Skip to content
Post Views: 1,935

கானகமயில் -15
மதனைக் கண்டு விட்டு அதிர்ந்த கவி சில நிமிடங்களில் தன்னை தேற்றிக்கொண்டவள், “எப்படி இருக்கீங்க அண்ணா?” என்று கேட்க.
Advertisement
“அடேப்பா அண்ணனா, யாரு நானா? உயிருக்குயிரா காதலிச்சவனையே ஜஸ்ட் லைக் தட்னு தள்ளி விட்டுட்டு போன நீ, என்னை உறவு முறை சொல்லி கூப்பிடுறியா? அடடா கேட்கும் போது எப்படி இருக்குது தெரியுமா, நாராசமா இருக்குது. இல்ல அவன் உன்னை உண்மையா நேசிச்சதைத் தவிர வேறு எந்த தப்பும் செய்யல. அப்படி இருக்கும் போது உன்னால எப்படி அவனுக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்ய முடிஞ்சுச்சு”
“அண்ணா உண்மை தெரியாம நீங்க என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. நான் வேணும்னே அவரைக் காயப்படுத்தணும்னு நினைக்கல, கஷ்டப்படுத்தணும்னு நினைக்கல.”
“அதானே, அவன் வேணும்னு நீ நெனச்சிருந்தா அவனை அந்த மாதிரி கஷ்டப்படுத்தி இருக்க மாட்ட, காயப்படுத்தி இருக்க மாட்ட. அவன் வேணாம்னு நெனச்சதால தானே இவ்வளவும் பண்ணுன. ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியாது.
Advertisement
அவன் யாரு எப்படிப்பட்டவன், அவன் குணம் என்னன்னு எங்க யாருக்கு தெரியாது. வேலைக்கு வந்த நாளுல இருந்து எல்லார்கிட்டையும் காட்டுன ஒதுக்கத்தை தான் உன்கிட்டையும் காட்டுனான். ஆனா போக போக உன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டானே அதுக்காகவா அவன் முதுகுல குத்துன. அவன் வாங்க வேண்டிய விருதை நீ வாங்கிட்டு வந்து நிக்கிறியே, அதிலிருந்தே தெரியலையா இதுக்காகத்தான் அவன் மேலே இல்லாத பழிய சுமத்தி வெளியே அனுப்பினேன்னு..”
Advertisement
“ஏன் அண்ணா என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க. அன்னைக்கு நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. சார் அப்படி பண்ணுவார்னு எனக்கே தெரியாது. அப்படி இருக்கும் போது முழுசா என் மேல தான் தப்பு இருக்குன்னு நீங்க சொல்றீங்க”
“உன் மேல தப்பு இல்லல்ல, சோ அப்பவே நீயும் எங்களை மாதிரி அங்க இருந்து வெளியில வந்து இருந்திருந்தினா நீ நல்லவளா இருந்திருப்ப, உன் மேல தப்பு இல்லன்னு எங்களுக்கும் புருஞ்சுருக்கும். ஆனா அதுக்கப்புறமும் அங்கேயே இருந்து சாதிக்கணும்னு நெனச்சு, இதோ மேடை ஏறி அவார்டும் வாங்கிட்ட இல்லையா இதுலையே உன் இலட்சணம் புரியுது.
இது என் பிரண்ட் வாங்க வேண்டிய அவார்ட். அவனைக் கீழே தள்ளிட்டு ஏறி மிதிச்சு, அவன் மேல நின்னு நீ இந்த அவார்டை வாங்கி இருக்கிற, இதனால உனக்கு சந்தோசம் கிடைச்சதா நீ நினைக்க வேண்டாம். இன்னொருத்தருக்கு உண்டானதை நீ தட்டி பறிச்சதுனால, அதுக்கு நீ தகுதியானவள்னு நீ நினைச்சுக்கலாம். ஆனா அது உண்மை கிடையாது, இதெல்லாம் அவனுக்கு சேர வேண்டியது” என்று வார்த்தைகளை கனலை அள்ளி கொட்டியது போல் கொட்டினான்.
Advertisement
அவனை விழிகள் கலங்க பார்த்தவள், “எல்லாரும் என்னைத் தப்பா நினைக்கிற மாதிரி தானே நீங்களும் நினைக்கிறீங்க. ஆனா அவர் என்னை அப்படி நினைக்க மாட்டாரு, அவரு என்னைப் புருஞ்சுக்கவாரு” என்றாள்.
“அவரா, எவரு? அனாதையா நடுத்தெருவுல ஒருத்தனை விட்டுட்டு வந்தியே அவனையா சொல்ற. அவன் உன்னைப் புருஞ்சுப்பான்னு நினைக்கிறாயா? அதெல்லாம் அவன் உன்னை மறந்துட்டு அவனுக்குன்னு ஒரு லைஃபை பார்த்துக்கிட்டு போயிட்டான். இப்ப அவன் ரொம்ப நல்லா இருக்கான், தள்ளி நின்னு பார்த்தாலும் அவனோட வளர்ச்சியைப் பார்த்துட்டு தான் இருக்கேன். அவனை தேடிப்போனா என்னோட சேர்த்து, உன்னோட ஞாபகமும் அவனுக்கு வரும்னு தான் தள்ளி இருந்து அவனை பார்த்துட்டு இருக்கேன். ஆமா என்ன எப்பவும் உன் கூட ஒண்ணு ஒட்டு வால் மாதிரி சுத்திட்டு இருக்கும், அதைக் காணோம்?” என்று மதன் கேட்டதும்,
கவிக்கு உள்ளம் உடைந்தது. ‘என்னை மறந்துட்டாரா? வேற வாழ்க்கையை வாழுறா?’ என்று நினைத்து வெதும்பியவள், எச்சிலை அழுத்த கூட்டி விழுங்கியவளாய், “அவள் இன்னைக்கு வரல” என்றாள்.
“எப்படி வருவா, காதலிச்சது என்னை, கல்யாணம் பண்ணிக்கிட்டதும் என்னை, ஆனா உனக்காக என்ன டிவோர்ஸ் பண்றேன்னு சொல்லிட்டு திரியிறவளுக்கு நான் இங்கே வருவேன்னு தெரியும். அதனால தான் வராம இருந்திருப்பா. அவனோட வாழ்க்கை மட்டும் இல்ல, எங்களோட வாழ்க்கையை நாசமா போனதுக்கும் நீ மட்டும் தான் காரணம் அதை நல்லா புரிஞ்சுக்க.”
“உங்க பிரண்ட் பக்கம் இருக்கிற நியாயத்துக்காக இவ்வளவு தூரம் பேசுறீங்களே, என் பக்கம் இருக்கிற நியாயத்தை நீங்க புரிஞ்சுக்கலல்ல. எப்படி புருஞ்சுக்குவீங்க, அவர் மாதிரி நீங்களும் ஒரு ஆம்பள தானே, ஆம்பளைங்க ஆம்பளைக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க. ஆனா ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணு சப்போர்ட் பண்ணிட்டா மட்டும் உடனே வரிஞ்சு கட்டிட்டு வருவீங்க இல்லையா. யாரும் என்னைப் புருஞ்சுக்க வேண்டாம், ஒவ்வொருத்தருக்கும் நான் இப்படித்தான், நான் இப்படிப்பட்டவ தான்னு நிரூபிச்சுட்டே இருக்கணும்னா, லைஃப் லாங் நிரூபிச்சுக்கிட்டே தான் இருக்கணும்” என்று அழுத்தமாய் சொன்னவள் மார்த்தாண்டம் தொலைவில் வருவதை கண்டு விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
செல்லும் அவளையே பார்த்திருந்த மதனுக்கும் ஆத்திரமும் கோபமும் ஒரு சேர எழுந்தது. செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பது யார்? இருவர் பக்கமும் நியாயம் இருக்கிறது என்று இருவரும் வாதாடுகிறார்கள். ஆனால் தவறு யார் பக்கம், தவறு செய்தது யார் என்று தெரியாமலேயே இருவரும் தண்டனையை அனுபவிக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கவில்லை..
சற்று முன்பு வரையிலும் விருது வாங்கியதில் மகிழ்ச்சி இல்லாமல் தான் இருந்தாள், ஆனா எதையோ சாதித்த உணர்வு இருந்தது. ஆனால் இப்போது மதன் பேசிய வார்த்தைகள் ஏற்கனவே ரணமாக இருந்த மனதை இன்னும் ரணமாக்கியது. அதே யோசனையோடு வந்தவளிடம் பின்னே வந்த மார்த்தாண்டம்,
“என்ன முடிவு பண்ணியிருக்கமா” என்று கேட்டார்.
“இதுல முடிவு பண்ண என்ன இருக்குது சார். என்னைக்கு நான் மேடை ஏறி அவார்ட் வாங்குறனோ, அன்னையோட இந்த வேலையை விட்டுடுறேன்னு தானே உங்கக்கிட்ட சொல்லிருந்தேன். அதுக்கு ஐந்து வருஷம் ஆகியிருக்கலாம் தான் இல்லன்னு சொல்லல, ஆனாலும் வாங்கிட்டனே. இதுக்கு மேலே நான் இந்த வேலையைக் கண்டினியூ பண்ண போறது இல்ல சார். எனக்குன்னு சில தவிர்க்க முடியாத வேலைகள் இருக்குது”
“நீ சொல்றது எனக்குமே புரியுதும்மா. ஆனாலும் உன்னை மாதிரி ஒரு நல்ல ரேடியோ ஜாக்கியை நாங்க இழக்க விரும்பல அதனால தான் மறுபடியும் இதைப் பத்தி உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்”
“பரவால்ல சார் எவ்வளவு பேர் இருக்காங்க அவங்க இது மாதிரி முன்னாடி வரட்டுமே. அவங்களுக்கு இடம் கொடுத்து நான் விலகி போறது தான் சார் சரின்னு தோணுது” என்று சொல்லி விட்டு காரில் ஏறி அமர, உடன் அமர்ந்து இருந்தவர்களுக்கு மட்டுமல்ல மார்த்தாண்டத்துக்குமே அவள் நாலு வருடத்திற்கு முன்பாக சொன்ன வார்த்தை தான் நினைவுக்கு வந்தது.
“என்னைக்கு நான் மேடை ஏறி அவார்டு வாங்குறனோ அன்னைக்கு இந்த வேலையை விட்டுடுவேன், அதுவரைக்கும் என் முயற்சியை விடமாட்டேன்” என்று அழுத்தமா சொன்னவள், சொன்னது போல் செய்தும் காட்டி விட்டாள். இதில் அவள் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி அடைவதா அல்லது வேலையை விட போகிறாளே என்று நினைத்து கவலை கொள்வதா என்று தெரியாமல் தான் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள்.
கிட்டத்தட்ட பலமணி நேர பயணத்திற்கு பிறகு வாய் திறந்தார் மார்த்தாண்டம். “உன்னை வீட்டுலையே டிராப் பண்ணிடவாம்மா” என்று கேட்டதும்,
இல்லை என்பது போல் தலையசைத்தவள், “நான் சொல்ற பஸ் ஸ்டாப்ல இறக்கி விடுங்க சார் நான் அங்க இருந்து போயிக்கிறேன்.”
“ஏன் இப்படி இருக்கிறம்மா? உன்னோட வீடு இங்க இருக்க யாருக்குமே தெரியாதேம்மா. ஏன் நாங்க அதை தெருஞ்சுக்க கூடாதுன்னு நினைக்கிற” என்றவர் கேட்டதும்,
சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தாள் தீபா. அதை உணர்ந்த கவி வேண்டாம் என்பது போல் தலையாட்டியதும் தீபா தலை குனிந்து கொண்டாள்.
“சொல்ல கூடாதுன்னு எல்லாம் எதுவும் இல்லை சார். நான் யார் வீட்டுக்கும் போக விரும்பல, அதே போல யாரும் என் வீட்டுக்கு வர்றதையும் விரும்பல சார், அதனால தான் சொல்லல. அந்த பஸ் ஸ்டாப்ல நிப்பாட்டுங்க சார் நான் இறங்கி போயிருக்கிறேன்”
”இல்லம்மா லேட் நைட் ஆயிடுச்சு”
“இல்ல சார் பரவால்ல” என்று சொன்னதும் மனதே இல்லாமல் அந்த பேருந்து நிறுத்தத்தில் அவளை இறக்கி விட்டு கார் அங்கிருந்து நகர்ந்தது. பெருமூச்சோடு அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்கலாம் என்று அவள் நினைத்த வேளையில் அவள் அருகே வந்து நின்றது இருசக்கர வாகனம் ஒன்று.
பெருமூச்சோடு அவள் பின்புறம் ஏறியதும், இருசக்கர வாகனம் கிளம்பியது. சில நிமிடங்களுக்கு பிறகு,“என்ன உன்னோட முடிவை தெளிவா சொல்லிட்டியா?” என்று முன்புறம் இருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
“சொல்லிட்டேன். ஆனாலும் யாரும் நான் சொல்றதை நம்ப மாட்டேங்கிறாங்க.”
“நம்பாம தான் இருப்பாங்க. அவார்டு வாங்கின பொண்ணு உடனே வேலையை விட்டு போறேன்னு சொன்னா எல்லாரும் பீல் பண்ண தான் செய்வாங்க. ஆனா இது நமக்கான இடம் கிடையாது, நாம இருக்க வேண்டிய இடத்துல இருந்தா தான் நமக்கான மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இந்த உலகம் நல்ல உலகம் கிடையாது, நான் சொல்றது உனக்கு புரியுது தானே” என்றதும், புரிந்தது என்று தலையாட்டினாள் அதை கண்ணாடி வழியே முன்புறம் இருந்தவளும் கண்டாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு, “இந்த இடம் நமக்கான இடம் இல்லைன்னு சொன்ன. ஆனா நீயோ பசங்க மாதிரி வண்டி ஓட்டுற.”
“இதெல்லாம் உனக்காக தான். இங்க, இவ்வளவு நாள் உனக்காக தங்கி இருக்கும் போது இதைக் கூட கத்துக்கலன்னா எப்படி. இப்ப நான் வரலைன்னா நீ எப்படி வீட்டுக்கு வருவ சொல்லு பார்க்கலாம்”
“எனக்காகத் தான் எல்லாம் செஞ்சேன்னு சொல்ற, அதே எனக்காக இங்கையே என்னை இருக்க விடலாம்ல. எனக்கு இங்க இருக்கிற வாழ்க்கை பழகிடுச்சு. இங்க இருந்து என்னைத் தனியா பிரிச்சு கூட்டிட்டு போய் இன்னொரு வாழ்க்கைக்குள்ள நுழைக்க நெனைக்கிறீங்களே, என்னால அதை ஈசியா ஏத்துக்க முடியுமா?”
“கண்டிப்பா முடியும். ஏன்னா இது ஒண்ணும் உனக்கான வாழ்க்கை கிடையாது. உனக்கான வாழ்க்கை வேற, இதை நீ வாழணும்னு அவசியம் இல்ல. உன்னைப் பத்தி தெரிஞ்சதுக்கப்புறம் உன்னை இங்கையே எங்களால விட்டுட்டு போக முடியாது” என்றதும் அதன் பிறகு கவி எதுவும் பேசவில்லை.
இருசக்கர வாகனம் வீட்டின் முன்பு வந்து நின்றதும் தயக்கத்தோடு இறங்கி உள்ளே செல்ல முயல,
“எங்க போற இதுக்கு மேலே இங்க நமக்கு வேலை கிடையாது. இப்பவே நம்ம ஊருக்கு நாம போறோம்” என்றாள் அவள் பின்னே வந்தவள்.
“இல்லை இந்த டைம்ல போகணுமா?”
“ஆமா போகணும்” என்று அவள் அழுத்தமாய் சொன்னதும், கவியிடம் எந்த மறுப்பு வார்த்தைகளும் வரவில்லை.
மாறாக, “தேவையான திங்ஸ் எல்லாத்தையும் எடுக்கணுமே” என்றிட,
“தேவைக்கு அதிகமாகவே எடுத்து வச்சாச்சு. அது எல்லாமே முன்னாடி போயிடுச்சு, இப்ப நாம கிளம்பறது மட்டும் தான் பாக்கி ” என்றதும், வீட்டுக்குள் இருந்து மேலும் நால்வர் வந்தார்கள்.
அவர்களைப் பார்த்து விட்டு பயம் கலந்த குரலில், “நம்ம மட்டுமா போறோம்?” என்றாள், எங்கே தன்னை மட்டும் தனியா அழைத்துச் சென்று விடுவார்களோ என்றெண்ணி.
“அது என்ன நாம மட்டுமா? நீ பெத்த புள்ளையை விட்டுட்டு உன்னை மட்டும் கூட்டிட்டு போற அளவுக்கு நாங்க கல்நெஞ்சக்காரங்க கிடையாது” என்று சொன்னவாறு உள்ளே இருந்து வந்த மற்றொரு பெண் கையில் இருந்த நான்கு வயது குழந்தையை அவளிடம் கொடுக்க,
குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்ட கவி எதுவும் பேசாமல் திரும்பி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் வேன் ஒன்று அங்கே வந்து நிற்க, அனைவரும் அதில் ஏறிக் கொண்டார்கள்.
கடைசியாக வந்த ஆண் கையில் இருந்த ஏதோ ஒன்றை வீட்டின் மீது தூக்கிப் போட்டு விட்டு வண்டியில் ஏறியதும் வேன் அங்கிருந்து அதிவேகத்தில் கிளம்பியது.
வேன் கிளம்பிய சில நொடிகளில் வீடு வெடித்து சிதறியது. ஜன்னல் வழியே அதைப் பார்த்த கவி பயத்தோடு, “ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்க,
“ஏன் இப்படி பண்றோம்னா. உன்னை தேடி யாரும் வரக்கூடாது இல்லையா அதுக்காகத்தான்..”
“ஆனா என்னைத் தேடி இந்த அஞ்சு வருஷத்துல யாருமே வரல. அப்படி இருக்கும் போது இனிமே யார் வரப்போறாங்க” விரக்தியாக சொன்னாள்.
“கண்டிப்பா வருவாங்க..” என்று உறுதியாக சொன்ன அந்த ஆணை வெறித்துப் பார்த்தவள், “அப்ப இதுக்கு மேலே நான் இங்க வரவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று பயத்தோடு கேட்க,
“உனக்கு இனிமே இங்க என்ன வேலை இருக்குது. நீயே நெனச்சாலும் இதுக்கு மேல இந்த இடத்துக்கு உன்னால வர முடியாது, நாங்க வரவும் விடமாட்டோம். எங்க புள்ள எங்களோட தான் இருக்கணும்” என்று அவர் சொன்னதும், கவி எதுவும் பேசவில்லை.
தோளில் கிடந்த குழந்தை சிணுங்கியதும் தட்டிக் கொடுத்தவளுக்கு தனிமை பயமுறுத்தியது. ‘என் வாழ்க்கைல நான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்கல. ஆனாலும் மனசை தேத்திக்கிட்டேன், ஆனா என் விருப்பம் இல்லாம ஏதேதோ நடந்துக்கிட்டு இருக்குது. இதுல இருந்து என்னைக் காப்பாத்த யாரும் வர மாட்டாங்களா.? நான் என்ன பாவம் பண்ணிட்டேன்னு இப்படி எல்லாம் எனக்கு அநியாயம் நடக்குது.
நீங்க தானேப்பா எனக்கு ஒவ்வொரு முறையும் தைரியம் சொல்லி ஒவ்வொரு விஷயத்துலையும் துணையா இருந்தீங்க. இப்ப ஏன்பா என்னைத் தனியா விட்டுட்டு போனீங்க. நீங்களும் அம்மாவும் இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா..? உங்களோட அரவணைப்புல இருந்த வரைக்கும் எனக்கு வேற எதுவுமே. கஷ்டமா தெரியலப்பா.
நாமளும் எல்லார் மாதிரி சாதாரண மனுசங்ன்னு தான் நெனச்சேன். ஆனா நீங்க போனதுக்கப்புறம் ஏதேதோ நடக்குதுப்பா, இவங்க எங்கையோ என்னைக் கூட்டிட்டு போறாங்க. இங்க இருக்கிற சூழ்நிலை எனக்கு பழகிடுச்சுப்பா, மறுபடியும் வேற ஒரு இடத்துக்கு போய் என்னால அடாப்ட் பண்ணிக்க முடியுமா? நானும் என் பொண்ணும் இன்னும் என்னென்ன கஷ்டத்தை அனுபவிக்கணும்னு தெரியல. ப்ளீஸ்ப்பா எங்கிருந்தாலும் திரும்பி வந்துருங்கப்பா, தனியா இருக்க பயமா இருக்குது.
தூங்க போறதுக்கு முன்னாடி உங்களோட சிரிச்ச முகத்தை பார்த்துட்டு போய் படுத்தேன், ஆனா விடிஞ்சா உங்க ரெண்டு பேரையும் காணோம். இதோ அஞ்சு வருஷம் ஆயிடுச்சு இன்ன வரைக்கும் உங்களை என்னால பார்க்க முடியல, எங்கப்பா இருக்கீங்க, அம்மா எங்க இருக்கீங்க’ என்று மனதில் எதை எதையோ நினைத்து மறுகிக் கொண்டிருந்தவளின் முன்பு ஏதோ ஒரு சாறு நிரம்பிய கோப்பை நீட்டப்பட்டது.
ஆனால் அதை உணராது அவள் விழிகளை மூடி இருக்க, சட்டென்று அவள் தலையில் தட்டினாள் அருகில் இருந்த பெண். அதில் விழிகளை திறந்தவள், “என்ன..?” என்று கேட்க.
“அதை வாங்கி குடி” என்றாள் அவள்.
“இது என்னது பார்க்க ஏதோ கசாயம் மாதிரி இருக்குது” என்று கவி கேட்டதும்,
“கசாயம் தான் வாங்கி குடி” என்றாள் அருகில் இருந்தவள் அதட்டலாய்.
“முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவ?”
”இதுக்கு மேல முடியாது, அதை செய்ய மாட்டேன், இதை செய்ய மாட்டேன்னு சொல்றதுக்கான இடத்துல நீ இல்ல. நாங்க என்ன சொல்றமோ அதை செய்ய வேண்டியது தான் உன்னோட வேலை புரியுதா” என்று மீண்டும் அதட்டிட, கவிக்கு சுய கழிவிரக்கத்தில் விழிகள் கலங்கியது.
அவள் எதிர்பாராத விதமாக அவளது பின்னந்தலை முடிக்கற்றையை அருகில் இருந்த பெண் இடது கையால் பிடித்து இழுத்துக்கொள்ள, மற்றொரு பெண்மணி அவள் வாயை அழுத்தமாய் பிடித்த திறக்க வைத்திட, மூன்றாவது பெண்ணோ அந்த சாரை அவள் வாயில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினாள்.
எங்கே தான் கத்தினால் குழந்தை விழித்துக் கொண்டு வீறிட்டு அழுவாளோ என்று கஷ்டப்பட்டு அந்த சாறை விழுங்கினாள் கவி. அடுத்த கணம் அவள் தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் ஒரு உணர்வு. உடல் எல்லாம் பின்னியது, உடலில் உள்ள நரம்புகள் கூட வலியை உணர்ந்தது. கை, கால்கள் வெடவெடத்து நடுங்கியது, கண்கள் தீயாய் எரிந்தது. சிறிது சிறித அந்த வலியின் தாக்கம் தாள முடியாமல் மயங்கி விட்டிருந்தாள், கவித்தாரகா. அதேசமயம் அந்த வேன் அந்த ஊரின் எல்லையைத் தாண்டியிருந்தது.
– கானகமயில் கவிபாடும்..
error: Content is protected !!