Skip to content
Post Views: 823
இரவு வீடு திரும்பியபோதே ராமச்சந்திரனின் முகம் வெளுத்து இருந்தது. மருதனும் வாட்டமாகவே இருந்தான். உணவுக்கு பிறகு மாடியில் பிள்ளைகளோடு இருந்த ரேணு வானை நோக்கி ஏதோ காண்பித்து கொண்டு இருந்தாள். அவளின் பார்வை அலைபேசியிலும் வானத்திலும் மாறி மாறி இருந்தது. வழக்கமாக இந்த நேரங்கள் மருதன் முழுதுமாக தனது நேரத்தை அவன் குடும்பத்துக்காக ஒதுக்குபவன்.
Advertisement
“என்னப்பா ஒரே டல்லா இருக்கீங்க..” என்று அருகில் வந்து அமர்ந்தாள் ரேணு. பிள்ளைகள் உறங்க போவதாக அவர்களின் பாட்டிகளிடம் சென்றார்கள்.
“இன்னிக்கு சங்கத்துல கொஞ்சம் பிரச்சினையாயிருச்சு ரேணு. அப்பா இந்த சென்னை கடைங்களுக்கு இங்க கொஞ்சம் ஆட்களுக்கு அக்ரீமெண்ட் போட்டு விட்டார் இல்ல.. அவங்க இப்போ குறைஞ்ச விலைக்கு பட்டு சேலைங்களை கேட்கறாங்களாம். முடியாதுன்னா அக்ரிமெண்ட் ஒழுங்கா படிக்கலையா? நாங்க சொல்ற விலையை தான் நிர்ணயிக்கனும்னு இருக்கு. அதை மீறினா இவ்ளோ பணம் எங்களுக்கு நஷ்ட ஈடா தரணும்னு கேட்கறாங்களாம். எல்லாரும் போர்க்கொடி தூக்கறாங்க ரேணு..”
Advertisement
Advertisement
“ஆமா, நியாயமான விலை கிடைக்கலன்னா என்ன பண்ணுவாங்க? நூல் விலை ஏறி போச்சு. கரெண்ட் பில் ஓவரா வருது. வெள்ளி விலையும் கூடிட்டே போகுது. அவங்கதான் நியாயப்படி அதிகப்படுத்தி தரணும்.”
“ஆமா. இவங்கள்ட்ட அக்ரீமெண்ட் போட்டதால கைத்தறியை விட்டுட்டு மெஷின் வீவிங்க்கு போய்ட்டாங்க. கவ்ர்ன்மெண்ட் கைத்தறிக்குத்தான் மானியம் கொடுக்குது. ஒழுங்கா சொசைட்டிக்கே இவங்க வித்திருந்தா கூட பிரச்சினை இல்லாம போயிருக்கும். இவங்க இப்போ என்ன பண்ண முடியும்”
Advertisement
“உங்கப்பா என்ன சொன்னார்.? இனிமேலாச்சும் யாருக்கும் அதிக வட்டிக்கு விட வேணாம்னு சொல்லுங்க.. பாவம் இந்த நிலைமையில அவங்க வயித்தெரிச்சல் நம்மளை தான் சுடும்..”
“அவர்ட்ட இனிமே யாருக்கும் கடனே கொடுக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன். இருக்கற கடனையும் அசலை மட்டும் வாங்கினா போதும்னு தான் சொன்னேன்.”
“நம்ம கடை எப்படி போகுது ப்பா. “ என்று அவனின் விரல்களுக்கு சொடுக்கு எடுத்துக் கொண்டு கேட்டாள்.
அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.
“உண்மையை சொல்லனும்னா லாபம்னு பெருசா இல்ல.. நஷ்டமும் இல்லன்னு தான் போகுது ரேணு. உள்ளூர்க்காரங்க, சுத்து வட்டாரத்துல இருக்கவங்க தான் நம்மளை தேடிட்டு வர்றாங்க. அதுவும் வெள்ளி விலை ஏறினதால பட்டு விலை நாப்பது பர்செண்ட் அதிகமா விக்குது.. இப்போ கூட்டம் கொஞ்சம் கம்மிதான்”
“ லாபம்னு பெருசா வேணாம்.. உங்களுக்கு இந்த தொழில் நிலைச்சா போதும் பா..தறிங்க வருமானத்தை என்ன பண்றாரு உங்கப்பா?”
“அப்படி அடிச்சு பிடிச்சு வாங்கி பாதி நமக்கு நஷ்டம்தான்.. வேலைக்கு ஆளைப்போட்டு அவங்களுக்கு சம்பளம் குடுத்துனு கட்டுப்படியா ஆகலை. என்னாலயும் இவரோட பினான்ஸ் கடையும் பாத்துட்டு நம்ம கடையும் பாத்துட்டு, இந்த தறிங்களையும் மேனேஜ் பண்ண முடியல ரேணு..” அவளின் இடையில் கைகளை கோர்த்து அவளின் வயிற்றின் மேல் அவனது தலையை புதைத்து கொண்டான்.
அவளுக்கே பாவமாக இருந்தது.
ஒரு பக்கம் தன் தந்தை அவனுக்கு மிகப்பெரிய தொழிலை வைத்து தர தயாராக இருக்கிறார். இன்னொரு பக்கம் அவனின் அப்பா, மருதனை தான் சங்கத்தலைவர் பதவி, தறிகள், வட்டிக்கடை என்று எல்லாவற்றிற்கும் அவனை வாரிசாக்க இழுத்துக் கொண்டு அலைகிறார்.
“உங்களுக்கு என்ன தோணுது?” அவளின் விரல்கள் அவனின் தலைமுடிக்குள் மெல்ல ஊர்ந்தன. தலைக்குள் பிரளயமே ஓடிக்கொண்டிருந்தது, ஆனால் இப்போது மெதுவாக ரத்த ஓட்டம் சீரானதை போலிருந்தது.
ஒரு வயதுக்கு மேல் ஆண்கள் தாய்க்கு பிள்ளைகளாக இருப்பதை விட மனைவிக்கு முதல் குழந்தையாக மாறி விடுகிறார்கள்.
“இதே ரொம்ப நாள் ஓடாது ரேணு.. வேற எதாச்சும் யோசிக்கனும்..நம்ம பிள்ளைங்களுக்கு என் சம்பாத்தியத்தில் தான் எல்லாம் செய்யனும்னு நினைச்சேன். முப்பது வயசுலேயே இவ்ளோ தடுமாறினா இன்னும் எத்தனை வருஷம் நான் ஓடனும்னு நினைக்கறப்பவே பயமா இருக்கு..”
“நீங்க ஏன் கவலைப்படறீங்க. அப்படியே நஷ்டம்னு வந்தா அப்பா எனக்கு கொடுத்த சொத்து அவ்ளோ இருக்கு. அதை வச்சு எதாவது பாத்துக்கலாம். அதுவுமில்லாம அப்பாட்ட சொன்னா எந்த பிஸ்னஸூம் வச்சு தர அவர் ரெடியா இருக்கார். நீங்கதான் அரசியலுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க…!”
“ரேணு.. அப்பா அவரா செய்யறதை நான் தடுக்கல. ஆனா அவரை எதிர்ப்பார்த்து நான் இருக்க கூடாதுன்னு தான் நினைக்கிறேன். அப்படி இருக்கப்ப உங்கப்பாட்ட நான் எப்படி எதிர்ப்பார்த்து இருக்கறது..?”
“எதாவது ஒரு தீர்வு எல்லாத்துக்கும் இருக்கும் பா.. நீங்க ரொம்ப யோசிச்சு கவலைப்படாதீங்க”
“இப்போதைக்கு என் தலைவலிக்கு மருந்து நீ தான்” என்று அவளின் இதழ்களை நோக்கி முன்னேறினான்.
அவனின் இழுப்பிற்கு இணைந்து, வளைந்து கொடுக்கும் நாணலானாள் அவள்.
அவனின் விரல்களில் அவள் ஒரு வீணை. மீட்ட மீட்ட புது புது ராகங்கள் படைத்தன அவளின் மேனி.
இரவின் குளிருக்கு, அவர்கள் கதகதப்பை கொடுத்தார்கள்.
“அப்படியே அத்தனை பேரும் கொஞ்சி கொலவிட்டு இருந்தீங்க. என்னை பார்த்தா மட்டும் எறிஞ்சு விழற..”
“யார்ட்ட அப்படி கொஞ்சி குலவினதை பாத்தீங்க.? நான் என்ன உங்களை மாதிரியா.. தெருவுல போற வர பொண்ணை பார்த்துலாம் நீங்க வளைஞ்சு நெளிஞ்சு குழையறீங்களே அது மாதிரியா பண்றேன்?”
“ நீ பாத்தியா..? சரி அதை விடு. வந்த நாள்ல இருந்து ரதியை பத்தி அவ்ளோ பேசிட்டு, இப்போ அப்டி கட்டி பிடிச்சிட்டு நிக்கற. யாரை ஏமாத்த இந்த நடிப்பு?”
“நான் ரதியை பத்தி பேசவேயில்லையே.. உங்களை பத்தி தான் சொன்னேன். அவளா உங்க பின்னாடி அலைஞ்சா? நீங்கதானே அவளை சுத்தி சுத்தி வந்தீங்க?”
“இதை பாரு.. அன்னிக்கே சொல்லிட்டேன்.அதெல்லாம் நடந்து முடிஞ்ச கதைன்னு.”
“ஒழுங்கா இருக்கறது உங்களுக்கு தான் நல்லது.”
அவளை முறைத்து விட்டு கட்டிலில் உட்கார்ந்து நகம் கடித்தான்.
ரம்பாவின் அலைபேசி அடித்தது. துணியை மடித்துக் கொண்டே அதை ஸ்பீக்கரில் போட்டவள்,
“சொல்லுங்கப்பா.. எப்படி இருக்கீங்க. அம்மா எப்படி இருக்காங்க?”
“எல்லாம் நல்லா இருக்கோம் மா.. மாப்பிள்ளை வீட்ல தான இருக்கார். எங்கேயும் போகல இல்ல..”
“ம்ம்.. வந்ததும் வெளிய போய்ட்டு தான் வந்தார்ப்பா..”
சட்டென நிமிர்ந்து பார்த்தான் அவளை.
“அப்படியா.. நாளைல இருந்து அவர் எங்க போனாலும் நம்ம ஆளுங்களை பாத்துக்க சொல்லிருக்கேன்டா.. நீ அதை நினைச்சு தான் கவலைப்படறேன்னு உங்கம்மா ரொம்ப வருத்தப்படறா. அவர் எந்த தப்புக்கும் இனி போக முடியாது.”
அவசர அவசரமாக ஸ்பீக்கரில் இருந்து எடுத்தாள். மாதவன் அவளை எரித்து விடுவதை போல் பார்த்தான்.
“அப்பா.. அதெல்லாம் எதுக்குப்பா. நான் பாத்துக்கறேன்.”
ஏதேதோ பேசி விட்டு வைத்தாள். மாதவன் காத்திருந்ததை போல், வேகமாக எழுந்து வந்து,
“ஏய்.. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல. என்னையே ஃபாலோ பண்றதுக்கு உங்கப்பா ஆள் போடுவாரா? நான் என்ன அடிமை சாசனம் எழுதி கொடுத்துட்டு உன் கழுத்துல தாலி கட்டின்னேன்னு நினைக்கிறியா..என்ன வேணாலும் நீங்க அசிங்கப்படுத்தலாம்னு”
“சும்மா கத்தாதீங்க. எங்கப்பா எதோ என்மேல் இருக்க அக்கறையில் அப்படி சொன்னாரு. நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் இல்ல..”
“நாளைக்கு மட்டும் உன் அப்பன் ஆளுங்க என் பின்னாடி வரதை பாத்தேன்னு வச்சுக்க..” ஒரு விரலை நீட்டி எச்சரித்தான். அவன் விரலை பிடித்தவள் அதை அப்படியே பின் பக்கமாக மடக்கினாள். விரலே வலிக்கும் அளவுக்கு அவள் வளைத்தாள்.
“ஆ.. விடறீ.” என கத்தினான்.
“நான் ரொம்ப பொறுமையா இருக்கேன். என்னை கிளப்பி விட்டீங்க அவ்ளோதான்”
“இதே தான் நானும் சொல்றேன். நான் பாட்டுக்கு என் வழியில் போறேன். நீங்க என்னை கிளப்பி விடாதீங்க.”
“ஓ என்ன பண்ணுவீங்க?”
“ஆம்பளடி நானு.. என்ன வேணா பண்ணுவேன்” மீசையை நீவி விட்டு சொன்னான்.
“அப்பா காசுல கடை வச்சு, உட்காந்து சாப்பிடறீங்களே.. நீங்க ஆம்பளையா?”
தீப்பட்டது போல் அவளை பார்த்தான்.
“என் அப்பா காசு.. எனக்கு கடை வச்சு தந்தாரு. அதுக்கென்ன இப்போ.?”
“உங்கண்ணன், உங்க தம்பிக்கும் அவர் தானே அப்பா
. அப்படியும் அவங்க ரோஷக்காரங்களா உங்கப்பா காசு வேணாம்னு தானே தனியா நிக்கறாங்க?”
“அவங்க வேணாம்னு சொன்னா நான் ஏன் சொல்லனும். அப்புறமா அவர் சம்பாதிச்ச காசை என்ன பண்ணுவாரு..”
“இதை பாருங்க. எனக்கு அதெல்லாம் தெரியாது. நம்ம குழந்தை பொறக்கறதுக்குள்ள நீங்க தனியா ஒரு கடையோ, விவசாயமோ செய்ய ஆரம்பிக்கலன்னா அப்புறமா நடக்கிறதே வேற.”
“அதுக்கு காசுக்கு எங்க போவேன்.”
“ஏன் கை காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு.. போய் பேங்க்ல லோன் கேளுங்க. இல்ல உங்கப்பா நிலத்தை போய் உழுது உழைச்சு அதுல வருமானத்தை கொண்டு வாங்க.. அப்புறமா உங்கப்பாக்கிட்ட அதுக்கான காசை கொடுத்துட்டு அந்த நிலத்தை வாங்கிக்கோங்க.”
“அடியே அது மானாவாரி நிலம். கிணறு, போர்னு ஒன்னும் கிடையாது. எட்டு மாசம் காஞ்சு நாலு மாசம் மழை பெஞ்சாலே போட்டதை எடுக்க முடியாது. இப்போ பத்து மாசம் காஞ்சு இரண்டு மாசம் கூட மழை பேயல..”
“ஓ.. உங்கப்பா எதுக்கு அதுக்கு உங்களை அக்ரிகல்ச்சர் படிக்க வச்சாரு.? ஆயிரம் வழி இருக்கு. நானே சொல்வேன் என்ன பண்ணனும்னு உங்களுக்கு தெரியலையா? அது சரி படிக்க காலேஜ் போயிருந்தா தெரியும் அதெல்லாம்.. நீங்க தான் கண்டவளோட…..”
“போதும் நிறுத்து. வாயை உடைச்சிடுவேன்.”
“இதை பாருங்க. இதான் லாஸ்ட். நீங்க இப்படி வாயை உடைப்பேன் பல்லை உடைப்பேன்.. குடலை உருவிருவேன்னு சொல்றதெல்லாம். மரியாதையா நான் சொல்றதை கேளுங்க..இல்லன்னா என்னை இன்னொரு ரூபத்தல பாப்பீங்க.”
வேகவேகமாக அங்கிருந்து கீழே சென்றாள்.
மாதவனுக்கு ஆத்திரமாக வந்தது. யாரிடம் காண்பிக்க முடியும் என்று பால்கனிக்கு வந்தான். தூரத்தில் ரதியும், மாறனும் ஓடிப்பிடித்து விளையாடுவது தெரிந்தது.
விரக்தியான புன்னகை ஒன்று அவனுக்கு வந்தது.
“போதும் போதும் மூச்சு வாங்குது. உட்காரலாம்” என்று சொல்லியபடியே ரதி வந்து அமர்ந்தாள்..
வானில் மெல்லிய கீற்றுக்களாய் மேகங்கள் நகர்ந்தன. எங்கிருந்தோ மின்னல் வெட்டியது.
“ரதி.. உள்ள போலாம்மா.? மழை வரும் போல…நான் தோசை ஊத்தறேன். நீ ஏதாவது தொட்டுக்க வைக்கிறியா..”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க போய் வேலையை பாருங்க”
“இல்ல இல்ல.. வா. ஒன்னாவே செய்யலாம்.”
“சரி வாங்க..” என்று உள்ளே போனாள். அவளுடன் கல்லூரி கதைகள் பேசியபடியே கோதுமை மாவை, அரிசி மாவோடு கரைத்து, தாளித்து, உப்பு சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம் சேர்த்து அவன் தோசை ஊற்றத் தயாரானான்.
“உங்களுக்கு சமைக்க நல்லா வருமா..?”
“ம்ம். ரொம்பலாம் தெரியாது. அம்மா கொஞ்சம் சொல்லித் தந்தாங்க. ரூம் எடுத்து இருந்தப்ப சமைக்கனுமேன்னு நானும் கத்துக்கிட்டேன்”
“சட்னி ரெடி..நீங்க நகருங்க. நான் தோசை ஊத்தறேன்”
அவள் கைகளை பிடித்து அருகில் இருந்த நாற்காலியில் அவளை அமர வைத்தவன், அவனே அழகாக மொறு மொறுவென்று தோசை ஊத்தினான்.
இருவரும் சாப்பிட்டு முற்றம் வந்தவர்கள், மழை தூறல் போட ஆரம்பித்ததும் இருவரும் அங்கேயே அமர்ந்தனர்.
அவளது வெள்ளி கொலுசு சேர்ந்த கால்கள் மழைத்தாரைகளில் தாளம் போட ஆரம்பித்தன. லேசாக பெய்ய ஆரம்பித்த மழை சோவென்று பெய்தது. வீட்டை சுற்றிலும் இருந்த மண் தரை அத்தனை நீரையும் அவசரமாக பருகி, அந்த தருணத்திற்கே உரிய மண் வாசனையை பரப்ப ஆரம்பித்தது.
ஒரு நொடி அதை சுவாசித்தால் போதும்.. எந்த கவலையும் இல்லாத குழந்தை போல் மனம் ஆகிவிடும்.
மாறன் சொல்ல சொல்ல, அவள் மழையில் நனைய ஆரம்பித்தாள். சிறு பிள்ளைத்தனமான அவளின் செய்கையில் அவனும் இணைந்துக் கொண்டான்.
திடீரென்று மின்சாரம் தடைப்பட, இடியும் அவ்வளவு சத்தத்துடன் இடித்தது.
இருவரும் பின்னே நகர்ந்து, தட்டு தடுமாறி நடக்க, மாறன் அவனது அலைபேசியை தேடி எடுக்க போனான்.
அந்நேரம் பார்த்து, அவள் மேல் ஏதோ ஊறுவதை போல் அவளுக்கு தோன்ற பயத்தில் அலறினாள். விக்கல் வேறு வந்தது.
“ரதி.. என்ன.. ஏன் கத்தின.. அப்படியே இரு.. இதோ வந்துட்டேன்” என்று அருகில் இருந்த அலைபேசியை எடுத்து ஆன் செய்துக் கொண்டே வந்தான். அவளுக்கு விக்கல் அதிகமாக அவனை பார்த்துக் கொண்டே மயங்க ஆரம்பித்தாள். அவன் பயந்து அவளை நெருங்கி தாங்கிப் பிடித்தான்.
அவன் மேல் சாய்ந்தபடியே அவள் மயக்கமானாள். மெல்ல அவளை தூக்கி கொண்டு போய் அருகில் இருந்த மர சோஃபாவில் அமர வைத்தான். அவளின் கைகள் அவனின் சட்டையை இறுக்கி பிடித்திருந்தது. அவளது தலை அவன் மார்பில் சாய்ந்திருக்க, அவனின் இருதயத்துடிப்பு ஊருக்கே கேட்கும் அளவு அதிகமானது.
மெல்ல அவளின் கன்னம் தட்டினான். அவளை சாய்த்து விட்டு எழுந்து போய் தண்ணீர் எடுத்து வரலாமென்றால் அவளின் பிடி இறுகியிருந்தது. மீண்டும் அவளை மெல்ல எழுப்பி தன்மேல் சாய்த்துக் கொண்டு இரண்டடி தள்ளி மழைத்தண்ணீரை கைகளில் பிடித்து அவள் மேல் தெளித்தான். இன்னும் கொஞ்சம் கைகளில் பிடித்து அவளுக்கு குடிக்க கொடுத்தான். மெல்ல கண்விழித்தவள் அந்த இருட்டையும், இடியையும் மீண்டும் கண்டு அவனை இறுக்கி கட்டிப்பிடித்து கொண்டாள். அரை மயக்கத்தில் இருந்தவளை மெல்ல அணைத்து அறைக்குள் கூட்டிச் சென்றவன், அவளை படுக்க வைத்து, தானும் அவளருகில் அமர்ந்து, அவளின் கைகளை இறுக்கிப்பிடித்து, அவளை சாய்த்துக் கொண்டான்.
நினைவுகள் சில வருடங்களுக்கு முன் சென்றது.
அன்று பௌர்ணமி. பர்வத மலைக்கு மக்கள் அதிகமாக செல்ல ஆரம்பித்த காலம். மலை ஒரு சாய்வான தளம் போன்றது. சில அடிகள் மெல்ல ஊர்ந்து செங்குத்தாக ஏறிய பின் கடப்பாறைகள் வரிசையாக நட்டு வைத்திருப்பார்கள். அதைப் பிடித்துக் கொண்டு தான் மேலே ஏற வேண்டும். அன்று மாறனும் போய் இருந்தான்.
மலை ஏறியவர்கள் அங்கங்கே இளைப்பாற, ஒரு பெருமழை அன்றும் இப்படித்தான் திடீரென்று வந்தது. அவரவர்கள் மழைக்கு ஒதுங்க, ரதியும் அவளின் தோழிகளும் அதில் ஒதுங்கியிருந்தனர். கூட்டத்தில் தள்ளாட்டம் வர, ரதி அவளுடன் வந்தவர்களை தொலைத்தாள். மெல்ல ஒரு குகை போன்ற அமைப்பில் இருந்த இடத்தில் கூட்டம் தள்ளு முள்ளுடன் அவளை ஒதுக்கியது.
மாறனும் அங்கு இருந்தான்.. மழை அடித்து பெய்ய, அவள் ஒதுங்கிய இடத்தின் பின் சரிவாக பள்ளம். அவள் கூட்டத்தின் தள்ளலில் பின்னே கால் வைக்க, அது வழுக்க, அலறலுடன் அருகில் நின்ற அவனின் சட்டையை கொத்தாக பிடித்தாள்.
அவனும் அவளை தாங்குவதற்காக அந்த இருளில் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை இடுப்பில் கைக்கோர்த்து அவளை இறுக்கி அவனோடு சேர்த்துப் பிடித்தான். அவள் விக்கலுடன் மயங்க, அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
“கொஞ்சம் நகருங்களேன். யாராவது தண்ணி வச்சிருந்தா தாங்க. இவங்க மயங்கிட்டாங்க” என்று கத்தினான்.
“அட இங்க நிக்கவே இடமில்லை.. எங்க நகறது.? உன் கூட வந்த பொண்ணு தானே. ஒழுங்கா பாத்துக்க வேண்டியது தானே. பயத்துல அலற பிள்ளைங்களையெல்லாம் எதுக்கு நைட்ல இங்க கூட்டிட்டு வர்றீங்க” கூட்டம் கடுகடுத்தது.
வேறு வழியுமில்லாமல் அவளை தாங்கிப் பிடித்தான். அவளோ அவனின் சட்டையை இறுகிப் பிடித்தபடி அவன் மார்பில் சாய்ந்தாள். அவளின் மூச்சுக்காற்று அவனின் மார்பில் சூடாகப் பட, அவளது மொத்த உடலையும் தாங்கும் மஞ்சமானான் அவன்.
இடுப்பில் கோர்த்திருந்த விரல்கள் அவனுக்கு நடுக்கத்தை கொடுத்தது. முதல் முறை அவன் வாழ்வில் ஒரு பெண்ணின் ஸ்பரிசங்கள். கிட்டத்தட்ட அவளின் மொத்த எடையும், மொத்த உடலும் அவன் மேல். உதட்டின் மேல் அந்த நேரத்திலும் வேர்த்து கொட்டியது. ஆனாலும் தர்மத்தை கடைப்பிடித்தான். உணர்வுகளை அடக்கி கொண்டு அவளை தாங்கினான்.
யாரோ தெரியாத பெண்ணின் மீது கரிசனம் தான் வந்தது.
ஆனால் சூழலும், மழையும், நெருக்கமும், அந்த வயதும் காமத்துக்கும், கரிசனத்திற்கும் இடையில் திண்டாடியது. மெல்ல மின்னல் வெட்டிய வெளிச்சத்தில் அவளை பார்த்தான். துலக்கிய வெண்கலம் போல் அவளின் மஞ்சள் நிற முகம் மின்னியது.
மாசு மருவற்ற அந்த முகம், அதில் தெரிந்த அப்பாவித்தனம், மக்கள் நெருக்கத்தால் உண்டான கசகசப்பு எல்லாம் சேர்ந்து அவளின் முகத்தில் சிறு சோர்வு, என அவள் அவனை ஈர்த்தாள்.
முதன் முறை நெருக்கத்தில் ஒரு பெண்ணின் முகம். பார்த்தவுடன் பச்சை குத்தியது போல் அவள் முகம் அவனின் மனதில் பதிந்தது.
எத்தனை அழகு. அதோடு எந்த அலங்காரமும் இல்லாமல், எந்த நகையும் இல்லாமல் அப்படி இருந்தாள். அவன் தாங்கிய அந்த இடை அவனோடு குழைந்து அவனது இடுப்போடு ஒட்டியிருந்தது. காற்று அவளின் முகத்தில் மோத, தலைமுடி பறந்து அவளின் முகத்தை மூடியது. அவனின் விரல்களால் அவளின் முகத்தில் இருந்த முடியை நீக்கினான்.
மெல்லிய அவளின் விரல்களும் அதே நேரத்தில் அவள் முகத்தில் இருந்த முடிகளை அனிச்சையாக நீக்க, அவனது விரல்களோடு அதுவும் சேர்ந்தது. செங்காந்தள் பூ போல மெத்தென்ற அவளின் விரல்கள் அவன் கைகளில் பட்டது.
கரிசனத்தையும், காமத்தையும் தள்ளி பெருங்காதல் அவனுள் பெருகியது.
நிமிர்ந்து இருள் வானை பார்த்தான். மழை மெல்ல நிற்பதற்கான அறிகுறியை கொடுத்தது. அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு அமைதியாக நின்றான். மழை விட ஆரம்பித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
அவன் மெல்ல அவளின் கன்னங்களை தட்டி எழுப்பினான். கண்களை திறந்தாலும் அரை மயக்கத்தில் அவனை பார்த்தாள். மெல்ல அருகில் இருந்த கல்லின் மேல் அவளை அமர வைத்தான். லேசான மழைத்துளிகளை பிடித்து அவள் மேல் தெளித்து அதை குடிக்கவும் கொடுத்தான். அதற்குள் விஜியும், நித்யாவும் அவளை தேடி அங்கு வர,
“ரதி.. ரதி.. என்ன ஆச்சு இவளுக்கு” என்று அலறியவர்கள் அவளை தாங்கிப்பிடித்து மெல்ல அழைத்து சென்றனர்.
நமசிவாய என்று மலை ஏறும்போது உச்சரித்த அவனின் இதழ்கள் இப்போது கீழே இறங்குகையில் ரதி, ரதியென்று உச்சரிக்க ஆரம்பித்தன. அவளே அவனின் முழு வாழ்க்கைக்கான காதலி ஆனாள்.
கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் அவன் அவளை பின்தொடர்ந்திருக்கிறான். அவளுக்கு தெரியாமல் அவளை ரசித்து, அவளுக்காகவே அவன் வாழ்க்கையை கற்பனை செய்து, வேறு பெண்களின் முகம் கூட அவனுக்கு இதுவரையில் நினைவில் தொடர்ந்து இருந்தது இல்லை.
காதல் தவமொன்று அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. மாதவன் ரதி மேலான காதலை சொன்னபோது அவன் மொத்தமாக உடைந்தான். ஊருக்கே வராமல் இருந்தவன் திருமணத்திற்காக தான் மனதை தேற்றிக் கொண்டு வந்திருந்தான்..
அவனின் தவத்தின் பயனோ, அவனின் காதலின் சக்தியோ இதோ இன்று அவனின் மடியில் அவளிருக்கிறாள்.
மெல்ல அவளை பார்த்தான். அன்று பார்த்த அதே நிலவு போல் இன்றும் அவளிருந்தாள்..அன்றிருந்த காதல் இன்று பலமடங்கு அவனுக்குள் பெருகியிருந்தது. இப்போதும் அவளின் சூடான மூச்சு அவனின் மார்பில் பட்டுக் கொண்டிருந்தது. இரவும், அருகாமையும், அவளின் ஈர உடம்பும் அவனின் பிரம்மச்சரியத்தை சற்று அசைத்து தான் பார்த்தது. ஆனாலும் நிதானத்தை கடைப்பிடித்தான்.
அவளை கட்டிலில் மெல்ல சாய்த்தவன் அவளின் சில்லிட்டு இருந்த கைகளை பறபறவென்று தேய்த்து விட்டான். தண்ணீர் எடுத்து வந்து தர, அவள் மெல்ல கண்விழித்தாள். சூழலும், அவனின் அருகாமையும், அவளிருந்த நிலையும், பதற்றத்தை தர, விலகி அமர்ந்தாள்.
“ஆர் யூ ஓகே ரதி..” என்றவன் அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அதில் நாணத்தோடு பயமும் கலந்திருக்க அவளின் சேலையை இறுக்கி மார்புக்கு குறுக்காக கைகளை கோர்ததவள், எழுந்து ஓடினாள்.
மெல்ல வெளியே வந்தவன்,
“ரதி நீ போய் முதல்ல டிரெஸ் மாத்து .. குளிர் அதிகமாகப் போகுது. ஏன் மயக்கம் வந்துச்சு.? உனக்கு எதாவது பண்ணுதுன்னா ஹாஸ்பிட்டல் வேணா போலாம்.”
“இல்ல..ஏதோ என்மேல விழுந்துச்சு. பயந்துட்டேன். பயந்தா இப்படித்தான் விக்கல் வந்து மயக்கம் வரும். இப்போ ஓகே.” என்று மறுபடியும் அறைக்குள் வேகமாக வந்து கதவை சாத்தினாள். வெட்க சிரிப்பில் அவளே அவளை திட்டியும் கொண்டாள்.
error: Content is protected !!