காற்றே எனைக் கிள்ளாதிரு 16
அவளுக்கு எதிரில் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தவனைப் பார்த்து ரக்ஷிக்கு இன்னும் வேகமும் ஆத்திரமும் கூடியது. அந்த கோவம் எல்லாம் அப்படியே கனியின் மீது திரும்பியது. எங்கிருந்து வந்து தொலைச்சாளோ…? இவள் மட்டும் எங்களுக்கு நடுவுல வராம இருந்திருந்தா… என அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
என்ன முயன்றும் மனதில் எண்ணியதை கட்டுப்படுத்த முடியவில்லை. கேட்டேவிட்டாள் அரவிந்தனைப் பார்த்து.
“அப்படி என்ன மாமா என்னை விட கனிமொழி உங்களுக்கு முக்கயமா போயிட்டாள்?”
ரக்ஷி கண்களில் அனல் பறக்க ஆங்காரமாக கனியைப் பற்றி கேட்டதும் அரவிந்தன் பதில் பேச முடியாமல் அதிர்ந்துப் பார்த்தான்.
Advertisement
அவனுக்குள், இவளுக்கு எப்படி தெரியும்? என தான் இருந்தது. நான் இன்னும் மொழிக்கே என் மனசுல இருக்கறத வாய்விட்டு சொல்லல. இவள் எப்ப கவனிச்சா எங்கள என நெற்றியைச் சுருக்கி எதிரில் இருப்பவளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அரவிந்தனுக்கு ஒரு பக்கம் நெஞ்சில் பயமும் வந்தது. அச்சோ இவ பாட்டுக்கு போய் யார்கிட்டயாவது உளறி வச்சானா அவ்வளவுதான் என அச்சமும் மனதுக்குள் வந்தது.
அதுவும் மொழி வீட்டுக்கு தெரிஞ்சதுனா… சுத்தம். இப்பதான் கௌதம சமாளிச்சு அவன் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருக்கு.
Advertisement
கல்யாணம் தான் முடிஞ்சிருக்கே தவிர இன்னும் கௌதமுக்கும் அமுதினிக்கும் இடையில் சகஜமான நிலைமை வரவில்லை என்பது அவனுக்கு தெரியும்.
Advertisement
அப்படி இருக்கும் போது இவ பாட்டுக்கு போய் ஏதாவது உளறி வச்சா என்ன பண்றது என பதற்றம்தான் அதிமானது.
கனிமொழி முதல்ல படிப்பை முடிக்கனும். அப்புறம் அவள் கிட்ட பேசி அவளோட விருப்பத்தை தெரிஞ்சுகிட்டு அம்மாகிட்ட பேசி பொண்ணு கேட்க சொல்லனும் என மனதில் நினைத்திருக்கிறான்.
கனிமொழிக்கும் இவன் மேல் எண்ணம் இருக்குமோ என்பது இவனது அனுமானம். அவளுக்கு விருப்பம் இல்லையென்றால் தன்னை இந்த அளவு நெருங்க விடமாட்டாளே எனதான் நினைத்திருந்தான்.
Advertisement
ஏதோ என் மேல கொஞ்சம் அபிமானம் இருக்கப்போய் தானே நான் பண்ற சேட்டையை எல்லாம் பொறுத்து போறாள்.
இதுஎல்லாம் எனக்கும் அவளுக்கும் மட்டும்தான தெரியும் என்று இருந்தவனுக்கு, ரக்ஷியின் இந்த பேச்சு ரசிக்கவில்லை. எரிச்சலைக் கொடுத்தது. இத்தனை நேரம் ரக்ஷியின் மேல் இருந்த கனிவெல்லாம் மறைந்து ஆத்திரமும் வந்தது.
தான் கனிமொழியை பற்றி பேசியதும் அரவிந்தனின் கண்களில் தெரிந்த மிரட்சியை, ஒரு சில நொடிகளே ஆனாலும் கவனித்த ரக்ஷயின் மனது கொக்கரித்தது.
இதற்கு மேல் இவளுக்கு பேசி புரிய வைக்க முடியாது என புரிந்துகொண்டான். இவ்வளவு தெரிந்து வைத்திருப்பவளிடம் மறைக்கவும் அவனுக்கு தோன்றவில்லை.
ஒருவேளை கனிமொழியை அவன் மனம் விரும்புவதை ரக்ஷியிடம் சொன்னாலாவது புரிந்துகொள்ள மாட்டாளா என நப்பாசையுடன் கனியின் மீதான தன் ஆசையை அவளிடம் ஒப்புக்கொண்டான்.
“நீ என்ன எண்ணத்துல பேசனேன்னு எனக்கு தெரியலை ரக்ஷி. ஆனால் நீ சொன்ன விஷயம் உண்மை. நிஜமாவே மொழிய லவ் பண்றேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு விரும்பறேன். என் மனசுல அவள்தான் இருக்கா. அவளைத் தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியாது”.
“உனக்கு தெரியுமா? பர்ஸ்ட் டைம் அவளை எங்க வீட்ல நடந்த கொலுவுல பார்த்த அன்னைக்கே அவள் மேல எனக்கு இஷ்டம். ஆனால் அவள் அப்ப சின்ன பொண்ணு. படிக்கிற பொண்ணை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னுதான் வெயிட் பண்றேன்”.
“அவளுக்கு தெரியுமா… மாமா?”
“ம்கூம். யாருக்குமே தெரியாது.”
“எப்படி மாமா…? அவள்கிட்ட பேசாமயே, அவளைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க. அத்தை ஒத்துக்கலன்னா…? ஒருவேளை அவங்க வீட்ல வேணாம்னு மறுத்துட்டாங்கனா…? ஏன் கனியே உங்களை பிடிக்கலன்னு சொல்லிட்டான்னா….?”
“எந்த நம்பிக்கையிலன்னு கேட்டா? எனக்கு தெரியாது. ஒருவேளை நீ சொல்ற மாதிரி என்ன வேணா நடக்கலாம். ஆனால் அவள் என்னை மறுக்க மாட்டான்னு எனக்கு நம்பிக்கையிருக்கு”.
“அது எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க”.
“அத வார்த்தையால சொல்லமுடியாது ரக்ஷி. உணரதான் முடியும். அவளுக்கு என்னை நிச்சயம் பிடிக்கும். அத மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்”.
அரவிந்தனை பார்த்து நக்கலாக சிரித்தாள்.
“என்னைப் பார்த்தா உனக்கு டயலாக் பேசற மாதிரிகூட இருக்கலாம். உண்மையாதான் சொல்றேன் ரக்ஷி”.
“நானே எதிர்பார்க்கல, கனியோட அக்காவுக்கும் கௌதமுக்கும் கல்யாணம் நடக்கும்னு. கௌதமுக்கு கல்யாணம் முடிவானதுக்கு அப்புறம் தான் அவளை நான் பார்க்கறது பேசறது எல்லாம். ஆனாலும் இன்னும் என் மனசை அவள் கிட்ட நான் சொல்லல”.
“அவள் படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் பேசலாம்னு இருக்கேன். அதுவரைக்கும் வீட்டில இருக்கவங்களுக்கு தெரிய வேணாம்னு அமைதியா இருக்கேன்” என்று அவன் மனதை தெளிவாகக் கூறியிருந்தான்.
“இப்பக் கூட உன்கிட்ட இதையெல்லாம் பேசனும்னு அவசியமேயில்ல. அதுவும் இவ்வளவு தெளிவா நான் ஏன் சொல்லனும்? யோசிச்சு பார்த்தியா? உனக்கு பயந்துட்டு சொல்றேன்னு நினைச்சியா? நிச்சயமா இல்ல”.
“இல்லை திமிரா பேசறேன்னு தோணுதா…?”
“அப்படின்னா ஆமாம் அவளைதான் லவ் பண்றேன், அதனால என்னன்னு? கேட்டுட்டு போயிட்டே இருப்பேன்”.
“பட் உன்னை என்னால கோச்சுக்க முடியல ரக்ஷி. நீ இன்னமும் என் கண்ணுக்கு சின்ன பொண்ணாதான் தெரியற. உன்னை முதமுதல்ல பார்த்த ரக்ஷியாதான் என்னால பார்க்க முடியுது. புரிஞ்சுக்கோடா”.
“இப்பவும் உன்னை க்ளோசா நினைக்கறதால தான் உன்கிட்ட இவ்வளவு பொறுமையா பேசிட்டிருக்கேன். ஒருவேளை என்னை முழுசா தெரிஞ்சாலாவது நீ மனசு மாற மாட்டியா? புரிஞ்சிக்க மாட்டியான்னு தான் இதெல்லாம் சொல்லிட்டிருக்கேன்”.
“அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்காது. அப்படிதான” என்றாள் கண்களில் வழியும் கண்ணீரோடு விசும்பிக் கொண்டே.
“ரக்ஷிம்மா… டேய்… அப்படியில்லடா. அழக்கூடாது. சொன்னா புரிஞ்சக்கனும். நான் எந்த அர்த்தத்துல சொல்றேன். நீ எந்த அர்த்தத்துல எடுத்துக்கறே. உன்னைப் பிடிக்காமயா இவ்வளவு பேசறேன்”.
“அது வேற. இது வேறடா” என்றவனுக்கு ஆயாசமாக வந்தது. என் மனசை தெளிவா சொல்லியும் இன்னும் பிடிவாதமா இருக்காளேன்னு.
ஆனால் அவள் அழுவதைப் பார்த்தும் பாவமாக இருந்தது.
“ரக்ஷி முதல்ல அழுகையை நிப்பாட்டு. இது என்ன கெட்ட பழக்கம் வெளி இடத்துல உட்கார்ந்து அழுதுட்டு இருக்கறது? வெளியில இருக்கோம்னு உனக்கு தெரியுதா? கண்ணைத் துடை. எல்லாரும் பார்க்கறாங்க. அசிங்கமாயிருக்கு” என்றான் அடிக்குரலில்.
அரவிந்தனை அவள் கண்டுகொள்ளவேயில்லை. பார்க்கட்டுமே. யார் பார்த்தா எனக்கு என்ன? என இன்னும் அழுகைதான் கூடியது. அவளது அழுகையைப் பொறுக்க முடியாமல் கண்களைத் துடைத்துவிட அவளை நோக்கி அவனது கைகள் வேகமாக நீண்டது.
நீண்ட கைகளை விருட்டென இழுத்துக் கொண்டான். இத்தனை நாட்கள் அவர்களுக்குள் தொட்டுப் பேசுவது, அடித்து விளையாடுவது எல்லாம் இயல்பாக எந்த பேதமும் இல்லாமல் சகஜமாக இருந்தது.
ஆனால் அது எல்லாம் அவள் மனதில் எந்த விகல்ப்பமும் இல்லாதவரைதான். இப்பொழுது ரக்ஷியின் மனதை தெரிந்ததற்கு பிறகு முன்பு போல் தொட்டு இயல்பாக பேச அவனுக்கு எதுவோ தடுத்தது.
அவன் கையை நீட்டியதும், அதை இழுத்துக் கொண்டதையும் பார்த்தவளுக்கு இன்னும் வீம்புடன் ஆவேசமும் அதிகமானது. அதில் இன்னும் சற்று அழுகை கூடியது. அவனுக்குதான் அவளின் செயல் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. வெளியிடத்தில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்கிறாள் இவள்? என வேகம் கூடியது.
“ம்கூம்… இவள் எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாள் என எரிச்சல் அடைந்தவன் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே கோவமாக எழுந்து சென்று விட்டான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நெடு நேரம் மனைவியின் பின்புறம் நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான் கௌதம்.
அமுதினி காதில் ப்ளுடூத் ஹெட்செட் மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். தலையை மெல்ல இசைக்கேற்றவாறு அசைத்துக்கொண்டு ரசனையோடு ஹம் செய்தவாறே இசையோடு மெய் மறந்து துணிகளை அயன் செய்து கொண்டிருந்தாள்.
அதில் இவன் வந்து பின்னால் நின்றதுகூட தெரியவில்லை. ஞாயிறு என்பதால் விடுமுறையில் வீட்டில் இருந்த கௌதம் மதிய உணவிற்கு பின்பு சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணி உறங்கியிருந்தான்.
இவன் எழுந்ததைக்கூட கவனிக்காமல் அவள் பாட்டு கேட்டுக் கொண்டே தனது வேலையில் கவனமாக இருந்தாள்.
கொஞ்ச நேரம் நின்று அவளையே பார்த்திருந்தவனுக்கு அப்படி என்னதான் கேட்கறா என உந்துதல் ஏற்பட்டு, அவளின் காதுக்கருகில் தனது காதை நெருக்கமாக வைத்துப் பார்த்தான். ம்கூம் ஒன்றும் கேட்கவில்லை.
இவனது தோள்பட்டை அவளது முதுகில் இலேசாக உரசியதில் துள்ளிக்கொண்டு திரும்பி பார்த்தவள் கௌதமை எதிர்பாராமல் ஆச்சர்யமாகி நின்றுவிட்டாள்.
அவள் காதில் இருந்த புளூடூத் ஹெட்சட்டை எடுத்து தனது காதில் வைத்து கேட்டான்.
வான் வருவான், தொடுவான், மழைபோல் விழுவான், மர்மம் அறிவான், என்னுள் ஒளிவான், அருகில் நிமிர்வான், தொலைவில் பணிவான், கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான், கல்லாய் உறைவான் என ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பாடிக் கொண்டிருந்தது.
அவளையே சில நொடிகள் பார்த்தவன் காதிலிருந்த ஹெட்செட்டை கழற்றி அவளிடம் கொடுத்துவிட்டு கையில் துண்டை எடுத்துகொண்டு பாத்ரூமுக்கு சென்றுவிட்டான்.
ஏன் இப்படி முகத்தை வச்சிட்டு போறாங்க? என்னாச்சு? என நினைத்துகொண்டே காதில் ஹெட்செட்டை மாட்டியதும்தான் அவளுக்கு சுருக்கென்றது.
அச்சோ… கரெக்டா இந்த சமயம் பார்த்துதானா இந்த பாட்டு வரனும். இதுக்காகவா கோச்சுகிட்டாங்க. ஒருவேளை நான் இவங்கள நினைச்சிதான் இந்த பாட்டை கேட்டேன்னு அர்த்தம் எடுத்துகிட்டாங்களா என சஞ்சலம் கொண்டாள்.
ஈர முகத்தை கையில் இருந்த துண்டால் துடைத்தவாறே பாத்ரூமிலிலிருந்து வெளியில் வந்த கௌதம் அமுதினி இன்னும் அப்படியே நின்றிருப்பதைப் பார்த்தும் பார்க்காதவன் போல் கண்ணாடியின் முன் சென்று நின்றவன், தலையை வாரி முடித்து, கையில் இருந்த ஈர துவாலையை பால்கனியில் இருந்த கொடியில் உலர்த்திவிட்டு கீழே இறங்கி சென்றான்.
அவளுக்கு இத்தனை நேரம் இருந்த இதமான மனநிலை வடிந்திருந்தது. அயன் செய்திருந்த துணிகளை எடுத்து வாட்ரோபில் வைத்தவள், மீதமிருந்த துணிகளை மடித்து எடுத்து வைத்துவிட்டு அவளும் கீழே இறங்கி வந்தாள்.
கௌதம் ஹாலில் ஷ்யாமளாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அமுதினியைப் பார்த்த ஷ்யாமளா “ப்ளாஸ்க்ல காபி வச்சிருக்கேன். கௌதமுக்கு குடுத்துட்டு நீயும் எடுத்துக்கோ அனி” என்றார்.
“ம்ம்…” என தலையசைத்து நகர்ந்தாள்.
அதற்குள் கௌதம் “இல்லம்மா எனக்கு இப்ப வேணாம். கொஞ்ச நேரமாகட்டும்” என்றான்.
பட்டென அவனைத் திரும்பி பார்த்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவன் இவளை கண்டுகொள்ளாமல் கையில் இருந்த பேப்பரில் கவனமாக இருந்தான்.
என்னாச்சு இவங்களுக்கு? நல்லாதான இருந்தாங்க என குழம்பியவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
காபியைக் குடித்து முடித்தவள் ஷ்யாமளாவிடம் வந்து “அத்தை டின்னர்க்கு என்ன செய்யட்டும்” என நின்றாள்.
“கௌதம கேளேன்டா. அரவிந்த்கூட வெளியில போயிருக்கான். நம்ம மட்டும்தான”.
“எனக்கு எதுவும் வேணாம் ம்மா… நான் டின்னர்க்கு வெளிய போறேன்”.
“ஓஹ்… டின்னர்க்கு இரண்டு பேரும் வெளிய போறீங்களா…?” என்றார் இருவரையும் பார்த்து.
“என்னோட படிச்ச செல்வகுமார் யு.எஸ்ல இருந்து வந்திருக்கானாம். அவனை மீட் பண்ண போறேன் ம்மா… சோ அவனோடவே டின்னரும் முடிச்சுட்டுதான் வருவேன்”.
“அப்ப நம்ம இரண்டுபேர் தான அனி. சிம்பிளா ஏதாவது செஞ்சுக்கலாம்டா. மாவு இருக்குல்ல. இட்லி தோசை மாதிரி செஞ்சுக்கலாம்”.
“ஓகே அத்தை” என்றவளுக்கு பார்வையெல்லாம் கௌதமின்மேல்தான் இருந்தது. அவன் இதுவரை தன்னிடம் பெரிதாக எதுவும் பேசியதில்லைதான். இருந்தும் அறையிலிருந்து எதுவும் பேசாமல் வந்ததும், இதோ இப்போ தன்னை நிமிர்ந்தும் பார்க்காமல் பேசுவதையும் பார்த்தவளுக்கு சுணக்கமானது. முகத்தை வாட்டமாக வைத்துகொண்டு மேலே சென்றுவிட்டாள்.
அனியின் முகவாட்டத்தை பார்த்த ஷ்யாமளா “கல்யாணத்துக்கு பின்னாடி எங்கயுமே இரண்டு பேரும் போகல. இன்னைக்கு வீட்லதான இருந்த கௌதம். அனிய எங்கயாவது அழைச்சிட்டு போய் வந்திருக்கலாமில்ல?” என்றார்.
“ம்ப்ச்… என சலித்துக்கொண்டே ஷ்யாமளாவைத் திரும்பி பார்த்தவன் “ரொம்ப நாள் கழிச்சு இந்த சண்டேதான் வீட்ல இருக்கேன். எனக்கும் ரெஸ்ட் வேணுமில்ல ம்மா…” என்றான்.
“இங்க இருந்தா வேலை இருந்துட்டேதான் இருக்கும். ட்ரிப் மாதிரி புக் பண்ணி எங்கயாவது வெளியூர் போயிட்டு வாங்க இரண்டு பேரும்”.
“ஹ்ம்ம்… பார்க்கலாம்” என அத்தோடு பேச்சை முடித்துகொண்டான்.
மேலே அறைக்குள் சென்றவளுக்கும் மனம் ஒருநிலையில் இல்லை. ஏன் பட்டுன்னு ஒருமாதிரி கோவமாயிட்டாங்க. காபிகூட வேணாம்னுட்டாங்க என மனம் அதிலேயே சுழன்று கொண்டிருந்தது.
அறையிலிருந்த பால்கனியில் வந்து நின்றுகொண்டாள். வீட்டின் முன்பகுதியிலும் பக்கவாட்டிலும் இருந்த தோட்டத்தில் பார்வையை பதிருந்தவளுக்கு பின்பக்கமாக அரவம் கேட்கவும் திரும்பி பார்த்தாள். கௌதம்தான் வந்து நின்றிருந்தான்.
அவள் தலைக்கு மேல் கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துவாலையை எடுத்து தன் கழுத்தில் மாலைபோல் போட்டு துண்டின் இரு நுனியிலும் இரண்டு கைகளை பிடித்து நின்றவன் என்ன என்றான் அமுதினியைப் பார்த்து புருவங்களை ஏற்றி இறக்கி.
கணவனின் கூர்மையான பார்வையில் தடுமாறியவள், “ம்ஹூம்…” என்றாள் தடுமாற்றமாக.
அவள் பக்கமாக வந்து பால்கனியில் சாய்ந்து நின்றான்.
அவனிடம் பேச கூச்சமாக இருந்தாலும் “காபி சாப்பிடறீங்களா…? எடுத்துட்டு வரவா…?” என்றாள் மெல்லிய குரலில் முதன் முதலாக நேரடியாக பார்த்து கணவனிடம்.
சரி என தலையசைத்தான்.
கீழே இறங்கி சென்றவள் பிளாஸ்குடன் காபி கப்பையும் எடுத்துவந்து அவன் எதிரில் நின்றுகொண்டே கப்பில் காபியை ஊற்றிக் கொடுத்தாள்.
அதை கையில் வாங்கிக்கொண்டே, “நீ குடிச்சிட்டியா…?” என்றான்.
“ஹ்ம்ம்…”
“என்ன பண்ற…?”
“ம்ம்…” என்றாள் அவன் கேட்க வருவது புரியாமல் விழித்துகொண்டே.
“இங்க நின்னுட்டு என்ன பண்ற?”
“சும்மாதான் நின்னுட்டிருந்தேன்”.
“டின்னருக்கு வெளிய போலாமா…”
“நானா…?”
“ம்ம்…”
“உங்க பிரண்ட் யாரையோ மீட் பண்ண போறதா சொன்னீங்களே. நீங்க போயிட்டு வாங்க. நான் எதுக்கு?”
அமுதினிக்கு ஷ்யாமளா ஏதாவது கௌதமிடம் சொல்லியிருக்கக்கூடும். அதனால்தான் கௌதம் தன்னை வெளியில் அழைத்துசெல்ல நினைக்கிறானோ என்ற எண்ணம்.
“அவனுக்கு ஏதோ வேற வேலை வந்துடுச்சாம். இன்னொரு நாள் மீட் பண்ணலாம்னு மெசேஜ் பண்ணிட்டான். நாம போயிட்டு வரலாம் கிளம்பு”.
கௌதம் அவளை வெளியில் அழைத்து செல்ல கூப்பிட்டதை நினைத்து அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுதான் முதல்முறை கௌதம் அவளை பார்த்து நேரடியாக பேசி அவளை வெளியில் அழைப்பது எல்லாம்.
ஆதலால் இன்னும் அவன் அழைத்ததை நம்ப முடியாமல் கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன…?”
“ம்ஹூம்… ஒன்னுமில்ல”.
“போய் ரெடியாகு. நீ பாத்ரூம் போய் வந்ததும், நான் குளிக்கனும்”.
“ம்ம்…” என தலையசைத்து நகர்ந்துவிட்டாள்.
மனைவியின் நம்பாத பார்வையில் கௌதமுக்கு இதழ் மலர்ந்தது. அவள் பாத்ரூமுக்குள் நுழைந்த அடுத்த நொடி கையிலிருந்த மொபைலை எடுத்து கூகுளில் “வான் வருவான்” பாடலை தேடி மெல்லிய ஒலியில் ஒலிக்கச் செய்து கேட்டுக் கொண்டிருந்தான்.
சற்று முன் மனைவி அந்த பாடலை ஒலிக்க விட்டு ரசித்து கொண்டிருந்தது கண் முன் தோன்றி நிழலாடியது. ஒவ்வொரு வார்த்தையும் இசையோடு சேர்த்து ரசித்தவனுக்கு கண்களோடு சேர்ந்து முகமும் சிரித்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
“அம்மா இன்னொரு பஜ்ஜி குடுங்க”.
“இப்ப தான வந்து வாங்கிட்டு போன”.
“அது அப்பா எடுத்துகிட்டாங்க. இது எனக்கு. குடுங்க”.
“அப்பாவ சாக்கு வச்சு நீதான் முழுங்கிட்டுருக்கன்னு நினைக்கறேன்”.
“ம்மா… நிஜமாவே அப்பாதான் எடுத்துகிட்டாங்க. என்னை நம்பல இல்ல. இருங்க அப்பாவையே கூப்பிடறேன். ப்பா…” என கிட்சனிலிருந்தே சத்தம் கொடுத்தாள் கனிமொழி.
“என்னடா…?”
“அம்மா உங்கள கூப்பிடறாங்க. இங்க கொஞ்சம் வாங்களேன்”.
“என்ன சாரு…?” என வந்து நின்றார் பூபதி.
மகளை திரும்பி முறைத்த சாரதா, “நான் எங்க கூப்பிட்டேன். உங்க பொண்ணுதான் கூட்டது. அவளையே கேளுங்க” என்றார்.
திரும்பி கனிமொழியைப் பார்த்தார் பூபதி.
“அம்மா எனக்கு பஜ்ஜியே குடுக்க மாட்டேன்றாங்க. என்னன்னு கேளுங்க ப்பா…” என சிணுங்கினாள்.
“இதுக்காடா என்னை அங்கயிருந்து எழுந்து வரவச்ச” என சலித்தார் பூபதி.
“ப்பா… இங்க எவ்வளவு பெரிய பிரச்சினை போயிட்டிருக்கு? உங்களுக்கு இப்ப நியூஸ்தான் முக்கியமா…? முதல்ல அம்மாவ என்னன்னு கேளுங்க ப்பா”.
“இப்படி அம்மா செய்யறதே எப்பவோ ஒரு தடவைதான். அதுலயும் ரெஸ்ட்ரிக்ஷன் பண்ணா… சொல்லுங்க ப்பா… அம்மாகிட்ட. இந்த மழைக்கு சுடச்சுட பஜ்ஜி சாப்பிடறது எவ்வளவு நல்லாயிருக்கு. இன்னும் இரண்டு குடுக்க சொல்லுங்க ப்பா” என சிணுங்கினாள் கனிமொழி.
“நீதான் அவள் கேட்கறத குடேன் சாரு”.
“ஏற்கனவே எத்தனை உள்ள போயிருக்குன்னு கேளுங்க. இதுல உங்கள சாக்கு வச்சு வேற வாங்கிட்டேயிருக்கா…”
திரும்பி மகளைப் பார்த்த பூபதி அவள் காட்டிய சமிஞ்சையில் புரிந்தும் புரியாமல் தடுமாறி என்ன சொல்ல வருகிறாள் என உணர்வதற்குள் சாரதா கண்டு கொண்டிருந்தார் மகளை.
“திருட்டுக்குட்டி. எனக்கு தெரியாது. அப்பாக்கு குடுத்துட்டேன்னு பொய் வேற” என அங்கிருந்த கரண்டியை அவர் கையில் எடுத்ததும் கனி வேகமாக ஓடிவந்து ஹாலில் உட்கார்ந்துகொண்டாள்.
பூபதியும் சிரித்துக்கொண்டே வந்து மகளின் பக்கத்தில் உட்கார்ந்தார்.
“போங்கப்பா… இத கூட உங்களால புரிஞ்சுக்க முடியல. இன்னும் இரண்டு வாங்கிகுடுங்க ப்பான்னு அம்மாக்கு தெரியாம சைகை காட்டறேன். நீங்க என்னடான்னா பே பேன்னு முழிச்சிட்டிருக்கீங்க. அம்மா பாருங்க டக்குனு கண்டுபிடிச்சிட்டாங்க. உஷார் ப்பா இந்த அம்மா…” என சிணுங்கினாள்.
“ஹா… ஹா… வேணும்னா அம்மாகிட்ட கேட்க வேண்டியதுதான. என்னை ஏன்டா நடுவுல இழுக்கற”.
“எங்க குடுக்கறாங்க உங்க மிஸசஸ். ஓவர் கண்டிஷன்” என நொடித்துக்கொண்டாள்.
“ஹா… ஹா… அம்மா உன் நல்லதுக்குதான் சொல்லுவாடா. ஓவர் வெயிட் போடக் கூடாதுன்னு சொல்லியிருப்பா… சரி அத விடுடா. எப்ப எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது”.
“நெக்ஸ்ட் மன்த் பா. அப்பா நானே உங்ககிட்ட சொல்லனும்னு இருந்தேன். பர்ஸ்ட் இயர் லீவுல என் பிரண்ட்ஸ் எல்லாம் இன்டன்ர்ன்ஷிப் பண்றாங்க ப்பா. நானும் உங்க கம்பெனிக்கு வரட்டுமா…?”
“செகன்ட் இயர் முடிஞ்சுதான் இன்டர்ன்ஷிப் வரும்னு சொன்னே”.
“அது மஸ்ட் ப்பா. இது நாமளே பர்சனலா பண்றது. இதனால எனக்கு எக்ஸ்ட்ரா கிரடிட்ஸ் கிடைக்கும்”.
“ம்ம்… நல்ல விஷயம்தான். ஆபிஸ்ல கேட்டு சொல்றேன்டா”.
“சீக்கிரம் கேட்டு சொல்லுங்க ப்பா. இல்லனா என பிரண்ட் வாணி இருக்கால்ல. இன்டர்ன்ஷிப்காக அவள் அவங்க அக்கா ஆபிஸ்க்கு போகப் போறாளாம். என்னையும் வரயான்னு கேட்டா. நாந்தான் அப்பாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்”.
“உங்க ஆபிஸ்ல கிடைக்கலனா… நான் அவள்கூட போறேன் ப்பா”.
“கேட்கறேன்டா. எங்க எம்.டி.கிட்ட பேசிட்டு சொல்றேன்”.
“ம்ம்…”
@@@@@@@@@@@@@@@@@
அமுதினியும் கௌதமும் டின்னர் முடித்துவிட்டு கடற்கரைக்கு வந்திருந்தனர். இன்னும் இரண்டு நாளில் பௌர்ணமி என்பதால் சந்திரனின் ஒளியில் கடலலைகள் மின்னி துள்ளி குதித்துக் கொண்டிருந்தது.
பேரிரைச்சலுடன் பொங்கி எழுந்து கரையை தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது கடல் அலைகள். அமுதினி அலைகளில் காலை நனைத்துக் கொண்டு பொங்கி வரும் கடல் அலைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
கௌதம் அவளுக்கு பின்னால் பத்தடி தூரத்தில் சற்று மேடான இடத்தில் நின்று கொண்டிருந்தான். இரவு மணி ஒன்பது என்பதால் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
பெரிய அலை ஒன்று வேகமாக வருவதைக் கண்டு அமுதினி சேலையை ஒரு கையால் தூக்கி பிடித்து கொண்டு, மண்ணில் புதைந்திருந்த காலை தூக்கி பின்னால் நகர்ந்து வருவதற்குள் மொத்தமாக அவளை அடித்து சுருட்டி வீழ்த்தியிருந்தது.
பேரலையில் தடுமாறி கீழே விழுந்தவளைப் பார்த்து “ஹேய்” என ஒரு கையை தூக்கி சத்தமிட்டுக் கொண்டே அவளை நோக்கி ஓடி வந்தான் கௌதம்.
முழுவதும் நனைந்திருந்தாள். வாயில் மூக்கில் எல்லாம் நீர் ஏறியிருந்தது. உப்பு நீர் கண்ணில் பட்டதில் உண்டான எரிச்சலில் முகத்தில் வழிந்த நீரை ஒரு கையால் வழித்து துடைத்துக் கொண்டே கணவனை திரும்பிப் பார்த்தாள்.
உடல் முழுவதும் ஈரமாகியிருந்தது. அவளருகில் வந்த கௌதம் “ஆர் யூ ஓகே?” என கேட்டுக்கொண்டே அவளை தூக்கி நிறுத்துவதற்குள் அடுத்த அலை வந்து இருவரையும் சேர்த்து இழுத்திருந்தது.
சேலையில் கால் சிக்கி தடுமாறி எழ முயன்றவள் அடுத்த அலையின் இழுப்பில் தள்ளாடி கீழே விழுந்து விடாமல் இறுக்க என அவனது சட்டையை இறுக்கமாக பிடித்துகொண்டாள்.
அவள் பிடித்து இழுத்த வேகத்திற்கு அவள் மேலேயே மோதி நின்றவன், அடுத்த அலை வருவதற்குள் சட்டென சுதாரித்து, மனைவியின் இடுப்பில் கை கொடுத்து தூக்கி இறுக்கமாக தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு விழாமல் காலை மணலில் ஊன்றி நின்று கொண்டான்.
அமுதினியும் அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். இருவருக்கும் தங்களின் நெருக்கத்தை உணர்ந்து கூச்சமாக இருந்தாலும், அலைகளில் இருந்து நகர எண்ணி, “வா மேல போலாம்” என அவளை அணைவாக பிடித்தவாறு மேடான பகுதிக்கு அழைத்து வந்தவன், திரும்பவும் “ஓகேவா? போலாமா?” என கேட்டு நின்றான்.
“ஹ்ம்ம்… டூ மினட்ஸ்” என்றவள் அவனுக்கு முதுகைக் காட்டியவாறு திரும்பி நின்று குனிந்து தனது சேலையின் கீழ் பகுதியையும், சேலை முந்தானையும் பிழிந்து உதறிவிட்டாள்.
கௌதமுக்கும் பேண்ட் முழுவதும் ஈரமாகி சட்டையின் அடிப்பாகமும் மார்பு வரை நனைந்திருந்தது.
பேன்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து பார்த்தான். அதுவும் நனைந்திருந்தது. அதில் இருந்த கடல் நீரை பிழிந்தவன், அவனது இரண்டு கைகளையும் ஈரம் போக துடைத்துவிட்டு, மறுபடியும் பிழிந்து உதறி அமுதினியிடம் நீட்டினான்.
அமுதினியின் தலைகூட ஈரமாகியிருந்தது. தலைமுடியில் இருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. கௌதம் கொடுத்த கர்ச்சீப்பால் முகத்தை அழுந்த துடைத்தவள், தலையில் இருந்த ஈரத்தை அந்த கர்ச்சீப்பாலே ஒத்தி எடுத்தாள்.
“நடக்க முடியுமா…? காருக்கு போயிடலாமா…?”
“ஹ்ம்ம்…”
“கம்…” என கைகளை நீட்டினான். சுழற்றி வீசிய காற்றிலும், புடவை ஈரத்தின் குளுமையிலும் அவளுக்கு நடுங்கியது.
கதகதப்பாக கௌதமின் கைகளை பிடித்துக் கொண்டு நடந்தவளுக்கு குளிரில் உதடு தந்தியடிக்க ஆரம்பித்தது.
“ரொம்ப குளிருதா…” என்றான் நடுங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்து.
“ம்ம்…” என்றாள். புடவை ஈரத்தில் கால்கள் சிக்கிக்கொண்டு நடக்ககூட முடியாமல் அவஸ்தையாக இருந்தது.
மெல்ல கார் வரை அழைத்து வந்தவன், கதவை திறந்து அவளை முன்சீட்டில் உட்கார வைத்துவிட்டு டிரைவர் சீட்டுக்கு வந்து தானும் உட்கார்ந்து காரை எடுத்தான்.
தொடரும்.
