Skip to content
Post Views: 6,530
மறுநாள் காலை எழுந்தும், அமுதினி யாரிடமும் எதுவும் பேசாமல், சாப்பிடாமலும் வேலைக்கு கிளம்பி சென்று விட்டாள். குழலிக்கு வேறு தன்னால்தானோ என்ற குற்றவுணர்வு.
என்னதான் அம்மா சொல்லியிருந்தாலும், எனக்கு புத்தி எங்க போச்சு? நான் இதுக்கு ஒத்திருந்துருக்க கூடாது.
நான் மட்டும் இதுக்கு ஒத்துக்காம இருந்திருந்தா அமுதினிக்கு இந்த நிலை வந்திருக்காது. இந்த அம்மாவால, இப்ப என்கிட்ட கூட பேச மாட்டேன்றா என மருகினாள்.
பூங்குழலியும் அமுதினியும் அக்கா தங்கை என்பதைவிட ஃபிரண்ட்ஸ் போலதான் எப்போதும் இருப்பர். இதுவரை அவர்களுக்குள் பெரிதாக சண்டையோ மனக்கசப்போ அவ்வளவாக வந்ததில்லை.
Advertisement
எதுவாக இருந்தாலும், யாராவது ஒருவர் எப்போதும் விட்டுக் கொடுத்து விடுவர். இன்று அமுதினி பேசாமல் முகத்தை திருப்பி சென்றது, அவளுக்குள் பிரளயத்தை உண்டு பண்ணியது.
இவளுக்கு ஒருபடி மேல் இருந்தது பெற்றவர்களின் நிலைமை. பெரிய மகளின் ஒதுக்கம் அவர்களுக்கு பயத்தையும், வேதனையையும் கொடுத்தது.
தாய் தந்தை இருவருக்கும் மகளை என்ன சொல்லி தேற்றுவது? எப்படி சமாதானப்படுத்துவது என தெரியவில்லை.
Advertisement
ஏதோ அந்த நேரம் இருந்த மன சஞ்சலத்தில், குழப்பத்தில், வந்தவர்களை எப்படி சமாளிப்பது என தடுமாறிய சமயத்தில் சாந்தாவின் வற்புறுத்தலின் கட்டாயத்தால் சூழ்நிலைக் கைதியாகி இருந்தனர்.
Advertisement
சாரதாவும் அந்த நேர பதற்றத்தில் யோசியாமல் படபடவென ஏதோ பேசியிருந்தாரே தவிர, பின்பு அமுதினிக்காக வருந்தவும் செய்தார்.
மாப்பிள்ளை வீட்டினரோ குழலியை பார்த்ததும் பெண்ணைப் பிடித்திருக்கிறது. மற்றதெல்லாம் கலந்து பேசிவிட்டு சொல்லிவிடுகிறோம் என கூறி சென்றுவிட்டனர்.
பெண்ணைப் பிடித்திருக்கிறது என அவர்கள் கூறியும், இவர்களால் அதை சந்தோஷமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. குற்றவுணர்ச்சியாக இருந்தது.
Advertisement
ஆனால் அதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல இப்பொழுது அமுதினி பேசாமல் இருந்தது, பெற்றவர்களின் மனதை கொல்லாமல் கொன்றது.
பெண்ணின் கோவத்தை நினைத்து வெளியில் சொல்ல முடியாமல் மனதிலேயே குமைந்து தத்தளித்தனர். இதுவரை அமுதினி இப்படி நடந்ததில்லை என்பதால், மனதுக்குள் பாரமேறியது உணர்வு.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து அன்று மாலையே போன் வந்து விட்டது. அவர்களுக்கு சம்மதம், மற்றதெல்லாம் எப்பொழுது கலந்து பேசலாம், என.
சாரதாவும் பூபதியும் செய்வதறியாது திகைத்து விட்டனர்.
இங்கே அமுதினி இப்படி இருக்கும் நிலையில், அவளை கஷ்டப்படுத்தி மேலும் தொடர விரும்பவில்லை அவர்கள். ஆதலால் இப்போதைக்கு எங்களுக்கு செய்யும் எண்ணம் இல்லை.
பெரியவளுக்கு முடியாமல் இவளுக்கு இப்போதைக்கு அவசரப்பட முடியாது என அவர்களின் நிலையை தெளிவாகவே விளக்கி கூறிவிட்டனர்.
அமுதினிக்கு முடியும் வரை காத்திருப்பதானால் சரி. இல்லையென்றால் வெளியில் பார்த்துக் கொள்ளுங்கள் என நேரிடையாகவே சொல்லிவிட்டனர்.
பெரியவளை வைத்துக் கொண்டு குழலிக்கு திருமணம் செய்ய, எங்களுக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டனர்.
அமுதினி கேன்டீனில் அமர்ந்திருந்தாள் சாப்பிடுவதற்காக. பசி வயிற்றை கிள்ளியது. நேற்று மதியத்திலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. வீட்டில் டீ கூட அருந்தாமல் வந்திருந்தாள் கோவமாக. நேரம் ஆக ஆக கோவத்தின் வேகம் குறைய ஆரம்பித்திருந்தது.
காலை எழுந்து இவள் வேலைக்கு கிளம்பி அறையை விட்டு வெளியே வரும் போது, சாரதா கிட்சனில் இருந்தார்.
மகள் சாப்பிடாமல் செல்வதைப் பார்த்து வேகமாக அமுதினியிடம் ஏதோ பேச வந்தவரை கூட கண்டு கொள்ளாமல் வந்து விட்டாள் அலட்சியமாக.
நேற்று இவளுக்கு ட்யூட்டி முடிந்து வெளியே வரும் சமயம் ஒரு எமர்ஜென்ஸி கேஸ் வந்திருந்தது ஹாஸ்பிட்டலுக்கு. அதை இவள் அட்டென்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை.
டாக்டர் ஷ்யாமளா இவளிடம் “கொஞ்சம் கூட இருந்து ஹெல்ப் பண்ண முடியுமா அனி? என கேட்கும்போது மறுத்து பேச முடியவில்லை.
மருத்துவ துறையில் இதெல்லாம் சகஜம் தானே. பல சமயங்களில் இப்படி திடுதிப்பென்று நடப்பதுண்டு.
நேற்றும் அதுபோல தான். டாக்டர் ஷ்யாமளாவின் உதவிக்கென்று இருந்த நர்ஸ் திடீரென விடுமுறையில் சென்றிருந்ததால், இவள் மறுத்து கூற வழியில்லாமல், அவருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை.
அந்த நேர அவசரத்திலும்கூட, உடன் வேலை செய்யும் நர்ஸிடம், “என் போன்ல ஜார்ஜ் இல்ல. கொஞ்சம் என் வீட்டுக்கு போன் செஞ்சு, நான் வர லேட்டாகும்னு சொல்லிடு” என சொல்லிவிட்டுதான் சென்றாள்.
சரி என தலையசைத்து வந்த அந்த நர்சுக்கு வேறு ஒரு டென்ஷன் அந்த நேரத்தில். டிஸ்சார்ஜ் ஆகும் நோயாளி ஒருவர் பில் பேமென்ட் அதிகமாக இருக்கிறது என அவளிடம் பேமென்ட் செய்ய தகராறு செய்து கொண்டிருந்ததால், அமுதினி சொல்லி சென்றதையே மறந்திருந்தாள்.
“ட்ரீட்மென்ட் பண்ண டாக்டர வர சொல்லு. அவர் வந்து என்கிட்ட பேசர வரைக்கும், நான் பணம் கட்ட மாட்டேன். ஏதோ மளிகை கடையில பில் குடுக்கற மாதிரி, இஷ்டத்துக்கு லிஸ்ட்டா வச்சு பில் குடுத்திருக்கீங்க” என அந்த நர்சிடம், அந்த நோயாளி எகிறி கொண்டிருந்தார்.
ஒருவழியாக அந்த நோயாளியிடம் பேசி, கன்ஸ்வின்ஸ் செய்து, பில் பேமன்ட் கட்ட வைப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகியிருந்தது.
இதில் எங்கே அமுதினி சொல்லி சென்றது எல்லாம் அவளுக்கு ஞாபகம் இருக்கும். அமுதினி டாக்டர் ஷ்யாமளாவுடன் ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்துவிட்டு வெளியே வந்ததும், அவளைப் பார்த்துதான், அமுதினி வீட்டுக்கு போன் செய்து சொல்ல சொல்லி சென்றதே நினைவில் வந்தது.
அமுதினியிடம் விவரத்தை கூறி சாரி கேட்டிருந்தாள் அந்த நர்ஸ்.
அமுதினிக்கும் ஒன்னும் சொல்ல முடியாத நிலை, ஏதும் பேசாமல் வெறுமனே தலையை அசைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.
எப்படியும் வீட்டுக்கு போனா, அம்மா இன்னைக்கு நம்மை திட்டித் தீர்க்கப் போறாங்க என்று பயந்து கொண்டே வந்தாள்.
இங்கு வந்ததும் வீட்டில் நடந்ததை கேட்டு ஆவேசமாக வந்தது. அன்று பகலிலிருந்து சாப்பிடாத பசி மயக்கம். வேலை பார்த்த டையர்ட். வீட்டில் சொன்ன செய்தி என எல்லாம் சேர்ந்து அவளை ஆத்திரத்தின் உச்சிக்கே அழைத்து சென்றிருந்தது.
யாரிடமும் எதையும் கேட்கவும், பேசவும் பிடிக்கவில்லை. ஆதலால் அமைதியாக சென்று படுத்துவிட்டாள்.
காலையில் எழுந்தும் ஒன்றும் பேசாமல் வேலைக்கு கிளம்பி வந்திருந்தாள். இங்கு வந்துதான் காலையில் கேன்டீனில் டீயும், வடையும் சாப்பிட்டிருந்தாள்.
இதோ இப்போது கூட வேலை பார்க்கும் நர்ஸ் சரளா இவளை சாப்பிட வற்புறுத்தி அழைத்து வந்திருந்தாள். சரளா இரண்டு கையிலும் ஆளுக்கொரு ப்ளேட்டில் எலுமிச்சை சாதமும் மசால் வடையும் வாங்கி வந்திருந்தாள்.
சரளா, “மத்த ஐட்டம் எல்லாம் காலி. இதான் இருந்தது” என கொண்டு வந்து வைத்தாள்.
அமுதினி, “மணி இரண்டுதான ஆகுது. அதுக்குள்ள எல்லாம் காலியாகிடுச்சா….?” என்றாள்.
“சில நாள் அப்படிதான். சீக்கிரம் காலியாயிடுது” என அவளுடன் சாப்பிட உட்கார்ந்தாள் சரளா.
இருவரும் சாப்பிட்டு முடித்து வேலைக்கு திரும்பினர்.
அவர்கள் உள்ளே நுழையும் போது அட்டென்டர் ஒருவர் அமுதினியைப் பார்த்து, “சிஸ்டர் உங்களை டாக்டர் ஷ்யாமளா வர சொன்னாங்க…” என சொல்லிவிட்டு நகர்ந்தார்.
சரி என தலையசைத்த அமுதினி, டாக்டர் ஷ்யாமளாவை காண அவருடைய அறைக்கு சென்று, கதவைத் தட்டி அனுமதி வாங்கி உள்ளே சென்றாள்
ஷ்யாமளா, “லன்ச்ல இருந்தியா…? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா…?”
“நோ… நோ… மேம். சாப்பிட்டு முடிச்சிட்டேன்”.
“ம்ம்…” என சிரித்துக்கொண்டவர், ஷ்யாமளா, “டாக்டர் பிருந்தா வந்தா, அவங்ககிட்ட இந்த பைலை குடுத்துடறியா…? எனக்கு கொஞ்சம் அர்ஜென்ட்டா வெளிய போக வேண்டிய வேலையிருக்கு” என்றார்.
அமுதினி, “ஷ்யூர் மேம்” என பைலை கை நீட்டி வாங்கிக் கொண்டாள்.
ஷ்யாமளா, “இது என் பையன் கௌதம். இவனும் டாக்டர்தான். பீடியாட்ரிஷன். இவ்வளவு நாள் பெங்களூர்ல வொர்க் பண்ணிட்டிருந்தான். இனிமே இங்கதான்” என அங்கு கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக உட்கார்ந்திருந்தவனை அறிமுகப்படுத்தினார்.
அமுதினிக்கு அப்போதுதான் அங்கே ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பதே கருத்தில் பதிந்தது.
ஷ்யாமளா கௌதமை அறிமுகப்படுத்தியதும், அவனைப் திரும்பி பார்த்து சிநேகமாக புன்னகைத்தவள், “ஹலோ சார்” என்றாள்.
பதிலுக்கு அவனிடம் இருந்து ஒரு சின்ன தலையசைப்பு.
திரும்ப ஒரு ஹலோ சொல்லகூட வாயில்லையா இவனுக்கு என நினைத்தவள், ப்பா.. என்ன பார்வைடா சாமி இது. எக்ஸ்ரே கணக்கா… என பார்வையை ஷ்யாமளாவிடம் திருப்பி கொண்டாள்.
டாக்டர் ஷ்யாமளா அவனிடம் திரும்பி, “இது அமுதினி. என்னோட லெஃப்ட் ஹேண்ட்னு சொன்னா கூட சரியாயிருக்கும். இவள் இல்லைனா எனக்கு கையொடிஞ்ச மாதிரி. வொர்க்ல அவ்வளவு சின்சியர்…” என்றார் புன்னகையாக.
அதற்கும் எந்த மறுமொழியும் இல்லை அவனிடம். இலேசான தலையசைப்பு மட்டுமே.
“சரி அனி. நீ கிளம்பு” என ஷ்யாமளா கூறிய அடுத்த நொடி, “ஓகே மேம்” என அங்கிருந்து வேகமாக வெளியே வந்துவிட்டாள்.
தொடரும்.
error: Content is protected !!