்வி கேட்டா இரண்டே வரியில் பதில் சொல்றவரு, இப்ப மட்டும் இவ்வளவு பெருசா பேசுறீங்க” என்றாள் போலி வியப்போடு.

அப்போது போல் இப்போதும் அளவான புன்னகையை இதழில் கூடியவன், “பொண்ணுங்கக்கிட்ட பெருசா பேசி  பழக்கம் இல்லைங்க.. அதனால தான் பேசல”

“நான் இங்க வந்து ஒன் வீக் தான் ஆகுது. எல்லாருமே ஓரளவுக்கு பேசுறாங்க, நீங்க தான் என் கூட பேசவே மாட்டேங்கிறீங்க. பழக்கம் இல்லன்னா பரவால்ல, பழகிக்கோங்க. ஒரு இடத்துல வேலை செய்யறோம் இல்லையா, பேசி பழகிக்கிட்டா நல்லது தானே”

“இல்லைங்க நான் இங்க வந்து ஜாயின் பண்ணி மூணு வருஷம் ஆகப்போகுது இதுவரைக்கும் யாரு கூடவும் அவ்வளவு நெருக்கமா பேசி பழகினது இல்ல. எனக்கு அதை எப்படி சொல்லறதுன்னு தெரியல” என்றான்.

“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான‌ டைப்ல இருக்காங்க போல. சரிங்க உங்களை நான் கம்பெல் பண்ணல” என்றதும் அவனும் எதுவும் பேசவில்லை. அவர்களுக்கான பேருந்து வந்ததும் இருவரும் ஏறிக்கொண்டனர்.

அப்போது தான் அழகன் அவளது கைப்பையைக் கவனித்தான். திடுக்கிடலுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன், ‘என்னோட முகத்துல காயமாக்குன பேக் மாதிரி இருக்குது’ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் அதை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு, “ஏங்க இந்த ஹேண்ட் பேக்கால யாரையாவது இடிச்ச ஞாபகம் இருக்கா ஒரு வாரத்துக்கு முன்னாடி. அதாவது நீங்க ஆபீஸ்ல வந்து ஜாயின் பண்ணுன அன்னைக்கி” என்று கேட்க,

“அட ஆமாங்க. அந்த பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்துச்சா, என்னை ஒருத்தர் பின்னாடி தள்ளி விட்டுட்டாங்க அதுல பேக் ஒருத்தர் மேலே போய் பட்டுடுச்சு, அவருக்கு காயமாகி இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க ஸ்கின்னோட‌சின்ன பீஸ் என்னோட பேக்ல ஓட்டிட்டு இருந்துச்சு யாருன்னு தெரியல பாவம்.  ஆனா யாருன்னு தெருஞ்சிருந்தா கண்டிப்பா சாரி கேட்டிருப்பேங்க” என்றாள்.

அவனோ தன் நெற்றியை நீவி விட்டவன், “இந்த காயம் தாங்க அது. அந்த பாவப்பட்ட ஜீவன் நான் தான்” என்றான் முகத்தை காட்டி,

அதிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “சாரிங்க வேணும்னே எதுவும் பண்ணல” என்றிட,

“பரவால்லங்க” என்றவன் இப்போது இரு பற்கள் தெரியும் அளவிற்கு புன்னகை ஒன்றை சிந்தி விட்டு நகர்ந்து எப்போதும் தனக்கு கிடைக்கும் இருக்கையில் அமர்ந்து விட, இவளோ முன்னே நகர்ந்து சென்று காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவ்வபோது அவனைத் திரும்பி பார்த்தவாறே இருந்தாள் கவி. ஆனால் நேரம் ஆக ஆக கூட்ட நெரிசலில் அவளால் திரும்பி பார்க்க முடியாமல் போனது.  அவன் எந்த ஊர், எந்த பஸ் ஸ்டாப்பில் இறங்குவான் என்பதை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் சிறிது கூட்டம் குறைந்ததும் திரும்பிப் பார்க்க அவன் அமர்ந்து இருந்த இடம் காலியாக இருந்தது.

‘நானும் பார்க்குறேன் எவ்வளவு பேசினாலும் அவங்கக்கிட்ட இருந்து எந்த ஊருங்கிற விஷயத்தை வாங்க முடியலையே. அங்க இருக்கவங்கள்லையே இவரு கொஞ்சம் வித்தியாசமா இருக்காரு’ என்று நினைத்தவளது மனக்கண் முன் அவனது இதழ் பிரியா சிரிப்பும், கண்ணியமான பார்வையும் வந்து சென்றது. ‘உண்மையாலுமே இவர் ஒரு யூனிக் பீஸ் தான்னு நினைக்கிறேன்’ என்ற நினைவோடு வீட்டிற்கு வந்தவளை கோபமான முகத்தோடு வரவேற்றார் அவளது தந்தை கரிகாலன்.

“அச்சோ என்னாச்சுங்கப்பா ஏன் கோவமா இருக்கீங்க?” என்று கேட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தவளை உறுத்து விழித்தவர், “இன்னைக்கு நான் ஆபீஸூக்கு லீவ் போடச் சொன்னேன், நீ லீவ் போடல” என்றார்.

“அப்பா இப்ப தான் ஜாயின் பண்ணி இருக்கேன் உடனே எப்படி லீவு போட முடியும்”

”உன்னை யாரு இப்படி சம்பாதிக்க போகச் சொன்னது” என்றவர் கோபமாய் கேட்க,

“என்னப்பா கேள்வி கேட்குறீங்க? படிச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியல அதான் வேலைக்கு போறேன் இதுல என்ன இருக்குது..”

“நீ வேலைக்கு போய் தான் நாம சாப்பிடணுமா?”

“அப்படி இல்லப்பா பொண்ணுங்க சொந்தக்கால்ல நிக்கணும்னு நீங்கதானே சொல்லி வளர்த்தீங்க. அது மட்டும் கிடையாது நீங்க எது சொன்னாலும் அதை நான் கேட்பேன், ஆனா இந்த ஒரு விஷயத்தை விட்டுடுங்கப்பா. பொண்ணுங்க சொந்தக்கால்ல நிக்கணும் அது ஏன்னா அது அவங்களுக்கான ஃப்ரீடம் மட்டும் கிடையாது, அது அவங்களுக்கான முன்னேற்றம், அவங்களுக்கான அங்கீகாரம். எவ்வளவு நாள் தான் நாங்க வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடக்க முடியும்.

அது மட்டும் இல்ல வெளிய போனா தானே நாலு விஷயம் தெரிஞ்சுக்க முடியும், நாலு பேர்கிட்ட பழகி நல்லது கெட்டதை கத்துக்க முடியும் அதுக்காக தான் போறேன். இது பிடிக்கலையா சொல்லுங்க நான் வீட்டுலையே இருந்துடுறேன், ஆனா இதே வார்த்தையை அம்மா சொல்லணும் அப்ப வேணா நான் வீட்ல இருக்கேன்” என்றதும் சமைத்துக் கொண்டிருந்த அவள் தாய் ராகவியோ,

“நீங்க ரெண்டு பேரும் பேசறதா இருந்தா நீங்க ரெண்டு பேரும் தான் பேசணுமே தவிர தேவையில்லாம என்னை உள்ளே இழுக்குற வேலை வச்சுக்காதீங்க..” என்று எரிச்சலோடு சொன்னார்.

“பொண்ணுங்க வேலைக்கு போயி சொந்த காலுல நிக்கணும், பொண்ணுங்கன்னா போல்டா இருக்கணும். அதே மாதிரி நம்ம கலாச்சாரத்தை கடைபிடிக்கணும், அதனால தான் நானா தேடி பிடித்து ஒரு எப்எம்ல ஜாயின் பண்ணி இருக்கேன். என்னோட வாய்ஸ் நல்லா இருக்குன்னு நீங்க சொல்லவும் தான் நான் அங்க ஜாயின் பண்ணுனேன். வேற எல்லா வேலையும் ரிஸ்கா இருக்கும், இதுல அவ்வளவு ரிஸ்க் இருக்காதுன்னு அப்பா தான் சொன்னாரு அதனால தான் போய் ஜாயின் பண்ணுனேன். இப்ப ஜாயின் பண்ணி ஒரு வாரத்துலையே லீவ் போடுன்னு சொல்றாரு, நீ சம்பாரிச்சு தான் நாம சாப்பிடணுமான்னு கேட்குறாரு. என்னம்மா இதெல்லாம்..?”

“என்ன பண்றது உங்கப்பா பாரஸ்ட் ஆபீஸரா இருந்தாருல்ல, மரம், செடிகளோடவே குப்பை கொட்டுனதால மனுஷங்களைப் பத்தி அவருக்கு சரியா தெரியல நீ விடுமா” என்றதும் தன் மனைவியையும் முறைத்தார் கரிகாலன்.

“இப்ப என்ன நான் இப்படி சொல்லி இருக்க கூடாது அவ்வளவு தானே. உனக்கு எது நல்லா வருமோ அதை படிக்க வச்சோம். இப்ப வேலைக்கும் போற இல்லைன்னு சொல்லல. ஆனா இதுல எனக்கு உடன்பாடில்லை. நீ என்னை மாதிரியே ஒரு நல்ல வேலையில உட்காரணும்னு தான், கோச்சிங் கிளாஸ்ல சேர்த்து விட்டேன்.‌ ஆனா நீயோ முடியவே முடியாதுன்னு சொல்லிட்ட,  எனக்கு விருப்பமானதை தான் செய்வேன்னு சொல்லி இந்த வேலைக்கு போற. ஆனா இப்போ உங்க அம்மாக்கிட்ட அப்படியே நான் தான் சொன்னேங்கிற மாதிரி சொல்ற” என்றதும்,

முகத்தை சோகமாக வைத்தவள், “இதே நீங்க பெத்த பொண்ணா இருந்திருந்தா இப்படி என்னை போர்ஸ் பண்ணுவீங்களா? யாரோ பெத்த பொண்ணா இருக்கவும் தானே இப்படி..” என்று அவள் வார்த்தைகளை முழுதாக முடிக்கவில்லை,

“கவி என்ன பேச்சு பேசுற?” என்று அதட்டினாள் ராகவி.

நிமிர்ந்து அவர்கள் இருவரையும் கண்கள் பனிக்க பார்த்தவள், “பாட்டி அப்படித்தானே அம்மா சொன்னாங்க. நான் நீங்க பெத்த பிள்ளை இல்லைன்னு” என்று சொன்னவள் அழுத விழிகளோடு அறைக்குள் சென்று அடைந்துவிட, இறக்கும் தருவாயில் கரிகாலனின் தாய் இந்த உண்மையை சொல்லி விட்டு செல்வார் என்று ராகவி, கரிகாலன் இருவருமே எதிர்பார்க்கவில்லை.  ஒவ்வொரு வினாடியும் கவி அந்த வார்த்தைகளைச் சொல்லும் போதெல்லாம் இவர்கள் இருவரும் தான் துடிதுடித்து போயினர்..

         – கானகமயில் கவிபாடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!