Skip to content
Post Views: 4,907
பவ்யா கூறியது கண்டு அனைவரும் திகைப்புடன் இருக்க வளர்மதி தான் “அவ சின்ன வயசுல இருந்தே தீபுவை அப்படி கூப்பிட்டே பழகிட்டாடா பவி. வீட்டுக்கு ஒரு பொண்ணு எல்லாருக்கும் செல்லப் பொண்ணு வேற”என்று நெக்குருகி பேசிட
“சின்ன பிள்ளையிலேயே இதை எல்லாம் கண்டிச்சு சொல்லி இருக்கணும் அத்தை. இப்போ பாருங்க நான் வந்து சொல்லி தர்ற மாதிரி ஆகிடுச்சு. “என்று உச்சுக் கொட்டிய பவ்யா”நானும் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு தான் அத்தை. எங்கண்ணிக்கு என்னை விட ரெண்டு வயசு கம்மி ஆனாலும் நான் ரெஸ்பெக்டா அண்ணினு தான் சொல்வேன். ஸ்டார்டிங்கிலேயே சொல்லிட்டேன். நான் எப்பவும் அடுத்தவங்க சொல்ற மாதிரி வச்சுக்க மாட்டேன் அத்தை” என்றாள் பெயருக்கு தகுந்த பவ்யத்தை காட்டி.
Advertisement
“நிலாக்குட்டி அண்ணி சொல்றதும் சரி தான். இத்தனை நாளும் சரி இனிமே தீபுவை அண்ணானு சொல்லி பழகு அதே மாதிரி அண்ணினு சொல்லணும் டா.”என்று வாஞ்சையாக வளர்மதி கூற உள்ளிருந்த நீரதிக்கு ஆத்திரம் பொங்கியது.
Advertisement
ஏன் இத்தனை நாளும் அவள் என்னை வாங்க போங்க என்று மட்டும் அழைக்கிறாளே அதுவெல்லாம் இந்த அம்மா கண்ணுக்கு தெரியாதா என்று பொடுபொடுக்க அவளது மனசாட்சியோ நீயும் பவி மாதிரி அவ அண்ணினு கூப்பிடாதப்பவே சொல்லி இருந்தா தெரிஞ்சு இருக்கும் என்று குத்திக் காட்ட
Advertisement
ம்ம்க்கும் அப்படி மட்டும் சொல்லி இருந்தேன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெருசு ரதி னு ஒரு ஆளு இந்த பக்கம் அவளே சின்னபொண்ணு வாயில வச்சா விரலை கூட கடிக்க தெரியாது னு ஒரு கூட்டம் வரும் தேவையா எனக்கு என்று கேள்வி கேட்ட மனசாட்சியை அடக்கி வைத்தவள் வேலையில் மூழ்கிப் போனாள்.
Advertisement
அங்கே பவ்யாவோ சிரித்துக் கொண்டே நிலாவை க்ளீன் போல்ட் ஆக்கினாள்.
நிலா தன் அம்மா தனியாக வருவதற்கு காத்திருந்தாள்.
அனைவரும் கோவிலுக்கு கிளம்பி விட்டனர்.
கோவிலில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி வீட்டிற்கு வருகையில் மணி பத்தை தொட்டிருந்தது. சமையலுக்கு ஆள் வைத்து இருந்தார்கள்.
“அக்கா நானும் ஏதாவது ஹெல்ப் செய்யவா”என்று வந்து நின்ற பவ்யாவை “புதுப்பொண்ணு போய் என் கொழுந்தன் கிட்ட உட்கார்ந்து பேசிட்டு இரு இங்கே உள்ள வேலை எல்லாம் நான் பார்த்துப்பேன்”என்றாள் நீரதி சிரித்தபடி.
“செம க்யூட் ஸ்மைல்”என்று அவளின் கன்னத்தில் கிள்ளி சிரித்து விட்டு பவ்யா செல்ல நீரதிக்கு ஆச்சரியத்தில் விழிகள் விரிந்து கொண்டது.
ஆட்டின் இறைச்சி அதன் இதர பாகங்கள் எல்லாம் மணக்க மணக்க வெந்து கொண்டிருந்தது. பவ்யாவின் வீட்டினர் பனிரெண்டு மணிக்கு எல்லாம் வந்திறங்கி விட்டனர்.
பணத்தின் வாசனை அவர்களின் ஒவ்வொரு பாவனையிலும் தெரிந்தாலும் அத்தனை அமரிக்கையாக இருந்தனர். பேசும் போது அவ்வளவு மென்மையாக பேசினர். பவ்யா கூறிய அப்பத்தா நல்ல மிடுக்கான தீட்சண்யமான பார்வையுடன் இருந்தார். திருமண அரிபரியில் கூட அவரை சரியாக கவனிக்கவில்லை வளர்மதி குடும்பம். ஆனால் இன்று பார்க்கும் போது வளர்மதிக்கு தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்’இந்த அம்மா கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கணும்’என்பது தான் அது.
இங்கே நிலா வேறு தீபனிடம் பவ்யா பேசியதன் விளைவாக குறைபடித்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் தீபு உன்னை இதுநாள் வரை நான் பேர் சொல்லி தானே கூப்பிட்டேன் இப்போ திடீர்னு அண்ணன் னு நான் எப்படி சொல்ல உன் பொண்டாட்டி ரொம்ப தான் பேசறாங்க”என்று பரிதாபமாக கேட்க
“நீ ஏன் நிலா இப்படி யோசிக்கிற…?பவி சொன்னதில் தப்பென்ன சொல்லு. பொது இடங்களில் அண்ணான்னு மரியாதையுடன் கூப்பிட்டா தானே எனக்கு கௌரவம். அதைத் தான் உன் அண்ணி சொல்றாங்க. அது போகட்டும் இப்படி எல்லாம் பேச எங்கே படிச்ச நீ?. உன் பொண்டாட்டி அது இதுன்னு சொல்ற பவியண்ணினு இப்பவே சொல்லிப் பழகு. ரொம்ப வருத்தப்பட்டா பவி. நான் தான் நீ சின்ன பொண்ணு சொன்னா புரிஞ்சுப்பனு சமாதானம் செஞ்சேன்”என்றான் தீபன்.
நிலாவிற்கு மனதே ஆறவில்லை. இதுவரைக்கும் இந்த வீட்டில் தன்னை ஒருவர் கூட இதுபோல பேசியதில்லை புதிதாக வந்து விட்டு எவ்வளவு திமிர் என்று நினைத்து பொருமியவள் ,’எனக்குன்னு ஒரு நேரம் வராமல் போகுது’ என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
வெடுக்கென்று எழுந்து போனவளைக் கண்டு கொள்ள தீபனுக்கு ஏது நேரம்.
வந்த சொந்தங்களை வரவேற்று விருந்தளித்து அனுப்பவே நேரம் சரியாக இருந்தது. திருமணத்தை விட விருந்திற்கென வந்த ஆட்கள் அதிகம். கேட்டரிங் கான்ட்ராக்டரிடம் அனைத்தையும் ஒப்படைத்திருக்க பஃபே சிஸ்டம் ஒரு பக்கம் பந்தி பரிமாறுதல் ஒரு பக்கம் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உணவருந்தும் முறையை தேர்வு செய்து கொண்டனர்.
பெரும்பாலான வயதானவர்கள் பந்தி பரிமாறிய பக்கம் உணவருந்த நீரதி ஆழியன் இருவரும் அங்கே கவனித்துக் கொண்டனர். மேற்பார்வை என்றாலுமே ஒவ்வொருவரின் இலையைப் பார்த்து பரிமாற சொல்லியே அத்தனை களைப்பானது.
நீரதிக்கு தலையே கிறுகிறுத்தது. அசைவ விருந்தின் வாசனை ஒவ்வாமையை ஏற்படுத்த லேசாக தள்ளாடினாள்.
“ஏத்தா சூதானமா”என்று பிடித்துக் கொண்ட பவ்யாவின் அப்பத்தா அவளை அமர வைக்க அப்போது தான் நீரதியை கவனித்தான் ஆழியன்.
“ரதி என்னாச்சு”என்ற கூவலோடு ஒடி வந்தவனை முறைத்த அப்பத்தா”இந்த புள்ள புருஷனா நீயி”என்று வினவ
“ஆமா பாட்டி”என்று அவன் மனைவியை பார்த்து தண்ணீரை நீட்ட
“சோலி முக்கியந்தேன். ஆனா அதை விடவும் முக்கியம் பொஞ்சாதி.புள்ள கிறுக்குத்தட்டி சாயிறவரைக்கும் என்னா செஞ்ச நீயி. ஏன் யா எங்கன கவனமிருந்தாலும் வீட்டுக்காரி மேல ஒரு கண்ணு எப்பவும் இருக்கணும்.கூட்டிட்டு போ”என்று அதட்ட அவரிடம் வாய் திறக்கவே முடியவில்லை ஆழியனால்.
பந்தியை கவனிக்க வேறு ஆள் இல்லையே என்று யோசித்து அவன் நிற்க
“இந்த சோலிக்கழுதைய பாக்க ஆள் அம்புடாமையா கெடக்கு.நீ போய் கொண்ணவளை பாரு. நா பத்தூரை சமாளிப்பேன் இத்தூணூன்டு கூட்டம் இத்த மேய்க்க மாட்டனா”என்று சட்டமாய் அவர் அமர ஆழியன் நீரதியோடு கிளம்பி விட்டிருந்தான்.
“அதான எங்கப்பத்தா பாக்காத கூட்டமா”என்று பவ்யாவின் அண்ணன் அவரின் கன்னம் கிள்ளி கொஞ்சி “நீங்க போங்க மச்சான் இங்கே நான் நிற்கிறேன்”என்று அனுப்பி வைத்து விட்டான் அவன்.
ஆழியனுக்கு வியப்பு தான். அமுதன் தரங்கினி திருமண விருந்தில் அவளின் அண்ணன் பண்ணிய அலப்பறை இன்றும் நினைவில் இருக்கிறதே அவனுக்கு.
“விருந்தாளி என்னைப் போய் தண்ணி டம்ளர் எடுக்க சொல்ற”என்று எகிறியதுடன் வீட்டில் ஒரு பஞ்சாயத்தையும் கூட்டி இருந்தான்.
“எங்கண்ணன் எவ்வளவு பெரிய ஆபிசர்”என்று தரங்கினி வேறு மூக்கை சிந்தினாள்.
அமுதனோ அவர்கள் அலப்பறையில் கடுப்பாகி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் “விடுங்க மச்சான். உங்களை நாங்க தங்க தட்டுல தாங்குறோம்”என்று வஞ்சபுகழ்ச்சி அணியில் சமாதானம் செய்திருந்தான்.
சென்றிருந்த ஒரே மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் வேலை போயிருக்க அண்ணன் தம்பி மூவரும் “ஆபிசரு”என்று தங்களுக்குள் நக்கலடித்து சிரித்தது எல்லாம் வேறு கதை.
*********
“ம்மா உனக்கு என்னாச்சு”என்று ஸ்வர்ணிகா கவலையுடன் கேட்க
“தெர்லடா பாப்பு தலையை சுத்துது”என்று சோர்வாக சாய்ந்து கொண்டாள் நீரதி.
“ரதி வா ஹாஸ்பிடல் போவோம்”என்று வியர்க்க விறுவிறுக்க வந்து நின்றான் ஆழியன்.
“ரொம்ப டயர்டா இருக்கு காலையில் போகலாமே”என்றவளை தவிப்புடன் பார்த்தவன் “ஹாஸ்பிடல் போகலாம் ரதி சொன்னா கேளேன்”என்றான்.
“அந்த பாட்டி திட்டினதில் வருத்தம் ஆகிட்டீங்களா அதான்”எனும் போதே அவளை முறைத்தவன் “வரு நீ போய் சனா கூட விளையாடு”என்று அனுப்பி வைத்து விட்டு “உன்னை என்ன செய்வேன்னே தெரியாதுடி மரியாதையா கிளம்பு. வெளியே தான் என்ன நடக்குதுனு தெரியலை. உன் உடம்பில் என்ன நடக்குதுன்னு கூடவா தெரியாது உனக்கு.வேணாம் என்னை பேச வைக்காத ரதி”என்று சிடுசிடுத்தவாறு சட்டையை மாட்டினான்.
அமைதியாக கிளம்பியவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் “வருவுக்கு கூட உனக்கு நான் வெஜ் வாசனை பிடிக்கலை தானே”என்றான் அவள் மணிவயிற்றை ஆசையாக வருடி.
“ஆழி”என்று அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் அவனை.
சட்டென அவன் விழிகளில் நீர் கோர்க்க ‘வருஷங்கள் ஆகிடுச்சு இவ இப்படி கூப்பிட்டு’என்று கசப்பாய் எண்ணிக் கொண்டான்.
“ஹாஸ்பிடல் போலாம் ரதி”அவ்வளவு தான் அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகள்.
வீட்டினரின் வித்தியாச பார்வைகளை கூட கண்டு கொள்ளாமல் நடந்தவன் பொன்னியிடம் சென்று “ஆஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வரேன் பாட்டி”என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
“விருந்தாடி வந்திருக்கையில தான் இதுக்கு நோக்காடு வரும்”என்று வளர்மதி யாருக்கும் கேட்காமல் முணுமுணுத்தார்.
“என்ன வளரு இப்புடி”என்று தரங்கினியின் அம்மா நொடிக்க”என்னத்த சொல்ல அண்ணி இதே வாரப்பாடு தான் இவகிட்ட.”என்று பெருமூச்செறிந்தவர் “அப்பவே நம்ம சங்கவியை பார்த்து இருக்கேன் டா கட்டிக்கண்ணு சொன்னேன் எங்க கேட்டான் இவ தான் வேணும் னு ஒத்தக்காலுல நின்னுட்டான்.”என்றார் எரிச்சல் அடக்கி.
“நீ என்ன செய்வ விடு. என்னவோ சங்கவியோட நேரம் அவ தலையில பெரத்தில போய் கட்டி சீப்படணும்னு இருக்கு”என்று சொல்லி கண்ணைக் கசக்க வளர்மதிக்கு தாளவே இல்லை.
“அழுவாதீங்கண்ணி அவளுக்கு னு ஒரு விடிவு வராமலா போயிரும்”என்று சமாதானம் செய்தார்.
இப்படியான ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் விருந்து நடந்தேறி சொந்தங்கள் எல்லாம் ஒவ்வொருவராய் கிளம்ப ஆழியனும் மனைவியோடு வந்து விட்டான்.
“என்னய்யா சொன்னாங்க ஆஸ்பத்திரியில”என்று பவ்யாவின் அப்பத்தா தான் முதலில் கேட்டார்.
“ரதி”என்று கண்ணைக் காட்டியவனோ சட்டென அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான் மனைவியோடு இணைந்து. பொன்னிக்கு முகம் கறுத்தது ஆழியனின் செய்கையில்
“நல்லா இருங்க நல்லா இருங்க”என்று மனம் குளிர வாழ்த்தியவர் “பவி அந்த இனிப்பை கொண்டாந்து உன் அக்கா கிட்ட குடுத்தா.”என்றார்.
“எதுக்கு அப்பத்தா”என்றவாறு பவ்யா இனிப்பை நீட்டவும் “எல்லாம் நல்ல சேதிதேன்”என்றார் சிரிப்புடன்.
“செல்வம் நெசமாவா”பொன்னி மற்றதை மறந்து ஆவலுடன் கேட்க
“ஆமா பாட்டி ரதி நீ சொல்லு”என்றான் சிறு வெட்கத்துடன்.
“நாள் தள்ளி போயிருக்கு பாட்டி”என்றதில் மனச்சுணக்கம் மறந்து “இப்பவாச்சும் ரெண்டாவது பெத்துக்க ஆசை வந்ததே உனக்கு”என்ற வளர்மதி “நல்லா இருங்க”என்றார் இனிப்பை எடுத்துக் கொண்டபடி.
புதுவரவை அனைவருமே வரவேற்க தயார் ஆக தரங்கினி அம்மா முகத்தில் மட்டும் சிறு வாட்டம்.
….. தொடரும்
error: Content is protected !!