Skip to content
Post Views: 5,248
காலையிலேயே தேசிகன் வீடு போர் மூண்ட இடத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடப்பதற்கான அறிகுறியுடன் இறுக்கமும் கடுப்பும் எதிர்பார்ப்பும் சூழ இருந்தது.
சுபாஷ் வீங்கிய கன்னத்துடன் நிற்க ‘இந்த உதவாக்கரையை எப்படியாச்சும் கரையேத்தி விடுங்க மச்சான்’என்ற சுபாஷின் தந்தை “என் பிள்ளையை நானே அடிச்சது இல்ல எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா நீ கை நீட்டி இருப்ப”என்றிருந்தார் ஒருமையில்.
Advertisement
“இதுக்கு தான் சொன்னேன் என் காலடியில் கெடக்கட்டும் அவன் இங்கே எல்லாம் அனுப்ப வேணாம்னு. கேட்டீங்களா தங்கச்சி வீடுனு அனுப்பி வச்சதுக்கு”என்று பொருமிய சுபாஷின் தாய் தான் “வீட்டுக்குள்ளவே பொட்டச்சியாட்டம் இருக்கியே உனக்கு வெக்கமா இல்லையாடா”என்று திட்டியது.
Advertisement
“என் அண்ணன் கிட்ட மன்னிப்பு கேட்காட்டி நான் என் பிள்ளைங்களோட வீட்டை விட்டே போயிருவேன்”என்று தரங்கினி ஒரு பக்கம் மூக்கை சிந்தினாள் கணவனிடம்.
Advertisement
“நீ போறதுனா போடி என் பிள்ளையை தூக்கின அவனுக்கு விழுந்தது உனக்கு விழும்”என்று என்றைக்கும் இல்லாத திருநாளாய் கணவன் பேசியதில் தரங்கினி ஒரு பக்கம் வெடவெடத்து அமர்ந்திருக்க
Advertisement
நடந்த எதுவுமே தெரியாமல் மனைவியின் வீட்டில் இருந்து நேரே வந்த தீபனுக்கு அண்ணன் வைத்து விட்டு சென்ற பத்திரிக்கையை கண்டு முகம் மலர “பத்திரிக்கை அடிச்சு வந்திடுச்சா நல்லா இருக்குல்ல பாட்டி”என்று சொல்லி புன்னகைத்ததில் ஆழியன் கடை திறக்கப் போகும் விஷயம் வீட்டுப் பெண்களை தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும் என்பது உறுதியானது.
விஷயம் பொன்னி மூலம் அறிந்த தீபன் முகத்தில் ‘இதை எப்போதோ தந்திருக்க வேண்டும்’என்ற எண்ணம் பிரதிபலித்தது.
“நம்ம நிலாக்குட்டி உறவே வேணாம் னு சொல்லிட்டான் டா தீபு”என்று பொன்னி பொருமியதில் “அண்ணன் செஞ்சதுல என்ன தப்பு.”என்று கேட்டு பொருமலுக்கு ஜெலுசில் ஊற்றி அமிழ்த்தான் தீபன்.
“என்னடா நீயும் இப்படி சொல்ற”என்று ஆதங்கமாய் கேட்ட வளர்மதியிடம் “வாய் தான் இருக்குன்னு இஷ்டமா பேசினா இது தான் எங்க பதில் இன்னைக்கு அண்ணியை சொன்னவ நாளைக்கு என் பொண்டாட்டியை பேச மாட்டான்னு என்ன நிச்சயம்”என்று கேட்டு தீபன் அவர்களை வாயடைக்க வைத்தான்.
இப்படியாக நடந்த வாக்குவாதம் எல்லாம் தீர்ந்து பஞ்சாயத்து பொதுவிற்கு வந்து நிற்க தேசிகன் விட்டு விளாசியதில் அனைவரும் கப்சிப்.
“ஊருக்குள்ள தேசிகன் மவனுகன்னா ஒத்துமை னு பேரெடுத்த குடும்பம் இது. இதுல வந்து குளறுபடி பண்ணா நான் சும்மா இருக்கணுமா… நான் ஏற்கனவே எச்சரிக்கை செஞ்சேன் தானே எங்க வீட்டு சொத்து விஷயத்தில் தலையிட வேண்டாம் னு. அப்படி இருந்தும் செல்வத்து கிட்ட போய் பத்திரம் எழுதியாச்சுனு போலிய காட்டி சொல்லி இருக்கான். என்னடா என் புள்ள ஆணித்தரமா சொல்றானேனு விசாரிச்சா இந்த சங்கதி.”என்றவர்
“உன் மவனுக்கு வேலை கத்து தர கூப்பிட்டேனா இல்லை என் குடும்பத்தில் விவகாரம் பண்ண கூப்பிட்டேனா…ஏதோ என் பொண்டாட்டி சொன்னாளேன்னு வேலை தந்ததுக்கு நல்ல பலனைத் தேடி தந்திருக்கான்”என்றார் கோபமாக.
“அதுக்கு அடிப்பீங்களா”
“பின்ன தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா…ஆனா ஒண்ணு இவனால ஒரு நல்லது நடந்து இருக்கு”என்று வளர்மதியை முறைத்துப் பார்த்தபடியே “வீட்டு அரசியல் கேள்விப்பட்டு இருக்கேன் அதை என் பொண்டாட்டி எவ்வளவு திறமையா செஞ்சிருக்கான்னு நேத்து தெரிஞ்சுகிட்டேன்.”என்றவர், “காலம் போன கடைசியில் ஆத்தா வீட்டைப் பாத்து போடினு அனுப்பினா ஆம்பளையா எனக்கு அசிங்கம் னு பார்க்கிறேன்”என்றதில் வளர்மதிக்கு விழியே பிதுங்கியது.
“என்னது வீட்டை விட்டு அனுப்புவியா?” என்று எகிறிக் கொண்டு வந்த தரங்கினியின் தந்தையை எரிக்கும் பார்வை பார்த்தவர் “ஏன் உன் குடும்பத்துல கும்மி அடிச்சிருவா ன்னு பயமா”என்று நக்கலாய் கேட்டு விட்டு “கட்டினது தான் அப்படின்னா என்னை பெத்தது நான் பெத்தது எல்லாம் வெசப்பூச்சி வேலையை பார்த்து இருக்கே”என்றார் எரிச்சல் மிக
“ஆமா நீ ரொம்ப யோக்கியன் ஏன் நீயும் தான் அவன் காதலிச்சு கல்யாணம் பண்ணதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு அலைஞ்ச… வீட்டில் நடக்கிறது தெரியாம உன் பொண்டாட்டி பேச்சை அப்படியே நம்புன என்னமோ நான் தான் அவளை கொடுமை படுத்த சொன்ன மாதிரி பேசுற”என்று பொன்னி எகிறினார் மகனிடம்.
“என்ன செய்ய என்னை வளர்த்தது அம்மா பேச்சை கேட்கணும் னு சொல்லி வச்சிருக்கே… என் பொண்டாட்டி கூட சேர்ந்து நீயும் பேசினதில் வயசான மனுசி பொய்யா சொல்லப் போறன்னு நினைச்சு நம்பி தொலைச்சுட்டேன். வியாபாரத்தில் தெரிஞ்ச சூட்சுமம் சூது வாது எல்லாம் குடும்பத்தில் தெரியலையே”என்றவர், “என் குடும்பத்தில் குட்டை குழப்பற வேலையை எவன் செஞ்சு இருந்தாலும் அடிப்பேன் தான். அதுல உன் மகன் என்ன என் மகன் என்ன… இப்போ என்ன செய்யணும் அதைச் சொல்லு போலீஸ் ல புகார் தருவியா தந்துக்க… நானும் பேசறேன்”என்றார் திமிராகவே.
“பாத்துக்க வளரு உன் வீட்டில் எங்களுக்கு மரியாதையை..? சொந்தம் விட்டு போயிரக் கூடாது. மூத்தவன் இருக்கும் போது அடுத்தவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்களே… மூத்தவனுக்கு யார் பொண்ணு தருவான்னு என் தங்கத்தை தந்ததுக்கு கூட எங்களை மதிக்கலை. உனக்கே இந்த நிலைமைன்னா என் மக பொழப்பு”என்று அழுத தரங்கினியின் அம்மா “சின்னது தான் வாழாம வந்துச்சுனு பாத்தா இப்போ”என்று இழுத்த சமயத்தில் “விட்டா நீங்களே அவளை கூட்டிட்டு போவீங்க போலருக்கு.”என்றான் அமுதன் நக்கலாக.
“ஏன் கூட்டிட்டு போக மாட்டோமா என் தங்கச்சியை வாழ வைக்க எங்களுக்கு தெரியும்”அதுவரை அமைதியாக இருந்த சுபாஷ் கன்னத்தைப் பிடித்தபடி பேச
“அப்படியாப்பா… நல்லது எப்போ கிளம்பறீங்க”என்று இன்னும் நக்கல் குறையாமல் பேசியவனை பீதியுடன் பார்த்த தரங்கினி”அண்ணா பேசாம இரு”என்றாள் பதற்றமாக.
பின்னே விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் என்பதற்கிணங்க சுபாஷின் மனைவி கவனிப்பாள். அங்கே போய் இப்படி சொகுசாக இருக்க முடியுமா… அவளைச் சொல்லியும் குற்றமில்லை. சம்பாதிக்க வேண்டும் குடும்பத்தை கவனிக்க வேண்டும் இதில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் போல இவளும் வந்து காலாட்டிக் கொண்டு சாப்பிட்டால் அவளும் என்ன தான் செய்வாள்.
பிறந்த வீட்டில் சும்மா பார்க்க வந்திருக்கிறேன் என்று ஒரு மாதம் கூட தங்கலாம் ஆனால் புகுந்த வீட்டில் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு வந்துவிட்டேன் என்றால் பிறந்தகத்தில் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது. அதுவும் தரங்கினி போன்ற ஆட்களால் நிச்சயம் முடியாது. இரண்டு நாட்கள் பொறுத்து அவளின் அம்மாவே அவளைத் திட்டினாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.
பஞ்சாயத்து முடிந்தபாடில்லை. தேசிகன் தன் நிலையில் இருந்து மாறவும் இல்லை. தான் தவறோ சரியோ என் குடும்பம் பற்றிய தகவல்கள் வெளியே தவறாக செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன் என்பது போல தான் நடந்து கொண்டார் அவர். பணபலம் ஆள் பலம் இருக்கும் போது நான் யாருக்கு பயப்பட வேண்டும் என்ற இறுமாப்பு அவருள்.
“முடிவா என்ன தான் சொல்றீங்க மச்சான்”என்று சுபாஷின் தந்தை கேட்க
“உங்க மகனை இனிமே இந்த வாசலை மிதிக்க வேண்டாம் னு சொல்றேன். அவன் தங்கச்சி வீட்டு விஷேஷமா அதுக்கு வர்றதுனா வந்துட்டு வாசலோட கிளம்பணும் இல்லை சுத்தமா உங்க யார் உறவும் வேணாம்னு தள்ளி அத்து விட்டு போயிருவேன்”என்றார் கடுமையாக.
“அப்போ என் உறவுன்னு யாரும் வரக் கூடாதா எங்கண்ணன் தானே என் பிள்ளைகளுக்கு தாய்மாமன் அவனை வர வேண்டாம் னு சொல்றீங்க”என்று தரங்கினி அழவும்
“அதான் சொன்னேனே நீயும் உன் உறவும் கடைசி வரைக்கும் வேணும்னா நீ கூப்பிட்டுக்க வச்சுக்க ஆனா என் மத்த புள்ளைங்க கூப்பிடலைனு நினைக்காத அவ்வளவு தான். இல்லை முடியாது னு சொன்னா நீங்க தனியா போங்க உங்களுக்கு யார் கூட உறவு வச்சுக்கணுமோ வச்சுக்கங்க. ஆனா அதுக்கு அப்புறம் என் கிட்ட இருந்து அம்மஞ்சல்லி எதிர்பார்க்காதீங்க”என்று கூறி விட்டார்.
தேசிகனை எந்த வழியிலும் அசைக்க முடியவில்லை அவர்களால்.
வளர்மதி வாய் இருக்க மாட்டாமல் “ஊமைக் கொண்டான் மாதிரி இருந்தா. வீட்டை விட்டு போனதும் மொத்த குடும்பத்தையும் பிரிச்சு விட்டுட்டா”என்று வேறு புலம்பினார்.
“ஸ்ஸப்பா நீ ஏன் மா வரவர இப்படி ஆகிட்ட”என்று அலுத்துக் கொண்டு தீபன் கிளம்பி விட்டான்.
அமுதனோ ‘என்னவோ செய்ங்க’என்றபடி வெளியேற வேறு வழியின்றி சுபாஷின் குடும்பம் கிளம்பி இருந்தது. சுபாஷின் வரவு இனி கிடையாது என்பதில் யார் மகிழ்ந்தார்களோ இல்லையோ அவ்வீட்டின் சமையல் பெண்மணி மகிழ்ந்தார். பின்னே அவனுக்கு என்று செய்வதே ஒரு பட்டியல் இருக்குமே. இனி பட்டியலுக்கு வேலை இல்லை அல்லவா. இருக்கும் இடம் அறிந்து இருந்து கொண்டால் மனிதனுக்கு மதிப்பு இல்லாமல் போவதில்லையே. தன்னிலை மறந்து செயல்படுகையில் தானே பிரச்சினைக்குள்ளாகிறான். சுபாஷ் நிலையும் அதுதான். வந்தவன் தனக்கான வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் இந்நேரம் இந்நிலை இல்லையே…
*********
பத்திரிக்கை கொடுத்து விட்டு வந்தவன் அங்கே என்ன பேசினான் ஏது பேசினான் எதையும் நீரதியிடம் கூறவில்லை.
“பத்திரிக்கை கொடுத்தாச்சு”என்று ஒரு வரியில் முடித்து விட்டு உணவருந்தினான். மகளோடு சென்று படுத்துக் கொண்டான்.
‘வாயைத் திறந்தா முத்து உதிர்ந்துரும் போல’என்று முணுமுணுத்தவள் பேசாமல் உறங்கிப் போனாள்.
விழாவிற்கான ஆடைகள் எல்லாம் எடுத்தனர். விநோத் ஜனனிக்கு அழைத்து கடை திறப்பு விழா பற்றி பேசி வாட்சப்பில் பத்திரிக்கையையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தான்.
“நல்லது மாமா. சந்தோஷம்”என்ற விநோத் அவன் வீட்டிற்கு வாடகை தருகிறேன் என்றதில் சுணங்கிப் பேசினான்.
“இல்லை விநோ. இதுதான் சரியாக இருக்கும்”என்ற ஆழியன் “கூடிய சீக்கிரம் வீடு பார்த்திடுவேன்”என்று சொல்ல நீரதி அதிர்ந்து பார்த்தாள் அவனை.
ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென்றவன் விநோத்திடம் பேசி முடித்து விட்டு வர
“நீங்க உங்க வீட்டுக்கு போங்க”என்றாள்.
“நீ”என்றவனை ஏகத்திற்கும் முறைத்து விட்டு “எனக்காக அங்கே பேச மாட்டீங்க எதுவும் செய்ய மாட்டீங்க நான் எதுக்கு வரணும். நான் வர முடியாது”என்றாள் கோபத்தில்.
“என் குடும்பம் இங்க தான் இருக்கு நான் இங்கே தான் இருப்பேன். நீ வரலைன்னா இரு. நான் உன் கூட இருக்கேன். வீடு கேட்டு இருக்கேன் போகலாம் இது உங்க அண்ணன் வீடு”என்று நிதானமாக பதில் அளித்தவனை எரிச்சலோடு பார்த்தவள் “அப்போ எனக்காக பேச மாட்டீங்க”என்றாள்.
“உனக்கு நான் ஒண்ணும் மௌத் பீஸ் கிடையாது. உன்னை பேசினா நீ பேசு என் கிட்ட பேசாதே”என்றவனை நன்றாக மொத்தினால் என்ன எனும் அளவிற்கு கோபம் பொங்கியது அவளுக்கு.
…. தொடரும்.
error: Content is protected !!