நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-23
அத்தியாயம் – 23
“எடுத்துச் செல்ல இயலாது விட்டுச் செல்கிறது காற்று. எஞ்சி நிற்கும் கைகூப்பல்களுடன் தன் மரத்தண்டையே கிடக்கிறது உதிர் இலை!”
ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரின் அந்த இதமான மாலைப்பொழுது. நெக்கர் நதிக்கரையில் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் அனைவரும் அந்த அழகிய இயற்கை சூழலை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நெக்கர் நதி, ஸ்டட்கார்ட் நகரின் வழியாக ஒரு நீல நிற வளைந்த பாதையில் பாய்ந்து செல்வது, அந்தத் தொழில்மயமான நகருக்கு ஒரு மென்மையான இயற்கை அழகைத் தருகிறது. நதியின் இருபுறமும் செங்குத்தான மலைச்சரிவுகளில் அடுக்கடுக்காக அமைந்துள்ள திராட்சைத் தோட்டங்களின் பசுமை, மாலை நேரத்துச் சூரிய ஒளியில் தங்கம் போல ஜொலிக்கும் காட்சி மனதை மயக்கக்கூடியது.
Advertisement
முதல் நாள் கருத்தரங்கு அமர்வுகள் இனிதே முடிவடைந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த சிட்டி விசிட் மற்றவர்களுக்கு ஒரு சுற்றுலா, ஆனால் ஆதிரைக்கோ அது ஒரு தேடல்.
ஆதிரை அங்கே சுற்றிக் கொண்டிருந்தாலும், அவளது கண்கள் அந்த நதியலைகளைப் பார்த்தபடி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தன. சந்தியா, மித்ரன், லீ—இந்த மூவரின் வாழ்க்கைப் பயணம் …அதன் பிறகு என்ன ஆனது? எதை எதையோ யோசித்தபடி அவள் பேராசிரியரைத் தேடினாள்.
ஆனால், அவர் அங்கே இல்லை.
Advertisement
சற்று நேரத்தில் சோபி அன் ஹெர்மன் அவளைத் தேடி வந்தார்கள். வழக்கம்போலவே அவர்களின் உரையாடலில் ஒரு குறும்புத்தனம் இழையோடியது. ஆதிரை அவர்கள் பேசுவதைக் கேட்டுப் புன்னகைத்தாளே தவிர, அவளது மனம் அந்த உரையாடல்களில் லயிக்கவில்லை.
Advertisement
இரண்டாம் நாள் கருத்தரங்கு அமர்வுகள் முடிந்ததும், ஆதிரை எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக அந்தப் பேராசிரியரிடம் ஓடினாள்.
பேராசிரியர் அன்றும் அவரது வீட்டில் அந்தச் சட்டகங்களுக்குப் பின்னால் இருந்த புகைப்படங்களுக்குள் தொலைந்துபோய் நின்றிருந்தார். ஆதிரை மெதுவாக அவர் அருகில் சென்று நின்றாள். காலத்தின் கரங்களால் சற்றே நிறம் மங்கியிருந்த அந்தப் புகைப்படத்தில், மதுரைக் கல்லூரியின் அந்தப் புகழ்பெற்ற மெயின் ஹால் மேடை தெரிந்தது. அதில் சந்தியாவும் மித்ரனும் அருகருகே நிற்க, அவர்களுக்கு இருபுறமும் இன்னும் மூவராக, ஐந்து பேரின் கைகளும் இணைந்து அந்த ஒரே ஒரு ‘பெஸ்ட் ஸ்டூடண்ட்’ விருதைத் தூக்கிப் பிடித்திருந்தன.
“ஆதிரை, மித்ரனும் சந்தியாவும் ஒரு சாதாரண மாணவர் சூழலிலும், எந்த வசதிகளும் இல்லாத காலத்திலும் எவ்வளவு ஆழமான பிணைப்போடு இருந்தார்கள் தெரியுமா?.”
Advertisement
“அந்தக் கல்லூரியில பி.ஜி படிக்கிற பசங்களுக்கு எந்தத் தளைகளும் கிடையாது. ‘முதுகலை படிக்கிற மாணவர்கள் தங்களுக்கு எது தேவை, எது எல்லைன்னு தெரிஞ்சு நடப்பாங்க’ங்கிற ஒரு நம்பிக்கையில அந்த நிர்வாகம் இயங்குச்சு. மத்தியானம் 1 மணிக்கு காலேஜ் முடிஞ்சாலும், ஒரு மாணவர் கூட வீட்டுக்கு ஓட மாட்டாங்க.
சாயங்காலம் 7 மணி வரைக்கும் கேம்பஸ் முழுக்க மாணவர்கள் கூட்டமா இருப்பாங்க. ஆணும் பெண்ணும் ஒண்ணா உட்கார்ந்து டிபார்ட்மென்ட் லைப்ரரியில நோட்ஸ் எடுப்பாங்க, விவாதம் பண்ணுவாங்க. அந்தச் சுதந்திரம் தான் சந்தியா, மித்ரன் இரண்டு பேரையும் செதுக்குச்சு.”
“ஆனாலும் அந்த காலத்துல ஒரு ஆணும் பெண்ணும் இவ்வளவு நெருக்கமா இருந்தா உலகம் தப்பா பேசும் இல்லயா. அந்தப் பேச்சையெல்லாம் அவங்க எப்படி உடைச்சாங்க தெரியுமா?”
“எம்.எஸ்.சி-ல வழக்கமா பசங்க ஒரு பக்கமும், பொண்ணுங்க ஒரு பக்கமும் தான் உட்காருவாங்க. ஆனா, மித்ரனும் சந்தியாவும் அந்த லேப் இஸ்யூ -க்கு அப்புறம் இருந்தே ஒரே பெஞ்ச்ல உட்கார்ந்து படிச்சாங்க. ஒரு ப்ரொபசர் இதைப் பார்த்துட்டு, ‘என்ன இது? ‘ன்னு கேட்டார்.”
அப்போ மித்ரன் எழுந்து சொன்னான், “சார், நாங்க இங்க ஆணும் பெண்ணுமா உட்காரல… ரெண்டு அறிவியலாளர்களா உட்கார்ந்திருக்கோம். அறிவுக்கும் சிந்தனைக்கும் பாலினம் கிடையாது!’’ “அந்த ஒரு பதில் மொத்த வகுப்பறையையும் மௌனமாக்கிடுச்சு. அதுக்கப்புறம் யாருமே அவங்களை கேள்வி கேட்கல.”
ஆதிரையின் கண்களில் ஒரு மின்னல் தெரிந்தது. பேராசிரியர் சொல்லச் சொல்ல, மதுரைக் கல்லூரியின் அந்தப் பொற்காலம் அவள் கண்முன்னே விரிந்தது.
“அற்புதமா எம்.எஸ்.சி முடிச்சாங்கம்மா…” பேராசிரியர் அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கிப் பேசத் தொடங்கினார். “அங்க இருந்த என் நண்பர்களான பேராசிரியர் JJP, SJ இப்போ கூடச் சொல்லுவாங்க, அவங்க ரெண்டு பேரும் அந்த டிபார்ட்மென்ட்டோட ‘ஸ்டார் ஸ்டூடண்ட்ஸ்னு’. ஆனா, அவங்க ரெண்டு பேர் மட்டும் தனியாத் திரிஞ்சாங்கன்னு அர்த்தம் இல்ல… அவங்க ஒரு பெரிய ‘கேங்’ !” அந்த கல்லூரியின் ‘five ஸ்டார்ஸ்’!
சந்தியா, மித்ரன் கூடவே ஸ்வீட்டி, பாரதி, கண்ணன்-ன்னு ஒரு ஐந்து பேர் கொண்ட பட்டாளம் அது. காலேஜ் கேம்பஸே அவங்க பேச்சைக் கேட்டுத்தான் விடியும். அந்த ஐந்து பேருக்கும் ஐந்து விதமான திறமைகள். கண்ணனைப் பத்திச் சொல்லணும்னா, அவன் கால்கள் தரையில் இருப்பதை விட காற்றில்தான் அதிக நேரம் இருக்கும். அதுவும் சாதாரண டான்ஸர் இல்ல, கிளாசிக்கல் முதல் வெஸ்டர்ன் வரை எல்லாத்தையும் தன் உடம்புக்குள்ள வச்சிருந்த ஒரு கலைப் புலி. பாரதி அருமையா கவிதை எழுதுவான், ஸ்வீட்டி ரொம்ப அமைதியா தெரிவா ஆனா பிளாக் பெல்ட் கராத்தே புலி, ஆனா சந்தியாவும் மித்ரனும் தான் அந்த கேங்குக்கு மூளை மாதிரி.
இரண்டாம் ஆண்டு வந்தப்போ ஜூனியர்ஸ்க்கு வெல்கம் பார்ட்டி வைக்கிறதுல இருந்து, காலேஜ் கல்ச்சுரல்ஸ் வரைக்கும் இவங்கதான் முன்னாடி நிப்பாங்க. ஒருமுறை காலேஜ் IV போனப்போ, பஸ்ஸுல மத்தவங்க எல்லாம் பாட்டுப் பாடிட்டு இருந்தப்போ, இந்த ஐந்து பேரும் சேர்ந்து ஒரு புது ரிசர்ச் ஐடியா-வை விவாதிச்சுட்டு இருந்தாங்களாம். ‘Rocking and Researching’ (ராக்கிங் அண்ட் ரிசர்ச்சிங்) – இதுதான் அவங்க பாணி! “
சம்மர் இன்டர்ன்ஷிப் வந்தப்போ, மத்தவங்க எல்லாம் ஈஸியான இடத்தைத் தேடுனப்போ, இந்த கேங் இந்தியாவோட டாப் லேப்ஸை அட்டாக் பண்ணுச்சு. அந்த ஐந்து பேரும் ஐந்து வெவ்வேறு நகரங்களுக்குப் போனாங்க.
மித்ரனும் சந்தியாவும் தான் மத்த அஞ்சு பேருக்கும் இன்ஸ்பிரேஷன்-ஆ இருந்தாங்க. ‘நாம ஜெயிக்கிறது முக்கியம் இல்ல, நம்ம ஐந்து பேரும் ஒண்ணா ஜெயிக்கணும்’ங்கிறதுதான் அவங்க பாலிசி. அதனாலதான் அந்த வருஷம் அந்த ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு காமனா ஒரு பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு கொடுக்கலாம்னு கூட காலேஜ் யோசிச்சது!
“வழக்கமா காலேஜ்ல ஒருத்தருக்குத் தான் ‘பெஸ்ட் ஸ்டூடண்ட்’ அவார்டு கொடுப்பாங்க. ஆனா அந்த வருஷம், பேராசிரியர்கள் ஒரு பெரிய மீட்டிங் போட்டாங்க. ஏன்னா, மித்ரனைத் தேர்ந்தெடுத்தா சந்தியாவோட உழைப்பு குறையுது, சந்தியாவைத் தேர்ந்தெடுத்தா மித்ரனோட உழைப்பு குறையுது. மத்த மூணு பேரும் அவங்க ரெண்டு பேருக்கும் பின்னாடி ஒரு இரும்புக் கோட்டை மாதிரி நிக்கிறாங்க.
கடைசியா காலேஜ் நிர்வாகம் ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்தது. ‘Individual excellence-ஐ விட Team spirit-க்குத் தான் நாங்க இந்த முறை மதிப்பு கொடுக்கிறோம்’னு சொல்லி, அஞ்சு பேருக்கும் சேர்த்து அந்த ஒரு விருதைக் கொடுத்தாங்க.
ஆதிரை அந்தப் புகைப்படத்தையே உற்றுப் பார்த்தாள். “சார், எவ்வளவு அழகான பிணைப்போட இருந்தவங்க, இவங்க!
“அப்படி ஒரு செலிப்ரேஷனா இருந்த அவங்க லைஃப்ல தான், எம்.எஸ்.சி முடிஞ்சதுக்கு அப்புறம் அந்தப் பெரிய மாற்றம் வந்தது. படிச்சு முடிச்சு வெளிய வரும்போது, ஏழு திசையில பிரிஞ்சாங்க.
எம்.எஸ்.சி படிக்கும்போதே சந்தியாவும் மித்ரனும் ஒரு ‘டிரீம் டீம்’ . சென்னை IMSc-யில அவங்க பண்ணின அந்த இன்டர்ன்ஷிப் ப்ராஜெக்ட் பேசப்பட்டுச்சு. அதுக்காக அவங்க தூக்கமில்லாத பல ராத்திரிகளை செலவழிச்சாங்க. மித்ரன் லாஜிக் பார்ப்பான், சந்தியா அதை அழகா ஈக்வேஷனா மாத்துவா.”
“எம்.எஸ்.சி முடிச்சதும், சந்தியா ஐ.ஐ.டி மெட்ராஸுக்கும், மித்ரன் பாண்டிச்சேரி யுனிவர்சிட்டிக்கும் பி.எச்.டி-க்கு போயிட்டாங்க. நான்கு வருஷம்… வெறும் போன் கால்லயே தங்களோட ரிசர்ச் ஐடியாக்களைப் பகிர்ந்துக்கிட்டாங்க. அந்த நான்கு வருஷ உழைப்புக்குக் கிடைச்ச பரிசுதான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்துல பி.டி.எஃப் வாய்ப்பு.
அந்த பி.எச்.டி காலத்துல அவங்க அனுபவிச்ச பிரிவோட வலி முழுசாத் தெரியுறதுக்கு முன்னாடியே, அந்த வாய்ப்பு அவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் ஒரே கூரையின்கீழ், ஒரே லேப்புல ஒண்ணா சேர்த்துச்சு”.
பேராசிரியர் மெதுவாகச் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார். அந்தச் சிரிப்பில் ஒரு பழைய நினைவின் நெகிழ்ச்சி இருந்தது.
“ஆதிரை, நிஜத்தைச் சொல்லப்போனா ஒரு கட்டத்துல நானே குழம்பிப்போயிட்டேன். ஆணும் பெண்ணும் இவ்வளவு ஆழமா, ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக்கொடுத்துப் பழகுறதை நான் அதுவரைக்கும் பார்த்ததே இல்லை. அவங்களுக்குள்ள இவ்வளவு நல்ல புரிதல் இருக்கே, ஒருவேளை சொல்லப்படாத காதல் ஏதும் ஒளிஞ்சிருக்குமோங்கிற சந்தேகத்துல ஒருநாள் சந்தியாகிட்ட நேரடியாவே கேட்டுட்டேன்.”
“மித்ரனை உனக்குப் பிடிச்சிருந்தா சொல்லுமா, அவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”னு.
சந்தியா அதுக்கு சொன்ன பதில் , ‘”அப்பா, மித்ரன் என் நண்பன். ஒரு ஆணும் பெண்ணும் நல்லா பழகினா உடனே கல்யாணம் தான் தீர்வுன்னு ஏன் நினைக்கிறீங்க? அவனுக்கும் எனக்கும் இருக்குற இந்தத் தோழமை, கல்யாணம்ங்கிற ஒரு சட்டத்துக்குள்ள அடங்கிடாது. எங்களுக்குள்ள காதல் இல்ல… அதை விடப் பெரிய ஒரு நம்பிக்கை இருக்கு.” மித்ரனும் அதைத்தான் சொன்னான். “அவளுக்கு ஒரு கஷ்டம்னா நான் இருப்பேன், எனக்கு ஒரு கஷ்டம்னா அவ இருப்பா. ஆனா நாங்க கணவன்-மனைவியா இல்ல, ரெண்டு சுதந்திரமான மனிதர்களா இருப்போம்.” இப்படிப்பட்ட ஒரு புரிதல் தான் அவங்களை சான் பிரான்சிஸ்கோ வரை கொண்டு போச்சு.
ஆனா ஆதிரை, அந்த ஐந்து பேர் கேங்ல இல்லாத, அந்த ஐந்து பேரோட ஒட்டுமொத்தத் திறமையையும் ஒரே ஆளா வச்சிருந்த ஒருத்தர் தான் அங்கே அவங்களுக்காகக் காத்துட்டு இருந்தார். அவர்தான்… ராக்ஸ்டார் லீ!” .
ஒரு இரும்புக் கோட்டை மாதிரி இருந்த அவங்க நட்புக்குள்ள தான், சான் பிரான்சிஸ்கோவுல அந்த ‘ராக்ஸ்டார்’ லீ ஒரு காந்தம் மாதிரி நுழைஞ்சார்.
பேராசிரியருக்கு மூச்சு வாங்கியது. சொல்ல வந்த கதையின் வேகம் அவர் வயதையும் மீறி அவரிடம் ஒரு படபடப்பைத் தந்திருந்தது. அந்தப் பழைய நினைவுகளின் கனம் அவரைச் சற்றே சோர்வடையச் செய்திருந்தது.
அவர் மெதுவாகத் தன் கைக்குட்டையை எடுத்து நெற்றியில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக்கொண்டார். “ஆதிரை, வயசாகுது இல்லையா… பழைய கதையைப் பேசும்போதெல்லாம் அந்த இடத்துக்கே போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. மூச்சு வாங்குது,” என்றவர், ஒரு கணம் ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
“வாம்மா… நாம ஒரு கிரீன் டீ குடிக்கலாம்,” என்று அவளை அழைத்துச் சென்றார்.
இன்றும் அந்த முன்மாலை பொழுதில், நேற்றைப் போலவே ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் மித்ரன். கையில் இருந்த ரிமோட்டை வைத்துக்கொண்டு சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் கண்கள் திரையைப் பார்த்தாலும், மனம் என்னவோ கடந்த காலத்தின் பக்கங்களைத்தான் புரட்டிக் கொண்டிருந்தது.
திடீரென ஒரு சேனலில் அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது… “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…” அந்த வரிகள் கேட்டதுமே மித்ரனின் விரல்கள் ரிமோட்டை அழுத்துவதை நிறுத்தின. திரையில் சூர்யாவின் கண்கள் காதலைத் தேடி அலைந்து கொண்டிருக்க, இங்கே மித்ரனின் கண்களுக்கு அந்தத் திரையில் தெரிந்தது சூர்யா அல்ல… அவனது நண்பன், ராக்ஸ்டார் லீ!
திரையில் ஓடும் அந்தப் பாடலுக்கும், மித்ரனின் இதயத் துடிப்புக்கும் இடையே ஒரு மௌனமான உரையாடல் நடந்து கொண்டிருந்தது. “நீ எங்கிருக்கிறாய் லீ?” என்ற கேள்வி அவன் அடிமனதில் ரீங்காரமிட்டது.
அன்று அமெரிக்காவின் அந்தப் பல்கலைக்கழக வளாக வாசல். பனி மூட்டம் மெல்லக் கலைந்து கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில், மித்ரனும் சந்தியாவும் ஒருவிதப் பதற்றத்துடனும் எதிர்பார்ப்புடனும் நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது கேட்ட அந்தச் சத்தம்… அந்தத் தூரத்துத் தெரிந்தது ஒரு காட்சி… மித்ரனின் கண்களுக்குள் இப்போதும் ஒரு படமாகவே விரிந்தது.
திடீரென்று, அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு கர்ஜனை கேட்டது. அது புலியின் கர்ஜனை அல்ல, லீயின் ‘ராயல் என்ஃபீல்டு’ பைக்கின் அதிரடி சத்தம்.
கருப்பு நிற ஹெல்மெட், கையில் தோல் கையுறைகள் , தோளில் ஒரு கருப்பு கிதார் பேக்—அது ஒரு ஆயுதம் போல லீயின் முதுகில் கம்பீரமாக அமர்ந்திருந்தது. வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, அவன் ஹெல்மெட்டை கழற்றிய விதம் ஒரு சினிமா காட்சியைப் போல இருந்தது.
கலைந்த தலைமுடியை ஒருமுறை கோதிவிட்டு, தன் ‘ஏவியேட்டர்’ கூலிங்கிளாஸை கழற்றி சட்டையின் காலரில் கொக்கிக் கொண்டார். வியர்வையில் நனைந்த அவனது கருப்பு டீ-சர்ட், ஜிம்முக்குச் சென்று செதுக்கிய அவனது தோள்களை இன்னும் எடுப்பாகக் காட்டியது.
அவர் இவர்களை நோக்கி நடந்து வரும்போது, ஒவ்வொரு அடியும் ஒரு அதிகாரத்தோடு விழுந்தது.
“வாட் அன் எண்ட்ரி!” என்று மித்ரன் பரவசத்தில் விசிலடித்தான். ஆனால் சந்தியாவோ அப்படியே சிலையாகி நின்றாள். அவளது கையில் இருந்த ஜூஸ் கிளாஸ் லேசாக நடுங்கியது. “டேய்… அவன் நடக்கும்போது அந்த இடமே அதிர்ற மாதிரி இருக்குடா,” என்று மெல்லிய குரலில் மித்ரனிடம் கிசுகிசுத்தாள்.
அந்த ஆள் நேராக இவர்களின் அருகே வந்து நின்று, ஒரு வசீகரமான புன்னகையுடன், “ஐ அம் மிஸ்டர் லீ… நீங்கதான் அந்த இந்தியன் டீமா? ஐ அம் யுவர் ரிசர்ச் மென்டர் (Research Mentor)!” என்று தன் கரங்களை நீட்டினார்.

