Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானல் -30

    ஹரிஹரன் அமைதியாக நடுக் கூடத்தில் நீரதி கொடுத்த தேநீரை அருந்தியபடி அமர்ந்திருக்க தேசிகன் குடும்பத்தினர் அனைவரும் ஆஜர்.

    நீரதி “நீங்க பேசுங்க நான் கடைக்கு கிளம்பறேன்.”என்று பொதுவில் சொல்லி விட்டு அவள் கிளம்பி விட்டாள்.



Advertisement

    வந்த விருந்தினரை கவனித்து விட்டேன் என் வேலை முடிந்தது என்பதாக அவள் செல்ல வளர்மதி வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

Advertisement

Advertisement

    ம்ம்க்கும் அவங்க உங்களை மதிக்கிற மாதிரி வேற நினைப்பா என்று பவ்யா எண்ணிக் கொண்டாள்.

    யாரும் பேச முன்வராத காரணத்தால் வளர்மதியே பேசினார்.

Advertisement

    “என் பொண்ணு என்ன தப்பு செய்திருந்தாலும் அதை நீங்க எங்க கிட்ட சொல்லி இருக்கணும் அதை விட்டுவிட்டு”எனும் போதே ஹரிஹரன் எழுந்து நின்று விட்டான்.

    “மச்சான்”என்று அருகில் சென்ற அமுதன் அவனது கையைப் பிடித்துக் கொள்ள அதுவே வளர்மதிக்கு பிடிக்கவில்லை ‌

    “உங்க பொண்ணு அடிச்சேன்னு சொன்னாளே ஏன் அடிச்சேன்னு சொன்னாளா”என்றான் காட்டமாக.

    “உங்க அக்கா வந்ததை கவனிக்கலை வாங்க னு கூப்பிடாம விட்டுட்டா அதுக்காக”என்று பேசும் போதே

    “இதுக்கு எல்லாம் அடிக்கணும்னா நான் வாரா வாரம் அடிச்சு துரத்தி இருக்கணும் அவளை”என்றவன் “என் அக்கா என்னை விட பதினைந்து வயசு பெரியவ.கிட்டத்தட்ட உங்க வயசுக்கு பக்கம் னு வச்சுக்கங்க. அவளுக்கு கல்யாணம் ஆகும் போது நான் பத்தாவது கூட போகலைனு நினைக்கிறேன். அடுத்த ஒரு வருஷத்தில் அவளுக்கு எங்க ஜீவிதா பொறந்துட்டா. அக்கா மகளை நான் தான் வெகுநாள் பார்த்து கவனிச்சுப்பேன்”என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரச்சினை எதில் துவங்கி இருக்கிறது என்று புரிந்தது அனைவருக்கும்.

    “நானே தூக்கி வளர்த்ததால அவ மேல எனக்கு தகப்பன் பாசம் அப்போ அவளை பெத்தவ மேல எனக்கு அம்மா பாசம் தானே இருக்கும். எங்க வீட்டில் இருந்துகிட்டு என் அக்காவையும் அவ பெத்த பொண்ணையும் தப்பா சொல்வாளா உங்க மக”என்று சற்று சத்தமாகவே கேட்டுவிட்டான்.

    குடும்பமே நின்றதில் சற்று தைரியம் வரப் பெற்ற நிலா வேகமாய் “நான் என்ன தப்பா கேட்டேன். இப்படி வாரா வாரம் மகளோட வந்துட்டு போறது தம்பியை வளைச்சு போடவானு”எனும் போதே “ஏய்”என்று அதட்டியது சாட்சாத் வளர்மதியே.

    நடந்த நிகழ்வின் சாராம்சம் புரிந்ததில் வீட்டு மாப்பிள்ளை காலில் நிஜத்தில் விழவில்லை அவ்வளவு தான் மனதார ஆயிரம் முறை விழுந்து எழுந்தார் தேசிகன்.

    ‘எங்கே தவறினோம் இவளை வளர்த்ததில் ஏன் இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசி அனைவரிடமும் கெட்டப் பெயரை வாங்கிக் கொள்கிறாள் நன்றாகத் தானே இருந்தாள் ‘என்று வளர்மதி சிந்தித்ததில் விளைந்தது என்னவோ தன்னைக் குறித்த நிந்தனை தான்.

    ஒரு வேளை தான் நீரதியை பேசியதில் குழம்பி என்று யோசித்தவர் அப்படி என்றாலும் காதலைத் தானே பிடிக்காமல் போக வேண்டும் இப்படி வாய்க்கு போறாத பேச்சுக்களையா பேசுவாள் என்று யோசிக்க அதற்கு நிலாவே வழி காட்டினாள்.

    “என்னால இப்போதைக்கு மனசு சரியாகி இவள ஏத்துக்க முடியாது மாமா. கோச்சுக்காதீங்க. நான் வருவேன் வந்து கூட்டிப் போறேன். என் பிள்ளைக்கும் அம்மா வேணுமே அதுக்காக தான் ஆனா அது இப்போ இல்லை.”என்று தீர்க்கமாக உரைத்த ஹரிஹரனிடம் “என் பிள்ளை”என்று இழுத்தாள் நிலா.

    “ரொம்ப அக்கறை தான்.”என்றவன் “போயிட்டு வர்றேன் மச்சான்”என ஆழியன் அமுதனிடம் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான்.

    நிலா தன் ஒப்பாரியை பெற்றோரிடம் துவங்கியதில் அவள் இப்படி எல்லாம் யோசித்து பேச காரணம் என்ன என்று வளர்மதிக்கு பிடிபட்டு விட்டது.

    நிலா அடிப்படையில் நற்குணம் தான். தற்போது பேச்சுக்கள் குதர்க்கமாகவும் கேவலமாகவும் வரக் காரணம் கூடா நட்பு என்று தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

    சமீபத்தில் வீட்டின் அருகில் இருந்த பெண்கள் எல்லாம் சேர்ந்து சீட்டு போட்டிருப்பதாகவும் அதில் தானும் சேர்ந்து இருப்பதாகவும் தெரிவித்திருக்க அதில் சிலரோடு நட்பு உருவாகி பேச்சு வளர்ந்ததில் நட்புக்கரம் நீட்ட அது வளர்ந்து பெண்களாக சேர்ந்து வெளியே செல்ல என்று நேரத்தை கழிக்க அதில் இருவரோடு நெருங்கிப் பழகியவள் அவர்களோடு பேசியதில் தன் குடும்பம் பற்றி விளக்க அவர்கள் தந்த அற்புதமான அறிவுரைகளை மூளையில் ஏற்றி இப்படி தன் குணத்தை தானே கெடுத்துக் கொண்டு நிற்கிறாள். பன்றி தானும் சாக்கடையில் புரண்டு தன் அருகில் நின்றவர்கள் மீதும் வாரி இறைத்ததில் நாற்றம் என்னவோ அருகில் நின்ற இவளுக்கு தான். பன்றிக்கு அது பழக்கத்தில் ஒன்று தானே.

    “வசந்திக்கா அப்பவே சொன்னாங்க. என்ன கவி உன் நாத்தனாரும் அவ மகளும் இங்கேயே டேரா போட முயற்சி பண்றாங்க போல பாத்து கவி . உன் இடத்துக்கு கொண்டு வந்தாலும் வந்துடுவா உன் நாத்தி னு . நான் கேட்டேனா அது தான் மா இப்ப நடக்குது. அதனால தான் இந்த ஆளு இப்படி பண்றான்”என்று நிலா புலம்ப

    “அப்படியே விட்டேன் னா தெரியும்”என்று கையை ஓங்கிக் கொண்டு ஓடி வந்த வளர்மதி “என்னடி தெரியும் உனக்கு. அப்படி அக்கா மகளைத் தான் கட்டணும் னா அவர் கல்யாணத்துக்கு பாத்தப்பவே வயசு கூட இருந்தாலும் பரவாயில்லை னு கட்டி இருக்க மாட்டாரா. தேடி வந்து உன்னையா பொண்ணு கட்டுவார். அந்த மனுசன் எவ்வளவு கூனி குறுகி பேசறார் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பழி போடுற”என்று சத்தமிட

    “அப்போ அவர் கண்ணுக்கு லட்சணமா தெரிஞ்சேன் இப்ப அவல்ல லட்சணமா”என்றதில் ஹரிஹரன் அடித்த இடத்திலேயே பளாரென விழுந்தது அறை ஒன்று. வளர்மதி யின் கைங்கர்யம் தான்.

    தேசிகன் கையைக் கட்டிக் கொண்டு மகள் அடி வாங்குவதைப் பார்த்தார் அவ்வளவே…

    “அம்மா”என்று அலறியவளை அடக்கி அத்தனை பேச்சுக்கள் பேசி ஹரிஹரனின் நிலையை புரிய வைத்து விட்டு தான் ஓய்ந்தார் வளர்மதி.

    “ஏங்க அவளுக்கு புத்தி சொல்லலாம் தானே”என்று கணவனிடம் மனம் தாளாமல் கேட்க

    “எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி வளர்த்தது நம்ம தப்பு வளரு. யார் எது சொன்னாலும் எதையும் யோசிக்காமல் இருக்குமோனு நம்பற இவளை புத்தி சொல்லி திருத்த முடியாது அனுபவம் திருத்தும் போய் வேலைய பாரு போ”என்றார்.

    “அதெப்படி ங்க எல்லாத்தையும் ஏனோ தானோ னு கேட்டுட்டு அமைதியா இருக்கீங்க”

    “என் மகன் விஷயத்தில் நீ பிரச்சினை பண்ணும் போது இதைத்தானே செஞ்சேன் அப்போ நல்ல புருஷன் பட்டம் குடுத்த உனக்கு இப்போ கஷ்டமா இருக்கோ”என்று சுள்ளென்று கேட்டவர் “ஹரிஹரன் வர்ற வரைக்கும் இவளுக்கு புத்திமதி சொல்லி அடங்கி இருக்க வை. அப்புறம் தேவை இல்லாமல் மத்தவங்க கிட்ட பேச்சு தர வேண்டாம்”என்றார் எச்சரிக்கை செய்யும் விதமாக.

    வளர்மதி அயர்ந்து போனார்.

    பொன்னி இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் மாமியாரின் இழப்பை ஏக்கத்துடன் தேக்கிக் கொண்டு இருந்தார்.

    தரங்கினியிடம் நிலாவோடு அணுசரனையாக இரு என்று கூறி இருக்க அவளோ சட்டையே செய்யவில்லை.

    “என்ன தரு அவளுக தான் அப்படி இருக்காளுகனு பாத்தா நீயுமே கண்டுக்க மாட்டேங்கிற”என்று ஆதங்கமாய் கேட்க

    “நான் சொல்லி மட்டும் உங்க பொண்ணு கேட்டுடுவாளா அத்தை. ஏதாவது பேசப் போனாலே ஒப்பாரி வைக்கிறா.நீங்களே புரிய வைங்க”என்று ஒதுங்கிக் கொண்டாள் தரங்கினி.

    “உன் ரெண்டாவது மருமக ஓவரா மினுக்கிட்டு போறா. ஏன் மா ஓடாத கடைக்கு இவ்வளவு அலங்காரமா போகணுமா”என்று நீரதியைப் பற்றி வளர்மதியிடம் சொல்ல நீரதி காதில் அது அச்சுப் பிசகாமல் விழுந்தது.

    “வாயை மூடுடி”என்று அதட்ட நீரதி வெளியே வந்து விட்டாள்.

    “இந்த அதட்டலை ஆரம்பத்திலேயே போட்டு இருந்தா இப்போ இந்த நிலைமை இல்லை. நான் பாட்டுக்கு என் வழியில் போறேன் இதுக்கு மேல ஏதாவது பேசினா வாயை இழுத்து வச்சு தச்சிடுவேன்”என்று காட்டமாக எச்சரிக்க

    “இப்போ எதுக்கு நீ மல்லு மல்லுனு வர்ற அவ உன்ன சொல்லலை”என்று வளர்மதி சமாளிக்க

    “என்னங்க”என்றாள் சத்தமாக

    “என்ன ரதி”என்று வந்தவனிடம்”இவங்களுக்கு நீங்க எத்தனாவது பையன்”என்று கேட்க அவனும் சாதாரணமாக “ரெண்டாவது”என்று சொல்லி விட்டான்.

    “இவர் ரெண்டாவது பையன் னா நான் தான் ரெண்டாவது மருமகள் உங்களுக்கு. அதுல எந்த டவுட்டும் இல்லையே”என்று கேட்க வளர்மதி பேச்சற்று நின்றார். பின்னே ஆழியன் அவர் மகன் தானா என்ற கேள்வி அல்லவா அதில் மறைமுகமாக ஒளிந்து நிற்கிறது.

    “நீங்க போய் கிளம்புங்க”என்றதும் அவன் மறுபேச்சு பேசாமல் செல்ல தன் மகனா இப்படி என்று எண்ணிக் கொண்டவருக்கு வேறு எதுவும் பேசவும் இயலவில்லை.

    “இனிமே பேசினா பழைய நீருவா இருப்பேன் னு கனவில் கூட நினைக்க வேண்டாம். யார் பேசினாலும் மரியாதை கெட்டுடும்”என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

    “என்னம்மா இவ”என்று நிலா பேசும் போதே நீரதியின் செருப்பு முன்னால் வந்து விழுந்தது.

    “ஸ்வரு செருப்பை தூக்கி எறியாத”என்று சத்தமிட்டபடி மீண்டும் வெளியே வந்தவள் “இப்போ தரையில் தான் விழுந்தது”என்று சொல்லி விட்டு காலால் செருப்பை நகர்த்திக் கொண்டு போய் விட்டாள்.

    நாட்கள் கடந்து கொண்டிருந்தது அதன் போக்கில். நிலா இன்னும் தேசிகன் வீட்டில் தான் இருந்தாள். ஹரிஹரன் அவளை அழைத்துக் கொண்டு செல்லவில்லையே தவிர மற்றபடி தானும் தன் மகனும் சிங்கப்பூரில் நடைபெறும் சிலம்ப போட்டிக்கு செல்வதாக தகவல் சொல்லி விட்டு கிளம்பி இருந்தனர். அவளது மாமியார் கூட அவளை அழைத்து பேசவில்லை. இப்படியே சென்றால் தன்னை இங்கேயே விட்டு விடுவார்களோ என்ற பயம் துளிர்க்கத் துவங்கி இருந்தது நிலாவிற்கு.

    ….. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!