Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம்

1. ஆடித் திங்கள் நள்ளிரவில்

“உறந்தை குணாது நெடும் பெருங்குன்றம்”

என்ற அகநானூற்று பாடலும்,

” உறந்தை குணாது நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்”



Advertisement

என்ற புறநானூற்றுப் பாடலும் குறிக்கும் உறையூர். முற்கால சோழர்களின் தலைநகரம். இளஞ்சேர்ச்சென்னி துவங்கி கரிகால் பெருவளத்தான் வரை சீரோடும் சிறப்போடும் விளங்கிய அற்புதமான பெருநகரம். உறையூரை அணைத்தபடி ஆர்ப்பரித்து பொங்கி பாயும் பொன்னி நதியும், பொன்னி நதி தன் மடிமீதில் தாலாட்டி மகிழும் உறையூரின் கரையாவும், கன்னிப்பெண் தன் காதலனை மடியில் கிடத்தி சீண்டி விளையாடும் செயல் போன்றவை…..

 

Advertisement

ஆடித் திங்கள் துவங்கி இருந்த பெருங்காற்றின் காலம். காவிரியில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் எழும் சோ.. என்ற சப்தமும், கரைதொட்டு வளர்ந்து செழித்த, பெருமரங்களின் கிளைகளில் குடியிருக்கும் கிளிகள் இசைத்த ராகமும் ரம்மியமாக கேட்கும் அற்புதமான மாலை நேரம்…. பகலவன் தன் இல்லம் திரும்பிக்கொண்டிருக்க, இளமதி தன் ஒளியெழுப்ப தலை தூக்கும் அற்புத காட்சி அரங்கேறி கொண்டிருக்கின்றது…..

Advertisement

மேற்கின் காற்று சுழன்று பொன்னி நதியில் மோதி, மீண்டும் தென்திசையில் திரும்பி வீசும் போது, நீர்த் திவலைகளோடு காற்று கரைமீதில் மோதும் அந்த சுகமான வேளையில் கொள்ளிடத்தின் கரைமீதில் வெள்ளை புரவியில் ஆசுவாசமாக…. கொள்ளிடத்தின் அழகை பருகியபடி உறையூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றான் வாலிபன் ஒருவன்.

சிவந்த மேனியில் தகிக்கும் அவன் உடலில் சித்திரங்கள் போல காணப்படும் தழும்புகள், அவனின் வீரத்தை பறைசாற்றுகின்றது. தோள்வரை வளர்ந்து சுருண்டிருந்த கருத்த கேசமும், சுழலும் சீரான கண்களும், நீண்ட நாசியும், அகன்ற பிறை நெற்றியும், அதில் அவன் தீட்டியிருந்த திலகமும், அவனது பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றது. அகன்ற தோள்களும், தோள்களை தாங்கிப்பிடித்த உரமேறிய புயங்களும், புயங்களை அணை கட்டிய தங்க காப்புகளும், மார்பை தாங்கிக்கொண்டிருந்த அகன்ற வலிமையான இடையும், இடையில் இடப்புறம் சொருகியிருந்த உறை வாளும்…. இவனது வீரத்தையும், விவேகமானவன் என்பதையும் உரக்க நமக்கு தெளிவூட்டுகின்றன.

Advertisement

“இளமாறன் சென்னித்தேவன்” சோழதேசத்தில் நாகை பட்டணத்தில் துறைமுக பொறுப்பில், அரச பதவி வகித்த சென்னித்தேவர், மலர்விழி கோதயாருக்கு மகனாகப் பிறந்தவன். கரிகால் பெருவளத்து பேரரசரின் அன்பை பெற்றவன். அதனாலே அரச குடும்பத்துக்கு இணையாக இளவல்களோடு அரண்மையிலேயே வளர்ந்தவன். தன் பதினாறு வயதில் வெண்ணிப்பரந்தலைப் போரில் அரசரோடு இணைந்து போரிட்டு, சோழ தேசத்திற்கும், அரசகுடும்பத்திற்கும் தனது விசுவாசத்தை மெய்ப்பித்தவன்.

சீனர், யவனர், அரேபியர், மற்றும் சோழதேசத்து வீர இளைஞர்களை கொண்ட தனிப்படையின் தலைவன். இவனது படையை அரசர் அங்கீகரித்து அனுமதித்து இருந்தார். இவனுக்கென்று சோழ நாடெங்கும் சிறப்பான பேரும் புகழும் உண்டு.

இந்த ஆற்றலுள்ள வாலிபன், இப்போது உறையூரை நோக்கித் தனியாக பயணம் செய்து கொண்டிருப்பது ஏன்? இன்னும் நாற்பது கல் தொலைவில் இருக்கும் உறையூரை, தன் புரவியை விரட்டி ஓட்டினால் சில நாழிகைகளில் அடைந்துவிட முடியும். ஆயினும் நிதானமாக, சிந்தனை வயப்பட்டவனாக இவன் செல்வது ஏன்?

முகத்தில் ஏராளமான குழப்ப ரேகைகள். பெருவளத்து மன்னர் அகால மரணமடைந்தது முதல் சோழ தேசமெங்கும் பல்வேறு விதமான குழப்பங்கள். தேசத்து குடிமக்கள் பெரும்பாலும் வீட்டுக்குள் முடங்கியே கிடக்கின்றனர். பொன்னி நதியின் குளுமையான நீர் நிலங்களில் பாயவில்லை. முற்றிய நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படவும் இல்லை. ஊர்கள் தோறும், சோழ தேசத்தின் காவல் படைகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீதிக்கு வருபவர்களை கைது செய்து சிறையில் அடைகின்றனர் என்று கேள்விப்பட்டிருந்தான் இளமாறன். ஆனால் நாகை துறையில், வணிகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் நாவாய்களின் வரவும், புறப்பாடும், வியாபாரமும், சிறப்பாக,பரபரப்பாக நடந்து கொண்டுதான் இருகின்றது. ஆனால் வரும் வழியெங்கும் அவன் கடந்த ஊர்களில் நிலைமை மட்டும் வேறுவிதமாக இருந்தது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் தன்னை சந்திக்க வந்த ஒற்றன் சேந்தசெல்வன், இரண்டு ஓலைகளை அவனிடம் கொடுத்திருந்தான். மேலும் அவன் கூறிய சில செய்திகள் தான் இளமாறன் உடனே நாகையில் இருந்து உறையூருக்குப் புறப்பட காரணம் ஆகின. சோழ மன்னரின் மறைவுக்குப் பின் இளவல்கள் இருவருக்குமான உறவு சரியில்லை என்றும், பட்டத்து இளவரசர் நெடுங்கிள்ளி, தன் தாய் மாமா இரும்பிடைவல்லனுடன் சேர்ந்து ஒரு அணியாகவும், ஆவூர் கோட்டையின் ராணியும், அரசரின் இளையராணி செந்தாமரைதேவியின் ஒரே மகனும், இளமாறனின் உற்ற நண்பனுமான நலங்கிள்ளி ஒருபுறம், இளவல் உரிமை கேட்டு தனி அணியாக மோதிக் கொள்வதாக சேந்தசெல்வன் கூறியிருந்தான்.

நலங்கிள்ளியும், சோழதேசத்து முதன்மை அமைச்சரும், அரச குடும்பத்தின் ஆலோசகருமான ஞானப்பிரம்மரும் தனித்தனியாக சேந்தசெல்வனிடம் ஓலைகள் கொடுத்து அனுப்பி இருந்தனர். இருவரின் ஓலையும் இயம்பிய செய்தி ஒன்றுதான், உடனே உறையூருக்கு வரவும்….. இதுதான் இளமாறனின் குழப்பத்திற்குக் காரணம். இருவரும் ஒரே செய்தியை ஏன் தனித்தனியாக கொடுத்து அனுப்பினர்.

நலங்கிள்ளி ஒருபோதும் பதவிக்கோ, அரச உரிமைக்கோ சதி செய்பவன் அல்ல. நெடும்கிள்ளி சிறிது சுயநல எண்ணம் உள்ளவன் என்றாலும் அவனும் கெட்டவன் அல்லவே… அரசரின் மறைவுக்குப் பிறகு ஏன் எம் சோழதேசம் இவ்வாறு பங்காளி சண்டையிட்டு கொள்கின்றது… இதற்குப் பின் நடப்பது என்ன? உறையூரை அடையும் முன், புகார் செல்லும் வழியில் பயணித்து முதலில் பூங்குழலியை சந்தித்து உறையூரின் நிலையை அறிய வேண்டும். பின் ஞானப்பிரம்மரை பூங்குழலி மூலம் சந்தித்து விட்டு நண்பன் நலங்கிள்ளியை ஆவூர் சென்று சந்திக்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்தான் இளமாறன்…..

திடீரென அவனை நோக்கி பறந்து வந்த ஒரு அம்பை கணப்பொழுதில் கணித்த இளமாறன் லாகவமாய் குனிந்து தப்பிக்கொண்டு சட்டென்று விழிகளை சுழலவிட்டு எதிரியை துழாவினான். இருள் கவ்வத் தொடங்கியிருந்த நேரமாதலால் எதிரியின் இடத்தையும் அவனின் உருவத்தையும் சரியாக கணிக்க இயலவில்லை இளமாறனால்…. ஆயினும் தன் கூரிய பார்வையை தன் இடப்புறமாக தெரிந்த பாழடைந்த மண்டபத்தின் மீது திருப்பிய இளமாறன் சற்று விக்கித்தான் என்றாலும் தன்னை சுற்றி சுமாராக பத்து பேராகிலும் உள்ளனர் என்பதை கிறகித்துக்கொண்டான். தன்னை சூழ்ந்திருக்கும் அனைவரின் நோக்கமும் தன்னை வீழ்த்துவது தான் என்று உணர்ந்து கொண்டவுடன் தன் புரவியில் இருந்து பாய்ந்து கீழே குதித்து, குதித்த வேகத்தில் தரையில் உருண்டான். தானாகவே கைகள் இடையிலிருந்த தன் வாளை உருவ, இளமாறன் எதிரிகளை துவம்சம் செய்ய ஆயத்தமானான். தன்னை சுற்றி, முகத்தில் முகத்திரை இட்டு மறைத்தவாறு வரும் எதிரிகளை தன் வாளை கொண்டு தாக்க துவங்கினான்.

நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் அவர்கள் என்பதையும், சுமாரான வாள்வீச்சு இவர்களிடம் எடுபடாது என்பதையும் நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்ட இளமாறன் தன் தனித்துவமிக்க வாள் வீச்சை காட்ட, சிறிது நொடிகளில் எதிரிகள் பின்வாங்க துவங்கினர். சட்டென்று வாள் வீச்சை போக்கு காட்டும் நுட்பத்திற்கு மாற்றிய இளமாறன் எதிரிகள் இருவரின் கழுத்திலும், இடையிலும் மாறி மாறி தன் வாளை செலுத்தி இழுக்க மற்றவர் பின்வாங்கினர். நெடிய உருவமும், கருத்த தேகமும் கொண்டு அகன்ற மார்பை உடைய ஒருவன் மட்டும் நேரடியாக இளமாறனுடன் யுத்தம் செய்ய இப்போது முன்வந்து வாளை வீசினான். சண்டையிட்டவாறே அவனின் வலது கரத்தில் குத்தப்பட்டிருந்த பச்சையாய் கவனித்த இளமாறன் சற்று அதிர்ந்து போனான் ஆகிலும், அவனை இனம் கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளமல் தொடர்ந்து அவனுடன் சண்டையிட்டான். அவனது கழுத்தின் அருகில் சென்று வந்த தன் நீண்ட வாளை வலது இடமாக சற்று வீசி சுருக்கியவன் அவனது முகத்தை மூடியிருந்த துணியை வாளால் கத்தரித்து எடுத்தான். இதனால் அதிர்ச்சியுற்ற அவன் சண்டை செய்வதை விட்டு விட்டு மறைந்து தப்பிக்க தன் சகாக்களுக்கு குரல் சமிக்ஞை செய்தான். செய்தவாறே அடர்ந்த புதருக்குள் ஓடி குதித்து மறைந்தான்…..

மற்றவர்களும் ஓடி மறைய, சுற்றும் முற்றும் வேறு யாரேனும் உள்ளனரா? என்று பார்த்து உறுதிபடுத்திக்கொண்ட இளமாறன் தன் புரவியை குரல் எழுப்பி அழைத்தான். புரவியில் மீது ஏறாமல் அதை நடத்தியவாறே, புதருக்கு பின் இருந்த மண்டபத்தை அடைந்த இளமாறன் கண்கள் சட்டென்று இருட்டில் மறைந்து ஒதுங்கிய ஒரு உருவத்தில் நிலைத்து நின்றது. தன் வாளை எச்சரிக்கையுடன் பிடித்தபடி அந்த உருவத்தின் பக்கவாட்டு பகுதிக்கு வந்த இளமாறன் சட்டென்று அந்த உருவத்தின் மீது பாய்ந்து பிடித்தான். அவனது அசுர பலத்தை அவன் பிரயோகிக்க துவங்கிய பின்தான் தெரிந்தது அது ஒரு பெண் என்று…….

இருப்பினும் பிடியை தளர்த்தாத இளமாறன்… அந்த பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை விலக்க முற்பட்டான். அப்போது வீணையின் ஒலியில் தேன் குழைத்த குரல் அவளிடம் இருந்து வெளிப்பட்டது. அதே வேளையில் அவளது தோளில் சுமந்திருந்த அம்பார்தூணி இளமாறன் மாரமீதில்குத்தி வலியை உண்டாக்கியது….

இதுதான் சோழ தனிப்படை தலைவர் பெண்களிடம் நடக்கும் முறையா? இதுதான் தலைவருக்கு இருக்கும் தகுதியா என்ற குரலை சட்டென்று அடையாளம் கண்டுபிடித்துக்கொண்ட இளமாறன்…… யாரது? பாண்டிய இளவரசி வேள்விழி தேவியா? என்று தன் பிடியை விடுத்தான்…

ஆம்… வேள்விழிதான்…. என்ற பாண்டிய இளவரசி தன் முகத்திரையை விலக்கினாள்.. இளவரசி இங்கே எப்படி? அதுவும் சோழ ஆபத்துதவிகளிடம்… என்று இளமாறன் திணறி ஆச்சரியத்துடன் கேட்க….

 

உண்மையில் நீங்கள் அசகாய சூரர்தான் போங்கள்… தங்களை தாக்கியது சோழனின் ஆபத்துதவிகள் என்று இந்த கும்மிருட்டிலும் கண்டுபிடித்து இருக்கின்றீர்களே… என்று வேள்விழி கூற…

இளவரசி எதிரியின் பலத்தை மட்டுமல்ல அவனின் பூர்வீகத்தையும் யுத்தம் செய்யும் போது கண்டுணர வேண்டும் என்பதே போர்க் கலையின் பாலபாடம் என்றான் இளமாறன்.

சரிதான் தலைவரே… நீங்கள் வந்ததால் நான் தப்பித்தேன். உங்களின் புரவி ஓசை கேட்டு இவர்களில் ஒருவர் பின் ஒருவராக என்னை இங்கே விட்டுவிட்டு சென்றார்கள்… அந்த சூழலில் வருபவரை இவர்களிடமிருந்து காக்கவும் ஆபத்தை உணர்த்தவுமே உங்கள் மீது அம்பெய்தேன் என்று வேள்விழி கூறினாள்….

ஆயினும் தேவி நீங்கள் இவர்களிடம் எப்படி சிக்கிக்கொண்டீர்கள்? என்று இளமாறன் மீண்டும் வினவினான்.

தலைவரே நீங்கள் அறியாதது என்ன இருக்கின்றது?. உங்களின் தோழர் வருங்கால சோழ சக்ரவர்த்தி அவர்களை காணவே நானும் எனது தோழியரும் ஐந்து தினங்களுக்கு முன் ஆவூர் கோட்டைக்கு சென்று இருந்தோம். அவர் அங்கு இல்லை… அவர் உறையூருக்கு ஞானப்பிரம்மர் மாளிகைகைக்கு சென்றதாக இளைய ராணி கூறியதால் ஞானப்பிரம்மர் மாளிகை நோக்கி சென்று கொண்டிருந்தோம். வழியில் இரும்பிடைவல்லனின் கண்களில் சிக்கிக்கொண்டோம். அவன்தானே இப்போது சோழ ராஜ்ஜியத்தில் சர்வ சக்தியும் படைத்தவன். அவன் சோழ ஆபத்துதவிகள் மூலம் என்னை அரண்மனைக்கு கொண்டு செல்ல உத்தரவு இட்டிருந்தான். என் தோழியரை உறையூர் கோட்டைக்கு வெளியே உள்ள மாளிகையில் சிறைவைத்து இருக்கின்றார்கள் என்று தனது சூழலை இளமாறனிடம் இளவரசி வேள்விழி கூறினாள்…

சரிதான்… காதல் செய்த வேதனையில் இப்படி தனியே வந்து சிக்கிக் கொண்டீர்களாக்கும்… பாண்டிய அரசர் கேள்வியுற்றால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அல்லவா ஏற்பட்டு இருக்கும்… என்று வேதனை கலந்த அக்கறையில் இளமாறன் கூற….

முத்துப் பரல்களை வெண்கல கிண்ணத்தில் கொட்டிவிட்டது போல சிரித்தாள் வேள்விழி… அவளை ஆச்சரியமாகவும் சற்று கோபத்துடனும் நோக்கினான் இளமாறன்.

தனிப்படை தலைவரே என்னை தங்கள் தோழரிடம் சென்று உளவுசெய்தி கூறச் சொல்லியதே உங்கள் நண்பர் பாண்டிய மன்னர் தான். இன்னொன்றும் கூறினார் பாண்டிய மன்னர்….உங்களிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமாம். சமயத்தில் உடன்பிறவா சகோதரி என்று கூட பாராமல் கடமையில் சிக்கி எனக்கு சிறை தண்டனை நீங்கள் தந்து விடுவீர்களாம்!!….அப்படியா என்ன ??? என்று மீண்டும் சிரித்தாள் வேள்விழி….

அப்படியா சொன்னான் உங்கள் அண்ணன்… நன்மாறன்… எப்போது இருந்து அவனுக்கு இப்படியொரு எண்ணமாம்? என்றான் இளமாறன்.

அப்பப்பா நீங்கள் மூவரும் சிறந்த நடிகர்கள். அரசியல் விளையாட்டில் சாதுர்யமாக கண்ணாம்மூச்சி விளையாடுபவர்கள்… உங்களிடம் என்னை போன்ற பெண்கள் தான் ஏமாந்து போகவேண்டும் என்று தன் அழகிய கண்களை உருட்டி நண்பர்களின் திருட்டை உடைத்தாள் பாண்டிய இளவரசி…

அது சரி இளவரசி… “இது ஒரு கண்ணாம்மூச்சி விளையாட்டுதான். “இங்கே சதிகளும், கொலைகளும் இலவசம் இளவரசி… கொஞ்சம் அசந்தீர்கள் என்றால், உங்கள் இதயத்தையும் ஒரு வாள் வலியின்றி ஊடுருவும்” – என்றான் இளமாறன்.

அப்போது தூரத்தில் குதிரைகள் வரும் குளம்பொலி சப்தம் கேட்கவே இருவரும் பாழடைந்த அந்த மண்டபத்திற்குள் ஒளிந்து கொண்டனர். இளமாறனின் குதிரையும் புதரில் சென்று மறைந்து கொள்ள…….

புலிக்கொடி தாங்கிய சிலர் குதிரையில் முன்பே வர இரு புரவிகள் பூட்டிய தேரில் பூரண அரச உடை தரித்து நெடுங்கிள்ளி வந்து கொண்டிருந்தான்….

தொடரும்…..

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!