Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்)13ம் அத்தியாயம்


கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

13.ரகசியமும், ராஜதந்திரமும்.

தெளிவான வானிலையோடு, அரபிக்கடலின் அசுர அலைகளை ஆக்கிரமித்து அடக்கி நின்ற, “ஸ்கேட்” மரக்கலனின் மேற்பகுதியில் கழுத்தில் கத்தி வைக்கப்பட்ட நிலையில், முழந்தாளிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த மனிதன், விழிகளில் கலவரம் காணப்பட்டது. 



Advertisement

பச்சை சட்டையணித்து, கறுப்பு சீராயின் இடையே வார்ப்பட்டை கொண்டு இறுக்கி கட்டியிருந்த உடுக்கை இடையை, காக்கும் கருவி போல நீண்டு தொங்கிய உடைவாளை, இடக்கையால் அசட்டையாக தள்ளி விட்டு விட்டு… எதிரே முழந்தாள்படியிட்டு மிரண்டபடி இருக்கும் மனிதனின், முகத்தை நன்றாக உற்றுப் பார்த்த ஆலிமா என்னும் பச்சைக்கண் பேரழகி…..

“ஏன் எங்களை கண்டதும் நூலேணி கொண்டு தப்பி ஓட முயன்றாய்? யார் நீ?!! எங்கிருந்து வருகின்றாய்? எந்த நாட்டை சேர்ந்தவன் நீ?”…. என்று வரிசையாக கேள்விக்கணைகள் தொடுத்தாள், ஆலிமா

அவன் பதில் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தவனை பாஹ்லாஸ், தன் கையில் இருந்த குறும் வாளால் மெல்ல கழுத்தில் அழுத்தி, “ம்ம்ம்…. பதில் சொல்லவில்லை என்றால் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக இந்த வாளால் கீறி குருதியை கடல் நீரில் கரைத்துவிட்டு உடலை திமிங்கிலங்களுக்கு இரையாக்கி விடுவேன்” என்றான். 

Advertisement

“என்னை நீங்கள் என்ன செய்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் எதையும் என்னிடமிருந்து பெறமுடியாது”. என்றான் தப்பியோட முயன்றவன்.

Advertisement

ஆலிமா புன்னகைத்துக் கொண்டாள். பின் பாஹ்லாசை பார்த்து… “சகோதரரே, இந்த மனிதனை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்?… அவன் தான் ஒன்றுமே அவனிடமிருந்து நான் பெற இயலாது என்கின்றானே? ஒன்று செய்வோம், எதற்குமே பிரயோஜனம் இல்லாத இந்த மனிதனையும், சேர தேசத்தின் ஒரு மரக்கலனையும் தீக்கு பலியாக்கி விடுவோம். இவனை நன்றாக இறுக்கி கட்டுங்கள். அந்த முதல் கலனில் உள்ளவர்களை, மீதம் இருக்கும் கலன்களுக்கு மாற்றுங்கள். முதல் கலனில் நிறைய எரியெண்ணை ஊற்றி நெருப்பை மூட்டுங்கள். இந்த அப்பாவியை எரியும் நெருப்பில் உயிரோடு வீசுங்கள்” என்று உத்தரவிட்டாள்…

சரி ஆலிமா அப்படியே ஆகட்டும் என்ற பாஹ்லாஸ் தன் சகாக்களிடம் கையை ஆட்ட, முதல் கலனில் இருந்தவர்கள் அனைவரையும் பிற கலன்களுக்கு செல்ல, வற்புறுத்த தொடங்கினர் ஸ்கேட்டின் வீரர்கள். பின் எரியெண்ணை முதல் கலன் முழுவதும் ஊற்றப்படுவதை கைதியாக பிடிபட்ட மனிதன் கண்டான். இப்போது அவனது உடலும், உதடுகளும் நடுங்க தொடங்கின….

“வேண்டாம்…!! வேண்டாம்… !!நிறுத்துங்கள்… என்னை நெருப்பில் போடவேண்டாம்”என்றான். 

Advertisement

பாஹ்லாஸ் சிரித்துக்கொண்டே கூறினான். “ஏனப்பா நீ தான் உன்னால் எங்களுக்கு ஒன்றும் உபயோகம் இல்லை என்று கூறி விட்டாயே? பிறகு எதற்கு நீ எங்களுக்கு சுமையாக”, என்றான்

“இல்லை.. இல்லை உண்மைஉண்மையை கூறி விடுகின்றேன்… என்றவன் என்னை நெருப்பிலிட வேண்டாம்” என்று கெஞ்சலானான்…

“சரி முதலில் உண்மை என்று ஏதோ கூறினாயே அதை சொல் கேட்கலாம்!! ஆர்வமாக உள்ளது” என்றான், பாஹ்லாஸ்.

தீப்பற்றிய மரக்கலன்

“நான் சேரத்து ஒற்றர்கள் தலைவன், தயாளன். கிரேக்கத்து போர்ப்படையின் தலைவரை சந்தித்துவிட்டு சேரம் நோக்கி செல்கின்றேன். என்றான்”… தயாளன் என்னும் அந்த மனிதன். 

ஆலிமா… அவனை பிறகு என்பது போல நோக்கினாள். தயாளன்… “அவ்வளவு தான், நான் ஒற்றன் அல்லவா அது கொண்டு ராஜாங்க விபரத்தை கிரேக்க போர்ப்படையின் தலைவரிடம் கூறிவிட்டு திரும்புகின்றேன் வேறு ஒன்றும் இல்லை” என்றான். 

இதை கூறிய அடுத்த நிமிடத்தில் அவன் மார்மீது இடியென இறங்கியது ஆலிமாவின் கால்கள் கொடுத்த உதை…. அதை சற்றும் எதிர்பாராத தயாளன், சிறிது நேரம் மூச்சு விடவே சிரமப்பட்டான். 

ஏ… ஒற்றா… “உன் புத்திசாலித்தனம் எல்லாம் என்னிடம் வேண்டாம்… உண்மையை கூறு, இல்லையென்றால் அனைவரும் மரக்கலன்களுடன் தீ வைத்து எரித்து கொல்லப்படுவீர்கள்”… என்று உதிர்த்த வார்த்தைகளில் இருந்த உஷ்ணத்தையும், அவள் கொடுத்த ஒற்றை உதையும், தயாளனை பேச வைத்தது. மரக்கலன்களில் இருந்த பிற மாலுமிகளும், தலைவர்களும், சிப்பந்திகளும் அலறினார். 

“கடல் அரசியே வேண்டாம். உங்கள் உக்கிரத்தை எங்கள் மீது வீசாதீர்கள், கிரேக்கம் சென்றுவிட்டு நாங்கள் திரும்புவது உண்மைதான். இஸ்தான்புல் துறையில் நாங்கள் மரக்கலன்களுடன் தங்கிவிட்டோம். இந்த தயாளன் தான், இஸ்தான்புல் நகருக்குள் சென்று விட்டு இரண்டு நாட்களுக்குப் பின்  திரும்பினான். திரும்பும் போது, பெரிய வண்டிகளின் உலோக பெட்டகங்களும், மர பெட்டகங்களும் கொண்டு வந்து கலன்களில் நிரப்பினர். ஆஜானுபாகுவான ஒரு மனிதனும், இந்த தயாளனுடன் வந்தான். வேறு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது என்று மரக்கலன்களில் இருந்தவர்கள் கூறி, அவர்களை விட்டுவிட கெஞ்சினர்.

இஸ்தான்புல் துறைமுகம்

ஆலிமா கையை உயர்த்தி அவர்களை அமைதியாக இருக்க கட்டளையிட்டாள். பின் தயாளனிடம், மூன்று கலன்களிலும் உள்ள பொருள் என்ன? என்ன தகவலை அக்கோட்டஸிடம் இருந்து பெற்று உள்ளாய்? கூறு என்று அதட்டினாள் ஆலிமா….

கடல் அரசி, மூன்று மரக்கலன்களில் இரண்டில் சேரத்தின் காடுகளிலும், மலைகளிலும் ஆயுதப் பொறிகளை நிறுவ, உபகரணங்கள் உள்ளன. ஒரு கலன் முழுவதும் பொன்னும், வைர,வைடூரியங்களும் உள்ளன. இவற்றை எல்லாம் சேரத்தின் அரசரிடம் ஒப்படைக்க வேண்டும். இனமாக கொடுக்கப்பட்டுள்ள செல்வம், அன்னத்தின் அரசு சோழத்தில் மலர, சேரவேந்தர் செய்யப்போகும் உதவிக்கானது என்று நிறுத்தினான், தயாளன்.

ம்ம் மேலே சொல்… என்றால் ஆலிமா. “கடல் அரசி, அகோட்டஸ் உதவியோடு கிரேக்கத்தின் ரத்தம் சோழத்தில் மணிமகுடம் சூட பெரும் திட்டம் தயாராகி, பல அடுக்குகளாக காய்கள் நகர்வு தொடங்கி, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தென் தமிழகத்தில் இருந்து மொத்த செல்வ வளத்தையும், மேற்கத்திய, அரபு நாடுகளுக்கு கிரேக்கம் நேரடியாக வணிகம் செய்யவே, இந்த ராஜ்ஜிய விஸ்தரிப்பு திட்டம். அதன் நிமித்தமே அக்கோட்டஸின் பயணம் தொடங்கியுள்ளது. மூன்று கட்டமாக கடற்படை கிளம்பியுள்ளது. முதல் கட்ட படைகளை, மீர்காலீஸ் வழிநடத்தி கொண்டு சென்று சேரத்திலும், இந்துமாக் கடலிலும் நிலை நிறுத்தி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன”. 

“அக்கோட்டஸ் இரண்டாம் கட்ட படையுடன் அடுத்த பவுர்ணமியில் புறப்பட்டு, புத்த தீவில் படையை நிறுத்துவார். மூன்றாம் கட்ட படையை கிரேக்க இரத்தம் நடத்திக்கொண்டு, சென்று நாகை துறைமுகத்தை தாக்குவார். அதே வேளையில் அக்கோட்டஸின் படைகள் புகாரையும், சேரப்படைகள் பாண்டிய, சோழ தேசத்தையும் தாக்கும். புகாரில் உள்ள சோழத்தின் அரசு படைகள், இது அனைத்திற்கும் துணை நிற்கும். இதுதான் திட்டம். ஆனால், திட்டங்களில் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. எது எப்போது மாறும் என்பதை, அக்கோட்டஸ் மற்றும், சேர அரசர் மட்டுமே அறிவர்” என்று முடித்தான். 

“ஆக மிகப்பெரிய சதி திட்டம் தீட்டி உங்கள் அரசனும், இந்த கிரேக்க கிழவனும் காய்கள் நகர்த்துகின்றீர்கள். அருமை… இப்போது என்ன தகவல் உன்னிடம் உள்ளது” என்றாள் ஆலிமா.

“சகோதரா இவன் கூறியபடி கலன்களுக்குள் பொருட்கள் உள்ளதா? என  சோதனை செய்யுங்கள்”, என்றாள் ஆலிமா.

பாஹ்லாஸ் மற்றும் மூன்று அரபு வீரர்கள், மரக்கலன்களை சோதனை செய்தனர். தயாளன் கூறியபடியே இருந்தது. பொன்னும் , வைடூரியங்களும் உள்ள கலனை காக்க கூடுதல் வீரர்கள் நியமிக்கப்பட்டனர். 

“சேர அரசனை விரைவில், தமிழக மண்ணில் குழப்பம் ஏற்படுத்த கூறி ஓலை உள்ளது” என்றான் ஒற்றன் தயாளன். 

ஆலிமாவிற்கு புரிந்தது. தன்னுடைய மருமகனுக்கு, செல்வா செழிப்புள்ள தமிழக துறைமுகங்களை உள்ளடக்கிய ஒரு ராஜ்யத்தை உருவாக்கித் தர அக்கோட்டஸ் திட்டமிட்டு உள்ளான். ஆனால் வேறு கடற்படை மட்டும் போகாதே ராஜ்யங்களை கைப்பற்ற…. இதிலும் ஏதோ திட்டம் உள்ளது என்று ஆலிமாவின் உள்மனம் சொல்ல, 

ஆலிமா

“தயாளா, நீ இன்னமும் ஏதோ மறைக்கின்றாய். உனக்கு  இந்த மரக்கலன்கள் ரினிவாவை அடையும் வரை மட்டுமே கால அவகாசம். அதற்குள் கூறி விடுவாயேயானால், உன்னை உயிரோடு சிறை வைப்பேன் இல்லையென்றால் உன்னை ரினீவாவின் கடற்கொள்ளையர்களிடம் கூறி அணு அணுவாக சித்திரவதை செய்ய சொல்லி ஒப்படைத்து விடுவேன்” என்றாள் ஆலிமா. பின் மொத்த கலன்களுக்கும் ரினீவா நோக்கி பயணிக்க உத்தரவிட்டாள்.

ஆனால் தயாளன் வாய் திறக்க அவசியமே ஏற்படவில்லை, பாஹ்லாஸ் அவனை சோதிக்க, தயாளன் தலைப்பாகைக்குள் ரகசிய ஓலை இருப்பதை கண்டுபிடித்து எடுத்தான். 

“ஆலிமா, ரகசியம் இவன் மண்டைக்குள் தான் ஒளிந்து உள்ளது” என்றவன், ஓலையை ஆலிமாவிடம் கொடுத்தான். ஆலிமா அந்த ஓலையை வாசிக்க வாசிக்க அவளுக்கு கண்கள் இரண்டும் ஒரே நேரத்தில் விரிந்து, ஆச்சரியத்தை வெளிப்படுத்தின. அக்கோட்டஸ் போட்டுள்ள வியூகத்தை உடைக்க வேண்டும் என்றால், நீண்ட போராட்டம் செய்ய வேண்டியது வரும். அதே வேளையில் தமிழகத்தின் அரசர்கள் ஆடும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் அல்லவா கிரேக்கத்தின் பலம் ஒளிந்து உள்ளது. இவர்களின் ஆட்டத்தை அறிய என்ன செய்வது? என்று யோசிக்கலானாள்.

“ஆலிமா என்ன யோசனை? ஓலையில் என்ன தகவல் உள்ளது?” என்று பாஹ்லாஸ் கேட்டான். 

சகோதரா, திட்டம் மிகப்பெரியது. ஆயிரம் திருப்பங்களை கொண்டது. பலரை பகடை காய்களாக கொண்டு சேரனும், அக்கோட்டஸும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் தேசத்தின் வரலாறும், புவியியல் அமைப்பும் அறியாமல் இந்த சதுரங்கத்தில் புகுந்து, ஆட்டத்தை மாற்றுவது எப்படி என்று புரியவில்லை. அது மட்டுமல்ல, அக்கோட்டஸிற்கு கிரேக்கத்தின் ரத்தத்திற்கு மணி மகுடம் சூட்ட ஆசை!!!???? இங்கு தான் திட்டம் வித்தியாசப்படுகின்றது. ரத்தம் ஆண் அன்னத்தினுடையதா? அல்லது பெண் அன்னத்தினுடையதா? என்று….. என வாக்கியத்தை நிறைவு செய்யாமல் நிறுத்திய ஆலிமாவை உற்று நோக்கிய பாஹ்லாஸ் கூறினான்….

ஆலிமா, இது பெருத்த சதி!!!!!!????.… இதில் அக்கோட்டஸ் போட்டுள்ள திட்டங்கள் பயங்கரமானவை என்றான்….. அதிர்ச்சி மாறாமல். ஆலிமாவிற்கும் அது நன்றாக புரிந்தது. மரக்கலன்கள் அனைத்தும், ரினிவாவை வேகமாக நெருங்கிக்கொண்டு இருந்தன. தயாளன் உள்ளிட்ட சேரத்தின் மரக்கலனில் வந்தவர்கள் கைதிகளாக சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஆலிமா பாய்மர தண்டில் சாய்ந்து யோசித்துக் கொண்டிருக்கவே அசதியில் சில கணங்கள் உறங்கிப் போனாள்.

அப்போது…… ஆலிமாவை சுற்றி பற்றி எரியும் நெருப்பை உணராது ஆலிமா கண்மூடி இருக்க, திடீரென்று கடலில் இருந்து எழுந்த ஒரு அலையில் இருந்து, உயர்ந்து மேல் எழும்பிய வீரன் ஒருவன்!!!….  தன் வலிய நீண்ட கரங்களினால் அவளது இடையை பற்றி தூக்கியபடியே, கடலுக்குள் குதித்தான். இருவரும் நீருக்குள் நீந்தியபடியே பற்றி எரியும் மரக்கலனை விட்டு விலகி தூரத்தில் தெரிந்த படகை நோக்கி நீந்தினர்… ஆலிமாவை காப்பாற்றிய அந்த வீரனை நீருக்குள் நீந்தியவாறே அவள் கவனித்தாள். ஏஜியன் உள்ளிட்ட இந்த தீவுப் பகுதி நாடுகளில், இப்படியொரு அழகான ஆண் மகனை அவள்

கண்டதாக நினைவில் இல்லை என்று தெளிவாக உணர்ந்து கொண்டாள். அத்தனை ஈர்ப்பு சக்தியும், வசீகரமும் அவன் தோற்றத்தில் இருக்க அவனை ரசித்தபடியே ஆலிமா நீந்தினாள். 

அப்போது ஆலிமா!!!???  என்ற குரல் “ஸ்கேட்டின்” மேற்தளத்தில் உரக்க கேட்க, மெல்ல ஆலிமா குரல் வந்த திசையை நோக்கினாள்…..

தொடரும்…..

 

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!