Skip to content
Post Views: 5,012
சுபாஷ் தேசிகன் இடமும் இதைப் பற்றி பேசியிருக்க அவர் யோசனையாக அவனின் முகம் பார்த்தார்.
“மாமா அத்தையும் வேலை பார்த்து கஷ்டப்படறாங்க ஊருக்குள்ளவும் மருமகளைத் துரத்தி விட்டதா ஒரு பேச்சு அடிபடுது. அவங்களை சீக்கிரம் இங்கே வரவழைக்க வேற வழியே கிடையாது”என்று தூபம் போட்டான்.
Advertisement
“அதுக்கில்ல மாப்ள. இப்போ செல்வத்தை மில்லுக்கு வர வேண்டாம் னு சொன்னாலும் அதேதான் பேசுவாங்க”என்றவர், “செல்வம் விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம் மாப்ள… நீங்க ஏதோ ஊரில் கடை போடணும்னு சொன்னீங்க அதுக்கான ஏற்பாட்டை கவனிங்க”என்று தான் ஒரு தேர்ந்த வியாபாரி என நிரூபித்தார் தேசிகன்.
Advertisement
“அதுக்கு இல்லை மாமா”என்றவனிடம் “குடும்பம் னா சண்டை சச்சரவு இருக்கறது தான் மாப்ள. அது தானா சரியா போகும் நீங்க கவலைப்பட வேண்டாம்”என்றவரின் தொனியில் இதற்கு மேல் இதைப் பற்றி பேசினால் நன்றாக வாங்கி விடுவாய் என்ற உள்ளர்த்தம் இருந்தது.
Advertisement
அதற்கு மேல் தேசிகனிடம் அவன் வாய் திறக்கவில்லை ஆனால் வளர்மதியிடம் அத்தனை பேசினான். பேசும் போதெல்லாம் ஆழியனை மில்லுக்கு வர விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தான்.
Advertisement
ஆழியன் மேல் பெரிதாக அவனுக்கு எந்த கோபமும் கிடையாது தான். ஆனால் இயல்பிலேயே கோல் சொல்லும் புத்தி உள்ளவர்கள், ஏதாவது சுவாரஸ்யமான விஷயம் கிடைத்தால் அதை எப்படி பெரிதாக்கி பிரச்சினை கிளப்பலாம் என்று யோசித்து அதில் இன்பம் அடையும் வர்க்கம். இன்னொன்று பொறாமை தன் வீட்டில் சிறியதாக ஏதாவது நடந்தால் கூட ஆளாளுக்கு முறுக்கிக் கொண்டு நிற்க இங்கே என்னவென்றால் அண்ணன் தம்பி மூவரும் என்ன நடந்தாலும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் நிற்கின்றனர் அதுவே அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இப்போது ஒரு வாய்ப்பாக இந்த சண்டை கிடைத்திருக்க இதை ஊதி பெரிதாக்க முயன்றான் சுபாஷ். அவனுக்கு இன்னொரு கோபம் என்னவெனில் அவன் தங்கையை ஆழியான் மணம் முடிக்க மறுத்த காரணமும் உண்டு. அப்படி என்ன பேரழகியை காதலித்து விட்டானாம் என்ற பொடுபொடுப்பு மேலோங்க வந்து பார்த்தாள் நீரதி சாட்சாத் ரதியின் அம்சமாக நின்றாள். அதை விட அழகு அவளின் அமைதியும் அலட்டல் இல்லாத பேச்சும் நடவடிக்கையும் அதனாலேயே தரங்கினியின் அம்மாவிற்கு அவள் என்றால் வேப்பங்கொழுந்து தான். தரங்கினியை எப்படியோ அமுதன் திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருக்க இரண்டாம் பெண் அதாவது ஆழியனுக்கு என்று முடிவு செய்து இருந்த பெண்ணை அவனை விட வசதியிலும் அழகிலும் உயர்ந்தவனாக பார்த்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியில் பலன் கிட்டியும் அது பயனில்லாமல் போனது. அவர்கள் எதிர்பார்த்த அனைத்தும் இருந்த மாப்பிள்ளையை ஏனோ அவளுக்கு பிடிக்கவில்லை. பெங்களூர் வாசம் ஐடி பையன் லட்சத்தில் சம்பளம் என்றெல்லாம் சான்றிதழ் வழங்கி நடத்தி முடித்த திருமணத்தில் அவன் வேலையை மட்டும் கட்டிக்கொண்டு அழும் ரகம் என்று தெரிந்ததிலும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் இருந்து இரண்டு முறை விலகியவனுக்கு திருமணம் என்ற முறையே பிடிக்காது போனதில் மணவாட்டியையும் பிடிக்கவில்லை. முழுதாக ஆறுமாதங்கள் வாழவில்லை அவள் பிறந்தகம் திரும்பி விட்டாள். அதுவே பெரிய அவமானமாகப் போனதில் அந்த அவமானம் எல்லாம் ஆழியன் மீதான கோபமாய் உருவெடுத்திருக்க விளைவு ரதியை காணும் போதெல்லாம் முணுமுணுத்தனர். தன் மகள் வாழாதிருக்க இவன் மட்டும் வாழ்கிறானே என்ற பொறாமைத் தீ மூள வரும் போதெல்லாம் ஏதாவது பிரச்சினையை தெரிந்தோ தெரியாமலோ கிளப்பி விட்டுத் தான் சென்றனர்.
எத்தனை போட்டி பொறாமைகள் நிரம்பி இருந்தாலும் ஆழியன் நீரதி தம்பதி வாழ்வு சீராகப் போனதில் அவர்களே அசந்து தான் போயினர். எதையும் குறையாக நினைக்காத நீரதி குறை என்று சொல்லாத நீரதி அவர்களின் நிரந்தர பேசு பொருளாக மாறிப் போனாள்.
ஆழியனோ நம்மால் இந்த குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க மனைவியின் பார்வையில் அவன் இறங்கி இருந்தாலும் குடும்பத்தில் தங்களால் ஒரு பிரச்சினை என்று வரவிட்டதில்லை. நீரதிக்கு அது புரிந்தாலும் சில நேரங்களில் அதுவே அவளுக்கு விரக்தியையும் சலிப்பையும் தந்தது. அவன் தன் உணர்வுகளை மதிக்கவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்க தான் செய்தது. ஆனாலும் தான் இன்றி அவனால் நிச்சயம் அங்கே இருக்க முடியாது என்று உணர்ந்தும் இருந்ததால் அவனுக்காக தான் பல நேரங்களில் பொறுத்துப் போனாள். அதோடு நீரதியின் இயல்புமே வளர்மதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் செய்யும் செயலை பெரிதாக எண்ண வைக்கவில்லை.
ஆழியன் வெளியூர் செல்கிறேன் என்று கூறி கிளம்பி ஒரு மாதம் ஆகியிருந்தது. அதுவரைக்கும் அண்ணன் வீட்டில் இருந்து கொண்டவளைத் தேடி வளர்மதி பொன்னியோடு வந்து பார்த்தார், திட்டினார், சாபம் இட்டார். எல்லாத்துக்கும் அவள் கூறிய ஒரே விஷயம் ,”நிலா பேசியது தவறா சரியா அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. தப்புன்னா அவளை கண்டிச்சு வைங்க. அதை செய்யாம நான் ஒரு அடி கூட இங்கிருந்து நகர மாட்டேன். அப்புறம் உங்க பையனை நான் பிடிச்சும் வைக்கலை, கூப்பிடவும் இல்லை, அவர் இப்போ இங்கே இல்லவும் இல்லை” என்று ஸ்திரமாக தன் நிலையிலேயே இருக்க வளர்மதிக்கு தான் பொங்கிக் கொண்டு வந்தது.
“அவன் வரட்டும் இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்”என்று கத்த
“தாராளமாக செய்ங்க”என்றாள் நிதானமாக
“வளரு நீ கொஞ்சம் அமைதியா இரு”என்ற பொன்னி, “இங்கிட்டு வா நீரா உன் கிட்ட பேசணும்”என்று அழைக்க அவளும் அவரோடு சென்றாள்.
“என்ன நீரா நீ நான் அன்னைக்கு அவ்வளவு சொல்லியும் இந்த மாதிரி பண்ற.?”என்று சலிப்பாக கேட்க
“வேற என்ன செய்ய சொல்றீங்க பாட்டி.?”என்றவளை முறைத்து விட்டு “இதோப் பாரு நீரா !, நீ இப்படி வெளியே வந்தா வளரு செல்வத்துக்கு அவ அண்ணன் மகளைக் கட்டி வச்சிடுவா. ஏற்கனவே ஆம்பிளைப் பிள்ளை வேற உங்களுக்கு இல்லை. ரெண்டும் பொண்ணு. இந்த காரணத்தை காட்டி செல்வம் மனசை மாத்தி வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டா உன் மகளுக கதியும், உன் கதியும் நினைச்சு பாரு”என்று அவளை பயம் காட்ட முயற்சி செய்த பொன்னியை நினைத்து சிரிப்பு வேறு வந்தது நீரதிக்கு.
“உங்க பேரன் சம்மதிச்சா தாராளமாக பாருங்க. நானே வந்து நிச்சயம் பண்ணி தாலி எடுத்து கொடுக்கிறேன்”என்றவளை ஆவென பார்க்க
“பாட்டி உங்க பேரனுக்கு அப்படி எல்லாம் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. என்னை டிவோர்ஸ் பண்ணாம கல்யாணம் பண்ணி வச்சா குடும்பத்தோட போலீஸ்ல புடிச்சுட்டு போயிருவாங்க”என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டே
“என்னது?!”என்று அதிர்ந்தவர், “அவனோட நல்லதுக்கு தானே கல்யாணம். அவனுக்கும் வாரிசு வேணும்ல அதுக்கு தான் கல்யாணம்” தான் ஒரு பழைய பஞ்சாங்கம் என்று நிரூபித்தார் பொன்னி.
“அதான் ஸ்வரு ஸ்வாதி ரெண்டு பேரும் இருக்காங்களே?!”என்றாள் வேண்டுமென்றே.
“பொட்டைப்பிள்ளை எல்லாம் வாரிசு ஆகிட முடியுமா…?அது வேற வீட்டுக்கு போற பிள்ளை. ஆம்பளைப்புள்ளை தான் வாரிசு”என்றார் வெடுக்கென்று.
“ஓஓஓ”என்றவள் “சரி உங்க இஷ்டம் பாட்டி உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்? நீங்க உங்க பேரன் கிட்ட பேசுங்க”என்றாள்.
அவ்வளவு நக்கல் அவள் பேச்சில் பாவம் அதை பொன்னி தான் உணரவில்லை.
“உனக்கு வர இஷ்டம் இல்லைனா ஏதோ சொன்னியே டைவர்ஸுனு அதை குடுத்துடு அவனாச்சும் நல்லா இருக்கட்டும்”என்ற பொன்னியை என்ன செய்தால் தகும் என ஆத்திரமாய் வந்தது அவளுக்கு.
ஒரு குடும்பத்தை வாழ வைக்க துப்பில்லை இதெல்லாம் எப்படி வாழ்ந்து கிழிச்சிருக்கும். இப்போ வரைக்கும் பேத்தி பேசினது தப்புன்னு வாயில் வருதா பாரு. இதுகளுக்கு போய் எல்லாம் செஞ்சோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
வளர்மதி பொடுபொடுவென்று கிளம்பி செல்ல நீரதிக்கு ஆதங்கமாய் வந்தது.
வீட்டிற்கு வந்ததும் தொட்டிலில் கிடந்த பிள்ளையை எட்டிப் பார்த்தது. தூக்கவும் இல்லை. வீட்டில் இருக்கும் மூத்த பிள்ளைக்கு திண்பண்டம் கூட வாங்கி வரவில்லை .
‘ம்ம்க்கும் வம்பிழுக்க வந்தவங்க கிட்ட வரவை எதிர்பார்க்குறியே நீரா’என்று எண்ணியவள் நடப்பது நடக்கட்டும் என்று தன் வேலையை கவனித்தாள்.
பவ்யா அழைத்து என்ன சண்டை என்று கேட்க ஒளித்து மறைத்து எதையும் பேசவில்லை நீரதி. இதுதான் நடந்தது அதனால் வெளியே வந்தேன் என்றாள் தெளிவாக.
“நிலா அப்படி பேசி இருக்கக் கூடாதுக்கா. கண்டிப்பாக தப்பு தான்.”என்றவள் “அடிச்சேட்டிங்களா”என்று சிரித்து விட்டாள்.
“பின்ன பச்சைப்பிள்ளைய பத்தி தப்பா பேசினா கோபம் வராதா இதுல அவ வீட்டுக்கு என் பொண்ணு மருமகளா போகணுமாம். எம்மாடியோவ் இதுக்கே இந்த லட்சணம் இதுல காலம் முழுக்க என் பொண்ணு அவ வீட்டுலயா”என்றாள் மலைப்பாக.
பவ்யாவோ”விடுங்க க்கா. ஆனாலும் இப்பவே எண்ணத்தைப் பாருங்களேன் நூத்துக்கிழவியாட்டம் பேச்சை”என்று ஆச்சரியம் கொண்டவள் “மாமா கிட்ட பேசுங்க க்கா அவர் என்ன உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசாம உங்க கூட வந்து இருக்காரு. அப்போ அவங்க வீட்டில் தப்பு பண்ணா எதிர்த்து கேட்க மாட்டாரா.. தீபன் எல்லாம் இப்படி இருந்தா அவ்வளவு தான் நான் ராட்சசியா மாறிடுவேன்”என்றாள் பேச்சோடு பேச்சாக.
“தீபு அப்படி போற ஆள் கிடையாது பவி. எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா கேட்டு விட்டுவாப்ள. அமுதன் மாமாவும் இவரும் தான் வாயைத் திறக்க மாட்டாங்க அவராவது பரவாயில்லை இந்த மனுஷன் இருக்காரே”என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேசவும் ஆழியன் அவளை முறைத்தபடி நிற்கவும் சரியாக இருந்தது.
‘அச்சோ கேட்டுட்டாரோ ‘என்று பயந்தவள் ‘கேட்டா கேட்கட்டும் உண்மையை தானே சொன்னேன்’என மெத்தனமாய் நினைத்து”நான் அப்புறம் பேசறேன் பவி”என்று இணைப்பைத் துண்டித்தாள்.
ஆழியனை வா என்று வரவேற்கவுமில்லை போ என்று அலட்சியம் செய்யவும் இல்லை நீரதி.
“இதில் ஸ்வீட் பழம் இருக்கு எடுத்து வை”என்று ஒரு பையை நீட்டினான்.
மௌனமாக வாங்கியவள் “உங்க வீட்டில் பொண்ணு பார்க்கிறாங்களாம் இது தேவைப்படும் கொண்டு போறீங்களா”என்று மீண்டும் அவனிடத்தில் நீட்ட
“கொழுப்புடி ரதி”என்று முறைத்தவன் “யாருக்கு பொண்ணு மிஸ்டர் தேசிகனுக்கா”என்றான் நக்கலாக
பேசியது ஆழியனா என்று ஆவென அவனைப் பார்க்க”என்னடி ரதி”என்று அடிக்கண்ணால் பார்க்க எதுவும் இல்லை என்றாள் தலையாட்டி.
இப்படி எல்லாம் நக்கல் பேசி பகடி பேசுவது எல்லாம் ஆறேழு வருடங்கள் முன்பு உள்ள ஆழியன் என்றால் அவளும் நம்பி இருப்பாள். இப்போது உள்ளவன் கடப்பாரையை விழுங்கியது போல பாவனையில் இருப்பவன் அவன் இப்படி பேசுகிறான் என்றால் அது அவளுக்கு ஆச்சர்யம் தானே…
பேசுவது மட்டும் அல்ல இனி என் செயலையும் பார் என்று அடுத்த இரண்டு நாட்களில் அவளை வியக்க செய்திருந்தான் ஆழியன்.
….. தொடரும்.
error: Content is protected !!