Skip to content
Post Views: 6,921
அமுதினி மேலே கௌதமைத் தேடி அறைக்கு வந்தாள். பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டு கௌதம் அங்கிருப்பதை உணர்ந்தவள், இருப்பதா சென்றுவிடுவதா என தடுமாற்றத்தில் இருக்கும் போதே வந்திருந்தான் வெளியே.
கையில் துவாலையுடன் வெளியே வந்தவன் அமுதினி அங்கே நின்றிருப்பதைப் பார்த்தும் பார்க்காதது போல முகத்தைத் துடைத்து கொண்டே கண்ணாடியின் முன் சென்று நின்று தலை வாரினான்.
அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அய்யோ நிஜமகவே கோச்சுகிட்டு வெளியில கிளம்பறாங்களோ? முகம் கழுவி தலையெல்லாம் சீவறாங்க. இவங்க இப்ப வெளியில கிளம்பினா… ஏன் எதுக்குன்னு அப்பா அம்மா கேட்டாங்கனா என்ன பதில் சொல்வேன். நல்லா மாட்டுனேன் என முழித்து நின்றாள்.
இவளை ஓரக்கண்ணால் பார்த்தவன், என்னை வச்சு அக்காவும் தங்கச்சியும் காமடியாடி… பண்றீங்க. நல்லா முழி. நான் இப்ப வெளியே கிளம்பறேன் என மனதினிலேயே சிலிர்த்துக் கொண்டான்.
Advertisement
தலையை சீவி சட்டையை சரி பார்த்து நீவி விட்டவன், ஒன்றும் பேசாமல் கையில் இருந்த துவாலையை பால்கனியில் இருந்த கொடியில் காயப் போட்டு கையில் கூலரையும், கார் சாவியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் வெளியே கிளம்புவதைப் பார்த்த்தும் தடுப்பதற்காக வேகமாக அவனருகில் சென்றவள் பட்டென்று அவனது கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினாள்.
மனைவியின் செயலில் திகைத்தவன், எதையும் வெளிக் காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்துகொண்டு என்ன என பார்த்தான் இளகாமல்.
அவன் பார்வையில்தான், உணர்வுகளின் தாக்கத்தில் ஒரு வேகத்தில், யோசியாமல் தன்னை மறந்து கணவனது கையை பிடித்து நின்றிருப்பதை உணர்ந்தாள்.
Advertisement
நெளிந்துகொண்டே அவனை சமாதானப்படுத்த எண்ணி, “அ…து ஸா..ரி, கனி ஏதோ தெரியாம விளையாட்டுக்காக பேசிட்டா” என கெஞ்லாக பேசி நின்றாள்.
Advertisement
ஆனால் அவனிடமிருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவளும் அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் விழித்து நின்றாள்.
அவன் கையை விடாமல் இன்னும் கொஞ்சம் அவனுக்கு அருகில் சென்று நின்றவள் “நிஜமாவே… விளையாட்டுக்கு தான் பேசினோம். கிண்டலுக்காக… ஜாலியா பேசிட்டிருந்தோம்…” என்றாள் பாவமாக.
அவளது முகத்தைப் பார்த்து அவனுக்குள் எழுந்த முறுவலை உதட்டை மடித்து கடித்து மறைத்தவன், ஏதும் பேசாமல் இருக்க பெரும்பாடுபட்டான். தன்னை அவளுக்கு காட்டக்கூடாது என்பதற்காகவே கண்களில் கோவத்தை இன்னும் கூட்டி முறைப்பாக பார்த்தான்.
Advertisement
அவனின் பார்வையில் மேலும் பயந்தவள், தானாகவே உளற ஆரம்பித்தாள். “அ…து நான் அங்க… பம்ம…லுக்கு, அம்மா… வீட்டுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வரதில்லன்னு, கனி சொல்லி வருத்தப்பட்டாள். நான் எப்படி தனியா போக முடியும் நீங்க இல்லாம?” என்றாள்.
ஏன்? என புருவமுயர்த்தினான்
“கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்துதான வரனும்னு எதிர்பார்ப்பாங்க. குழலியும் அவள் புருஷனோட தான் வருவாள். தனியாலாம் வர அம்மா விரும்பமாட்டாங்க”.
“குழலி புருஷன் தீபக்கும் அவளை இதுவரைக்கும் அம்மா வீட்ல தங்கலாம் அலோவ் பண்ணதில்ல. கூட்டிட்டு வந்தாருன்னா அன்னைக்கே கையோட கூட்டிட்டு போயிடுவாரு. அதுல எங்க வீட்ல எல்லாருக்கும் வருத்தம்”.
“அவளையாவது அவங்க வீட்டுக்காரரு கூட்டிட்டு வந்து காமிச்சிட்டாவது கூட்டிட்டு போறாரு. நீங்க என்னை அதுக் கூட கூட்டிட்டு வரதில்லன்னு கனி குறைப் பட்டுட்டு இருந்தாள். எனக்கு போகனும்னு விருப்பம் இருந்தாலும், நீங்க இல்லாம தனியா போனேன்னா என்னமோ, ஏதோன்னு அம்மா பயப்படுவாங்க. அதனாலதான் நானும் வேலையிருக்கு வரமுடியலன்னு, காரணம் சொல்லி போகாம இருக்கேன்”.
அவளை பேசவிட்டு இவன் அமைதியாக நின்று பார்த்திருந்தான். ஆனால் அமுதினிக்கு கணவன் எதுவும் பேசாமல் நின்றிருப்பதில் மேலும் பயம் கூடியது.
கணவன் இன்னும் அவளை முறைப்பதாகவே தோன்றியது.
“ஓஹ்… இவங்கள பேசினத நினைச்சி முறைக்கிறாங்க போல… என தானாகவே ஊகித்தவள், “அது தீபக் அங்க குழலியோட வந்தாலும் யாருகிட்டயும் கல.. கலன்னு ஃப்ரியா பேசமாட்டாரு. அதா..ன் அதைதான் கனி சொல்லிட்டிருந்தாள். தீபக் மாமாவாது பேசதான் மாட்டேன்றாரு. உ…ன் புரு….ஷ..ன் சிரிக்கவே மாட்..டேன்றாரு..ன்னு….” என இழுத்தவள் அவனது பார்வையில் அப்படியே நிறுத்திருந்தாள்.
கேடி… சும்மா..தான் விளையாட்டுக்கு பேசி…னோம்னு என்…கிட்டயே தைரியமா எல்லாத்தையும் சொல்லிட்டிருக்கா இவளை என உறுத்து விழித்தான்.
இன்னும் என்ன எல்லாந்தான் ஒப்பிச்சிட்டனே என கெஞ்சலாக பார்த்து நின்றாள்.
உண்மையிலேயே அக்கா தங்கை என்ன பேசினார்கள் என முழுமையாக அவன் கேட்கவில்லை. கடைசியாக அமுதினி என் வீட்டுக்காரர என் முன்னாடியே கேலி பேசுவியா என கேட்கும் பொழுதுதான் வந்திருந்தான்.
அமுதினி பேசியதிலிருந்து ஏதோ தன்னைப் பற்றி பேசி கிண்டலடித்து சிரிக்கிறார்கள் என ஊகித்தவன் அமுதினியைப் பார்த்து முறைத்திருந்தான். அமுதினி இவன் முழுமையாகக் கேட்டுவிட்டுதான் கோவப்பட்டு கிளம்புகிறான் என எண்ணி அவன் கேளாமலே எல்லாவற்றையும் பயந்து உளறியிருந்தாள்.
அவளது பிடியிலுருந்து தனது கையை வேகமாக உதறியவன் நடந்து சென்று அறைக்கதவைத் தாழிட்டான். அய்யோ கோவப்பட்டு நம்மள அடிக்க போறாங்களா… என கலவரமாக பார்த்து நின்றாள்.
கதவைத் தாழிட்டு அவள் அருகே வந்தவன், அவளது கையைப் பிடித்து தன்னை நோக்கி வேகமாக இழுத்திருந்தான். ஒரே இழுவையில் அவன் மேலேயே வந்து மோதி நின்றவளின் நெஞ்சு பயத்தில் வேகமாக எகிறி குதித்துக் கொண்டிருந்ததை அவனாலும் உணர முடிந்தது.
அவனையே மலங்க மலங்க பார்த்துகொண்டு என்ன செய்வானோ என பீதியில் அலமலந்து நின்றிருந்தாள்.
“எப்படி… எப்படி…? இன்னொரு தரம் சொல்லு. எங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு கோமாளி மாதிரி தெரியுதா…? ம்ம்…?”
“அக்காவும் தங்கச்சியும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைங்களபத்தி கிண்டல் பேசி சிரிச்சிட்டு இருக்கீங்களா…?”
“ஓஹ்…… நாங்க உங்ககிட்ட பேசலன்னா… சிரிக்கலன்னா… கேலி பேசுவீங்களா…?” என அடிக்குரலில் மிரட்டினான்.
“இல்ல….ல்ல. அப்படிலாம் இல்ல…ங்க. அது சும்மா ஜாலியா… விளையாட்டுக்கு தான் பேசினோம். தப்பாலாம் பேசல” என்றாள் தொண்டையை அடைத்த அழுகையை கட்டுப்படுத்தி.
“ஆஹாங்… நீங்க ஜாலி பண்றதுக்கு, விளையாடுறதுக்கு, வீட்டு மாப்பிள்ளைங்கதான் கிடைச்சாங்களா…? என்ன சொன்னீங்க தீபக் கல கலன்னு பேச மாட்டேன்றாரு, நான் சிரிக்க மாட்டேன்றனா…?”
“அதையும் உங்க அப்பா அம்மா கிட்டயே கேட்போம். வா கீழ போவோம்” என நகர்ந்தவனை நகராமல் இரண்டு கையாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“அய்யோ வேணாம் வேணாம். அம்மாக்கிட்டலாம் வேணாங்க. ப்ளீஸ்…”
“ஏன் வேணாம்? அப்ப தீபக் கிட்ட போன் போட்டு கேட்கவா? ஏன் பேசமாட்டேன்றன்னு?”
அச்சோ காரியமே கெட்டுது என நினைத்தவள் வேண்டாம் என தலையாட்டினாள்.
“ப்ளீஸ்ங்க… தப்பான மீனிங்கல பேசல. சும்மா தமாசுக்கு பேசிட்டிருந்தோம். வேற எதுவும் இல்ல. தீபக்கிட்டலாம் பேச வேணாம். நான் வேணும்னா கனியவே உங்ககிட்ட ஸாரி கேட்க சொல்றேன். பிளீஸ்…ங்க” என்றாள் கண்கள் கலங்க கெஞ்சலுடன்.
அப்படி வாடி வழிக்கு. கிண்டலா பண்ணி சிரிக்கறீங்க என உள்ளுக்குள் எதையோ சாதித்த உணர்வு அவளது மிரண்ட தோரணையில்.
அவளைப் பார்க்கவும் பாவமாக இருந்ததால் அதற்கு மேலும் சீண்ட விரும்பாமல் போதும் விளையாட்டு என சடுதியில் தன் முகபாவனையை மாற்றிக் கொண்டவன், அவளை விட்டு விலகி நின்று போ என தலையசைத்தான்.
அவனது உடனடி முகமாற்றத்தில் குழம்பியவள் என்ன இவங்க ஒன்னும் சொல்லாமல் போன்னிட்டாங்க. திட்டுவாங்க. அடிப்பாங்கன்னு நினைச்சா ஒன்னும் சொல்லலையே எனக் குழப்பமாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
அய்யோ ஒருவேளை அம்மாகிட்ட சொல்லிடுவாங்களோ என பயம் எழுந்தது.
அவளது முகமாற்றத்தை பார்வையிட்டவன், இன்னும் என்ன என்றான் கண்களால்… கேள்வியெழுப்பி?
“அ…து அம்..மா கிட்ட சொல்ல…மாட்…டீங்கதான…?” என திக்கிக்தடுமாறி கேட்டாள்.
அலட்சியமாக உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கியவன் நில்லாமல் சென்றுவிட்டான்.
அவனது உடல் மொழியில் அங்கேயே சமைந்து நின்றிருந்தவள், இப்ப இவங்க என்ன சொல்லிட்டு போறாங்க? சொல்லிடுவேன்றாங்களா? சொல்லமாட்டேன்னாங்களா? அச்சோ இவங்க பாட்டுக்கு வெளிய கிளம்பி போயிட்டாங்க என தலையில் கை வைத்துக் கொண்டவள், எல்லாம் இந்த கனியால வந்தது என்று சலித்துக் கொண்டே கீழே சென்றாள்.
பக்கி இப்படியா பண்ணேன், இப்படியா பண்ணேன்னு கேட்டுகிட்டே எல்லாத்தையும் பண்ணிடுச்சி என இன்னும் கோவத்துடன் கன்னத்தை அழுந்த துடைப்பதும் யாராவது வருகிறார்களா என பார்ப்பதுமாக இருந்தாள் கனிமொழி.
அக்கா தங்கை இருவரும் அவரவர் மனநிலையில் மூழ்கியபடியே சமையலை முடித்து எடுத்து வந்து எல்லாவற்றையும் டேபிளில் அடுக்கினர்.
அமுதினி சென்று எல்லோரையும் சாப்பிட அழைத்தும், மாப்பிள்ளை வரட்டும் மா… சேர்ந்து சாப்பிடறோம் என்றுவிட்டனர் சாரதாவும், பூபதியும்.
ம்க்கும், இவங்க எங்க போனாங்கனே தெரியலையே. இவங்களும் புரிஞ்சுக்காம, சாப்பிடக் கூப்பிட்டா அவர் வரட்டும்னு சொல்றாங்க என எதுவும் பேசமுடியாமல் தவித்துகொண்டிருந்தாள்.
அரவிந்தனிடம் வந்தவள் “அவருக்கு போன் பண்றீங்களா, சாப்பிட வரச் சொல்லி” என்றாள் தயக்கமாக.
“வந்துருவான் அண்ணி” என அவன் அசட்டையாக சொல்லியபடி உட்கார்ந்திருந்தான். அதற்கு மேல் எல்லோர் எதிரிலும் அவனை வற்புறுத்த முடியாது.
ஏன் நீயே போன் பண்ணி கூப்பிட வேண்டியது தான என கேட்பார்கள் என்று தயங்கி நின்றாள்.
அரைமணிநேரம் பொறுத்து பார்த்தவள், அதற்குமேல் காத்திருக்க முடியாமல் அறைக்கு சென்று போன் எடுத்து கணவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
கார் ஓட்டிக் கொண்டிருந்தவன், போனில் மனைவி அழைப்பதைப் பார்த்ததும் முகத்தில் குறும்பு மலர்ந்தது. போனை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.
“ஹலோ…”
…………..
அமுதினிக்கு அவனிடமிருந்து எந்த சத்தமும் வராததால் போனை எடுத்து லைன்ல இருக்கானா எனப் பார்த்து, மறுபடியும் “ஹலோ…”
“ஹ்ம்ம்….”
“அப்பா அம்மாலாம் உங்களுக்காக சாப்பிடாம வெயிட் பண்றாங்க, வீட்டுக்கு வர்றீங்களா…?”
“ம்ம்….”
அவன் சரி என சொல்லியதும், அதற்கு மேல் ஏதும் பேசாமல் போனை உடனடியாக கட் செய்துவிட்டாள். உடனே ஆசுவாசமான பெருமூச்சும். “ஹப்பா வரேன்னு சொல்லிட்டாங்க” என முனகிக்கொண்டே ஹாலுக்கு சென்றாள்.
இவள் கீழே இறங்கும் போதே கௌதம் வீட்டினுள் நுழைந்தான், கையில் ஐஸ்கிரீம் இருந்தது.
ஷ்யாமளா மகனிடம் ஐஸ்கிரீம் வாங்கிவரச் சொல்லியிருந்தார். இன்னும் வேற ஏதாவது வேண்டுமா என அமுதினியையும் கேட்க சொல்லியிருந்தார். அதற்காகதான் அவன் கிட்சனுக்கு வந்தது.
அப்பொழுதுதான் அமுதினியும் கனியும் பேசியதைக் கேட்டது. மனைவியின் முகத்தை பார்த்துகொண்டே வந்தவன், கையில் இருந்த ஐஸ்கிரீமைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான்.
“ஓ… ஐஸ்கிரீம் வாங்க போறதுக்குதான் போனாங்களா…?
நான் இவங்க கோச்சுட்டு போறாங்கன்னுல்ல பயந்துட்டேன் என நிம்மதியானாள்.
எல்லோரையும் சாப்பிட அழைத்து, உட்கார வைத்து பரிமாற ஆரம்பித்தாள். கனியும் அவளுடன் “நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன் க்கா…” என நின்றவளையும் பிடிவாதமாக “நீயும் இவங்களோடவே சாப்பிடு கனி” என அமர வைத்து பரிமாறினாள்.
அமுதினி வந்தவர்களுக்காக ஒரு விருந்தே தயார் செய்திருந்தாள். சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், வறுவல், ரசம், மோர், வடை, பாயாசம், அப்பளம், பச்சடி என அசத்தியிருந்தாள். மகளின் வீட்டில் அவள் கையால் திருப்தியாக உண்டு முடித்த பெற்றவர்கள், சந்தோஷமாகவே கிளம்பியிருந்தனர்.
இது பெண்ணுக்கு தலைப் பொங்கல் ஆதலால், சாரதாவும் பூபதியும் பொங்கலுக்கு முறையாக சீர் வைத்து பெண்ணையும் மாப்பிள்ளையையும் அவர்களது வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்து சென்றிருந்தனர்.
ஷ்யாமளா, “இங்கையும் பொங்கல் இருக்கு அண்ணி. அமுதினிக்கும் கௌதமுக்கும் தலைப் பொங்கல்தான. மருமகள் கையால பொங்கல் வைச்சி சாமி கும்பிடனும். வேணும்னா அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் அன்னைக்கு அங்க வர சொல்றேன்” என்றார்.
சாரதா, “அவங்கள மட்டும் இல்ல, உங்களையும், அரவிந்தன் தம்பியையும் சேர்த்துதான் கூப்பிடறேன் அண்ணி. நீங்களும் கண்டிப்பா வரனும்” என அழைப்பு விடுத்து சென்றிருந்தார்.
போகும்வரை கனியைப் நிமிர்ந்தும் பாராமல் பாராமுகமாக இருந்தான் அரவிந்தன். இவனைப் பார்ப்பதும் பெரியவர்கள் பேசுவதைக் கேட்பதுமாக இருந்தவளுக்கு அவன் பாராமுகம் என்னவோ செய்தது.
இப்ப எதுக்கு இப்படி சீன் போடறான்? ஒருவேளை கோச்சுக்கிட்டானோ என மனம் பிராண்டியது. இவன் பண்ண அலப்பறைக்கு நான்தான் கோச்சுக்கனும். இவன் ஏன் முறுக்கிட்டு இருக்கான்.
கிளம்பும்போதும் தன்னை பார்ப்பானா என திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றுவிட்டாள்.
ம்கூம் அவள் செல்லும் வரை, அந்த பக்கமே திரும்பாமல் தன்னை கட்டுப்படுத்த அவன்தான் திண்டாடி நின்றான்.
கனிமொழிக்கு இன்டர்ன்ஷிப் முடிந்து, மறுபடியும் காலேஜ் செல்ல ஆரம்பித்திருந்தாள். அரவிந்தன் அன்று கனி வீட்டிற்கு வந்த போது பார்த்தது பேசியதுதான். அதன்பிறகு அவன் அவளை பார்க்கவோ பேசவோ முயற்சிக்கவில்லை.
இங்கிருந்து சென்ற சில நாட்கள் வரை அரவிந்தனைப் பற்றின நினைவுகள் கனிமொழிக்கு எப்பொழுதாவது எழும். காலப் போக்கில் படிப்பின் மும்முரத்தில் அதுவும் மறந்திருந்த்து. நாட்கள் வெகு வேகமாக பறந்தோடியது.
ரக்ஷி பழையபடி ரெக்கவர் ஆகிக் கொண்டிருந்தாள். உடல்நிலை சரியாகும் வரை வீட்டில் இருந்தவள், உடல் தேறி வந்ததும் காலேஜ் செல்ல ஆரம்பிருந்தாள். மனதளவிலும் கொஞ்சம் தெளிந்திருந்தாள்.
ஷ்யாமளா அவளுக்கு அவரது மருத்துவமனையிலேயே ஸ்பெஷலிஸ்ட் வைத்து கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதில் அவள் ஓரளவு சற்று தேறியிருந்தாள்.
ரக்ஷி முதலில் கௌன்சிலிங்கிற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்தவள், போக போக டாக்டருடன் சரியான ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தாள்.
அவளது பேச்சின் மூலமே அவளது பிரச்சினைகளை முழுமையாக அறிந்த மருத்துவர், அவளுக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்து, மனதளவிலும் அவளை தைரியப்படுத்தி இருந்தார். மூன்று சிட்டிங் போனதிலேயே தெளிந்திருந்தாள். புது தெம்பும், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் தைரியமும் ஓரளவு வந்திருந்தது.
அரவிந்தன் மீதான எண்ணத்தை அறவே ஒழித்துவிட்டாள் என சொல்லமுடியாது. அவனை நினையாமல் இருப்பதற்கு முயன்று கொண்டிருந்தாள். அவனைப் பற்றிய ஞாபகம் வரும்போது எல்லாம் முயன்று படிப்பில் ஆழ்ந்துவிடுவாள்.
அவளுக்கு கௌவுன்சிலிங் கொடுக்கும் டாக்டர் மூலம் விவரத்தை அறிந்த ஷ்யாமளா அதிர்ந்திருந்தார் செய்தியைக் கேட்டு. அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அரவிந்தனையும் கடிய முடியவில்லை அவரால்.
ரக்ஷி அன்று அரவிந்தனிடமும், அமுதினியிடமும் நடந்து கொண்டதை அறிந்து கொண்டவர் இருவருமே தன்னிடம் இதைப் பற்றி மறைத்திருந்ததை எண்ணி வருத்தமே. ஆனால் இதில் அவர்களையும் குறை சொல்ல முடியாதே.
வெளியில் சொல்லக்கூடியதாக இருந்தால் தன்னிடம் இருவருமே இதனை மறைத்திருக்கமாட்டார்கள் என நினைத்தவர், இதனை அவரும் வெளியே பகிர விரும்பவில்லை. பெற்றவர்களுக்கு மகளின் செயலுக்கான காரணத்தை சொல்லியே ஆக வேண்டிய அவசியத்தால் ரக்ஷியின் பெற்றோருக்கு அவளைப்பற்றி முழுமையாக தெரிவித்திருந்தார்.
ஷ்யாமளா கூறியதைக் கேட்டதும் அரவிந்தனின் மீது ஆத்திரமும் கோவமும் வந்தது ரக்ஷியைப் பெற்றவர்களுக்கு. இவன் வேண்டாம் என உதாசீனப்படுத்துமளவுக்கு தங்கள் மகள் குறைந்துவிட்டாளா? என ஆத்திரப்பட்டனர்.
அப்படியென்ன அந்த கனிமொழி என் மகளை விட உயர்வு. அவளைவிட என் மகள் தரம் தாழ்ந்து விட்டாளா? இவனிடம் வாழ்க்கைக் கேட்டு பிச்சை எடுக்குமளவு என கோவம் கண்ணை மறைத்தது அவர்களுக்கு.
நிதானமாக யோசிக்கும் போதுதான் அவர்களுக்கும் புரிந்தது. பாசம் அன்பு எல்லாம் இருந்தாலும், அவனுக்கு விருப்பம் இல்லாதபோது கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைக்க முடியாதே என..
கட்டாயத்தில், வற்புறுத்தலில் விருப்பமின்றி ஆரம்பிக்கும் வாழ்க்கை எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும். இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அது பிரிவில் முடிந்தால், இன்னும் வாழ்க்கையில் சிக்கல் அதிகமாகும். அதற்கு ஆரம்பத்திலேயே பிடித்தமின்மையை உணர்ந்து அவரவர் வழியை தேர்ந்தெடுத்து வாழ்வதே சிறப்பு எனப் புரிந்து கொண்டனர்.
அதுவும் இன்னொரு பொண்ணை விரும்புகிறேன், என்பவனை இழுத்து வைக்க அவர்களுக்கும் எண்ணம் இல்லை. ரக்ஷி கோவத்தில் அமுதினியை பேசியதை எல்லாம் அவர்களிடம் ஷ்யாமளா சொல்லவில்லை. ஏற்கனவே மகளை நினைத்து வருத்தத்தில் இருப்பவர்களுக்கு இதையும் சொல்லி மேலும் வற்புறுத்த வேண்டாம் என விட்டிருந்தார்.
ரக்ஷியிடம் இதைப் பற்றி ஏதும் கேட்க கூடாது, இது அவளை மேன்மேலும் சங்கடப்படுத்தும், நானும் இது சம்பந்தமாக அவளிடம் ஏதும் பேசபோவதில்லை. எனக்கு இதெல்லாம் தெரியும் என்பது மாதிரியே காட்டிக்கொள்ளப் போவதில்லை,
ஆதலால் நீங்களும் உணர்ச்சி வசத்தில், உங்களை மறந்து கூட ஏதும் பேசவோ, கேட்கவோ கூடாது என உறுதி வாங்கிய பிறகே அவர்களிடம் உண்மையை சொல்லியிருந்தார்.
ரக்ஷியின் தந்தை அவளுக்கு மறைமுகமாக வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார். கீதாவின் மறுப்பு எல்லாம் அவர் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. இதில் நீ தலையிடாதே என் மகளுக்கு என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என தீர்க்கமாக கூறிவிட்டார்.
தொடரும்.
error: Content is protected !!