கொற்றவனின் கொற்றவை 3
அத்தியாயம் 3
பார்க்கில் அமர்ந்திருந்த கொற்றவைக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. விக்ரமா தன்னிடம் இப்படியெல்லாம் பேசியது, இல்லை தான் எதாவது கெட்ட கனவு காண்கிறோமா என்று யோசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளிடம் யாரும் இவ்வாறு பேசியது கிடையாது. அதே போல் அவளுக்கு விக்ரமை தெரிந்த நாளில் இருந்து அவனும் யாரிடமும் இவ்வாறு கடினமாக நடந்தது கிடையாது.
ஏன் இப்படி நடந்து கொண்டான். தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தால் கூட இவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டாள். என்னை பார்த்தால் அவனுக்கு பெண் போலவே தெரியவில்லையா.
Advertisement
அது என்ன. வெட்கம் தயக்கம் இதெல்லாம் இருந்தால் தான் பெண்ணா. மனதில் உள்ளதை மறைக்காமல் பேசினால் அவளை பெண் என்று ஒத்து கொள்ள மாட்டார்களா.
சங்கவியும் நல்ல பெண்தான். ஆனால் அவள் தயங்கி தயங்கி பேசுவதை பார்த்தால் எதோ நாடக மேடையில் பேசுவதை போல் அல்லவா உள்ளது.
நானும் அவ்வாறு நடித்து கொண்டுதான் காதல் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்கிறானா விக்ரம், என்று அதையே பதினைந்தாவது முறையாக அவள் தோழி கிறிஸ்டினாவிடம் புலம்பினாள் கொற்றவை பப்பில் அமர்ந்து.
Advertisement
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினாவிற்கு கொற்றவை பேசும் தமிழே தெரியாது. மொழி புரியவில்லை என்றாலும் கூட ஒரே விஷயத்தை பதினைந்தாவது முறையாக புலம்புகிறாள் என்று மட்டும் தெரிந்து காதில் ரத்தம் வராத குறையாக கடுப்பில் அமர்ந்திருந்தாள் அவள்.
Advertisement
ஏற்கனவே அவள் பல ரவுண்ட் அடித்திருந்த வோட்காவின் போதையையே ஒன்றுமில்லாமல் செய்திருந்தது கொற்றவையின் புலம்பல்.
சரி இவள் சரிப்பட்டு வரமாட்டாள் என்று நினைத்த கிறிஸ்டினா, கொற்றவை குடிக்கும் வைனயே நிறைய நிறைய வாங்கி அவளை குடிக்க வைத்து கொண்டிருந்தாள்.
அப்படியும் கொற்றவையின் புலம்பல் நிற்கவே இல்லை. என்ன ஒன்று. முன்பு தெளிவாக புலம்பியவள், இப்பொழுது தெளிவில்லாமல் உளற ஆரம்பித்தாள்.
Advertisement
இதற்கு மேல் அவள் புலம்பலை கேட்க முடியாது என்ற முடிவுக்கு வந்தவள், கொற்றவையின் காரிலேயே அவளை ஏற்றி கொண்டு சென்றாள். கொற்றவையின் வீட்டுக்கு சென்று இன்டெர்காமில் பாட்டியை அழைத்து மெயின் கேட்டை திறந்து விட சொன்னவள், உள்ளே சென்று காரை நிறுத்திவிட்டு, பாட்டி வீட்டில் இருந்து வெளியில் வருவதற்குள் வெளியே ஓடி விட்டாள்.
ஏனென்றால் கொற்றவையின் நண்பர்களை பொறுத்தவரை தேவி பாட்டி ஒரு கோஸ்ட். அவர் பேசுவது நிறைய நேரங்களில் புரிவதே இல்லை என்றாலும் எல்லோரையும் உட்கார வைத்து கிளாஸ் எடுத்து விடுவார். முக்கியமாக கொற்றவையை அவள் நண்பர்கள்தான் கெடுப்பதாக வறுத்து எடுத்து விடுவார். அதிலும் கொற்றவை இன்று இருக்கும் நிலையை பார்த்தால் கிறிஸ்டினாவை குதறி விடுவார். அதனால்தான் அவர் வருவதற்குள் அவள் ஓடிவிட்டாள்.
பாட்டி வெளியே வருவதற்குள் கொற்றவையே காரில் இருந்து இறங்கி போய் கதவை தட்டினாள். கதவை திறந்த தேவி பாட்டி அந்த காலத்து பூவே பூச்சுடவா நடிகை பத்மினியை நியாபக படுத்தினார்.
இப்பொழுது ஆடி கொண்டே நின்றிருந்த கொற்றவையின் நிலைமையை பார்த்த பாட்டி, “இவ்வளவு நாளா இந்த குடி பழக்கம் இல்லாம இருக்கியேன்னு சந்தோச பட்டு கிட்ருந்தேன். இப்ப அதையும் ஆரம்பிச்சிட்டியா” என்றார்.
அவர் பேசி முடிப்பதற்குள் அவரை இடித்து கொண்டு போய் சோபாவில் குப்புற விழுந்தாள் கொற்றவை.
பாட்டிக்கு சரியான கோபம். இவ்வளவு நாள் அவள் அணியும் உடைகள் அலங்காரங்கள் ஹேர் கலரிங் இவைகள் தான் அவரை கோபப்படுத்தும். ஆண் பெண் நண்பர்கள் என்று பழகினாலும் பேத்தி ஒழுக்கமாகத்தான் இருக்கிறாள் என்று நிம்மதியாக இருந்தார். இன்று அந்த நிம்மதியும் போய் விட்டது.
வேகமாக கொற்றவையின் அருகில் சென்று அவளை திருப்பி முகத்தை பார்க்க முயற்சி செய்தார். அவரை பிடித்து தள்ளி விட்ட கொற்றவை தானாகவே முகத்தை நிமிர்த்தி பாட்டியை பார்த்து “நீதான் ஓல்ட் லேடி காரணம். என்ன பாத்து நீ பொண்ணே இல்லனு சொல்லிட்டான் தெரியுமா. இதுக்கெல்லாம் யார் காரணம்? நீதான். நீ மட்டும் தான். நீ மட்டும் எனக்கு வெட்கபட சொல்லி குடுத்து வளத்திருந்தீன்னா… ம்ஹ்ம் உன்னட்ட பேசி ஒன்னும் ஆகாது. ஆனா நீதான் காரணம். நீதான் காரணம்” என்று பாட்டியிடம் உளறி கொண்டிருந்தாள்.
இவ என்ன சொல்லிட்ருக்கா என்று தேவி பாட்டி யோசித்து கொண்டிருக்கும் போதே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த ரகுராம் மகளின் பக்கத்தில் அமர்ந்து அவள் தலையை தடவி விட்டார்.
அவரை நிமிர்ந்து பார்த்த கொற்றவை “டாட்… என்று அழுது கொண்டே அவர் மடியில் தலை வைத்து கொண்டாள்.
“அவன் என்ன, நீ பொண்ணே இல்லன்னு சொல்லிட்டான் டாட். நா என்ன அவ்ளோ மோசமான பொண்ணா. ச்ச. அதான் என்ன பொண்ணே இல்லன்னு சொல்லிட்டானே. அவன் ரொம்ப நல்லவன். அப்ப நான்தான் பொண்ணே இல்லையா” என்று கூறிக்கொண்டே சிறிது நேரம் விசும்பி கொண்டிருந்தவள், திரும்பவும் தேவி பாட்டியை நிமிர்ந்து பார்த்து
“நீதான் ஓல்ட் லேடி காரணம். நீதான் என்ன நல்ல பொண்ணாவே வளக்கல. உன்னோட தான் பேச கூடாது” என்றுவிட்டு திரும்பவும் தலையை அவள் தந்தையின் மடியிலேயே கவிழ்த்து கொண்டாள்.
பாட்டிதான் “இவ என்ன சொல்றா பா. இவ்ளோ நாள் இப்படி உளர்ற அளவுக்கு இவ குடிச்சது இல்லையே ரகு” என்றார் ரகுராமிடம்.
தாயிடம் தலையாட்டியவர் மகளின் தலையை கோதிக்கொண்டே மெதுவாக, “பாப்பா” என்று அழைத்து பார்த்தார். முதலில் அசையாமல் படுத்திருந்தவள், மூன்று நான்கு முறை ரகுராம் அழைக்கவும் திரும்பவும் “அவன் என்ன பொண்ணே இல்லன்னு சொல்லிட்டான்” என்று சொல்லிவிட்டு ஓவென்று அழவும் “யார் பாப்பா உன்ன அப்படி சொன்னது. நீ தேவதை டா” என்றார் ரகுராம்.
தேவி பாட்டியுமே அவள் தலையை தடவியவர் “ஆமாண்டா ராஜாத்தி. நீ நம்ம வீட்டு குலதெய்வம் டா. உன்ன போய் எவன்டா அப்படி சொன்னது. அவனுக்கு புத்தி கோளாறு போலடா கண்ணு” என்று சொல்லவும்
“அவன் ரொம்ப பிரில்லியண்ட் பாட்டி. நான்தான் பொண்ணே இல்ல…” என்று திரும்பவும் ஆரம்பித்தாள் கொற்றவை.
“யாரும்மா அந்த புத்திசாலி” என்றார் ரகுராம்.
“அவன்தான் பா. நான்தான் பா..” என்று அவள் ஆரம்பிக்கவும் “யாரும்மா அவன்” என்றார் ரகுராம்.
ஆனால் கொற்றவை தெளிவில்லாமல் புலம்பி கொண்டே இருக்கவும் பாட்டி தான் “விடுப்பா. நாளைக்கு காலையில பேசிக்கலாம். இப்ப இவள கூட்டிட்டு போய் அவ ரூம்ல படுக்க வைக்கலாம்” என்று கூறினார்.
அதற்குள் கொற்றவை “அவனுக்காக நா தமிழ்நாட்டுக்கு கூட வரேன்னு சொன்னேன் டாட். ஆனா அவன் அதெல்லாம் யோசிக்கவே இல்ல. அவனுக்கும், அவன் குடும்பத்துக்கு நா செட் ஆக மாட்டேனாம். அப்ப நா நல்ல பொண்ணு இல்லையா டாட்” என்று விட்டு மறுபடியும் ஓவென்று அழுதாள்.
யோசித்து கொண்டிருந்த ரகுராம் “யாரு பாப்பா. விக்ரமா அப்படி சொன்னான்” என்று சரியாக கேட்டார்.
கொற்றவையும் “அவன் நல்லவன் பா. நான்தான் பேட் கேர்ள் டாட்” என்று திரும்ப திரும்ப உளறிக்கொண்டே சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள்.
பாட்டியும் “யாருப்பா. நம்ம ஹோட்டல்ல வேலை பாக்கறானே அந்த பையனாப்பா. அவனா அப்படி சொன்னான். ரொம்ப நல்ல பையனாச்சே அவன்” என்றார்.
ரகுராமும் “அவன்தான் நினைக்கிறேம்மா. எனக்கே அவன ரொம்ப பிடிக்கும்மா. அவன மாதிரி ஒரு மாப்பிள்ளை எனக்கு கிடைச்சா நல்லாருக்கும்ன்னு நானே நினைச்சதுண்டு. ஆனா அவன் ஒத்துக்கலைன்னு பாப்பா சொல்றாளே. எதுக்கும் நா அவன் கிட்ட பேசி பாக்கிறம்மா” என்று விட்டு கொற்றவையை தூக்கி கொண்டு போய் அவள் ரூமில் படுக்க வைத்தார்.
மறுநாள் ரெஸ்டாரண்டில் விக்ரமை ரூமிற்கு அழைத்து அமர சொன்னார்.
விக்ரம் “பரவாயில்ல சார். என்னன்னு சொல்லுங்க. இன்னைக்கு நல்ல கிரௌட். நா போனாதான் சமாளிக்கலாம்” என்றான்.
அதற்கு “என் பொண்ண விட ஹோட்டல் எனக்கு முக்கியம் இல்ல விக்ரம். அதனால நீ உட்காரு” என்றதும் ஒரு நிமிடம் புரியாமல் பார்த்த விக்ரமும் பிறகு புரிந்து கொண்டு நிதானமாக அமர்ந்தான். ஆனால் கொற்றவை இந்த விஷயத்தை தூக்கி கொண்டு போய் அவள் அப்பாவிடம் சொல்லியிருப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை.
விக்ரம் அமர்ந்ததும் ரகுராம் “நீ உன் பி ஹெச் டி முடிச்சதும் இங்கயே நல்ல ஆஃபர்லாம் கிடைக்குமே விக்ரம். ஏன் ஊருக்கு போகணும்ன்னு நினைக்கிற” என்றார்.
அதற்கு விக்ரம் “சார். நா இங்க படிப்புக்காகதான் வந்தேன். பிழைப்புக்கு கண்டிப்பா எங்க ஊர் போய்டுவேன்” என்றான்.
“சரிப்பா. நேத்து என் பொண்ணு கேட்டாளாம். இன்னைக்கு நா கேக்குறேன். என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி குடுக்க ஆசை படறேன். நீ என்ன சொல்ற” என்று கேட்டார்.
விக்ரமிற்கு தர்ம சங்கடமாக இருந்தது. பிளஸ் கோபமும் வந்தது. கொற்றவையிடம் பேசியது போல் இவரிடம் பேசவும் முடியவில்லை. முதலாளி ஸ்தானத்தில் திமிராக பேசியிருந்தால் இவனும் அதே திமிரில் பேசியிருக்கலாம். அவர் வயதிற்கும் அந்தஸ்திற்கும் தகுதிக்கும் யாரும் இவ்வளவு இறங்கி பேச மாட்டார்கள்.
அவன் பேசாமல் யோசித்து கொண்டிருப்பதை பார்த்த ரகுராம் “உன் பேரண்ட்ஸ் ஒத்துக்க மாட்டாங்கன்னு யோசிக்கிறியா. நா வேணுன்னா உன் வீட்ல பேசவா” என்று கேட்டதும்,
இதற்கு மேல் பொறுமையாக இருக்க கூடாது என்று நினைத்த விக்ரம் “இல்ல சார். இது சரி வராது. நான் கொற்றவை மேடம்கிட்டயும் அதைத்தான் சொன்னேன் சார்” என்றான்.
“ஏன்பா. எனக்கு தெரிஞ்சு உனக்கு கொற்றவைய பிடிக்கும். என் பொண்ணு நேத்து இத பேசலைனா நானே கொஞ்ச நாள்ல உன்னட்ட கேட்ருப்பேன். அப்புறம் ஏன் வேண்டாங்கிற” என்றதும் விக்ரம்,
“சார். எனக்கு கொற்றவை மேடம் மட்டுமில்ல. உங்கள, இங்க வேல பாக்கிறவங்க, என்ன சுத்தி உள்ளவங்க எல்லாரையும் பிடிக்கும். எல்லா உயிரினங்களையும் நேசிக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். அதெல்லாம் வேற. கல்யாணம் வேற சார். ப்ளீஸ் சார். இதுக்கு மேல இதைப்பத்தி பேசாதீங்க” என்றுவிட்டு அவர் பதிலை கூட கேட்காமல் வெளியே சென்று விட்டான்.
அடுத்த இரண்டு நாட்கள் சென்று, கொற்றவை ரெஸ்டாரண்டிற்கு சென்றபோது விக்ரமை காணவில்லை.
வேறு பணியாட்களை அழைத்து விசாரித்தபோது விக்ரம் வேலையை விட்டு சென்று விட்டதாக கூறினார்கள். அதை கேட்டு வருத்தமானாள் கொற்றவை.
இரண்டு நாட்கள் சென்று யூனிவர்சிட்டியில், விக்ரம் டிபார்ட்மென்ட்டில் செமினார் இருப்பது தெரிந்து அவனை சந்திக்க அவன் பிளாக்கிற்கு சென்றாள் கொற்றவை.
சரியாக செமினார் முடிந்து வெளியில் வரும்போது அவனை வழி மறைத்தவாறு நின்றாள். விக்ரமும் அவன் பிரண்ட் ராமும் பேசியப்படி வந்தவர்கள் கொற்றவையை பார்த்துவிட்டு நின்றார்கள்.
கொற்றவையும் விக்ரமும் என்ன பேசுவது என்று ஒரு நிமிடம் திகைத்து நின்றார்கள். இருவராலும் முன்பு போல் சாதாரணமாக பேச முடியவில்லை.
பக்கத்தில் நின்ற ராம்தான் “என்ன கொற்றவை. எப்படி இருக்க” என்று கேட்டான். ராம்தான் விக்ரமும் கொற்றவையும் முதன்முதலில் சந்தித்த அன்று, விக்ரமை வேகமாக பப் பில் இருந்து இழுத்து சென்றது.
இப்பொழுது ராம் கேட்ட கேள்விக்கு “நல்லாருக்கேன் ராம். நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்டுவிட்டு அவன் நன்றாக இருக்கிறேன் என்று கூறியதும் “சாரி ராம். நா விக்ரம்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள்.
ராம் சரியென்று விக்ரமிடம் தலையாட்டிவிட்டு காருக்கு சென்று விட்டான். அவன் சென்றதும் அமைதியாக அவளை பார்த்து கொண்டிருந்த விக்ரமிடம், “என்ன மேன். ஏன் வேலைக்கு வரல நீ. நாம அன்னைக்கு பேசினத மனசுல வச்சுகிட்டா வேலைக்கு வராம இருக்க. அதெல்லாம் மறந்துட்டு எப்பொழுதும் போல ரெஸ்டாரெண்ட்க்கு வா” என்று அவள் கூறியும் அமைதியாக அவளை பார்த்தான் விக்ரம்.
“என்ன மேன் அப்படி பாக்கிற. நா வேணுன்னா நீ வரும்போது ரெஸ்டாரண்ட் வராம இருந்துகிறேன். பண தேவை இருக்குன்னு தான பார்ட் டைம் ஜாப் பாக்கிற. வேற வேலை கிடைக்கிற வரைக்குமாவது அங்க வந்து பாரு” என்று கூறியதும்
“அன்னைக்கு நம்ம பேசிகிட்டத ஏன் உங்க அப்பாட்ட சொன்ன கொற்றவை” என்று கேட்டான் விக்ரம்.
கொற்றவைக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவன் அவளை மேடம் என்று எப்பொழுதும் போல் அழைக்காமல் ஒருமையில் பேசியதும் அவனிடம் மிக நெருக்கமாக உணர்ந்தாள். பிறகுதான் அவன் கேட்ட விஷயம் புரிந்தது.
அதற்கு பிறகுதான் “ஹே. நா எங்க அப்பாகிட்ட எதுவும் சொல்லல மேன்” என்றாள்.
அதற்கு விக்ரம் “நீ சொல்லாமதான் அவர் வந்து, என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி என்ன கேட்டாரா” என்று விக்ரம் கோபமாக கேட்டதும்,
கொற்றவை விக்ரமிடம் காதல் சொன்ன அன்று நடந்ததை யோசித்து பார்த்தாள். கிறிஸ்டினாவுடன் அமர்ந்து மது அருந்தியது வரைதான் அவளுக்கு நியாபகம் இருந்தது.
மறுநாள் காலை எழுந்ததும் வேறு எதுவும் நியாபகத்தில் இல்லை. சரி கிறிஸ்டினா வந்து வீட்டில் விட்டிருப்பாள். நாமும் சத்தமில்லாமல் போய் படுத்துவிட்டோம் என்று தான் நினைத்திருந்தாள்.
மறுநாள் அவள் பாட்டி அப்பா எதுவும் சொல்லவில்லை என்றதும் யாருக்கும் எதுவும் தெரியாது என்றே நினைத்து விட்டாள்.
இப்பொழுது விக்ரமிடம் “சாரி மேன். அன்னைக்கு நீ பேசிட்டேன்ற வருத்தத்தில நிறைய வைன் எடுத்துட்டேன் . என்ன நடந்ததுன்னே தெரியல. அப்பாட்ட உளறிட்டேன் போல. அப்பா எது பேசிருந்தாலும் மனசுல வச்சுக்காம வேலைக்கு வா மேன்” என்றதும் அவளை ஒரு மாதிரி பார்த்தவன்
“இப்போ புரியுதா. நா ஏன் நீ எனக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு சொன்னேன்னு. உன்ன கல்யாணம் பண்றவன் பொழப்ப பாப்பானா, இல்ல நீ எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறன்னு தேடிட்டு இருப்பானா. ஒரு குடிகாரியவா நா கல்யாணம் பண்ணிப்பேன்?” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
கொற்றவை மறுபடியும் காயப்பட்டு நின்றாள்.
