கானல் -32
நீரதி ஆழியனை முறைத்துக் கொண்டே திரிவதும், அவன் நமட்டுச் சிரிப்புடன் எவரும் காணாமல் கண்ணடித்து புன்னகையை இதழோரத்தில் அதக்குவதுமாய் ஸ்வர்ணிகாவின் பூப்புனித நீராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.
“சும்மா சும்மா சிரிச்சீங்க பார்த்துக்கோங்க”என்று நீரதி அவனை எச்சரிக்கை செய்து விட்டு செல்ல
“என்னடி செய்வ ரதி?”என்றான் முகத்தில் உணர்வுகளை காட்டாமல்.
“நீங்க மட்டும் எப்படி தான் எதுவுமே நடக்காத மாதிரி ஃபேஸ் வச்சுக்கீறிங்க?”என்று அதற்கும் சிறு கோபத்துடன் அவள் கேட்க
Advertisement
“ட்ரெய்னிங் வர்றியா ரதி?!”என்று அதற்கும் கிண்டல் பேச “போடா டேய்”என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.
கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
பாடுவதும் விசிலில் ஹம்மிங் செய்வதுமாய் அவளை ஒரு வழி செய்து கொண்டிருந்தான் ஆழியன்.
Advertisement
“இளமை திரும்புதா உங்களுக்கு?, அடி தான் கிடைக்கும்”என்று முறைப்பாய் பேசினாலும் ஜில்லென்ற சாரல் அவள் மனதில்.
Advertisement
“அடி எந்த மாதிரினு சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி ரெடி ஆகிப்பேன். அடிக்கிறது உன் கையால் மட்டும் வேண்டாம் லிப்ஸ்னா டபுள் ஓகே ரதி”என்றவனை அக்கம் பக்கம் பார்த்து விட்டு “ஆழி நீ சரி இல்லை”என்றாள் முகம் சிவக்க
இருவரும் ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என்று வெளியே தெரிந்தாலும் இன்னது என்று புரியவில்லை எவருக்கும்.
“சிமெண்டு பூசின செலையாட்டம் இருந்துகிட்டு என்னவோ பண்றான் யாருக்கும் புரியலை. ஆனா சேட்டை தான் பண்றான்”ஆழியனின் நண்பர்கள் வெகுநாட்கள் கழித்து இந்த விழாவில் கலந்து கொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டே அந்த ஜோடியை தான் கவனித்தனர்.
Advertisement
“இருக்காது அண்ணா. எங்க அண்ணன் இப்பவும் பந்தியில் பச்சடி தீர்ந்து போச்சு னு சொல்லி இருப்பார். உடனே எங்கண்ணி இதோ வெங்காயம் உரிக்கிறேன்னு சொல்லி இருப்பாங்க”என்று தீபன் அண்ணனுக்கு ஆதரவு சொல்ல
“உனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான் டா தீபா. உங்கண்ணன் நொடிக்கு நூறு எக்ஸ்பிரஸ் பண்ணுவான். அதெல்லாம் வெரி க்ளோஸ் ஆளுகளுக்கு தான் புரியும். நீரதியை லவ் பண்றான் னு கண்டு பிடிக்கவே எங்களுக்கு ஒரு வருஷம் ஆச்சு. அப்போ பார்த்துக்கோ உங்கண்ணன் சமத்தை”என்று கிண்டல் செய்தனர் ஆழியனின் நண்பர்கள்.
அந்த குழுவில் ஒருவன் மட்டும் ஆழியனை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்க “என்னடா நீ மட்டும் அவனையே பார்க்கிற?”என்று மற்றொரு நண்பன் கேட்கவும் “ஹ்ஹான் ஹ்ம்ம். நம்ம செல்வாக்கு கற்பூர புத்தி டா”என்றான் புன்னகை முகமாக
“என்ன திடீர்னு பாராட்ட எல்லாம் செய்ற?”என்று கிண்டல் செய்ய
“ஏன் நான் அவனை பாராட்டினதே இல்லையா?”என்றவன் “வா சாப்பிட போகலாம்”என்று பேச்சை மாற்றி விட்டான் அவன்.
“பேச்சை மாத்தாத மச்சி, என்ன நடந்தது என்ன விஷயம் சொல்லு?”என்று மற்றவன் பிடிவாதமாக கேட்க
“நம்ம சீனு டிவோர்ஸ் வாங்கிட்டு மலேசியா போயிட்டானே தெரியும் தானே உனக்கு?!”என்று கேட்க
“ஹ்ம்ம் ஹ்ம்ம் தெரியும் டா தீனா. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”என்று மற்றவன் புரியாமல் வினவ
“சீனுவுக்கு நடந்தது ப்யூர் லவ் மேரேஜ்.”
“அது தெரியாதா நமக்கு. நாம தானே சேர்ந்து பண்ணி வச்சோம். செம ஜோடி அவங்க காலேஜே பொறாமைபட்ட ஜோடி அது ஆனா பாரு யார் கண்ணு பட்டுச்சோ பிரிஞ்சு போயிட்டாங்க”என்றான் வருத்தமாக
“யார் கண்ணும் படலை மச்சான். புரிதல் இல்லாமல் பிரிஞ்ச ஜோடி டா அது”என்றான் தீனா.
“ஏய் விளையாடாத. புரிதல் இல்லாத ஜோடியா. நம்ம செட்லயே ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சு க்யூட்டா லவ் பண்ண ரொமான்ஸ் கப்பிள் அவங்க. அவங்களுக்கு அப்புறம் தான் நம்ம செல்வா நீரா ஜோடியே”என்று சிறு காட்டத்துடன் கூற
“ஹ்ம்ம் அவங்க ஜோடிக்கு அப்புறம் இவங்களும் அடுத்த ஜோடி ஆகிடக் கூடாது னு ஒரு சின்ன அட்வைஸ் பண்ணேன். பையன் கப்புனு புடிச்சு வாழ்க்கையை தக்க வச்சுக்கிட்டான்”என்று புன்னகைக்க ,ஆழியன் அவர்களை உணவருந்த அழைக்க வந்தான்.
“வாங்கடா சாப்பிடலாம். சாரிடா நேரமே ஆகிப் போச்சு”என்று ஆழியன் அழைக்க
“அப்புறம் செல்வா கல்யாண வாழ்க்கை எப்படி போகுது. பொண்ணு பெரியவள் ஆகிட்டா ஆனாலும் உன் லவ் கொறையலையேடா”என்று வேண்டும் என்றே சிரிக்க
“என் லவ் குருவே நம்ம தீனா தான் டா… சீக்ரெட் ஆஃப் மை லவ் மேரேஜ்”என்று ஆழியன் சிரிக்க
“அது சரி.தீனானந்தா என்ன மந்திரம் போட்டாராம். வொஃய்ப் பின்னாடியே சுத்துறியே?”என்று கிண்டல் பேச
“ஹ்ம்ம். அதெல்லாம் சீக்ரெட் மச்சி உனக்கு வேணும்னா ஈவ்னிங் ஆறு மணிக்கு வந்து பத்தாயிரம் பீஸ் குடுத்து வாங்கிக்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்”என்றான் தீனா.
“நாங்க பத்து மணி டாக்டரையே பாத்துக்கிறோம்”என்றதும் ஆண்கள் கூட்டத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
“சாப்பிட வராம எல்லோரும் அரட்டையா… வாங்க”என்று நீரதியும் அழைக்க வந்து விட “இதோம்மா”என்று அனைவரும் அவள் பின்னால் சென்றனர்.
தடபுடலாக விருந்து முடிந்த வேளையில் அனைவரும் கிளம்ப தீனாவை அணைத்துக் கொண்ட ஆழியன், “தேங்க்ஸ் மச்சான். நீ இல்லைன்னா இன்னைக்கு எனக்கு ஃபேமிலி இல்லை”என்றான் உளமார
“விடுடா நான் என்ன பெருசா செஞ்சுட்டேனாம்”என்ற தீனாவுக்குமே ஆழியன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதில் அத்தனை நிம்மதி.
சீனு என்கிற சீனிவாசன் ஆழியனின் நண்பர்களில் ஒருவன். ஒரே வகுப்பில் தன்னோடு பயின்ற மாணவி லேகாவை விரும்ப அவளுமே அதை ஏற்றுக் கொள்ள அந்த டிபார்ட்மெண்ட்டின் அனைவரும் விரும்பும் காதல் ஜோடி ஆகினர்.
இவர்கள் ஒரு காதல் ஜோடி என்றால் அடுத்த ஜோடி ஆழிச்செல்வனும் நீரதியும் தான். இளம் காதல் இணைகளாய் வலம் வந்தாலும் நாகரீகமான முறையில் நடந்து கொண்டு படிப்பிலும் பன்முகத் திறமையிலும் சிறந்து விளங்க நட்சத்திர ஜோடி ஆகிப் போயினர்.
‘லவ்னா அது சீனுலேகா செல்வாரதி லவ் மாதிரி இருக்கணும்’என்று பேசும் அளவிற்கு அத்தனை பிரபலம் இவர்கள்.
சீனு லேகா அவர்களின் காதலை இரு வீட்டாரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு விட இருவருக்கும் சீனுவிற்கு வேலை கிடைத்ததுமே திருமணம் நடந்தது. ஆனால் ஆழியன் நீரதி திருமணத்திற்கு இரு வீட்டாரையும் பேசிப் பேசி தான் சம்மதிக்க வைத்தனர்.
காதலிக்கும் போது எல்லாம் சரியாக தெரிந்த தன் இணையின் குணம் பிடித்தம் பிடித்தமின்மை எல்லாம் திருமணத்திற்கு பிறகு முன்னுக்கு பின் முரணாக தெரிந்தது தான் சீனு லேகா தம்பதியின் காதல் திருமணத்தின் அடிப்படை விரிசல். ஆனாலும் தங்கள் வாழ்வை சீராக கொண்டு செல்லவே முயற்சி செய்தனர் இருவரும். விரிசலின் மீது மேலும் மேலும் தன் கருத்து திணிப்பு எனும் கல் விழுந்ததில் அந்த திருமண பந்தம் இறுதியில் உடைந்தே போனது. இருவரும் காதலை உணராமல் தங்கள் கருத்தை சரியென்று திணித்ததில் திருமணத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டதன் விளைவு விவாகரத்து.
அந்த காதல் இணையின் விவாகரத்து கண்டு அதிர்ந்த ஆழியன் தங்கள் வாழ்வில் அப்படி ஒரு நிலை வந்து விடக் கூடாது என்று மெனக்கெட்டு தங்கள் குடும்பத்தில் தங்கள் திருமணம் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று முயன்றதில் காயப்பட்டது என்னவோ நீரதி தான்.
தீபனின் திருமணத்திற்கு வர முடியாததால் விருந்திற்கு வந்திருந்த ஆழியனின் நண்பர்கள் இதே போல மகிழ்ந்து கலந்து கொண்டிருந்தாலும் உண்மையான நண்பனாக தீனா மட்டுமே நீரதியின் முகம் அவளை ஆழியன் குடும்பம் நடத்தும் விதம் என்று அவதானித்தான். அவனது மனைவியோடு வந்திருந்ததில் அவளுமே வீட்டிற்கு வந்த பிறகு சில விஷயங்களை குறிப்பிட்டதில் நண்பனிடம் பேச வேண்டும் என்று நினைத்து அதை செய்தும் விட்டான்.
“என்னங்க நீங்க உங்க காலேஜ் ஐகானிக் ஜோடி அப்படி இப்படி னு புகழ்ந்தீங்க அவங்க ரெண்டு பேரையும் பார்த்தா அரேஞ்ச் மேரேஜ் பண்ண ஜோடி மாதிரி கூட தெரியலை. வேண்டா வெறுப்பில் கல்யாணம் பண்ண மாதிரி இருந்தாங்க”என்று கிண்டலாக பேசி விட்டாள் தீனாவின் மனைவி.
“ஏதாவது ரெண்டு பேருக்கும் சண்டையா இருக்கலாம் மா. அதுக்காக ஐகானிக் ஜோடி இல்லைனு ஆகிடுமா…காதலிச்சா ஒட்டி உராசிட்டே திரியணுமா என்ன”என்று கேட்க
“நான் அப்படியா சொன்னேன். அந்த பொண்ணு நீரதி நாம போனதில் இருந்து வேலை பார்த்துக்கிட்டே இருக்கு உங்க ஃப்ரெண்டும் கண்டுக்காம சுத்தறாரு. இடையில் அவங்க மாமியாரும் ஒரு பாட்டியும் ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க அதுக்குமே யாரும் எதுவும் சொல்லலை.
அப்புறம் உங்க ஃப்ரெண்டோட தங்கச்சி நீரதியை அண்ணின்னே கூப்பிடலை. நான் அதை நல்லா கவனிச்சேன். ஆனா அத்தனை தடவை வேலை சொல்லுது இந்த பொண்ணும் சளைக்காமல் செய்யுது. உங்க ஃப்ரெண்ட் காதலிச்சு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனது நீரதியை இந்த மாதிரி எடுபுடி வேலை வாங்கவா”என்று கேட்டு விட்டாள் பட்டென்று.
“ஏய் லூசு மாதிரி உளறாத. விஷேஷ வீடு அப்புறம் வேலை இல்லாமல் இருக்குமா… “என்றிருந்தான் தீனா.
“ப்ப்ச் என்னம்மோ போங்க மனசில் பட்டுச்சு சொன்னேன். லவ் மேரேஜ் பண்ண ஜோடியை பார்க்க ஆசையா இருந்தா அவங்களை பார்த்து எனக்கு சப்புனு ஆகிடுச்சு. சீனு அண்ணா வீட்டுக்கு அழைச்சுட்டு போனீங்களே அவங்க ரெண்டு பேரும் இப்படியா இருந்தாங்க எவ்வளவு க்ளோஸ் எவ்வளவு சந்தோஷம் தெரிஞ்சது அவங்க முகத்தில். இங்கே அப்படி எதுவும் இல்லை. அப்படி சந்தோஷமா இருந்தவர்களே பிச்சுக்கோனு போயிட்டாங்க இவங்க இப்பவே இப்படி இருக்காங்க. என்னன்னு விசாரிங்க. கேர்ள் பேபி வச்சிருக்காங்க. அவளோட ஃபியூச்சர் வேற இருக்கு இவங்க ஹாப்பியா இல்லாமல் பிள்ளை பாவம் இல்லையா”என்றாள் அவள்.
தீனா அமைதியாக இருந்தவன் “செல்வா கிட்ட பேசறேன் நான்”என்றிருக்க பிறிதொரு நாளில் ஆழியனிடம் பேச வாய்ப்பு கிடைக்கவும் தனக்கு தோன்றியது தன் மனைவியின் கேள்வி அனைத்தையும் ஆழியன் முன் வைக்க அவனுக்குமே வீட்டில் நடந்தவை தீபனின் திருமண நிச்சயதார்த்தத்தில் நடந்தது என்று சிந்தனையை துளிர்க்க செய்ய விளைவு நீரதியின் பக்கம் இருந்து யோசித்தான்.
“மச்சான் தப்பா எடுத்துக்க வேண்டாம். ரெண்டு வீட்டிலும் சம்மதிச்சு நடந்த சீனு லேகா கல்யாணமே டிவோர்ஸ்ல போய் நின்றுச்சு. சீனுவை ஒரு நாள் மீட் பண்ணும் போது லேகாவை பத்தி அவ்வளவு குறை சொன்னான். அது எல்லாம் அவன் லவ் பண்ணும் போது தூக்கி வச்சு கொண்டாடின விஷயம். இங்கே நீராவை உன் ஃபேமிலி உனக்காக ஏத்துட்டு இருக்காங்க. அவங்க பண்ற எதுவும் உன் கண்ணில் கருத்தில் படுதானு தெரியலை. ரெண்டு பக்கமும் நியாயம் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனா உன் மனைவிக்கான மரியாதையை வாங்கி தர வேண்டியது உன் பொறுப்பு டா.இதுக்கு மேல நான் சொல்ல வேண்டியது இல்லை. நீயே யோசி உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்கான்னு.”என்றவன்
“நீரா முகத்தில் சிரிப்பு உயிர்ப்பாவே இல்லை டா. அஸ் ஏ சீனியரா ஏன் அந்த பொண்ணோட அண்ணனா சொல்றேன் நான் காலேஜில் பார்த்த நீரா இல்லை இது. காலேஜில் லெக்க்ஷரர் திட்டினா கூட அவ்வளவு சீக்கிரம் முகத்தில் கவலையை காட்டாத பொண்ணு. அந்த விருந்தில் அது முகமே நல்லா இல்லை.எங்க கண்ணுக்கு வெளிப்படையா தெரியறது உனக்கு தெரியுதானு தெரியலை. இல்லை தெரிஞ்சே பேசாம இருக்கியான்னும் தெரியலை. நீரா கிட்ட பேசுடா”என்றிருந்தான் தீனா.
அப்போது கூட மேம்போக்காய் இருந்தவனுக்கு நிலாவின் பேச்சுக்கள் அவள் இழுத்த சண்டை எல்லாம் சேர்ந்து ஒரு புரிதலை உண்டாக்கி இருக்க,
அதன் பின்னான சம்பவங்களும் நீரதியின் மனதும் அவனுக்கு புரிந்ததில் தங்கள் காதலை தானே கானல் நீராக மாற்றி இருப்பதும் இப்படியே விட்டால் சீனுவின் நிலை தான் தனக்கும் என்று உணர்ந்தவன் சுதாரித்ததில் தான் இந்த வாழ்க்கை.
….. தொடரும்
