வனவாசம் முடிந்து அயோதிக்குத் திரும்பிய ஸ்ரீராமரின் வரவை எண்ணி ஊரே தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்க, ஷ்ரவனின் ரம்யாவாக வீட்டிற்கு வந்திருக்கும் மங்கை அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் தருணும் உத்ராவும்.
“பிளாக்ஸ் வச்சு குழந்தைங்களுக்கு ஏத்த மாதிரி எத்தனையோ விளையாட்டு விளையாடலாம்,” வாதாடிய ரம்யா,
Advertisement
“ஓன், டு, த்ரீ…” என குழந்தையின் ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு எண்களின் வரிசையைக் கற்றுத்தந்தாள்.
“நீங்களும்தான் டீச்சர் மாதிரி பாடம் எடுக்குறீங்க ‘க்கா,” வெடித்துச் சிரித்தாள் உத்ரா.
“கன்ஸ்ட்ரக்க்ஷன்; கால்குலேஷன்; இதைத் தவிர புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் வேற எதுவும் தெரியாது,” தருணும் மனையாளுடன் இணைந்துகொள்ள, அவ்விடமே சிரிப்பொலியில் நிறைந்தது.
Advertisement
நேரம்போவதுக்கூடத் தெரியாமல் மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பருக பால் கொண்டு வந்த திலகா, வேளையுடன் தூங்கச்சொல்ல,
“நாங்க நாலுபேரும் இப்படிக் கலகலப்பா பேசி எத்தனை நாளாச்சு ‘ம்மா,” சிணுங்கினாள் உத்ரா.
பொதுவாக மிரட்டினாலும் எச்சரிக்கை குறிப்பு என்னவோ தனக்கு மட்டும்தான் என அறிந்த உத்ரா, “அக்கா இங்கேயே இருந்துட்டா, எல்லாத்தையும் இப்படி ஒரே நாளுல விடிய விடிய பேசிக்க வேண்டிய அவசியமே இருக்காதே,” முகம் சுருக்கினாள்.
இளைய மருமகளின் ஆதங்கத்தை உணர்ந்த திலகா, “சரி, பாப்பு எங்களோட தூங்கட்டும்,” எனக் குழந்தையுடன் நகர்ந்தார்.
“ரம்யாவே இருக்கேன்னு சொல்லும்போது நீ ஏன்டா அவளைத் தடுக்குற,” கடிந்தான் தருண்.
கெஞ்சிக் கெஞ்சி ஓய்ந்து பக்குவமடைந்திருந்த ரம்யா, “எல்லாரும் அவரையே கார்னர் பண்ணுறீங்களே தவிர, திரும்பி வரணும்னு திடீர்ன்னு நச்சரிக்குற என் மனசு மாறினதுக்கு என்ன காரணம்ன்னு யாரும் என்னைக் கேள்வி கேட்க மாட்டேன்றீங்களே,” என்றாள் இளையவர்களிடம்.
சவாலில் ஜெயிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகப் பெரும்பாடுபட்டு சிரிப்பை அடக்கிகொண்ட தருண், தோழி ‘முற்றும்!’ எனச் சொல்லவும் வெடித்துச் சிரித்தான்.
“போயும் போயும் நாலு பாட்டுக்காகவா என் அண்ணன சந்தேகப்பட்டு டைவர்ஸ் வரைக்கும் போன,” விழுந்து விழுந்து சிரித்தான்.
“நாலு பாட்டு இல்ல… மூணுதான்,” விரல் நீட்டி கணக்கிட்டவள் கணவன் தோள்சாய,
“இதுல கணக்கு வேறையா மிஸ்,” அவள் கன்னத்தைக் கிள்ளினாள் உத்ரா.
புயல் மழையில் கரை சேர்ந்த முத்தாய் எதிர்பாராத சூழ்நிலையில் திரும்பி வந்திருக்கும் தேவதை நிரந்தரமாக கொலுவிருக்க வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடன் உறங்கச்சென்றனர் தருணும் உத்ராவும்.
பெரும் பாரத்தை இறக்கிவைத்த திருப்தியில் ரம்யா படுத்ததும் உறங்கிவிட, சேர்ந்து வாழ ஆசையாய்க் காத்திருக்கும் மனையாளின் கோரிக்கையை நிறைவேற்றும் திட்டங்களை மனத்தில் அசைபோட்டபடி அவள் தலைகோதினான் ஷ்ரவன்.
பாட்டி சொல் தட்டாத பேத்தியாக அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்துகொண்டது மட்டுமில்லாமல், திலகாவின் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தாள் விரூபா.
குழந்தயைத் தாஜா செய்து எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பாட்டியவர், நேர்கோட்டில் அமர்ந்துகொண்டபடி வாய்மூடாமல் வம்படித்துக்கொண்டிருந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஆசைதீர நலங்கு வைத்து எண்ணெய் தேய்த்துவிட்டார்.
அரைமணி நேரத்தில் குளித்துமுடித்து வந்தவர்களுக்குப் புத்தாடைகளையும் தங்கக் காசுகளையும் தந்து ஆசிர்வதித்தனர் திலகாவும் தாமோதரனும்.
“ஜொள்ளு விட்டதுபோதும். எப்படி இருக்கேன்னு சொல்லுங்க,” அவன் தோளினை உலுக்கினாள் பாவை.
அவன் அசடுவழிய புன்னகைக்க, “எத்தனை நாளா இந்த லோடஸ் பிங்க் ஷேட்ல ட்ரெஸ்ஸஸ் தேடிருக்கேன் தெரியுமா ஷ்ரவன். அது எப்படித்தான் உங்க கண்ணுக்கு மட்டும் படுதோ,” பெருமிதம் கொண்டாள் பாவை.
“நிஜமாவே உனக்கு என் செலக்ஷன் பிடிச்சிருக்கா ரம்யா,” என்றான் அடிக்குரலில்.
“என்ன டார்லிங்க்? என் ஃப்ரெண்ட் வாயாலேயே பட்டாசு வெடிக்கிற அளவுக்கு அப்படியென்ன பத்தவெச்ச,” மனையாளின் தோள்சுற்றி அணைத்தவாறு இணைந்துகொண்டான் தருண்.
சட்டைத் துணியில் புடைவையா; புடைவைத் துணியில் சட்டையா எனக் கண்டறிய முடியாதவாறு சன்செட் ஆரஞ்ச் நிற உடுப்பில் பின்னிப் பிணைந்து நின்ற ஜோடியை ஏற இறக்கப் பார்த்தான் ஷ்ரவன்.
இன்னுமொரு அதிர்ச்சி தருகிறேன் என்ற ரீதியில் அதே சன்செட் ஆரஞ்ச் நிறப் பட்டுப்பாவாடையில், “பெப்பா தூக்கி… பெப்பா தூக்கி…” அவன் காலைச் சுற்றினாள் அவர்கள் செல்லப்பிள்ளை.
குழந்தையைத் தூக்கிக்கொண்டவன், “என்னடா இது! குடும்பமே இப்படி யூனிஃபார்ம் மாதிரி,” வாயைப்பிளந்தான்.
பெரியவர்களின் அலப்பறையில் குதூகலமான குழந்தை அவர்களுக்கு இணையாகக் கை தட்டி கிளுகிளுக்க, அவ்வீடே மத்தாப்புச் சிரிப்பில் நிறைந்தது.
திலகாவின் தனித்துவமான தீபாவளி லேகியத்தில் விடிந்த அவர்கள் நாள், தலைவாழை விருந்து, வகைவகையான பலகாரங்கள் என வாய்க்கும் கைக்குமான சண்டையாக மாலைவரை தொடர்ந்தது.
ஐந்து மணியளவில் அலுவகத்திற்குப் புறப்பட்டார்கள். மருமகள்கள் இருவரும் சேர்ந்து லக்ஷ்மி பூஜை செய்ய, கண்குளிர பிரார்த்தித்து, இறைவனுக்கு நன்றிகளை உரைத்தார் திலகா.
பூஜையின் மற்ற அம்சங்களை முடித்தவர்கள், வீட்டிற்குப் புறப்பட வாசலுக்கு வர,
“நாளைக்குப் போகலாமே ரம்யா,” தன்னையும் மீறி கேட்டார் தாமோதரன்.
“ப்ளீஸ்! அவரை யாரும் எதுவும் சொல்லாதீங்க. அவர் என்னை வாழ்நாள் முழுக்க சந்தோஷமா பாத்துக்கணும்னு மெனெக்கெடுறாரு. எனக்கு அவர் முடிவுல பரிபூரண சம்மதம்,” தெளிந்த மனத்துடன் கெஞ்சினாள் ரம்யா.
அதற்குமேல் அவர்களாலும் எதுவும் கேட்கமுடியவில்லை.
தொடர்ந்து வந்த வாரயிறுதி நாட்களில் தன் திட்டத்தை உறுதி செய்திருந்தான் ஷ்ரவன்.
மங்கை கடைப்பிடித்து வரும் பொறுமை உறுத்த, புரிதலுடன் காத்திருக்கிறாளா; மனதுக்குள் புழுங்குகிறாளா என யோசித்தவனுக்கு உடனுக்குடன் சொல்லவேண்டும் எனத் தோன்றியது.
“காலேஜ்க்கு ஒரு ஒன் ஹர் பர்மீஷம் போடமுடியுமா?” உடனே அழைத்து வினவினான்.
“மறந்துட்டீங்களா ஷ்ரவன். எங்க கலீகோட கல்யாணம் அடென்ட் பண்ண வந்திருக்கேன்,” என்றவள், “முகூர்த்தம் முடிஞ்சதும் உடனே கிளம்பிடறேன். பத்து மணிக்கு வந்துடுவேன்,” என்றாள்.
“சுத்தமா மறந்துட்டேன் ரம்யா,” என்றவன்,
” எனக்கும் ஒன்பது மணிக்கு க்ளையின்ட் மீட்டிங்க் இருக்கு. கேன்சில் பண்ண முடியாது. நான் ஈவினிங்க் அங்க வரட்டுமா?” என்றான் வாஞ்சையாக.
“முடிஞ்சா ஸ்டே பண்றமாதிரி வாங்க ஷ்ரவன்,” என்றவளின் குரலில் ஏக்கம் வழிந்தோடியது.
தன் திட்டத்தைக் கேட்டு உக்கிரக்காளியாக மாறினால், தங்கித்தானே ஆகவேண்டுமெனத் தனக்குத்தானே சிரித்துக்கொண்டவன், சம்மதம் என்றான்.
மங்கையால் அரைமணி நேரம் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. என்றைக்கும் இல்லாமல் அவன் காலையில் அழைத்தது; அழுத்தமாகப் பேசியது எல்லாம் உறுத்த கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். நொடியும் தாமதிக்காமல் கிளம்பினாள்.
அவள் வேகத்திற்கு ஆட்டோவும், சாலை நெரிசலும் ஈடுகொடுக்காமல் போக, புகுந்த வீட்டின் முன்வாசலுக்கு வர 8.15 ஆகியிருந்தது. மூன்று வண்டிகளும் தரிப்பிடத்தில் தரிசனம் தர, யாரும் கிளம்பவில்லை எனப் பெருமூச்சுவிட்டாள்.
மூச்சிரைக்க அழைப்பு மணி அடித்தவளுக்கு டீஷர்ட்டும் ஷார்ட்ஸுமாகத் தரிசனம் தந்தான் ஷ்ரவன்.
“அதுக்குள்ள முகூர்த்தம் முடிஞ்சுடுத்தா?”
“ஆபீஸுக்குக் கிளம்பல?”
ஒரே சமயத்தில் வினா எழுப்பிய இருவரின் முகமும் வியப்பிலும் சிரிப்பிலும் விரிந்தது.
உள்ளே வந்தவளை ஏறிட்ட உத்ரா, “அண்ணாமேல லவ் இருக்குன்னு ஒத்துக்குறோம்; அதுக்காக மூணு நாளா அவர் வாங்கித்தந்த புடைவையை மாத்தாம இருக்குறது எல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்,” நக்கல் செய்தாள்.
“எதுக்கு இப்படி அவசர அவசரமா ஓடிவந்த?” மிரட்டினான்.
“நீங்க ஏன் ஆபீஸுக்குக் கிளம்புலையோ, அதே காரணத்துக்காகத்தான்,” மடக்கியவள்,
“என்ன விஷயம்னு சொல்லுங்க,” என்றாள் திடமாக.
இருபதுக்கும் மேற்பட்ட தாள்கள் நிறைந்த கோப்பு ஒன்றினை அவளிடம் தந்து படிக்கச்சொன்னான்.
எர்னாகுளத்தில் இயங்கிவரும் பிரபலமான ஆயூர்வேத வைத்தியசாலையின் பெயரைக் கொட்டை எழுத்தில் கண்டதும், அவனைக் கேள்வியாக நோக்கினாள்.
தொடர்ந்து படி எனக் கண்ணசைத்தான்.
மூளையதிர்ச்சியினால் ஏற்படும் தற்காலிக மறதிக்கான சிகிச்சை விவரங்களைத் தாங்கிய அடுத்த சில பக்கங்களைப் புரட்டினாள். மின்னஞ்சலில் அவன் அனுப்பி வைத்திருந்த மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், 90 நாட்கள் வரை நீடிக்கக்கூடிய சிகிச்சை என அவர்கள் பதிலைக் கண்டவள்,
“இதெல்லாம் வேண்டாம் ஷ்ரவன். ஞாபகம் வரும்போது வரட்டும்,” என்றாள் கண்ணீர் மல்க.
நேரில் தன் நாடித் துடிப்பை பரிசோதனை செய்தபின் சிகிச்சையின் கால அளவு குறையவும் வாய்ப்புண்டு எனத் தேற்றியவன்,
ரயில் பயணச்சீட்டு எடுக்கும் அளவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்தபின் அறிவிக்கும் அவன் மனத்திடத்தைக் கருத்தில் கொண்டவள்,
“100 டேஸ்தான்! 101வது நாள் நீங்க எந்த நிலையில் திரும்பி வந்தாலும் நாம நம்ம வாழ்க்கையை ரீஸ்டார்ட் பண்ணப்போகுறோம்!” தீர்மானக் குரலில் அதட்டினாள்.
“கண்டிப்பா! நீ காத்திருக்கும் அந்த 101வது நாளின் பொழுது என்னோட சிக்னேசர் பால்கோவாவோடத்தான் விடியும்,” அவன் பெரும் நம்பிக்கையுடன் சொல்ல, கண்ணீரும் சிரிப்புமாய் தலையாட்டினாள் பாவை.