Skip to content
Post Views: 13,046
அத்தியாயம் 23
Advertisement
ஆளிற்கு ஒரு பக்கமாய்க் கூடத்தில் அமர்ந்திருந்தனர் கணவனும் மனைவியும். தமிழ், தான் வாங்கி வந்திருந்த கதை புத்தகத்தில் கண்களைப் பதித்திருக்க, சேரலோ மனையாளின் மீது பார்வையை வைத்திருந்தான்.
Advertisement
Advertisement
“தமிழ்மா.. ஏதாவது சமைக்கிறது? பசிக்கிது.”
“நானு அதுக்குத்தான் வந்தேனா? இல்ல, அடுப்படியில அடைக்கிறதுக்கு எனைய கட்டிட்டு வந்தியா.?”
Advertisement
“பசிக்கிதுனு சொன்னது, ஒரு குத்தமா?”
“ஓஹோ.. எனைய அங்க விட்டுட்டு வந்த அஞ்சு நாளும், என்ன செஞ்சியாம்?”
“பெரியப்பா வீட்டுல சாப்பிட்டேன்.”
“இன்னைக்கும் அங்கேயே சாப்பிடு, போ!”
“உனக்கு மா?”
“அந்தக் கவலை, உனக்கு எதுக்கு?”
“தமிழ்மா.”
“இங்க பாரு.. இனிமேல் தயவு செஞ்சு இப்படிக் கூப்பிடாத. உன்மேல இருக்கிற கோபம் எல்லாம் இந்தத் ‘தமிழ்மா’லயே கரைஞ்சு போறது மாதிரி இருக்கு.”
அவன் சிரித்து, “நீயி இல்லாதப்ப, அங்க போயிச் சாப்பிட்டேன் சரி. இப்பவும் போனா, என்ன நினைப்பாங்க?”
“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்ல.”
“சரி வா, வெளிய போயிச் சாப்பிடலாம்.”
“திரும்பக் கடைக்குப் போகலயா நீயி? வழக்கமா பத்து பதினோரு மணிக்கு மேலதான வருவ? இன்னைக்கு, எட்டு மணிக்கே வந்து உட்கார்ந்திருக்க?”
“ஊருக்கு கிளம்புறதுக்காக வந்தேன். அதான் நீயே வந்திட்டியே? அப்படியே உன்கூட இருக்கலாம்னு தான்.”
“ஓஹோ.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராத்தான் தெரியிது!” என்றவள் எழுந்து தயாராக, இருவரும் உணவகத்திற்குச் சென்றனர்.
அன்றைய பொழுது தமிழ் வேண்டுமென்றே சமைக்காமல் இருக்க, மதிய உணவும் வெளியில் தான்.
சேரலைக் கண்ட உணவு விடுதியின் பொறுப்பாளர் வாயிலிற்கே வந்து வரவேற்று அழைத்துச் செல்ல.. அருகே நின்றிருந்தவள், “அவ்வளவு பெரிய ஆளா நீயி.?”
“இந்த ஹோட்டலுக்கு, அஞ்சு வருசமா தினமும் நம்ம கடையில இருந்து தான் கறி வருது. ஓனர்ல இருந்து குப்பைக் கொட்டுறவன் வரைக்கும் பழக்கம். வா..” என்றுவிட்டு முன்னே நடந்தான்.
“அண்ணே, தம்பி, ஐயா..” என ஆளாளிற்கு அழைத்து நலம் விசாரித்துப் பேச, உண்டு முடித்து அவர்கள் வெளியே வர, இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
“இவ்வளவு பேரு பழக்கமா உனக்கு, எல்லாரையும் எப்படி ஞாபகம் வச்சிருக்க.?”
மெலிதாய்ச் சிரித்தவன், “ஏழு வருச பழக்கம், தமிழ்மா.”
“எல்லார்க்கிட்டயும் பேசிப் பேசியே சாப்பிட்டது செமிச்சிடுச்சு. சும்மா.. அவங்க கேட்கிறதுக்கு ரெண்டு வார்த்தையில பதில் சொல்லி சிரிச்ச, எனக்கே இப்படி இருக்கு. எவ்வளவு பேசுற, வாய் வலிக்கலயா உனக்கு.?”
அவன் புன்னகையைப் பதிலாய்க் கொடுக்க, “இனிமேல் இந்த ஹோட்டலுக்கு எனைய கூட்டிட்டு வராத, முடியல.”
“அப்ப, வெஜிடேரியன் ஹோட்டலுக்கு மட்டும் தான் போக முடியும்.”
அவள் கேள்வியாய் நோக்க, “ஊருல இருக்கிற பாதி நான்வெஜ் ஹோட்டலுக்கு, நாமதான் கறிக் கொடுக்கிறோம். மத்த இடத்துலயுமே தெரிஞ்ச ஆளுங்க வேலைப் பார்க்கிறாங்க.”
“ஏன்.. ஊருல வேற கடையே இல்லயா.?”
“தொழில் சுத்தம்னு ஒண்ணு இருக்கு தமிழ்மா.”
புருவத்தை ஏற்றி இறக்கி, “ம்ம்..” என்றவள் முன்னே செல்ல, வாகனத்தை இயக்கி அவளருகே நிறுத்தினான் சேரல்.
அடுத்ததாய் தனது வழக்கமான பணிகளைக் கவனித்தவன், மாலை நேரத்தில் கீதாவின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.
கிளம்பும் தருவாயில், “வர்றேன் அண்ணி. வர்றேன்!” எனக் கீதா மற்றும் மோகனிடம் விடைபெற.. மனைவியின் கையைப் பற்றிய சேரல், “அண்ணேனு சேர்த்துச் சொல்லு தமிழ்மா!” என அடிக்குரலில் உரைத்தான்.
புரியாத பார்வையுடன், “சரி, வர்றேன் அண்ணா.” என்று விடைபெற்றவளிடம்.. வழியில், “யாரா இருந்தாலும் மொட்டையா வாங்க போங்கனு சொல்லாத.”
“ஏன், மரியாதையா தான பேசுறேன். வேற எப்படிச் சொல்லுறதாம்.?”
“மதியம் ஹோட்டல பார்த்த இல்ல, ஒருத்தராவது என்கிட்ட மூணாவது மனுசன் மாதிரி பேசுனாங்களா.? பேர் சொல்லியோ, உறவு முறையிலயோ தான் கூப்பிட்டு இருப்பாங்க.”
சற்றே சிந்தித்தவள், “ம்ம், கவனிச்சேன்.”
“நாம, தன்னந்தனியா இந்த உலகத்துல வாழ்ந்திட முடியாது. காய் விக்கிறவன்ல இருந்து, குப்பை அள்ளுறவன் வரை தேவை நமக்கு. அவங்களுக்கு நாம என்ன மாதிரியான மரியாதை தர்றோமோ, அதேதான் திருப்பிக் கிடைக்கும். காலையில, நீயி என்கிட்ட சொன்னது தான்.
முடிஞ்ச அளவு உறவு முறைய சொல்லிக் கூப்பிட்டு, மத்தவங்களை நெருக்கமாவே வச்சிக்கணும். சொந்தத்தை விட இதுபோலப் பழகுறவங்க தான், அவசரத்துக்கு உதவுவாங்க. பரமசிவம் பெரியப்பாக்கிட்ட உண்டான உறவு மாதிரி. ஆதாயம் இல்லாம, அன்பை மட்டுமே கொடுத்து வாங்குற மனுசங்க.”
“ம்ம்.. இப்படித்தான் எல்லார்க்கூடவும் பழகுவியா?”
“என்னைத் தேடி வர்ற எல்லாருமே, எனக்குச் சொந்தம் தான்.”
“இதெல்லாம் சரிதான். ஆனா, என்கிட்ட மட்டும் ஏன் அப்படி நடந்துக்கிட்ட.?”
“உரிமை இருக்கிற இடத்துல தான, சண்டையும் போட முடியும். அப்பப்ப இந்தமாதிரி சமாதானமும் ஆகிக்கலாம்.”
“நல்லா சமாளிக்கிற!” என்றவள் உள்ளே சென்று படுக்கையில் விழ, சேரலும் உடையைக் கழட்டிவிட்டுப் படுத்தான்.
திரும்பி இருந்தவனின் முதுகில் இருந்த அவளின் கைத்தடம் மனதைக் கனக்க வைக்க, சற்றே தயக்கத்துடன் வருடிய தமிழ், “வலிக்கிதா.?”
“இல்ல.. நல்ல சுகமா இருக்கு!”
“அப்ப, இன்னொரு அடி போடவா.?
“ஏது, இன்னொரு தடவையா.?” என அவளின் புறம் திரும்ப, “மருந்து போட்டு விடவா அத்தான்.?”
“அடிச்சிட்டு, நீயே மருந்து போடுறேன்ற.? ஒரு ஸாரி கேட்கணும்னு தோணல இல்ல?”
“நீங்களும், எனைய தவிக்க விட்டதுக்கு ஸாரி கேட்கல.”
‘நம் உணர்வுகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு, அவளின் எண்ணங்களை யோசிக்க மறந்தோமே?’ என மனமானது குற்றம் சாட்டிட, “சரி, நானு செஞ்சதுக்கும் நீயி அடிச்சதுக்கும் சரியா போச்சு. என்ன.?”
“எதுவும் சரியாகல. நீங்க அப்படி நடந்துக்கிட்டதும் தப்புதான். நானு அடிச்சதும் தப்புதான்.”
“சரி விடு! ரெண்டு பேருமே தப்புச் செஞ்சிட்டோம். இனி இப்படி ஆகாம பார்த்துக்கலாம்.”
“ம்ம்..”
“என்ன.. இப்பவாது கோவம் போச்சா உனக்கு.?”
“போயிடுச்சுனு தான் நினைக்கிறேன். “
“சுத்தம், நினைக்கிறியா.? உன்னோட வீட்டுக்காரன் பாவம், கொஞ்சம் கருணைக் காட்டு தமிழ்மா.”
“கருணையா, எப்படி.?”
“இப்படித்தான்!” என்றவன் இடையில் கைக்கோர்த்து தன்னோடு அணைத்துக் கொள்ள, பாவையவளின் இதழ்களில் வெட்கப் புன்னகை மலர்ந்தது. அதற்குத் துணைசேரும் விதமாய் மன்னவனின் விரல்கள், காதல் இசை மீட்டி இதம் கூட்டியது.
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை,
அள்ளித்தரத் தானாக வந்து விடு..
என்னுயிரை தீயாக்கும் மன்மதப் பானத்தைக்
கண்டு கொஞ்சம் காப்பாற்றித் தந்து விடு!
அன்பே ஓடிவா.. அன்பால் கூடவா.. ஓ.. பைங்கிளி..
நிதமும் என்னைத் தொட்டு..
* * *
“நானு சொல்லி எவ்வளவு நாளாச்சு? இன்னைக்கு நாளைக்குனு, மூணு மாசத்தைக் கடத்திட்ட. எனக்கு, இன்னைக்கு உறுதியா பதில் தெரிஞ்சே ஆகணும். சொல்லு, எப்ப வீட்டுக்கு வந்து பேசுற.?” என்றபடி சாரங்கனின் எதிரில் நின்றிருந்தாள் காயத்திரி.
“வர்றேன், எதுக்கு இவ்வளவு அவசரப்படுற.?” என அவன் அசட்டையாய் உரைத்த பதிலில் எரிச்சல் அடைந்தவள், “அவசரப்படுறேனா.? அவசரத்தைக் காட்டிலும், அவசியம். அம்மாவோட கையி ஓரளவுக்குச் சரியாகிடுச்சு. வேலை எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அப்பா, கடனை அடைக்க ஏற்பாடு செஞ்சிட்டு இருக்காரு. அதுக்குள்ள ஏதாவது இடம் அமைஞ்சா, பேசி முடிச்சிடுவாரு.”
“கொஞ்ச நாள் ஆகட்டும்னு, நீயி சொல்லு காயத்திரி.”
“எவ்வளவு நாள்?”
“ஒரு.. ஒண்ணு ஒன்றரை வருசம்.?”
“என்ன விளையாடுறியா.?”
“வேலை இல்ல, ஒண்ணும் இல்ல. எப்படி வந்து பேசச் சொல்லுற உங்க அப்பாக்கிட்ட?”
“இது, உனக்கு இப்பத்தான் தெரியிதா? இவ்வளவு நாளா, தெரியலயா? நானும், நாம பழக ஆரம்பிச்சதுல இருந்து சொல்லிக்கிட்டே தான இருக்கேன்.?”
“ப்ச்ச்.. நடந்து முடிஞ்சதைப் பத்திப் பேசாத!”
அவனை ஆழ்ந்து பார்த்தவள், “எனைய ஏமாத்திடலாம்னு நினைக்கிறியா ரங்கா?”
“என்ன காயத்திரி.?”
“வேண்டாம்னு ஒரு முடிவு எடுத்தா, அது என்னோட தீர்மானமா தான் இருக்கணும். நீயா விலகிப் போகணும்னு நினைச்ச, ஏற்கனவே சொன்னதைச் செய்வேன் நானு!” என எச்சரித்து விட்டு வந்தவள், ஒற்றையடிப் பாதையில் வழியை மறித்தபடி வாகனத்தில் நின்றிருந்த சேரலைக் கண்டு திகைத்தாள்.
திணறலாய், “நீங்க, எங்க மாமா இங்க?”
“உங்கய்யா ஆடு இருக்குன்னாரு, பார்க்கலாம்னு வந்தேன்.”
“பார்த்தாச்சா.?”
“நீயும் பார்த்திட்டு தான் வர்ற போல இருக்கு?”
அவள் அமைதி காக்க, “ஜக்கையன் மாமாக்குனு, ஊருக்குள்ள ஒரு நல்ல பேரும் கௌரவமும் இருக்கு. அதைக் கெடுத்துடாத காயத்திரி. தாங்கிக்க முடியாது அவரால.”
தலையசைத்தவள், “நானு அப்படி எதுவும் செய்ய மாட்டேன் மாமா.”
“சரி, யாரு அவன்.? பேர் என்ன?”
“சாரங்கன், இதே ஊரு தான்.”
“பெத்தவங்க.?”
“அப்பா இறந்திட்டாரு. நாலு வருசம் ஆகுது. அம்மா அமுதவல்லி, கூலி வேலை செய்யிறாங்க. அவங்க மாமா, அப்பப்ப கொஞ்சம் உதவுவாரு.”
“எப்படி இறந்தாரு, பெரியவரு.?”
“அளவுக்கு அதிகமான குடி மாமா. உடம்புல எல்லாமே வெந்துப் போச்சு!”
“இவன் எப்படி?”
“இவனுக்குக் குடிப்பழக்கம் எல்லாம் இல்ல.”
“ஹோ.. வேல.?”
அவள் தலைக்குனிந்து நிற்க, “ஆக.. வேல இல்லாத வெட்டி ஆஃபிஸர். ஜக்கையன் மாமாக்கிட்ட சொன்னா, சம்பாதிக்க வகை இல்லாதவனுக்கு என்னோட மக கேட்குதானு வாசல்ல வச்சே பத்தி விட்டுடுவாரு. உனக்கே தெரியும்ல கருவாச்சி, பேசுனியா அவன்கிட்ட?”
“ம்ம்.. இந்த ஒரு விசயத்துல மட்டும் என்னோட பேச்சைக் கேட்க மாட்டிறான். பயலுகளோட சேர்ந்து சீட்டு ஆடுறது, ஊரைச் சுத்துறதுனு திரியிறான். கேட்டா, எனக்கு எந்த வேலையும் செட் ஆகலனு சமாதானம் சொல்லுறான்.”
“உடம்பு வளையாம, ஐயா உண்ணனுமும்கிறாரு போல.?”
“பேசிட்டு வந்திருக்கேன், ஏதாவது செய்யிவான்.”
“இவ்வளவு நாள் செய்யாததையா, இப்பச் செய்யப் போறான்? எனைய வந்து பார்க்கச் சொல்லு. சரி வருவான்னு தெரிஞ்சா, பார்க்கலாம். இல்லையினா மனசுல இருக்கிற ஆசையைத் தூக்கிப் போட்டுட்டு, மாமா சொல்லுற பையனைக் கட்டிக்கிற வழியைப் பாரு!”
அவள் தவிப்புடன், “என்ன மாமா, இப்படிச் சொல்லுறீங்க?”
“ஆசைக்காகக் கட்டிக்கிட்டு, நீயி வாழ்க்கையை இழந்திடக் கூடாதுனு தான் சொல்லுறேன். ஒண்ணு, அவனை உன்னோட வழிக்குக் கொண்டுவா. இல்லையினா, நீயி போற பாதையை மாத்திக்க. அவ்வளவு தான். காதலுக்குக் கண் இல்ல சரி, புத்தியாவது இருக்கணும். நீயி புத்திசாலி பொண்ணு, புரிஞ்சிக்குவ!”
“மாமா.?”
அவன் கேள்வியாயப் பார்க்க, “அப்பாக்கிட்ட, நீங்க கொஞ்சம் பேசுறீங்களா.?”
“என்னனு.?”
“எனக்காக, அவனைப் பத்தி!”
“மாமா, என்மேல நிறையப் பிரியமும் மரியாதையும் வச்சிருக்காரு கருவாச்சி. அதை நானு கெடுத்துக்க விரும்பல!”
“எனக்கு வேணும்கிறப்ப கேட்டு வாங்கிக்கிறேன்னு சொல்லி இருந்தேன்ல மாமா, உங்கக்கிட்ட.?”
சேரல் ஆழ்ந்து பார்க்க.. தலையைக் குனிந்து கொண்டவள், “எனக்கு, ரங்கன் வேணும் மாமா!”
ஒரு பெருமூச்சை வெளிவிட்டவன், “என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன், ஆனா என்னால உறுதி தர முடியாது!” என்றுவிட்டுக் கிளம்பிச் செல்ல, இயலாமையுடன் நின்றிருந்தாள் காயத்திரி.
* * *
இரவு பதினோரு மணிக்கு இல்லம் வந்து சேர்ந்த கணவனைப் பார்த்த தமிழ், “இந்நேரம் வரைக்கும் எங்க போனீங்க அத்தான், ஃபோன் போட்டா நாட் ரீச்சபுள்னு வந்திச்சு?”
“இன்னைக்கு வியாபாரிகள் சங்கக்கூட்டம். ஊருக்கு வெளிய இருக்க மண்டபத்துல தான் எப்பவும் நடக்கும். அதான் ஃபோன் போகல.”
“சொல்லீட்டுப் போகலாம்ல.?”
“பட்டியில ஆடு வாங்கிட்டு இருக்கிறப்ப ஃபோன் போட்டாங்க, அப்படியே கிளம்ப வேண்டியதா போச்சு.”
“அதுசரி! இவ்வளவு நேரமா, அங்க என்ன செய்யிவீங்க.?”
“வியாபாரிகளோட நல்லது கெட்டதைப் பேச வேணாமா.?”
“நீங்க, என்ன பேசப் போறீங்க? அவங்க பேசட்டும்னு கிளம்பி வர வேண்டியது தான? தலைவர் கூட, இவ்வளவு நேரம் இருக்க மாட்டாங்க.”
மெலிதாய்ச் சிரித்தவன், “இங்க, அப்படி இல்ல. எல்லாருமே கண்டிப்பா கலந்துக்கணும், கடைசி வரை இருக்கணும். அப்புறம் நான், செயல் தலைவன். டேபிள் சேர் ஏற்பாடு செய்யிறதுல இருந்து, எல்லாரையும் சாப்பிட வச்சு அனுப்புறது வரைக்கும் என்னோட பொறுப்பு. இந்தா..” என ஒரு பையைக் கொடுத்தவன், உடையை மாற்றச் சென்றான்.
“செயல் தலைவரா? ம்ம்.. பெரிய ஆளுதான் போல. இதென்ன பையி.?” என்றிட, “ஸ்வீட் பாக்ஸ். லேட்டா போறப்ப வீட்டுல பிள்ளைக இருந்தா, எதிர்பார்க்கும்ல. அதுனால எல்லாருக்குமே கொடுத்து அனுப்புவோம்.”
“இங்க, எந்தப் பிள்ள இருக்குனு கொண்டு வந்தீங்க?”
“அதான் தமிழ்மா இருக்காளே? உனக்குப் பிடிச்ச சோன்பப்டி, தனியா ஒரு டப்பா இருக்கு பாரு. சாப்பிட்டியா.?பிரியாணியும் கோழிக்கறியும் இருந்திச்சு. நேரமானதால கொண்டு வரல.”
“எனைய விட்டுட்டு, நீங்க மட்டும் பிரியாணி சாப்பிட்டீங்களாக்கும்.?”
“நைட் டைம்ல, நான் சாப்பிட மாட்டேன் தமிழ்மா. ரசம் சாதம் மட்டும் தான். நீ.?”
“வெயிட் பண்ணிப் பார்த்தேன், உங்களை ஆளைக் காணோம். பசிக்கவும் சாப்பிட்டேன்.” என்றவள் இனிப்பு ஒன்றை வாயில் வைக்க, “ராத்திரி நேரத்துல சாப்பிடாத!”
“ஒண்ணு மட்டும்.”
“ம்ம்..”
“ஆமா.. வெறும் பிரியாணி மட்டும் தானா? இல்ல எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா..?”
“எல்லாம்தான்.”
சற்றே திகைத்தவள்.. கணவனின் அருகே வந்து, “எங்க ஊதுங்க?”
“என்ன?”
“அந்த எல்லாம்ல, எது எது உள்ள போயிருக்குனு தெரிய வேணாம்.?”
“எனைய பார்த்தா, குடிகாரன் மாதிரி தெரியிதா உனக்கு.?”
“யாருக்குத் தெரியும்? பத்து வருசமும், இங்க தனியா தான இருந்தீங்க.?”
“இதெல்லாம் சரியில்ல பார்த்துக்கோ! வீட்டுக்காரனைக் கொஞ்சமாவது நம்பணும் தமிழ்மா.”
“அதெல்லாம் நம்ப முடியாது. அதுவும், நிச்சயமா உங்களை எல்லாம் நானு நம்பவே மாட்டேன் அத்தான். முதல்ல ஊதுங்க!” என்றிட.. சற்றே குனிந்துட மனைவியின் அருகே சென்றவன், “ஊதணுமா.?”
“ம்ம்..”
“அது, நல்லா இருக்காதே தமிழ்மா. வேணும்னா இப்படிச் செய்யலாம், நீயி டேஸ்டை வச்சுக் கண்டுபிடிச்சிக்கோ!” என்றவன் அவளின் இதழ்களைத் தனது இதழ்களிற்குள் சிறைபிடிக்க, கரைந்து கொண்டிருந்த சோன்பப்டி சேரலின் நாவிற்கு ருசியைக் கூட்டித் தந்தது. அவள்தான் சுவையை அறிய மறந்து போனாள்.
error: Content is protected !!