Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே -31

மூன்று வருடங்கள் கழித்து,

காலையில் இருந்தே தேசிகன் வீடு நெய் வாசனையும் வடை போடும் வாசனையும் கலந்து கமகமத்துக் கொண்டிருக்க வீடே பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

வளர்மதி தான் அதிக பரபரப்பாக இருந்தது.

கோபமாவது கடுப்பாவது எல்லாம் பரணில் ஏற்றி சாய்த்திருந்தார் வளர்மதி.



Advertisement

“ஏன்டா கண்ணு வயிறு வலிக்குதா?”வாஞ்சையுடன் பேத்தியை கேட்கையில் நீரதியே இது என் மாமியார் தானா என்று வியப்பாக பார்த்தாள்.

ஆம் ஸ்வர்ணிகா பூப்பெய்தி இருந்தாள். பதினோரு வயது துவங்கி இரண்டாம் மாதத்திலேயே பூப்பெய்தி விட்டாள்.

விநோத் ஜனனி இருவரும் துபாயில் இருந்து வந்திருந்த நேரத்திலேயே ஸ்வர்ணிகாவும் பூப்பெய்தியிருக்க, அவர்களுக்கு சொல்லொணா சந்தோஷம் தாண்டவமாடியது.

Advertisement

என்னென்ன வாங்க வேண்டும் எந்த சீர் செய்ய வேண்டும் எல்லாம் வளர்மதியைக் கேட்டே செய்தனர். அவர் அடுக்கிய வரிசை பட்டியல் அதிகம் என்றாலும் குறைவில்லாமல் வாங்கி விட்டான் விநோத்.

Advertisement

“ஏம்மா என் பொண்ணு பித்தளை சாமானை யூஸ் பண்ணவா போறா அராஜகம் பண்ணாதம்மா”என்று வெகுநாட்கள் கழித்து தன் அம்மாவிடம் அணுசரனையாக பேசி இருந்தான் ஆழியன்.

“நீ சும்மா இருடா இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம். எல்லாம் உன் மகளுக்கு சீதனம் தர வேண்டியது”என்று அவன் வாயை அடைத்தவர் புட்டு செய்ய அரிசி மாவில் சூடு பதத்திலேயே சர்க்கரையையும் தேங்காய்ப்பூவையும் கலந்தார்.

“ஏ ஜனனி அந்த பருப்பு சாதத்தை திறந்து பாரு”என்றவர் அடுத்தடுத்த வேலைகளை எல்லோருக்கும் முடுக்கி விட்டார்.

Advertisement

வயது ஏற ஏற இளமை முறுக்கும் திமிரும் காணாமல் போவது போல வளர்மதிக்கு மகள் நிலாவின் வாழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவங்களும் வயது மூப்பும் அவரது வாய்க்கு பெரும் பூட்டைப் போட்டிருந்தது.

பெரும்பாலும் பேசுவதற்கான சூழலே அவருக்கு அமையவில்லை என்று தான் கூற வேண்டும். மூன்று மகன்களும் தனிக்குடித்தனம் செய்ய, கணவனோடு கோபித்துக் கொண்டு வந்த மகள் மட்டும் உடனிருக்க, அவளது கவலையே அவரின் நேரத்தை அதிகமாக தின்றது.

‘எப்போதும் நீரா அதை செய் இந்த பாத்திரம் விளக்கலை பாரு’ என்ற வளர்மதியின் அதிகார குரல் கேட்ட அந்த வீடு இன்று அவரின் மௌனத்தை தான் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

ஆரம்ப நாட்களில் அவ்வபோது நிலாவின் குரல் ஒலித்த நிலையில் அதையும் அமைதியாக்கி விட்டிருந்தது தரங்கினி அம்மாவின் வருகை.

“ஏன் மா கறி எடுத்து சமைச்சா என்ன? தெனமும் வெண்டிக்கா காரக்குழம்பும் பொடலங்கா பொரியலுமா பண்ணிட்டு இருக்க”என்று சத்தமாய் அவள் பேசியதில் தரங்கினியும் அவள் அம்மாவும் ஏதோ பேசி சத்தமில்லாமல் சிரித்தனர்.

அதைக் கண்டு கொண்ட நிலா மல்லு மல்லென்று சண்டைக்குச் செல்ல அவர் நேரடியாக “புருஷன் அடிச்சு விரட்டி பொறந்த வீட்டில் விட்டு இருக்கான். அந்த வருத்தம் கொஞ்சம் கூட இல்லாம கறி சோறு கேட்டு நிக்குற. வெளிநாட்டுக்கு போனவன் என்ன ஆனான் னு கவலைப்படாமல் சோறு இருந்தா போதும் னு நினைக்கிறியே… உனக்கு உறுத்தவே இல்லையா கவி. தன்யா எல்லாம் எளைச்சு துரும்பா போனா. நீ என்னம்மோ”என்று இழுத்து சிரிக்க

“அண்ணி”என்று கண்கலங்க நின்றார் வளர்மதி.

“நான் ஒண்ணும் தப்பா சொல்லலை வளரு. புருஷன் போனா அப்படியே விட்டுடுறதா ஏதாவது பேசி கீசி சமாதானம் செஞ்சு கூட போறதில்லையா…?இப்படியா மானங்கெட்ட சோறு தின்னுட்டு இருப்பா. என் பொண்ணை எல்லாம் நான் என்ன விரட்டு விரட்டினேன் தெரியுமா… ஆனாலும் தப்பு அவன் மேலங்கறதால தான் டைவர்ஸ் பண்ண ஒத்துக்கிட்டேன். இங்க தப்பு உன் மக மேல, பாத்துக்க வளரு. கடைசி வரைக்கும் அம்மா வீட்டு சோறுனு இருந்தா கூடப் பொறந்தவங்களுக்கு தான் அவமானம். அதை விட நடந்தது வெளியே தெரிஞ்சா”என்று சொல்ல வந்ததை சொல்லாமல் அவர்களுக்கு புரியும்படி கேட்டு நிறுத்திக் கொண்டார்.

வளர்மதிக்கும் அது புரிய தான் செய்தது. ஆனால் மருமகளிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நிற்கும் மகளை என்ன சொல்லி திருத்த…?ஆதரவாய் வருவார்கள் என்று நம்பிய மகன்களும் தற்போது விலகி நிற்க உடைந்தே போனார் வளர்மதி.

“உங்க கிட்ட இல்ல உங்க மக கிட்ட வந்து கறி சோறு ஆக்கித் தரச் சொல்லி கேட்டேனா நீங்க ஏன் வர்றீங்க?”என்று நிலா எகிற

“நீ இப்படியே பேசிட்டு இரு. அங்க அவன் வேற எவளையாச்சும் பாத்து கட்டி குடித்தனம் நடத்தட்டும். நீயெல்லாம் பட்டா தான் திருந்துவ”என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போனார் அவர்.

நிலாவிற்கு அப்போதைக்கு எதுவும் தோன்றாமல் போனாலும் தனிமையில் சிந்தனைகள் எல்லாம் வரிசை கட்டி நின்றதில் ஒரு வேளை அப்படி இருந்தால் நம் நிலைமை என்ற அச்சம் ஏற்பட செய்வதறியாமல் திகைத்தாள்.

தன் மனதின் நலத்தை தானே கெடுத்துக் கொண்டவள் ஒரு கட்டத்தில் தன் தமயன்களின் சந்தோஷத்தையே உறுத்தலாகவும் பொறாமையாகவும் பார்க்க துவங்க, நீரதியோ கண்டு கொள்ளாமல் இருக்க, தரங்கினி நேரடியாக சண்டையிட துவங்கி விட்டாள்.

“மொதல்ல அவளை மாமியார் வீட்டில் விடுங்க இல்லாட்டா வீட்டுக்குள்ளேயே வச்சுக்கங்க புருஷன் பொண்டாட்டி நிம்மதியா நடமாட முடியுதா?”என்று நேரடியாகவே சொல்லி விட்டதில் வளர்மதி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழத் துவங்கி விட, நிலா அங்கிருந்து கோபித்துக் கொண்டு மாமியார் வீட்டில் தஞ்சம் அடைய, அவரோ மகளை அவமானப்படுத்திய ஆத்திரத்தை காட்ட துவண்டே போனாள் நிலா.

மகள் வருத்தம் கொண்ட விஷயத்தை சொல்லிச் சொல்லியே அவளை நோகடிக்க நீரதியை பேசியது எல்லாம் தவறு என்று தற்போது உரைத்தது நிலாவிற்கு. ஆனாலும் வெளிப்படையாக ஒரு முறை கூட மன்னிப்பு கேட்காதவள் பிறந்த வீட்டிற்கு செல்வதை குறைத்து தன் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறாள்.

அவ்வபோது மகன் மட்டும் அவளிடத்தில் பேசுவான். இதுநாள் வரை ஹரிஹரன் ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை அவளிடம். மகனின் நலம் விசாரிப்பு மட்டுமே அவளின் ஆறுதல்.

வளர்மதிக்கு மகள் தன் பிறந்தகம் வரவில்லை என்று வருத்தமாக இருந்தாலும் நிலாவை இதுநாள் வரை எதுவும் சொல்லாத தரங்கினியே குறை சொன்னதில் அவள் வராமல் இருப்பதே பரவாயில்லை என்று எண்ணி அமைதியாக இருந்தார்.

இதற்கிடையில் தான் ஸ்வர்ணிகா பூப்பெய்தி இருந்தாள்.

இப்போதும் மகளை அழைக்க வேண்டும் என்று தேசிகனிடம் சொல்லி ஆழியனிடம் பேசச் சொல்ல அவரோ “இது நம்ம மக விசேஷம் இல்லை வளரு. அவன் பிள்ளை விசேஷம். அவன் கிட்ட போய் யார் யாரை கூப்பிடணும் னு சொல்ற இடத்திலும் நாம இல்லை”என்றார் சற்று வேதனையாக.

ஆழியன் தனக்கு ஒரு தங்கை இருப்பது போலவே நடந்து கொள்ளவில்லை. அத்தனை தூரம் அவன் மனது ரணப்பட்டு கிடந்தது. என் மகள்களை அவதூறாக பேசிய பிறகு பேசியவளையே விழாவிற்கு அழைப்பதா என்ற தார்மீக கோபம் அவனிடம்.

பூப்புனித நீராட்டு விழா துவங்க ஸ்வர்ணிகாவை பவ்யா அலங்கரித்து அழைத்து வர நிலஞ்சனா ஸ்வாதி இருவருமே தங்களுக்கும் அக்கா போல் அலங்கரிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து மேக்கப் போட்டு கொண்டு வந்தனர்.

“அடியாத்தி இதென்ன டி இது”என்று வளர் சிரிக்க ஸ்வாதி வேகமாய் தன் பின்னால் இருந்த மல்லிப்பூவை முன்னால் போட்டு “பாட்டி நானுக்கும் பூவு”என்றாள் இடுப்பை ஆட்டி

“பாத்தியா இவள”என்று தரங்கினி அம்மா அவள் கன்னத்தில் கிள்ள

“நோ பாத்தி. மேக்கப் போயிடும்”என்று கன்னத்தை தேய்த்துக் கொண்டாள் ஸ்வாதி.

“எனக்கு இதுலாம் போட மாட்டீங்களா சித்தி”வருணேஷ் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வந்து நின்றான் பவ்யாவிடம்.

“நீ பாய் டா உனக்கு இதெல்லாம் கிடையாது”என்று பவ்யா கூற வருணேஷ் தனக்கும் வேண்டும் என்று கேட்டான் பிடிவாதமாக.

தீபன் அவனைத் தூக்கிக் கொண்டு “உனக்கு சித்தப்பா மாதிரி மீசை தாடி எல்லாம் வரும்ல அப்போ சித்தியை மேக்கப் போட்டு விட சொல்றேன் ஓகே”என்று சமாதானம் செய்ய

“எனக்கு அது எப்போ வரும்”அடுத்ததாய் கேட்க

“நீ பெருசா வளர்ந்ததும்”

“நான் எப்போ வளருவேன். வருக்கா மட்டும் வளரல ஆனா அவளுக்கு மட்டும் மேக்கப் போடுறீங்க”

“அடேய் இவனை யாராச்சும் அடக்குங்கடா”தீபன் திணறிப் போனான்.

குடும்பமே வருணின் அலப்பறையில் சிரித்துக் கொண்டிருக்க ஆழியனும் நீரதியும் யாரும் அறியா வண்ணம் தங்கள் காதல் உலகில் சஞ்சரித்து இருந்தனர்.

பச்சை நிறத்தில் பார்டரும் பேஸ்டல் பிங்க் நிறத்தில் புடவையின் நிறமும் இருக்க தங்க நிற ஜரிகையில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய புடவை நீரதிக்கென்றே நெய்தது போல இருந்தது.

மெல்லிய விசில் சத்தம் இட்டு அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் “விசேஷம் பண்றது நம்ம பொண்ணுக்கு தானே”என்று கிண்டலாகக் கேட்க நீரதி சுனாமியானாள்.

….. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!