Skip to content
Post Views: 50

நிறைவுப் பகுதி
ஆதி தன் கண்முன்னே ஊசலாடிக்கொண்டிருந்த பெண்டண்ட்டையே கண்ணிமைக்காமல் பார்த்தான், அவனது அம்மாவின் பரம்பரை நகை, பீரோவுக்குள் ஒரு தங்க நிற நகைப்பெட்டியில் வெல்வெட் துணி சுத்தியிருந்த அந்த பென்டன்ட்டை, அம்மா வெளியே எடுக்கும்போது அந்த வெல்வெட் துணியில் இருந்து வீசும் ஒரு பிரத்யேக சுகந்தத்தின் வாசம், அதை அவனிடம் காட்டி அவள் கூறிய கதைகளைத் தான் கண்கள் விரித்து ஆர்வத்துடன் கேட்டது, ஹாஸ்ட்டலுக்கு போகும் போது அம்மா அதை ஒரு செயினில் கோர்த்து அவனைக் காக்கும் கவசம் போல கழுத்தில் போட்டுவிட்டது. ஒற்றை டேபிள் லாம்ப் வெளிச்சத்தில் கை நடுங்க மைக்ரோ கார்விங் பென் வைத்து எழுதியது,மதி அந்த பெண்டண்டைப் பார்த்து விழிவிரித்து அதிசயித்தது..
மதி..!!!
Advertisement
எல்லாம் கண நேரத்திற்கும் குறைவான நேரத்தில் மனத்திரையில் படமாக ஓடியது..
அதிர்ந்து போய் அவளைப்பார்த்தான். மதி என் தண்மி, என் மாணவி, என் வாயாடி, என் குறும்புக்காரி,என் அவசரகுடுக்கை,என் ஆர்வக்கோளாறு,என் கியூட்டி,என் தேவதை, என் காதலி..
அவன் எதோ கொடுங்கனவிலிருந்து விழித்தவன் போல மூச்சுவாங்க, இதயம் படபடத்து முகம் வெளுத்துப்போனான்.
Advertisement
கனவுபோல் தன் மனதில் தோன்றிய காட்சிகள் அனைத்தும் நிதர்சனமான உண்மை என்று அறிந்ததும் ஆனந்தத்தில் அவன் கண்கள் ஊற்றெடுத்து பொங்கியது.
Advertisement
ஐந்து வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் தண்ணீரில் நனைந்து அவளைப் பார்த்ததிலிருந்து கண்ணீருடன் பிரிந்து சென்றது வரை எல்லாமே நினைவு வந்தது.விடுபட்ட புதிர் பாகம் கிடைத்ததும் முழுமையடையும் விடுகதைப் போல எல்லாமே சரியான இடத்தில் வந்தமர்ந்தது.
பல வருட புதிரின் முடிச்சு சில நொடிகளில் அவிழ்ந்தது.மதியைப் பிரிந்தது அப்போதுதான் நடந்தது போல அந்த உணர்வுப்பேரலைகளெல்லாம் அதே மூர்க்கத்துடன் மீண்டும் தாக்க.. ஓவென்று கதறி அழவேண்டும் போல் இருந்தது..
“ஆஆஆ..”
Advertisement
அந்த பெண்டண்டை ஆதி கையில் ஏந்தியதிலிருந்து மதி இமைக்காமல் அவனது முக பாவனையையே ஆவலும் நம்பிக்கையுமாக கண்களில் உயிரைத் தேக்கிவைத்துப் பார்த்திருந்தாள்.
அங்கே தெரிந்த அவன் முக மாறுதல்கள் அவளது ஐந்து வருட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது என்று அவளது உள்ளுணர்வு சொல்லியது..
ஆதி வெடித்து அழுததைப் பார்த்துப்பதறி,
அவனருகில் நெருங்கி அவன் முகத்தை ஏந்தினாள்..
“ஆதி சார்..என்னாச்சு..?”
அழுகையினூடே அவளைப்பார்த்தவன்..
சட்டென்று அவளை இழுத்து எலும்பு நொறுங்குவது போல் அணைத்து அவள் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தான்.தன் பொக்கிஷத்தை இனி ஒருநாளும் விட்டுவிடவேக்கூடாது என்ற பிடிவாதத்துடன் இருந்தது அந்த அணைப்பு.
“ஐ யம் சாரிடி கண்மணி.. உன்ன ரொம்ப காக்க வச்சிட்டேன்..”
அவளுக்கு புரிந்துவிட்டது, என்றாலும் தன் அனுமானத்தை நூறு சதவீதம் உறுதிப்படுத்திக்கொள்ள மனம் தவித்தது.
அவன் இரும்புப்பிடியின் வலியை பொறுத்துக்கொண்டு,
“நீங்க என்ன சொல்றீங்க..” என்று திக்கித்திணறிக் கேட்டாள்.
அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன்,நடுங்கும் விரல்களில் அவள் முகத்தை ஏந்தினான்.
அவளின் தவித்த கண்களை ஆழப்பார்த்து லேசாக சிரித்தவன்,
“நான் திரும்ப வந்துட்டேண்டி ஷின்சான்..”அவள் நெற்றியில் தன் நெற்றியை முட்டியபடி சொன்னான்.
கால்கள் துவள ஆதாரத்திற்காக அவனது சட்டைக்காலரை கொத்தாக பற்றியவள்,
“என்ன சொல்றீங்க..?” என்று மீண்டும் கேட்டாள்..
“காத்திருக்கும் தன் கூட்டுக்கு பறவை திரும்பிடுச்சின்னு சொல்றேண்டி என் கிறுக்கி..”
அவளால் இன்னும் கூட நம்பமுடியவில்லை
“உங்களுக்கு நிஜமாவே நியாபகம் வந்துடுச்சா?”
“ஆமாண்டி ஆமா..என்ன பண்ணா நீ நம்புவ..?”
கேலியாகக் கேட்டு அவள் மூக்குடன் மூக்குரசினான்.
“நிஜமாவா..?எல்ல்ல்லாமேவா.?” அவள் வியப்பு தீர்ந்தபாடில்லை.
“ஆமா..இந்த களிமண்ணு மண்டையில ஃபார்முலாவையும் ஈக்வேஷனையும் நட்டுவச்சி எப்படி ஆன்ஸர்ஸ் பூக்கும் ரோஜாத் தோட்டமா வளர்த்தேன்னு கூட நியாபகம் வந்துடுச்சி..”
அவன் கண்களுக்கு அவள் இப்போது தன்மீது தீராக்கோபம் கொண்ட மதியாக தெரியவில்லை, அவன் நினைவுகளில் மீட்டெடுத்த அந்தப் பதின்மவயது குழந்தைக்குமரியாகத்தான் தெரிந்தாள்.
“வேற என்ன நியாபகம் இருக்கு?”
“நீ மொரட்டு தீனி தின்னுட்டு வயித்துவலியால துடிச்சிப்ப நான் ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டு ஓடுனனே..அது..”
அழுகையும் சிரிப்புமாக “வேற?”
“ம்ம் அன்னிக்கு கமர்ஷியல் ஸ்ட்ரீட்ல பானிபூரிய ஊட்டிவிட்டு என்ன கொல்லப்பாத்தியே..அது..”
“ச்சு..” என்று அவன் மார்பில் குத்தினாள்
“அப்றம்..” கிசுகிசுப்பாக கேட்டபடி அவள் அவனை இன்னும் நெருங்கி கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்திருந்தாள்.
“தமிழ்ல அழகா கவிதை எழுதி தந்தா அதைப் படிக்கத்தெரியாம முழிச்சிட்டு நின்னியே அது.” என்று சிரித்துக்கொண்டே அவள் காலை வார,
“ச்சு.. உங்களுக்கு வேற நல்லது எதுவுமே நியாபகம் வராதா?” என்று கள்ளக்கோபத்துடன் அவனைத் தள்ளிவிட்டு போக முயன்றாள்.
“ஹே எங்கடி போற.. இங்க வா..” என்று அவளை இழுத்து மீண்டும் அருகில் நிறுத்தியவன்.
“இப்படி ஒரு மொட்டை மாடியில் கீழே விழப்போன உன்னை தாங்கி பிடிச்சேனே, அப்ப இந்த ரெண்டு முட்டை கண்ணையும் வச்சி என்ன முழுசா முழுங்குனியே அதுல இருந்து, நான் ஊருக்குப்போறப்ப என் இடுப்பைக் கட்டிகிட்டு போகாதீங்க சார்ன்னு அழுதியே அதுவரைக்கும் எல்லாமே நியாபகம் இருக்குடி என் கங்காருகுட்டி..”
அதுவரை அவன் மீது இருந்த கோபம், வெறுப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போக அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு எல்லையில்லா ஆனந்தத்தோடு கதை பேசினாள் மதி.
“சார் நீங்க ஏன் முன்னாடியே வரல..? அந்த ஆதித்யா என்னை என்ன பாடுபடுத்தினான் தெரியுமா? நீங்க அவன நல்லாத் திட்டிவிடுங்க..” என்று குறை கூறினாள்.
“அவன் கெடக்குறான் டோமரு..இனிமே என் செல்லத்து பக்கம் கூட அவன் வராம நான் பார்த்துக்கறேன்..”
அவன் பாவனையுடன் கூறியதைக்கேட்டு தண்மதி கலகலவென்று சிரித்தாள்.
“உங்களுக்கு எப்படி நியாபகம் வந்துச்சி சொல்லுங்க ப்ளீஸ்..”
“என்னடி, சின்ன பிள்ளைங்க கேட்ட கதையையே திரும்பத் திரும்ப கேக்குறமாதிரி நீயும் கேக்குற?”
“சொல்லுங்களேன் ப்ளீஸ் சார்..” என்றாள் சலுகையாக
அவளுக்கு ஆதித்யாவிடமிருந்த தயக்கமோ, தடைகளோ எதுவும் அவளது ஆதி சாரிடம் இல்லை. இவன் முற்றிலும் வேறு ஆள் போல அவனிடம் நடந்து கொண்டாள்.
ஆதி முன் ஜென்ம நியாபங்கள் திரும்பி வந்தவன் போல் தண்மதியை புதிதாகப்பார்ப்பது போல் பார்த்து பார்த்து பூரித்துப்போனான்.
“ஹே மதி கொஞ்சம் ஹைட் வளந்த மாதிரி இருக்கடி..ஆனா மூளை மட்டும் கொஞ்சமும் வளரல..” என்று சிரித்துக்கொண்டே கலாய்க்க,
“மூளை இல்லாமதான் கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினேனா?”
அவள் முகத்தைத்தூக்கிவைத்துக்கொண்டு உதட்டைப்பிதுத்தினாள்,
“அச்சோ கோச்சுக்காதடி என் ப்ரெயினி பேபி..”அவள் கன்னத்தைப்பிடித்து செல்லமாக ஆட்டியவன் தன் கையிலிருந்த தங்கச்சங்கிலியைப் பார்த்ததும் சீரியஸான முகத்துடன்,
”இது அம்மாவோடது மதி, எனக்கு ரொம்ப ப்ரெஸ்ஷியஸ்.. உனக்கு நான் கொடுத்ததுக்கான அர்த்தம் அப்ப உனக்குப் புரிஞ்சதா..?” என்று கேட்டான்.
“புரிஞ்சதாலதான் செயின்ல கோத்து எப்பவுமே கூடவே வச்சிருந்தேன்..” என்றாள்.
“இதை எப்பவுமே போட்டுட்டு இருந்தியாடி, நான் பார்க்கவேயில்லையே எங்க ஒளிச்சி வச்சிருந்த..” அவன் கண்கள் அவள் கழுத்தை ஆவலுடன் வருட.
”ஷு.. சும்மா இருங்க..”என்றாள் வெட்கத்தில் சிவந்தபடி.
”ஹே இவ்ளோ நாளும் சும்மாதானேடி இருந்தேன்..”என்றான் விஷமத்துடன்..
“ச்சு போங்க..” என்று அவனை தள்ளிவிட்டு போக முயன்றவளை,பிடித்து இழுத்து அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து “ஐ லவ் யூ பேபி..” என்றவன் அப்படியே முகம் முழுவதும் முத்தமழையை பொழியத்தொடங்கினான்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த தடைகளோ தளைகளோ எதுவும் இப்போது அவனுக்கில்லை.அவனைத்தடுப்பாரும் இல்லை,(ஏற்கனவே மதியின் அம்மா மொட்டைமாடிக்கு வந்து இவர்கள் கட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு வந்த சுவடே தெரியாமல் கீழேபோய் தன் கணவரைக் கிளப்பிக்கொண்டு கல்யாண வீட்டிற்கு போயிருந்தார்.)
உணர்ச்சியின் வேகம் கொஞ்சம் அடங்கியதும், புருவமத்தியில் முடிச்சுடன்,
“மதி, ரொம்ப சாரி நான் உன்ன ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேன்..” என்றான் மிகுந்த கழிவிரக்கத்துடன்.
“விடுங்க நீங்க என்ன பண்ணுவீங்க, எனக்கு நல்லது பண்றதா நினைச்சி பண்ணிட்டீங்க..பாவம் உங்களுக்கும் ரொம்ப கஷ்டமாதானே இருந்திருக்கும், எனக்காவது பழைய நினைவுகள் இருந்துச்சி, உங்களுக்கு கண்ணைக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்திருக்கும். அப்போ கூட நீங்க எனக்காகதான் யோசிச்சீங்க..அன்னிக்குகூட எனக்கு நியாபகமே வரலைன்னாகூட பரவாயில்லை எனக்கு நீதான் வேணும்னு சொன்னீங்களே..”
“இப்ப எதுக்கு அவன டிஃபெண்ட் பண்ற ?”
“யார..?”
“அந்த ஆதித்யாவ.. எனக்கு செம காண்டாகுது..”
“எனக்கு புரியல அதுவும் நீங்கதானே?”
“அது நான் இல்ல, அவன் என்ன என்னைவிட அதிகமா உன்னை லவ் பண்ணிட்டானா?”
“ஏன் லூசு மாதிரி பேசுறீங்க? நீங்க என்ன ஸ்பிலிட் பர்சனாலிட்டியா?”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி நீ ஆதித்யாவை லவ் பண்றியா இல்ல ஆதி சாரை லவ் பண்றியா?” என்றான் அவனது ஹிட்லர் குரலில் அதட்டலாக,
“ரெண்டுமே ஹிட்லர்தான்..”என்று உச்சுகொட்டினாள்,
“உண்மைய சொல்லுடி..” என்று அவள் தோள்களைப்பற்றி லேசாக உலுக்கினான்.
“யாரு எனக்கு தட்டுவடை செட் வாங்கித்தராங்களோ அவங்களைத்தான் நான் லவ் பண்ணுவேன் போதுமா..” என்றாள் குறும்புடன்.
“தீனிப்பண்டாரம்.. உன்னைத் திருத்தவே முடியாதுடி..” என்று அலுத்துக்கொண்டான்.
“ஆனா அந்த ஆதித்யா குடுத்துவச்சவன் தான்..”
“ஏன்?”
“இந்த ஸ்ட்ராபெரி லிப்ஸ்ச கிஸ் பண்ற பாக்கியம் அவனுக்குதானே கிடைச்சது..” என்றான் அவள் கீழுதட்டை கட்டைவிரலால் மென்மையாக வருடியபடி.
“ம்கூம்..இப்ப மட்டும் பாக்கியமா? அப்போ மிஸ்டேக்குன்னுதானே சொன்னீங்க..?”அவளுக்கு இன்னும் அந்தக் கோபம் தீரவில்லை.
“ஆமா மிஸ்டேக்தான்..”
“என்னது..?” என்று அவள் முறைக்க
“ஒரு கிஸ்ஸோட நிறுத்திட்டானே கிறுக்கன், அது மிஸ்டேக்தானே..” என்று கேட்டவனின் பார்வை மாறியது
மதியின் அடிவயிற்றில் மின்சாரம் பாய்ந்தது, “இது மொட்டை மாடி” என்று நினவுறுத்தினாள்.
சட்டென்று அவளை அணைத்து தூக்கி உள்பக்கம் மறைவாக நிறுத்தி ஸ்ட்ராபெரியை சுவைத்திருந்தான் அவளின் ஆதி.
எபிலாக்
நிஷாவின் ரிசப்ஷனில் மணமக்களுக்கு இணையாக கண்ணைக்கவரும் ஜோடியாக வலம் வந்தனர் தண்மதியும் ஆதித்யாவும்.
அவள் பின்க் நிற லெஹங்கா அணிந்திருக்க அவனும் பின்க் நிறத்தில் ஷர்ட், ஆஃப் ஒயிட்டில் பேண்ட் என்று மேச்சிங்காக அணிந்திருந்தான்.
உறவுக்குள் பலரது பேசுபொருள் இவர்கள் இருவராகத்தான் இருந்தனர்.
அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் அங்கங்கே நின்று செல்ஃபீ எடுத்துக்கொண்டிருந்தனர்.
மேடையில் மணமக்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள மதி அழைத்தபோது,
“ஏய் அவ கூடலாம் நான் நிக்கலடி,பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப ஒன்னுமே நடக்காத மாதிரி வந்து பேசுறா?நான் ரோஷனுக்காக தான் இந்த ரிஷப்ஷனுக்கே வந்தேன்..” என்றான் ஆதி எரிச்சலுடன்
“அன்னிக்கு என்னமோ அவளோட கம்ஃபர்டபிளா பேச முடியுதுன்னு சார் சொன்னீங்க?” என்றாள் நக்கலாக
“அது ஒரு நாரவாயன் சொன்னது..”
“அக்கா இப்ப முன்ன மாதிரிலாம் இல்லை, வாங்க..” என்று அவனை இழுத்துக்கொண்டு போனாள் மதி.
அடுத்த நாள் கல்யாணம் முடிந்து தண்மதியும் ஆதித்யாவும் சென்னை கிளம்பினர்.
“தம்பி மாலா அக்காவை பேச சொல்லுங்க..” என்று ரேணுகா கூறியதில் இருந்த மறைபொருள் எல்லோருக்குமே விளங்க, மதி முகம் சிவந்துபோனாள்.
அந்த செமி ஸ்லீப்பர் ஏஸி பஸ் சென்னையை நோக்கிவிரைந்து கொண்டிருக்க,
ஆதித்யா தன் அருகில் அமர்ந்து வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வரும் தன் தேவதையைப் பார்த்தான்.
சேலம் வரும் போது தான் நினைத்தபடியே தண்மதியை திரும்ப அழைத்துக்கொண்டு போவதை நினைத்து உள்ளம் நிம்மதியில் நிறைந்திருந்தது.
ஆசுவாசத்துடன் சாய்ந்து கொண்டு அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்தான்.
எதார்த்தமாக அவன்புறம் திரும்பியவள், அவன் விழுங்கும் பார்வையைக்கண்டு
“ஏன் அப்படி பார்க்குறீங்க?”
“ஐ லவ் யூ டி செல்லக்குட்டி..” உதடுகுவித்து முத்தமிடுவதுபோல் பாவனைசெய்தான்.
“எத்தனை தடவை சொல்வீங்க..?”
“ஆனா நீ ஒருமுறைகூட சொல்லமாட்டேங்கிறியே..”
“சொன்னாதான் தெரியுமா?”
“சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது பாப்பு..” என்று அவளை வம்புக்கிழுத்தான்.
அவளுக்கு ஏனோ காதலை வார்த்தைகளால் சொல்வதென்றால் எங்கிருந்தோ வெட்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது, முகம் சிவக்க தலையை வெளிப்புறம் திருப்பியவள்,
“சார், சார், அங்க பாருங்க.. அதுதான் முத்துமலை முருகர்.. கும்பிட்டுக்கோங்க..” என்றாள். அவசரமாக,
சாலையில் கடந்து செல்லும்போது, ரோட்டிலிருந்தே பார்க்கும் அளவிற்கு சுற்றி இருந்த மலைகளை சிறியதாக்கியபடி நீல வானத்தை முட்டிக்கொண்டு பிரம்மாண்ட உயரத்தில் புன்சிரிப்புடன் அருள்பாலித்துக்கொண்டிருந்தார் அந்த பொன்நிறத்தினாலான முத்துமலை முருகர்.
“இதுதான் உலகத்துலயே உயரமான முருகன் சிலை தெரியுமா?மலேஷியா பத்துமலை முருகர் 140 அடி, அதைவிட அதிகமா இருக்கனும்னு 146 அடில பிரம்மாண்டமா வச்சிருக்காங்க..
இங்க சுத்தியிருக்கற ஊர்களுக்கு இது ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷன் ஆகிடுச்சி. முருகர் ரொம்ப அழகா இருக்காருல்ல..?நாம இன்னொரு முறை வரும் போது போலாமா?” என்று கண்கள் மின்ன கேட்டாள்,
“ம்ம் சரி..” என்று தலையசைத்துக் கொண்டே மனதிற்குள் முருகருக்கு ஒரு கும்பிடுபோட்டான் ஆதி.
“ஏன்டி என்னை கடைசிவரைக்கும் சார்ன்னே கூப்பிடுறதுன்னு முடிவு பண்ணிட்டியா..?
“வேற எப்படி கூப்பிடுறது, பேர் சொல்லி கூப்பிட ஒரு மாதிரி இருக்கே..”
“அப்ப மாமான்னு கூப்டு, உங்க அம்மா உங்க அப்பாவ அப்படிதானே கூப்டாங்க..”
“அப்பா அம்மாவோட மாமா பையன்,அதனால அப்படி கூப்பிடுறாங்க..”
“அப்ப நீ கூப்பிட மாட்ட..?”
“ம்கூம்”
“எதுக்குமே சரிபட்டு வரமாட்டா..” என்று அலுத்துக்கொண்டவன்,
“என்கிட்ட பேசாத போடி..” என்று கோபமாக முகம் திருப்பிக்கொண்டு தூங்குவது போல் கண்ணை மூடிக்கொண்டான்.
சற்று நேரம் பொறுத்துப்பார்த்தவள்,
அக்கம்பக்கம் பார்த்துவிட்டு லேசாக அவன் பக்கம் நெருங்கி,
“மாமா.” என்றாள் கிசுகிசுப்பாக,
உள்ளே குளிர்ந்தபோதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.
அவள் இன்னும் கொஞ்சம் நெருங்கி “ஐ லவ் யூ மாமா..” என்று காதலுடன் கூறிவிட்டு,அவனைப்பார்க்க நாணி அவன் தோளிலே சாய்ந்து கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.
ஆறு மாதம் கடந்திருந்தது..
விட்டுப்போன நாட்களுக்கும் சேர்த்து இரட்டிப்பாக காதலித்துக்கொண்டிருந்தனர் இருவரும்.
இப்போதெல்லாம் ஆதித்யாவிற்கு தலைவலி டிப்ரஷன் போன்ற தொல்லைகள் எதுவுமில்லை, மருந்துகளைத் தொடுவதே இல்லை,அவனது சஞ்சீவி பர்வதம் அருகில் இருக்க அவனுக்கு என்ன கவலை..
இருவருக்கும் திருமணம் பேசி இருவீட்டார் முன்னிலையில் நாள் குறிக்கப்பட்டது. கல்யாண நாள் எதார்த்தமாகவோ கடவுளின் அனுகிரகத்தினாலோ அவர்கள் முதன்முதலில் சந்தித்த நாளிலே அமைந்துவிட தண்மதியின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லாமல் போனது.
இதோ இன்று மணநாளும் வந்தது,ஆதித்யா தாலி கட்டும்முன் தன்னவளை கண்ணோடு கண் பார்த்து ‘கட்டவா’ என்று ஒற்றைப்புருவம் உயர்த்திக் கேட்க லேசாக முகம்சிவக்க ‘சரி’ என்று தலையசைத்தாள் தண்மதி.
உள்ளார்ந்த உணர்வுகளாலும், தளறாத நம்பிக்கையினாலும் மட்டுமே கட்டி எழுப்பப்பட்ட தங்கள் காதலின் துணையுடன், நினைவுகளை மறைத்து விதி வஞ்சித்தபோதும் சாம்பலிலிருந்து மீளும் ஃபீனிக்ஸ் பறவைப்போல் உயிர்ப்புடன் மீண்டெழுந்த தங்கள் நேச நினைவுகளின் சாட்சியாக, இனி வாழப்போகும் நிறைவான வாழ்க்கைக்கு தொடக்கமாக தண்மதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் ஆதித்யா.
சுபம்
error: Content is protected !!