Skip to content
Post Views: 6,948
சாரதா பூபதியை தனியாக அழைத்து மெல்ல சாந்தா கூறியதைக் கூறினார். பூபதிக்கு இதனைக் கேட்டதும் அதிர்ச்சி. அப்படியே சாரதாவை முறைத்து நின்றவர் திட்ட ஆரம்பித்து விட்டார்.
‘’என்ன பேசற நீ? சுய நினைவோடதான் பேசறயா? இந்த மாதிரி பேசறதை நிறுத்து. ஏன்? உன் எண்ணம் இப்படி போகுது”.
“பெரியவள் இருக்கும் போது, குழலிக்கு பார்ப்பியா? உனக்கு கொஞ்சமாவது மூளை வேலை செய்யுதா?” என கத்த ஆரம்பித்து விட்டார்.
அப்போதும் சாரதா அசரவில்லை.
Advertisement
“நல்லா நிதானமா யோசிச்சு பாருங்க. நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு? எனக்கும் அமுதினியை நினைச்சு கவலை இருக்கு. ஆனால் வீடு தேடி வந்த வரனை விடவேண்டாமேன்னு தான் சொல்றேன்” என்றார் தயக்கமாக.
“ஊர் உலகத்துல இது மாதிரி நடக்கறதில்லையா? இதுவரைக்கும் எத்தனை வரன் அமுதினிக்கு பார்த்திருப்போம். ஒன்னு கூட ஒத்து வரலையே. அதுவும் விடுங்க. இப்ப வந்திருக்க இடம் கூட முடிஞ்சிடும்னு என்ன நிச்சயம்?”
“பொண்ணப் பார்த்து பிடிச்சு, நமக்கும் அந்த பையனைப் பிடிச்சு, ஜாதகம் பார்த்து, அதுவும் பொருந்தி வரனும். இதுக்கு அப்புறம் இரண்டு குடும்பமும் கலந்து பேசி எல்லாம் பிடிச்சிருந்து, ஒத்து வந்தா தான கல்யாணமே. நடுவுல இத்தனை இருக்கும் போது இப்பவே கல்யாணம் முடிஞ்சிட்ட மாதிரி ஏன் பதைக்கறீங்க…?”
Advertisement
“வந்தவங்களை ஏமாத்தாம குழலியை பார்க்க வைக்கலாம். அவங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாமே” என்றார் வேண்டுதலாக.
Advertisement
பூபதி நிதானமாக சாரதாவுக்கு புரிய வைத்துவிடும் எண்ணத்துடன், “சாரதா அப்படி என்ன அவசியம்? குழலியைக் காட்டனும்னு. வந்தவங்க கிட்ட அமுதினி வேலையிலிருந்து இன்னும் வரலன்ற காரணத்தை சொல்லி இன்னொரு நாள் வர சொல்லுவோம் மா”
“அதுதான உண்மை. நீ ஏன் போட்டு குழப்பிக்கற? அவங்க தப்பா எடுத்துப்பாங்கன்னு, குழலியை போய் அமுதினிக்கு பதிலா நிக்க வைக்க முடியுமா?” என்றார் நிதானமாக.
சாரதா, “வந்திருக்கவங்க கிட்ட அமுதினி ஏன் இன்னும் வரலைன்றதுக்கு என்ன காரணம் சொல்லுவீங்க..? நீங்க சொல்றது உண்மையா இருந்தாலும், அவங்க அதை அப்படியே ஏத்துக்குவாங்களா..?”
Advertisement
“உங்களுக்கு உங்க பெண்ணை தெரியும். நம்பறீங்க. அவங்களும் நம்பனும்னு அவசியம் இல்லையே? ஏன்..? என்ன…? எதுக்குன்னு யோசிக்கமாட்டாங்களா…? இல்லாததையும் பொல்லாததையும் நினைச்சு சந்தேகப்படமாட்டாங்கன்னு…, என்ன நிச்சயம்..?”
“உங்க பொண்ணு ஒரு போன் கூடவா பண்ணி சொல்ல மாட்டான்னு நம்மளை காரித்துப்பாத குறையா சாந்தா பேசறாங்க. கேட்கவே நாக்க பிடுங்கிக்கலாம் போல அசிங்கமாயிருக்கு எனக்கு” என கலங்கி நின்றார்.
“என்ன பேசற… நீ? பிள்ளை போன் பண்ணலனா என்ன காரணமோ? போன்ல சார்ஜ் இல்லாம இருக்கலாம். வேற ஏதாவது வேலையாகூட இருக்கலாம்”.
“உடனே அவள் போன் பண்ணாததுக்கு சந்தேகப்படுவியா…? நானே இன்னும் பிள்ளைய காணோமேன்னு அவஸ்தையில இருக்கேன்…” என முறைத்தார்.
“எனக்கு தெரியுது. ஆனால் உங்க தங்கச்சி வேற ஏதாவது மேட்டரான்னு சந்தேகப்படற மாதிரி என்கிட்டயே கேட்கிறாங்களே…?”
“எங்கிட்ட ஏதும் மறைக்கிறீங்களான்னு, சாந்தா கேட்கும்போது, என்ன சொல்ல சொல்றீங்க? அவமானமா போச்சு”.
“இந்த சம்மந்தம் பத்தின தகவல் வந்ததும் எவ்வளவு சந்தோஷப் பட்டீங்க நீங்க”.
“நல்ல இடம். நல்ல பையன். வசதியும் இருக்கு. எல்லாம் நல்ல படியா அமையனும்னு எவ்வளவு ஆசைப்பட்டீங்க”.
“இப்ப உங்க பொண்ணு பண்ண வேலையால இந்த சம்மந்தம் கை நழுவி போயிடாதா..? அமுதினி அவங்க வரும் போது இல்லைன்றதால…, உங்க தங்கச்சி என்னல்லாம் பேசறாங்க தெரியுமா…?”
“அவங்கள சொல்லி என்ன பிரயோஜனம்? சாந்தா மதினி சொல்றதும் ஒரு வகைல நியாயமாதான இருக்கு. இந்த சம்மந்தத்தை ஏன் இழக்கனும்? எனக்கு என்னமோ இது நல்ல இடமாயிருந்தா குழலிக்கு பேசிப் பார்க்கலாம். ஏன் நல்ல வரனை விடுவானேன்னு இருக்கு”.
பூபதி, “நீ என்ன பேசறன்னு யோசிச்சுதான் பேசறியா? இது என்ன காய்கறி வியாபாரமா? ஒன்னு இல்லைனா இன்னொன்னு இருக்குன்னு சொல்றதுக்கு” என்றார் எரிச்சலாக. அவருக்கு ஏன் இப்படி பேசுகிறாள், சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்றாளே என கோவமாக வந்தது.
“நமக்கு என்ன ஒருத்தி தான் இருக்காளா…? பொறுமையா நிதானமா பார்த்து பண்ணலாம்னு சொல்றதுக்கு. ஒன்னுக்கு மூனு பெத்து வைச்சிருக்கோம். இவங்களை வரிசையா கரை சேர்க்க வேணாமா?”
“அது மட்டும் ஆச்சா…? அடுத்து தீபாவளி, பொங்கல், சீமந்தம், பிரசவம், அவங்க குழந்தைங்க வரைக்கும் ஒன்னு மாத்தி ஒன்னு ஏதாவது வரிசையா செய்ய வேணாமா…?”
“இது எல்லாம் மூனு பேருக்கும் செஞ்சு முடிச்சு நிமிரும் போது, கொஞ்சம் நினைச்சு பாருங்க. நமக்கு என்ன வயசா திரும்புது?”
“இல்ல சொத்துபத்து எதாவது வச்சிருக்கீங்களா? இல்ல பென்ஷன்தான் வருமா உங்களுக்கு. நம்ம கடைசி காலத்துக்குன்னு. இந்த வீட்டுக்கே லோன் போட்டுதான் கட்டியிருக்கோம். இன்னும் அந்த லோனே எப்ப அடைப்போம்னு இருக்கு நமக்கு” என்றார் சாரதா.
பூபதிக்கு மண்டையிடியாக இருந்தது சாரதா பேசுவதைக் கேட்டு. தலையை இரு கைகளாலும் பற்றி கொண்டவர், “இப்ப நீ என்ன தான் சொல்ல வரே?” என்றார் ஆயாசமாக.
“வந்திருக்க நல்ல சம்மந்தத்தை ஏன் விடுவானேன்னுதான் சொல்றேன். நம்ம குழலிக்கு இந்த வரனை பார்க்கறதுல என்ன தப்பிருக்கு? யோசிச்சு பாருங்க”.
“நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரியுதா..? நீங்க வேலையில இருக்கற காலத்திலேயே எல்லாரையும் கட்டி கொடுத்துடனும்னு நினைக்கிறேன். காலமும் நேரமும் கூடிவரும் போது அதை நடத்திக்கனும்னு ஆசைப்படறேன். இதுல என்ன தப்பு”.
பூபதி, “நீ சொல்றது எல்லாம் சரிதான்மா.., ஆனால் பெரியவளை வச்சுட்டு இவளுக்கு பார்த்தா, அவள் மனசொடிஞ்சிட மாட்டாளா..?”
“நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க…? நாம அவளுக்குன்னுதான பார்த்தோம். அவள் வரலை யே. என்ன காரணனும் தெரியலை. இதுவரைக்கும் ஒரு போன்கூட பண்ணி சொல்லல. இந்த நல்ல சம்மந்தத்தை மிஸ் பண்ண விரும்பாம குழலிக்கு பார்ப்போம்”.
“அதுவும் மாப்பிள்ளை வீட்டில வந்திருக்கவங்க கிட்ட உண்மையைச் சொல்லி. அவங்களுக்கு விருப்பமிருந்தா பார்க்கட்டும், இல்லைனா அமுதினியை பார்க்க விருப்பம் இருந்தா இன்னொரு நாள் கூட வரட்டும்”.
பூபதி, “குழலியை பார்த்து அவங்க சம்மதம்னு சொல்லிட்டா…” என்றார் கேள்வியாக.
“எல்லாம் ஒத்து வந்தா, அதுக்கு அப்புறம் ஆண்டவன் விட்ட வழி…” என்று சென்று விட்டார் சாரதா.
பூபதிக்கு நன்றாகத் தெரியும், குழலியைப் பார்த்தால் யாருக்கும் பிடிக்கும். அதில் மாற்று கருத்தேயில்லை. அதற்காக மற்ற இருவரும் அழகி இல்லை சுமார் ரகம் என கிடையாது.
பெண்கள் மூவரும் அழகிகளே. அப்படியே சாராதாவை போல. சாராதவும் நல்ல அழகு. அதில் கடைந்தெடுத்த சிற்பம் என கூறுவார்களே அதுபோல பூங்குழலி.
பூபதிக்கும் மனதில் நெருடல். பெரியவள் இருக்க குழலிக்கு பார்ப்பதை நினைத்து. சாரதா சொல்வது போல் செல்வ நிலையைப் பொறுத்து தானே எல்லாம். காலத்தே பயிர் செய் என்பது போல நல்ல நிலையில் இருக்கும் போதே பெண்களை கட்டிக் கொடுத்துவிட்டால் நிம்மதிதான்.
அதிலும் சிறியவள் இப்பொழுதுதான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். இன்னும் அவளை படிக்க வைத்து, அவளுக்கு கல்யாணம் என நினைக்கும் பொழுதே அயர்ச்சியாக இருந்தது.
அதற்குள் சாந்தாவும் பூபதியிடம் வந்து பேசியிருந்தார். பூபதி அவரிடமும் “எப்படிம்மா..? அமுதினியை வச்சுட்டு குழலிக்கு பார்க்க முடியும்” என மறுத்து பார்த்தார். இருந்தாலும் சாந்தா விடவில்லை அவரை.
ஒரு பக்கம் மனைவி சொல்வதும் சரியெனப்பட்டது. பெண் தானே பார்க்க வந்திருக்கிறார்கள். மற்றதெல்லாம் சரியாக ஒத்து வந்தால்தானே திருமணம். சரி பார்த்துக் கொள்ளலாம். முதலில் இவர்கள் பார்த்துவிட்டு செல்லட்டும் என முடிவு செய்து கொண்டார் பூபதி மனதில்.
இப்படிதான் சாரதாவையும் பூபதியையும் பேசி பேசியே சம்மதம் வாங்கியிருந்தார் சாந்தா. இதில் பூங்குழலியையும் விட்டு வைக்கவில்லை.
மாப்பிள்ளை வீட்டைப் பற்றியும், மாப்பிள்ளையைப் பற்றியும் பேசி பேசி ஒத்துக்கொள்ள வைத்திருந்தார். சாரதாவிடம் முடியாது என தீர்க்கமாக மறுத்தவளுக்கு, இவரிடம் வாயைத் திறக்க சந்தர்ப்பமே கொடுக்காமல், அவர்களின் அருமை பெருமைகளை கூறி சரியென தலையசைக்க வைத்துவிட்டார்.
சாந்தா பேச பேச குழலி அவர் அறியாமல் சாரதாவைத்தான் முறைத்திருந்தாள். பூபதிக்கு எல்லாம் அவரை மீறி நடப்பதாக ஒரு நிலை. என்ன நடக்குதோ…. நடக்கட்டும் என விட்டு விட்டார்.
மாப்பிள்ளை வீட்டினரிடமும் நிலைமையை பொறுமையாக எடுத்துச் சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டார் சாந்தா.
மாப்பிள்ளை வீட்டினருக்கு முதலில் அமுதினி வீட்டில் இல்லை என்ற விவரம் அறிந்தவுடன் கோவம் வந்தது. எதற்கு தேவையில்லாமல் தங்களை அலைகழிக்க வேண்டும் என ஆத்திரப்பட்டனர்.
அப்படிப்பட்டவர்களிடம் சாந்தாதான் பேசினார்.
அவர்களும் தீபக்கிற்கு மூன்று வருடமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் பெண் தகைந்தபாடில்லை. அமுதினிக்கு கூட முதலில் தீபக் ஒத்துக் கொள்ளவில்லை.
வேலைக்கு போகும் பெண் வேண்டாம் என மறுத்திருந்தான். அதுவும் மருத்துவதுறையில் பணிபுரிவதால் இரவு பகல் என மாறி மாறி வேலை பார்க்க நேரிடும். வேண்டவே வேண்டாம் என பிடிவாதம் பிடித்தான்.
வீட்டினர் அவனை பேசி சம்மதிக்க வைத்து அழைத்து வந்திருந்தனர். இன்னும் இரண்டு மாதம் போனால் இருபத்தி ஒன்பது முடிந்து முப்பது ஆரம்பமாகிறது. அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்னும் மனநிலையில் வந்தவர்களுக்கு அமுதினி வீட்டில் இல்லை என்பது அதிர்ச்சி மட்டும் இல்லை, அயர்ச்சியாகவும் இருந்தது.
இவனுக்கு எங்க பொண்ணுன்னு போனாலும் ஏதாவது தடை வந்துடுதே என ஆதங்கபட்டனர். ஆதலால் அவர்களுக்கும் வேறு வழியில்லாததால், அவர்கள் நிலையில் இருந்து இறங்கி வந்தனர்.
விஷயம் அறிந்து மறுத்த தீபக்கையும் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.
தேவையில்லாத நேர விரயம் என எண்ணி அமர்ந்திருந்தான் பெண்ணைப் பார்க்கும் வரை.
பூங்குழலியைப் பார்த்ததும் அவனுடைய முடிவையே மாற்றியிருந்தாள் அவள். ஆம், அவளது அசரடிக்கும் அழகால் ஈர்க்கப்பட்டு கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்னும் முடிவுக்கு வந்திருந்தான்.
error: Content is protected !!