Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 9

வீட்டுக்கு வந்தவர்களை இன்முகமாகவே வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர் சாரதாவும் பூபதியும்.  அமுதினியை நிமிர்ந்து பார்த்த ஷ்யாமளா சிரித்த முகமாகவே “நான் இத முதல்ல நியாயமா அனிகிட்ட தான் பேசி இருக்கனும்” என்றார் பூடகமாக.

சாரதாவும் பூபதியும் என்ன என யோசித்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அமுதினியையே சிரித்த முகமாக பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமளா “அவளோட விருப்பம் தெரிஞ்சதுக்கு அப்புறமா உங்ககிட்ட வந்து பேசியிருக்கனும்.  அதுதான் முறையும் கூட.  ஆனால் எனக்கு அதுக்கெல்லாம் பொறுமையில்ல.  அதான் நேரா வந்துட்டேன்” என்றார் இன்னும் பீடிகையுடன்.

என்ன இவங்க என்னன்னவோ பேசறாங்க.  ஒருவேளை அமுதினிக்கு எதுவும் தெரியுமோ என அமுதினியின் முகத்தை பார்த்தனர்.



Advertisement

அவளுக்கும் ஷ்யாமளா சொல்வது எதுவும் புரியாமல்தான் நின்றிருந்தாள்.

எல்லோர் முகத்திலும் தெரிந்த குழப்பத்தை பார்த்த ஷ்யாமளாவுக்கு, மேலும் அவர்களை குழப்ப விருப்பமில்லை.   அமுதினியை பார்த்து முறுவலித்தவர், “நல்ல விஷயமாதான் பேச வந்திருக்கேன்.  அனிய என் பெரிய பையன் கௌதமுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கேன்” என்றார் எல்லோரையும் பார்த்து புன்னகையுடன்.

அமுதினி அதிர்ச்சியாகி அப்படியே சமைந்து நின்றுவிட்டாள்.  இதை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.

Advertisement

ஷ்யாமளா சொன்னதும் எல்லோரும் அமுதினியைத்தான் திரும்பி பார்த்தனர்.  அவளின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை வைத்தே அவளுக்கும் இப்பொழுதுதான் விஷயம் தெரியும் என்பதை புரிந்து கொண்டனர்.

Advertisement

அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும், ஷ்யாமளாவின் வசதி வாய்ப்புகளை பார்த்து கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

ஆனால் ஷ்யாமளாவுக்கு எந்த தயக்கமும் இல்லை.  அவரது  குடும்பத்தை பற்றின பொதுவான விஷயங்களை பூபதியிடமும் சாரதாவிடமும் பேச ஆரம்பித்தார்.

கணவருக்கும் தனக்குமான பிணக்குகளைபற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவர்களுக்குள் விவாகரத்தானதை பற்றி சொல்லியிருந்தார்.

Advertisement

அமுதினிக்கே இது புதிய செய்தி.  இத்தனை நாள் அரசல் புரசலாக வேலை செய்யும் இடத்தில் மற்றவர்கள் பேசுவதை கேட்டிருந்தாலும், அவள் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை.  இன்று ஷ்யாமளா சொல்லவும்தான் அவளுக்கே தெரியவந்தது.

சாரதாவுக்கோ ஷ்யாமளா பேசிய எதுவும் மூளையில் பதியவே இல்லை.  வசதியான குடும்பம்.  பையன் டாக்டர் வேற.  இவங்க அளவுக்கு நம்மளால செய்ய முடியுமா?  சரிவருமா…? என அவர் மனம் அதிலேயே சுழன்று கொண்டிருந்தது.

நம்மளவிட இன்னும் நல்ல வசதியான இடத்திலேயே பொண்ணு பார்க்கலாமே?   அமுதினியை கேட்டு வந்திருக்காங்க.  ஒருவேளை அவங்க பையனுக்கு அமுதினியை பிடிச்சு கேட்க வந்திருப்பாங்களோ?  அப்படின்னா பையன் ஏன் இவங்களோட வரல?  என்்ற கேள்விகளும் அவர் மண்டையை குடைந்து கொண்டிருந்தது.

இருந்தாலும் வெளியில் எதையும் நேரடியாக கேட்க முடியாமல் தனது குழப்பத்தை மறைத்துகொண்டு ஷ்யாமளா பேசுவதில் கவனம் பதிக்க முயன்று கொண்டிருந்தார்.

சாரதாவின் சந்தேகங்ளுக்கு எல்லாம் பதில் சொல்வது போல் ஷ்யாமளாவே, “என் பையனுக்கு வெளிய நிறைய பொண்ணு பார்த்தோம்.  ஒன்னும் சரியா அமையலை.  அதுமட்டுமில்ல எனக்கு அமுதினியை ரொம்ப நல்லா தெரியும்.  அவளை எனக்கு பிடிச்சிருந்ததால தான் பொண்ணு கேட்டு வந்திருக்கேன்” என்றார்.

“என் பையனும் அனியும் ஏற்கனவே ஒருத்தரை ஒருத்தர் பார்த்திருக்கறதால தனியா பொண்ணு பார்க்கனும்ற அவசியம் இல்லைன்னு தான், நானே நேரடியா உங்களைப் பார்த்து பேசலாம்னு வந்தேன்”.

“நீங்களும் என் பையனை உங்க பொண்ணு கல்யாணத்துல பார்த்திருக்கீங்க.  அதனால இதுல உங்களுக்கு எந்த ஆட்சபணையும் இருக்காதுன்னு நினைக்கறேன்” என பூபதி சாரதாவை பார்த்தார்.

அவர்களுக்கும் என்ன சொல்வது என தெரியவில்லை.  திடுமென ஷ்யாமளா இப்படி வந்து உட்கார்ந்து சம்மந்தம் பேசுவார் என கனவா கண்டார்கள்.  இருந்தாலும் கௌதம் நேரில் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என அவர்களால் நினையாமல் இருக்க முடியவில்லை.

“நீங்க என்ன சொல்றீங்க..?” என ஷ்யாமளா கேட்டதும் ஒன்றும் மறுத்து கூற முடியாமல் தலையசைத்தனர்.  அமுதினிக்கு மாப்பிள்ளையை நன்கு தெரியும்.  அவளுக்கு பிடித்திருந்தால் தங்களுக்கு ஓகே என்ற மனப்பான்மையில் பெற்றோர் இருந்தனர்.

அதுவுமில்லாமல் இவ்வளவு பெரிய சம்மந்தம்.  வீடு தேடி வந்து பேசும் போது மறுக்க முடியுமா?  கௌதமையும் பூங்கொடியின் திருமணத்தில் வைத்து பார்த்திருக்கிறார்கள் அல்லவா? மாப்பிள்ளைக்கு நல்ல வேலை.  பார்க்க அழகாக கம்பீரமாக இருக்கிறான், வசதி இருக்கிறது.  அதுமட்டுமா… ஷ்யாமளாவைபற்றி அனி நிறைய சொல்ல கேட்டிருக்கிறார்கள்.  அவரது குணம், பெருந்தன்மை, படிப்பு, வசதி என அவரைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறார்கள்.

இதை விட வேறு என்ன வேண்டும்?  இவர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத சம்மந்தம் இல்லையா?  அமுதினி இத்தனை வருஷம் அங்கே வேலை பார்த்திருக்கிறாள்.  அவளைப் பற்றி நன்கு தெரியப்போய்தானே, வீடு தேடி வந்து சம்மந்தம் பேசுகிறார்கள் என சந்தோஷமாக ஒத்துக் கொண்டனர்.

ஷ்யாமளாவே அமுதினியை அருகில் அழைத்து உட்கார வைத்து அவளுடைய சம்மதத்தைக் கேட்டார்.

“என் பையன் கௌதம கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா…?” என கேட்டதும் அவளுக்கு என்ன சொல்வது என தெரியாமல் சாரதாவை நிமிர்ந்து பார்த்தாள்.  அவளுக்கு உண்மையிலேயே என்ன சொல்வது என தெரியவில்லை.

சாதாரணமாக கௌதம் பேசி பழகியிருந்தால்கூட அவனைப்பற்றி ஏதாவது தெரிந்திருக்கும்.  அவனைப்பற்றி எதுவும் தெரியாத நிலையில் என்ன சொல்ல முடியும்?

திருமணத்தை பொறுத்த வரை பெற்றோரின் விருப்பம்தான் தன்னுடையது என்ற முடிவில் இருக்கிறாள்.

மகள் பார்வையில் தெரிந்த கேள்வியை உணர்ந்த சாரதா கணவரை திரும்பி பார்த்தார்.

ஷ்யாமளா அமுதினியை நேரடியாக சம்மதம் கேட்டாலும், பெற்றவர்களின் விருப்பத்தை கேட்டு நிற்கும் மகளை எண்ணி சாராதாவுக்கு உள்ளுக்குள் பூரிப்பு.

பூபதிக்கும் பூரண சம்மதம்.  சந்தோஷமாகவே மகளைப் பார்த்தார்.  அவரது முகத்தில் தெரிந்த ஒப்புதலில் அமுதினி ஷ்யாமளாவிடம் புன்னகையுடனே சம்மதம் என்றிருந்தாள் வாய் வார்த்தையாக.

“எனக்கு இந்த ஜாதகம், இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல.  உங்களுக்கு வேணும்னா நீங்க பாருங்க. எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல” என்றார் ஷ்யாமளா.

சாரதா பூபதி தம்பதியருக்கும் வேண்டாம் என்ன எண்ணம்தான்.  அவர்கள் குல தெய்வம் கோயிலுக்கு போய் வந்த சில நாட்களிலேயே திருமணம் கூடி வந்திருந்ததால், இதை தெய்வ சங்கல்பமாகவே நினைத்து ஜாதகம் பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு, அதை ஷ்யாமளாவுக்கும் தெரியப்படுத்தினர்.

“ரொம்ப சந்தோஷம்.  கல்யாணத்த சிம்பிளா கோவில்ல வச்சிட்டு, ரிசப்ஷனை கிராண்டா பண்ணலாம்றது என்னோட அபிப்பிராயம்.  நீங்க…? உங்களுக்கு இதுல ஆட்சேபணை இருக்கா…?” என்றார் ஷ்யாமளா.

சாரதாவிடம் கலந்து பேசிய பூபதி “எங்க சைடுல மாப்பிள்ளை வீட்லதான் கல்யாணம் பண்ணுவாங்க.  அதனால உங்க முறைப்படி நீங்க பண்ணுங்க” என்று விட்டார்.

“சந்தோஷங்க.  அதுக்காக நாம செய்ய வேண்டிய முறையில எதுவும் குறைச்சுக்க வேணாம்.  உங்க ஆசைப்படி அனிக்கு என்ன செய்யனும்னு விருப்பப்படறீங்களோ… அதையும் சொல்லுங்க.  பண்ணிக்கலாம்” என இருவீட்டாரின் முறைகளைப் பற்றியும் அவர்களது பழக்க வழக்கங்களைப் பற்றியும் பேசி முடிவெடுத்தனர்.

ஷ்யாமளா தான் வாங்கி வந்திருந்த பூ, பழம், இனிப்பு எல்லாவற்றையும் தட்டில் வைத்து கொடுத்தவர் அதிலிருந்த பூவை மட்டும் எடுத்து அமுதினியின் தலையில் வைத்து சம்மந்தத்தை உறுதி செய்து கொண்டார்.

புறப்படத் தயாரான ஷ்யாமளாவையும் அரவிந்தையும் “சம்மந்தம் பேசிட்டு கை நனைக்காம போறதா?  இருங்க சமைச்சிடறேன்.  சாப்ட்டுதான் கிளம்பனும்” என பிடிவாதமாக சாரதா அவர்களை தங்க வைத்திருந்தார்.

“இருக்கட்டும்ங்க.  நெக்ஸ்ட் டைம் வரும்போது, சாப்பிட்டா போச்சு.  திடீர்னுதான வந்தோம்.  எதுக்கு…?  உங்களுக்கும் கஷ்டம்”.

“அதெல்லாம் ஒன்னுமில்லங்க.  அரைமணி நேரம் ரெடி பண்ணிடுவேன்.  இருங்க…” என சாரதா ஷ்யாமளா எதுவும் மறுத்து பேச கூட வாய்ப்பளிக்காமல் கிட்சனுக்குள் விரைந்துவிட்டார்.

சாரதாவுக்கு இருந்த மகிழ்ச்சியில், அடுத்த ஒரு மணிநேரத்தில் ஆரவாரமாக ஒரு விருந்தையே ரெடி செய்திருந்தார்.  அமுதினியும் கனிமொழியும் கூடவே நின்று அவருக்கு சமைப்பதற்கு உதவியிருந்ததால் விரைவாகவே சமைத்திருந்தார்.

அரவிந்தன் சம்மந்தம் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், அதன்பின் கல்யாணம் எப்படி செய்வது?  எங்கு வைத்துக் கொள்வது? என ஷ்யாமளாவும் பூபதியும் பேச ஆரம்பிக்கவும் பேச்சில் அவனும் கலந்து கொண்டான்.

அவ்வப்போது சாரதாவிடமும் கலந்து பேசி எப்படி செய்வது என  முடிவெடுத்தனர்.  அங்கிருந்தே கௌதமுக்கும் போனில் அழைத்து அவனது விருப்பத்தையும் கேட்க தவறவில்லை.

ஷ்யாமளா திருமணத்தை தள்ளி போட வேண்டாம்.  முடிந்தளவு தாமதமில்லாமல் முடித்துவிடலாம் என விருப்பப்பட்டதால் பூபதியும் சாரதாவும் கூட அதற்கு சம்மதித்திருந்தனர்.  அவர்களுக்கும் அதுதானே எண்ணம்.  பெண்ணுக்கு விரைவில் திருமணம்  நடத்தி பார்க்கவேண்டும் என.  ஆதலால் மகிழ்ச்சியாகவே சம்மதம் அளித்தனர்.

நாள் குறிப்பது, பத்திரிக்கை அடிப்பது, ஜவளி எடுப்பது என எல்லாவற்றையும் சாரதாவுடனும் பூபதியுடனும் கலந்து பேசி முடிவேடுத்திருந்தனர்.  பேசி முடித்ததும் இவர்களை சாரதா சாப்பிட அழைத்துச் சென்று அமரவைத்தார்.

அங்கிருந்த அத்தனை அயிட்டங்களைப் பார்த்ததும் ஏன் இவ்வளவு என அவரைப் பார்த்த ஷ்யாமளா, “நீங்க ஒரே ஆளா இத்தனை செஞ்சு சிரமப்படனுமா…?” என்றார்.

சாரதா, “இதுலென்னங்க கஷ்டம்.  பொண்ணுங்க வேற கூட இருந்தாங்க, ஹெல்ப் பண்ண.  நல்ல விஷயம் பேசி முடிச்சிருக்கோம். மறுக்காம சாப்பிடனும்” என அன்புக் கட்டளையிட்டு சந்தோஷமாக பார்த்து பார்த்து உயசரித்தார்.

ஷ்யாமளா “நீங்களும் வாங்க.  எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்துக்கலாம்” என சாரதாவையும் சாப்பிட அழைத்தார்.

“இருக்கட்டுங்க.  நீங்க சாப்பிடுங்க” என்ற சாரதா பூபதியை அவர்களுடன் உட்கார வைத்தார்.

ஷ்யாமளா அமுதினியையும் கனிமொழியையும் தன்னுடன் சாப்பிட உட்காருமாறு கேட்டதால், சாரதா அவர்களையும் சாப்பிட அமர வைத்து பரிமாறினார்.

சந்தோஷ ஆர்ப்பரிப்புடன் கல கல என பேசிக் கொண்டே சாப்பிட்டவர்கள், அதே மன நிறைவுடன் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!