Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kuzhalisai Azhagae

குழலிசை அழகே – 16.3

அலமாரியில் கிடைத்த பழைய ஆல்பங்களை புரட்டிக் கொண்டே தந்தையின் பேச்சில் கவனத்தை வைத்து இருந்தாள் சக்தி..

“ஜெர்மனியில் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலில் என்னை ஹயர் பண்ண விரும்பினாங்க.. எனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு அது.. என் பாலிசி ஒன்னு தான் சக்தி.. சாம்பாரிக்கும் போது நல்லா சாம்பாரிக்கணும்.. அதை திரும்பி செய்யும்போதும் குறைவில்லாம செய்யணும்.. அப்படி தான் இந்த ஜெர்மனி ஆஃபரையும் நான் பார்த்தேன்.. சேர்ந்தால் அங்க இரண்டு வருஷம் கண்டிப்பா இருந்தே ஆகணும்.. நான் அதை அக்செப்ட் பண்ணி அங்கே போக நினைச்சேன்.. யாமினி நிறைய கஷ்டப்பட்டு இருக்கா.. அவளை எந்த கஷ்டமும் இல்லாமல் நான் பார்த்துக்க ஆசை பட்டேன்.. அவளை ராணி மாதிரி வைச்சுக்க தான் விருப்பினேன்.. முன்பு யாருமே இல்ல அவ கஷ்டப்பட்டு உழைத்தாள். ஆனா நான் இருக்கும் போது அவ ஏன் கஷ்டப்படனும்… அதனால வேலையை விட்டுட்டு என்னோட ஜெர்மனி வர சொன்னேன்..

கை குழந்தை உன்னை வைச்சுட்டு அவளால எப்படியும் வேலைக்கு போக முடியாது. அதனால அவ மறுக்க கூடும்னு நான் யோசிக்க கூட இல்லை.. ஆனா நான் சொன்னபோது அவ அவ்வளவு சண்டை போடுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..”

என்று சொன்ன விஷாகன் மனதில் இன்னமும் அன்றைய பேச்சுக்கள் எதுவும் மறக்கவில்லை.



Advertisement

                         *****

தன் மருத்துவ தொழிலையும் அதன் மகத்துவத்தையும் உயர்வாய் வைத்திருந்த விஷாகனுக்கு அவரவருக்கு அவரவர் தொழில் உயர்வானது என்ற தார்மீகம் புரியவில்லை.

யாமினி அப்போதும் தயாரிப்பு குழுவில்  உதவியாளர் நிலையில் தான் இருந்தார். அந்த வேலை அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாக விஷாகன் நினைக்கவும் இல்லை.. முன்பு யாமினி வேலைக்கு செல்ல அவசியம் இருந்தது. ஆனால் இப்போதும் அதுவும் பிள்ளை பெற்ற இந்த நிலையிலும் அதனை பிடித்துக் கொண்டு தொங்குவது வீண் விதண்டாவாதமாக தான் தெரிந்தது.

Advertisement

“உனக்கு ஆறு மாச குழந்தை இருக்கு நியாபகம் இருக்கா..???”

Advertisement

“ஏன் உங்களுக்கும் அதே நிலை தானே விஷாகன்.. நீங்க வேலைக்கு போகணுமா வேணாமா யோசிச்சீங்களா..??”

“எனக்காடி பிரசவம் ஆச்சு.. முட்டாள்தனமா உளறி என்னை ஆத்திரப்படுத்தாத..”

“உங்களுக்கு எல்லாமே உளரல் மாதிரி தான் இருக்கும்.. ஏன்னா நீங்க அதி மேதாவி இல்லையா.. என் உடம்பு இப்ப எவ்வளவோ தேறிடுச்சு.. சக்திக்கு என்னோட தேவை அதிகம் தான்.. ஆனால் முழு பொறுப்பும் எனக்கு மட்டும் இல்ல விஷாகன்.. உங்களுக்கும் இருக்கு தானே.. நீங்களும் நானும் சேர்ந்து பார்த்துக்கும் போது என்னால என் வேலையையும் செய்ய முடியும்..”

Advertisement

“அப்படி கஷ்டப்பட்டாவது அந்த வேலைக்கு போகனும்னு நமக்கு என்ன பண தேவையா..?? இல்ல அது பெரிய கலெக்டர் வேலையா..??? “

என்று அவர் நக்கலாய் சொன்னது யாமினியை மோசமாய் தாக்க  ஆத்திரம் எல்லைகளை கடந்தது..

“கலெக்டர் வேலையோ கால் டாக்சி வேலையோ அது எனக்கு முக்கியமா இல்லையானு நான் தான் முடிவு எடுப்பேன்.. நீங்க கிடையாது..”

விரல் நீட்டி மிரட்டலாய் யாமினி சொல்ல விஷாகன் முகமும் கோபத்தில் சிவந்தது.

“பேசுவடி.. உன்னை நான் இவ்வளவு நல்லா வைச்சு இருக்கேன்ல நீ இன்னமும் பேசுவ.. யாருமே இல்லாம இருந்த உனக்கு எல்லாமுமாக இருந்து உன்னை பார்த்துக்க நினைக்கிறேன்ல என்னை நீ இப்படி தான் பேசுவ..”

“நீங்க தான் எனக்கு வாழ்க்கையே கொடுத்தா மாதிரி பேசாதீங்க.. அப்படி பார்த்தால் நானும் தான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கேன்.. நானும் தான் உங்களை நல்லா வைச்சு இருக்கேன்.. எனக்கு யாரும் இல்லை என்றால் உங்களுக்கு மட்டும் இப்ப யார் இருக்கிறதா நினைச்சுட்டு இருக்கீங்க..

என்னை பார்த்துக்க யாரும் இல்லனு நான் கவலைப்பட்டு நீங்க பார்த்தீங்களா..??  அப்புறம் ஏன் இப்படி ஒரு நினைப்பு உங்களுக்கு..”

யாமினியின் அழுத்தமான பேச்சில் அவருக்கு பதில் சொல்ல வரவில்லை.

“நானே என்னை நல்லா தான் வைச்சு இருந்தேன்.. உங்களை கல்யாணம் பண்ணது எனக்கும் உங்களை பிடிச்சதால் மட்டும் தான்.. மத்தபடி நீங்க வந்ததால் தான் என் வாழ்க்கையே விடிஞ்சது என்ற அசாத்திய கற்பனை எல்லாம் இத்தோட நிறுத்திக்கோங்க..”

என்று அவரை வைத்து வாங்கியதில் விஷாகன் ஈகோ சீண்டப்பட்டது.
அந்த வீம்புடனே தான் மட்டுமாய் ஜெர்மனி சென்றுவிட இங்கே கை குழந்தை சக்தியுடன் தனித்து விடப்பட்டார் யாமினி. அது தான் அவர்கள் உறவில் ஏற்பட்ட முதல் விரிசல் என இருவருக்குமே அப்போது புரியவில்லை.

அந்த இரண்டு வருட காலமும் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.. சக்தியை பார்த்துக் கொண்டு தன் லட்சியம் நோக்கியும் ஓட திணறி போனார்.

விஷாகன் சென்றுவிட்டாலும் அவர் மனம் எல்லாம் மனைவி குழந்தையில் தான் இருந்தது. அவரும் உதவிக்காக பாதுகாப்பிற்காக என ஆட்களை ஏற்பாடு செய்தார்.  ஆனால் அவர்களால் எல்லாம் தன் இடத்தை நிரப்ப முடியாது என்று உணராமல் போனார்.

ஒரு கட்டத்தில் பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு விஷாகனிடமே போய் விட்டால் என்ன என்று தோன்றியது தான். ஆனால் அவரின் மனசாட்சியே அதனை ஒப்ப மறுத்தது.

அந்த நிலைக்கு வரவே யாமினி அத்தனை உழைப்பை கொட்டி உள்ளார். அதனை எல்லாம் தியாகம் செய்துவிட்டு அதன்பின் என்ன வாழ்ந்து விட போகிறோம்..

யாமினிக்கு மெழுகுவர்த்தியாய் வாழ விருப்பம் இல்லை. எல்லோருக்கும் ஒரு முறை தானே வாழ்க்கை.. அதில் தானும் வாழனும் தன்னை சார்ந்தவர்களும் வாழனும் என்ற எண்ணமே வலுப்பெற்றது. அதனை மனதில் நிறுத்தியே அயராமல் உழைத்தார்.

இரண்டு வருடமும் முடிந்து விஷாகன் மீண்டும் ஊர் திரும்பிய போது அவர்கள் இடையில் இருந்த விரிசல் பெரும் பள்ளமாய் விழுந்து இருந்தது.

அப்போதும் கணவன் மனைவியாக தான் இருந்தார்கள். ஆனால் முன்பு இருந்த  அன்யோன்யம் இல்லை. இருவருக்குமே மற்றவர் மேல் ஒரு அதிருப்தியும் எரிச்சலும் நிரந்தரமாய் குடிக்கொள்ள பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லை..!!

விஷாகனின் அந்த வயதின் துடிப்பும் கர்வமும் அதற்கெல்லாம் வருத்தம் கொடுக்கவில்லை. தன் இஷ்டம் போலவே நாடோடியாய் தன் பணி இடங்களை மாற்றிக் கொண்டே இருக்க யாமினியும் முதல் முறை மட்டுமே விஷாகன் பிரிவில் துயர்கொண்டது. அதன் பின்னான நாட்கள் எல்லாம் அவருக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

தங்கள் பிரச்சனைகள் எதையும் இருவருமே சக்திமீது காட்ட விழைந்தது இல்லை. அவள் மீது பாசம் நிறையவே இருந்தது. சக்தியோடு அன்பாய் பழக அவர்களுக்கு நேரம் இல்லை. ஆனால் அவளின் விருப்பு வெறுப்புகளை கவனிக்கவும் தவறவில்லை.

சக்தி பெரியவள் ஆக ஆக அவளே விலகி நிற்க தொடங்கினாள். நத்தையாய் தன் ஓட்டிற்குள் முடங்கிக் கொள்வாள். அதன்பின் அவளை எப்படி அணுகுவது என்று இவர்களுக்கு தெரியவில்லை.

ஒட்டியும் ஒட்டாமலும் சென்ற மூவருக்கும் திருப்பமாய் அமைந்தது சக்தியின் கல்யாணம் தான்..!!

“விஷாகன் மேல எனக்கு நிறைய ஆதங்கமும் வருத்தமும் இருக்கு ஆரியன்.. என்னை வார்த்தையால நிறைய காயப்படுத்தி இருக்கார்.. ஆனாலும் அவர் என் வாழ்க்கையில் வேண்டாம்னு நான் நினைச்சதே இல்ல..

பட் அவர் அந்த முடிவை எடுக்கும் போது நான் எங்க தாழ்ந்து போயிட்டேன்னு என்னோட சுயமரியாதை பாதிக்கப் பட்டுச்சு..

அவர் என்ன என்னை  டிவோர்ஸ் செய்யிறதுன்னு நானே அப்ளை பண்ணேன்.. வேண்டாம்னு போறவர் போகட்டும்னு அப்போ தெளிவா தான் இருந்தேன்..

ஆனா இப்ப அதெல்லாம் என்னை நெருங்கி வர எடுத்த முயற்சி தான்.. அவர் என்னோட உறவை சரிப்படுத்திக்க நினைக்கிறார்னு தெரிஞ்ச போது தான் ரொம்ப குழப்பமா இருக்கு.. ஒரு முடிவை எடுக்க முடியல..”

ஆரியனுக்கே மூச்சை அடைப்பது போல் இருந்தது. விஷாகன் பக்கம் இருந்து மட்டுமே தான் பார்த்து இருந்தான். இன்று யாமினி தரப்பில் யோசிக்கும் போது,

‘இவங்களும் எவ்வளவு தான் தாங்குவாங்க..’ என்றே தோன்றியது. அதுவும் இத்தனையையும் தாண்டி வலிமையாய்  நிற்கும் அவரின் நிமிர்வில் அவனுக்கு தனி மரியாதையே வந்தது.

“யார் சரி.. தப்பு என்ற டாபிக் உள்ளயே நான் வரலை.. அதை நான் சொல்ல கூடாது.. ஆனால் ஒன்னு மட்டும் உறுதி.. யூ ஆர்  க்ரெட் அத்தை.. வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ் ஷுட் வந்து போன பழக்கத்தில் அங்கே உங்க முக்கியத்துவம் என்னானு புரிஞ்சது…  ஆனால் அதை அடைஞ்சே ஆவேன்னு டெட்டர்மைன்டா போராடியது எல்லாம் ரியலீ இன்ஸ்பைரிங்..”

தன் மனதில் தோன்றியதை அப்படியே கூற புன்னகைத்த யாமினி,

“ஆனா அப்போ அதில் எல்லாம் இல்லாத பெருமிதம்.. நேத்து என் பொண்ணு சக்தினு எல்லாருக்கும் அறிமுகப்படுத்தின போது இருந்தது..!! மனுஷனோட மனசு ரொம்பவே விச்சித்திரமானது..”

என்றவர்,

“நேத்து அங்க விஷாகனும் இருந்து இருக்கலாம்..” என்று தன்னையும் மீறி ஏதோ நினைவில் சொல்லிவிட அவனுக்கும் புன்னகை அரும்பியது.

“நான் ஒன்னு சொல்லட்டா.. உங்களுக்கு குழப்பம் எல்லாம் இல்ல.. தயக்கம் மட்டும் தான்.. அதை தள்ளி வைச்சுட்டு உங்க மனசுக்கு எது சந்தோஷமோ அதை செய்ங்க..”

இரண்டே வரியில் முடித்துக் கொண்டவன் அவர் யோசிக்கட்டும் என எழுந்து சென்றுவிட்டான்.

சக்தியிடம் தன் தரப்பில் அனைத்தையும் சொல்லி முடித்த விஷாகன்,

“தப்புன்னு பார்த்தால் அது என் மேல தான் அதிகம்.. என் பேச்சை கேட்டு அவள் இருந்திருந்தால் இன்னைக்கு அவளோட இந்த உயரம் சாத்தியமே இல்ல.. யாமினி நான் என்ன பேசினாலும் அதுக்கு உடனே உடனே திருப்பி கொடுத்து விடுவாள் தான்..

ஆனா அதை அங்கேயே விட்டுட்டு கடைசியில் அவ தான் எனக்காக நிறைய விட்டு கொடுத்து போய் இருக்கா.. அந்த உண்மையே நான் இப்ப தான் உணர்றேன்.. என்னை எல்லாம் என்ன சொல்றது..”

என்றார் தன்னை குறித்தே குற்றவுணர்வோடு..

குறிக்கிடாமல் எல்லாவற்றையும் கேட்டு வந்த சக்தி,

“ஆக உங்க மருமகன் சொன்னா மாதிரி சொதப்பல் சண்முகமா தான் இருந்து இருக்கீங்க ப்பா..”

என்று தீவிரமாய் சொல்ல அவர் பாவமாய் பார்த்தார்.

“என்ன ம்மா..”

“பின்ன.. டிவோர்ஸ் கீவோர்ஸ்னு கதை விட்ட நேரத்தில் ‘என்னை மன்னிச்சுடு என் மகாதேவி..’னு சரண்டர் ஆகி இருந்தீங்கனா இந்நேரம் அம்மா யோசிச்சு இருப்பாங்க தானே..”

“வெறும் மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா..??”

“அதை கேட்டு பார்த்தால் தானே தெரியும்..”

கைகளை விரித்து தோளை சுருக்கி இதென்ன கேள்வி என்ற தொனியில் கேட்க விஷாகன் அப்போதும் தயங்கவும்,

“இப்படியே விட்டால் நீங்க சரியா வர மாட்டீங்க.. கிளம்புங்க..  கிளம்புங்க..”

என அவரை பறக்கடித்து உடனே கிளப்பி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள். இடையில் அவரின் பேச்சுகள் எதையும் சட்டையே செய்யவில்லை.

‘அப்பா நீங்க இப்படி கதவிற்கு அந்த பக்கம் இருங்க.. கதவை திறந்த அப்புறம் என்ட்ரி கொடுங்க.. அப்போ பாருங்க அம்மா எக்ஸ்ப்ரஷன.. ‘

என்றெல்லாம் சொல்லிவிட்டு கதவை திறக்க காத்திருந்தாள்.

ஆனால் யாமினிக்கு பதில் அங்கே ஆரியன் கதவை திறக்கவும் ஆச்சரியத்தில் கண்கள் விரிய ஒரு ஜீவனை தரதரவென இழுத்து வந்தோம் என்பதை மறந்துவிட்டு,

“ஆர்யா..”
என்று கூவி அவன் கையை பற்றிக்கொண்டு,

“வரேன்ன்னு சொல்லவே இல்ல.. எப்போ வந்த.. ஒரு போன் ஆச்சும் பண்ணி இருக்கலாம்ல..”
என சலுகையாய் கேட்டாள்.

“இந்த டவ்சன் வால்ட் வெளிச்சத்தை பார்க்க ஆசைப்பட்டு தான் சொல்லல..”
என அவன் லயிப்புடன் கூற,

“ஆரியனை பார்த்திட்டால் அகிலமும் மறந்திடுமே..”

என விஷாகன் சிரிப்போடு சொல்லி உள்ளே வரவும் தான் ஞாபகம் வந்து நாக்கை கடித்து கொண்டாள்.

“ஒருவழியா உங்க வீட்டிற்கு வர மனசு வந்துடுச்சா மாமா..!!”
என ஆரியன் குறும்பாய் கேட்க,

“அவரா எங்க வந்தார்.. நான் தான்  வர வைச்சேன்.. “

என்ற சக்தி,

“அப்பா நான் எதையும் மறக்கல..” என்றுவிட்டு,

“ஆர்யா அம்மா எங்க..” என்று தேட,

“போன் பேசிட்டு இருந்தாங்க.. உள்ள..”
என்று அவன் சொல்லவும்,

“அப்போ சரி.. அப்பா போங்க.. போங்க..”
அவரை பிடித்து தள்ளாத குறையாய் முன்னே அனுப்பினாள்.

“அவரை எங்கடி போக சொல்ற..”

என்று குழம்பிய ஆரியனை,

“அப்புறம் எல்லாத்தையும் சொல்றேன். இப்ப என்ன நடக்குதுனு மட்டும் பார்ப்போம்..”

விஷாகன் உள்ளே சென்று மறைந்ததும் பின்னாலே அழைத்து சென்றாள்.

யாரிடமோ மும்முரமாய் பேசிக் கொண்டிருந்த யாமினி தன் பின்னே அரவம் கேட்டு திரும்ப அங்கே விஷாகனை கண்டதும் திகைத்தார்.
காலை வரையிலும் கூட வீட்டிற்கு வரவே இல்லையே என நெருடலிலே இருந்தவருக்கு திடீரென தன் அருகில் பார்க்கவும் ஒரு ஜெர்க் ஆனது.

“சாரி.. நீ பேசிட்டு வா.. நான் வெளியே வெய்ட் பண்றேன்..”

என்று அவர் சங்கடமாய் சொல்ல தன்னிலை மீண்டு,

“இல்ல.. இல்ல.. இருங்க..”

என அழைப்பை அப்படியே துண்டித்து விட்டார்.

ஒருவேளை ஆரியன் சக்தியிடம் தான் சென்னை வந்திருப்பதை கூறி இருப்பார் போல.. அதான் உடனே வீட்டிற்கு வந்து இருக்க கூடும் என அனுமானித்து,

“எப்போ வந்தீங்க.. ஆரியன் ஃபோன் பண்ணினாரா..”
என இயல்பாய் பேச முனைய அவரும்,

“ஆங்… ம்ம்..” என எல்லா பக்கமும் தலையை உருட்டினார். யாமினியும் மேல என்ன கேட்பது என தெரியாமல் அங்கிருந்து வெளியேற பார்க்க,

“யாமினி நில்லேன்…”
என்று விஷாகன் சொல்ல,

“என்னாச்சு…” என்று நின்றுவிட்டார்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

என்ன பேசுவார் என்று ஏதேதோ யூகங்களில் மனம் அலைபாய்ந்தாலும்,

“சொல்லுங்க விஷாகன்..” என்று பார்க்க,

“என் தப்பை எல்லாம் உணர்ந்துட்டேன்.. என்னை மன்னிச்சுடுன்னு சொன்னால்… உன்னால.. உன்னால அதை மனசார ஏற்க முடியுமா யாமினி.. முடிந்தால்.. என்னை மன்னிச்சுடுமா..”

என்று தடுமாறி அவர் கேட்க விழி எடுக்காமல் பார்த்து நின்ற யாமினியின் தலை தன்னைபோல் சரி என்பதாய் அசைந்தது. அவர் எதுவும் கோபமாய் பதில் கொடுப்பார் என நினைத்து இருந்த விஷாகன் வியப்பாய் பார்த்தார்.

‘என் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாளா..??’ நம்பவே முடியவில்லை அவரால்..

மீண்டும் ஓர் அமைதியே நிலவ இம்முறை யாமினியின் இசைவில் விஷாகனுக்கும் மெல்ல மெல்ல தயக்கங்கள் விலகியது.

“உன் கூட சந்தோஷமா வாழணும்னு கனவோட தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. ஆனால் அந்த எண்ணமே இல்லாம எதை தேடி அலைஞ்சேன்னு எனக்கு தெரியல.. நல்லதே செஞ்சாலும் அதில் என் மனசு நிறையவே இல்ல..”
என்று வருத்தமாய் கூறியவர்,

“பெட்டர் லேட் தென் நெவர்.. வாழ்க்கையை ஐம்பதுகளிலும் தொடங்கலாம் தானே..!!  ப்ளீஸ் யாமினி.. இனி வரும் நாள் எல்லாம் ஒரு புதிய அத்தியாயமா இருக்கட்டுமே.. இப்ப இருக்கிற விஷாகனுக்கு யாமினி தான் பிரதானம்..”

என்று ஏக்கமாய் கேட்டவர் வாய் பிளந்து திகைத்து நின்ற யாமினியை கண்டு,

“நான் வேணா முழு நேர ஹவுஸ் ஹஸ்பெண்ட்டா இருக்கவும் ரெடி..”

என்று அவசரமாய் சொல்ல அதுவரை சீரியஸாய் யோசித்துக் கொண்டிருந்தவர் பக்கென்று சிரித்து விட்டார்.

சுவர் அருகே இவர்களை கவனித்து நின்ற ஆரியன் சக்திக்கும் சிரிப்பு தான்..!!

“பரவாயில்லையே சக்தி.. மாமா என்னையே மிஞ்சி ‘ஜென்’ நிலையை அடைந்து விட்டார்.. இனி பொழைச்சுடுவார்..”

என கேலி செய்த கணவனுக்கு பட்டென்று ஒன்று வைத்தவள்,

“எப்படியோ.. அம்மா சிரிச்சுட்டாங்க இனி அவங்க பாடு.. வா.. வா.. நாம இடத்தை காலி பண்ணுவோம்..”

என மகிழ்ச்சியில் முகம் விகசிக்க அவன் கையை பிடித்த இழுத்து சென்றுவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!