Skip to content
Post Views: 5,125
தீபனின் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் துணி எடுக்க கிளம்பி இருந்தனர். நிச்சய புடவை ஏற்கனவே எடுத்து ரவிக்கை தைக்க கொடுத்திருக்க, அதையும் வாங்கிக் கொண்டு வருவதாக திட்டம். மற்ற சாமான்கள் எல்லாம் ஆழியன் அமுதன் பொறுப்பு.
இருவருமாக இணைந்து எழுதிக் கொடுத்த அனைத்தையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து விட்டனர் ஆனால் துணி எடுக்க சென்றவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. வீட்டில் பொன்னியுடனும் பிள்ளைகளுடனும் இருந்தாள் நீரதி.
Advertisement
“அம்மா எங்க?”விசும்பத் துவங்கி இருந்தாள் தரங்கினியின் மகள் நிலஞ்சனா.
Advertisement
“அம்மா ஊசி போட போயிருக்காங்க பட்டு. அழக் கூடாது என்ன?, வந்திடுவாங்க. இதை சாப்பிடுவியாம்”என்று குட்டி குட்டி தோசைகளை தட்டில் வைத்து கொடுக்க, நிலஞ்சனா,’ அம்மா வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தாள்.
Advertisement
அவளை சமாளிக்க வழி தெரியாமல் திகைத்தவள், இடுப்பில் தூக்கிக் கொண்டே வேலையை கவனிக்க ஸ்வர்ணிகா வேறு தனக்கு பசிக்கிறது என்று அழத் துவங்கி இருந்தாள்.
Advertisement
இரு பிள்ளைகளும் வீறிட்டு அழ பொன்னி வேறு அவளைத் திட்டிக் கொண்டிருந்தார்.
பிள்ளைகள் அழும் சத்தம் வாசல் வரைக்கும் கேட்க சாமான்களை வாங்கிக் கொண்டு வந்த ஆழியனும், அமுதனும் என்னவோ ஏதோ என்று உள்ளே ஓடி வந்தனர்.
“ஏன் பாப்பு அழற?”என்று மகளைத் தூக்கிக் கொண்ட அமுதனிடம் “அம்மா எங்க?”எனும் போதே பொன்னி ஆரம்பித்திருந்தார்.
“ரெண்டு புள்ளைங்களை சமாளிக்க முடியலை. இவ எல்லாம் என்னத்த புள்ள பெத்து. “என்று நொடிக்கும் போதே துணி எடுக்க சென்றிருந்தவர்கள் வந்து விட்டிருந்தனர்.
‘பிள்ளைகள் ஏன் அழுகிறது?’ என்று தேசிகன் கேட்டபடியே வர, வளர்மதி திட்ட என்று நிலா தண்ணீர் கொடுங்கள் என்று கேட்க, நீரதி திக்குமுக்காடிப் போனாள்.
“அழுகாத வரு. இந்தா நீ சாப்பிடு”என்று மகளை அவள் சமாதானம் செய்தவள், நிலா தண்ணீர் கேட்கவும் சொம்பை எடுத்தாள்.
“போ எனக்கு வேணாம் நீ மொதல்ல சனாக்கு தானே தந்த எனக்கு வேணாம் போ”என்று தட்டை தள்ளி விட்டாள் ஸ்வர்ணிகா.
அவளின் முதுகில் ஒன்று போட்டு “அதென்ன பிடிவாதம்?”எனும் போதே நீரதியை இழுத்து ஒரு அறை விட்டிருந்தான் ஆழியன். அவள் அதிர்ந்து நிற்கும் போதே
“பிள்ளையை பார்க்கிறதை விட என்ன வேலை உனக்கு. ரெண்டு பேருக்கும் சேர்த்து செஞ்சு தர தெரியாதா?”என்று கத்தி விட்டு அறைக்குள் சென்று விட ஸ்வர்ணிகா அழுகையை நிறுத்தி இருந்தாள் தந்தையின் பரிமாணத்தில்.
அவள் அதிர்ந்து நின்றதெல்லாம் ஒரு நிமிடம் தான் அடுத்து நிலாவிடம் தண்ணீரைக் கொடுத்து விட்டு சமையலறைச் சென்று இரவு உணவை எடுத்து வந்து வைத்தாள்.
வளர்மதியோ “பிள்ளையை அடிச்சு ஏன் உனக்கு இந்த வேலை? இப்போ இந்த அடி உனக்கு தேவையா… ?” என்றவர் “இவ்வளவு நேரத்துக்கும் சாப்பிடாமலா வந்திருப்போம். நாங்க சாப்டாச்சு. போய் உன் புருஷனுக்கும், அமுதனுக்கும் எடுத்து வை. அத்தை சாப்டாங்களா?”என்று கேட்க
“சாப்டாங்க”என்றாள் கரகரத்த குரலில்.
“ஹ்ம்ம்”என்றவர் மகன் அடித்ததினாலோ என்னவோ வேறெதுவும் கேட்கவில்லை.
வெளியே வந்து பார்த்தபோது அங்கே யாரும் இல்லை. ஸ்வர்ணிகா தட்டில் இருந்த தோசையை உண்டுவிட்டு எப்போதோ அறைக்குச் சென்று இருக்க, அங்கே நிலஞ்சனாவின் அழுகையும் அவளின் அம்மாவைக் கண்டு நின்றிருந்தது.
வாசலில் நின்றபடியே அமுதனுக்கு குரல் கொடுத்தாள்.
“மாமா சாப்பிட வாங்க”என்றவள் தன்னறை புகுந்து “சாப்பாடு எடுத்து வச்சுட்டேன்”என்றவள் கணவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.
“எதுவும் வேண்டாம். இதுதான் உனக்கு கடைசியா இருக்கணும் பிள்ளையை அடிக்கிறது!”என்று எச்சரிக்க
“ஹ்ம்ம்”என்றாள் அமைதியாக.
“அப்பா தூக்கம் வருது”என்று ஸ்வர்ணிகா அழைக்க “இனிமே அடிக்கலை நீங்க போய் சாப்பிடுங்க ப்ளீஸ்”என்றபடியே மகளின் அருகில் செல்ல”நீங்க வேணாம் நான் அப்பா கிட்ட” என்று முறுக்கினாள் மகள்.
அழுகையும் ஆத்திரமுமாக வந்தது நீரதிக்கு. இப்போது போனாலும் திட்டுவான், நின்றால் மகள் முறுக்கிக் கொள்வாள்.
“சாரிடா இனிமே அடிக்க மாட்டேன் அம்மா.ரொம்ப வலிச்சதா?”என்று அழும் குரலில் பேச ஆழியன் “அவளை விடு நான் தூங்க வைக்கிறேன் நீ சாப்பாடு இங்கே எடுத்துட்டு வா”என்றான்.
‘அதற்கு மேல் நின்றால் திட்டு விழும்’ என எண்ணியவள் வெளியே வர அமுதனுக்கு உணவை பொன்னி எடுத்து வைத்தார்.
“நான் வைக்கிறேன் பாட்டி”என்று வர
“அவன் சாப்டாச்சு நீ போய் உன் புருஷனுக்கு கொண்டு போ . இனிமேலாச்சும் சுறுசுறுப்பா வேலை பாரு”என்று சொல்லி விட்டு நகர அமுதன் அவளை பரிதாபமாக பார்த்தான்.
கன்னத்தில் விரல் தடம் பதிந்திருந்தது. அவள் நிமிரவே இல்லை.
“சாரிம்மா ரொம்ப படுத்திட்டாளா பாப்பா?”என்று கனிவாக கேட்க
“குழந்தை தானே மாமா!”என்று சொன்னாலும் ஆதங்கமாய் வந்தது அவளுக்கு.
“நான் அவனை கண்டிக்கிறேன் மா. புதுசு புதுசா பழக்கம் பிடிக்கிறான்”என்று தம்பியை திட்டியபடி எழுந்து கொண்டான் அமுதன்.
“ஏதோ கோபத்தில் அடிச்சு இருப்பாங்க மாமா நான் பார்த்துக்கிறேன்”என்றவள் உணவோடு தன்னறைக்கு போக ஆழியன் அவள் பேசியதை கேட்டு விட்டு வேகமாக சென்று அமர்ந்து விட்டான்.
‘ரொம்ப தான் டா கோபம் உனக்கு.’என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், கைபேசியில் கவனம் வைத்திருந்தான்.
“சாப்பாடு”ஒரு வார்த்தை தான் அவளிடம்
“நீயும் வந்து உட்காரு”
“இல்லை நீங்க”எனும் போதே “உட்காருடின்னா”என அருகில் அமர்த்திக் கொண்டான். உறங்கிய மகளைப் பார்த்தவன் “பிள்ளையை அடிக்காத ரதி. உயிரே ஆடிப் போச்சு எனக்கு”என்றவனை நிமிர்ந்து பார்த்து விட்டு எதுவும் பேசவில்லை அவள்.
‘நானும் என் பெற்றோருக்கு மகள் தானே என்னை அடிக்கலாம் அப்படி தானே?’ கசப்பாய் நினைத்துக் கொண்டாள்.
திகட்ட திகட்ட காதலித்தவன் அவனோடு அவன் அன்பில், நேசத்தில், திளைக்க திளைக்க வாழலாம் என்ற கனவெல்லாம் கானல் நீராய் இப்போது தோன்றியது.
காதலித்து திருமணம் செய்தவர்களை போல இல்லை இருவரும். ஏதோ கடமைக்கு ஒரு கல்யாணம் மலடி என்று சொல்லிடக் கூடாதே என்பது போல ஒரு பிள்ளை இப்படித் தான் தோன்றியது நீரதிக்கு. எதற்காக இந்த திருமணம் என்று நிறைய முறை நினைத்திருக்கிறாள்.
“ஹ்ம்ம் சாப்பிடு” என்று அவளுக்கும் எடுத்து கொடுத்தான். என்றாவது அரிதாக நடக்கும் நிகழ்வு. அதுவும் அறைக்குள் மட்டும் தான். வெளியே நீ யாரோ நான் யாரோ என்பது போல தான். அவன் ஷோபாவில் அமர்ந்து இருந்தால் இவள் சமையற்கட்டில் நிற்பாள். டிவி ஓடிக் கொண்டிருந்தால் எட்டிப் பார்த்து விட்டு வேலையை கவனிக்கும் ரகம். இப்படி எண்ணையும் தண்ணீருமாய் ஒட்டாத வாழ்வாய் சென்று கொண்டிருந்தது இருவருக்கும்.
ஆரம்பத்தில் நெருக்கம் காட்டிய வேளையில் “வயசுப் பொண்ணு பையன் இருக்க இடத்தில் நீங்க தான் சரியாக இருக்கணும்”என்று வளர்மதி, பொன்னி இருவரும் எச்சரிக்கை செய்ய இருவருமே விலகி நின்று கொண்டனர்.
இது இவர்களுக்கு மட்டும் தான். அமுதனின் திருமணம் நடந்த பிறகு தரங்கினி அவனோடு தான் சுற்றுவாள். அவன் காலை எழுந்தது முதல் அலுவலகம் செல்லும் வரையில் பின்னால் தான் அலைவாள்.
வளர்மதி பெருமிதமாக “சின்னப்பிள்ளையில எப்படி இருந்தியோ இன்னும் அப்படி தான் இருக்க தரு.”என்று அண்ணன் மகளுக்கு நெட்டி முறிப்பார்.
‘ இப்போ இல்லையா வயசும் பையனும் பெண்ணும்?’ என்று கணவனிடம் இதைச் சொல்லி புலம்பி இருக்க அவனோ “அண்ணி இங்கேயே இருந்தவங்க ரதி. அதனால பெருசா அவங்க நெருக்கம் தெரியாது. எல்லாம் ஒண்ணா விளையாடினவங்க.நீயும் நானும் அப்படியா?”என்பவன் “நம்ம கல்யாணத்துக்கு அவங்க ஒத்துக்கிட்டதே பெருசு ரதி. இதுல இதை எல்லாம் கண்டுக்காத நீ. அம்மாக்கு அண்ணன் மக ன்னு பூரிப்பு”என்பான் சமாதானமாக. அந்த சமாதானம் கூட முன்பு தான், அதன் பிறகு திட்டும் எரிச்சலுமாக மாறி இருந்தது. அதனாலேயே அதைப் பற்றி எல்லாம் சொல்வதையே நிறுத்தி இருந்தாள் நீரதி. மனதிற்குள் குமைந்து கொள்வாள். அம்மா இருந்த வரைக்கும் அவரிடம் புலம்ப அவரோ “இதுக்கு தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் காதல் கீதல்னு போகாத. நல்ல மாப்பிள்ளை நல்ல குடும்பமா பார்க்கிறேன் னு கேட்டியா நீ. பிடிவாதமா நின்னியே இப்போ பாரு”என்று சொல்லி விட அதிலிருந்து அவரிடமும் எதுவும் கூறவில்லை அவள்.
எல்லாம் எண்ணியபடி உணவருந்த
“நான் படுக்கிறேன் ரதி.சரியான அலைச்சல் இன்னைக்கு”என்று படுத்துக் கொண்டான் அவ்வளவு தான் அவன் அடித்ததற்கான சமாதானம். ஒரு கொஞ்சல் கெஞ்சல் தவிப்பு சமாதானம் கோபம் என்று எதுவும் இல்லை.
‘வழக்கமான ஒன்று தானே எப்போதும் பொதுவில் திட்டி விட்டு சமாதானம் செய்வான். இன்று அடித்து விட்டு சமாதானம் செய்து இருக்கிறான் அவ்வளவு தானே?’ என்று நினைத்துக் கொண்டாள்.
பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு வர அமுதனின் அறையில் சிரிப்பு சத்தம் கேட்டது. முணுமுணுவென்ற பேச்சு பின்னர் அது அடங்கியதும் தெரிந்தது அந்த நிசப்தத்தில்.
தேசிகன் நல்ல பெரிய வீடாகவே கட்டி இருந்தார். நாலு பிள்ளைகளுக்கும் வசதியாக கீழே மூன்று அறைகளும் மேலே இரண்டு அறைகளும் வைத்து நேர்த்தியாக கட்டி இருக்க மேலே தீபனின் அறையும் நிலாவின் அறையும் இருந்தது. கீழே தான் இருந்தாள் நிலா. மேலே முன்பு ஆழியன் தான் இருந்தான் மனைவியோடு. நிலாவின் கணவன் மேலே இருக்கும் அறைகள் பெரிதாக வசதியாக உள்ளதே என்று கேட்க பிறகு அது நிலா அறையாக மாறிவிட விளைவு நீரதியும் ஆழியனும் அவள் அறைக்கு இடம் பெயர்ந்தனர்.
வளர்மதி அதற்கு ஸ்வர்ணிகா ஓடி ஆடும் பிள்ளை கீழே இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி மகனிடம் அறையை வாங்கி இருந்தார்.
தீபனின் அறையை மாற்றி இருக்கலாம் ஆனால் அதைப் பற்றி ஒருவர் கூட பேசவும் இல்லை. கேட்கவும் இல்லை. வீட்டு மாப்பிள்ளை பிடித்தமென்று கூறி விட்டார். பிறகு மறுப்பேது.
*********
மறுநாள் காலை பரபரப்பாக விடிந்தது அனைவருக்கும். காலை உணவை முடித்துக் கொண்டு பெண் வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது.
“நீரா இந்த பாலை மட்டும் ஆத்தேன். நான் ரெடி ஆகணும்”என்று தரங்கினி அவளிடம் வேலையை ஒப்படைத்து விட்டு ஓட நிலாவோ “என் வீட்டுக்காரருக்கு இஞ்சி டீ வேணும்”என்று வந்து நின்றாள்.
“அஞ்சு நிமிஷம் நிலா”என்றவள், பாலை வைத்து விட்டு இஞ்சியை சீவினாள். இன்னும் காலையில் குளித்து விட்டு போட்ட நைட்டியோடு தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தேநீரை தயாரித்து முடித்து பிள்ளைக்கு பால் ஆற்றியவளைக் கண்ட வளர்மதியோ, “நீ இன்னும் துணி மாத்தலையா பத்து மணிக்கு வேன் வந்திடும் என்ன பண்ற நீ.”என்று அதட்ட
“இதோ போயிட்டேன் அத்தை. இதை சனாக்கு தந்திடுங்க”என்று பால் டம்ளரைக் கொடுத்து விட்டு ஓடினாள் தன்னறைக்கு.
“சீக்கிரம் வா ரதி அப்புறம் நம்மளால லேட்னு சொல்வாங்க”என்றபடி ஆழியன் மகளுக்கு பவுடர் அடித்துக் கொண்டிருந்தான்.
“அவ்வளவு தான் முடிஞ்சதுங்க”என்றவள் முகம் கழுவ செல்ல வெளியே வரும் போது தந்தை மகள் இருவரும் இல்லை.
முதல் நாள் இரவே கட்ட வேண்டிய சேலையை எடுத்து வைத்திருக்க அதில் எண்ணை போல ஏதோ தெரிந்தது. உற்றுப் பார்க்க மகளின் கைவிரல். காலையிலேயே எதையோ உண்டு விட்டு அதில் துடைத்திருக்க அழுகை வந்தது அவளுக்கு.
‘ மறுபடியும் வேற சேலை தேடணுமா ?’என்று எரிச்சல் மிக பீரோவைத் திறந்தாள்.
“இன்னுமா கிளம்பலை நீ? “என்று சத்தமாய் கேட்டபடி உள்ளே வந்தான் ஆழியன். அவள் நின்ற கோலம் கண்டு முகம் சிவந்தது அவனுக்கு. நாணத்திலா இல்லை கோபத்தில்.
….. தொடரும்.
error: Content is protected !!