Skip to content
Post Views: 6,698
ஷ்யாமளா சென்று சாமிக்கு பிரசாதமாக செய்து வைத்திருந்த சர்க்கரைப் பொங்கலையும், சுண்டலையும் எடுத்து வந்து வைத்து, பூஜைக்கு தயார் செய்ய ஆரம்பித்தார்.
கனிமொழியும் அமுதினியும் ஓரமாக நின்று ஷ்யாமளா செய்வதை எல்லாம் அமைதியாக பார்த்திருந்தனர்.
ஷ்யாமளா எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு ரக்ஷி வருவாளா என நின்று பார்த்தார். “அவளைப் பத்திதான் தெரியுமில்ல அண்ணி. பேச ஆரம்பிச்சான்னா சீக்கிரம் வரமாட்டா. நீங்க ஆரம்பிங்க” என்ற கீதா அமுதினி, கனிமொழியையும் பக்கத்தில் அழைத்து நிறுத்திக் கொண்டார்.
“நாங்க எல்லாம் சின்ன பிள்ளைகளா இருந்தப்போ கொலு வச்சா, உட்கார்ந்து நிறைய பாட்டு படிப்போம். இப்ப இருக்கற பிள்ளைங்களுக்கு இரண்டு வரி சொல்றதுக்கு கூட நேரமில்லன்னு ஓடிடறாங்க” என்று அங்கலாய்த்தார் கீதா.
Advertisement
கீதா சொன்னதற்கு அமுதினியும் கனிமொழியும் அமைதியாக கீதாவைப் பார்த்து புன்னகைத்தனர். கீதா அவர்களைப் பார்த்து, “உங்களுக்குத் தெரிஞ்சா ஏதாவது பாடுங்களேன், நல்லாயிருக்கும்” என்றார்.
ஷ்யாமளாவும் “பாடுங்களேன்” என சொன்னதை அடுத்து மறுக்க முடியாமல் தலையசைத்த அமுதினி, கனியைத் திரும்பி பார்த்தாள். அவளும் இவளைப் புரிந்தவள் போல ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
கனியும், அமுதினியும் “குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா” என ஸ்ருதி பிசகாமல் ஒன்று போல சேர்ந்து பாட ஆரம்பித்தனர்.
Advertisement
இருவரது குரலும் ஒன்று சேர்ந்து கேட்க அமுத கானம் போல இருந்தது. சரியான உச்சரிப்பும், ஸ்ருதி பிசகாமலும் பாடியதால் கேட்கவே பக்தி மயமாக இருந்தது.
Advertisement
ஷ்யாமளாவும் கீதாவும் இவர்கள் பாடுவதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமுதினி, பூங்குழலி, கனிமொழி மூவருமே முறையாக சங்கீதம் பயின்றவர்கள்.
சாரதாவுக்கு சங்கீதம் என்றால் இஷ்டம். அவர் சிறு வயதில் பாட்டு கற்றுக் கொள்ள எண்ணி அது நிறைவேறாததில் மிகுந்த ஏக்கம். அதற்கு ஈடாக மகள்களை சங்கீதம் கற்றுக் கொள்ள வைத்திருந்தார்.
Advertisement
அந்த பாடலைப் பாடி முடித்து, அடுத்து ஶ்ரீ மகாலட்சுமியின் கனகதாரா ஸ்தோத்ரமும் பாடினார்கள்.
ஷ்யாமளா கீதா இருவருக்கும் அத்தனை நிறைவாக இருந்தது. கேட்டதும் எந்த பிகுவும் செய்யாமல் அவர்கள் பாடியதை நினைத்து கீதாவுக்கு கூட அவர்கள் மீது நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது.
இவர்கள் பாட ஆரம்பித்ததுமே ரக்ஷி, அரவிந்த், கௌதம் என எல்லோரும் கீழே வந்திருந்தனர்.
கௌதமிற்கு பூஜையில் எல்லாம் பெரிதாக நாட்டமில்லை. ஆதலால் இதில் எல்லாம் கலந்து கொள்ளமாட்டான். இன்றும் இவர்கள் வந்தது எல்லாம் தெரியாது. தனது அறையில் இருந்தவனை, இவர்களின் குரல்தான் இழுத்து வந்திருந்தது.
யாருடா நம்ம வீட்ல பாடறது. வாய்ஸ் நல்லாயிருக்கே என இறங்கி வந்தவனுக்கு அமுதினியையும் கனிமொழியையும் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான்.
அவர்களை அங்கே அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அவனது பார்வையிலேயே தெரிந்தது.
அரவிந்துக்கு இவர்களை யார் என்று தெரியாததால் பாடி முடிக்கும் வரை அப்படியே நின்று பார்த்திருந்தான்.
ஷ்யாமளா கற்பூர ஆரத்தி காட்டவும் அரவிந்தும் ரக்ஷியும் வந்து இவர்களோடு சேர்ந்து நின்று சாமி கும்பிட்டனர். கௌதம் மட்டும் மாடிப் படியின் கீழேயே நின்றிருந்தான்.
சாமி கும்பிட்டு முடித்ததும் பெண்களுக்கு எல்லாம் வெற்றிலைப் பாக்கு வைத்து தாம்பூலம் கொடுத்த ஷ்யாமளா, கூடவே சாமிக்கு படைத்த பிரசாதமான சர்க்கரைப் பொங்கல் சுண்டலையும் தொண்ணையில் வைத்து கொடுத்தார்.
இவர்களைப் பார்த்தவாறு மாடிப்படியின் கீழேயே நின்றிருந்த மகனையும் அழைத்து அவனுக்கும் பிரசாதம் கொடுத்தார். அமுதினியும், கனிமொழியும் பிரசாதத்தை சாப்பிட்டு முடித்து, ஷ்யாமளாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட தயாராகினர்.
ஷ்யாமளா அவர்களை வற்புறுத்தி டின்னர் சாப்பிட்டு செல்லாம் என தங்க வைத்துவிட்டார்.
பர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்திருக்க. அதுவும் இவ்வளவு நேரம் இருந்துட்டு சாப்பிடாம போவீங்களா… என வற்புறுத்தி அவர்களை சாப்பிடுவதற்காக அழைத்து சென்று உட்கார வைத்தார்.
கனி சாதாரணமாக இருந்தாள். ஆனால் அமுதினிக்குதான் கூச்சமாக இருந்தது,
இவ்வளவு நேரம் இருந்தது போல் இருக்க முடியவில்லை. கௌதமைப் பார்த்ததும் கிளம்புகிறேன் என்றவளை ஷ்யாமளா விடவில்லை, நேராக சாப்பிட அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.
அனைவரையும் உட்கார வைத்து ஷ்யாமளாவே பரிமாறினார். கீதாவும் ரக்ஷியும் கூட அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
கனிமொழி கீதா ரக்ஷியுடன் இயல்பாக பேசியது போல், அமுதினிக்கு பேச வரவில்லை.
கேட்கும் கேள்விகளுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகளில் மட்டும் பதில் கூறினாள். அரவிந்துக்கு கனிமொழியையும் அவளது இயல்பான பேச்சையும் பிடித்திருந்தது.
கனிமொழி எந்த தயக்கமும் இல்லாமல் எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்த பாங்கு அவனை கவர்ந்தது எனகூட சொல்லாம்.
கனிமொழியின் உருவத்தையும் பேச்சையும் மனதிலேயே ஒத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த். பார்க்க பெரிய பொண்ணாட்டம் இருக்கா, ஆனால் பேச்சு மட்டும் ஏதோ ஸ்கூல் படிக்கிற பொண்ணுமாதிரியிருக்கு என பார்த்திருந்தான்.
அவனுக்கு தெரியாதே. அவள் ஸ்கூல்தான் படிக்கிறாள் என. அவள் உருவத்தை வைத்து தவறாக கணித்திருந்தான்போல.
கௌதம் அமைதியாக அவர்களை பார்வையிட்டுக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்ததும் அரவிந்தைப் பார்த்த ஷ்யாமளா “கொஞ்சம் வெளியில் போகனும். உனக்கு ஏதாவது வேலை இருக்கா அரவிந்த்? என்றார்.
“இப்ப முடியாதும்மா எனக்கு வேலையிருக்கு” என்று விட்டான் அரவிந்த்.
“ஓகே. கௌதம் இவங்களை கொஞ்சம் ட்ராப் பண்ணிடறயா…?”
ஒன்றும் சொல்லாமல் ஷ்யாமளாவையே சில நொடிகள் பார்த்தவன், மறுத்து பேசாமல் சரி என தலையசைத்தான்.
அர்விந்துக்கு அச்சோ இதுக்குதான் அம்மா கேட்டாங்களா…? முன்னாடியே சொல்லியிருக்க கூடாதா…? நானே ட்ராப் பண்ணியிருப்பனே என பார்த்திருந்தான்.
பின் இவ்வளவு நேரம் கனியின் வாயையும் அவள் பேசியதையும் கேட்டு கொண்டிருந்தவனுக்கு, அதைக் கெடுப்பது போல ஷ்யாமளா திடுமென வெளியே கொஞ்சம் கிளம்பனும் என்றவுடன் யோசிக்காது முடியாது என்றிருந்தான்.
இப்பொழுது ஷ்யாமளாவிடம் மறுபடியும் நான் கொண்டு போய் விடுகிறேன் என கேட்க லஜ்ஜையாக இருந்தது. அதற்குள் அமுதினி “இல்ல மேம். நாங்க கேப் புக் பண்ணி போயிடறோம், அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றாள் அவசரமாக.
பட்டென அவளைத் திரும்பிப் பார்த்த கௌதம், ஏதும் பேசாமல் கார் கீயை எடுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டான்.
அமுதினிக்கு இப்படி கௌதமுடன் ஒன்றாக காரில் செல்ல தயக்கமாக இருந்தது. வந்ததிலிருந்து வா என்ற அழைப்போ, சின்ன முறுவலலோ, தெரிந்தவள் என்றதற்கான பார்வைக் கூட இல்லை அவனிடம். அதுவே அவளை அவனிடமிருந்து அந்நியமாக்கியிருந்தது. மேலும் இதில் அவனுடன் காரில் வீட்டுக்கு செல்ல வேண்டுமா என தயக்கமாக இருந்தது அவளுக்குள்.
அய்யோ இந்த மேம் சொல்ல சொல்ல கேட்காம என சலித்துக்கொண்டே, தயக்கத்துடன் சென்றாள் அவன் பின்னே. கார் லாக்கை விடுவித்து கௌதம் முன்னால் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததவன், இவர்கள் இருவரும் அங்கிருந்தவர்களுடன் சொல்லிக் கொண்டு காரின் பின்சீட்டில் அமர்ந்ததும் காரைக் கிளப்பினான்.
அமுதினியின் வீடு இருக்கும் இடம் பம்மல்.
ஷ்யாமளாவின் வீடும் தாம்பரத்தில் தான் இருந்தது. நன்றாக இருட்டி இருந்ததால் இவர்களை தனியாக அனுப்ப யோசித்து கௌதமுடன் அனுப்பியிருந்தார் ஷ்யாமளா.
பம்மல் வந்ததும் கனிமொழிதான் அவனுக்கு அவர்களது வீட்டின் அட்ரஸ் சொல்லிக் கொண்டிருந்தாள். சரி என தலையசைத்து கொண்டவன், அமைதியாக அவள் சொன்ன முகவரியில் கொண்டு வந்து காரை நிப்பாட்டினான்.
காரிலிருந்து இறங்கிய அமுதினிக்கு தயக்கமாக இருந்தது. அவனை உள்ளே அழைப்பதா என. ஆனால் அதற்கெல்லாம் அவன் எங்கே அங்கே இருந்தான்.
கனிமொழி அவன் புறம் சென்று தேங்க்ஸ் ஸார் என சொன்ன உடனே எதுவும் பேசாமல் ஒரு தலையசைப்புடன் சென்றிருந்தான்.
அமுதினிக்கு ஏமாற்றமாக இருந்தது, இப்படி அவன் ஒன்றும் பேசாமல் சென்றது. கோவமும் வந்தது மனதில். பெரிய இவன்…? பேசமாட்டானா வாய திறந்து. திமிரு. அப்படி என்ன இவன் பெரிய ஆள்…? இவன் டாக்டரா இருந்தா இவனோட. மரியாதை தெரியாதவன். தெரிஞ்சவள்னு ஒரு பார்வை. அட்லீஸ்ட் ஒரு ஸ்மைல். மண்டை முழுக்க தலைக்கனம் பிடிச்சவன் என விடாமல் மனதில் கறுவியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவன் பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? அது ஏன் தன்னை இத்தனை தூரம் பாதிக்கிறது? தான் என்ன அவனிடம் எதிர்பார்க்கிறோம் என எதனையும் அவள் சிந்திக்கவில்லை.
இவர்கள் காரில் இருந்து இறங்கி வந்ததைப் பார்த்த சாரதா யாருடன் வந்தீர்கள்? யார் அது என விசாரித்தார். கனிமொழி சாரதாவின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டே அவருடன் உட்கார்ந்து விட்டாள் ஹாலில்.
அமுதினி சாரதா கேட்ட எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக உள்ளே சென்று விட்டாள். ஏன் ஒன்னுமே பேசாம போறா என அமுதினியைப் பார்த்தவர், டையர்டா இருக்கா போல என அவராகவே நினைத்து கனியுடன் பேசிக் கொண்டிருந்தார்.
கனிக்கு வாய் ஓயவே இல்லை. அங்கு அவள் பார்த்தது, பேசியது என ஒன்று விடாமல் சாரதாவிடம் கதையளந்து கொண்டிருந்தாள்.
அமுதினி நினைத்தது போல கௌதம் திமிரானவனோ, மரியாதை தெரியாதவனோ இல்லை. அவனது இயல்பே அதுதான்.
படிக்கும் காலத்திலிருந்தே பெண்களிடம் அளவாகத்தான் பழகுவான். நண்பர்கள் கூட அவனுக்கு பெரிதும் ஆண் நண்பர்களே. காலேஜில் படிக்கும் காலத்தில் கூட, அவனுடன் படிக்கும் பெண்கள் அவர்களாகவே வந்து பேசினாலும் பழகினாலும் பார்வையிலேயே தள்ளி நிறுத்தி விடுவான்.
இவனைப் புரிந்தவர்கள் யாரும் இவனிடம் நெருங்கியதில்லை. வேலையிலும் தேவைக்கு மட்டுமே பேச்சு. இப்படி அவன் மனதில் பெண்கள் என்றாலே ஒரு பிடித்தமின்மை.
அது ஏன் என கேட்டால் அவனுக்கும் காரணம் தெரியாது. பெண்கள் என்றாலே ஒதுங்கிக் கொள்வான். வீட்டு நபர்களிடம்கூட அவன் அம்மாவைத் தவிர யாரிடமும் ஒட்டுதல் இல்லை.
இது எல்லாம் அவனது தந்தையினால்கூட இருக்கலாம்.
பெற்றோர்கள் பார்த்து முறைப்படிதான் தாமோதரனை ஷ்யாமளாவுக்கு திருமணம் செய்திருந்தனர்.
தாமோதரனும் மருத்துவரே. இருவரும் ஒரே துறையில் இருந்ததால் எந்த வேறுபாடும் இல்லை அவர்களுக்கிடையே. ஆரம்பத்தில் அவர்களது இல்லறம் சுமூகமாகத் தான் சென்றது, எந்த இடையூறும் இல்லாமல்.
முதல் குழந்தை கௌதம் பிறக்கும் வரை தாமோதரனிடம் எந்த மாற்றமும் இல்லை. மனைவி குடும்பம் என நன்றாகவே சென்றது. அந்த சமயத்தில் ஷ்யாமளா அவரது சீனியர் வள்ளியம்மையிடம் ஜூனியராக ப்ராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்.
எல்லோரையும் போல் வீடு, குடும்பம், குழந்தை என அவரது வாழ்க்கையும் சுவாரஸ்யமாகவே சென்றது. வள்ளியம்மையிடம் வேலை செய்யும் காலத்திலேயே, ஷ்யாமளா திறமையான கைராசி டாக்டர் என பெயர் எடுக்க ஆரம்பித்திருந்தார்.
ஒரு சில வருடங்களில் வள்ளியம்மையே ஷ்யாமளாவை தனியாக கிளினிக் ஓபன் செய்ய பரிந்துரைத்தார்.
சீனியருடைய வழிகாட்டுதலின் படி, ஷ்யாமளா அவர் வசிக்கும் ஏரியாவிலேயே தனியாக கிளினிக் ஓபன் செய்து மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.
மக்களிடையே நல்ல பெயர் எடுக்க ஆரம்பித்ததும், வெளி ஹாஸ்பிட்டல்களில் இருந்தும் இவருக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தது. இப்படியாக அவரது துறையில், அவர் நாளுக்கு நாள் வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இரண்டாவதாக கருவுற்றார்.
மருத்துவ துறையில் நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாதே.
அதுவும் அவர் மகப்பேறு மருத்துவர் என்பதால், அவரது பணியும் பொறுப்பும் கூடுதலானதாக இருந்தது. எந்த நேரம் எப்பொழுது அழைப்பு வரும் என சொல்ல முடியாது. உயிர் சம்பந்தப்பட்ட வேலை என்பதால் கூடுதல் கவனம் செலுத்துமாறு இருந்தது அவருக்கு. இதில் அவரும் கருவுற்றிருந்ததால் பணியின் சுமை, உடல் அயர்வு என தாமோதரனை சரியாக கவனிப்பதற்கான நேரங்கள் குறைந்திருந்தது.
கணவன் மனைவிக்கான நெருக்கங்களும் குறைய ஆரம்பித்திருந்தன.
ஷ்யாமளாவுக்கு வேலை, மகன் கௌதம், தன்னை என கவனித்தவர் தாமோதரனின் செயலையும், அவரது நடவடிக்கையையும் கவனிக்க தவறினார்.
இரண்டாவதாக கருவுற்றிருந்த அந்த சமயத்தில் நம்பகமான நட்பு வட்டத்தில் இருந்து தாமோதரனை வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி வெளியில் பார்ப்பதாக ஷ்யாமளாவுக்கு தகவல் கிடைத்தது.
ஆரம்பத்தில் ஷ்யாமளா அதை பெரிதாக கருத்தில் பதிக்கவில்லை. கணவரது தொழில் முறையில் அவருடன் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். இல்லை யாராவது தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று இருப்பார்கள் என லேசாக விட்டு விட்டார்.
சமயத்தில் அவரே சில முறை இதுமாதிரி தொழில் முறையில் வெளியே செல்லும் சந்தர்ப்பங்கள் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி கணவரின் மேல் இருந்த நம்பிக்கை அவரை ஆராய விடவில்லை. ஒருவேளை அப்போதே அதனை விசாரித்திருந்தால், கணவரைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியுமோ என்னவோ?
சிலரை எல்லாம் என்னதான் நாம் கட்டுக்குள் வைக்க நினைத்தாலும், கண்டித்தாலும் திருத்தவே முடியாது.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என கவிஞர் கண்ணதாசன் தனது பாடல் வரிகளில் கூறியது போல, தப்பு செய்பவர்களே அவர்களை உணர்ந்து திருந்தி மாறினால் ஒழிய, நாம் அவர்களை மாற்றி விடலாம், திருத்தி விடலாம் என நினைப்பது வீண் ஜம்பமே.
நாளாக நாளாக தாமோதரனின் நடத்தையின் மாற்றம், ஷ்யாமளாவுக்கு தாமோதரனின் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியது. தினமும் மது அருந்திவிட்டு இரவில் நேரம் கழித்து வீடு வர ஆரம்பித்திருந்தார் தமோதரன்.
வீட்டில் இருக்கும் நேரங்களின் அளவும் குறைய ஆரம்பித்திருந்தது. அப்படியே வீட்டில் இருந்தாலும் எந்நேரமும் போனும் கையுமாகவே இருந்தார். கௌதமை கூட கவனிப்பதில்லை. அவனாக அவரை தேடினாலும் கண்டு கொள்வதில்லை.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் ஷ்யாமளா தாமோதரனுடன் அவரது தவறான நடத்தைகளை சுட்டிக் காட்டி சத்தம் போட இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகி சண்டை பெரிதானது.
நாளடைவில் இரண்டு பேருக்கும் இடையில் சண்டை சச்சரவு என வீண் தர்க்கங்கள் அதிமாகி, அவர்களுக்கிடையே மனக்கசப்பை அதிகமாக்கியது.
ஏற்கனவே தாமோதரனுக்கு ஷ்யாமளாவுடன் தன்னை கம்பேர் செய்து எப்பவும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். ஷ்யாமளா அவரது பெற்றோருக்கு ஒரே பெண். நல்ல செல்வ பின்புலமும் கொண்டவர்.
தாமோதரனது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது. அவர்கள் குடும்பத்தில் இவர் மட்டும்தான் சொல்லிக் கொள்ளும்படி படித்து வேலையில் உள்ளவர். செல்வ வளமையும் சாதாரணமானதுவே.
வீட்டினர் இவருக்காக ஷ்யாமளாவை பெண் பார்த்தபோது, ஷ்யாமளாவின் அழகால் ஈர்க்கப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டவர், திருமணத்திற்கு பின்னான நாட்களில் ஷ்யாமளாவுடன் தன்னை ஒப்பிட்டு, அவராகவே அவர் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி குமைய ஆரம்பித்திருந்தார்.
ஷ்யாமளாவின் பெற்றோர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் சமயத்தில், தாமோதனரது படிப்பு வேலை இதை மட்டும் பார்த்துதான் சம்பந்தம் பேசியிருந்தனர்.
வசதியை எதிர்பார்க்கவில்லை. மகளுக்கு அவளைப் போலவே வரும் மாப்பிள்ளையும் மருத்துவ துறையில் டாக்டராக இருந்தால் இருவருக்கும் இடையே இணக்கம் அதிகமாக இருக்கும். இருவரும் மருத்துவ துறையில் இருந்தால் புரிதல் சரியாக இருக்கும் என கணக்கிட்டு மாப்பிள்ளையை மட்டும் பார்த்து திருமணம் முடித்திருந்தனர்.
ஷ்யாளாவின் எண்ணமும் பெற்றவர்களை ஒத்தே இருந்ததால் அவரும் தாமோதரன் குடும்பத்தை பற்றின எந்த ஏற்றத் தாழ்வும் இல்லாமல் தாமோதரனை ஏற்றுக் கொண்டிருந்தார்.
தாமோதரனின் குடும்ப தேவைகளுக்கு, அவரது தம்பி, தங்கையின் திருமணம் இதுபோன்ற சமயங்களிலும் ஷ்யாமளாவாகவே அவர்கள் ஏதும் கேளாமலே உதவி புரிய ஆர்வம் காட்டுவார்.
ஆனால் தாமோதரன் மனைவியிடம் இருந்து எந்த உதவியையும் ஏற்க விரும்புவதில்லை.
கணவர் சுயமரியாதை பார்க்கிறார், அவர்களது வருவாய்க்குள் வாழ நினைக்கிறார்கள் என அதனையும் ஷ்யாமளா நேர் வழியிலேயே எடுத்திருந்தார்.
இவள்கிட்ட வாங்கிட்டு இவளுக்கு நான் கூழ கும்புடு போடனுமா என்ற எண்ணம் தாமோதரனுக்கு.
அதுமட்டுமில்லாமல், அவரது வேலையில் அவருக்கென பெரிதாக பெயரோ, வளர்ச்சியோ இல்லாத சமயத்தில், ஷ்யாமளா அவரது பணியில் கைராசி டாக்டர் என மக்களிடையே நல்ல பெயரெடுத்து தனியாக கிளினிக் வைத்து, அவரது வேலையில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது.
தான் இன்னும் இன்னொரு மருத்துவமனையில் வேலையில் இருக்க, தனக்கு என பெரிதாக கேஸ் ஒன்றும் தேடி வராத நிலையில், அவரது மனைவியின் வளர்ச்சி அவரிடையே பொறாமையையும் காழ்ப்புணர்ச்சியையும் கொண்டு வந்திருந்தது.
இப்படி இருவரும் மனதாலும் உடலாலும் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்கள்.
கணவனுடன் பிணக்குகள் ஏற்பட்டாலும், ஏதோ கஷ்ட காலம், திருந்தி விடுவார், புரிந்து கொள்வார் என நம்பிக்கையாக இருந்தார் ஷ்யாமளா. ஆனால் அவரது நம்பிக்கையை எல்லாம் தவிடு பொடியாக்கி அவரையும் பிள்ளைகளையும் நட்டாற்றில் அம்போ என விட்டு விட்டு சென்றுவிட்டார் தாமோதரன்.
தொடரும்.
error: Content is protected !!